Skip to content
Post Views: 896
நாட்கள் செல்ல தமிழினியனும் இன்னிசையும் மேலும் மனதளவில் மிகவும் நெருங்கியிருந்தனர். இருவருக்குமே மற்றொருவரின் குட் மார்னிங் குறுஞ்செய்தியுடன் விடியும் பொழுதுகள் அந்த நீண்ட நெடிய இரவு தொலைபேசி அழைப்பில் சாய்வது வாடிக்கையாகிப்போனது.
தமிழிடமிருந்து அழைப்பு வந்தாலே உற்சாகமாகிவிடுவாள் இசை. “சீனியர் இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?” என்று ஆரம்பிப்பவள் அந்நாளின் சிறு சிறு நிகழ்வுகளை கூட அவனிடம் ஒன்றுவிடாமல் பகிர்வாள். அப்போது தான் அன்றைய நாள் முழுமையடைந்த உணர்வு அவளுக்கு.
Advertisement
இது அவளின் சிறுவயது பழக்கம். பள்ளியிலிருந்து வந்ததும் அன்றைய நிகழ்வுகளையெல்லாம் ஒன்றுவிடாமல் ரோஜாவிடம் பகிர்வது. அன்னைக்கு பிறகு தந்தையிடம் கூறலாம் என்றால் இவள் வீடு வரும் நேரம் அவர் வீட்டிலிருக்க மாட்டார். மலர்? இசை இது போன்ற பேச்சை துவங்கினாலே “நானும் உங்கூட தானே டி இருந்தேன்..” என ஒற்றை வரியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்.
அந்த வகையில் ரோஜாவின் இடத்தை நிரப்பிய தமிழ் தன்னை அறியாமலே அவள் தொலைத்த சில குணாதிசியங்களை மீட்டிருந்தான்.
Advertisement
Advertisement
கல்லூரியில் அடிக்கடி சந்தித்து கொண்டாலும் தினமும் பார்த்துக் கொள்ளும் சர்ந்தப்பங்கள் அமையாது. அப்படியே அமைந்தாலும், அது நண்பர்களுக்கான நேரமாக இருக்குமே தவிர இவர்கள் இருவருக்குமான நேரமாக இருக்கவே இருக்காது. ஆனால் தொலைபேசி உரையாடலுக்கான இரவு நேரங்கள் அனைத்தும் இவர்களுக்கே இவர்களுக்கானது.
முடிவிலியாக தொடரும் அவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் உரிமை அவர்களை இளைப்பாற்றும் இரவிற்கும் அந்த இரவிற்கு இனிமை கூட்டும் இசைக்கும் மட்டுமே உரியது.
Advertisement
“டேய் போன வாரம் புதுசா ஒரு கேம் லான்ச் பண்ணாங்களே அது வேற லெவல்ல இருக்கு டா.. செம கேமிங் எக்ஸ்பீரியன்ஸ்” என எழில் பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க அதை காதில் போட்டுக் கொள்ளாமல் ‘ம்ம்’ கொட்டிக் கொண்டே தன் நோட்டில் ஏதோ மும்முரமாக எழுதிக் (கிறுக்கி) கொண்டிருந்தான் தமிழ்.
பேசிக் கொண்டே இவன் புறம் திரும்பியவன் தமிழின் கவனம் தன்னிடம் இல்லை என்றதும் கடுப்பாகிவிட்டான். சட்டென அவன் எழுதிக் கொண்டிருந்த நோட்டை மூடி வைத்தவன், “எங்கே இப்போ நான் என்ன சொல்லீட்டிருந்தேன் சொல்லு?” என்றதும் தமிழ் திருதிருவென விழிக்க அவனை அழுத்தமாக பார்த்தான் எழில்.
