” ஏதேய் லட்சுமினா மாடா???” என்று அதிர்ந்த வினோத், பின் சந்தன பாண்டியனை நோக்கி, ” சார் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்கன்னு நினைக்கிறேன்.. நான் ஹார்ட்.. அதாவது இதய நோய் டாக்டர்.. மாட்டு டாக்டர் இல்லை” என்று அவன் உண்மையை போட்டு உடைக்க,
Advertisement
சந்தன பாண்டியன் சற்று குழப்பத்துடன் அஸ்வத்தை நோக்கி, “தம்பி அப்போ நீங்களும் மாட்டு டாக்டர் இல்லையா??” என்று கேட்க,
Advertisement
ராமனிற்குமே அப்போது தான் அந்த சந்தேகம் தோன்றியது, ” சார் நீங்க SP சுந்தர பாண்டியன் தான??” என்று கேட்க,
Advertisement
ஏதோ கேட்கக் கூடாததை கேட்டது போல் சந்தன பாண்டியன் கண்கள் சிவக்க கோபத்துடன், ” யார் வீட்டுல வந்து யாரைப் பத்தி கேட்குறீங்க?? ஒருத்தவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்தா அவங்க யாரு என்னன்னு விசாரிச்சிட்டு கூட வர மாட்டீகளா?? இந்த அறிவு கூட இல்லாமையா வக்கீலா இருக்கீக??” என்று அவர் கத்த,
Advertisement
அவரின் பேச்சு ராமனையும் கோபப்படுத்த, “வீட்டுக்கு ஓருத்தவங்க வந்தா அவங்களை பேசவே விடாம நீங்களா பட்டாசு வெடிச்சு உள்ளே கூட்டிட்டு போனது மட்டும் இல்லாம என்னைப் பத்தி நான் சொல்ல வந்ததையும் தடுத்தது யாரு நீங்களா?? இல்லை நானா?? எனக்கு அறிவு உங்களை விட நிறைய இருக்கப் போய் தான் நான் இன்னும் உங்க கிட்ட மரியாதையா பேசிட்டு இருக்கேன்” என்று இவரும் கூற,
அடுத்த நிமிடமே அந்த இடமே அல்லோகலப்பட்டது.
” எங்கேயோ இருந்து வந்து இங்க அய்யாவுக்கே அறிவில்லைன்னு சொல்லுவியா??” என்று சந்தன பாண்டியனின் பங்காளிகளும் விசுவாசிகளும் கூச்சல் போட,
சந்தன பாண்டியனின் மேல் பொறாமையில் இருந்த சிலரோ , “யாரு என்னன்னு விசாரிக்காம வீட்டுக்குள்ள அவுகளை கூப்பிட்டு வச்சு விருந்து உபசாரம் பண்ணது நம்ம தப்பு .. இதுக்கு அவுகளை ஏசி என்ன ஆவப்போவுது” என்று ராமனிற்கு ஆதரவு தெரிவித்த நேரம் இவர்களின் சப்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து சுந்தர பாண்டியனும் , மற்றவர்களும் வெளியே வந்து விட்டனர்.
எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்த பரமசிவனின் குடும்பத்தை கண்டவுடன் தான் அனைவருக்கும் விஷயம் புரிய, கூட்டத்தில் இருந்த ஒருவர் சப்தமாக, ” வீடு மாறிப்போச்சு போலப்பா… அதோ அங்க இருக்கவுக தான் சந்தன பாண்டி அய்யா வீட்டுக்கு வந்தவுக … இவங்க SP அய்யா வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்தவுக ” என்று விளக்க,
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மூன்று பேரின் இதயத்தில் சட்டென ஊசி குத்தியதைப் போல் வலி தோன்றியது.
பெண் பார்க்க வரும் வரை கூட எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த அஸ்வத்திற்கு, அஞ்சலியை பார்த்த பின்பு ‘ இவள் தான் தன்னுடையவள் ‘ என்று அவனின் உள்மனம் உணர்த்தியது. ஒருவரைக் கண்ட ஐந்து நிமிடங்களில் அவருடன் எப்படி போய் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது என்று இந்த பெண் பார்க்கும் படலத்தின் மீது பெரிதாய் நம்பிக்கை இல்லாமல் இருந்த அஷ்வத்தை பார்த்த ஒரே நொடியில் சாய்த்தது விட்டாள் அஞ்சலி. அவளுடன் இருந்த இந்த பதினைந்து நிமிடங்களில் பல நூறாண்டுகள் இருவரும் வாழ்ந்து விட்டது போல் கனவுலகில் வானில் மிதந்து கொண்டிருந்த அவனை சட்டென்று தரையில் தூக்கி எறிந்து விட்டதைப் போல் அவன் உறைந்து நின்றான்.
