Skip to content
Post Views: 8,247

அங்கு அர்ஜுனன் வீட்டில் பட்டம்மாள் பாட்டி கோவத்தில் இருந்தார் சுபா மீது… கோவிலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை என…. அந்த கோவத்தை அதிகம் ஆக்குவது போல் சுபாவும் வீட்டில் இல்லை அவர் வந்து பார்க்கும் போது…
கிரிஜா ரேவதியிடம் விசாரித்த போது நாங்கள் அவளை பார்க்கவே இல்லை… என்று அடித்து கூறினர்…
Advertisement
இதில் ரேவதி வேறு “பாட்டி உங்க கிட்ட வரேன்னு சொல்லிட்டு வேற எங்கயோ போயிட்டாங்க போல… மாமாக்கு தான் முதல் மரியாதைனு சொன்னதுல இருந்து சுபா அக்கா ஓவரா தான் பண்றாங்க… தலைக்கனம் ஏறிடுச்சு போல” என்று வயிதெரிச்சலில் ஒன்றுக்கு இரண்டாக சொல்லிக் கொண்டிருந்தாள்..
அவளின் பேச்சை கேட்டு பாட்டிக்கு சுபாவின் மீது கோவம் அதிக ஆகியது… அவருக்கு சொன்ன சொல்லை காப்பற்ற வேண்டும் இல்லையேல் கோவம் வந்துவிடும்…
கிரிஜா ரேவதி இருவரும் அவர் சுபாவை பற்றி கேட்க அழைத்த போது அவர்கள் சென்று பார்க்கவே இல்லை… ஆரவ் இவர்களிடம் வந்து அவள் மயங்கி விழுந்ததை தூங்கி தூங்கி என்று சொன்னதை கேட்டு தூங்குகிறாள் என்று நினைத்து பாட்டியிடம் கூறிவிட்டனர்…
Advertisement
ரேவதி பாட்டியிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அர்ஜுனனின் ஜீப் வீடு வாசலில் வந்து நின்றது… அதில் இருந்து சிரித்த முகமாக இறங்கிய சுபாவை பார்த்து ரேவதி சொன்னது உண்மை என நம்பிவிட்டார் பாட்டி…
Advertisement
அவர்கள் உள்ளே நுழையும் போதே பாட்டி “அர்ஜுனா உன் பொண்டாட்டி என்ன நினைச்சிட்டு இருக்கா கோவிலுக்கு வரேன்னு சொல்லிட்டு வராம போயிட்டா… என்ன உனக்கு முதல் மரியாதை கிடைக்குதுனு அவளுக்கு தலைக்கனம் ஏறி போச்சா” என்று கோவமாக அர்ஜுனனிடம் கத்திக் கொண்டிருந்தார்….
அதை கேட்டு சுபாவின் முகம் கலங்கிவிட்டது… அவளின் முகத்தைப் பார்த்து அருஜுனன் கோவமாக “போதும் நிறுத்து பாட்டி நான் உங்க கிட்ட முதல் மரியாதை கேட்டேனா நீங்களா இந்த வருஷம் உனக்கு தான் முதல் மரியாதைனு சொன்னிங்க சரினு சொன்னேன்….
ஒருத்தி மூனு மணிநேரமா மயங்கி வீட்டுல விழுந்து இருக்கா… அத கண்டுக்க வீட்டுல ஆளு இல்ல… ஆரவ் போய் தோ இங்க நிக்குறாங்களே இவங்க ரெண்டு பேரையும் போய் கூப்பிட்டு இருக்கான்…
Advertisement
இவங்க போய் பார்க்கவே இல்லை… அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியாம குழந்தை அழுதுட்டே எனக்கு கூப்பிட்டு அழுவுறான்… மூணு வயசு பையன் என் அம்மா மயங்கிட்டாங்க வாங்க அப்டினா கூப்பிடுவான்..
அவனுக்கு என்ன தெரியும்.. கூப்பிட்டா போய் பாக்காம தூங்கிட்டு இருக்கா அப்டினு சொல்லுறாங்க… விருப்பம் இல்லனா சொல்லுங்க எனக்கு எந்த பதவியும் வேண்டாம்… நல்லது பண்ணனும்னா முதல் மரியாதை இருந்தா தான் பண்ணனும்னு இல்லை…
கோவத்துல பேசனும்னு பேசாதீங்க.. இப்ப சொல்றேன் எனக்கு எந்த முதல் மரியாதையும் வேண்டாம்… இந்த வீட்டுல இருக்க பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நாங்க வீட்ட விட்டு போயிடுறோம்” என்று கூறிவிட்டு ஆரவை ராஜம்மாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு சுபாவை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு மேலே சென்றுவிட்டான்…
ராஜம்மா தான் பாட்டியிடம் “என்னம்மா இப்படி பேசிட்டிங்க… பாப்பா முழுகாம இருக்கு… அதுனால மயக்கம் வந்து விழுந்துச்சு போல…. நான் வர அப்ப தம்பி பாப்பாவை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போக ஜீப்புக்கு வந்தது..