“அது.. ஏதோ புதுசா.. ஹான் புதுசா லான்ச் பண்ண பைக்க பத்தி பேசீட்டு இருந்த..” என்றதும் எழில் முறைக்க மாட்டிக்கொண்டவன் சமாளிப்பாய் சிரித்தான். “நான் பாட்டுக்கு பேசீட்டு இருக்கேன்.. அப்படி என்ன கிறுக்கீட்டு இருக்க” என அவனிடம் இருந்த நோட்டை பிடிங்கி பார்த்தவன் அதிர்ந்து போனான்.
“டேய்..??!” மாறாத அதிர்ச்சியுடன் அவனை நோக்கியவன், “நீ இசைய லவ் பண்றியா?” என்றதும் “அது.. ஃபிரண்ட்.. க்ரஷ்..” என தடுமாறிய தமிழ் “நீ மொதல்ல நோட்ட குடு” என நோட்டை பிடுங்க முற்பட அதை தன் பின் மறைத்துக் கொண்டவன் “கேட்க கேள்விக்கு பதில்” என்றான் வம்பாக.
“ஏன் டா இப்படி இம்ச பண்ற?” தமிழ் எரிந்து விழ அவன் கிறுக்கிய பேப்பரை பார்வையாலே சுட்டி காட்டி புருவம் உயர்த்தினான் எழில். பேப்பர் முழுவதும் இன்னிசை இன்னிசை என அவள் பெயரையே ஒரு இடம் விடாமல் எழுதியருக்க அதில் ஆங்காங்கே ஹார்டீன்கள் வேறு.
நண்பனின் துளைக்கும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி, “அது.. நான்.. அவ.. நாங்க..” என்றவன் “ஃபிரண்ட்ஸ் தான்..” என மெல்ல முணுமுணுக்க “ஓ ஃபிரண்ட்ஸ்... சரி நானும் உனக்கு ஃபிரண்ட் தானே.. அவளாது இப்போ வந்தவ.. ஆனா என்ன உனக்கு விவரம் தெரிஞ்ச வயசில இருந்தே தெரியுமில்ல.. காட்டு என் பேர எங்க எழுதியிருக்க?” என நோட்டை அவனிடம் வீசினான் எழில்.
“டேய்…” என தமிழ் அதிர “என்ன முடியாதுல? ஏன்னா நான் வேற அவ வேற” என்ற எழில் “இன்னும் எத்தன நாளைக்கு ஃபிரண்ட் க்ரஷ்னு நீயே உன்ன ஏமாதிக்க போற? உன் மனச தொட்டு சொல்லு அவ மேல உனக்கு வேற எந்த ஃபீலிங்ஸும் இல்ல? நீ உன் லவ்வ நல்லாவே உணர்ந்துட்டனு எனக்கும் தெரியும்.. இருந்தும் ஏன் இப்படியெல்லாம் பண்ணீட்டு இருக்கனு எனக்கு சுத்தமா புரியல” அதிருப்தியாக பேச
“ஆமா டா நான் இசைய லவ் பண்றேன்..” தன் உள்ளத்தை உடைத்து பேசியவன் சற்று இடைவெளி விட்டு “ஆனா எங்களுக்குள்ள செட் ஆகுமா?” என்று தயக்கத்துடன் இழுத்தான்.
“செட் ஆகுமானா? புரியல?”
“அவ கிளாஸ் டாப்பர்.. நான் அரியர் கேஸு.. அவ சரளமா இங்கிலிஷ் பேசுறா எனக்கு சேர்ந்த மாதிரி நாலு நிமிஷம் பேசுறதே அவ்ளோ கஷ்டம். அவ எல்லாத்துலயும் என்ன விட பெட்டர்ரா இருக்கிற மாதிரி ஒரு ஃபில்.. எங்களுக்குள்ள மியூசிக் டேஸ்ட் தவர எதுவுமே ஒத்துபோக மாட்டிங்குது.. அப்படி இருக்கிறப்போ எங்களுக்குள்ள ரிலேஷன்ஷிப் செட் ஆகுமா?’
