Skip to content
Post Views: 5,183
அத்தியாயம் 18
பூர்ணிமா சென்னைக்கு பானுவின் வீட்டிற்கு விருந்துக்கு செல்லும்போது, அப்படியே அவளின் பெரியம்மா வீட்டிற்கும் சென்றுவரவேண்டும் என மதுவிடம் தெரிவித்திருந்தாள். அதற்கு மதுசூதனன் மறுத்துவிட்டான்.
செந்திலின் மேல் உள்ள கோவத்தில், தேவகி மேலும், பாண்டியன் மேலும், அவனுக்கு கோவமும் வருத்தமும் நிறைய இருந்தது. ஒரு அண்ணனாக பாண்டியன் செந்திலை ஆரம்பித்திலேயே கண்டித்திருந்தால், இந்தளவுக்கு அவன் துணிந்திருக்க மாட்டான் இல்லையா……… என மதுவுக்கு மனதில் ஆத்திரம் இருந்தது.
Advertisement
தேவகியின் மீதும் கோவமிருந்தது. தம்பியை போலீஸில் பிடித்து கொடுக்கப் போகிறேன், என சொன்ன அடுத்த நிமிடம் போன் பண்ணி, அவனுக்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டு, மன்றாடி, அவனை காப்பாத்த முடியுது.
பூர்ணிக்கு ஒன்னுன்னா…. மட்டும் கண்டுக்காம ஒரமா இருந்துட வேண்டியது. செந்திலின் செயலை அறிந்திருந்தும், ஏற்கனவே மாதவி போன் செய்து கண்டித்திருந்தும், தேவகி அசட்டையாக இருந்ததால் தானே, அவனுக்கு இத்தகைய பாதக செயலை செய்யும் துணிவு வந்தது.
செந்திலை அப்பவே கண்டிக்காமல் விட்டது, அவனுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதை போல் ஆகாதா……? எல்லாம் பக்கா சுயநலவாதிகள், என கான்டிலிருந்தான் அவர்கள் மேல்.
Advertisement
திருமணத்தில் கூட அவர்களிடம் மரியாதை நிமித்தம், இரண்டொரு வார்த்தைகள் பேசியிருந்தானேயன்றி, அவர்களை கண்டு கொள்ளவேயில்லை. அதுவே அவர்களுக்கு அவமானமாக இருந்தது.
Advertisement
இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால்…, அவனுக்கு அங்கே செல்ல இஷ்டம் இல்லை. அதை வெளிப்படையாகவே அவளிடம் கூறிவிட்டான்.
பூர்ணி, “அது அண்ணோட வீடு மட்டும் இல்ல. அங்க பெரியம்மாவும் இருக்காங்க. பார்க்கப்போனா… அது என் பெரியம்மாவோட வீடு. அவங்க இல்லனா…, நான் இன்னைக்கு இல்ல. என்னை எடுத்து வளர்த்தவங்க. சொல்லப் போனா…, எனக்கு எல்லாமே அவங்கதான், அவங்கள அவமதிக்கற மாதிரி, அவங்க மனசு கஷ்டப்படற மாதிரி இருக்கும் நாம சென்னைக்கு போயிட்டு, அங்க போகாம இருந்தா”.
“பார்க்கலாம் நேரமிருந்தா…, ஈவ்னிங் அங்க போயிட்டு, அப்படியே கிளம்பிடலாம். இப்பவே அவங்ககிட்ட சொல்ல வேணாம். பானு வீட்டுக்கு போயிட்டு சூழ்நிலைய பார்த்துட்டு, போன் பண்ணி சொல்லிட்டு போகலாம்”.
Advertisement
சரி எனத் தலையசைத்துகொண்டாள்.
பூர்ணி மதுசூதனன் மீது கோவத்தில் இருந்தாள். திருமணத்திற்குபின் முதன்முதலாக கணவனுடன், தனியாக சென்னைக்கு பயணிப்பதை நினைத்து மனதில் ஆசையுடன் காத்திருந்தாள். ஆனால் கிளம்பியது என்னவோ கூட்டமாக.
