Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 4

மாதவி, பூர்ணி எழுந்திரு, கண்ட நாய் வந்து பேசிட்டுப் போகுதுன்னு இப்படி சோர்ந்து உட்கார்ந்துப்பியா, போய் முகம் கழுவிட்டு வாடா, காப்பி தரேன் என பூர்ணியை எழுப்பி அனுப்பினாள்.

எப்படியாவது இவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைப் பார்த்து திருமணத்தை முடித்துவிட வேண்டும் என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு கிட்சனுக்கு காப்பி போட சென்றாள்.

பானு தன் கழுத்தில் இருந்த தாலியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.  நேற்று இந்நேரம் கூட நினைத்துப் பார்த்திருக்க வில்லை, தனக்கு இன்று கல்யாணம் நடக்கும் என.

அறையின் வெளியே சத்தமாக பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது எதுவும் அவள் மண்டையில் பதியவில்லை.  அவளது அம்மாவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.  தனது எதிர்காலமே வெறுமையானது போன்று கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.



Advertisement

கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், சரசின் குரலில் நிகழ்வுக்கு வந்து அவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.

சரசு, ராஜாத்தி கொஞ்சம் வெளிய வாடா என அவளை கைப்பிடித்து அறைக்கு வெளியே அழைத்துச் சென்றவர், சங்கரின் பக்கத்தில் நிற்க வைத்தார்.

சரசின் குடும்பம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம்.  கணவருடன் பிறந்தவர்கள், அவருடன் பிறந்தவர்கள், அவர்களின் பிள்ளைகள் என்று கணக்கில் எடுத்தாலே நூற்றுக்கு மேல் வரும்.  அவர்கள் வீட்டில் விசேஷம் என்றால்…, அவர்களின் நெருங்கிய உறவுகளே போதும் என்று நினைக்கும் அளவு,  நிறைய ஜனத்தொகை அடங்கிய குடும்பம்.

Advertisement

பானுவும் சங்கரும் சொந்த பந்தங்களின் கால்களில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விபூதிக் குங்குமம் பூசிக் கொண்டனர்.  அத்தை மாமா, சித்தப்பா சித்தி, பெரியப்பா பெரியம்மா, தாத்தா பாட்டி என ஓவ்வொரு ஜோடிகளின் கால்களிலும் தனித்தனியாக விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

Advertisement

பானு சரசு சொல்வதை எல்லாம் பொம்மை போல செய்து கொண்டிருந்தாள்.  யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.  அவளது தாய் தந்தையும், மதுசூதனனும் அங்கே தான் இருந்தனர்.  ஆனால் யாரையும் நிமிர்ந்து பார்க்கவோ பேசவோ அவளுக்கு விருப்பமில்லை.

ஜமுனா அவளையேதான் பார்த்திருந்தார்.  மகளின் முகத்தைப் பார்க்க பார்க்க வயிறெல்லாம் கலங்கியது அவருக்கு.  அவசரப்பட்டு விட்டோமோ என பயந்தார் மனதில்.  வேண்டாம் என மறுத்தவளை வற்புறுத்தி திருமணம் செய்யும்போது இருந்த தைரியம், இப்பொழுது அறவே வடிந்திருந்தது அவரிடம்.  விட்டால் அழுதுவிடுபவர் போல கலங்கி நின்றிருந்தார்.

இவ்வளவு நேரம் மகன் மதுசூதனன் அவரைக் கோவத்தால் குத்திக் குதறியிருந்தான் வார்த்தைகளால்.  சாதாரணமாக நினைத்திருந்தவர் மகனது கோவத்தைக் கண்டு பயந்து விட்டார் உள்ளுக்குள்.  அவனுக்கு தெரியாமலேயே, அவன் இல்லாமலேயே கூடப் பிறந்த தங்கையின் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

Advertisement

யாருக்கோ பாவப்பட்டு, பரிதாபப்பட்டு பெற்ற மகளின் மனதைப் பார்க்கவில்லையோ என பரிதவித்து நின்றிருந்தார் ஜமுனா அங்கே.  கலியமூர்த்திக்கும் எப்படி இந்த திருமணத்தை எடுத்துக் கொள்வது என தெரியாமல் நின்றிருந்தார்.

