‘ஒருதர் நம்ம கூட இருக்கிற வரை அவங்க மதிப்பையும் அருமையையும் புரிஞ்சிக்காம அவங்க இல்லாதப்போ வருத்தப்படுறதுல கொஞ்சம் கூட அர்த்தமே இல்ல’ நேற்று அவள் உரைத்த அதே வார்த்தைகள் இன்று அவன் வாய் மொழியாய் கேட்டவுடன் வெகுவாய் தாக்கியது இன்னிசையை.
இருக்கும் வரை தெரியாத மதிப்பும் அருமையும் அதை இழந்த பிறகே தெரியும் என்பதை தான் அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாளே.
“தேங்க் யூ சோ மச் இசை… நான் சொன்ன மாறி தேங்க்ஸ்ங்கிறது ரொம்ப ரொம்ப சின்ன வார்த்த ஆனா இத தவிர வேறென்ன சொல்றதுனும் எனக்கு தெரியல.. தேங்க் யூ சோ சோ மச்” அவன் சத்தத்தில் சிந்தனையில் இருந்து மீண்டவள் அவன் உணர்ச்சி வசப்பட்டு பேச, “பரவாயில்ல சீனியர்” என புன்னகைக்க முயன்றாள்.
இசையிடம் அவன் உணர்வுகளை இறக்கி வைத்த மனநிறைவு தமிழிடம். அந்த அந்தி மாலை நேரமும் அகம் கவர்ந்தவளின் அருகாமையும் அவன் இலகுவான மனநிலைக்கு மேலும் இதம் கூட்டியது.
Advertisement
இவர்கள் இருவருக்குமே மட்டுமான இத்தனிமை தருணங்களை தவறவிட விரும்பாதவன் அக்கணங்களை கவிதையாக்கும் பொருட்டு மேலும் அவளுடன் கதைக்க அந்த கதைகளெல்லாம் அவள் காதுகளை எட்டவில்லை.
“இசை..” தமிழின் அதட்டலில் நிமிர்ந்தவள் “சொல்லுங்க..” என அவன் முகம் காண
“என்ன சொல்லுங்க.. நீ தான் சொல்லணும். நான் எவ்ளோ நேரமா பேசீட்டு இருக்கேன்?”
Advertisement
“அப்படியா.. சா.. சாரி கவனிக்கல. எ.. என்ன கேட்டீங்க?” என்றவளின் வார்த்தைகள் தடுமாறி வர தமிழின் மனம் அப்போது தான் வந்ததிலிருந்து அவள் நடவடிக்கைகளை அசைப்போட்டது. வழக்கத்திற்கு மாறான அமைதி ஏதோ ஒரு சிந்தனை ஏனோ ஒரு இறுக்கம் அவளிடம். மொத்தத்தில் இன்று அவள் அவளாக இல்லை.
Advertisement
அவளை ஆழ நோக்கியவன், “நான் ஒன்னு கேட்கட்டா?” என கேட்க, “ம்ம் கேளுங்க..” என்றாள்.
“என்னாச்சு இசை? ஏன் இன்னிக்கு ஒரு மாதிரி இருக்க? ஏதாவது பிரச்சனையா?”
அவன் கேள்வியில் இசை அமைதியாகிவிட ஏதாவது தவறாக கேட்டுவிட்டோமோ என நினைத்தவன் “இல்ல நீ இன்னிக்கு நார்மல்ல இல்ல அதான் கேட்டேன். ரொம்ப பர்சனல் என்கிட்ட சொல்ல கம்ஃபர்ட்டபிளா இல்லனா சொல்ல வேண்டாம்.” என தயக்கத்துடன் சொல்ல
Advertisement
“இல்ல அப்படியெல்லாம் ஒன்னுமில்ல” என உடனே மறுத்தவள் சில நொடி அமைதிக்கு பின், “இ..இன்னிக்கு எ..எங்க அம்மாவோட இறந்த நாள்” என்றாள். சொல்லும் போதே குரல் இடறியது.
‘இசைக்கு அம்மா இல்லையா..’ அகத்தில் அதிர்ந்தவனுக்கு அவள் சொன்னதை கிரகித்துக் கொள்ளவே சில நேரமெடுத்தது. இதுவரை அவள் சொன்னதில்லை. அதிர்ச்சி வருத்தம் என அவனுள்ளும் கலவையான உணர்வுகள்.
“ஐ அம் சாரி இசை..” தமிழ் வருந்த
“பரவாயில்ல சீனியர்..” என்றாள் கரகரத்த குரலில்.
“அம்மாக்கு என்னாச்சு? எ..எப்போ.. இப்படி..?” தமிழின் கேள்வியும் தடுமாறியது.
