Skip to content
Post Views: 5,607
அத்தியாயம் 15
அங்கிருந்தே மாதவிக்கு போன் செய்தவன், இங்கு நடந்ததை எல்லாம் கூறியிருந்தான். மாதவியிடம் செந்திலுடைய தந்தையின் போன் நம்பரை வாங்கியவன், அவருக்கு போன் செய்து, இங்கு நடந்ததை பற்றின, எல்லா விஷயங்களையும் கூறி போலீஸிடம் அவனை ஒப்படைக்கப் போவதாக கூறினான்.
அவர் அவனிடம் செந்திலுக்காக மன்னிப்பு கேட்டு சமாதானமாக பேசியும், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அவன் போனை வைத்த, அடுத்த சில நொடிகளில் தேவகி போன் செய்து பேசினாள், அவனது நம்பருக்கு.
Advertisement
தேவகிதான் அவனிடம் கெஞ்சி, அழுது மன்னிப்பு கேட்டு, செந்திலை விட்டுவிடும்படி நீண்ட நேரம் பேசி போராடி மீட்டிருந்தாள். மது செந்திலின் மீது போலீஸிஸ் எந்த கேசும் குடுக்காமல் இருக்க வேண்டுமானால், அவன் இனி இந்த பக்கமே தலைவைத்து படுக்ககூடாது என மிரட்டி, அவளிடம் எச்சரிக்கை செய்துதான் விடுவித்திருந்தான்.
அப்படி அவன் மீறி வந்தால்…. நடப்பதே வேறு என பயமுறுத்தியிருந்தான்.
வீட்டிலிருந்து, செந்திலின் சட்டையை பிடித்து இழுத்துவந்து வெளியே தள்ளியிருந்தான் மது. செந்திலால் எழுந்து நடக்ககூட முடியவில்லை.
Advertisement
மெல்ல தம்கட்டி முயன்றவன், மெதுவாக எழுந்து தள்ளாடிய படியே அங்கிருந்து வெளியேறினான். அவனது ஒரு பக்க கன்னமும், கண்ணும் வீங்கி இரத்தமென சிவந்திருந்தது. வாயிலும், உதட்டிலும் பற்கள் கீறி எச்சிலுடன் இரத்தமும் கசிந்து கொண்டிருந்தது.
Advertisement
காலை ஊனி நடக்கமுடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்றான். தலைமுடியெல்லாம் கலைந்து, சட்டை கிழிந்து, பார்க்கவே கொடூரமாக இருந்தது அவனை. நடக்க முடியாமல் மெல்ல தடுமாறிக் கொண்டு, தள்ளாடியபடியே நடந்து சென்றான்.
பூர்ணி இன்னும் பயத்தில் அழுது கொண்டேயிருந்தாள். மதுசூதனன் உள்ளே சென்று, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, அவளைக் குடிக்க வைத்தவன், தன் அன்னைக்கு போன் செய்து, இங்க நடந்தவற்றை மேலோட்டமாக கூறி அவரை ஆட்டோ பிடித்து பூர்ணியின் வீட்டிற்கு வர வைத்தான்.
பூர்ணி ஜமுனாவைக் கண்டதும் ஓடிச் சென்று, அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவரும் அவளை தோளில் தாங்கி, முதுகைத் தடவி கொடுத்து, ஆறுதல் வார்த்தைகளை கூறி, ஆசுவாசப்படுத்தி சமாதானப்படுத்தினார்.
Advertisement
அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்ததிலேயே…, அவள் எந்தளவு பயந்திருக்கிறாள் என தெரிந்தது அவருக்கு. மதுவும் அங்கேதான் இருந்தான்.
அவளது அழுகையைப் பார்த்து, அவனுக்கும் அவளது பயம் போக்க, கட்டி அணைத்து, ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்த மனம் துடித்தாலும், ஜமுனாவின் முன் ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாக மனதை அடக்கிக் கொண்டு பார்த்திருந்தான்.
ஏற்கனவே பயந்த சுபாவமுடையவள். இன்று செந்தில் அவளிடம் முறை தவறி நடந்திருந்ததையும், மது செந்திலை அடித்ததையும் பார்த்தவள், பயந்து போயிருந்தாள். இன்னும்கூட அவளது நெஞ்சு கூட்டிலிருந்து தடக்… தடக்… என்ற சத்தம் நில்லாமல் கேட்டுக் கொண்டே…… இருந்தது.
