Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 10 (3)

இருவரிடையே நிலவிய நீண்ட நெடிய மௌனத்தை கலத்தது இசையின் கைபேசி. பேரறிவாளனிடம் இருந்து அழைப்பு வரவும் பதட்டமடைந்தவள், குரலை செறுமிக் கொண்டு அழைப்பை ஏற்க, “எங்க மா இருக்க?” என்றார் பேரறிவாளன்.

“அது அப்பா.. ஃபிரண்ட்ட பார்க்க.. நோட்ஸ் வாங்க வந்தேன்..” என்று கரகரத்த குரலில் தடுமாற்றத்துடன் பதிலளித்தவள் தமிழை பார்க்க அவன் பார்வையும் இவளிடம் தான்.

அவள் தடுமாற்றத்திலே அது பொய்யென புரிந்து கொண்டவர் மேற்கொண்டு ஏதும் கேட்காமல், “சரி மா எப்போ வருவ?..  நான் ஆஃபிஸ்ல இருந்து கிளம்பீட்டேன்” எனவும் நேரத்தை பார்த்தவள், “டைம் ஆயிருச்சா.. இதோ இப்போ கிளம்பிருவேன் ப்பா” என இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள தமிழும் எழுத்துக் கொண்டான்.



Advertisement

அவருடன் பேசி முடித்து அழைப்பை துண்டித்தவள் தமிழிடம், “சீனியர் டைம் ஆச்சு நான் கிளம்பனும்” என கூற
சரியென தலையாட்டியவன் அவளுடன் பூங்காவை விட்டு வெளியே வந்தான் வேறேதும் பேசிக் கொள்ளவில்லை.

“வரேன் சீனியர்” என்று விடைபெற்றவள் எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல சாலையை கடக்க நிற்க தமிழ் அதே இடத்தில் தான் நின்றான்.

அன்று சனிக்கிழமை‌ மாலை வேளையை கடந்திருக்க வாகன நெரிசலும் சற்று அதிமாக இருந்தது. இசை சாலையை கடக்க முற்பட்டவள், முன் செல்வதும் பின் அதிவேகமாக வரும் வாகனங்களை கண்டு பயத்தில் இரண்டடி பின் வருவதுமாய் இருக்க அவள் சாலையை கடக்க பயப்படுகிறாள் என புரிந்துக் கொண்டான்.

Advertisement

அன்று அந்த போட்டியன்று ஏன் மலர்  இசையை தனியே விட்டு செல்ல அத்தனை தயங்கினாள் கலக்கமடைந்தாள் அவளிடம் ஆயிரம் அறிவுரைகளை கூறிவிட்டு சென்றாள் என இப்போது விளங்கியது தமிழிற்கு.

Advertisement

அவளருகே சென்றவன் எதுவும் பேசவில்லை, வாகன நெரிசல் கொஞ்சம் குறைய “வா இசை..” என்று சாலையில் இறங்கி நடக்க, தமிழை கண்டதும் அச்சம் நீங்கி ஆசுவாசம் கொண்டவள் அமைதியாக அவன் பின்னே நடந்தாள். நடுவே வந்த சில வாகனங்களையும் கை காட்டி நிறுத்தியவன் அவளை பத்திரமாக சாலையை கடக்க செய்தான்.

சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் அவனை தயக்கத்துடன் ஏறிட்டவள், “அது.. அந்த ஆக்சிடென்ட் நடந்ததுல இருந்து ரோட் கிராஸ் பண்ண கொஞ்சம் பயம்” என்றாள் மெல்லிய குரலில்.

“என்ன கூப்பிட்டு இருக்கலாம்ல..” தமிழ் அவளை கடிந்து கொள்ள, “நீங்க கிளம்பீட்டீங்கனு நெனச்சேன்” என்றாள் இசை.

Advertisement

“அதெப்படி உன்ன தனியா விட்டுட்டு போவேன்?” அவளின் பதிலில் மனம் ஆறாதவன் குரலை உயர்த்திவிட இசையோ அவனின் தீடீர் கோவத்தில் அதிர்ச்சியாக பார்த்தாள்.