பொருளாதார அடிப்படையில் பார்த்தால் பானு வீட்டை விட பல மடங்கு சங்கர் வீட்டினர் உயர்ந்தவர்கள்.  மாப்பிள்ளை நன்கு படித்திருக்கிறான்.  அதுவும் மேற்படிப்புக்கு வெளிநாடெல்லாம்…..  சென்று படித்து வந்துள்ளான்.

வெளிநாட்டில் படித்துவிட்டு அங்கேயே இரண்டு வருடம் வேலைப் பார்த்தவன், அவனது அன்னையின் நச்சரிப்பால்……  இந்தியாவுக்கே திரும்பி வந்து, இங்கே வேலைப் பார்க்கிறான்.

சங்கரின் திருமணத்திற்காகத் தான் ஜமுனா, கலியமூர்த்தி, பானு மூவரும் கடலூருக்கு கிளம்பி சென்றிருந்தனர்.  திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன் எல்லாம் சுமூகமாக முடிந்து எல்லோரும் சென்று படுத்துவிட்டனர்.

மறுநாள் முகூர்த்தத்திற்கு முன்னே மணப்பெண்ணைக் காணோம், என மண்டபம் முழுக்க ஒரே களேபரம்.   இவர்களுக்கும் ஒன்றும் புரியாமல், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

திருமணத்தில் திடீரென்று மணப்பெண்ணைக் காணோம் என்பதால், அந்த இடமே போர்களமாக மாறியிருந்தது.  மணப்பெண்ணின் வீட்டிற்கும் மாப்பிள்ளை வீட்டிற்கும் இடையே பெரும் சச்சரவு ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றிருந்தது.

அங்கிருந்த பெரியவர்கள் தான் சூழ்நிலை புரிந்து இருவீட்டாருக்கும் இடையில் மத்தியஸ்தம் பண்ணி பிரித்துவிட்டனர்.  மணப்பெண் ஏற்கனவே இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று அவர்களுடைய வீட்டாரிடம் கூறியிருந்திருக்கிறாள்.  அது தற்போது மாப்பிள்ளை வீட்டிற்கு தெரியவந்து, அடிதடி பிரச்சினை அளவுக்கு சென்றிருந்தது.

மணப்பெண்ணே தன் கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தாள்.  தான்…., தன் சொந்த மாமன் மகனை விரும்புவதாகவும்,  அதை அவள் வீட்டில் சொல்லியும் அவர்களுக்கு இடையே இருந்த குடும்பப் பகை காரணமாக அவளது விருப்பத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் எழுதி வைத்திருந்தாள்.

இதை அவள் முன்னமே மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறி திருமணத்தை நிறுத்தினால், அவள் விரும்பிய மாமன் மகனை கொன்று விடுவோம்.., என மிரட்டிதான் இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கியிருந்தனர்.

அவளும் இரவு ரிசப்ஷன் வரையிலும் கூட இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள மனதளவில் போராடியிருந்தாள்.  நேற்று நடந்த ரிசப்ஷனிலேயே அவளது மனநிலை அவளுக்கு தெரிந்துவிட்டிருந்தது.  தன்னால் தனது மாமனை மறந்து இன்னொருவருடன் வாழ இயலாது என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

அதுதான்……. தோழி ஒருத்தியின் உதவியுடன் தன் கைப்பட தான் அங்கிருந்து செல்வதற்கான காரணத்தை எழுதி வைத்துவிட்டு….,  யாருக்கும் தெரியாமல் சென்றிருந்தாள்.

இதை பெண் வீட்டார் தங்களிடம் மறைத்ததையும், இப்படி திருமணம் வரை கொண்டு வந்து தங்களை அசிங்கப்படுத்தியதையும் காரணம் காட்டி மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டினரிடம் சண்டைப் போட்டனர்.  இறுதியில் பெண் வீட்டார் தங்களது தவறினை உணர்ந்து இவர்களிடம் மன்னிப்பு கேட்டு சென்றனர்.

