Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனை மீட்டிடும் இசையே

இசை 2

அத்தியாயம் 2

“வாப்பா! மீனா வர்ல?” கேட்டப்படி வீட்டின் கதவினை திறந்து ஆதியை உள்ளே அழைத்து பேசினார் தேவி.



Advertisement

“அம்மா இதோ வரேன்னு சொல்லுச்சு.. சிலிண்டர் என்ன பிரச்சனைம்மா?” ஆதி கேட்டப்படி அவர் பின்னே சென்றான்.

“அதான் பா தெரியல.. நான் தான் எப்பவும் கழட்டி மாட்டுவேன்..புது சிலிண்டர் நேத்து தான் வந்துச்சு.. நானும் மாட்டி மாட்டி பாக்குறேன் சிலிண்டர் லீக் ஆகிட்டே இருக்கு.. மீனாட்சி கூட மாட்டிப் பார்த்தா…” சொல்லியபடியே வீட்டின் சமையலறைக்கு வந்திருந்தனர்.

Advertisement

Advertisement

கண்களை கட்டுப்படுத்தி நேர்பார்வை பார்த்து தேவியின் பின்னே சென்றிருந்த ஆதியின் மனம் எப்போது முன் வந்து குதிப்பாளோ என்று தான் பயத்தில் அடித்துக் கொண்டிருந்தது.

“இதோ இது தான் நேத்து வந்தது” தேவி அம்மா சொல்ல,

Advertisement

“நான் பாக்குறேன்” என்று சொல்லி அவன் சரி செய்ய பார்க்க,

“ஹோஸ் இல்லைனா ரெகுலேட்டர் எதாவது பிரச்சனையா இருக்குமா பா?” என பேசியபடி இருந்தார் தேவி.

“சிலிண்டர்ல வாசர் சரி இல்ல போல.. அதை மாத்தினா தான் சரியாகும்.. மாரி இப்ப தான் வீட்டுக்கு போயிருக்கான்.. அவன் வந்ததும் வேணா வாங்கிவர சொல்றேன்..” ஆதி சொல்லிக்கொண்டு இருக்க,

“என்ன டா மாட்டிட்டியா?” என வந்தார் மீனாட்சி.

“இல்லம்மா.. கடையில ஒரு வாசர் வாங்கி மாத்தி போட்டா சரியாகிடும்.. மாரிய வர சொல்றேன்” என சொல்லிய ஆதி வேகமாய் வாசல் நோக்கி நகர,

“அவனை எல்லாம் நம்பி இவ்வளவு பெரிய வேலையை கொடுக்கவா? போடா இவனே! அவன் எப்ப வர்றது சோறு எப்ப ஆக்குறது?” மீனாட்சி நொடித்துக் கொண்டவர்,

“சரி தேவி! நீ பசங்க டப்பாவை குடு.. இன்னைக்கு நான் பண்ணின சாப்பாட்டை சாப்பிட்டு பார்க்கட்டும்.. அப்புறமா நீ சமைச்சிக்கோ” என்றபடி அவரே மதியத்திற்கு தேவையான டிபன்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்…

வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்..

பாடல் மட்டும் கேட்ட நொடி வாசல் வரை சென்றுவிட்டிருந்தவன் நின்றுவிட்டான் ‘வந்துட்டாளா!’ என்ற வாயசைப்போடு.

“என்ன சாரே! வீடு வரை வந்துட்டு இந்த குட்டி பொண்ணை பார்க்காமலே போறிங்களே.. உங்க மனசாட்சி குத்தல?” அவனுக்கு பின்னிருந்த அறையின் வாசலை திறந்து கொண்டு வந்தவள் இடுப்பில் கைவைத்து கேட்டு நின்றாள்.

சட்டென திரும்பி உள்ளே பார்க்க இன்னும் அன்னையும் தேவி அம்மாவும் சமையலறையில் இருந்து வெளி வந்திருக்கவில்லை.

