Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு 11.2

   “நீ என்னடா இப்படி பேக் அடிக்கிற? சுகந்தியைப் பத்தி தெரியாதா? இந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டா ஜென்மத்துக்கும் சம்மதிக்க வைக்கவே முடியாது” என்றான் அன்பரசு.

      “அழறாடா. இதுக்கு மேல எப்படி கேட்குறது?” என சத்யன் வருந்த,

    “சின்ன குழந்தைகள் எதை கொடுத்தாலும் குடிக்கும். ஆனா கொடுக்குறது மருந்து தெரிஞ்சுடுச்சுனா அம்மாவே கொடுத்தாலும் குடிக்காம அடம் பண்ணும். குடிச்சாதான் உடம்பு சரியாகும்னு குழந்தைகிட்ட லெஸன் எடுத்திட்டிருக்க முடியாது. எடுத்தாலும் அதுக்கு புரியாது. வற்புறுத்தி குடிக்க வச்சுத்தான் குழந்தையை சரி பண்ண முடியும்.

    இந்த நிலையிலதான் சுகந்தி இருக்கு. முதல் கல்யாணம் கொடுத்த அனுபவத்துலயிருந்து இன்னும் சுகந்தி மீண்டு வரல, எல்லா ஆண்களும் அப்படி இருக்கமாட்டாகங்கனு எட்டு வருசமா சொல்லியும் புரிய வைக்க முடியல, இனி அதிரடியா இறங்கினாத்தான் உண்டு.



Advertisement

   பேச்சை ஆரம்பிச்சாச்சு, இனி பின் வாங்கினா உன்னை மறுத்துட்டு நம்ம அப்பா முகத்துல எப்படி முழிக்கிறதுனு தவறான முடிவெடுக்கவும் வாய்ப்பிருக்கு. இந்த விசயத்துல சுகந்திக்கு பாவம் பார்க்காத. ஆரம்பிச்ச சூட்டோட கல்யாணத்தை முடிச்சாகனும். உன்னால பேச முடியலனா  பரவால்ல, நான் பேசும்போது குறுக்க வராம இரு” என கட்டளையிட்டு வெளியே வந்தான்.

   “என்ன சொன்னான் அன்பு?” என்று கல்பனா தவிக்க, “அவன் என்னென்னவோ சொல்றான். நான் யாருக்குனு பேசட்டும் அத்த?” என்றான் பாவமாக.

    சுகந்தி அன்பரசை பார்க்க, “இனி சுகந்தியை கட்டாயப்படுத்தாதிங்க. அதே நேரம் என் கல்யாணம் பத்தியும் இனி யாரும் பேசக்கூடாது. என் பொண்ணுக்கு பாஸ்போர்ட் எடுக்கும்வரை இங்க இருப்பேன். பாப்பாக்கு பாஸ்போர்ட் விசா கிடைச்சதும் என்னோடவே அழைச்சிட்டு போய்டுவேன்.

Advertisement

   என் பொண்ணாலதான நீ கல்யாணம் செய்துக்காம இருக்க? சுகந்தியும் இங்க வந்து பார்த்துக்க வேண்டியதா இருக்கு? இனி யாரும் என்னால கஷ்ட்டபட வேண்டாம்னு சொல்றான்த்த” என பொய்யுரைத்தான் அதிராமல்.

Advertisement

     என்ன? பாப்பாவை அழைச்சிட்டு போறானா? என சுகந்தி பேரதிர்சிக்குள்ளாக, “பாப்பாவை அழைச்சிட்டு போனான்னா திரும்ப இங்க வரமாட்டேனு சொல்றான்த்த. என் ஜனனிம்மாவை பார்க்காம நான் எப்படி இருப்பேன்? அதோட அங்க குவைத்ல இவன் வேலைக்கு போனபின்ன என் மகளை யார் பார்த்துப்பா? நாம இத்தனை பேர் இங்க இருக்க என் மகள் அங்க அநாதை மாதிரி கஷ்ட்டப்படனுமா?” என்றான்.