இதையெல்லாம் பார்த்து சங்கர் திக்பிரமை பிடித்து போய் அமர்ந்திருந்தான்.  அவனுக்கு அவனை நினைத்தே அவமானமாக இருந்தது.  எப்படி தன்னை ஒருத்தி திருமண மேடை வரை கொண்டு வந்து நிறுத்தி ஏமாற்றி சென்றிருக்கிறாள் என அசிங்கமாக இருந்தது.

தனக்கு ஈக்குவலாக படித்திருக்கிறாள், பார்க்க அழகாக இருக்கிறாள், வசதியிருக்கிறது என அனைத்தையும் பார்த்தவன், பெண்ணின் மனதை அறியவில்லையே.  அவள் சொல்லாமல் அவள் மனதை புகுந்தா பார்க்க முடியும்.

அவனும் பரிசம் போட்டதற்குப் பிறகு அவளுடைய போனுக்கு பல தடவை கால் செய்தான்.  ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்லி அவனிடம் பேசுவதை தவிர்த்திருந்தாள்.  அவனது வேலைகளுக்கு இடையில், இதையெல்லாம் கருத்தில் பதியவில்லை.  சரி பேச வெட்கப்படுகிறாள் போல கல்யாணத்திற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அசால்ட்டாக விட்டிருந்தான்.

ஆனால் இப்படி அவள் மனதில் வேறொருவன் இருப்பான் என அவனுக்கு என்ன ஜோசியமா தெரியும்?  யாரையும் எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், தலையில் இரு கைகளையும் வைத்து அப்படியே குனிந்து உட்கார்ந்திருந்தான்.

அவனது அன்னை சரசு அவனிடம் வந்து பானுவைப் பற்றி சொல்லி திருமணத்திற்காக பேசும் பொழுது கூட எதையும் யோசிக்கும் திராணியற்று, பொம்மைப் போல் தாய் சொல்லியதை எல்லாம் செய்திருந்தான்.  அவன் மனதில் அவனது திருமண வாழ்க்கையைப் பற்றி எண்ணி இருந்த கனவு வேறு.  இங்கு நடந்து முடிந்திருந்த திருமணம் வேறு.  இரண்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.  ஆனால் இனி அதையெல்லாம் நினைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை.

அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திராத எல்லாம் அவன் வாழ்வில் நடந்திருந்தது.  இன்னும் அந்த அதிர்ச்சியின் தாக்கத்திலிருந்தே அவன் வெளி வந்தப் பாடில்லை.

பானுவின் நிலமையோ அதைவிட மோசமாக இருந்தது.  தனக்கென ஒரு வட்டத்தைப் போட்டு அதிலேயே சுற்றி பறந்து கொண்டிருந்தவளை, திடீரென சிறகை முறித்து இழுத்து வந்து அமர வைத்து தாலி கட்டியது போலிருந்தது அவளுக்கு.

அன்னை ஜமுனாவும், சரசுவும் கைகூப்பி கெஞ்சி, அவளை காலில் விழாத குறையாக அவளிடம் பேசி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்திருந்தனர்.  சரசாவது அவருடைய மகன் கல்யாணம் நிற்காமல் நடக்க வேண்டும் என்ற பரிதவிப்பில், கட்டாயத்தில், எல்லாம் செய்கிறார் என நினைக்கலாம்.

இந்த அம்மாவுக்கு என்ன வந்தது…..?  அவங்களுக்கு என் மனசு புரியலையா…..?  என்னைவிட இந்த சங்கர் முக்கியமா போயிட்டானா……?  நான் எவ்வளவு கெஞ்சினேன்.    எப்படியெல்லாம் எடுத்து புரியறமாதிரி சொன்னேன்.   எதையும் காதில வாங்காம இந்த கல்யாணத்தை நடத்தி வைச்சிட்டாங்களே என மனதிலேயே குமைந்துக் கொண்டிருந்தாள்.