அவள் அழுகை அகத்தை பிசைய, “பிளீஸ் இசை.. அழாத” என்றான்.
இவருக்குள்ளும் அமைதி அதை கலைக்கும் விதமாக இன்னிசையின் விசும்பல். அதுவரை அவள் அடைக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் அவளையும் மீறி வெளிவந்தது.
“என்னால தான்.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்..” மனம் உடைந்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழ தமிழிற்கு என்ன ஆறுதல் கூறி அவளை தேற்றுவதென தெரியவில்லை.
இத்தனை நேரம் இறுக்கமாக இருந்தவள் மனதை திறந்து பேசவும் அவள் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் கொட்டடும் என விட்டுவிட்டான்.
“அன்னிக்கு மட்டும் நான் அடம்பிடிக்காம இருந்திருந்தா இன்னிக்கு எங்க அம்மா என்கூட இருந்திருப்பாங்க..” புலம்பியவளின் அழுகை குற்றவுணர்வில் மேலும் அதிகமானது.
அதிகமாக அழுததில் இசை சுவாசிக்க சிரமப்பட உடனே அவள் பையிலிருந்த தண்ணீர் பாட்டில் எடுத்தவன், “இசை ரிலேக்ஸ்.. கொஞ்சம் தண்ணி குடி” என அவளிடம் கொடுக்க மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்.
அழுகை மட்டும் நின்றபாடில்லை, “இசை பிளீஸ் அழாத டா.. பாரு மூச்சு விடவே நீ கஷ்டப்படுற” வேதனையுடன் கூறியவன் அவளை சமாதானப் படுத்த முயன்றான். எப்போதும் புன்னகையுடன் வலம் வருபவளின் இந்த அழுகையை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை, ஏனோ இந்த பெண்ணின் அழுகை அந்த அளவு அவனை பாதித்தது.
அவனின் வேதனை நிறைந்த விழிகளை கண்டவள் அவனுக்காக தன் அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள்.
இத்தனை ஆண்டுகள் இதை கடந்து வந்தவள் தான் இருந்ததும் ஏனோ இன்று அகம் அன்னையை அளவிற்கு அதிமாக தேடியது அன்னையின் மடிக்கு ஏங்கியது. வடுவான பின்னும் வலி குறையாத நிலை.
பேரறிவாளனின் முன்னும் மலரின் முன்னும் அவளால் வீட்டில் வெளிப்படையாக மனம் விட்டு அழ கூட முடியவில்லை. இவளின் அழுகை இருவரையும் அதிகமாக பாதிக்கும். மலரை இவளுடன் இணைந்து அழுவாள் என்றால், மகளின் அழுகையில் மேலும் உடைந்து போவார் பேரறிவாளன்.
காலையிலிருந்து உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கும் உணர்வுகளை வெளிபடுத்த வழியில்லாமல் தவித்தவளுக்கு, தனிமை அதற்கு மருந்தாக இருக்கும் என்ற எண்ணம். அதன் விளைவாக யாரிடமும் சொல்லாமல் கிளம்பி இங்கு வந்தவளுக்கு தமிழிடம் இருந்து அழைப்பு வந்தது.
முதலில் அவனை சந்திக்கும் மனநிலையில் இல்லாதவள் நாசுக்காக மறுக்க நினைக்க அவன் குரலில் முதலில் இருந்த உற்சாகமும் அவள் தயங்கவும் அவனின் ஏமாற்றமும் ஏனோ அவளை மறுக்கவிடவில்லை.
இசையின் அழுகை மட்டுபட்டிருக்க, அவளை பார்த்து கொண்டே அமர்ந்திருந்த தமிழும் அதிர்ச்சி வருத்தம் பரிதவிப்பு என பல உணர்வுகளில் இருந்தான். அவளாக பேசட்டும் என காத்திருந்தவன் எதுவும் பேசவில்லை இருவரிடையே மௌனம், மௌனம் மட்டுமே.
இசைக்கு உள்ளத்தை அழுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகளை எங்காவது இறங்கி வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்ற தமிழிடம் மனம்விட்டுப் பேசினாள்.
“என் அம்மா ரோஜா.. செம போல்ட் விமென். அவங்களுக்கு நான்னா பயங்கிற இஷ்டம். அதுக்காக ரொம்ப செல்லம் குடுக்க மாட்டாங்க கண்டிப்பு தான்..” என பகிர்ந்தவள் மீண்டும் அன்னையின் நினைவில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“அன்னிக்கு நானும் அம்மாவும் ஷாப்பிங் போயிருந்தோம்..” என்றவளுக்கு அன்றைய நாளில் நினைவு. அந்நாள் வாழ்வில் நிகழ்ந்திருக்கவே வேண்டாம் என அவள் எண்ணி ஏங்காத நாள்ளில்லை.