நானும் ஆஸ்பத்திரி போயிட்டு தான் வரேன்… பாப்பா இந்த நேரத்துல தூங்காதுனு உங்களுக்கு தெரியாத அம்மா…” என்று கேட்டுவிட்டு அவர் சமையல் அறைக்கு சென்றுவிட்டார்…
சுபா கர்ப்பமாக உள்ளாள் என தெரிந்து கிரிஜா சந்தோஷம் தான் பட்டார்… என்ன இருந்தாலும் தன்னுடைய அண்ணன் மகள் அல்லவா… தான் ஆடா விட்டாலும் தசை ஆடியது தான்…
ஆனால் அவர் அருகில் நின்று ரேவதிக்கு ஏற்கனவே சுபாவின் மீது வன்மத்தில் இருந்தவள் இதை கேட்டு இன்னும் வயித்தெரிச்சல் பட்டுக்கொண்டிருந்தாள்…
ஏனென்றால் கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் அவளுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லை… டாக்டரிடம் காட்டிய போது எல்லாம் நார்மலாக தான் உள்ளது.. என்று கூறிவிட்டார்…
சுபா தற்போது இரண்டாம் முறை கருத்தரித்தது அவளுக்கு இன்னும் கோவம் அதிகம் தான் ஆகியது….
பாட்டி இவர்கள் இருவரிடமும் “ஆரவ் வந்து உங்கள கூப்பிட்டானா??? சொல்லு கிரிஜா அவன் வந்து கூப்பிட்டும் போகாம என்ன பண்ணிட்டு இருந்த??” என்று கொஞ்சம் கோவமாகவே கேட்டார்…
“அது அத்தை ஆரவ் எதோ விளையாடுறான்னு நினச்சேன்… அதுவும் அவ தூங்கிட்டு இருக்கா அப்டினு சொன்னானா… அது தான் நீங்க கேட்ட அப்ப அப்படி சொன்னேன் அத்தை” என்று கொஞ்சம் பவ்யமாகவே கூறினார்…
“அவன் சின்ன பையன் அவனுக்கு அவ மயங்கி இருக்கா அப்படினு தெரியுமா… அழுதுட்டே வந்து கூப்பிட்டா போய் பேசாம வியக்காணம் பேசுறியா…
என்ன உன் மருமக கூட சேர்ந்து ஆட்டம் போடுறியா… பெரியவன் இருக்க அப்ப அவ புருஷனுக்கு எப்படி முதல் மரியாதை தர முடியும்…. உனக்கு தெரியாதா..” என்று கிரிஜாவிடம் கோவமாக கேட்டார்…
“அது அத்தை…..” என்று வார்த்தையை இழுத்தார்…
“இதே அர்ஜுனன் உனக்கு பிறந்த பையனா இருந்தாலும் இப்படி தான் இருந்து இருப்பியா… அவன் உன்னோட பையன் இல்லையே.. அது தான் இப்படி பண்ற…
இத்தனை வருஷமா பிரிச்சி பாக்காம இருந்த நீ… இப்ப பிரிச்சி பாக்குற அப்டினா நீ இவ்வளவு நாள் உண்மையா பாசமா இல்ல… பொய்யா நடிச்சிட்டு இருக்க அப்டி தானு” என்று கோவமாக கேட்டார்…
மறுத்து பேச வந்த கிரிஜாவை தடுத்து “நீ என்ன பண்ணாலும் அர்ஜுனனுக்கு தான் முதல் மரியாதை” என்று கூறி மேலே சுபாவை பார்க்க சென்று விட்டார்…
இங்கு மாமியாரும் மருமகளும் பொருமிக்கொண்டே அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்…
இந்த பிரச்சனை நடக்கும் போது அர்ஜுனனின் தந்தை பாலா அங்கு தான் இருந்தார்… ஆனால் எதிலும் தலையிடாமல் அமைதியாக அமர்ந்து இருந்தார்.. அனைவரும் சென்ற பின் வெளியில் சென்றுவிட்டார்..
