நான் பிரியாவை காதலிக்கிறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”என்று ராஜீவன் உறுதியாக நின்றான்.
ராமமூர்த்தியின் கண்கள் கோபத்தால் சிவந்தன.இத்தனை வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த மகன் எங்கே தன் கையை விட்டு நழுவிப் போய்விடுவானோ என்ற பயமும் அவர் கண்களில் தெரிந்தது.
சில நொடிகள் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென்று திரும்பி வாசலை நோக்கி..
“அம்பிகா… இங்க வா!” என்று வீடு முழுக்க அதிரும் அளவிற்கு குரல் கொடுத்தார் ராமமூர்த்தி.
Advertisement
அவர் போட்ட சத்தத்தில்,வெளியே பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் கூட பதறியபடி அந்த அறை வாசலில் வந்து நின்றனர்.
அம்பிகா வேகமாக உள்ளே வந்து,
“என்னங்க…?” என்று கேட்டாள்.
“இந்தத் தாலி என் உயிரோட அடையாளம். அதை கழட்டிக் கொடுத்துட்டு,உன் பையனோட போ. உன் மகனுக்கு காதல்தான் முக்கியம்… அப்பன் வேண்டாம்…இந்த குடும்பம் வேண்டாம்…”என்றார்.
அந்த வார்த்தைகள் ராஜீவனின் நெஞ்சில் சுத்தியலால் அடித்தது போல விழுந்தது.
அம்பிகா கண்கலங்கியபடி தாலியை இறுகப் பற்றிக் கொண்டு.. “என்னங்க… இப்படியெல்லாம் பேசாதீங்க…”என்றாள்.
ராமமூர்த்தி தன் அண்ணனை நோக்கி, “நான் பேசுறது தப்பா?பெத்த அப்பனை உயிரோட கொன்னுட்டு,
அம்மாவோட தாலியை அறுத்துட்டு போறவன்… நாளைக்கு அந்த காதலாலே மட்டும் சந்தோஷமா வாழ்ந்துடுவான்னு நினைக்கிறானா?”
என்று கேட்டார்.
ராஜீவனின் கண்கள் சிவந்தபடி, “அப்பா…” என அழைக்க..
“இல்லடா…இப்போ என்னை அப்பான்னு கூப்பிடாத.உனக்கு காதல்தான் முக்கியம்னா… நீ போ…என்னை பத்தி கவலை பட வேண்டாம். ஆனா… உங்க அம்மா கழுத்துல இருக்கற தாலியை மட்டும் கழட்டிட்டு உன் கூட கூட்டிட்டுப் போ.
இனி என் மனைவியா இருக்கிற தகுதி அவளுக்கு வேண்டாம்…உன் அம்மாவா மட்டும் இருந்துட்டு போறா.
அந்த வார்த்தைகளை கேட்ட அம்பிகா கதறி அழ ஆரம்பித்தார். அந்த அழுகையைப் பார்த்த ராஜீவனின் மனம் உடைந்து போனது.அவனால் தன் தாயின் முகத்தைக் கூட நேராகப் பார்க்க முடியவில்லை.
திடீரென…”ஆஆஆ…” என ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே சுவரை ஓங்கி குத்தினான்.மீண்டும் மீண்டும் சுவரில் கையை மோதி கோபத்தை வெளிப்படுத்தினான்.
பிறகு அருகிலிருந்த கதவை எட்டி உதைத்தான்.அவனது செய்கையில் அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் அதிர்ந்தன.ஆனால்…அவன் மனதில் கொந்தளித்த புயல் மட்டும் அடங்கவில்லை.
சில நிமிடங்கள்… யாருமே பேசவில்லை.
ராஜீவன் மெதுவாக தலையை குனிந்தான். கண்களில் விழுக தயாராக இருந்த கண்ணீரை உள்ளே அடக்கிக் கொண்டு, அமைதியாக அலமாரியைத் திறந்து, திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த உடைகளை எடுத்தான்.