“டாப்பர்.. இங்கிலிஷ் பேசுறாளா? டேய் நீ லவ் பண்றியா இல்ல இன்டர்வியூக்கு போறியா?.. சும்மா கண்டதையும் யோசிக்காத.. லவ்ல இதெல்லா ஒரு விஷயமே இல்ல.. ஜஸ்ட் டோன்ட் காம்பிளிகேட் லவ்”
“யோசிக்கணும் டா.. நான் ஒன்னும் காதலுச்சுட்டு கழுட்டி விட லவ் பண்ணல.. அவள கல்யாணம் பண்ணி காலம் பூரா கடைசி மூச்சு வர ஒன்னா வாழ ஆசைப்படுறேன்.. அப்படி இருக்கிறப்போ நாள பின்ன ஒரு சின்ன விஷயம் கூட எங்க வாழ்க்கைய பாதிக்க கூடாதுனு நினைக்கிறேன்” என எதிர்கால திட்டங்களை கொண்டு பேசிய தமிழை வியப்பாக பார்த்தான் எழில். காதல் ஒருவனை இந்தளவுக்கு மாற்றுமா என்ன?
“என்ன அப்படி பாக்குற?” என்ற தமிழை கண்டு முறுவலித்த எழில் “அவள அவ்ளோ புடிக்குமா?” என்க “புடிக்கும்..” என இதழ் பிரிக்காமல் புன்னகைத்தவன் “ஆனா என்ன பிரயோஜனம்” என்றான் வெறுமையாக.
“ஏன் டா இப்படி பேசுற..?”
“ப்ச்.. போ டா..” சலித்துக் கொண்டவன், “மணிக்கணக்கா பேசுவா.. ஆனா கொஞ்சம் கூட அந்த அரலூசுக்கு நான் என்ன இன்டென்ஷன்ல பேசுறேங்குறதே புரியாது.. ரெண்டு மணிநேரம் பேசுனாலும் அந்த ரெண்டு மணிநேரமும் என்ன ஃபிரண்ட் ஜோன்லயே தான் வச்சு பேசுவா.. இதெல்லாம் தெரிஞ்சு பண்றாளா இல்ல தெரியாம பண்றாளானு எனக்கு இப்போ வர புரியல.. அவள பொறுத்த வரைக்கும் நான் மலரோட மேல் வெர்ஷன் அவ்ளோதான்.. அவ கிட்ட எப்படி நடப்பாளோ அப்படி தான் என்கிட்டயும் நடப்பா.. மத்தபடி நத்திங் ஸ்பெஷல்” என்று புலம்பினான்.
“இங்க பாரு இசை ரொம்ப இன்னோசென்ட் .. அவள பொறுத்த வர நீ அவ ஃபிரண்ட் .. அதனால அவளோட லிமிட்ஸ் தெரிஞ்சு உங்கிட்ட ரொம்ப கண்ணியமா பழகுறா..” என்றதும் தமிழ் அவனை நோக்க அவன் பார்வை புரிந்தது போல், “என்ன பாக்குற? கண்ணியமா இருக்கிறது பசங்க பொண்ணுங்க எல்லார்க்கும் ஒன்னு தான்.. இதே ஒரு பொண்ணு பேசும் போதோ, சேட் பண்ணும் போதோ எல்லை தாண்டி பேசீட்டு நீ போய் பிரபோஸ் பண்ணும் போது, வீ ஆர் ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்னா நீ ஒத்துக்குவியா?” என கேட்க “அது எப்படி ஒத்துக்கிறது” என்றான் உடனே.
“ஹான்.. அந்த மாதிரி இசை உங்கிட்ட லிமிட்ஸ் தாண்டியோ இல்ல உனக்கு ஹோப் குடுக்கிற மாதிரி இதுவர பேசியிருக்கிறாளா” என்றதும் இல்லை என தலையாட்டினான்.
“அப்போ அவ உனக்கு ஒரு ஃபிரண்டா தான் இருக்கா உன்னையும் அப்படி தான் பாக்குறா.. உனக்கு அவ மேல ஃபீலிங்ஸ் இருந்தா நீ தான் போய் இனிஷியேட் பண்ணி பேசணும்.. அத விட்டுட்டு அவள குறை சொல்லாத”.