அடுத்தவாரம் வரவிருந்த அவர்களின் திருமண நாளிற்காக பேரறிவாளனுக்கு பரிசு வாங்கவிட்டு வெளியே வந்த ரோஜா அந்த கடையின் வாயிலில் இருந்த இருக்கையில் பைகளுடன் அமர அவர் அருகே அன்னையை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் எட்டு வயது இன்னிசை.
“அம்மா..” இசை ரோஜாவின் கைகளை சுரண்ட மகளை கடுப்பாக பார்த்து, “இசை.. அம்மா சொன்னா செய்வேன்.. சும்மா சும்மா தொல்ல பண்ணாத” என அதட்டியவர் பையிலிருந்த பரிசையும் வாழ்த்து அட்டையையும் வெளியே எடுத்து அதை ரசனையுடன் வருடினார்.
“சீக்கிரம் வந்திருங்க ஆஃபிசர்.. உங்க ரோஜாக்கு இப்பவே உங்கள பார்க்கனும் போலிருக்கு” கணவரின் நினைவில் புன்னகைத்தவரின் இதழ்கள் முணுமுணுத்தன.
வாழ்த்து அட்டையை திறந்தவருக்கு கணவரை குறித்து அதில் எழுத தகுந்த திருமண வாழ்த்து வாக்கியங்கள் மனதில் ஏராளமாக ஓட, வீட்டிற்கு செல்லும் வரை அவை நினைவிலிருக்குமா என யோசித்தவர் அப்போதே அதில் எழுத தொடங்க பொறுமை இழந்த இசை, “ம்மா” என மீண்டும் அவர் கைகளை சுரண்டினாள்.
“என்ன டா?”
“ம்மா ஐஸ்கிரீம்..” இத்துடன் குறைந்தது இருபது முறையேனும் கேட்டிருப்பாள்.
“வங்கி தரேன் டா.. என்ன அவரசம் உனக்கு?”
“எவ்ளோ நேரம் மா..!” இசை சலித்துக் கொள்ள அவளிடம் கைபேசியை கொடுத்தவர், “ஏதாவது கேம் விளையாடு.. அம்மா டென் மினிட்ஸ்ல எழுதி முடிச்சிருறேன்.. அப்பறம் நம்ம இரண்டு பேரும் போய் ஐஸ்கிரீம்சாப்பிடலாம்” என சமாதானப்படுத்த சரியென தலையாட்டியவள் கேம் விளையாட தொடங்க ரோஜா மீண்டும் எழுத தொடங்கினார்.
அரைமணி நேரம் கடந்தும் ரோஜாவின் கடிகாரம் அந்த பத்து நிமிடங்களை கடந்தபாடில்லை.
அன்னையின் செயலில் கடுப்பான இசை கைபேசியை மீண்டும் அவர் கையிலே தினித்துவிட்டு, “எனக்கு ஐஸ்க்ரீமும் வேணாம் ஒன்னும் வேணாம் போ..” கண்ணீர் பொங்க கோவமாக பேசியவள் அன்னையின் பதில் பேச்சிற்கு கூட செவி சாய்க்காமல் அந்த இருக்கையின் மறுமுனையில் சென்று அமர்ந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இந்த குட்டிக்கு எவ்ளோ கோவம் வருது..! எல்லாம் அவங்க அப்பா குடுக்கிற செல்லம்..” இருவரையும் மனதில் கடிந்துக் கொண்ட ரோஜா உடனேயெல்லாம் மகளை சமாதானப்படுத்த முனையவில்லை மேலும் ஒர் ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு வாழ்த்து அட்டையை முழுமையாக முடித்த பிறகே இருக்கையிலிருந்து எழுந்தார்.
மகளிடம் சென்றவர், “போலாமா இசை?” என கைகளை பிடித்து அவளை தூக்க முயல, “நான் வரல.. நீ போ” என்று விசும்பலுடன் கூறி இருக்கையோடு ஒட்டிக் கொண்டாள் இன்னிசை.
“இசை..” அதட்டலுடன் அவளருகே அமர்ந்தவர் இருக்கையிலிருந்து பிரித்து மகளை மடியில் அமர்த்திக் கொண்டு, “சாரி டா இசை குட்டி.. அம்மா தான் வாங்கி தரேன்னு சொன்னேன்ல.. அப்பறம் என்ன அவசரம்உனக்கு?” என்று இசையின் கண்ணீரை துடைக்க “நான் எவ்ளோ நேரமா கேட்கிறேன்..” என்றாள் அழுகையுடன்.