ஆமாம், முதலில் பானு போன் செய்ததும், பூர்ணியும் அவனும் பஸ்ஸில் போகலாம் என முடிவு செய்திருந்தான் மது. ஏதேச்சையாக சரசு அவனுக்கு போன் செய்து, அவர் அந்த வாரம் மகன் மருமகளைப் பார்க்க போக இருப்பதாக கூறவும், அவருடன் காரிலேயே சென்று வரலாம் என்று முடிவு மாறியது.
பூர்ணியும், மதுவும் வருவதால் சரசு ஜமுனாவையும் சேர்த்து கிளப்பியிருந்தார் சென்னைக்கு. இப்படி சரசு, ராகவன், ஜமுனா, கலியமூர்த்தி, மது, பூர்ணி என ஒரு கூட்டமே கிளம்பியிருந்தது.., சென்னைக்கு.
இதில் பூர்ணிக்கு தான் உள்ளூர வருத்தம் கொண்டது மனது. அவளும் மதுவும் இதுவரை திருமணமானதிலிருந்து தனியாக எங்கும் சென்றதில்லை. சென்னைக்கு, பானுவின் வீட்டு விருந்துக்கு, தனியாக கணவனோடு செல்லலாம் என ஏகாந்தத்தில் இருந்தவளுக்கு, தங்களுடன் குடும்பமே கிளம்பியிருந்தது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.
அதில் கணவனை வெட்டவா குத்தவா என ஆத்திரமும் வந்தது மனதில். வீட்டிலதான் நம்மோட ஒழுங்கா டைம் ஸ்பென்ட் பண்றது இல்லன்னு பார்த்தா. வெளியே கிளம்பும் போதும் இப்படி கூட்டத்தோட போற மாதிரி பண்ணிட்டானேன்னு, அவன் முகத்தைக் கூட பார்க்காமல்.., வெளியவே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
இதில் பெரியவர்கள் வேறு ஏதாவது பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வந்தது, அவளுக்கு இன்னும் எரிச்சலூட்டியது. தான் மட்டும் தனித்து இருப்பதைப் போன்று அவளே உருவகப்படுத்திக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தாள்.
மதுசூதனன் மனைவியின் முகத்தைப் பார்த்தாலும் அவனுக்கு அவளது மன உணர்வுகள் தெரியவில்லை. ராகவனுடனும் தந்தையிடமும் பேசியபடியே டிரைவிங் செய்து கொண்டிருந்தான். முன்னால் அவன் பக்கத்தில் ராகவன் அமர்ந்திருந்தார்.
இன்னோவாவின் நடுவில் பெண்கள் மூன்று பேரும் அமர்ந்திருந்தனர். பின் பக்கம் கலியமூர்த்தி படுத்து உறங்கிக் கொண்டிந்தார்.
இரவுக்கான உணவை, வீட்டிலேயே உண்டு கிளம்பியிருந்ததால் கடலூரை நெருங்குவதற்குள், ஒருத்தர் ஒருத்தராக உறக்கத்தை தழுவினர். முன் பக்கம் அமர்ந்திருந்த ராகவன், சீட்டை பின் பக்கம் சாய்த்து விட்டு, உறங்க ஆரம்பித்தார்.
பூர்ணி மட்டும் முழித்திருந்தாள். மனைவி முழித்திருப்பதை திரும்பி பார்த்தவன், “பூர்ணிம்மா…….. தூங்குடா………” என்றான் கனிவாக.
கோவமிருந்தாலும் “கணவனின் வார்த்தையில் உருகியது மனது”. அட்லீஸ்ட் அவன் பக்கத்துலயாவது உட்கார விட்டிருக்கலாம் என ஏங்கியது மனம்.
இது ராகவன் வீட்டு கார், அவரை இறங்கி பின்னாடி போய் உட்காருங்கன்னு எப்படி சொல்ல முடியும். அதுவுமில்லாமல் எப்பவும் ஆண்மக்கள் முன்னாடி உட்கார்ந்து வருவதுதான் மரியாதை என்பது, எழுதப் படாத விதியாக இருந்தது, நம் சமுதாயத்திடையே.