    சத்யன் பிடிவாதம் சுகந்திக்கு தெரியும் ஆதலால், மகளை அழைத்துச் சென்றிடுவான் என்ற பயம் வந்தது. பேத்தியை பார்க்காமல் மாமாவால இருக்க முடியாதே என மாதவனைப் பார்க்க, அன்பரசு சொன்னதை உண்மையென நம்பிய மாதவன் தொய்ந்து அமர்ந்திருந்தார்.

   எல்லாம் இவனால… என ஆக்ரோசமாக சத்யன் இருக்கும் அறைக்குள் சென்றவள், “ஏன்டா இப்படி ஒரு முடிவெடுத்த?” என கத்த, “எனக்கு மறுவாழ்வு கொடுப்பன்ற நம்பிக்கையிலயும், என் மகளுக்காக பார்ப்பனும் நம்பி முடிவெடுத்திருக்கேன்” என்றான் நம்பிக்கையோடு.

Advertisement

   “என்னால உன்னோட வாழ முடியாதுடா” என்றாள் வேதனையாக.

    “என் கல்யாணம் நடக்காம கண்டிப்பா அன்பு கல்யாணம் செய்துக்கமாட்டான். எல்லார் நிம்மதிக்காகவும் கல்யாணம் செய்துக்கலாமானு யோசிக்கும்போது உன்னை விட என்னைப் புரிஞ்சவ யார் இருக்கானு தோணுச்சு.

   அத்தைகிட்ட பிச்சைக்காரன் வந்திருக்கானு சொன்னல்ல? உண்மையைதான் சொல்லியிருக்க. உன் வாழ்க்கையில எனக்கும் பங்கு கொடு” என்றான் யாசகமாக.

    யாசிப்பவனிடம் என்ன சொல்வதென தெரியாமல் சுகந்தி கட்டிலில் தளர்வாக அமர, அதுவே சத்யனுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது.

    “கல்யாணம் செய்துக்கலாம். பொண்டாட்டியா இருக்க பிடிக்கலனா என் எருமையாவும், நம்ம பொண்ணுக்கு பெரியம்மாவாவும் மட்டும் இரு. பெரிய மகன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு வேதனையில இருக்கிற என் அப்பாக்கு நிம்மதியை கொடு. கடைசி வரை எனக்கு அதுவே போதும். கண்டிப்பா உனக்கு பிடிக்காத விசயத்தை செய்ய மாட்டேன்” என்றான் அர்த்தப் பார்வையோடு.

    கடைசி வார்த்தையில் கலங்கியவள் “என்னைப் புரியுதாடா உனக்கு?” என உடைந்து அழ, “கல்யாணம் செய்து ஒரு குழந்தையை பெத்தவனுக்கு பொண்ணோட மனசு புரியாதா? பயப்படாத சுகந்தி” என தேற்றியவன், “அவனைப் போலவே நானும் இருப்பேனு நினைக்காதடீ, எனக்கு அசிங்கமாயிருக்கு” என்றான் வருத்தமாக.

      தன்னைப் பற்றி அனைத்தும் தெரிந்தே முடிவெடுத்திருக்கிறான் என்று வேதனையோடு எழுந்தவள் வெளியே செல்ல எத்தனிக்க, “பாப்பாக்கு பாஸ்போர்ட் எடுக்கட்டுமா வேணாமானு சொல்லிட்டு போடீ” என்று சத்யன் கேட்க, ஷாக் அடித்தாற் போல் வாயிற்படியில் நின்றவளுக்கு மாதவனின் தவித்த முகம் மனதை வதைத்தது.

    சுகந்தியை பார்த்தவாறே எழுந்தவன் உரிமையாய் அவளின் தோளை தொட்டு நகர்த்தி வெளியே வந்து “அப்பா சேகருக்கு போன் செய்து, எங்க கல்யாண விசயத்தை சொல்லுங்க” என்றான்.

   சத்யனின் பேச்சிற்கு சுகந்தி மறுப்பு தெரிவிக்காமல் இருக்கவே, சுகந்தியிடம் வந்த மாதவன் மருமகளின் கைகளை பிடித்து தனது கண்களில் ஒற்றிக்கொண்டார்.