இங்கே அஞ்சலியின் நிலைமையும் அவனை ஒத்தே இருந்தது.. அடுத்து என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று பதட்டத்துடன் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் உதடுகளோ, ” அஸ்வத்தை வேண்டாம்னு சொல்லிற கூடாது கடவுளே ” என்று ஜபம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தது.
அஜய்யின் நிலையோ அதற்கு மேல் இருந்தது.. ‘இத்தனை வருடமாய் இவர் மீதும் தோன்றாத இந்த பாழாய் போன காதல் இந்த ராங்கிக்காரி கீதாவைப் பார்த்தவுடன் தான் தனக்கு தோன்றவேண்டுமா??’ என்று நொந்துகொண்டான் அவன்.
இருந்தாலும் எப்போதும் தனக்கு பிடித்ததை அடைந்தே தீரும் பிடிவாத குணத்தை கொண்டுள்ள அஜய் இப்போதும் கீதாவின் மேல் முளைவிட்டுள்ள அந்த காதல் கைகூட, ‘ என்ன ஆனாலும் கீதாவை தன் மனைவி ஆக்கிக் காட்டுவேன் ‘ என்று அவன் உறுதி கொண்டான்.
ஆனால் இந்த குழப்பத்தை நினைத்து சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட ஒரே ஜீவன் கீதாஞ்சலி தான்.
‘ மவனே என் கிட்டயா சவால் விடுற.. பார்த்தியா அதான் கடவுளே உனக்கு ஆப்பு வச்சுட்டார்.. என் பெரியப்பா பார்த்த மாப்பிள்ளையை செத்தாலும் என் அப்பா எனக்கு கட்டி வைக்க மாட்டாரு.. நீ செத்த டா மவனே ‘ என்று மனதில் அஜய்யை தாளித்து கொட்டிய கீதா, மகிழ்ச்சியில் தன் அறையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
வெளியே இன்னும் அவர்கள் கூச்சல் போட்டுக்கொண்டே இருக்க, கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், ” ஏன் ப்பா இப்படி எல்லாரும் கத்திகிட்டே இருந்தா என்னப்பா இதுக்கு முடிவு.. ரெண்டு பக்கமும் உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. அவன் அவனுக்கு சோலி கெடக்கா இல்லையா??” என்று அவர் சப்தம் போட,
அப்போது தான் அங்கே சலசலப்பு கொஞ்சம் அடங்கியது.
” என்ன சந்தன பாண்டி.. நீயே சொல்லு.. வீடு மாத்தி வந்தாலும் அவுகளும் நல்ல குடும்பமாட்டம் தேன் தெரியுது.. இவுகளையே நீ சம்பந்தியா ஏத்துக்கிறயா இல்லை நீ பார்த்த மாப்பிள்ளை தான் வேண்டும்னு நினைக்கிறயா??” என்று அவர் கேட்க,
அதைக்கேட்டு இங்கு அஸ்வத்தின் இதயம் துடிப்பது வெளியே கேட்டது.. ‘ என்ன சொல்ல போகிறாய்?? ‘ என்பது போல் அவன் பதட்டத்துடன் அவர் பதிலுக்காக காத்திருக்க, அவன் தலையில் இடியை இறக்குவதைப் போல் சந்தன பாண்டியோ,
” அவன் பார்த்த மாப்பிள்ளை இவங்க.. இவங்களை என் பொண்ணுக்கு எடுக்க நான் ஒன்னும் அவ்ளோ வக்கத்து போய் இல்லை” என்று அவர் வார்த்தையை விட,
ராமனுக்கோ கோபம் சுள்ளென ஏறியது, “யோவ் நீ என்னயா உன் பொண்ணை தர மாட்டேன்னு சொல்றது… நான் சொல்றேன் கேட்டுக்கோ .. என் பையனுக்கு இந்த ஜென்மம் மட்டும் இல்லை எந்த ஜென்மத்துலயும் உன் பொண்ணை கட்டிக் கொடுக்க மாட்டேன் யா” என்று சவால் விட,
” நாசமாய் போச்சு” என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் அஸ்வத்.