“அங்க என்ன லுக்கு? வந்ததுல இருந்து என்னை தானே தேடுன வாத்தியாரே?” கொஞ்சமும் பயம் இல்லாமல் சாதரணமாய் நின்று அவள் கேட்க,

“உனக்குலாம் மூளைன்றதே இல்லையா? இது உன் வீடு.. உன் அம்மா, தங்கச்சி யாராச்சும் பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க?” அவன் கோபத்தை குரலில் வைத்திருந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு கேட்க கூடாது என்பதற்காக மெதுவாய் அவளிடம் சீற,

“ஓஹ்! உன்னை தப்பா நினைக்க கூடாது.. அப்ப என்னை நினச்சா பரவால்லையா? ஆமா நான் தான் கூப்பிட்டேன் சரி.. நீ போறவன் அப்படியே போக வேண்டியது தானே? ஏன் திருட்டு முழி முழிச்சுட்டு உள்ளேயும் என்னையும் மாறி மாறி பாக்குற? அப்ப நீயும் என்னை பிரேமிஸ்துன்னானு தானே?” கேட்ட ஒரு நொடி வாயில் கைவைத்து நின்று விட்டான் மீண்டும் ஆதி.

‘எப்படி எல்லாம் கற்பனை பன்றா பாரேன்!’ என்றது தான் அவனது நினைப்பு.

“என்ன ஆஆ’னு பாக்குற? சரி சொல்லு.. என்னை பார்க்க தான வந்த?”

“லூசா நீ? உன் அம்மா சிலிண்டர் பிரச்சனைனு சொன்னாங்க.. இல்லைனா எனக்கு தலையெழுத்தா இங்கே வர்றதுக்கு..”

“ஓய்! ன்னா ஓவரா பேசுற பயம் விட்டுப் போச்சா? உன் அம்மாவை கூப்பிட்டு நீ கடலை போடுறனு சொல்லவா? என்ன சொன்ன நீ? தலையெழுத்தா? தலையெழுத்து தான்.. தலையெழுத்தே தான். இது தானே உன் மாமியார் வீடு.. அப்பப்ப வந்து போ வாத்தியாரே” இன்னும் சாவகாசமாய் கதவில் சாய்ந்து நின்று அவள் பேச, சொன்னதை செய்து விடுபவள் என தெரிந்ததால்

“உன்கிட்ட நின்னு பேசினேன் பாரு.. என்னை சொல்லணும்.. என்னத்த படிச்சு கிழிச்சியோ?” என்றவன் அடுத்து அவள் பேசும் முன் அதே முறைத்த பார்வையுடன் வேகமாய் வெளியேறிவிட்டான்.

‘ஓடு ஓடு.. எவ்வளவு தூரம் ஓடுறனு பாக்குறேன்’ நினைத்துக் கொண்டு அவன் செல்லும் வழியை பார்த்து நின்றாள்.

“என்ன சாரு இன்னும் கிளம்பாம இருக்குற? லேட் ஆகலையா?” தேவி கேட்டபடி வர,

“வாங்கம்மா!” என மீனாட்சியிடம் பேசியவள் “கிளம்பிட்டு தான் இருந்தேன் மா.. ஒரு பட்டாம்பூச்சி வந்துச்சி.. பேசிட்டு இருக்கும் போதே பறந்துடுச்சு. அதான் பார்த்திட்டு நிக்குறேன்” என்றாள் வாசலைப் பார்த்து நின்று.

“நல்ல பொண்ணு மா நீ” சொல்லிய மீனாட்சி சாப்பாடு எடுத்து வருவதாய் சொல்லிச் செல்ல, நன்றி கூறி நின்றார் தேவி.

“சீக்கிரம் கிளம்பு சாரு.. ப்ரீத்தி கிளம்பிட்டான்னா போய் மீனா வீட்ல சாப்பாட்டை வாங்கிட்டு வர சொல்லு.. மறுபடியும் அவங்களே அலையுற மாதிரி வச்சுக்காதீங்க” தேவி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

“ஹ்ம்ம் இதெல்லாம் நல்லா தான் இருக்கு.. இந்த வாத்தியார் தான் சாமியாரா இருக்கார்.. சோ சேட்!” சொல்லிக்கொண்டாள் சாரு. தேவியின் மூத்த மகள்.

கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் இருந்த சாருலதா நேரம் போகவென கம்ப்யூட்டர் பயிற்றுக் கொடுக்கும் வேலைக்கு பக்கத்தில் இருக்கும் கிளாஸ் செல்ல, மாலையானால் பாட்டு கிளாஸ் சென்று குழந்தைகளுக்கு வகுப்பெடுத்துவிட்டு இரவு தான் வீடு வருவாள்.

தேவி, சாருலதா, ப்ரீத்தி மூவரும் தான் வீட்டில். தந்தை ஸ்ரீரங்கம் வெளிநாட்டில் வேலைக்கு சென்றவர் வருடத்திற்கு ஒரு முறை தான் வருவார்.

“ப்ரீ! இரு நானும் வர்றேன்.. சுமதிய பார்க்கணும்” என்ற சாரு ப்ரீத்தியுடன் இணைந்து கொள்ள, ஒரு கிண்டல் பார்வையும் நமட்டு சிரிப்புமாய் ஒத்துக் கொண்டாள் ப்ரீத்தி.

“மீனாம்மா!” ப்ரீத்தி மீனாவின் வீட்டிற்குள் செல்ல, கருமமே கண்ணாக வண்டியை சரி செய்து கொண்டிருந்த ஆதியின் அருகில் சென்று நின்றாள் சாரு.

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல… நான்…

சாருவின் பாடலில்,

“ப்ச்! இப்ப உனக்கு என்ன வேணும்.. காலங்காத்தால வம்பு பண்ணிட்டு நிக்குற.. கடை முன்னாடி இப்படி பாட்டு பாடிட்டு நின்னா போற வர்றவன் உன்னை என்ன சொல்லுவான்? எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?” ஆதி தான் பாடிக் கொண்டிருந்தவளை நிறுத்தி திருப்பிக் கேட்டான்.

“என் மேல அவ்வளவு அக்கறையா வாத்தியாரே உனக்கு? ஆமா அதென்ன என் வீட்ல பேசினா அம்மா என்ன நினைப்பாங்கன்ற, சரினு வெளில பேசினா போற வர்றவன் என்ன சொல்லுவான்ற.. அப்புறம் எங்க தான் பேசுறதாம் நாம? வேணா ஒரு பிளேஸ் ஃபிக்ஸ் பண்ணுவோமா? அடிக்கடி இல்லைனாலும் அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒருவாட்டியாச்சும் மீட் பண்ணிக்கலாம்? எப்படி என் ஐடியா?”

“யக்கோவ்! வாக்கா வாக்கா! நல்லாருக்கியா? பார்த்து ரெண்டு நாள் ஆச்சு.. ரொம்ப பிஸியாக்கா.. ஆதிண்ணா வேற உன் வீட்டு வாசலையே முறைச்சி பார்த்துட்டு இருந்துச்சு..” மாரி அப்போது தான் கடைக்கு வந்து சேர்ந்தவன் சாருவை பார்த்ததும் நலம் விசாரிக்க ஆரம்பிக்க,

“டேய் சில்லற (சில்லறை) எப்படி இருக்க டா.. ரெண்டு நாளா கொஞ்சம் வேலை அதான் இந்த பக்கம் வர முடியல” – சாரு.

“டேய்! உன் ஓட்ட வாய கொஞ்சம் மூடு.. என்னவோ மாசக்கனக்கா பார்க்காத மாதிரி குசலம் விசாரிக்குற.. ஏய் நீ கிளம்பு முதல்ல.. ச்சும்மா மூஞ்சி முன்னாடி வந்து நின்னு கடுப்பேத்திக்கிட்டு.. மாரி மத்தியானமா வாசரோட வருவான்னு அம்மாட்ட சொல்லு..” ஆதி சொல்லிவிட்டு கடையின் உள்ளே சென்றான்.

“ன்னாக்கா! அண்ணா இன்னைக்கு ஓவரா சவுண்டு கொடுக்குது.. நீயும் சைலேண்ட்டா நிக்குற? சரி இல்லையே!” மாரி பேச்சை வளர்த்தான்.

“அதை ஏன்டா கேட்குற சில்லற! வேலைக்கு போறேன்ல அங்கே கொஞ்சம் பிஸி.. அத்தோட பாட்டு கிளாஸ் வேற..” சாரு சலித்தபடி சொல்ல,

“நீ தான் ஆதிண்ணாக்கு பாட்டு சொல்லி கொடுக்குறியே.. அது போதாதா? என்னாத்துக்கு கிளாஸ்லாம்?” சிரித்தபடி கிண்டலடித்தான்.