அவளது அண்ணன் மதுசூதனனுக்கும் அதே மனநிலைமைதான்.  எப்படி இந்த அம்மா என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம கல்யாணத்தை பண்ணி முடிச்சுட்டு சொல்றாங்க, என ஆத்திரம் வந்திருந்தது.

சரசுதான் மதுசூதனனிடம் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார் ஜமுனாவிடம்.  மதுசூதனனுக்குத் தெரிந்தால் அவன் நிச்சயம் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளமாட்டான் என்பது அவருக்கு தெரியும்.  அதனால் தான் ஜமுனாவிடம் சொல்லவேண்டாம்.    திருமணம் முடிந்து சொல்லிக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தார்.

ஜமுனாவும் அந்த நேரக் குழப்பத்தில் மதுசூதனனிடம் சொல்லாதது பெரியதாக தெரியவில்லை.  திருமணம் முடிந்து நேரில் அவனது உக்கிரத்தைப் பார்த்த பின்புதான் மகனை எண்ணி நெஞ்சில் நடுக்கமே பிறந்திருந்தது.

நாம கல்யாணத்துக்கு போனோமா வந்தோமான்னு இருக்காம, என்ன வேலை பார்த்து வச்சிருக்கீங்க?  அவங்க கல்யாணம் நின்னுப் போச்சுன்னா…., அது அவங்களோட பிரச்சினை.  அதை யாரு உங்க தலை மேல ஏத்திக்க சொன்னது?

எத்தனைப் பேரு கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க?அவங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?  அங்கிருந்தவங்கள்ள யாருக்குமே பொண்ணு இல்லயா…..?  இல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு தான் வேற வழியில்லையா…..?

எதை நினைச்சி, நீங்களே முடிவு பண்ணி கல்யாணத்தை முடிச்சீங்க.  பொண்ணைக் கட்டி குடுத்துட்டா இதோட முடிஞ்சிடுமா……?  நாளைக்கு எதுவும் நாம அவளுக்கு நல்லது கெட்டதுக்கு செய்ய வேணாமா…..? அதுக்கு போக வேணாமா…….?

முதல்ல கட்டிக்கப்போறவ மனசைப் பார்த்தீங்களா…..?  அவள் சம்மதம் கேட்டீங்களா…….? எங்க நீங்க தான் அவளை வாய திறந்து பேசவே விடலையே.  அதையும் இதையும் சென்டிமென்டா பேசி, அவள் மூளையை ஆஃப் பண்ணிட்டீங்களே.

இதுல சரசு அத்தையோட கூட்டு சேர்ந்துகிட்டு…, எனக்கே சொல்லாம கூட கல்யாணத்தை முடிச்சாச்சு.  நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சா கூட எட்டாதும்மா…….  இது இதோட முடியற உறவாம்மா…….?  காலத்துக்கும் அவள் பின்னாடி நாம பிறந்த வீடுன்னு நிக்க வேணாமா ம்மா…..

நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி தானம்மா பார்த்து செய்யனும்.  இப்ப நாமளே அவளை நம்ம கிட்டயிருந்து தள்ளி வச்சமாதிரி பண்ணிட்டீங்களே ம்மா.  இன்னைக்கு அவங்க தேவைக்கு, அவசரத்துக்கு, நாலு பேர் எதிர்ல சபையில அவமானப்படக் கூடாது, பையன் அசிங்கப்பட்டு நிக்கக் கூடாதுன்னு, யோசிக்காம கல்யாணம் பண்ணிட்டாங்க.