விடியும் தருவாயில் சென்னைக்கு போய் சேர்ந்திருந்தனர். மது முழிந்திருந்து ட்ரைவிங் செய்து வந்ததால் போனதும் படுத்துவிட்டான். பெண்களும் சிறிது நேரம் படுத்து எழுந்து வந்தார்கள்.
பானு காலையிலேயே குளித்து முடித்து இவர்களுக்காக காப்பி, டீ என தனித் தனியாக தயாரித்து கொடுத்து, காலை டிபன் செய்ய ஆரம்பித்தாள்.
ஜமுனா தான் செய்வதாக கூறியும், அவரை சமைப்பதற்கு விடவில்லை பானு. சரசு, ஜமுனா இருவரும் காய்கறிகளை நறுக்கி கொடுத்து விட்டு குளித்து வந்தார்கள். அதற்குள் ஆண்களும் எழுந்து வந்திருந்தார்கள். மது மட்டும் தன்னை எழுப்ப வேண்டாம் என கூறி உறங்கிவிட்டான்.
காலை டிபனிற்கே இட்லி வடைகறி, பூரி, உருளைக்கிழங்கு மசாலா, கேசரி, ரவா கிச்சடி, சட்னி, சாம்பார், பருப்பு வடை என ஜமாய்த்திருந்தாள் பானு. வடையை மட்டும் ஜமுனா எண்ணெயில் போட்டு எடுத்தார்.
ஒருத்தர் ஒருத்தராக குளித்து முடித்து சாப்பிட வந்து அமர்ந்தனர்.
சரசு எல்லோரையும் உட்கார வைத்து பரிமாறினார். பூர்ணிக்கு கணவன் இல்லாமல் சாப்பிடுவதற்கு மனதேயில்லாமல், சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
ஜமுனாக்கு பெருமை பிடிபடவில்லை, மகள் இத்தனை ஐட்டம் தனியாகவே செய்திருந்ததை நினைத்து. சாப்பிட்டவர்கள் எல்லாம் டேஸ்ட் நன்றாக இருக்கிறது என பாராட்டியதை கேட்டு, அவருக்கு உள்ளம் குளிர்ந்திருந்தது. மகள் குடும்பம் செய்யும் அழகை வந்து தங்கியிருந்து பார்க்க அவருக்கும் ஆசைதான்.
அங்கிருக்கும் வேலைகளை விட்டு வந்து தங்கி செல்ல முடியவில்லை அவரால். இதற்கு முன் வந்திருந்த சில சமயங்களிலும் வந்தவுடன் தங்க முடியாமல் கிளம்பும் படியாக இருந்தது.
இன்று மகள் குடும்பம் செய்வதை நேரில் கண்டதும், நெஞ்சம் பூரித்திருந்தது. சரசுக்கு ஏற்கனவே பல முறை வந்து தங்கி சென்றிருப்பதால், மருமகளைப் பற்றி நன்கு தெரியுமாதலால், அவர் சாதாரணமாக இருந்தார்.
ஆண்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும், பானு ஜமுனா சரசு மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பூர்ணி அவர்களுக்கு பரிமாறினாள்.
பானு, “அண்ணனை எழுப்புறதுதான, சாப்பிட்டு படுக்க சொல்லலாம், இல்ல ண்ணி………” என்றாள் பூர்ணியைப் பார்த்து.
அவளுக்கும் கணவன் சாப்பிடாததை எண்ணி மனதில் வருத்தமாக இருந்ததால்…, எழுப்புவதற்காக சென்றாள்.
அதற்குள் ஜமுனா,” வேணாம் பூர்ணி. அவனை எழுப்பாத நேத்து பகல் முழுக்க வேலை பார்த்துட்டு வந்துட்டு, நைட்டு முழுக்க கண் முழிச்சு கார் ஓட்டிட்டு வந்திருக்கான். நல்லா தூங்கி எழுந்திருக்கட்டும். அவனே எழுந்து வருவான், டிஸ்டர்ப் பண்ணாத…” என்று விட்டார்.