அவளின் அதிர்ந்த முகத்தை கண்டதும் தன்னையே கடிந்து கொண்டு, “சாரி இசை.. அது நீ டக்குன்னு அப்படி சொல்லவும் கோவம் வந்திருச்சு..” என மன்னிப்பு கோரியவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “நீ இப்படி இருக்கிறப்போ நான் எப்படி உன்ன தனியா விட்டுட்டு போவேன்.. நீ எப்படி அப்படி சொல்லலாம்?..” என்றான் மீண்டும் மனம் கேளாமல்.

அவன் பேச்சில் அவள் வார்த்தைகள் அவனை காயப்படுத்திவிட்டது என புரிய, “சாரி..” என்றாள். தமிழ் அதற்கு பதில் பேசவில்லை. இந்த அளவிற்கு கூட இவள் என்னை புரிந்துகொள்ளவில்லையா என்ற கோவம் அவனுள்.

பேருந்து வரவும் அவளை பார்த்து, “பஸ் வந்திருச்சு இசை” என்றவன்  இடைவெளிவிட்டு “என்ன நடந்தாலும் ஸ்டில் வீ ஹேவ் டூ மூவ் ஆன் இசை.. அம்மா எப்பவும் உன் கூட தான் இருப்பாங்க.. நீ இப்படி அழுதுட்டு இருக்கிறது அவங்களுக்கு பிடிக்காது.. சோ ஃபீல் பண்ணாத” என கூற சரியென தலையாட்டினாள்.

பேருந்து நிற்கவும் ஏறிக் கொண்டவள் விடைபெறும் விதமாக தமிழை கண்டு தலையசைக்க, பதிலுக்கு தலையசைத்தவன் “வீட்டிற்கு போய்ட்டு  கால் பண்ணு” என்று சைகையில் சொல்ல சரியென தலையாட்டினாள்.

அவள் கண்ணைவிட்டு மறையும் வரை நின்று பார்த்தவன், தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

இசை அவள் நிறுத்தம் வந்ததும் இறங்க, வீட்டிற்கு செல்லாமல் மகளுக்காக காத்துக் கொண்டிருந்தார் பேரறிவாளன்.

தந்தையை கண்டதும் அவரிடம் சென்றவள், “ஏன் ப்பா இங்கேயே வெயிட் பண்றீங்க?.. நானே வந்திருப்பேன்ல” என கேட்க

“இப்போ தான் டா வந்தேன்.. சரி நீ நடந்து வருவியே அதான் உன்னையும் கூட்டீட்டு போலாம்னு வெயிட் பண்ணேன்” என்ற பேரறிவாளன், “சரி டா டைம் ஆச்சு சீக்கிரம் ஏறு..” என ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை உயிர்ப்பிக்க காரில் ஏற கதவை திறந்த இசை தவறுதலாக தன் கையில் வைத்திருந்த ஃபோனை கீழே போட்டு விட அதன் டிஸ்ப்ளே உடைந்துவிட்டது.

“என்ன டா ஆச்சு..?” சத்தம் கேட்ட பேரறிவாளன் பதட்டமாக கேட்க, “அது ஃபோன தெரியாம கீழே போட்டுட்டேன் ப்பா.. டிஸ்ப்ளே போச்சு” என்று கீழே விழுந்த ஃபோனை எடுத்தவள் அதை அவரிடம் நீட்ட வாங்கிப் பார்த்தவர், “ரொம்ப டேமேஜ் ஆகிருச்சு.. சரி விடு டிஸ்ப்ளே மாத்திக்கலாம்” என்றார்.

ஃபோன் உடைந்ததில் மனம் சுணங்கியவள் காரில் ஏறாமல் நிற்க, “விடு பாப்பா டிஸ்ப்ளே மாத்திக்கலாம்” என சமாதானப்படுத்தியவர், “டைம் ஆச்சு டா.. சீக்கிரம் ஏறு” என கூற பதில் கூறாமல் அமைதியாக ஏறி முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

இசையால் பேரறிவாளனை இயல்பாக பார்த்து சகஜமாக கூட பேச முடியவில்லை. தந்தையை காணும் போதெல்லாம் அகம் அவரின் இந்த நிலைக்கு நீ தான் காரணம் என சாடியது. அவரின் வாழ்க்கை கனவு என அனைத்தையும் இழந்துவிட்டு நிற்க நீ தான் காரணம் என உள்ளம் குத்திக்காட்ட குற்றவுணர்வில் கூனிக்குறுகிப் போனாள்.

