ராமமூர்த்தியின் இறுதிச்சடங்கிற்காக ராஜீவன் ஊருக்குத் திரும்பி வந்ததைப் பார்த்த பிரியாவின் மனதில் மீண்டும் பழைய ஆசைகள் எல்லாம் துளிர்விட ஆரம்பித்தன.
‘என்னைத் தவிர வேற யாரையும் அவனால நினைக்க முடியாது…’ என்று இத்தனை நாட்களாகத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு, ராஜீவனை நேரில் பார்த்ததும் அந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது.
அவனை ரஞ்சிதாவிற்கு விட்டுக் கொடுக்க அவள் மனம் கொஞ்சமும் தயாராக இல்லை.அதன் விளைவாகத்தான்… கடந்த இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாமல் உண்ணாநோன்பு இருக்க ஆரம்பித்திருந்தாள்.
Advertisement
ஒருபுறம் மகளின் பிடிவாதம்…
மறுபுறம் அவளுக்காக மாப்பிள்ளை என ஊர் முழுக்க தேடி சலித்துப் போனான் கந்தசாமி.
“இரண்டு வருஷமா ஊரு முழுக்க மாப்பிள்ளை தேடுறேன்… ஆனா, என் பொண்ணு யாரையுமே பிடிக்கலைன்னு சொல்லிடுறா!”என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.
ஒரு மாப்பிள்ளையைப் பார்த்தால் மூன்று மாதங்கள் அவனுடன் பேசுவாள். அவனுடைய குடும்பம், வேலை, பழக்கம் என்று எல்லாவற்றையும் தெரிந்து கொள்வாள். பின்னர்…“எனக்குப் பிடிக்கலை…”என்று ஒரே வார்த்தையில் அந்தத் தொடர்பை முடித்துவிடுவாள் பிரியா.
Advertisement
இப்படி இரண்டு வருடங்களாக மாப்பிள்ளை தேடி சலித்துவிட்டது. ஆனால், பிரியாவின் மனதில் இருந்த ராஜீவன் மட்டும் நிலையாக இருந்தான்.
Advertisement
அன்று மாலை மகள் சாப்பிடாமல் படுத்திருப்பதைப் பார்த்த சரோஜாவால் பொறுக்க முடியவில்லை.
ராஜீவன் மீது இருந்த கோபத்தை வார்த்தைகளாகக் கொட்ட ஆரம்பித்தாள்.
“என் மகள் அவனை நினைச்சு தினமும் இங்கே வருத்தப்பட்டுட்டு இருக்கா… ஆனா, அவன் மட்டும் அங்கே குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கான்!”
என் பொண்ணு மனசுல ஆசையே வளர்த்திவிட்டு… அவன் தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுட்டுப் போய்ட்டான். இப்போ என் பொண்ணோட கண்ணீருக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும். இவளோட கண்ணீர் அவனை சும்மா விடாது…”
Advertisement
சரோஜாவின் ஒவ்வொரு வார்த்தையும் பிரியாவின் மனதுக்குள் சென்று விழுந்தது.
அப்போது கந்தசாமி பிரியாவின் அருகில் வந்து உட்கார்ந்து, “பிரியா… அழாதேம்மா.”என்று அவளுடைய தலையை வருடியவர், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மெல்ல பேச ஆரம்பித்தார்.
பிரியா அவரைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் இதுவரை இருந்த சோகத்துக்குள் இப்போது ஒரு சிறிய நம்பிக்கை மின்னியது.அதைப் பார்த்த கந்தசாமி மேலும் தூபம் போட்டார்.
“இன்னைக்கு நைட்டு அக்கா வீட்டுக்குப் போய் ரெண்டுல ஒன்னு கேட்கலாம். இவ்வளவு நாள் அந்த ராமமூர்த்திதான் குறுக்க நின்னான். இப்போ அவனும் இல்ல…”என்றான் மரியாதையே இல்லாமல்….
“அந்த ரஞ்சிதாவோட அப்படி ஒன்னும் அவன் வாழ்ந்த மாதிரியும் தெரியலையே! இத்தனை வருஷம் அவனுக்கும் அவளுக்கும் நடுவுல அந்த மூர்த்திதான் நின்னுக்கிட்டு இருந்தான்.இப்போ அவனும் பரலோகம் போயிட்டான். இனிமே நமக்கு எந்தத் தடையும் இல்லை.” என்று சொல்லி முடித்தான்.
அந்த வார்த்தைகள் பிரியாவுக்குள் இருந்த தயக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாகக் கலைத்துவிட்டன.
“அப்பா சொல்றது சரிதானா…?”என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள், அடுத்த நொடியே தன் மனதுக்குள் இருந்த பதிலைத் தானே சொல்லிக் கொண்டாள்.
