Skip to content
Post Views: 2,166
நடுவர் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் வேறு ஒருவனின் பெயரை அறிவிக்க இசையால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை, “ஹே தமிழினியன் தான அதிகமான மார்க்ஸ் வாங்கியிருந்தாங்க அப்பறம் எப்படி டி இவங்க சம்பந்தமே இல்லாம வேற ஒருத்தர செலைக்ட் பண்ணுவாங்க? அப்படி அவர செலைக்ட் பண்ணாட்டி அவருக்கு அடுத்து அதிகமான மார்க்ஸ் வங்கினவங்கள தான செலைக்ட் பண்ணனும்.. இவங்க எப்படி சம்மந்தமே இல்லமா ஆவரேஜ் மார்க்ஸ் வாங்கின நவீன எப்படி செலைக்ட் பண்ணலாம்? ” என மலரிடம் கோவம் தாளாமல் கேட்க
“ஆமா இசை இதெல்லாம் ரொம்ப அநியாயம் டி.. பாவம் அவங்க” என்றாள் மலரும் வருத்தத்துடன்.
Advertisement
அதுவரை நடுவரின் முடிவில் அதிருப்தியுடன் கோவத்தில் இருந்தவளுக்கு தமிழினியன் என்ன மனநிலையில் இருப்பான் என தோன்ற அவனை தேடினாள்.
அங்கே ஆடிட்டோரியத்தின் மறுமுனையில் நின்றிருந்தவர்களை பார்த்த இசைக்கு அவர்கள் ஏதோ சண்டையிடுவது போல் தான் தெரிந்தது. தமிழ் ஏதோ கோவமாக பேச எழில் அவனை சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
“டேய் நான் தான் வர மாட்டேனு சொன்னனே கேட்டியா..” என்றான் எழிலிடம் கோவமாக
“சாரி டா.. இவங்க இப்படி பாலிடிக்ஸ் பண்ணுவாங்கனு நான் நினைக்கல” என்றான் வருத்தத்துடன் எழில்.
Advertisement
“எனக்கு தெரியும் டா.. அவன தான் செலைக்ட் பண்ணுவாங்கனு. இந்த இரண்டு வருஷமா எத்தனை காம்பெடீஷன்ல பார்த்துட்டேன்” என கூறியவனுக்கோ மனதில் ஏதோ சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அழுத்தமான உணர்வு. என்ன தான் அவன் இதை முன்பே எதிர் பார்த்திருந்தாலும், அனைவரின் கரகோஷத்தையும் பாராட்டையும் பெற்ற அந்த நிமிடம் அவன் மனதில் தன் பாடலுக்கோ தன் முயற்சிக்கோ அங்கீகாரம் கிடைக்காத என்ற ஆசையும் ஏக்கமும் வாராமல் இல்லை.
“சாரி டா மச்சான்..” என்ற எழிலிடம்
“இங்க பாரு எழிலு.. இது தான் முதலும் கடைசியும் இனி என்ன இந்த மாதிரி எந்த ஆடிஷன், காம்பெட்டீஷன்லையும் கலந்துக்க சொல்லி வற்புறுத்தாத. என்னால இதுக்கு மேல முடியாது.. நானும் மனுஷன் தான் என்னால ஓரளவுக்கு தான் ஏமாற்றத்தையும் அவமானத்தை தாங்க முடியும்” என கோவமாக தொடங்கி விரக்தியாக முடித்தவனுக்கு அழுகை வர வேகமாக வெளியே சென்றவன் பின்னே ஓடினான் எழில்.
தூரத்திலிருந்து இருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்த இசைக்கு இவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும் இனியனின் விரக்தியான பேச்சும் அவன் அழுகையுடன் வெளியேறியதையும் பார்த்து அவனின் மனநிலை நன்றாகவே புரிந்தது.
“மலர், பாவம் டி அவங்க அழுதுட்டு போறாங்க.. எனக்கு கஷ்டமா இருக்கு” என இசை வருத்தப்பட
“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு, ஆனா நம்மளால ஒன்னும் பண்ண முடியாதே..” என்றாள் மலரும் வருத்தத்துடன்.