தந்தையை எதிர் கொள்ள திராணியில்லாதவள் வெளியே வேடிக்கை பார்ப்பதை போல் முகத்தை வெளியே திருப்பிக் கொண்டாள்.

இசையின் அழுது சுருங்கிய கண்களும் சிவந்த முகமுமே அவள் அழுததை தெள்ளத் தெளிவாய் எடுத்துக் காட்ட, மகளின் மனம் அறிந்தவர் மேற்கொண்டு ஏதும் கேள்வி கேட்டு அவளை சங்கடப் படுத்தவில்லை.

வீட்டிற்கு வரும் முன் அவளின் உடைந்த ஃபோனை சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு, ஹோட்டலில் இரவு உணவு வாங்கிக் கொண்டு ஏழு மணி போல் வீட்டிற்கு வந்தார்கள்.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் இசை உடை மாற்ற சென்றுவிட தானும் உடை மாற்றி வந்துவிட்டு வாங்கி வந்த உணவுகளை மேஜையில் எடுத்து வைத்தார் அறிவு.

அறையிலிருந்து வெளியே வந்தவள், “என்ன கூப்பிட்டு இருக்கலாம்ல ப்பா.. நீங்க ஏன் எடுத்து வச்சீங்க?” என கடிந்து கொள்ள, “சின்ன வேலை தான டா..” என்றவர் “சரி வந்து உக்காரு சாப்பிடலாம்..” என்று அவளை உட்கார வைத்து பரிமாற “இவ்ளோ சீக்கிரமாவா.. பசிக்கல ப்பா” மறுத்தாள் இசை.

எப்படியும் இன்று சாப்பிடாமல் இது போல் ஏதாவது செய்வாள் என அறிந்தவர் காலை அவருடனே உட்கார வைத்து மகளை சாப்பிட வைத்துவிட்டே வேலைக்கு சென்றார். மதியமும் அவள் உணவு உண்ணவில்லை என்பதை அவளின் சோர்ந்த முகமே உரைக்க, விடவில்லை பேரறிவாளன்.

தந்தை வற்புறுத்தலில் வேறு வழியின்றி சாப்பிட உட்கார்ந்தவளுக்கு  உணவு உள்ளே இறங்கவில்லை. பெயருக்கு சாப்பாட்டை கொறித்தவள், அவர் சாப்பிட்டு முடிக்கவும் கிட்டேட்டிற்கும் உணவு வைத்துவிட்டு  தந்தையுடன் சேர்ந்து கிட்சனை ஒதுங்க வைத்து அவருக்கு சுத்தம் செய்ய உதவினாள்.

மகளின் தெளிவில்லா கலங்கிய முகம் பேரறிவாளனை சலனப்படுத்த பொறுத்து பொறுத்து பார்த்தவர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, “பாப்பா.. ஏன் டா இப்படி இருக்க?” என கேட்டுவிட்டார் மனம் கேளாமல்.

அதுவரை தன் உணர்வுகளை மறைக்க பாடாத பாடுபட்டவள் தந்தையின் கேள்வியில் மொத்தமாக உடைந்துவிட்டாள்.

அடுத்த நொடி தந்தையிடம் தஞ்சமடைந்தவள் அவரை அணைத்துக் கொண்டு அழுது தீர்க்க, மகளின் அழுகையில் இத்தனை நேரம் அவர் கொண்ட திடமும் தைரியமும் சுக்குநூறானது, உள்ளுக்குள்ளே உடைந்து போனார் மனிதர்.

“ப்பா.. சாரி ப்பா.. அன்னிக்கு நான் மட்டும் அப்படி பண்ணாம இருந்திருந்தா..‌ அம்மா நம்ம கூடவே‌ இருந்திருப்பாங்கல” என்ற மகளின் வலிநிறைந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வார்? ஆயிரம் முறை கூறிய அதே வார்த்தைகளை தான் மீண்டும் கூறினார்.