மது செந்திலின் மீது காட்டிய ஆங்காரத்தைப் பார்த்தவளுக்கு…., அவனை நிமிர்ந்து பார்க்ககூட பயமாக இருந்தது.
மது கொஞ்ச நேரம் அங்கே இருந்தவன், “ம்மா……. நீ வந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ. எந்த சத்தம் கேட்டாலும்…, யார் வந்தாலும், கதவைத் திறக்காத……… ” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
போகும் பொழுது பூர்ணி பார்ப்பாளா… என அவளையே சில நொடிகள் நின்று பார்த்திருந்தான். அவள் நிமிரவேயில்லை.
மது, மாதவிக்கு போன் செய்த சிறிது நேரத்தில், அவர்கள் அங்கிருந்து கிளம்யிருந்தனர்.
அவர்கள் வந்து சேரும்வரை ஜமுனா பூர்ணிமாவுடனேயே இருந்தார். அவர்கள் வருவதற்கு அன்று இரவு நடுநிசிக்கு மேல் ஆகியிருந்தது. மதுவும் ஜமுனாவைக் கதவைத் தாழ்ப்பாள் போடச் சொல்லிவிட்டு போனவன், வேலையை முடித்துவிட்டு வந்து, அங்கேதான் காவலாக வெளித் திண்ணையிலேயே அமர்ந்திருந்தான்.
மாதவியும் குமாரும் சென்னையிலிருந்து வந்ததும் மதுவின் கைகளைப் பிடித்து கொண்டு கதறித் தீர்த்துவிட்டனர்.
மாதவிக்கு தங்கையைப் பார்த்ததும் தான் உயிரே வந்தது. ஒரு நாள் அவளை விட்டு திருமணப் பத்திரிக்கை வைக்க சென்று வருவதற்குள், இத்தனை அக்கப்போரா…. என தலையில் கை வைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.
ஜமுனாதான் அவர்களுக்கும் ஆறுதல் மொழி கூறி தேற்றி சமாதானப்படுத்தினார்.
“நீங்க பயப்படாதீங்க. மது போட்ட போடுல… இனி அவன் இந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டான்…, கவலை படாத மாதவி”, என குமாருக்கும் மாதவிக்கும் மாற்றி மாற்றி ஆறுதல் கூறி தேற்றியிருந்தார்.
ஜமுனாவும் மதுவும் அவர்களிடம் ஆறுதலாக பேசி, அவர்களை தேற்றி, ஆதரவாக இருந்துவிட்டு, விடியும் தருவாயில் தான் வீட்டிற்கு திரும்பியிருந்தனர்.
மாதவியும் குமாரும் வரும்வரை ஜமுனாவின் கைகளைப் பிடித்துகொண்டு அவருடனேயே அமர்ந்திருந்த பூர்ணி, அவர்கள் வந்ததும் ஜமுனாவிடமும், மாதவியிடமும் சொல்லிவிட்டு அறையினுள் சென்று அடைந்து கொண்டாள்.
மதுவிற்கு பூர்ணி தன்னிடம் பேசாதது, தன்னை ஏறெடுத்தும் பார்க்காதது என அவளது செய்கைகள் கோவத்தைக் கொடுத்தது. அவளுக்கோ இவனது ரௌத்திரத்தில் பயந்து நடுங்கி அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. இதில் எங்கே அவனிடம் பேசுவது.
மறுநாள் மதுசூதனன் பூர்ணிமாவுக்கு, அவளிடம் பேசுவதற்காக போன் செய்திருந்தான். இன்னும் அவன் மேலிருந்த பயம் தெளியாததால், அவன் கேட்டதற்கு மட்டும் பதிலளித்து வைத்துவிட்டாள். அவள் சரியாக பேசாததை எண்ணி மதுவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அடுத்தடுத்து அவனுக்கு இருந்த ஓட்டல் வேலை பிஸியில் அவளை சற்று மறந்திருந்தான். இரண்டு நாட்கள் கழித்து எப்போழுதும் போல் வேலைக்கு சென்றுவர ஆரம்பித்திருந்தாள் பூர்ணிமா.