அதை கையில் எடுத்தபோது, ஒரு மோசமான தோல்வியை ஏற்றுக் கொண்ட மனிதனின் வேதனை அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது.எதுவும் பேசாமல் குளியலறைக்குள் சென்றான்.
சிறிது நேரத்தில் மணமகன் கோலத்தில் வெளியே வந்தான்.ஆனால்…
அந்த அறைக்குள் இருந்த ராஜீவனுக்கும், வெளியே வந்த ராஜீவனுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது.
உள்ளே இருந்தவன் தன் காதலுக்காக இறுவரை போராடிய போராளி.வெளியே வந்தவன்…தந்தைக்காக தன் காதலை தியாகம் செய்த மகன்.அமைதியாக ராமமூர்த்தியைக் கடந்து சென்று காரில் ஏறினான்.
அவனைப் பார்த்த ராமமூர்த்தியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
மகனின் இந்த முடிவில் மகிழ்ச்சி இல்லை… மாறாக ஒரு தந்தையின் மனவேதனை மட்டுமே இருந்தது.
அடுத்த நாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மங்கள இசையால் மண்டபம் விழித்துக் கொண்டது.வாசல் முழுவதும் மாவிலைத் தோரணங்களும், வண்ணக் கோலங்களும் வருகையாளர்களை வரவேற்றன. உறவினர்களின் சிரிப்புச் சத்தமும், குழந்தைகளின் ஓட்டமும், நாதஸ்வரத்தின் இனிமையும் மண்டபத்தை உயிரோட்டமாக மாற்றியிருந்தன.
மணமேடையின் ஒரு புறம் அமைதியாக அமர்ந்திருந்தான் ராஜீவன்.புதிய பட்டுவேட்டி,பட்டு சட்டையில் கம்பீரமாக இருந்தாலும், அவன் முகத்தில் மணமகனுக்குரிய உற்சாகம் இல்லை. கண்கள் எங்கோ வெறுமையை வெறித்தபடி இருந்தனர்.
மறுபுறம், அரக்கு நிற பட்டுப்புடவையில், நெற்றி நிறைய குங்குமமும், மல்லிகைப்பூ மணமும் சூழ, மெதுவாக நடந்து வந்தாள் ரஞ்சிதா. அவளது முகத்தில் வெட்கமும், புதுவாழ்க்கையைப் பற்றிய சிறு பதற்றமும் கலந்திருந்தது. திருமணம் என்றவுடன் ஒவ்வொரு பெண்ணும் காணும் கனவு அவளின் விழிகளிலும் மெல்ல ஒளிந்திருந்தது.
இருவரையும் அடுத்தடுத்து அமர வைத்தபோது, ஒரு கணம் மட்டும் ரஞ்சிதாவின் பார்வை ராஜீவனைத் தொட்டது.அவன் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். ஆனால் அந்த ஒரு பார்வை, “இவர்தான் இனி என் கணவர்…” என்ற உணர்வை ரஞ்சிதாவின் மனதில் பதித்து விட்டது.
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…”
என்ற ஐயரின் குரல் மண்டபம் முழுவதும் எதிரொலித்தது.
ராமமூர்த்தி தெய்வத்தை வேண்டியபடி தாலியை எடுத்து மகனின் கையில் கொடுக்க…அந்தத் தாலியை சில நொடிகள் அமைதியாக பார்த்த ராஜீவன்,பின்னர் கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்தான்.
அடுத்த நொடி அந்த மங்களநாணை தன் கைகளில் வாங்கி… உணர்ச்சியே இல்லாத மனிதனைப் போல…மூன்று முடிச்சு ரஞ்சிதாவின் கழுத்தில் கட்டினான்.
அந்த மஞ்சள் கயிறு அவளது கழுத்தில் ஏறிய கணமே, ரஞ்சிதாவின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
மணமக்கள் மீது அட்சதை மழை பொழிந்தது. நாதஸ்வரம் மங்கள இசையை முழங்கியது.வாழ்த்த வந்த உறவினர்கள் இருவரையும் சுற்றி நின்றனர்.ரஞ்சிதா கண்களைத் தாழ்த்தியபடியே அனைவரின் ஆசீர்வாதத்தையும் ஏற்றுக் கொண்டாள்.