“நீ காரணம் இல்ல டா..” என வேதனையுடன் அவள் தலையை கோதியவர், “அம்மா நம்ம கூட தான் இருக்கா..” என்று அவளை தேற்ற முயன்றார்.

மீண்டும் ஒரு முறை தன் உணர்வுகளை கொட்டி தீர்த்து தந்தையிடம் ஆறுதல் தேடினாள் இன்னிசை..!

“பாப்பா.. அழாத டா.. ரொம்ப அழுதா உனக்கு வீசிங் வரும்” கெஞ்சாத குறையாக பேரறிவாளன் கூறவும் தான் அழுகையை நிறுத்தினாள்.

தன்னிலை இழந்த நிலையில் இன்னிசை இருக்க இதற்கு மேல் அவளை சமாளிப்பது சிரமம் என புரிய, மகளை அவள் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார் பேரறிவாளன்.

ஃபேனை போட்டவர் அவள் அருகே வந்து அமர, தூங்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தாள் இசை. வாஞ்சையுடன் அவள் தலையை வருடியவர், “அப்பா உன் கூடவே இருக்கேன்.. எதுவும் யோசிக்காம கண்ண மூடி தூங்கு டா” என்க பதில் ஏதும் பேசாமல் தலையணையில் இருந்து தந்தையின் மடிக்கு தன் தலையை மாற்றிக் கொண்டவள், கண்களை மூடிக் கொண்டாள்.

இத்தனை நேரம் இவர்களின் வார்த்தைகளில் கிடைக்காத அமைதியும் ஆறுதலும் தந்தையின் மடியில் ஆலாதியாய் கிடைக்க, இறுக்கம் நீங்கி உறக்கம் தழுவினாள் இன்னிசை.

இசை தூங்கும் வரை அமைதியாய் இருந்தவர், அவள் உறக்கத்தை உறுதிசெய்து கொண்டு தன் மடியிலிருந்த அவள் தலையை மீண்டும் தலையணைக்கு மாற்றிவிட்டு மகளுக்கு போர்வை போர்த்திவிட்டு தன் அறைக்கு சென்றார்.

உள்ளே நுழைந்ததும் கதவை சாற்றிவிட்டு அலமாரியின் அடியில் இருந்த தன் சூட்கேஸ்சுடன் வந்து கட்டிலில் அமர்ந்தவர் அதை திறக்க
பரிசுகள், வாழ்த்து அட்டைகள், காதல் கடிதங்களால் நிறைந்திருந்தது அவர் காதலின் பொக்கிஷம்.

ஒவ்வொன்றாய் ஏக்கத்துடன் வருடியவரின் விரல்கள் ரோஜா இறுதியாக எழுதிய வாழ்த்து அட்டையில் வந்த நின்றது. மனைவி மறைந்து மூன்று மாதங்களுக்கு பின் யாரோ முகம் அறியா நபரால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட ரோஜாவின் உடைமைகளுடன் இருந்தது.

வாழ்த்து அட்டையை திறந்து மனைவியின் கையெழுத்தை ஆசையுடன் வருடினார், லட்சம் முறை படித்தாலும் சலிக்காத காவியம்! அதன் ஒவ்வொரு வரிகளும் பேரறிவாளனுக்கு மனப்பாடம்!

மீண்டும் ஓர் முறை சலிக்காமல் படித்தவரின் விழிகளின் நீர் ரோஜாவின் இறுதி வார்த்தைகளில் நனைத்தது, –காலமெல்லாம் காதலுடன் ரோஜா பேரறிவாளன் என எழுதி கையெழுத்திட்டிருந்தார். அந்த ரோஜாவை நனைத்த கண்ணீரை, வார்த்தைகள் அழியாதவாறு கைகளால் ஒற்றி எடுத்தவர் அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

“எல்லாத்துலயும் அவசரம் ரோஜா உனக்கு.. உன் அறிவ கடைசியா ஒரு முறை கூட பார்க்காம போயிட்ட .. நீயில்லாம நான் எப்படி இருப்பேன்னு யோசிச்சியா?” என வார்த்தைகளில் வலியுடன் மனைவியிடம் மானசீகமாக கேட்டவர், “அது தான் இருக்கேனே இந்த பத்து வருஷமா.. இசைக்காக.” அதற்கு பதிலும் அளித்தார். குடும்பம் வேலை என்று மட்டுமே இருந்த பேரறிவாளனின் உலகம் மனைவிக்கு பின் இன்னிசை என்ற ஒற்றை மனுஷியாக சுருங்கிவிட்டது. மகளே அவரின் வாழ்வாகிப் போனாள்.