இவர்களிடம் ரெஜிஸ்டரை வாங்க வந்த பிரகாஷிடம் ரெஜிஸ்டரை தந்த மலர் கோவம் தாளாமல் ஒரு வேகத்தில், “சார் அந்த ஐடி டிபார்ட்மென்ட் சீனியர் தான அதிகமா மார்க்ஸ் வாங்குனாங்க.. இவங்க எப்படி சம்மந்தமே இல்லமா வேற ஒருத்தர செலைக்ட் பண்ணுவாங்க? ” என கேட்டுவிட்டாள். அவள் உணர்ச்சிவசத்தில் சத்தமாக பேச சுற்றியும் முற்றியும் பார்த்தவர், “மலர் கொஞ்சம் மெதுவா பேசுமா” என்றார்.
சுற்றி நிறைய பேர் இருக்க தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “சார் அது எப்படி இவங்க இப்படி பாலிடிக்ஸ் பண்ணலாம்?.. தப்பில்லையா? ” என மெதுவாக அழுத்தமான கோவத்துடன் கேட்டாள்.
“தப்பு தான் மா.. இங்க எல்லாமே தப்பா தான நடக்குது. திறமை இருக்கிற பசங்கள விட்டுட்டு அந்த பையன் டீன் ஓட பையனுங்கிற ஒரே காரணதிற்காக செலைக்ட் பண்றாங்க. எனக்கும் கஷ்டமா தான் இருக்கு..” என அவர் வருத்தமாக கூற
“சார் நீங்க இதெல்லாம் கேட்கலாம்ல?” என மலர் கேட்க
“நான் எப்படி மா கேட்கிறது?.. அவங்க எல்லாம் பதவில இருக்கிறவங்க இது அவங்க காலேஜ்.. இவங்கள எதிர்த்து கேள்வி கேட்டா என்னோட வேலைக்கு உலை வெச்சிருவாங்க.. என்ன நம்பி தான என் குடும்பம் இருக்கு. அவங்கள பத்தி நான் யோசிக்க வேண்டாமா நீயே சொல்லு?” என அவர் கேட்க இருவருக்கும் அவரின் நிலை நன்றாகவே புரிந்தது.
இருவரும் என்ன சொல்வதென தெரியாமல் இருக்க பிரகாஷே தொடர்ந்தார்.
“ம்ம் பாவம் அந்த மேத்ஸ் டிபார்ட்மென்ட் பொண்ணும், ஐடி டிபார்ட்மென்ட் பையனும் அருமையா பாடுனாங்க .. இருந்தும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாத கையாலாத நிலைமையில இருக்கோம்” என அவர் வருத்தத்துடன் பேச
“ஐயோ.. ஏன் சார் அப்படி எல்லாம் பேசுறீங்க. இதுல உங்க தப்பு ஒன்னும் இல்லையே” என்றாள் இசை.
“இல்ல மா.. இந்த வேலைக்கு அவ்வளவு ஆசை கனவோட வந்தேன் மா.. ஒரு டீச்சரங்கிறவங்க பசங்களுக்கு வெறும் பாடத்த மட்டும் நடத்திரவங்க இல்லை. அதைத் தாண்டி வாழ்க்கைய கத்துக்குடுக்கிறவங்க, காலேஜ்ங்கிறது நீங்க வாழ்க்கைய கத்துக்கிற இடம். அப்படி பட்ட இடத்தில இவங்க இந்த பாலிடிக்ஸ் எல்லாம் பண்ணும் போது அத எதிர்த்து கேட்க முடியாத நிலையில இருக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு” என அவர் அவரின் நிலையை கூறி வருத்தப்பட.
“ஃபீல் பண்ணாதீங்க சார்” என்று மட்டும் கூறி அவரை சமாதானம் செய்தனர். இதை தவிர என்ன சொல்வதென்று இருவருக்கும் தெரியவில்லை.
“டீன் ஓட பையன தான் செலைக்ட் பண்ண போறாங்கனா அப்பறம் எதுக்கு சார் இந்த ஆடிஷன் நடத்தி நம்ம நேரத்த வேஸ்ட் பண்ணனும்?” என மலர் அவளின் சந்தேகத்தை கேட்க
“வேற எதுக்கு? இவங்க நேர்மையா நடத்துரதா சேர்மேன்னையும் மத்த எல்லாரையும் நம்ப வைக்க தான்..” என்க
“சேர்மேன்னா?” என்றனர் இருவரும் கேள்வியாக.