ராஜீவன் மட்டும்… தாலி கட்டிய பிறகும், மனதின் ஓரத்தில் பிரியாவின் நினைவையும், மறுபுறம் தந்தையின் செயலையும் தன் எண்ணங்களில் சுமந்தபடி,எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான்.
ஆனால்…அவனுக்குத் தெரியவில்லை.
தன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த நிம்மதியும்,அவன் விருப்பமில்லாமல் கட்டிய அந்த மூன்று முடிச்சுகளில்தான் உள்ளது என…
திருமணச் சடங்குகள் முடிந்ததும், வந்திருந்த உறவினர்கள் அனைவரையும் அன்போடு விருந்துக்கு அழைத்துச் சென்றனர் ராம மூர்த்தியின் உடன்பிறப்புகள்.
நீண்ட வரிசையாக விரிக்கப்பட்டிருந்த வாழை இலைகள், விருந்தினர்களை அன்போடு வரவேற்றன.முதலில் உப்பு, காரசாரமான மாங்காய் ஊறுகாய், இனிப்பான ஜிலேபி என இலை அலங்கரிக்கப்பட்டது.
சில நொடிகளில் பரிமாறுபவர்கள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நடந்து, ஒவ்வொரு இலையையும் நிறைக்கத் தொடங்கினர்.
சூடாக ஆவி பறக்கும் வெள்ளைச் சோற்றின் மீது நெய் ஊற்றி, மணம் கமழும் உருளைக்கிழங்கு சாம்பார் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் சேர்த்த கல்யாணப் பொறியல், மொறுமொறுப்பான வாழைக்காய்
வறுவல்,பொன்னிற அப்பளம் என ஒவ்வொன்றாக இலை நிரம்பியது.
அப்பளம் நொறுங்கும் சத்தமும், நெய்யின் நறுமணமும், கொதிக்கும் சாம்பாரின் வாசனையும் மண்டபம் முழுவதும் கலந்து பரவ, விருந்துக்காக காத்திருந்தவர்களின் நாவில் நீரூறச் செய்தது.
அதன் பிறகு காரம் கலந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு, மணம் வீசும் ரசம், குளிர்ச்சியான மோர், தயிர் சாதம் என விருந்து தொடர்ந்தது. இறுதியாக நெய் மணம் கமழும் பாசிப்பருப்பு பாயாசமும்,அதற்கு சரியான இணையாக சூடான மசால் வடையும் பரிமாறப்பட்டு, விருந்து இனிதே நிறைவடைந்தது.
திருமண வரவேற்பு முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற ஆரம்பித்தனர்.இரவு பத்து மணியைத் தாண்டியிருந்தது.
முகூர்த்ததிற்காக கட்டியிருந்த அரக்கு நிற பட்டுப்புடவையை மாற்றி, மென்மையான பருத்தி சேலையில் வந்தாள் ரஞ்சிதா. மல்லிகைப் பூவின் மணம் இன்னும் அவள் கூந்தலில் நிறைந்திருந்தது.
“ரஞ்சி…பால், பழம் எல்லாம் எடுத்துட்டு ரூமுக்கு போ.” என தீபாவும், ஆர்த்தியும் சிரித்தபடி அவளை ராஜீவனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில்…பால் சொம்பை மேஜை மீது வைத்து, கட்டிலின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்தாள் ரஞ்சிதா.
கடிகாரம் பத்து முப்பது…
பதினொன்று… என வேகமாக ஓடியது. ஆனால் ராஜீவன் இன்னமும் வரவில்லை.
வெளியே…ராமமூர்த்தி வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அம்பிகா அமைதியாக அமர்ந்திருந்தார்.
“இன்னும் வரலையா…?” என்று பார்வதி மெதுவாக கேட்டார்.
ராமமூர்த்தி ‘இல்லை’ என தலையசைத்தார்.