அவளுக்கு மாமியாரின் வார்த்தைகளில் அவ்வளவு எரிச்சல் வந்தது.
“இங்க வந்தது எங்க விருந்துக்காக. இதுல அவரைத் தவிர எல்லாரும் சாப்பிட்டாச்சு. ஏன்? இந்த அத்தைக்கு நேத்தே தெரியாதா………? அவர் பகல் முழுக்க கஷ்டப்பட்டு வேலை பார்த்துட்டு வந்திருக்காருன்னு”.
“ஒரு டிரைவர் போட்டுட்டு வந்திருக்கலாம். இல்லையா, எல்லாரும் பஸ்சுல டிக்கெட் புக் பண்ணி வந்திருக்கலாம். அதெல்லாம் பண்ணாம, இப்ப அவர டிஸ்டர்ப் பண்ணக் கூடாதாம்” என எரிச்சல் வந்தது மாமியாரின் வார்த்தைகளில்.
சாப்பிட்டு மதிய சமையலுக்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது. சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைப் போட்டு சரசு படுக்க சென்றுவிட்டார். ராகவனும் கலியமூர்த்தியும் கூட சென்று படுத்துவிட்டனர்.
ஜமுனா கிட்சனில் இருப்பதால், சங்கர் கிட்சனுக்குள் செல்லாமல், ஹாலில் டீவி போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டான். பூர்ணி கிட்சனில் அவர்களுடன் சமையலுக்கு உதவ வந்தும், பானு மறுத்துவிட்டாள்.
“நீங்க போய் கொஞ்ச நேரம் அண்ணனோட படுங்க அண்ணி, நாங்க பார்த்துக்கறோம்” என்று.
“காயாவது நறுக்கி தரேன் குடுங்க, சும்மாயிருக்கறதுக்கு போரடிக்குது…..” என காய்கறிகளை கழுவி நறுக்கி கொடுத்தாள் அங்கேயே உட்கார்ந்து.
மூவரும் சேர்ந்து சமையலை முடித்து வெளி வரும் போது மதுசூதனன் தூங்கி எழுந்து வெளியே வந்திருந்தான்.
“ஏதாவது குடிக்க தரவாண்ணே……”
“இல்லடா……. பசிக்குது. ஒரேடியா.. குளிச்சிட்டு வந்து சாப்பிடறேன்”.
“நீ காலையிலிருந்து ஒன்னுமே சாப்பிடல… இரு” என பிரிட்ஜைத் திறந்து, பழம் எடுத்து ஜூஸ் போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். மறுக்காமல் பானு கொடுத்ததும் வாங்கி குடித்தான். மதுவுக்கு இருந்த பசிக்கு சில்லுன்னு இதமா இருந்தது அந்த ஜூஸ்.
“என்ன ஜூஸ் பானு இது. நல்லாயிருக்கே……”
“பலாச்சுளையோட தென்னம்பூ ஜூஸ் …ண்ணே”.
“பாலும் கலந்தியா….”
“ஆமாம் ண்ணே. டேஸ்டாயிருக்குல்ல….. “
“சூப்பராயிருக்குடா……”
அவன் யோசிப்பதை பார்த்து, “ஆஹா” உடனே இவன் பிஸ்னஸ் மைன்ட் வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்துடா சாமி…. என சலித்துகொண்டாள், பூர்ணி மனதில்.
மனைவியின் பார்வையில் அவளை திரும்பி பார்த்து சிரித்தவன், “பூர்ணி என் டிரஸ் எடுத்து குடேன்…, எந்த பேக்ல வச்சிருக்க………….?”
“இது என்ன….”, இவர் தனி பேக்தான கொண்டு வந்தார் என முழித்துக் கொண்டே, அவன் படுத்திருந்த அறைக்கு சென்றவள் அவன் பேகை எடுத்து நீட்டினாள்.