மாதவி திருமணம் முடியும் வரை பூர்ணியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியும் பூர்ணி கேட்கவில்லை. வீட்டிலேயே எத்தனை நேரம் சும்மாயிருப்பது. திரும்ப திரும்ப அதே நினைவு வந்து அவளை வாட்டிக் கொண்டிருந்ததது. அதிலிருந்து மீளவே வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
பானு அடுத்த கட்டமான நேர்முகத் தேர்விலும் செலக்ட் ஆகி, அவளுக்கு பேங்கில் வேலையும் கிடைத்திருந்தது. சென்னையிலேயே பல்லாவரத்தில் அவளுக்கு போஸ்டிங் போட்டிருந்தார்கள். இன்னும் ஒரு மாதத்தில் அவள் வேலையில் சேர வேண்டும்.
அன்று ஞாயிறு விடுமுறை. சங்கர் பானுவை வேலை கிடைத்ததற்கு ட்ரீட் கேட்டு வம்பு செய்து கொண்டிருந்தான். பானுவும் முதல் மாத சம்பளம் வந்ததும் ட்ரீட் தருவதாக கூறினாள்.
நாம இன்னைக்கு அவுட்டிங் போகலாம், உன்னோட ட்ரீட்டா இருக்கட்டும், நீ சேலரி வாங்கனதும் எனக்கு குடுத்திடு என அவளை கன்வின்ஸ் செய்து வெளியே அழைத்து வந்திருந்தான்.
முதலில் பானுவை துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவன், அவளுக்கு பிடித்தமாதிரி வேலைக்கு போட்டுக்கொண்டு செல்வது போல, குர்தி, சுடி, டாப்ஸ், லெகின்ஸ் என அவளுக்கு தேவையானவற்றை பர்சேஸ் செய்து கொடுத்தான். பானு மறுத்தும் அவன் கேட்கவில்லை. ”இது என்னோட கிப்ட்டா வச்சுக்கோ”. இது வரைக்கும், நான் உனக்கு எதுவுமே வாங்கி குடுத்தது இல்லல்ல.
அதான்…, ”திருபுவனத்தில பட்டுப் படுவை எடுத்துக் கொடுத்தீங்க” இல்ல.
அது விசேஷத்துக்கு உடுத்தறதுக்காக எடுத்தது. இது நீ வேலைக்கு போகும்போது போட்டுக்கறதுக்காக எடுக்கறேன். உனக்கு கஷ்டமாயிருந்தா, ”நீயும் சேலரி வாங்கி, எனக்கும் இதே மாதிரி எடுத்து தா……, நான் வேணான்னுலாம் சொல்ல மாட்டேன், சந்தோஷமா போட்டுப்பேன்……” என்றான் சிரித்துக் கொண்டே.
ஷாப்பிங் முடித்தவர்கள், அங்கேயே பக்கத்தில் இருந்த மாலிற்கு சென்றனர். பானு அந்த பெரிய மாலைப் அதிசயமாக சுற்றி சுற்றி பார்த்துகொண்டே, அவனுடன் நடந்தாள். இது எல்லாம் சினிமாவில் பார்த்தது. அவள். சென்னைக்கே ஒன்றிரண்டு முறைதான் வந்திருக்கிறாள். அதுவும் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கென வந்தது. இது மாதிரி வெளியே எல்லாம் வந்து சுற்றி பார்த்தது இல்லை.
கல்லூரியில் படிக்கும்போது சுற்றுலா என ஊட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த மாதிரி மாலுக்கு எல்லாம் வந்ததில்லை.
அவள் ஆசையாக பார்ப்பதை பார்த்து, அவளது கைகளைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன், ஒரு ஒரு ப்ளோராக அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தான்.
நடுவில் ஜ பேக்கோவில் ஜஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டு, மேலே தியேட்டர் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றான் சங்கர்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களும் அங்கே ஓடிக் கொண்டிருந்தது. பானுவின் விருப்பத்தைக் கேட்டு ஒரு தமிழ் படத்திற்கு டிக்கெட் வாங்கி, இருவரும் படம் பார்க்க தியேட்டர் உள்ளே சென்றனர்.