ஆனால், பின்னாடி யோசிச்சு பார்த்தீங்களா……?   நம்மால அவங்க அளவுக்கு எல்லா விதத்திலயும் சீர் செய்ய முடியுமா….?  இல்ல சரிசமமா…. நிற்கதான் முடியுமா…..?  இப்படி ஒன்னு ஒன்னுத்துக்கும் பார்த்து பார்த்து யோசிச்சு மருகி நின்னுட்டு இருக்க முடியுமா……?  அப்படியிருந்தா அவளுக்கு புகுந்த வீட்டுல மதிப்பிருக்குமா…..?  மரியாதை இருக்குமா…….?  எத்தனை நாள்……, நம்மால நம்ம பொண்ணை நெருங்காம விலகியே நிக்க முடியும்?  ஏன், இதையெல்லாம் நீங்க யோசிக்கவேயில்லை……..?

அவங்களுக்காக பாவப்பட்டேன், பரிதாபப்பட்டேன்னா……. இது என்ன பொருளா….., இல்ல வேற ஏதாவதா……..?   அவளோட வாழ்க்கை ம்மா……. இப்படி யோசிக்காம அவசரப்பட்டுட்டீங்களே என பொரிந்து தள்ளியிருந்தான் ஜமுனாவிடத்தில்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, அவனுக்கு அவன் தங்கையை எப்படி கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் இல்லையா……?  பணத்தை வைத்து மனிதர்களை எடை போட முடியாதே…..?

பானுவையே தான் பார்த்திருந்தான்.  அவளது கண்கணில் இருந்து எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை.  சங்கரின் நிலைமையோ வேறு மாதிரி இருந்தது.  ஆசிர்வாதம் வாங்கக் கூட பானுவின் அருகில் நிற்க அவனுக்கு விருப்பமில்லை.  அவனது முகத்திலேயே ஒட்டாதத் தன்மை தெரிந்தது.

இதைப் பார்த்ததும் மதுசூதனனுக்கு உள்ளம் கொதித்தது.  இவனுக்கு என் தங்கச்சி பக்கத்தில நிற்கறதுக்கு கூட பிடிக்கலை……….., இப்படிப்பட்டவனை தங்கச்சிக்கு கட்டிவச்சிட்டாங்களே என ஆத்திரம் வந்தது.  அது எல்லாம் அப்படியே ஜமுனாவின் மீது திரும்பியது.

எங்கே அவர் மகனைப் பார்த்தால் தானே, கண்களால் அவனைப் பார்க்காவிட்டாலும் அவனை அவரால் உணர முடிந்தது.  ஆதலால் அவன் இருந்த பக்கம் பார்வையைத் திருப்பாமலே வேலை இருப்பது போல இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.

ஒருவழியாக பெரியவர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடிந்தவுடன் பானுவை சென்று ஓய்வெடுக்க சொன்னார் சரசு.  அவருக்கும் மதுசூதனனைப் பற்றி நன்கு தெரியுமாதலால், அவனை வரவேற்று உபசரித்தவர், அவன் பேச முயலும் போதெல்லாம் அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தார்.

அந்த நேர அதிர்ச்சியில் வீட்டினரிடமும், மகன் சங்கரிடமும் ஒப்புதல் பெற்று திருமணத்தை முடித்திருந்தார்.  இனிமே என்ன நடக்குமோ…, என அவருக்கும் உள்ளூர உதைப்பு இருந்தது.  ஒரு பக்கம் தனது வீட்டினர் என்றால், மறுபக்கம் தான் பெற்ற மகன்.  அவனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என நினைத்தே அவருக்கு காய்ச்சல் வந்தது.

அவனுடைய அப்பா ராகவனைப் போல அவனும் பிடிவாதக்காரன்.  தகுதி, கௌரவம், அந்தஸ்து, தராதரம் இதில் எல்லாம் ராகவனும் சங்கரும்  ஒன்றுபோல சேர்த்தி என்று சொல்லலாம்.    அதை நினைத்தே அவருக்கு மனமெல்லாம் கலங்கியது.  எப்படியோ தடைப்பட்ட திருமணத்தை நிற்காமல் நடத்திய பூரிப்பில்…., இதையெல்லாம் நினையாமல் சற்று தள்ளி வைத்திருந்தார்.

நாட்களும் வேகமாக ஓடியது.  பானுவுக்கு கடைசி வருட எக்ஸாம் இருப்பதால், அவளை இங்கேயே விட்டுவிட்டு சங்கர் சென்னைக்கு கிளம்பிச் சென்றிருந்தான்.