“சரி டா.. நீ இப்போ என்ன தான் சொல்ல வர?” தமிழ் சற்று எரிச்சலாகவே கேட்க “போய் பிரபோஸ் பண்ணு டா” என்றான் எழில் அசட்டையாக.
“பிரபோஸா..” என திகைத்தவன் “அதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. எ..எனக்கு பயமா இருக்கு” என தயங்கவும் கடுப்பான எழில், “பிரபோஸ் பண்ணவே தைரியம் இல்லாதவன் எதுக்கு டா லவ் பண்ற” எரிந்து விழுந்தான்.
“உனக்கென்ன நீ அசால்ட்டா சொல்லுவ.. என் மேல கொஞ்சம் கூட ஃபீலிங்சே இல்லாதவளுக்கு பிரபோஸ் பண்ணீட்டு இருக்கிற கொஞ்ச நஞ்சம் ஃபிரண்ட்ஷிப்பையும் கெடுத்துக்க சொல்றீயா”
“சுத்த கிறுக்கனாட்டா பேசாத டா.. ஃபீலிங்ஸ் இல்ல ஃபீலிங்ஸ் இல்லனு புலம்புனா மட்டும் பத்தாது.. அது வர வைக்க ஏதாவது முயற்சி பண்ணனும்”
“இப்போ நான் போய் பிரபோஸ் பண்ணா மட்டும் உடனே ஃபீலிங்ஸ் வந்து ஓகே சொல்லீருவாளா?”
“ஓஓ உனக்கு அந்த ஆசை வேற இருக்கா?..” என நக்கலடித்த எழில் “அவ உனக்கு ஓகே சொல்றதும் சொல்லாததும் அடுத்தது.. ஆனா நீ அவள லவ் பண்றனு தெரிஞ்சா தான் அவ மனசு டிஸ்டர்ப் ஆகும். இது வர உன்ன ஃபிரண்டா மட்டும் பார்த்தவ முதல் முறை உன்ன ஃபிரண்ட தாண்டி பார்ப்பா.. உன்னோட ஒரு லைஃப்னு யோசிப்பா.. ஒரு வேளை உன் மேல தப்பி தவறி அவளுக்கு ஏதாவது ஃபீலிங்ஸோ சாஃப்ட் கார்னரோ இருந்துச்சுனா உனக்கு லக்கு”
“இல்லைனா?”
“அவளுக்கு லக்கு!!”
“டேய்..” தமிழ் கடுப்பாகவும் தன் கேலியை கைவிட்டவன் “லன்ச்ல இசை கிட்ட சொல்லீரு” என்றானே பார்க்கலாம்.. அவன் அதிரடியில் ஒரு நிமிடம் ஆடிப் போனான் தமிழ்.
“டேய் நீ என்ன நினைச்சட்டு இருக்க? இது என் வாழ்க்கை பிரச்சனை.. சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு ஒன்னும் பண்ண முடியாது.. எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு”
“நீ இப்படியே பேசீட்டு இரு.. அந்த அரவிந்த் உன் ஆள கரெக்ட் பண்ணி லைஃப்ல செட்டில் ஆக போறான்.. நீ அவங்க கல்யாணத்தில போய் நல்லா பாட்டு பாடு” என்றதும் கோவத்தில் அவன் சட்டையை பிடித்து “ஓவரா பேசத எழிலு..” என எச்சரித்தவன் “அவங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் தான்..” என்று தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக் கொள்ள “எப்படி உங்க ரெண்டு பேரையும் மாதிரியா?” என்ற எழிலின் பேச்சில் ஏகத்திற்கும் எள்ளல் வழிந்தது.
“எவ்ளோ சீக்கிரம் உன் லவ்வ இசை கிட்ட சொல்றியோ அவ உன் லைஃப்ல இருக்க அவ்ளோ அதிகமான வாய்ப்பு இருக்கு.. நீ லேட் பண்ணா கண்டிப்பா நான் சொன்னது தான் நடக்கும்..” என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட, தமிழோ அவன் இறுதியாக உரைத்த வார்த்தைகளில் ஆழ்ந்து போனான்.