படத்தில் ஆர்வமாக ஒன்றியிருந்தவளுக்கு சற்று நேரத்திற்கெல்லாம் குளிர ஆரம்பித்தது. தான் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து தோளைச் சுற்றி போர்த்திக்கொண்டாள்.
அதைப் பார்த்த சங்கர் “குளிருதா………?” என்றான்.
ஹ்ம்ம்…….
அவள் கையைப் பிடித்து தனது கையோடு சேர்த்து கோர்த்துகொண்டு, “கொஞ்ச நேரந்தான், போயிடலாம்” என படத்தில் மூழ்கிவிட்டான்.
சில நிமிடங்களில் அவளது கை சில்லிப்பை உணர்ந்தவன், பானுவின் உள்ளங்கையை தேய்த்துவிட்டு கொண்டிருந்தான்.
வீட்டில் ஏசி போட்டால்கூட, அவளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. போக போக குளிரில் சங்கரின் தோளில் ஒன்றியிருந்தாள். அவளது தோளில் கைப்போட்டு அணைவாகப் பிடித்து கொண்டவன், “ரொம்ப குளிருதா…….. வேணும்னா கிளம்பிடலாமா…….” எனக் கேட்டான்.
இன்னும் இடைவேளைக் கூட விடவில்லை. அவளுக்கும் போய்விடலாம் என தோன்றியது. அதிகக் குளிரினால் படத்தில் கவனம் வைத்து அவளால் ஒன்ற முடியவில்லை. இருந்தும் முதன் முதலாக தன்னை ஆசையாக வெளியே அழைத்து வந்திருக்கிறான் கணவன். அவனுக்கு ஏமாற்றமாகிவிடும் என நினைத்து, மறுத்துவிட்டாள்.
படத்தின் இடையில் திரும்பி பானுவைப் பார்த்தவன், அவள் கண்மூடி தனது தோளில் முகத்தை அழுத்திக் கொண்டு சாய்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனுக்கும் புரிந்தது. தனக்காக கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் என.
பானுவின் கைப்பிடித்து அவளை எழுப்பியவன் தானும் எழுந்துகொண்டு அவளை வெளியே அழைத்து வந்துவிட்டான். வெளியே வந்து வெப்ப காற்று உடலில் பட்ட பிறகுதான் அவளுக்கு உடல் நடுக்கம் குறைந்தது. அவளைப் பார்த்து சிரித்தவன், “ஒகேவா……”. என்றான்.
அவனைப் பார்த்து சிரித்து அசடு வழிந்தவள், “சாரி, உங்களைப் படம் பார்க்க விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…..” என்றாள் கில்டியாக முகத்தை சுருக்கி.
“பொண்டாட்டியோட தனியா மூவிக்கு வந்து படம் பார்க்கறதே ஒரு கிக் தான். அதுவும் ஃபர்ஸ்ட் டைம் வரோம். அது பாதில தடைப்பட்டதும் கஷ்டமாதான் இருக்கு. இல்லன்னு எல்லாம் சும்மா சொல்ல மாட்டேன். ஆனால் உனக்கு குளிர் ஒத்துக்கல. உன்னைக் கஷ்டப்படுத்தி…, படம் பார்க்கவும் விருப்பமில்ல எனக்கு”.
“நாம வேணா…….. திரும்ப படத்துக்கு போகலாமா……….?”
“அதெல்லாம் வேணாம் வா…………..”, என அவள் கைப்பிடித்து அழைத்து சென்றான்.
அவளுக்கும் மனதில் சங்கடமானது. தான் அவனுக்கு உண்மையிலேயே பொருத்தமில்லையோ…….? சங்கர் சொன்னதுபோல, இரண்டு பேருடைய எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், லைப் ஸ்டைல் இப்படி எல்லாமே வேறு வேறான நிலையில், தன்னால் அவனுடன் ஒன்றி இணக்கமாக வாழ முடியுமா……? என சஞ்சலம் வந்தது அவளுக்கு. இந்த கேள்விகள் எல்லாம் அவளுக்குள் கொஞ்ச நாளாகவே வர ஆரம்பித்திருந்தது.