   மறுக்கவும், சம்மதிக்கவும் என இரண்டிற்குமே வார்த்தையில்லாமல் சுகந்தி திண்டாடிக்கொண்டிருக்க, தன் தந்தை அன்பினில் கட்டுண்டு இருந்தவளை பார்த்தவாறே சேகருக்கு அழைத்தான் அன்பரசு.

   சேகர் அழைப்பை ஏற்கவும், “சுகந்தி கல்யாண விசயமா பேசனும். உடனே கிளம்பி வா” என்றான்.

   சுகந்தி அதிர்வோடு அன்பரசை பார்க்க, அவளை கண்டுகொள்ளாமல், “சுகந்தி சம்மதிக்காமலா சொல்லுவேன். அக்காவையும் குழந்தைகளையும் அழைச்சிட்டு கிளம்பி வா” என இணைப்பை துண்டித்தான்.

   “அன்பு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றாள் பலவீனமான குரலில்.

    சத்யன் “இது வீடில்லையா?” என உரிமையாக கேட்க, அன்பரசிடம் “இல்ல எனக்கு அங்க போகனும்.” என்றாள் கெஞ்சலாக.

   எங்கே வீட்டிற்கு சென்றால் தற்கொலை செய்வேன் என்று பயமுறுத்துவாளோ? அல்லது உண்மையில் உயிரை மாய்த்துக்கொள்வாளோ என்ற பயம் வர, “கல்யாணம் முடிச்சிட்டு போய்க்கலாம்” என்றார் கல்பனா.

   “ம்மா…” என்று பலவீனமாய் சுகந்தி குரல்கமற, “இங்க வா சுகந்தி” என ஜனனியும் சுகந்தியும் உறங்கும் அறைக்கு அழைத்துச் சென்ற அன்பரசு, “உனக்கு தனியா இருக்கனும். அவ்வளோதானே? இங்க இரு. உன்னை யாரும் தொல்லை பண்ண மாட்டாங்க” என்றான் தன்மையாக.

   “அன்பு” என கண்ணீர் விட, “உள்ளே வந்த கல்பனா, “அவளை தனியா விட வேண்டாம் அன்பு” என்று மகள் பக்கத்தில் அமர்ந்துகொண்டார் பயத்தோடு.

   “ப்ச் ம்மா” என சுகந்தி முறைக்க, “பழசை யோசிக்காதத்த, சுகந்தி தற்கொலைலாம் பண்ணாது. இந்த பேச்சுக்கப்புறம் அப்படி செய்தா, அந்த குற்றவுணர்வுல அப்பா உயிரும் சுகந்தியோடவே போய்டும்னும், அதுக்கப்புறம் சத்யனும் நானும் ஜென்மத்துக்கும் கல்யாணத்தைப் பத்தியே யோசிக்கமாட்டோம்னும், சுகந்திக்கு புரியாதா என்ன?” என அச்சுறுத்தினான் அசால்ட்டாக.

   தன்னால் குடும்பமே நிலைகுலைந்திடுமே என நினைக்க உணர்வுகள் நெஞ்சை அடைத்தது. செய்வதறியாது தன்போல் “அன்பு” என அன்பரசின் கைகளை பற்றிக்கொண்டாள் சுகந்தி.

    சுகந்தியை கட்டிலில் அமரவைத்து தானும் அருகமர்ந்தவன், “நம்ம சத்யனை உனக்கு தெரியாதா சுகந்தி? எதுக்கு இப்படி அழற?” என உரிமையாய் அதட்டி, “ரொம்ப வருசத்துக்கப்புறம் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்திருக்கான், உன் இடத்துலயிருந்து யோசிக்காம முடிவெடுத்திருக்கமாட்டான். பயப்படாத சுகந்தி, உன்னை புரிஞ்சு நடந்துப்பான்” என்றான் பிணைப்பாக.

   பத்து நிமிடம் மௌனத்தில் கரைய, “அத்த ரொம்ப பசிக்குது” என்றான் பாவமாக.