கல்யாணமான இந்த ஒரு வாரத்தில் அவனை அவள் பார்த்ததை விரல் விட்டு எண்ணி விடலாம்.  பானுவும் அதற்கெல்லாம் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.  கல்யாணமான தினத்தில் இருந்து சங்கரின் வீட்டில் தனிமையில்தான் இருந்தாள்.

சாப்பிடுவதற்கு மட்டும் வெளியே வருவாள்.  சங்கர் வேலைக்கு போகும்போது கூட, சரசு அவனிடம் பானுவிடம் சொல்லிவிட்டு போ என்று எடுத்துச் சொல்லியும், அதனைக் காதில் வாங்காமல், பானுவிடம் சொல்லாமல் கூடச் சென்றிருந்தான்.

அவன் சென்னைக்குச் சென்ற அடுத்த நாளே, சரசுவிடம் படிப்பைக் காரணம் காட்டி அங்கிருந்து தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.

இன்னும் பரீட்சைக்கு சில தினங்களே உள்ள நிலையில் படிப்பில் கவனம் வைக்க முடியாமல் படுத்துக் கொண்டேயிருந்தாள்.

அது காலைவேளை, மதுசூதனன் கடையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்தான். ஜமுனா வடைக்கு அறைத்து வைத்திருந்த மாவை எடுத்துச் செல்வதற்காக, வீட்டிற்கு வந்திருந்தான்.  பானுவைத் தேடினவன், அவள் எழாமல் படுத்திருப்பதைப் பார்த்தவனுக்கு, தங்கையை எண்ணி வருத்தமாக இருந்தது.

எப்படி இருப்பாள்…… கல கலவென்று?  எப்போதும் கல்மிஷம் இல்லாமல் சிரித்து பேசி, ஜமுனாவுடன் வாயடித்துக் கொண்டிருப்பாள்.  அவள் வீட்டில் இருந்தாளே,  வீடே உயிர்ப்பாக இருக்கும்.  அவளுக்கு திருமணமான நாளிலிருந்து சிரிப்பைத் தொலைத்து, எதையோ இழந்ததுபோல சோக சித்திரமாக இருப்பவளை, காண சகிக்கவில்லை.

எப்போதும் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.  சாப்பாடு கூட அம்மா, அண்ணன் என யாராவது வற்புறுத்தி உண்ண வைத்தால் தான் உண்டு.  உடலளவிலும் மனதினுலும், உயிர்ப்பே இல்லாமல் சோர்ந்திருந்தாள்.

மதுசூதனன், பானும்மா……….  இன்னும் எழலையாடா, அம்மா தோட்டத்துல வேலையா…… இருக்காங்க போல, எனக்குப் பசிக்குதும்மா…… ஏதாவது இருக்கா….. சாப்பிட……?

பானுவுக்கு அண்ணன் என்றால் அத்தனைப் பாசம்.  அவனுக்கும் தங்கையின் மீது கொள்ளை அன்பு.  ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளமாட்டான்.  பானுக்கு அப்படியெல்லாம் இல்லை.  எப்பவும், எதற்கும் அண்ணன்தான் அவளுக்கு.

மதுசூதனன் கேட்டதும் எழுந்தவள் தலை முடியைக் கொண்டையிட்டு, பின்பக்கம் இருந்த பாத்ரூமிற்கு சென்றாள்.  தன்னை சுத்தம் செய்து கொண்டு வருவதற்காக.

மதுவிற்கு பசியில்லை என்றாலும் தங்கைக்காக வேண்டி அவளை எழுப்பியிருந்தான்.  தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், என்ன இருக்கிறது சாப்பிடுவதற்கு எனப் பார்த்து…., மதுவுக்கு எடுத்து வைத்தாள்.

மது, நீயும் வாடா சேர்ந்து சாப்பிடலாம்……..