சிந்தனையில் சுழன்றவனை தொலைபேசி சத்தம் கலைக்க அழைப்பை ஏற்றவன், “சொல்ல இசை” என்றதும் மறுமுனையில் பேசியவளோ, “சீனியர் இந்த சனிக்கிழம என் ஃபிரண்டோட காலேஜ்ல இன்டர் காலேஜ் காம்பெட்டீஷனாம்.. நான் உங்க பேர் ரெஜிஸ்டர் பண்ணவா” என ஆர்வமாக கேட்டாள்.
அரியர் தேர்வுகளும் ஆயத்தமாக தொடங்கியதிலிருந்து அவன் கவனத்தை சிதறடிக்கும் போழுதுபோக்குகளுக்கு எல்லாம் முடிந்த அளவு முழுக்கு போட்டிருந்தான். அதில் பாடல்களும் அடக்கம். இசையின் ஆர்வத்தில் சற்று நேரம் சிந்தித்தவன், “இல்ல இசை வேண்டாம்” என கூற “ஏன் சீனியர்?” என்றாள் ஏமாற்றமாய்.
“இல்ல இசை.. பிலேஸ்மென்ட் முடியர வர வேற எதுலையும் டிஸ்ட்ராக்ட் ஆக வேண்டாம்னு இருக்கிறேன்”
“பிலேஸ்மென்ட் பிலேஸ்மென்ட்னு சும்மா நீங்களே உங்கள ஸ்டிரெஸ் பண்ணிக்காதீங்க.. இந்த மாதிரி ஏதாவதுல கலந்துக்கிட்டா தானே உங்களுக்கும் ரிலேக்ஸா இருக்கும்.. பிளீஸ் சீனியர்” என அவனை சம்மதிக்க வைக்கும் நோக்கில் பேச மனதை கல்லாக்கி கொண்டு தன் பிடியிலே உறுதியாய் இருந்தான் தமிழ்.
இவன் ஃபோன் பேசுவதை பார்த்த படி உள்ளே வந்த எழில் யாரென்று ஜாடையில் கேட்க, இசை என்று பதிலளித்தவன் அவள் போட்டியில் கலந்துக்கொள்ள சொல்லவதாக கூறினான்.
தமிழிடமிருந்து ஃபோனை பிடிங்கியவன் ஸ்பீக்கரில் போட, “பிளீஸ் சீனியர்.. இந்த ஒரே தடவ.. எனக்காக” என்றாள் இசை. மறுக்க தோன்றுமா அவனுக்கு?
பதிலளிக்க முடியாமல் தமிழ் அமைதியாய் இருக்க, “நீ ரெஜிஸ்டர் பண்ணு இசை.. அவன் கலந்துக்குவான்” என்றான் எழில்.
“உண்மையாவா அண்ணா”
“ஏன் என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“இல்ல அண்ணா.. சீனியர் ஒன்னுமே சொல்ல மாட்டிங்கிறாரு..” என்றதும் தமிழ் ஏதோ பேச வர அவன் வாயில் கை வைத்து மூடியவன், “நான் சொன்ன கேப்பியா மாட்டியா? என்க “கேப்பேன் கேப்பேன்..” என்றாள் அவசரமாக.
“அப்போ சீக்கிரம் ரெஜிஸ்டர் பண்ணு”
“சரி அண்ணா.. சீனியர் கிட்ட சொல்லீருங்க.. பாய்” என அழைப்பை துண்டித்துவிட்டாள்.
“ஏன் டா காலையில இருந்து இம்ச பண்ணீட்டு இருக்க.. நான் தான் கலத்துக்கலனு சொல்றேன்ல..” தமிழ் கடுப்பாக கேட்க “அவ அவ்ளோ ஆசையா கேக்குறா.. பெரிய இவனாட்டம் முறுக்கிக்கிற..” என அவனுக்கு மேல் கடுப்பாக கூறினான் எழில்.