‘ராஜீவன் இன்னும் என்னை மறந்திருக்க மாட்டான்…’என்ற எண்ணம் அவளுடைய முகத்தில் மெதுவாகப் புன்னகையைத் தந்தது.
இத்தனை நேரம் சோர்ந்து கிடந்தவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
“நான் கொஞ்சம் குளிச்சுட்டு வரேன்…”
என்றபடி குளியலறைக்குள் சென்றாள்.
நீண்ட நாட்களுக்குப் பின் அந்த வீட்டில் முதல் முறையாக பிரியாவின் முகத்தில் உற்சாகம் தெரிந்தது. குளித்து முடித்தவள் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தாள்.கண்களில் இருந்த சோகத்தைத் துடைத்தாள்.கூந்தலை வாரி அழகாகப் பின்னினாள்.
அலமாரியைத் திறந்து நீண்ட நேரம் ஆடைகளைப் பார்த்தவள், இறுதியில் தனக்கு மிகவும் பிடித்த ஒரு புடவையை எடுத்தாள்.அதை அணிந்து கொண்டு, முகத்திற்கு லேசாக அலங்காரம் செய்தாள்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபடி மெதுவாகச் சிரித்தாள்.
இன்று ராஜீவனைப் பார்க்கப் போகிறாள். இத்தனை நாட்களாகத் தன்னை விட்டு விலகி இருந்தவனை… மீண்டும் தன் பக்கம் திருப்புவதற்காக அவன் வீடு செல்கிறாள்.
ராஜீவனிடம்,“ஒரு குழந்தை பிறந்த பதினோரு மாசத்துல பிறந்த முடி எடுக்கறது நம்ம குடும்ப வழக்கம். நீ வரணும்னுதான் மூர்த்தி இவ்வளவு நாளா காத்துட்டு இருந்தான். இனியும் இதை நீ தாமதப்படுத்த வேண்டாம். இதுல சித்தார்த்தோட உடல்நலமும் முக்கியம். ஒன்றரை வருஷமா பிறந்த முடி எடுக்காம இருந்தா… அது அவனுக்கு பாதிப்பைத் தரும்…” என்றார் ராஜசேகர்.
“என்ன… என் சித்துக்கு பாதிப்பா?” எனத் தந்தையாக அவன் மனம் பதறியது.
இதுவரை சித்தார்த்தை தன்னிடமிருந்து விலக்கி வைத்திருந்தவன்… அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் தன்னை மறந்தான்.
தன் மீது ராமமூர்த்தி காட்டிய அன்பு… தன் உடல்நலத்தில் அவர் காட்டிய அக்கறை… தன் மகன் சாப்பிட்டானா, தூங்கினானா, எங்கே போகிறான், என்ன செய்கிறான் என ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டிய அந்தத் தந்தைப் பாசம்…
அதே பாசம்… இன்று தன் மகனின் மீது அவனுக்குள் தெரியாமல் முளைத்திருந்தது.
“சித்துக்கு ஒன்னும் ஆகக் கூடாது…” என்ற எண்ணம் மட்டும் அவனது மனதை பிரதானமாக ஆக்கிரமித்தது.
நொடியும் தாமதிக்காமல் சித்தார்த்தை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த பார்பர் ஷாப்பிற்கு சென்றான். வழியெங்கும் அவனது கைகளிலிருந்து தப்பிக்க முயன்றபடியே இருந்தான் சித்தார்த்.
“நோ… வண்டா…பேட் பாய்… பேட் பாய்… போ…”என அவனுக்குத் தெரிந்த வார்த்தைகளால் முணுமுணுத்துக் கொண்டே ராஜீவனின் மார்பில் கைகளால் அடித்தான்.
ராஜீவன் எதுவும் பேசவில்லை.அவன் அடித்த ஒவ்வொரு அடியும் அவனது மார்பில் விழுந்தது… ஆனால் கைகள் மகனை தளரவிடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தன.
பார்பர் ஷாப்பின் வாசலைக் கடந்து உள்ளே சென்றதும், அங்கிருந்த பெரிய கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான் சித்தார்த். அதற்குப் பக்கத்தில்… தன்னை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்த ராஜீவனையும் பார்த்தான்.
அடுத்த நொடி தன் முகத்தை சுருக்கி, “அம்மா…!”என்று உரக்கக் கத்தினான்.
அவன் அம்மா என்றதும் ராஜீவனின் இதயம் சற்று தடுமாறியது.தான் அருகே இருந்தும்கூட அம்மாவைத் தேடுகிறானே… என சிறு ஆதங்கம் அவனுள்.
“அம்மா வருவா… சித்து குட்டி பயப்படாதே…” என்று சொல்லியபடி அவனை சமாளித்து நாற்காலியில் அமர வைத்தான்.