அவள் பின்னே அறைக்குள் வந்தவன், கதவை தாழிட்டு வந்து அவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவனிடம் இருந்து விலக முயன்றவளை, “ம்ப்ச், கொஞ்ச நேரம் இருடா…….” என கொஞ்சியவன், அவளது கழுத்தில் அவனது முகத்தை அழுந்த புதைத்து அவளை வாசம் பிடித்து நின்றிருந்தான்.
மது, “கொஞ்ச நேரம் கூட தூங்கலையா நீ………?”
“ம்கூம்,,,,,, தூக்கம் வரலை”.
“சரி, இங்கயே இரு. நான் குளிச்சிட்டு வர வரைக்கும், ஓடிடாத………..”
“இதென்ன…, இப்பதான் ஐயாவுக்கு பொண்டாட்டிய கண்ணுல தெரியுதோ……..? எல்லாரும் வெளிய இருக்காங்க….., நம்ம வீடா இது…..? வந்த இடத்துல…….. என்ன நினைப்பாங்க…..?”
“யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க…….. இங்கயே உட்காரு” என அவளைப் பிடித்து அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவன், துண்டை எடுத்துக் கொண்டு, பாத்ரூமிற்கு சென்றிருந்தான் குளிப்பதற்காக.
அவன் குளித்து முடித்து வரும் போது பூர்ணி அங்கில்லை, அவளுக்கு பயம் மனதில் பெரியவர்கள் எல்லாம் வெளியில் இருக்கும் போது எவ்வளவு நேரம் அறைக்குள் தனியாக இருப்பது என அவன் குளிக்க சென்ற அடுத்த நொடி வெளியே சென்றிருந்தாள்.
குளித்து உடை அணிந்து வெளியே வந்தவன் மனைவியைக் கண்டு முறைத்தான் யாரும் அறியா வண்ணம்.
அவளுக்கு மனதில், “ஆளைப் பாரு…, ரொமான்ஸ் பண்ண நேரம் காலம் பார்க்கறதைப் பாரு…” என்று கறுவிக் கொண்டாள்.
மதிய சாப்பாடு முடிந்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ,பூர்ணி அவளது பெரியம்மா வீட்டிற்கு சென்று வரலாமா… என கணவனைப் பார்த்து கேட்டாள்.
மது யோசிப்பதற்குள், “நாளைக்கு போங்க மச்சான். இன்னைக்கு ஈவ்னிங், எல்லாரும் சேரந்து வெளிய போவோம். அம்மா, அப்பா, அத்தை, மாமா என எல்லாரும் சேர்ந்து இருக்காங்க. எல்லாரும் ஒன்னா சேர்ந்து போவோம்…” என்றுவிட்டான் சங்கர்.
மதுவிற்கு மனைவியின் எண்ணம் புரிந்தாலும், சங்கரின் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. சரி என்று விட்டான். பூர்ணிக்கு தன்னுடைய ஆசை நிராசையானதை எண்ணி, கண்களை கரித்துக் கொண்டு வந்தது.
மொத்தத்தில் இந்த ட்ரிப்பே அவளுக்கு உவப்பானதாக அமையவில்லை என நொந்துகொண்டாள் மனதில். மாலை எல்லோரும் மெரினாவிற்கு கிளம்பி சென்றனர்.
பானுவும் இதுவரை மெரினாவுக்கு வந்ததில்லை என்பதால் ஆர்வமாக எல்லாவற்றையும் கண்களை விரித்து பார்த்துக் கொண்டே வந்தாள் சங்கருடன். சங்கர் மனைவியின் கைப்பிடித்து, அங்கிருந்த கடைகளுக்கு, அழைத்துச் சென்று காண்பித்தான். விதவிதமான சங்குகளையும், சின்ன சிப்பிகளில் செய்த பலவிதமான அலங்கார பொருட்கள் எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். மனைவியின் பார்வையில் அவளுக்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்தான் சங்கர்.
“அண்ணி, நீங்களும் உங்களுக்கு பிடிச்சது வாங்குங்க, என்றாள் பானு”.
ஏற்கனவே தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்ற எரிச்சலில் இருந்த பூர்ணி, எதையும் பார்க்கும் மனநிலையில் இல்லை. வாங்கவும் அவளுக்கு விருப்பமில்லை.