ராஜீவனின் எண்ணுக்கு பலமுறை அழைக்க…
ஒவ்வொரு முறையும்…”தி நெம்பர் யூ ஆர் காலிங் இஸ் நாட் ரீச்சபிள்…” என்ற இயந்திரக் குரலே பதிலாக வந்தது. அவரின் முகத்தில் கவலை தெளிவாக தெரிந்தது.
வெளியே சத்தம் கேட்க…அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் ரஞ்சிதா.
அனைவரின் முகத்தையும் பார்த்தவுடன் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தாள்.
“மாமா…என்ன ஆச்சு?” என்று மெதுவாகக் கேட்டாள்.
ராமமூர்த்தி”ஒன்னும் இல்லம்மா” என்றார்
சில நொடிகள் அமைதியாக நின்றவள்,
“மாமா… கல்யாண வேலைல எல்லாரும் ரொம்ப களைச்சிருப்பீங்க. நீங்க எல்லாரும் போய் தூங்குங்க. அவர் ஏதாவது வேலை விஷயமா வெளியே போயிருப்பாரு. வந்ததும் நான் பார்த்துக்கறேன்.” என்றாள்.
அந்த சூழ்நிலையிலும் அவள் மற்றவர்களின் சோர்வைப் பற்றி நினைத்தது ராமமூர்த்தியின் மனதை நெகிழ வைத்தது.
“இல்லம்மா… அவன் வந்துட்டு இருக்கான் நீ உள்ள போய் ரெஸ்ட் எடும்மா…நாங்க கொஞ்ச நேரம் அவன் வர வரைக்கும் இருக்கோம்.” என்றார்.
வேறு வழியில்லாமல் தங்கள் அறைக்குச் சென்றாள் ரஞ்சிதா.
மற்ற அனைவரையும் தூங்க சொல்லி… ராம மூர்த்தி மட்டும் மகனுக்காக காத்திருந்தார்.
இரவு மணி பனிரெண்டை நெருங்க…வீடு முழுவதும் அமைதியாக இருந்தது.
திடீரென்று…”டிங்… டாங்…”என்று அழைப்பு மணி ஒலித்தது.
ராமமூர்த்தி அவசரமாக எழுந்து கதவைத் திறந்தார்.
வாசலில்…தள்ளாடியபடி நின்றிருந்தான் ராஜீவன்.
அவன் மீது மது வாசனை வீசியது.
சிவந்த கண்கள்… கலைந்த தலை…
சரியாக நிற்கக்கூட முடியாத நிலை.
அந்தக் காட்சியைப் பார்த்த ராமமூர்த்தியின் இதயம் ஒரு நொடி நின்றது போல இருந்தது.
“ராஜீவா…”என்று அழைத்தும்…அவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
ராமமூர்த்தியின் தோளைப் பிடித்து தள்ளாடியபடி உள்ளே வந்தவன்,அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் நேராக தன் அறைக்குச் சென்றான்.
மகனின் நிலையைப் பார்த்த ராமமூர்த்தியின் மனம் கனத்துப் போனது.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
கட்டிலில் இருந்து அமைதியாக எழுந்து நின்ற ரஞ்சிதாவை ஒரு கணம் கூட கவனிக்கவில்லை.
அப்படியே கட்டிலின் மீது குப்புறப் படுத்துக் கொண்டான்.
சில நொடிகளில்… அவன் ஆழ்ந்த மது மயக்கத்தில் உறங்க ஆரம்பித்தான். அவன் வந்த நிலையை ரஞ்சிதா உணர்ந்து கொண்டாள்.
அமைதியாக கட்டிலின் மீது கிடந்த போர்வையை எடுத்து அவன் மீது போர்த்திவிட்டாள்.
பிறகு…கீழே ஒரு பாயை விரித்து, தலையணையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
கண்களை மூடியிருந்தாலும்… அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
“இதுதான் என் திருமண வாழ்க்கையின் நிலையா…?”அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல…அந்த இரவுக்கு முடியவில்லை.