அதுவும் இன்று முதல் முறை ஆசையாக, மனைவியை வெளியே அழைத்து வந்திருந்தான். அவனுடன் வெளியே வந்து ஒரு சினிமாவிற்கே தன்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. இன்னும் அவனது நவநாகரிக பழக்க வழக்கங்களுக்கு எல்லாம் நாம ஒத்து வருவோமா……….? என்ற எண்ணவோட்டத்தில் அவனுடன் நடந்து கொண்டிருந்தவள், எதிரில் வந்தவரைப் கவனிக்காமல் அவர் மீது மோத இருந்தாள்.
சங்கர்தான் அவளைப் பார்த்து… “ஹேய்” என இழுத்து நகர்த்தினான்.
“ஸாரி… கவனிக்கல……..”
“இன்னும் அதையே நினைச்சுட்டுருக்கியா…… நீ. பிரியா இரு. வா….” என அவளை, அங்கிருக்கும் ஸ்னோ பௌல் விளையாடும் பகுதிக்கு அழைத்து சென்று விளையாட ஆரம்பித்தான்.
அவளுக்கும் எப்படி விளையாடுவது என சொல்லி கொடுத்து, அவளையும் விளையாட வைத்தான். அவனைப் பார்த்து பானுவும் ஆர்வமாக விளையாட ஆரம்பித்தாள்.
அங்கேயே ஒரு மணிநேரத்திற்கு மேல் இருந்தவர்கள், விளையாடி முடித்து, பசியுடன் வெளியே வந்தார்கள்.
மாலில் இருந்த ஃபுட் கோர்ட்டிலேயே, அவளுக்கு பிடித்த உணவைக் கேட்டு வாங்கி கொடுத்து, தானும் உண்டு வீட்டிற்கு கூட்டிவந்தான்.
வெளியில் சுற்றியதில் அலுப்பாக இருந்ததால், வீட்டிற்கு வந்ததும் பானு ஒரு குளியல் போட்டு, உடை மாற்றி தனது அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள். ஜமுனாவிடம் போன் செய்து இன்று தாங்கள் வெளியே சென்று வந்ததைப் பற்றி எல்லாம் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தவள், சரசுக்கும் போன் செய்து பேசிவிட்டு உறங்கிவிட்டாள்.
நடு சாமத்தில் கதவு பட பட வென தட்டும் சத்தம் கேட்டு விழித்து அமர்ந்தவள், சங்கரின் குரல் கேட்டு வந்து கதவைத் திறந்தாள். கதவு திறந்து வெளியே வந்ததும், அவளது கைப்பிடித்து அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அவனது அறைக்கு சென்று பார்த்ததும், அவளது விழிகள் இரண்டும் ஆச்சர்யத்தில் விரிந்தது.
அறை முழுவதும் கேன்டில் விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது. நான்கு பக்கமும் சுவரில், கலர் கலராக பலூன் ஒட்டப் பட்டிருந்தது. அறை பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
அடர்ந்த இருட்டின் நடுவே தங்க ஜ்வாலைகளை போல எங்கும் மின்னிக்கொண்டிருந்த தீபச்சுடர் ஒளிகளை பார்த்த பரவசத்தில் சில நொடிகள் தன்னையே மறந்து நின்றுவிட்டாள்.
கேன்டிலில் இருந்து வந்த நறுமணம் நாசியை நிறைத்து, மனதிற்கு இதமான சுகந்தத்தை கொடுத்தது.
ஏற்கனவே அவனது அறை சீலிங்கில் ஸ்டார்ஸ், மூன், கேலக்ஸின்னு, ரேடியத்தாலான நைட் குளோயிங் வால் ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இருக்கும். அதுவே இரவு நேர வானத்தை நேரடியாக பார்ப்பது போல, தத்ரூபமாக அவ்வளவு அழகாக இருக்கும்.
அதனுடன் இப்பொழுது மெழுகுவர்த்தி ஒளியும், கலர் கலர் பலூனும் சேர்ந்து, ஏதோ திறந்த வெளியில் உண்மையாகவே வானத்தில் உள்ள நிலவுக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கும் கீழே நின்றிருப்பதுபோல கண்களுக்கு குளிர்ச்சியான காட்சியாக இருந்தது.
இரண்டு கன்னத்திலும் கையை வைத்து, கண்ணை விரித்து ஆச்சர்யமாக அவற்றையெல்லாம் சுற்றி பார்த்தவளின் கண்கள் அங்கிருந்த டேபிளின் மேல் வந்ததும், சந்தோஷத்தில் நிலைக்குத்தி நின்றது.