மேலே அறையில் சுபாவை கட்டிலில் அமர்த்திவிட்டு ஆரவை அவனுக்கான குட்டி கட்டிலில் படுக்க வைத்தான்… காலை தூங்குவது எல்லாம் அந்த கட்டிலில் தான்.. இரவு அர்ஜுனன் சுபாவுடன் தான் உறங்குவான்…
அவனை படுக்க வைத்துவிட்டு சுபாவின் அருகில் வந்து அமர்ந்தான்.. அவள் எதுவும் பேசாமல் அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்… வீட்டிற்கு வரும்முன் இருந்த இனிமையான மனநிலை அடியோடு மாறியிருந்தது இருவருக்கும்…
சிறிதுநேரத்தில் பாட்டி அவர்களின் அறைக்கு வந்தார் பாவமான முகத்துடன்… அவரை பார்த்து இருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்…
“அது கண்ணா வயசான காலத்துல தெரியமா பேசிட்டேன்…. உங்களுக்கு தெரியும்ல கோவில் விசயத்துல தப்பு நடந்தா கோவம் அதிகமா வரும்னு… நம்ம பூஜைக்கு நம்ம குடும்பம் யாருமே இல்ல… வரேன்னு சொல்லிட்டு சுபிக்குட்டியும் வரல…. அந்த கோவத்துல கத்திட்டேன்…” என்று பாவமாக முகத்தை வைத்து கூறினார் பாடி
“நான் யாருக்கும் சுபிக்குட்டி இல்ல… அர்ஜுனன் பொண்டாட்டினு சொன்னாங்கல அப்டியே இருந்துட்டு போகட்டும்” என்று கொஞ்சம் கோவமாகவே கூறினாள் சுபா..
பாட்டி பாவமாக அர்ஜுனனை பார்த்தார்.. அவனோ அவளிற்கு மேல் முகத்தை கோவமாக இருந்தான்
பாட்டி கெஞ்சி கொஞ்சி எப்படியோ சுபாவை சமாதானம் பண்ணிவிட்டார்… அர்ஜுனன் அவரிடம் பேசாமல் வெளியே சென்று விட்டான்…
பாட்டி அவனின் ஒதுக்கத்தில் முகம் சுணங்கி அமர்ந்து விட்டார்… சுபா தான் “பாட்டி பேசுறதுக்கு பேசிட்டு இப்ப வந்து கெஞ்சுனா அமைதி ஆகிடுவாரா… விடுங்க உங்க கிட்ட கோவம் அதிகமா பட மாட்டாரு…” என்று அவரை அமைதி படுத்தினாள்…
அர்ஜுனன் பாட்டிக்கும் சுபாவிற்கும் ஜூஸ் கொண்டு வந்திருந்தான்…. பாட்டி தன் கண்ணாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்…
அதனால் அவனே “பேசுற அப்ப வார்த்தை முக்கியம் பாட்டி… இப்ப கூட எனக்கு பிரச்சனை இல்ல.. அவங்க பையனுக்கே முதல் மரியாதை தாங்க…. இந்த வீட்டுல அதுனால பிரச்சனை வேண்டாம்…” என்று கூறினான்..
பாட்டி அவனின் கையை பிடித்து கொண்டு “கண்ணா இனிமே பார்த்து பேசுறேன்…. ஆனா என்ன சொன்னாலும் உனக்கு தான் முதல் மரியாதை…. ” என்று உறுதியாக கூறிவிட்டார்..
வீட்டில் நடந்த விஷயம் சசிகுமாருக்கும் கர்ணனுக்கும் தெரிய வந்தது.. சசிகுமாரோ எதுவும் காத்துக்கொள்ளாமல் சென்று விட்டான்…
ஆனால் கர்ணனோ தன் தாயை திட்டிவிட்டு அர்ஜுனனுக்கும் சுபாவிற்கும் வாழ்த்து கூறினான்..
அதன் பிறகு நாட்கள் வேகமாய் சென்றது… திருவிழா நாளில் ஊரே அய்யனார் கோவிலில் கூடியிருந்தது.. தங்கள் ராசா , மகன், சகோதரன் , மருமகன், மகன் இப்படி அனைவராலும் கொண்டாடப்படுபவனுக்கு இன்று கோவிலில் முதல் மரியாதை… அவ்வளவு சந்தோஷம் அங்கிருக்கும் மக்களுக்கு.. தங்கள் வீடு பிள்ளைக்கு முதல் மரியாதை போல் இருந்தது அந்த சந்தோசம்…
பூஜை செய்து முதல் மரியாதை செய்யும் போது முன்னால் நின்று இருந்த அர்ஜுனனை விட்டுவிட்டு அவனின் அந்த பக்கம் நின்று இருந்த சசிகுமாருக்கு கட்ட பட்டது….
பாட்டி அவ்வளவு உறுதியாக கூறிய பிறகு எப்படி சசிகுமாருக்கு கட்ட பட்டது… இதற்கான விடை அடுத்த பதிவில்?!?!?!?
error: Content is protected !!