“இந்த டீன் சேர்மேனோட மச்சான் தான். அவரு ரொம்ப நியாமானவரு. அவருக்கு இந்த மாதிரி பாலிடிக்ஸ் எல்லாம் புடிக்காது. அவர நம்ப வைக்க தான், அவரு அந்த பையன் கஷ்டப்பட்டு பாடி செலைக்ட் ஆனதா தான் நினைப்பாரு.. எல்லாம் ஒரு கணக்கு காட்ட தான்” என்றவர்
“நீங்க இதை வெளிய யார்கிட்டயும் சொல்லீட்டு இருக்காதீங்க.. அப்பறம் பின்னாடி உங்களுக்கே பிரச்சினையா வர சான்ஸ் இருக்கு” என கூற இருவரும் “சொல்ல மாட்டோம் சார் ” என்றனர்.
“சரி இரண்டு பேரும் கிளாசுக்கு போங்க” என இருவரையும் வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.
இவர்கள் வகுப்பிற்கு வந்த நேரம் கல்லூரி முடிந்திருக்க பேகை எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
வீட்டிற்கு வந்தும் இசைக்கு மனதே சரியில்லை. இன்னும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். ஒரு ரசிகையாக அவனை தேர்ந்தெடுக்காமல் போனதை அவளால் பொருத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. அதில் அவனுடைய அழுகையை பார்த்தவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
சிலர் அப்படிதான் மற்றவரின் கவலைகளையும் பிரச்சினைகளையும் நினைத்து அவர்களுக்காக வருந்துவர், சின்ன சின்ன பிரச்சினைகளை நினைத்து மருகுவர். இசையும் அப்படியே.
வீட்டிற்கு வந்த பேரறிவாளன், எப்போதும் தன்னை சிரிப்புடன் வரவறேக்கும் மகள் இன்று சோகமாக அமர்ந்திருப்பதை கவனிக்க தவறவில்லை. இருந்தும் அப்போது அவர் அதைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இரவு சாப்பிடும் நேரமும் அவள் அப்படியே இருக்க.
“பாப்பாக்கு என்னாச்சு ரொம்ப சோகமா இருக்கே..?” என பேரறிவாளன் கேட்க
“அதெல்லாம் ஒன்னும் இல்லை அப்பா” என அவள் வாய் மட்டும் தான் கூறியது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை சோகமே.
“இல்லையே பாப்பா சரியில்லை எதையோ நினைச்சு கவல படுது..”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல பா.. நான் நல்லா தா இருக்கேன்” என்றவளை உற்று நோக்கியவர் , “இல்லை ஏதோ இருக்கு நீ சொல்ல மாட்டிங்கற” என்று கூற அமைதியாக இருந்தாள்.
என்ன தான் தந்தையின் செல்ல மகளாக இருந்தாலும். மனதில் நினைக்கும் அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து பழக்கமில்லை, அவள் மனதில் இருக்கும் அனைத்தையும் பகிரும் ஒரே ஆள் மலர்விழி மட்டுமே. எப்போதும் தந்தை மீது இருக்கும் பாசமும் மரியாதையும் அவர்களுக்குள் இருக்கும் நட்பான உறவில் ஒரு இடைவெளியை உருவாக்கும் அதனால் மனதில் நினைத்த எல்லாவற்றையும் அவரிடம் பகிர மாட்டாள் எப்போதாவது மட்டுமே மனதில் உள்ளதை அவரிடம் பகிர்வாள். இப்போது சொல்லலாமா?வேண்டாமா? என யோசனையுடன் அவளிருக்க
“என்ன டா ஏதாவது பிரச்சினையா எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட சொல்லு” என்று அவர் கேட்க என்ன நினைத்தாளோ காலேஜில் நடந்த அனைத்தையும் கூறியவளுக்கு கடைசியில் அழுகை வர அழுதே விட்டாள்.
யாரென்றே தெரியாத ஒருவருக்காக இளகிய மனதுடன் அழும் தன் மகளை நினைத்து சிரிப்பு வந்தாலும், இப்படி தொட்டதிற்கெல்லாம் அழுகிறாளே என வருத்தமாக இருந்தது பேரறிவாளனுக்கு.