டேபிளின் மேல் ஹார்ட் ஷேப்பில் ரெட் வெல்வட் கேக் இருந்தது.
அதில் ‘’என் செல்ல ராட்சஷிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ என எழுதியிருந்ததைப் பார்த்து பரவசத்தில் உள்ளம் நெகிழ்ந்து சங்கரைத் திரும்பி பார்த்தாள்.
அவளையே பார்த்துகொண்டிருந்தவன், பானு திரும்பி தன்னைப் பார்த்ததும் கண்களைசிமிட்டி, அவளின் கையைப் பிடித்து அழைத்துசென்றான்.
கேக்கின் நடுவில் ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றி, ஹேப்பி பர்த்டே ஸாங் பாடி, கேக்கை வெட்டுவதற்காக அவளிடம் கத்தியை எடுத்து நீட்டினான்.
அவனது செய்கையில் அழகாக வெட்கப் பட்டவளை பார்த்து சிரித்து, கேக்கை வெட்டும் படி கண்களாலேயே சைகை செய்து, கத்தியை அவள் கையில் கொடுத்தான்.
அதை வாங்கியவள், மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து, கேக்கை வெட்டியெடுத்து, அவன் வாயில் வைக்கப் போனவளைத் தடுத்து, அவளின் கையிலிருந்த கேக் துண்டில் பாதியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டு, அவளது நெற்றியில் முத்தமிட்டு விஷ் செய்தான்.
கையில் இருந்த கேக்கைகூட அவனுக்கு ஊட்ட மறந்து அவனையே பார்த்து நின்றாள்.
அவளது கையை பிடித்து தானாகவே கேக்கை வாயில் வைத்துகொண்டவன், பர்த்டே பேபிக்கு என்னோட கிப்ட் என்று ஒரு சிறிய பெட்டியை அவளிடம் கொடுத்தான். அதில் ஒன்று போலவே இரண்டு தங்க மோதிரங்கள் இருந்தது. பார்த்த உடனே அவளுக்கு புரிந்தது. ஒன்று அவளுக்கு, இன்னொன்று அவனுக்கு என்று.
அதிலிருந்த அவளுக்கான மோதிரத்தை எடுத்தவன் அவளது கையைப் பிடித்து மோதிர விரலில் அந்த ரிங்கை போட்டுவிட்டான். அவளையும் போட்டுவிடச் சொல்லி தனது கைகளை அவள் முன் நீட்டினான். அவனுக்கான மோதிரத்தை எடுத்து அவன் விரலில் மாட்டிவிட்டாள்.
இரண்டு பேருக்குமே மோதிரத்தின் அளவு சரியாக இருந்தது. தன் விரல் அளவு எப்படி தெரியும் என அவனைப் பார்த்தாள்.
அவளைப் புரிந்தவன் போல, அது சஸ்பென்ஸ் கேட்கப் படாது என அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன் இரண்டு பிளேட் எடுத்து வந்து இன்னும் கொஞ்சம் கேக் வெட்டி அவளுக்கும் கொடுத்து தானும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
மீதியிருந்த கேக்கை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து படுக்கப் போனவளை அழைத்து தன்னுடனே வந்து படுத்துக் கொள்ளுமாறு அழைத்தான்.
அவள் தயங்கி நின்றதைக் கண்டு, “ஹேய் உன்னை கடிச்சு தின்னுட மாட்டேன். ஊருல என் கூடத்தான படுத்திருந்த என்ன பண்ணனாம். வா.. வந்து படு”, என கைப்பிடித்து படுக்க வைத்தான். அவளை அவனுடனேயே.
“நான் தூங்கும் போது புரண்டு என் கைகால் உங்க மேல் படும் அதான்……………..”
“பட்டா பரவாயில்லை. படு……. ” என அவளை அங்கேயே படுக்க வைத்தான்.
“என் பர்த்டே உங்களுக்கு எப்படி தெரியும்……….?”
“இன்டர்வியூக்கு போறன்னைக்கு, உன் சர்டிபிகேட்ல பார்த்து தெரிஞ்சுகிட்டேன்”.