மீண்டும் இருவரையும் அடக்கிய பெரியவர், ” அப்போ நீ பார்த்த மாப்பிள்ளையை உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போறியா??” என்று அடுத்த கேள்வியை கேட்க,
அஞ்சலிக்கு அதற்கு மேல் அந்த பேச்சைக் கேட்கவே பிடிக்காமல் அங்கிருந்து ஓடி தன் அறைக்குள் தன்னை புகுத்திக் கொண்டாள்.
ஆனால் இந்த முறை சந்தன பாண்டியன் எதுவும் கூறும் முன் அஜய் முந்திக் கொண்டு , ” சாரி சார் எனக்கு இவர் பொண்ணை கட்டிக்க இஷ்டம் இல்லை” என்று கூறிவிட,
சந்தன பாண்டியன் கொதித்தெழுந்து விட்டார்.
” ஏலே நீ என்ன சொல்றது … நான் சொல்லுதேன்.. அந்த சுந்தர பாண்டி மவளைப் போய் பார்த்துட்து வந்த உமக்கெல்லம் நான் என் பொண்ணை தர மாட்டேன் முதல்ல இங்க இருந்து கெளம்புங்கல எல்லாரும்” என்று தோளில் கிடந்த தன் துண்டை எடுத்து உதறி ஆவேசமாய் அவர் கத்த,
சுந்தர பாண்டியனிற்கு அவரைக் கண்டு எரிச்சலாக வந்தது. ” யார்கிட்ட எப்படி பேசணும்னு இந்த ஆள் இந்த ஜென்மத்தில் கத்துக்க போறதில்லை” என்று நினைத்தவர், இரு குடும்பத்தையும் நோக்கி பொதுவாய் கையெடுத்து கும்பிட்டு, ” என்னை மன்னிக்கணும்.. தெரிஞ்சோ தெரியாமலோ இங்க இவளோ பெரிய குழப்பம் நடந்திருச்சு.. இவளோ நடந்த பின்னாடியும் இனி உங்க ரெண்டு பேர் வீட்டுல யார் வீட்டுல சம்பந்தம் பண்ணினாலும் அது நல்லா இருக்காது.. உங்களுக்கே புரியும்னு நினைக்கிறேன்.. ரொம்ப நன்றி எங்க பொண்ணை பார்க்க இவளோ தூரம் வந்ததுக்கு.. ஆனா எங்களை மன்னிச்சிடுங்க” என்று அவர் தன் முடிவைக் கூறிவிட,
ராமனும் பரமசிவனும் அதே மனநிலையில் தான் இருந்தனர். ” இந்த ஊரில் இவ்வளவு அசிங்கப் பட்ட பின் இங்கு பெண் எடுக்கக் கூடாது ” என்பதில் உறுதியாக இருந்த இருவரும் தத்தம் குடும்பத்தை அங்கிருந்து கிளம்பச் சொல்ல,
அஸ்வத்தும் , அஜய்யும் அசையாமல் நின்றனர்.
“டேய் அஸ்வத் இன்னும் இங்க என்ன நின்னுட்டு இருக்க.. போ போய் காரை எடு” என்று ராமன் விரட்ட,
அவனோ, ” அப்பா எனக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு ப்பா” என்று தயக்கத்துடன் கூறிவிட,
அவனைத் தீயென முறைத்த ராமன், ” அந்தாளு என்னை இவளோ அசிங்க படுத்தின பின்னாடியும் அந்த பொண்ணு தான் உனக்கு பிடிச்சிருக்குல.. போ போய் அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு கருமாதி பண்ணிட்டு போய்டு” என்று வழக்கமாக கூறும் அதே வசனத்தைக் கூறி அவனை மிரட்ட,
பிறவியில் இருந்தே சாதுவான அஸ்வத்தோ, தந்தையை மீறி எதையும் செய்ய தயக்கம் கொண்டு, ” என்னப்பா இப்படிலாம் பேசுறீங்க.. பிளீஸ் ப்பா புரிஞ்சுக்கோங்க” என்று முதன் முறையாக அவரின் பேச்சை மீறி தனக்காக அவன் கெஞ்ச,
அதுவே ராமனை இன்னும் வெறியேற்றியது.