“சாரி டா.. அம்மாக்கு வேலையிருந்துது… வா இப்போ நம்ம ஐஸ்கிரீம் வாங்க போலாம்..” என சமாதானம் சொல்லி அழைக்க “எனக்கு ஒன்னும் வேணாம் போ..” என முறுக்கிக் கொண்ட இசை அவர் மடியிலிருந்து இறங்க முற்பட கோவத்தில் மகளை பட்டென்று ஒரு அடி வைத்தார் ரோஜா.
“எதுக்கு இப்போ அடிக்கிற?.. இரு அப்பா வரட்டும் சொல்றேன்..” அழுகையுடன் இசை அன்னையை மிரட்ட
“சொல்லு நானும் சொல்றேன்.. இத்துனூண்டு இருந்துட்டு நீ எல்லாம் என்ன மிரட்டுற?”.
அன்னையின் அதட்டலில் அமைதியானவள் அவர் மீதேசாய்ந்துக் கொண்டு அழ மகளை மென்மையாய் அனைத்துக் கொண்டார் ரோஜா.
“இசை.. அடம்பிடிக்கிறது பிடிவாதம் பிடிக்கிறதெல்லாம் பேட் ஹேபிட்.. அம்மா சொல்லியிருக்கேன்ல.. நீ திரும்ப திரும்ப அடம்பிடிச்சா அப்பறம் அம்மாக்கு கோவம் வரும்ல..” அறிவுரை கூறி ரோஜா ஆறுதல் படுத்த அழுகையை மட்டுமே பதிலாகத் தந்தாள் மகள்.
“அழக்கூடாது இசை..” என மகளின் அழுகையை துடைத்தவர், “அம்மா சொன்ன மாதிரி நீ கடைசியா நடந்தஎக்ஸாம்ல சென்டம் வாங்குனல.. சோ நானும் உனக்கு பிராமிஸ் பண்ண மாதிரி ஐஸ்கிரீம் வாங்கி தரேன்..” என சமாதானப்படுத்த அழுகையை நிறுத்திவிட்டு அவரிடமிருந்து விலகி அமர்ந்தவள், “ஃபர்ஸ்ட் ரேங்க்.. மூன்னு சென்டம்” என புள்ளிவிவரங்களுடன் நினைவு படுத்தினாள்.
“ஹான் ஆமா.. என் சக்கரக்கட்டி அம்மா சொன்ன மாறி மூன்னு சென்டம் வாங்கி.. ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்கா..” என ரோஜா மகளை கொஞ்சி முத்தமிட குஷியான இசையும், “அம்மா அப்போ த்ரீ சென்டம்.. த்ரீ ஐஸ்கிரீம்..” என்றாள்.
“நோ.. நோ.. ஒன்னு தான் இசை. உனக்கு சளி புடிச்சிக்கும்.. அப்பறம் என்ன தான் போட்டு படுத்தி எடுப்ப”
“ம்மா.. பிளீஸ் ம்மா..” இசை கெஞ்சவும்“அடம்பிடிச்சா அந்த ஒன்னும் வாங்கி தர மாட்டேன்..” என ரோஜா கராராக சொல்லிவிட முகம் வாடியவள், “சரி ஒன்னு போதும்..” என ஒத்துக்கொண்டாள்.
“குட் கேர்ள்..” என அவள் கன்னம் தட்டியவர், “சரி உனக்கு என்ன ஃபிளேவர் வேணும்?..” என மகளுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே அவளை ஐஸ்கிரீம் வாங்க அழைத்துச் சென்றார்.
அன்னையுடன் பேசிக் கொண்டே நடந்து வந்த இன்னிசை சாலையின் எதிர்புறமிருந்த ஐஸ்கிரீம் பார்லரை கண்டதும், “ம்மா.. ம்மா.. அங்க போலாம்” என குதுகலிக்க ரோஜாவும் “சரி டா போலாம்..” என்று மகளுடன் சாலையை கடக்க தயாராக யாரும் எதிர்பாரா விதமாக நடந்தது அந்த கோர விபத்து.