“அதை ஏன் டா கேட்குற.. நான் உண்டு என் ஆளு உண்டுன்னு இருந்த என்னை போய் அம்மா தான் குழந்தைங்க பாவம்.. ஆசைப்படுதுங்கனு பக்கத்து வீட்டு பசங்களை எல்லாம் சேர்த்து வச்சுடுச்சு.. வேற வழி இல்லாம நானும் சரினு விட்டுட்டேன்.. ஆனா பாரு ரெண்டு நாள் கேப் விட்டதும் உங்கொண்ணா சவுண்ட் கூடிடுச்சு.. இனி விடமாட்டேன்.. பிளான் பண்றேன்” சாரு சொல்லிக் கொண்டு இருக்க,

“ஏய் நீ இன்னும் போலயா? இப்ப போறியா இல்ல உன் அம்மாவை கூப்பிடவா? சும்மா நசநசன்னு..” – ஆதி.

“க்கா! வாங்கியாச்சு போலாம்..” என்று வந்த ப்ரீத்தி,

“ஆமா சுமதி உள்ளல்ல இருக்கு.. நீ இங்கே எந்த சுமதிகிட்ட பேசின?” என கிண்டல் செய்ய, மாரி, சாரு, ப்ரீத்தி மூவரும் சிரிக்க ஆதி மட்டும் முறைத்து நின்றான்.

“ப்ரீ! சுமதிய பாக்குறதா முக்கியம்? சாமி வரம் கொடுக்காமல் எப்படி பூசாரி உள்ள வர்றது? அதான் வரம் கேட்டுட்டு இருந்தேன்..”

“ஹ்ம்ம்! கிடைச்சுதா?”

“எங்கே? சாமி திரும்பிக் கூட பார்க்க மாட்டுதே!”

“ஹான் போதும் போதும்.. இடத்த காலி பண்ண சொல்லு டா” ஆதி மாரியிடம் சொல்ல,

“போகாம என்ன பூஜைய போட்டு கும்மி அடிக்கவா போறோம்? வரேன் சில்ற.. வாத்தியார பார்த்துக்கோ” சொல்லியவள் அதே பாட்டை முணுமுணுத்துக் கொண்டு செல்ல, தலையில் அடித்துக் கொண்டான்.

“ண்ணா! இந்த அக்கா….” மாரி ஏதோ சொல்ல வர, ஸ்பான்னரை தூக்கி அவன் மேல் எறிந்த ஆதியின் கோபத்தில் அடங்கிவிட்டான்.

“ஏன்க்கா அவரை இப்படி சுத்தி வர்றியே! கடைசி வர அவர் கண்டுக்கவே இல்லைனா என்ன பண்ணுவ?” ப்ரீத்தி சாருவிடம் கேட்க,

“எது முதல் எது கடைசினு நாம தான் முடிவு பண்ணனும் ப்ரீ.. நான் ஆதிய கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும்.. இந்த கடைசி பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா அவன் இல்லாம எனக்கு அடுத்த ஆரம்பம்னு வாழ்க்கைல எதுவுமே இருக்க கூடாது..”

“நீ ரொம்ப சீரியஸா லவ் பண்றனு எனக்கும் தெரியும்.. ஆனாலும் பயமா இருக்குக்கா.. அவர் உன்னை கண்டுக்கவே மாட்றாரே?”

“காதல்னா அப்படி தான் ப்ரீ.. அதெல்லாம் அண்ணாத்த சீக்கிரம் நம்ம வழிக்கு வருவார்.. இல்லைனாலும் கடத்திட்டு வந்து தாலி வாங்கிட மாட்டேன்”

“அடப்பாவி! நீ செஞ்சாலும் செய்வ” என்ற ப்ரீத்தியுடன் சேர்ந்து சாருவும் சிரித்தபடி வீட்டிற்குள் சென்றாள் ஆதியின் நினைப்பில் குடும்பம் மட்டுமே இருப்பது தெரிந்தும் அவனை விரும்பும் மனதுடன்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!