” இதோ பாரு அஸ்வத்.. உனக்கு நாங்க வேண்டும்னா எங்க கூட வா.. இல்லை அவ தான் வேண்டும்னா எங்க எல்லாரையும் மறந்துரு” என்று இறுதியாய் கூறிவிட,
மதுரமோ அஸ்வத்தைப் பார்த்து கண்ணடித்து, ” நீங்க தான் வேண்டும்னு சொல்லு.. பார்த்துக்கலாம்.. அந்த பொண்ணை நான் உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று வாயசைக்க,
தன் பாட்டியைப் பற்றி தெரிந்த அஸ்வத்தும் அவர் கொடுத்த நம்பிக்கையில் ராமனுடன் கிளம்பி சென்றான்.
இங்கு அஜய்யின் கையைப் பிடித்து இழுத்த தனம், ” டேய் இன்னும் என்னடா இங்க நின்னுட்டு இருக்க..வா போகலாம்.. அங்க உங்க அப்பா போய்கிட்டு இருக்காரு பாரு.. ” என்று அழைக்க,
அவனோ அவர் கையை உருவிவிட்டு, ” எனக்கு அந்த பொண்ணு தான் வேண்டும் மா” என்று உறுதியுடன் கூற,
” டேய் எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் வா டா” என்று அவனை இழுத்துக் கொண்டு போக முற்பட்டார்.
அவனோ அதை தடுத்துவிட்டு சுந்தர பாண்டியனிடம் பேசச் செல்ல,
அவன் முன் தோன்றிய அவனின் தாத்தா, ” டேய் எதுக்கு டா இப்போ எல்லாரும் கத்திகிட்டு இருக்காங்க.. உங்க அப்பன் வேற எதுக்கு இப்படி வேகமா போறான்… பலகாரத் தட்டுல ஜிலேபி வைக்கலைனு நான் சொன்னதை பெருசா எடுத்துட்டு இவன் கலவரம் உண்டு பண்ணிட்டானா?? வயசு தான் கூடிருக்கே தவிற அறிவே இல்லை . ஜிலேபிக்காகலாமா இப்படி கோச்சுகிட்டு போவான்.. என்னமோ போ வர வர இந்த வீட்டுல எல்லாம் ஒரு மார்க்கமா சுத்துறீங்க” என்று அவர் பாட்டிற்கு புலம்ப,
‘ நேரம் காலம் தெரியாம இவர் வேற படுத்துறாரே.. கர்த்தரே ‘ என்று நொந்து போன அஜய்,
” பேசாம போ தாத்தா ” என்று அவரை ஒதுக்கி விட்டு சுந்தர பாண்டியனை நெருங்க,
இருவருக்கும் நடுவில் வந்த பரமசிவன், மகனின் மனதை அறிந்து அவன் ஏதும் பேசும் முன் அவனைத் தன்னோடு இழுத்துக் கொண்டு வந்து விட்டார்.
அவரிடமிருந்து கைகளை உருவிக்கொண்ட அஜய், ” இப்போ எதுக்கு இப்படி இண்டீசண்டா பிஹேவ் பண்றீங்க??? படிச்சிருக்கீங்க தான?? ” என்று அவன் கத்த,
“யாரு நான் இண்டீசன்டா பிஹேவ் பண்றேனா?? உன்னை வேணாம்னு சொல்றவன் கிட்ட போய் உன் பொண்ணை கொடுன்னு கெஞ்ச போறியே அது மட்டும் ரொம்ப டீசண்டா??” என்று அவர் எதிர்கேள்வி கேட்க,
” நான் கெஞ்சுறேன் இல்லை அவர் பொண்ணை தூக்கி வச்சு கொஞ்சுறேன்.. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று அவன் கடுப்புடன் மொழிய,
” பார்த்தியா தனம் உன் புள்ளை பேசுற பேச்சை.. பெத்த தகப்பன் கிட்ட பேசுற பேச்சா இது.. சிவ சிவா!!” என்று அவர் காதைப் பொத்திக் கொள்ள,
” அய்யய்ய உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை.. என்னை எதுக்கு இழுத்துட்டு வந்தீங்க” என்று அவன் கடுப்புடன் கேட்க,
” நீ அந்தப் பொண்ணை மறந்திட்டு வந்து வண்டியில ஏறு …நம்ம முதல்ல ஊருக்கு போகலாம்” என்று அவர் தன் முடிவைக் கூற,
” எனக்கென்ன உங்களை மாதிரி ஞாபக மறதியா பத்து நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த ஒரு பொண்ணை மறக்க.. என்னாலலாம் மறக்க முடியாது” என்று அவரை வம்பிழுத்தான் அஜய்.