அவளுக்கும் பசி இருந்ததால், எதுவும் மறுப்பு சொல்லாமல் அவளுக்கும் தட்டு எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தாள்.

மது, எப்ப பரீட்சை……..?

பானு, வர திங்கள் கிழமை ……….ண்ணே.

மது, ஹ்ம்ம்…….., படிடா……. கண்டதையும் நினைச்சி படிப்பை கோட்டை விட்டுடப் போற……

பானு, சரி என தலையசைத்தாள்.  மது எப்போதும் அவளது படிப்பு விஷயத்தில் இதுவரை தலையிட்டதில்லை.  படி என்று கூட சொல்லமாட்டான்.  அக்கறையின்மையால் இல்லை.  தங்கை பொறுப்பானவள் என்ற நம்பிக்கை, அவளும் அப்படிப்பட்டவள்தான்.

ஆஹா ஓஹோ என்று படிக்கவில்லை என்றாலும், படிப்பில் மந்தம் எல்லாம் இல்லை.  ஒரளவு நன்றாகவே படிப்பாள்.  அவளுக்கு தான் படித்து…, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று மிகுந்த ஆசை.

அதைத்தான் எப்போதும் வீட்டிலே சொல்லிக் கொண்டேயிருப்பாள்.  ‘’நான் படிச்சு முடிச்சு இரண்டு முனு வருஷமாவது வேலைக்குப் போகனும் அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் எல்லாம் என கூறிக் கொண்டேயிருப்பாள்.  இப்பொழுது அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்குமோ என உள்ளத்தில் மருகிக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்தவன் வடைக்கான மாவை எடுத்துக் கொண்டு தங்கையிடம் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டான்.  தோட்டத்தில் மாட்டுக் கொட்டிலை சுத்தம் செய்து முடித்து உள்ளே வந்த ஜமுனா, பானு உண்டு கொண்டிருப்பதைப் பார்த்ததும், ஆசுவாசமானது மனது.  திரும்பி வடை மாவு அறைத்து வைத்திருந்த வாளியைப் பார்த்தார்.  அது அந்த இடத்தில் இல்லை என்றதும், மதுசூதனன் வந்து சென்றதைத் தெரிந்து கொண்டவர், மதிய சமையலை கவனிப்பதற்காக உள்ளே கிட்சனுக்கு சென்றார்.

பானுவும் சாப்பிட்டு முடித்து, எல்லாம் எடுத்து ஒதுங்க வைத்து, கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள் படிப்பதற்காக.  மகள் கையில் புத்தகத்துடன் செல்வதைப் பார்த்ததும் தான் ஜமுனாவிற்கு உயிரே வந்தது.

எங்கே நடந்த திடீர் கல்யாணத்தில் படிப்பை பாதியில் விட்டுவிடுவாளோ என பயந்து இருந்தவருக்கு,  அவள் படிப்பதற்காக புத்தகத்தை கையில் எடுத்ததும் தான் நிம்மதியானது.

பானுக்கு எப்போதும் தோட்டத்தில் உள்ள பூவரச மர நிழலில் கீழே கோணி போட்டு காத்தாட உட்கார்ந்து படிப்பதை தான் விரும்புவாள்.  அது ராசியான இடம் என்ற சென்டிமென்ட் அவளது மனதில்.   அதனால் பரீட்சை என்றாலே அங்குதான் அவள் விஜயம் இருக்கும்.

வீட்டில் எல்லோரும் அவளைத் தெரிந்து இருந்ததால், அவள் அங்கே உட்கார்ந்து படிக்கும் போது எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள்.  சில சமயம் தண்ணீர், காப்பி என ஜமுனா அவள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருவார்.

பானு தனது எல்லா பிரச்சனைகளையும் மனதின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, படிப்பதில் மும்முரமானாள்.

இதோ பரீட்சையும் முடிந்து சங்கரையும் பானுவையும் தனிக் குடித்தனம் வைப்பதற்காக அவளை அழைத்துக் கொண்டு இரு வீட்டு ஆட்களும் சென்னைக்கு வந்திருந்தனர்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!