இருவரும் சாலையை கடக்கமுற்பட ரோஜாவின் கைபேசி சிணுங்கியது, அவர் அதை ஏற்று பேசிக் கொண்டிருக்க, ஐஸ்கிரீமில் ஆர்வமாய் இருந்த இசையோ அதை கவனிக்காது அன்னையும் உடன் வருவதாக நினைத்து கொண்டு சாலையின் பாதி வரை கடந்துவிட்டாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அன்னையின் இருப்பை உணராதவள் அவர் வருகிறாரா என உறுதிப்படுத்திக் கொள்ள திரும்பிப் பார்க்க ரோஜா அதே இடத்தில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமடைந்து, அடுத்து என்ன செய்வது? எந்த பக்கம் செல்வது? என புரியாமல் நின்றிருந்த இசை எதிரே அதிவேகமாக வந்த லாரியை கண்டு மேலும் மிரண்டு போய், “அம்மா..” என பயத்தில் அழுக, மகளின் அழுகுரல் கேட்டு திரும்பிய ரோஜா இசைசாலையில் நிற்பதை கண்டு பதறிப்போய் அவளிடம் ஓடினார்.
எதிரே வந்த கனரக வாகனம் இசையை நெருங்கவும் மகளை காப்பாற்ற துரிதமாக செயல்பட்டவர் வேகமாக சாலையின் மறுப்பக்கம் இசையை பிடித்து தள்ளிவிட, அதிவேகத்தில் வந்த அந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி ரோஜாவின் மீது பலமாக மோதியது. அதில் படுகாயம் அடைந்த ரோஜாவின் உயிர் சம்பவ இடத்திலே இசையின் கண்முன்னே பிரிந்தது.
“எங்க அம்மா.. என் கண்ணு முன்னாடியே..” என அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறியவள் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டு அழ தமிழிற்கு நெஞ்சமெல்லாம் கனத்து போனது.
சாலையில் தெரியாத யாரோ ஒருவரின் விபத்தையோ உயிரிழைப்பையோ எதேச்சையாக பார்க்க நேரிடுவதே கொடுமை, அதன் தாக்கம் நம்மை அதிகமாக பாதிக்கும். பெற்ற அன்னை இறப்பை நேரில் கண்ட எட்டு வயது குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? கொடுமையிலும் கொடுமை. நினைக்கவே நெஞ்சம் பதபதைத்தது.
இசையின் அழுகை தமிழை மேலும் வருத்தியது. அவளை இழுத்தணைத்து ஆறுதல் படுத்த அகத்தில் பெருந்தவிப்பு எழ, உள்ளத்தில் உணர்வுகள் இருந்தும் ஓர் உரிமையில்லா போராட்டம் அவனுள்.
“இசை.. பிளீஸ் அழாத டா..” பரிதவிப்புடன் கூறியவன், “இசை நீ இப்படி அழறது அம்மாக்கு புடிக்குமா சொல்லு?” என கேட்க அழுகையுடன் அவனை ஏறிட்டவள் இல்லை என தலையாட்டினாள். அவள் விழிகளிலிருந்த வலியும் வேதனையும் அவனை ஏதோ செய்தது.
“அழாத டா.. அம்மா உன் கூடவே தான் இருக்காங்க.. நீ இப்படி அழறது அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல..” என ஆறுதல் கூறி அவளை தேற்ற முயன்றவன் மனதிலோ அவள் அழுகையை நிறுத்தி மனநிலையை மாற்றவிட முடியாத என்ற தவிப்பு ஒரு ஏக்கம்.
“ஆனா.. எனக்கு ரொம்ப கில்டா இருக்கு சீனியர்.. அன்னிக்கு நான் மட்டும் அப்படி பண்ணாம இருந்திருந்தா.. இப்போ அம்மா எங்கூட இருந்திருப்பாங்கல.. எல்லாம் என்னால தான்” விழிகளில் வலியுடன் உடைந்து போய் வந்தது இசையின் வார்த்தைகள்.
“உன்னால எதுவும் இல்லை டா.. சில நிகழ்வுகள் அப்படி தான் நடக்கனம்னு இருந்தா அத யாராலையும் மாத்த முடியாது.. அதுக்கெல்லாம் நீ உன்ன பிளேம் பண்ணிக்காத..” தமிழ் அது அவளின் தவறில்லை என புரியவைக்க முயல இசையின் மனம் ஒப்பவில்லை, அழுகையுடன் மறுப்பாக தலையாட்டினாள்.
‘அன்னையின் இறப்பிற்கு தான் தான் காரணம்’ என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே அவளின் ஆழ் மனதில் பதிந்து போயிருக்க, அதை யாராலும் மாற்ற முடியவில்லை. பேரறிவாளன் கூட அது அவளின் தவறில்லை என புரியவைக்க பல முயற்சிகள் மேற்கொண்டு அதில் தோற்று தான் போனார்.
இசையின் மனமுடைந்த பேச்சிலும் கலக்கத்திலும் கலங்கிப் போன தமிழ் செய்வதறியாத நிலையில் இருந்தான்.