   “அச்சோ… இன்னும் யாருமே சாப்பிடலயே, சமைக்கவும் இல்ல” என பதறி வெளியே வந்த கல்பனா கிச்சனுள் நுழைய, “சத்யன் எல்லாருக்கும் டிபன் ஆர்டர் பண்ணியிருக்கான் கல்பனா” என்றவர், “சுகந்தி என்ன சொல்லுது?” என்றார் தவிப்பாக.

   “அன்பு எடுத்து சொல்லிட்டிருக்காண்ணா” என மகிழ்வோடு சொல்லி, “சரவணன் சத்யனை எங்க காணோம்?” என்றார்.

   “இரண்டு பேரும் குளிக்க போயிருக்காங்க”

   “இன்னைக்கு டைப் க்ளாசுக்கு லீவ் விட்டுடுண்ணா, கல்யாணம் வரைக்கும் சுகந்தியை கண்காணிச்சிட்டேயிருக்கனும்” என்று பரபரப்பாக அன்பரசிடம் வந்த கல்பனா, “அன்பு, சத்யன் கடைல சொல்லியிருக்கானாம். நீ அது சாப்பிடமாட்டல்ல? இட்லி இருக்கு, சாப்பிட வா” என்றார்.

   “ம்” என அன்பரசு எழ, “அன்புக்கும் எனக்கும் வந்து பரிமாறு சுகந்தி, எனக்கும் பசிக்குது” என்றார்.

    தனிமை வேண்டி “ப்ச் ம்மா, தற்கொலைலாம் பண்ணிக்கமாட்டேன். அவன் என்னை கேட்டபின்ன உனக்கு பட்டாபிஷேகம் செய்துக்கிட்ட மாதிரில்ல இருக்கும்? உனக்கு பசிக்காதுனு எனக்கு தெரியும். நடிக்காம போய் இவனுக்கு டிபன் வை” என்று தன் இயலாமையை அன்னையிடம் காண்பித்தாள் கோபமாக.

   ஹப்பா… கல்யாணத்துலயிருந்து தப்பிக்க முடியாதுனு புரிஞ்சிக்கிட்டா என நிம்மதியானவன், “நாளைக்கே கல்யாணம். மனசளவுல தயாராகனும்லத்த? சுகந்தி தனியா இருக்கட்டும். நீ வந்து எனக்கு டிபன் வை” என்று கல்பனாவின் கைப்பிடித்தபடி வெளியேறினான்.

   “அன்பு அவளை தனியா விட வேணாம்” என அப்பொழுதும் கல்பனா பதற, “ஒன்னும் செய்துக்காது. இப்போ தன்னால வெளில வரும் பாருத்த” என்க, கல்பனா சமையலறைக்கு இட்லி எடுக்க சென்றதும், வேகமாக வெளியே வந்தவள் மாதவனைக் கண்டதும் மெதுவாக அன்பரசிடம் வந்தமர்ந்து, “நாளைக்கே கல்யாணம்னு மாமா முன்ன உளறாத” என்றாள் மிரட்டலாக.

   “நான் இன்னும் மூனு நாள்தான் வீட்டுல இருப்பேன், ஷுட் போனேன்னா வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும் சுகந்தி. என் அத்தை பொண்ணு கல்யாணம் நான் இல்லாமலா?” என்றான் தந்தைக்கு கேட்கும் விதமாகவே.

   கடந்த ஒருமாதமாக சுகந்திக்கு மரியாதை கொடுத்து பேசுவது, இனி சுகந்தி கல்யாணத்தை பற்றி யாரும் பேசக்கூடாதென்றது, வருடக்கணக்கில் வராத சத்யனும், சரவணனும் ஒருசேர வந்திருப்பது என அனைத்தும் நினைக்க, சத்யனிடம் அன்புதான் பேசியிருப்பான் எனப்புரிந்தது.

    சுகந்தி சத்யனை விட பெரியவள் என்பதாலோ என்னவோ இரு குடும்பத்தினருக்கும் இப்படி எண்ணமே தோன்றவில்லை. சத்யன், சுகந்தி வாழ்வு குறித்தான மலைபோன்ற பாரத்தையும் துக்கத்தையும் ஒரே நாளில் பனிபோல் விலக்கியிருக்கிறான் அன்பரசன் என பெருமை தாளவில்லை மாதவனுக்கு.

