இருள் அடர்ந்த வானில் ஜொலித்துக் கொண்டிருக்கும் வானத்து நிலவு, லேசான குளிர் தென்றல் என அந்த ஊரே அமைதியாக இருக்க அந்த வீட்டில் மட்டும் சத்தம் கேட்டது.
Advertisement
ஷிவானி தான் இரவுப் பொழுது என்றும் பாராமல் கத்திக் கொண்டிருந்தாள். அதை அவ்வளவு அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் அவளது அக்கா பூர்விகா.
Advertisement
சங்கரலிங்கம் போஸ்ட் ஆபீஸில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்று விட்டார். அவர் மனைவி லதா குடும்பத்தலைவி. சங்கரலிங்கம் லதா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள்.
Advertisement
மூத்தவன் புகழேந்தி ஒரு தனியார் கார் கம்பெனியில் உயர் பதவியில் இருக்கிறான். அவன் மனைவி நித்யா எம். காம் படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் நிர்வாக பிரிவில் பணிபுரிகிறாள். இப்போது அவளுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதமாக இருப்பதால் விடுமுறை எடுத்திருக்கிறாள். விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் வேலையை விடவா இல்லை குழந்தையை மாமனார் மாமியாரிடம் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்லவா என்ற பேச்சு வார்த்தையில் இருக்கிறது.
புகழேந்திக்கு அடுத்து பிறந்தது பூர்விகா, வயது இருபத்தி இரண்டு. ஐந்தடி நான்கு அங்குலம், நிறம் சராசரியை விட கொஞ்சம் அதிகம் தான். அவள் பேசும் போதும் அவள் கண்கள் சிரிக்கும். அழகான பல் வரிசை, வட்ட முகம், ஒல்லியும் குண்டும் இல்லாத உடல், பார்த்தவுடன் மனதில் பதியும் முகம்.
கோவையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் டிகிரி முடித்து விட்டு இப்போது கன்னியாகுமரியில் தன்னுடைய குடும்பத்துடன் வசிக்கிறாள். வேலைக்கு எங்கும் செல்ல வில்லை. ஆனால் தன்னுடைய வீட்டில் வைத்து அக்கம் பக்கத்தினர், அருகில் இருக்கும் பேக்கரி என கேட்பவர்களுக்கு கேக் செய்து கொடுக்கிறாள். சொற்ப வருமானம் தான். ஆனால் அவளுக்கு பிடித்திருப்பதை செய்வதால் அவள் தாய் தந்தை எதுவும் சொல்வதில்லை.
மீதி நேரம் கவரன்மென்ட் பரீட்சைக்கு முழு மூச்சாக படிக்கிறாள். தமிழ்நாடு அரசு தேர்வாணயம் நடத்தும் தேர்வு, அது போக போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆவின் பிரிவில் கூட பரீட்சை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறாள். கேக் செய்வது அவளது சந்தோசத்துக்காக தான்.
ஆனால் அவளது அண்ணி நித்யா நேரம் கிடைக்கும் போதெல்லாம் “பரீட்சைக்கு படிக்கிறேன்னு நேரத்தை செலவழிக்கிறா. கேக் செய்றேன்னு பணத்தை செலவழிக்கிறா. இதெல்லாம் ஒரு வேலையா? இதுக்கு வீட்ல சும்மாவே இருக்கலாம்?”, என்று மட்டம் தட்டுவாள். அது போக பூர்விகாவின் தங்கை ஷிவானி கொஞ்சம் அதிகமாகவே மட்டம் தட்டுவாள்.
ஷிவானி இன்ஜினியரிங் முடித்திருக்கிறாள். புகழேந்தியும் இன்ஜினியரிங் தான். ஷிவானி கேம்பசில் கிடைத்த வேலையிலும் சேர இருக்கிறாள். அதனால் பூர்விகாவை மதிப்பதே இல்லை. பூர்விகா அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டாள். ஆனாலும் சில நேரம் அவர்கள் பேசுவது வலிக்கும், ஆனால் வெளியே சொல்ல மாட்டாள்.
இருப்பதை வைத்து சந்தோஷப் படும் மிகவும் எளிமையான பெண். கல்லூரி படிக்கும் போது அவள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். காரணம் அவள் தங்கி படித்தது கோவையில் இருக்கும் லதாவின் அன்னை வீடு, அதாவது பூர்வியின் பாட்டி தாத்தா வீடு. அங்கே தங்கி தான் அவள் மூன்று ஆண்டுகள் படித்தாள். அங்கே அவள் தான் இளவரசி, அவள் தான் ராஜகுமாரி. படித்து முடித்த பிறகு அங்கே செல்ல அதிகம் வாய்ப்பு வரவில்லை.
“ஆச்சி வீட்டுக்கு போய்ட்டு வரவா?”, என்று அன்னை தந்தையிடம் கேட்பாள் தான். ஆனால் நித்யா புகழேந்தி திருமணம், அவர்கள் வளைகாப்பு அதன் பின் அவள் குழந்தை பிறப்பு என அவள் ஊருக்கு போவது தள்ளிப் போனது.