“தேங்கஸ், இது வரைக்கும் இந்த மாதிரி கேக்லாம் வெட்டி கொண்டாடுனது இல்ல. அம்மா புது டிரஸ் எடுத்து குடுப்பாங்க, காலையில புது துணி போட்டுட்டு கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டு வருவேன். எனக்கு பால் பாயாஸம் பிடிக்கும்ன்றதுனால, பாயாஸம் பண்ணி தருவாங்க. அவ்வளவு தான் என் செலிபிரேஷன் எல்லாம். இதான் பர்ஸ்ட் டைம் கேக்லாம் வெட்டி செலிபிரேட் பண்ணது. ஹேப்பியா,,, இருக்கு, எனக்கு. தேங்க்ஸ்……………….”
“ஹ்ம்ம்……………… நானும் காலேஜ் படிக்கும் போது ஃபிரண்ட்சுங்களோட சேர்ந்து செலிபிரேட் பண்ண ஆரம்பிச்சது தான். ஊர்ல அம்மா என் பிறந்த நாள்னா கோயிலுக்கு அபிஷேகம், அர்ச்சனை கொடுத்து, அன்னதானம் பண்ணுவாங்க. வீட்ல தடபுடலா விருந்து தயார் பண்ணுவாங்க”.
சங்கர் அவளையே விழுங்கிவடுவதுபோல ஆசையாக பார்த்துகொண்டிருந்தான். அவனது பார்வையில் அவளுக்கு கூச்சம் வந்தது.
ஏன்…, அப்படி பார்க்கறீங்க….?
ம்கூம்…… என தலையசைத்தவன், உன்கிட்ட ஒன்னு கேட்பேன்…, உண்மைய சொல்லுவியா….?.
ஹ்ம்ம்…..
அவளது கையை எடுத்து தன் கையுடன் கோர்த்துகொண்டவன், உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா…..?
……………….
இல்ல, தலையெழுத்தேன்னு என் கூட இருக்கியா…………?
அவளுக்கு அவனது கேள்வியில் சிரிப்பு வந்தது. இப்ப ஏன்.., திடீர்னு உங்களுக்கு இந்த சந்தேகம் வந்துச்சு?
பேசி மழுப்பாத. பதில் சொல்லு. ஏன்னு சொல்றேன்……..?
ஹ்ம்ம்… என பெரு மூச்சு இழுத்து விட்டவள், சொல்ல தெரியல எனக்கு. ஆனால்… என தயங்கினாள்…. சொல்லாமல்.
ம்ம் சொல்லு… என்ன ஆனால்…..?
உங்களை விட்டுட்டு மட்டும் இருக்க முடியாதுன்னு தோணுது… என்றாள் கூச்சப்பட்டுகொண்டே…..
ஹா…. ஹா….. இது என்ன பதில். புதுமையாருக்கு. மாப்பிள்ளை இவர் இல்ல. ஆனால் இவர் போட்டிருக்க சட்டை மட்டும் என்னோடதுன்னுவாரே ரஜினி ஒரு படத்துல, அந்த மாதிரியிருக்கு உன் ஸ்டேட்மென்ட் என கலாய்த்தான்.
கேலி பண்றீங்க பத்தீங்களா…., இதுக்குதான் நான் சொல்லல…., போங்க என சினுங்கினாள்.
சரி சரி நான் பேசல. நீ சொல்லு…. என அவளைப் பார்த்தவாறு ஒருக்களித்து, நெருங்கி படுத்தான்.
அவளது பதில் அவனை குஷியாக்கியிருந்தாலும், இன்னும் அவள் வாயிலிருந்து அவனுக்கான பிடித்தத்தைபற்றி அறியமுடியவில்லையே என்ற தவிப்பு இருந்தது அவனிடம்.
ஊருக்கு போயிருந்தப்ப, உங்களை விட்டுட்டு ஒரு நாள் அம்மா கூட இருந்ததுக்கே, உங்களை தேடிக்கிட்டே இருந்தது மனசு.
என்னமோ மிஸ் ஆன மாதிரி ஒரு பீல். காலையில உங்களை பார்த்ததுக்கு அப்புறம்தான்…. ஹேப்பியா இருந்ததுச்சு.
அட அறிவே இதைதானடி நான் கேட்டேன்……. என இருந்தது அவனது மைன்ட் வாய்ஸ்.
தொடரும்.
error: Content is protected !!