பானுவே அம்மாவின் வீட்டிற்காக என்று சிப்பியில் கோர்க்கப்பட்டிருந்த வாசலில் கட்டும் தோரணத்தை வாங்கி, அவர்கள் வீட்டு நிலைப்படியில் தொங்க விடுவதற்காக என்று சொல்லி, பூரணியிடம் கொடுத்தாள்.
அதே போல் மாமியாருக்குப் பிடித்த மாதிரி அவருக்கும் வாங்கிக் கொடுத்தாள். முகம் பார்க்கும் கண்ணாடியில் சுற்றி சோழி பதித்திருந்ததை, தனக்காக தேர்தெடுத்து வாங்கிக் கொண்டாள்.
கடல் அலையில் காலை நனைத்து, சிறுபிள்ளை போல் குஷியாக, அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் பானு. மதுவுக்கு மனைவியின் வருத்தம் புரிந்திருந்ததால் அவளை சமாதானப்படுத்த எண்ணி, அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்று கடல் அலைகளில் நிற்க வைத்தான்.
திரும்பி கணவனை முறைத்தாள். பார்வையால் அவனும் கெஞ்சினான். கோவத்தில் முகத்தைப் திருப்பிக் கொண்டு, கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டு நகர்ந்து விட்டாள்.
எல்லோரும் அருகில் இருக்கும் போது மனைவியிடம் பேசவும் முடியவில்லை அவனால். அவன் அவளிடம் பேச வரும் போதெல்லாம், அவனைப் பாராமல் திருப்பிக் கொண்டு மற்றவர்களுடன் போய் நின்று கொண்டாள்.
யாருக்கும் கண்ணுக்கு தெரியாத, கவனத்தில் வராத ஊடல் இருவரிடையே நடந்து கொண்டிருந்தது. முதன் முதலாக கணவனுடன் தனியாக வரமுடியவில்லையே என அவளுக்கும், மனைவியுடன் முதன் முறை வெளியே வந்தும் ,தன்னுடன் சந்தோஷமாக இல்லாமல் முறைத்துக் கொண்டிருப்பவளை எண்ணி அவனுக்கும் ஊடலானது தான் மிச்சம்.
மெரினாவிலிருந்து வரும் வழியிலேயே அனைவரையும் டின்னர்க்காக ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தான் சங்கர். சைவம், அசைவம், என இருவகை உணவுகளும் இருந்தது அங்கே.
அது பப்பே என்பதால், சூப், ஸ்டாட்டர் என சங்கரே எடுத்து வந்து எல்லாருக்கும் பரிமாறினான். பின் அவர்களையே அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த உணவுகளை பிளேட்டில் சாப்பிட எடுத்துக் கொடுத்தான்.
ஜமுனா கலியமூர்த்தி இருவரும் இதையெல்லாம் ஆச்சர்யமாக வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இதுவரை இது மாதிரி ஸ்டார் ஹோட்டல்களுக்கு எல்லாம் வந்ததில்லை. அதுவும் பப்பே முறையில், இத்தனை ஐட்டங்கள் வைத்து, ம்கூம். அதிசயமாக பார்த்துகொண்டிருந்தனர் இவற்றையெல்லாம்.
எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்தவற்றை எடுத்து வந்து, சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
மனைவியின் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மதுவுடைய கண்கள், ஹோட்டலை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.
பூரணிக்கு கடுப்பானது, “இவனை……………… இங்க பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்திருக்காளேன்னு திரும்பி பார்க்காம, இங்கயும் தொழில் பண்ற ஆர்வத்துல, ஹோட்டல சுத்தி நோட்டம் விட்டுட்டு இருக்கானே”ன்னு, பல்லைக் கடித்தாள்.
சாப்பிட்டு முடித்து டெஸர்ட் எடுத்து வந்து கொடுத்தான் சங்கர் எல்லோருக்கும். கேக், ஜஸ்கிரீம் என அவளுக்கு பிடித்ததை எல்லாம் விட்டு வைக்காமல் ருசி பார்த்து கொண்டிருந்தாள் ஒருத்தி.
சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு சென்றதும் முட்லூருக்கு கிளம்பியிருந்தனர் எல்லோரும். இன்னும் ஒரு நாள் தங்கி செல்லலாம் என பானு சொல்லியும் வேலை இருக்கிறது என மது கிளம்பிவிட்டான்.
கலியமூர்த்தியும் கடையை திறக்க வேண்டும் என அவனுடனேயே கிளம்பியிருந்தார். அவர்களுடனேயே ராகவனும், ஜமுனாவும் கிளம்பி விட்டனர்.
சரசு மட்டும் அங்கேயே தங்கி விட்டார். அடுத்த வாரம் வந்து அழைத்துச் செல்வதாக ராகவன் கூறி விட்டு கிளம்பியிருந்தார். புதுமணத் தம்பதியர்களுக்கு புதுத் துணிமணி எடுத்து கொடுத்து, அத்துடன் இருவருக்கும் ஒரே மாதிரி விலையுயர்ந்த வாட்ச் வாங்கி பரிசாக கொடுத்திருந்தனர் பானுவும் சங்கரும்.
ஜமுனாவுக்கு மருமகன் மகளை நன்றாக வைத்திருப்பதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தார். மகளும் அவள் ஆசைப்பட்டபடியே படித்து முடித்து வேலைக்கு செல்வது, அதுவும் அரசாங்க உத்யோகம் பார்ப்பது அவருக்கு பெருமையாக இருந்தது.
முட்லூருக்கு அவர்கள் வந்து சேரும்போது காலை ஐந்து மணி ஆகி விட்டது. மது இவர்களை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு ராகவனைக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இன்னோவாவை அங்கேயே பார்க் செய்து விட்டு, அவன் அங்கே விட்டு வைத்திருந்த பைக்கை எடுத்துக் கொண்டு நேராக ஓட்டலுக்கு சென்று விட்டான்.
மதுசூதனன் அன்று வேலையை எல்லாம் முடித்து பகல் மூன்று மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து, தூங்கி எழுந்து, திரும்ப ஓட்டலுக்கு சென்றிருந்தான். பூரணி வேலைக்கு சென்றிருந்ததால் அவன் வீட்டிற்கு வந்த நேரத்தில், அவள் வீட்டில் இல்லை.
மதிய சாப்பாடு கொண்டு வராததால் வெளியே கடையில் வாங்கி வரச் சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பூர்ணி.
நேயா அவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
“ஒட்டல் முதலாளியம்மா நீ……. உங்க ஓட்டல்ல இருந்து எடுத்து வரச் சொல்லாம, வெளி ஓட்டல்ல இருந்து வாங்கி சாப்பிடறயே……..” என அவளை கேலி செய்து கொண்டிருந்தாள்.
பூர்ணி, “சும்மா இருடி. நீ வேற கடுப்பேத்தாம…”
அவள் முகத்தைப் பார்த்த நேயா……….. “ஏன்? என்னாச்சு…….? இவ்வளவு டென்ஷனாகுற………….”
“ம்ப்ச், ஒன்னுமில்ல………”
“ஒன்னுமில்லாததுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்? என்னாச்சு சொல்லு….?”
அவளுக்கும் யாரிடமாவது தனது ஆதங்கத்தைப் பகிர்ந்தால் தேவலையாக இருக்கும் என எண்ணி, நேயாவிடம் நேற்று நடந்ததைக் கூறினாள்.
“ஓஹ்……. இதானா…….., அதுக்கு ஏன்டி, இவ்வளவு டென்ஷனாகுற…………….?”
“உனக்கு சாதாரணமா இருக்கா……, என் இடத்துல இருந்து பார்த்தா…. தெரியும். கல்யாணம் ஆயிருக்குன்னுதான் பேரு, இதுவரைக்கும் எங்கயும் இரண்டு பேரும் சேர்ந்து போனது இல்ல. சரி இப்பவாது தனியா போலாம்னு பார்த்தா…. ஒரு கும்பலே எங்களோட….”