” டேய் ஏண்டா இப்படி பண்ற.. பேசாம வந்து வண்டியில ஏறு அஜய்” என்று தனம் தன் மகனிடம் கோபப்பட,
அவனோ எதற்கும் அசையவில்லை.
உடனே பரமசிவன் தன் கோபத்தை எல்லாம் ஜீவாவின் பக்கம் திருப்பியவர், ” இன்னும் பத்து நிமிஷத்துல அவன் வண்டியில வந்து ஏறலை உன்னை இங்கேயே கொன்னு புதைச்சிருவேன்.. பார்த்துக்கோ.. போய் அவனைக் கூட்டிட்டு வா” என்று விரட்டினார்.
” நான் என்னடா பண்ணேன்.. நான் பாட்டுக்கு சிவனேண்ணு தான இருந்தேன்.. அவ என்னடான்னா இவன் மேல இருக்க கோபத்துல எனக்கு இட்லிப்பொடி போட்ட பாலைக் கொடுத்து கொல்லப் பார்க்குற..இந்தாளு என்னடான்னா வம்பு பண்ற அவர் மகனை விட்டுட்டு என்னை கொன்னு புதைப்பேன்னு சாவடிக்குறாரு.. சண்டே அதுவுமா சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு மல்லாக்கப் படுத்து தூங்குறதை விட்டுட்டு நண்பன் பாவமேன்னு வந்தேன்ல என் புத்தியை செருப்பாலையே அடிக்கணும்” என புலம்பிக் கொண்டே அஜய்யிடம் சென்றான் ஜீவா.
” டேய் என்னை பாடு படுத்தாம தயவு செஞ்சு வந்துருடா … சத்தியமா உன் கூட போராட எனக்கு எனர்ஜி இல்லை” என்று அஜய்யிடம் பாவமாய் கூறினான் ஜீவா.
” அதெல்லாம் முடியாது.. எனக்கு கீதா வேணும்” என்று அஜய் சிறுவன் போல் அடம்பிடிக்க,
” படுத்தாதடா என்னைய.. அது என்ன பொம்மையா.. போலீஸ்காரன் பொண்ணு டா.. வம்பிழுக்காம வா ராசா போகலாம்.. உனக்கு அந்த பொண்ணு தான் வேணும்னா நம்ம சென்னையில போய் அதை எப்படி கடத்தன்னு பிளான் பண்ணி அப்பறம் வந்து தூக்கிட்டு போகலாம்.. இப்போ வா டா கிளம்புவோம்.. அப்பறம் உன் போலீஸ் மாமா துப்பாக்கி எடுத்து குறி பார்க்காம சுட்டுத் தள்ளிட போறாரு டா” என்று அவனைக் கிளப்ப வாயில் வந்ததை அடித்து விட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.
” வாவ் சூப்பர் மச்சி.. செம ஐடியா.. நான் அவளை கடத்திட்டு போய்ட்டா கிராமத்து ரூல்ஸ் படி எனக்கு தான அவளை கட்டி வைப்பாங்க.. தேங்க்ஸ் மச்சி.. நான் போய் அவளை தூக்கிட்டு வரேன் வெய்ட் பண்ணு” என்று அவன் உற்சாகமாக கூற,
” ஏதே.. டேய் வெளங்காம போனவனே.. நான் என்ன சொன்னா நீயென்னா டா பண்ண போற.. அய்யோ சாவடிக்குறானே.. ஒழுங்கா வந்து தொலை டா.. இல்லைனா SP கிட்ட குண்டடி பட்டு தான் டா சாகப் போற” என்ற ஜீவாவின் அறிவுரையைக் கேட்க அஜய் அங்கில்லை.
அவன் எப்போதோ தன் காதலியைக் கடத்தி அவளுள் தன் காதலை கடத்தி வர புறப்பட்டிருந்தான்.