   “ஏன்டா கத்துற?” என சுகந்தி முறைக்க, “கத்தாம என்ன செய்ய சொல்ற? அப்போ நான் இல்லாம கல்யாணம் செய்துக்குவிங்களா? அவ்வளோதானா நானு? போ சுகந்தி” என்றான் பாவமாக.

    மாதவன் அருகிலிருப்பதால் பேச முடியாமல் சுகந்தி முறைக்க, சத்யன் ஆர்டர் செய்த உணவுகள் வந்தது. “அன்பை முறைக்கிறதை விட்டுட்டு வந்து பரிமாறு எரும, பசியில வயிறு கத்தி கதறுது” என்றபடி உணவுகளை வாங்கி வந்து டேபிளில் வைத்தான் சத்யன்.

    தன்னிடம் யாசித்த சத்யனை பார்க்கவே சுகந்திக்கு தடுமாற்றமாய் இருக்க, சத்யனிடம் ஒவ்வாமை இல்லை என்ற சுகந்தியின் நிலை அன்பரசுக்கு சந்தோசத்தை கொடுத்தது. “ஏன்டா உனக்கு கை இல்ல? பிஸியா முறைச்சிட்டிருக்கோம்ல? நீயே போட்டு சாப்பிடு” என சத்யனை முறைத்து, “எவ்வளோ நேரம் முறைக்கனுமோ முறைச்சிக்கோ சுகந்தி, உனக்கில்லாத உரிமையா?” என்றான் பெரிய மனதாக.

   சுகந்தி முகம் இன்னமும் இலகாமல் இருக்க, “ஹம்… எனக்கெல்லாம் கல்யாணம்னு ஒன்னு நடக்கும்னு நினைச்சே பார்க்கல, இந்த ஜென்மத்துல அதுக்கெல்லாம் ஆசைப்படாதடா அன்புனு என் மனசை கண்ட்ரோல் பண்ணி வச்சிருந்தேன். சத்யனை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சு என் சந்நியாச வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போற அத்தை மகளுக்கு ஆயிரம் நன்றி சொன்னாலும் பத்தாது” என்றான் உல்லாசமாக.

    சத்யன் சிரிக்க, அப்பொழுதுதான் குளித்து வந்த சரவணனும் சிரிக்க, சந்தோசத்தில் நிறைந்திருந்த மாதவனுக்கும் அன்பரசன் பாவனையில் மனம் குளிர, “இவங்க கல்யாணம் முடிந்ததும் உனக்கு பொண்ணு பார்க்குறதுதான் வேலை. இனி எந்த காரணமும் உன்னால சொல்ல முடியாது.” என்றார் சந்தோசமாக.

    “ஆமாம்ப்பா, நான் சரண்டர் ஆக வேண்டிய நேரம் வந்துடுச்சு” என்று சிரித்தவன் மனக்கண்ணில் அன்று இரவு உடையில் பார்த்த முல்லை தோன்றினாள்.

     சத்யன் “என்னடா உன் முகம் வேற என்னவோ சங்கதி சொல்லுது?” என சந்தேகிக்க, “அப்படியா? என்ன சொல்லுது? எனக்கு அப்படியும் இருக்குமோன்ற மாதிரியும் இருக்கு, இல்லன்ற மாதிரியும் இருக்கு” என கிசுகிசுத்து சிரிக்க,

   “அச்சோ முதல்ல அப்படித்தான் அன்பு இருக்கும், இப்படி மாட்டிக்கிட்டியேடா” என சரவணனும் கிசுகிசுத்து சிரிக்க, “இன்னைக்குத்தான் வீடே நிறைஞ்சிருக்கு” என்று ஆனந்த கண்ணீரோடு அனைவருக்கும் பரிமாற ஆயத்தமானார் கல்பனா.

*** *** *** ***

(நான் என்ன பண்ணுவேன் ஃப்ரண்ட்ஸ்? இந்த அன்பரசு பையனுக்கு இப்போதான் முல்லை நியாபகமே வருது )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!