வாழ்த்து அட்டையை மீண்டும் உள்ளே வைத்தவர் அவரின் திருமண ஆல்பத்தை எடுத்து பார்த்தார், அடுத்த வாரம் அவர்களின் திருமணநாள்.

திருமண அலங்காரத்தில் கண்களில் காதல் ததும்ப முகம் கொள்ளா புன்னகையுடன் இருந்த அவரின் ரோஜாவை பேரறிவாளனின் விழிகள் ரசனையுடன் தழுவியது. மனைவியை காண காண அவருடன் கண்ட காதல் கனாக்கள் எல்லாம் கானல் நீராய் போனதை எண்ணி உள்ளம் விம்மியது. ரோஜா இல்லாத ஒரு வாழ்வு அவர் கற்பனை கூட செய்ததில்லை, அந்த கற்பனைக்கும் அப்பாற்பட்ட வாழ்வை தான் கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

இன்னிசை கூட தந்தையிடம் தமிழிடம் ஆறுதல் தேடிக் கொண்டாள், ஆனால் பேரறிவாளன் அப்படியில்லை மகளின் முன் உடையக்கூடாதென உறுதியுடன் இறுக்கமாக இருந்தார்.

இந்த தனிமையும் அவர் ரோஜாவின் நினைவுகள் மட்டுமே பேரறிவாளனின் ஒரே ஆறுதல்.

தனிமையில் மனைவியின் நினைவுகளோடு ஆறுதல் தேடிக் கொண்டிருந்தவரை கலைத்தது கிட்கேட் குரைக்கும் சத்தம்.

பேரறிவாளன் கதவை திறக்கவும் வாக்கிங் லீஷ்ஷை வாயில் கல்விக் கொண்டு உள்ளே வந்த கிட்கேட் அதை அவர் காலடியில் போட்டுவிட்டு வாலாட்ட, அதன் செயலில் இதுவரை இருந்த இறுக்கம் நீங்கி புன்னகைத்தார்.

“வாக்கிங்க்கு டைம் ஆச்சா டா..” என அதன் தலையை தடவிக் கொடுத்தவர், “இரு போலாம்..” என்று கூற அதுவும் அவரை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அமர்ந்துக் கொண்டது.

பேரறிவாளன் மீண்டும் தன் உடைமைகளை சூட்கேஸில் அடுக்க தொடங்க, அவர் கையிலிருந்த ஆல்பத்திலிருந்து கீழே விழுந்தது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.‌

திருமணத்திற்கு முன் தன் இருபத்தி மூன்று வயதில், இந்திய இராணுவத்தின் கடற்படையில் சேர்ந்தபோது அவர் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம். ஏனோ அந்த வெள்ளை நிற சீருடையின் மீது ரோஜாவிற்கும் குறையாத காதல். ஆனால் எல்லா காதல் கதைகளும் இங்கு வெற்றியில் முடிவதில்லையே.. பேரறிவாளனுக்கும் கடற்படைக்குமான காதல் கதையும் தோல்வியை தான் தழுவியது. விழிகளில் வலியுடன் அதை ஒரு முறை வருடியவர் தன் வாலெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டார்.

சூட்கேஸை மீண்டும் அலமாரியில் அதன் இடத்திலே வைத்துவிட்டு கிட்கேட்டை நடை அழைத்து சென்று வந்தவர், இசையை தனியே விட விரும்பாமல் அவள் அறையிலே தரையில் படுக்கை விரித்து படுத்துக் கொண்டார்.

இன்னிசை அசதியில் ஆழ்ந்து உறங்க, அவளால் தூக்கத்தை தொலைத்தனர் பேரறிவாளனும் தமிழினியனும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!