ஆனால் சித்தார்த் உட்கார மறுத்து, கால்களை உதைத்து, நாற்காலியின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு எழ முயன்றான்.“வண்டா..நோ…”என்ற அவன் அழுகை கடையை நிறைத்தது.
பார்பர் கத்தியை எடுத்ததும், அவனது கண்கள் இன்னும் பெரிதாகின. “அம்மா…! அம்மா…!” என கத்தியபடி இரு கைகளையும் வாசலை நோக்கி நீட்டினான்.அந்தக் காட்சியைப் பார்த்த ராஜீவனுக்குள் ஏதோ வலி எழுந்தது.
“சித்து… சும்மா இரு… ஒன்னும் பண்ண மாட்டாங்க…” என்று அவனுக்குப் புரிய வைக்க முயன்றான். ஆனால் அவனது குரலைக் கேட்கும் நிலையில் சித்தார்த் இல்லை.
மீண்டும் மீண்டும் “அம்மா…! அம்மா…!” என அழ,“சித்து… அழாதேடா..! அப்பா இருக்கே…” என்று அவனது வாயிலிருந்து வார்த்தைகள் தானாக வந்தது.அந்த ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு சில நொடிகள் திகைத்து நின்றான்.”அப்பா…!”
என அவனே அவனுக்கு அறிமுகம் கொடுத்துக் கொண்டான்.
ஆனால் சித்தார்த்தோ…“நோ… பேட் பாய்!”என்று அழுதபடியே தலையை வேகமாக ஆட்டினான்.
அருகிலிருந்த பார்பர் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
ராஜீவனுக்கு சிரிக்கவும் முடியவில்லை… கோபப்படவும் முடியவில்லை.
சித்தார்த் அவன் கையைத் தட்டிவிட்டான்.
ராஜீவன் அவனை நகராமல் பிடித்துக் கொண்டான்.
கத்தரி முடியை வெட்டத் தொடங்கியது.
ஒவ்வொரு முடிக்கற்றையும் கீழே விழ… அவனது மார்புக்குள் ஏதோ ஒன்று உருகத் தொடங்கியது.
தான் சித்தார்த்தின் தலைமுடியை வெட்டுவதற்காக மட்டும் இங்கே வரவில்லை.இத்தனை நாட்களாகத் தன் மகனுக்கும் தனக்கும் இடையே இருந்த நீண்ட தூரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்தான்.
தனக்கு பொறுப்பு வந்துவிட்டதாக அவனே அவனை பெருமையாக நினைத்துக் கொண்டான்.ராம மூர்த்தி இருந்து இருந்தால் தன்னை தலையில் தூக்கி கொண்டாடி இருப்பார் என்ற எண்ணத்தோடு வீட்டு வாசலை நெருங்க, சித்தார்த்தின் அழுகுரல் கேட்டு ரஞ்சிதா வெளியே வந்தாள்.
மொட்டை தலையுடன் அழுது கொண்டே சிவந்த கண்களுடன் வந்த மகனையும், அப்பாவாக கடமையை நிறைவேற்றி விட்டதாக கர்வமாக நின்ற கணவனையும் பார்த்து கோபம் தலைக்கேற…எரித்துவிடும் பார்வையை ராஜீவனை நோக்கி வீசினாள் ரஞ்சிதா.
மகனுக்கு முதன்முதலில் செய்யும் விஷேசம் உற்றார் உறவினரை கூட்டி செய்ய வேண்டும் என பல கனவுகளை கண்டு வைத்திருந்தாள்.ராஜீவன் வர வேண்டும் என ராம மூர்த்தி சொல்ல பொறுமையாக காத்திருந்தாள்.
இவன் இப்படி பார்பரிடம் சென்று மொட்டை போடவா இவ்வளவு நாள் காத்திருந்தோம் என மொத்த கோபமும் ராஜீவனிடம் திரும்ப, அவன் கையில் இருந்து நழுவ காத்திருந்த மகனை வெடுக்கென அவன் கைகளில் இருந்து பிரித்தெடுத்து பாத்ரூம் நோக்கிச் சென்றாள்.
அவளது இந்த செய்கை அவனுக்கு சற்று ஏமாற்றத்தை தந்தது.ஊருக்கு வந்தநாள் முதல் அவளது பராமுகம் இனம் புரியாத ஏக்கத்தை அவனுள் விதைக்க…இன்று அவளின் இந்த செய்கை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அம்மா..! பேட்பாய்…!” என தன் தலையை தொட்டுக் காட்டினான் சித்து.
“என் சித்து குட்டி இப்போதா அழகா இருக்கான்” என அவனை கண்ணாடியில் காட்டி சமாதானப் படுத்தினாள்.