“என்ன டா இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுகலாமா?” என அவள் அழுகையை துடைத்தவர், “இந்த சமுதாயம் இப்படி தான். என்ன தான் நிறைய நல்ல மனுஷங்க இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்கள இருக்க தான் செய்வாங்க, இன்னும் லைஃப்ல இந்த மாதிரி எத்தனையோ பேர் எத்தனையோ பிரச்சினை வரும் டா அதெல்லாம் நம்ம சந்திச்சு தான் ஆகனும் டா. இப்படி அழுதுட்டு இருந்தா எப்படி? நல்லா போல்டா இருக்க வேண்டாமா..” என அவர் அறிவுரை கூறி சமாதானம் செய்ய
“இருந்தாலும் அந்த அண்ணா பாவம்ல பா.. அவங்க இப்படி பண்ணது தப்பு தான” என்றாள் விசும்பலுடன்.
“ம்ம் ரொம்ப தப்பு தான்.. எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. உங்க சாரே அவரால ஒன்னும் பண்ண முடியலனு வருத்தப்பட்டதா சொல்ற.. அப்போ நம்ம மட்டும் என்ன பண்ண முடியும் நீயே சொல்லு” என்றவரை அமைதியாக பார்த்தாள்.
“யாரோ ஒருத்தருக்கு நடந்ததுக்கே நீ இப்படி அழுகிற, நாளைக்கே உனக்கு கூட இந்த மாதிரி இல்ல இத விட பெரிய விஷயம் நடக்கலாம்.. அப்போ கூட இப்படி தான் அழுதிட்டு இருப்பியா?” என்றவரின் கேள்வியில் இசை அமைதியானாள்.
“சொல்லு பாப்பா?.. இப்படி தான் அழுவியா?” என கேட்க
“தெரியல பா..” என்ற மகளின் பதிலில் சிரித்தவர், “இல்ல அப்பா இனி அழுக மாட்டேன்.. போல்டா இருப்பேன் னு சொல்லனும்” என மகளின் தலையை செல்லமாக ஆட்ட, கண்களை துடைத்துக் கொண்டவள், “ம்ம் இனி அழுக மாட்டேன் பா.. போல்டா இருப்பேன்” என புன்னகைக்க
“ம்ம் குட் கேர்ள்..” என்று மகளின் கன்னம் தட்டியவர், “வாழ்க்கையில ஒரு வாய்ப்பு தவறுதுனா அதைவிட நல்ல வாய்ப்பு வரும். நீ வேணா பாரு, இவங்கள மாதிரி எத்தனையோ பேர் வந்தாலும், உண்மையா திறமை இருந்தா கண்டிப்பா அந்த பையன் வாழ்க்கையில பெரிய ஆளா வருவான்” என்று கூற ஆமோதிப்பாய் தலையாட்டினாள் இன்னிசை.
அதற்குள் வெளியே இருந்து ஓடி வந்த அவளின் கிட்கேட் வாலை ஆட்டிக் கொண்டு அவளை உரசிக் கொண்டு அவளின் பேன்டை இழுத்து விளையாட கூப்பிட, கிட்கேடின் தலையில் தடவிக் கொடுத்த பேரறிவாளன், “இதோ வந்துட்டான் பாரு உன் கிட்கேட் அவனுக்கு ஏதாவது சாப்பிட குடு” என கூற கிட்கேடிற்கு உணவு குடுத்தவள் அதனுடன் கொஞ்சம் நேரம் விளையாடிவிட்டு தூங்க போனாள்.
வழக்கமாக தூங்குவதற்கு முன் பாடல் கேட்கும் பழக்கம் கொண்டவள் தன் பெட்டில் படுத்துக் கொண்டு ஹெட் போனை மாட்டிய படி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தாள். இரண்டு பாடல்கள் முடிந்ததும் கார்த்திக் யின் குரலில் ஒரு மனம் நிற்கச் சொல்லுதே.. என தமிழினியன் பாடிய பாடல் ஒலிக்க அவனின் அழுகை கண் முன்னே நினைவுக்கு வர சட்டென எழுந்து அமர்ந்துவிட்டாள். இந்த முறை அழுகவெல்லாம் இல்லை, ஆனால் ஏனோ மனதில் ஒரு அழுத்தமான உணர்வு தூக்கம் தொலை தூரம் சென்றிருந்தது .
இங்கு தமிழினியனோ கல்லூரியில் இருந்து வந்ததிலிருந்து மனசோர்வுடன் இருந்தவன் உடல் சோர்வும் சேர அப்படியே உறங்கிப் போனான்.
error: Content is protected !!