சரி. அதாவது பரவாயில்லை. அங்க போயிட்டு பெரியம்மா வீட்டுக்கு போகாம வந்தா நல்லாவா இருக்கும். அவங்களுக்கு தெரிஞ்சா கோச்சுக்க மாட்டாங்களா………..? நாங்க சென்னைக்கு வந்துட்டு அவங்க வீட்டுக்கு வரலன்னு தெரிஞ்சா, எவ்வளவு வருத்தப் படுவாங்க தெரியுமா…………..?
இவருக்கு இவர் தங்கச்சி முக்கியம்ன்ற மாதிரி, எனக்கு எங்க பெரியம்மாவும் முக்கியம்தான, அவங்க இல்லனா இன்னைக்கு நான் இல்ல……. என்றாள் கண்கள் கலங்கி……..
“ஹேய்…………… இதுக்கு போய் அழுவியா……….. ப்ரியா விடு, போகனும்தான்……… என்ன பண்றது…?” சுச்சுவேஷன் அப்படி, உன் புருஷனுக்கு வேலை முக்கியம் ஒரே நாள்ல திரும்பி வரனும். அதான் போக முடியல, “நெக்ஸ்ட் டைம் இரண்டு நாள் தங்கற மாதிரி போங்க, இதுக்கு ஏன் ஃபீல் பண்ற….”
“யாரு? அவர் இரண்டு நாள் தங்கிடுவாரு, சான்சே இல்ல. எப்பப்பாரு வேலை வேலை அந்த ஓட்டல் தான் அவருக்கு எல்லாம். என்னோட பீலிங்க்ஸே புரியல அவருக்கு”. வேலை செய்ய வேண்டியதுதான், அதுக்காக “குடும்பத்துக்கு கூட நேரம் ஒதுக்காம, அப்படி என்ன வேலையோ….?” எனக்கு சில சமயம் வெறுப்பாகுது.
“ஹேய்… என்ன பேச்சு இது. உனக்கு கல்யாணம் ஆகி இன்னும் இரண்டு மாசம் கூட ஆகல. அதுக்குள்ளாற இப்படி பேசுவியா……..?”
“அவரோட பொசிஷன்ல இருந்து யோசி பூர்ணி. நம்மள மாதிரி அடுத்தவங்க கிட்ட வேலை செய்யல உன்னோட புருஷன். நினைச்சப்ப லீவு போட்டுட்டு போறதுக்கு. அவரோட சொந்த தொழில் அது. கொஞ்சம் பிசகுனா கூட நஷ்டம் வர சான்ஸ் இருக்கு. அதுவும் இப்பதான் ஆரம்பிச்சிருக்காருன்னு சொன்ன……….. அதையும் நீ யோசிக்கனும் இல்ல”.
ம்ப்ச், “நீ என்ன சமாதானம் சொன்னாலும், என்னால ஏத்துக்க முடியல. பெரியம்மாவ பார்த்துட்டு வந்திருந்தா…………….. நிம்மதியா இருந்திருக்கும். அவங்களுக்கு நாங்க சென்னை வந்தது தெரிஞ்சா… என்ன சொல்வாங்களோன்னு மனசு அடிச்சுக்குது. அக்காக்கு தெரிஞ்சாலும் ஃபீல் பண்ணுவாங்க…….”
சரி விடு, அவங்களுக்கு தெரியறதுக்கு முன்னாடி நீயே போன் போட்டு சொல்லி, உன்னோட சுச்சுவேஷன சொல்லிடு, அவங்களும் புரிஞ்சுப்பாங்க…….
சரி என தலையசைத்தாள்.
சரி உன் தீஸிஸ் எந்த லெவல்ல இருக்கு என அவளது படிப்பைப் பற்றி பேச ஆரம்பித்தனர் இருவரும்.
மதுசூதனன் அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்திருந்தான். கணவன் மேல் இருப்ப கடுப்பில், பூர்ணி அவனைக் கண்டு கொள்ளாமல், தனது வேலைகளை முடித்து விட்டு, போய் படுத்துவிட்டாள்.
தொடரும்.
error: Content is protected !!