இருவரும் அவனை ஒதுக்கி வைக்க…. சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். சோர்வில் தூங்கியும் போனான்.மாலை ஐந்து மணி மெதுவாக எழுந்து மனைவியையும் மகனையும் தேட காணவில்லை. அம்பிகா அவரது அறையில் அமர்ந்திருந்திருக்க அவரிடம் சென்றான்.
ராஜீவா அப்பாக்கு என்ன சடங்கெல்லாம் செய்யனுமோ அதெல்லா முறையா செய்யனும்.எந்த குறையும் வெச்சிடாதே…
“கண்டிப்பா ம்மா. அப்பா எனக்கு எந்த குறையும் வெச்சதில்ல.நானும் எந்த குறையும் வெக்க மாட்டேன்” என உறுதியளித்து வெளியே வந்தான்.
இருவரையும் எங்கு தேடியும் காணவில்லை.
ஃபோன் அடிக்க எடுத்து திரையை பார்த்தவன்.யோசனையாக அட்டன் செய்து பேசியபடி மாடிப்படிகளில் ஏறினான்.
குஜராத்தில் இருந்து ஃபோன் “எப்போ வேலைக்கு திரும்ப போகறீங்க?” என…
இன்னமும் ஒரு வாரம் கழித்து வருவதாக உறுதியளித்தான்.
மொட்டை மாடிக்குச் சென்ற ராஜீவனுக்கு அங்கே கண்ட காட்சி ஒரு நொடி அவனை அப்படியே நிறுத்தியது.
அவனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
நீல நிற சங்குப் பூக்கள்…!அவனை வரவேற்பது போல மொட்டை மாடி முழுவதும் நீல நிறத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
வரிசையாகத் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொட்டியிலும் சங்குப்பூக் கொடிகள் படர்ந்து, கம்பிகளைப் பற்றிக்கொண்டு மேலே மேலே ஏறியிருந்தன. சில கொடிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பச்சை இலைகளுக்கு நடுவே நீல நிறப் பூக்களைச் சிதற விட்டிருந்தன.
மொட்டை மாடியே ஒரு சிறிய தோட்டமாக மாறியிருந்தது.
அதற்கு நடுவே… ரஞ்சிதா நின்று கொண்டிருந்தாள்.
ஒரு கையில் சிறிய கூடை.மற்றொரு கையால் பூக்களை மெதுவாகப் பறித்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய கூந்தலை மெல்ல வருடிச் சென்ற காற்று,சில முடிக்கற்றைகளை அவளுடைய முகத்தின் மீது கொண்டு வந்து போட்டது.
அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், அவள் பூக்களைப் பறிப்பதில் மூழ்கியிருந்தாள்.
அப்போது,“ம்மா… ம்மா…”என்ற சித்தார்த்தின் குரல் கேட்டது. பூச்செடிகளுக்கு நடுவே அவன் ஓடிக் கொண்டிருந்தான்.
ஒரு தொட்டியைச் சுற்றி சுற்றி ஓடினான். மீண்டும் அடுத்த தொட்டிக்குச் சென்றான்.
அவனுக்கு அந்த நீல நிறப் பூக்கள் எல்லாம் விளையாடுவதற்காகவே உருவாக்கப்பட்டவை போல இருந்தது.
இரண்டு பூக்களைப் பறித்துக் கொண்டு ஓடிவந்தவன்,“ம்மா…இந்தா…!”என்று அவற்றை ரஞ்சிதாவின் கையில் கொடுத்தான்.
ரஞ்சிதா அவனைப் பார்த்து சிரித்தபடி அவனுடைய கன்னத்தைத் தடவி, “என் செல்லம்! எவ்வளவு அழகா பறிச்சிட்டு வந்திருக்க…”என்று நெற்றியில் முத்தமிட்டாள்.
சித்தார்த்தோ அதற்குள் மீண்டும் ஓடிவிட்டான்.அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜீவனின் முகத்தில் அவனை அறியாமலேயே ஒரு சிறிய புன்னகை தோன்றியது. அவனுடைய பார்வை மீண்டும் ரஞ்சிதாவின் மீது சென்றது.
இத்தனை சங்குப்பூக்களை…எதற்காக வளர்க்கிறாள்?என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.
அவன் அருகில் செல்ல…ரஞ்சிதா அவனைப் பார்த்தும், எதும் பேசாமல் முன்புபோல் அமைதியாகத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அவனுடைய பார்வை அவள் கையில் இருந்த பூக்களின் மீது விழுந்தது.
“இவ்வளவு பூவை என்ன பண்ணப் போற?”என்று கேட்டான்.
ரஞ்சிதா ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு,“அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் …” என்று மெதுவாகச் சொன்னாள்.
அவளுடைய அந்த அலட்சியம் ராஜீவனின் மனதைக் குத்தியது.