“படிக்கணும் டா..”
“ம்ம்.. படிச்சு ஓவர் நைட்ல ஓபாமா ஆக போறியா.. அந்த ஒரு நாள்ல ஒன்னும் ஆகாது” என்ற எழிலிடம் அதற்கு மேல் வாதிடுவதற்கு தெம்பில்லாதவனுக்கு அது வீண் என்றும் தோன்ற “கலந்துக்கிறேன்” என்றவன் அமைதியாக எதுவும் பேசாமல் மேஜையில் தலை கவிழ்ந்து படுத்துவிட்டான்.
__________________________________
“சீனியர் கங்கிராட்ஸ்.. சான்சே இல்ல சூப்பரா பாடுனீங்க” பரிசு வாங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கிய தமிழின் கைகளை பிடித்துக் கொண்ட மலர்விழி மனதார பாராட்ட “தேங்க்ஸ்” என்று புன்னகைத்தவனின் விழிகளோ அவள் பின்னே நின்றிருந்தவளை வருடியது.
எழிலின் வற்புறுத்தலில் பாட்டு போட்டியில் கலந்து கொண்டவன் இம்முறை முதல் பரிசு. கடந்த முறை பங்குபெற்ற போட்டி பெரிய அளவிலானது, போட்டியாளர்களும் அதிகமாக இருந்ததால் சற்று கடினமாக இருந்தது. இம்முறை சிறிய அளவிலான இன்டர் காலேஜ் போட்டி என்பதால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நான்கைந்து கல்லூரிகளில் இருந்து மட்டுமே போட்டியாளர்கள் வந்திருந்தனர். அதுவும் இவன் கலந்து கொண்ட போட்டியில், இருவத்தைந்துக்கும் குறைவானோர் மட்டுமே பங்குபெற இன்றைய போட்டி அத்தனை கடினமாக இல்லை.
போட்டி காலை ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கியிருக்க பதினோரு மணி போல் முடிந்ததும் நால்வரும் ஆடிட்டோரியத்திலிருந்து வெளியே வந்தனர்.
இசை தனியே நிற்கவும் மெல்ல அவள் அருகே வந்து நின்ற தமிழ், “சாரி” என்று முணுமுணுக்க பதிலளிகாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ சொல்லி உனக்காக தான கலந்துக்கிட்டேன்.. இப்போ ஒரு விஷ் கூட பண்ண மாட்டிங்கிற” என அவளிடம் குறைப்பட உள்ளம் உறுத்தவும் சற்று மனம் இளகியவள், “கங்கிராட்ஸ்” என்று கை நீட்டினாள்.
அவளுடன் கை குலுக்கியவன், “இப்படி ஃபார்மாலிடிக்கு பண்றதுக்கு பண்ணாமலே இருக்கலாம்” என்று ஜாடை பேச அவன் விழிகளை நோக்கியவள் அமைதியாக நிற்க தமிழுக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு கோவம் எவனோ ஒருவனுக்காக என்னுடன் சண்டையிடுகிறாள் என்று.
இத்தனை நாட்களில் இன்று தான் முதல் பரிசு பெறுகிறான். அன்று கல்லூரியை கட் அடித்துவிட்டு வந்து ஆச்சரியப்படுத்தியவள் இன்று ஒரு வாழ்த்து கூட கூறாமல் நிற்பது தமிழை வெகுவாக தாக்கியது.
இரண்டாம் பரிசிற்கே அன்று அத்தனை ஆர்ப்பரித்தவள் இன்று முதல் பரிசு பெற்றதுக்கு குறைந்தபட்சம் ஆசையாய் ஓடிவந்து தன்னுடன் கை குலுக்குவாள் என்று எதிர்பார்த்திருந்தவன் ஏமாந்து நிற்க அவன் அத்தனை ஏமாற்றங்களும் கோவமாக உறுமாறி இதற்கெல்லாம் காரணமான அரவிந்த்தின் புறம் திரும்பியது.
error: Content is protected !!