இப்போது தான் அவளுக்கு போவதற்கு அனுமதி கிடைத்தது. அதுவும் ஒரு வாரம் இருந்து விட்டு வருவதற்கு தான். இரவு ஒன்பதரை மணிக்கு தான் டிரைன். சங்கரலிங்கம் அவளிடம் “கிளம்பி இரு பூர்வி, நான் வேலை முடிஞ்சு வந்து உன்னை டிரைன் ஏத்தி விடுறேன்”, என்று சொல்லி இருந்தார். அதனால் சந்தோஷமாக கிளம்ப ஆரம்பித்தாள்.
இப்போதும் ஒரு வாரம் என்பது குறைவாக பட்டாலும் அவளுக்கு அது மிகப் பெரிய நேரம் தான். சந்தோஷமாக கிளம்ப ஆரம்பிக்கும் போது தான் அவளது அறையில் இருந்த பாத்ரூமில் குழாய் பிரச்சனை. ஒன்பதரை மணிக்கு டிரைனை பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் தான் அன்னை சொன்னதும் தங்கை அறைக்குச் சென்று குளித்து விட்டாள்.
இதற்கு தான் ஷிவானி இந்த அக்கப் போர் செய்கிறாள். ஷிவானி மற்றும் நித்யாவால் தான் பூர்விக்கு சொந்த வீடே பிடிக்காமல் போனது. கல்லூரி வாழ்க்கை, தோழிகளுடன் அரட்டை, தாத்தா பாட்டி வீடு என சந்தோஷமாக இருந்தவளின் மொத்த சந்தோஷமும் சொந்த வீட்டுக்கு வந்ததும் மாயமாய் தான் போனது.
ஏனோ ஷிவானிக்கு சிறு வயதில் இருந்தே கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கும் எண்ணமே கிடையாது. அதை விட இன்னும் கொடுமை அந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகள் நித்யா. ஏனோ அது அவள் வீடு போல தான் அவளது செய்கை இருக்கும்.
அவள் வீடு தான். இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் எனது வீடு என்று நினைக்காமல் நமது வீடு என்று நினைத்தால் நன்றாக இருக்கும்.
அவள் மருமகளாகி வந்ததும் செய்த முதல் வேலை பூர்வியின் புகைப்படத்தை மாற்றியது தான். வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் அது மாட்டப் பட்டிருந்தது. மயில் நிறத்தில் தாவணி அணிந்து நீண்ட பின்னலை முன்னால் எடுத்துப் போட்டு ஊஞ்சலில் ஆடுவது போல இருந்த அந்த புகைப்படம் அவ்வளவு அழகாக இருக்கும்.
ஷிவானிக்கே அதைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக தான் இருக்கும். அந்த புகைப்படத்தை எடுத்து விட்டு தங்களின் திருமணப் புகைப்படத்தை எடுத்து மாட்டி விட்டாள் நித்யா.
யாரிடமும் அவள் அனுமதி கேட்க வில்லை. யாரும் அவளை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்கவும் இல்லை. மனதுக்கு அவ்வளவு வலித்தது பூர்விக்கு. இது நம்முடைய வீடு இல்லையோ? அதனால் தான் நம்முடைய புகைப்படம் அப்புறப் படுத்தப் பட்டதோ என்றெல்லாம் எண்ணம் வரும். ஆனால் இதற்கெல்லாமா சண்டை போடுவது என்று பேசாமல் விட்டாள். பெரியவர்களோ வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை என்ன சொல்ல என்று அமைதியாக இருந்து விட்டார்கள்.
அப்போதே ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டால் வீணான மன கசப்புகள் தானே வரும்? பூர்விக்கு ஏனோ அண்ணனின் திருமணப் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனது வலிக்க தான் செய்யும். இது இயற்கை தானே? அவள் ஒன்றும் அன்னை தெரேசா இல்லையே. அந்த புகைப்படம் எடுக்கப் பட்டதில் ஷிவானி அன்று முழுவதும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் என்பது தனிக்கதை.
இதுவே நித்யா கழட்டியது ஷிவானியின் புகைப்படமாக இருந்திருந்தால் பிரச்சனை வேறு மாதிரி ஆகியிருக்கும். நித்யாவும் ஷிவானியிடம் வைத்துக் கொள்ள மாட்டாள். பூர்வி தான் இளிச்சவாய் என்பதால் அவளிடம் தான் நித்யா தன்னுடைய திமிரைக் காட்டுவாள். பூர்வி அண்ணனுக்காக குடும்பத்துக்காக அனைத்தையும் கடந்து விடுவாள்.
ஒரு வழியாக தங்கையிடம் சண்டையை முடித்து கிளம்பி வீட்டில் இருந்த அனைவரிடமும் சொல்லி விட்டு தந்தையுடன் கிளம்பி விட்டாள். அவர் டிரைன் ஏற்றி விட்டதூம் கை ஆட்டி அவரை போக சொன்னாள். அவரும் ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டு சென்று விட்டார். கிளம்பும் வரை இருப்பதாக தான் சொன்னார். ஆனால் திரும்பிச் செல்ல நேரம் எடுக்கும் என்பதால் அவரை கிளம்பச் சொன்னாள்.
டிரைனும் சத்தத்துடன் கிளம்ப தாத்தாவுக்கு அழைத்து சொல்லி விட்டு ஜன்னல் ஓர இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் அங்கே அதிக கூட்டம் இல்லை. அவளுடைய கம்பார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் இரவு உணவை உண்டு கொண்டிருந்ததால் அவளது சீட்டில் படுக்காமல் வெளியே வேடிக்கை பார்த்தாள்.