Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 9

அத்தியாயம் 9

ராமமூர்த்தியை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் அழைத்துச் சென்றதும், வெளியே நின்றிருந்த அவரது உறவினர்கள் மனதில் பதற்றம் மட்டுமே நிறைந்திருந்தது.

அம்பிகா கைகளை இறுகப் பிசைந்தபடி அவசர சிகிச்சை பிரிவின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராஜீவன் எதுவும் பேசாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய பிரச்சனைகளில் மூழ்கியிருந்தவன்… இப்போது தன் தந்தையின் உயிரைப் பற்றிய பயத்தில் உறைந்து போயிருந்தான்.



Advertisement

அவனது கண்களுக்கு,சற்று நேரத்திற்கு  முன்பு பேசிய ராமமூர்த்தியின் முகம்தான் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது.

“என் வீட்டுக்கு நீதான் மருமக…நீங்க ரெண்டு பேரும் பிரியணும்னு நினைச்சீங்கனா அது நான் உயிரோட இருக்குற வரைக்கும் நடக்காது”என சில மணி நேரங்களுக்கு முன்பு தந்தை சொன்ன வார்த்தைகள் அனைத்தும் இப்போது அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.

அப்போது…அவசர சிகிச்சைப் பிரிவின் கதவை திறந்து டாக்டர் வெளியே வந்தார்.அவரைப் பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்.

Advertisement

“டாக்டர்… அப்பா எப்படி இருக்காரு?” என்று பதற்றத்தோடு ராஜீவன் கேட்டான் .

Advertisement

மருத்துவர் கையில் இருந்த அறிக்கைகளைப் பார்த்தபடி,”அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு.கொஞ்சம் ஆபத்தான நிலையில தான் இருக்காரு” என்றார்.

அந்த ஒரு வார்த்தை அம்பிகாவிற்கு மயக்கத்தை தந்தது. “ஐயோ…” என்று மார்பில் கை வைத்துக் கொண்டார்.

தீபாவும்,ஆர்த்தியும் உடனே அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

Advertisement

“ஈசிஜி, எக்கோ எல்லாம் எடுத்துப் பார்த்தோம். இதயத்துக்கு ரத்தம் கொண்டு போகும் ரத்தக் குழாய்களில் ஒன்றில் ப்ளாக் இருக்கு.”என்றார்.

இதைக் கேட்ட ராஜீவனின் முகம் வெளிறியது.

இது அவருக்கு முதல் ஹார்ட் அட்டாக். ஆனால் ரத்தக் குழாய்களில் ப்ளாக் அதிகமாக இருப்பதால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் கொஞ்சம் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கும்.

ராம மூர்த்தியின் தற்போதைய நிலை ரஞ்சிதாவின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது.

“டாக்டர்… இப்போ மூர்த்தி நல்லா இருக்கான் தானே?”என ராஜசேகர் ஒரு அண்ணனாக பதறினார்.

இப்போதைக்கு அவர் ஸ்டேபிலா இருக்கார். ஆனால் உடனடியாக ஆஞ்சியோ செய்யனும்.

“அந்த ஆப்ரேஷன்னாலே ஏதாவது ஆபத்து இருக்கா டாக்டர்…?” என ஜெகன் கேட்டான்.

மருத்துவர் மெதுவாக,”ரிஸ்க் இருக்குதான். ஆனால் இப்போ இதை செய்யாம விட்டாதா அதிக ஆபத்து.நீங்க தைரியமா இருங்க. நாங்க தேவையான முன்னெச்சரிக்கையோட செய்றோம்.” என்றார்.

பின் நர்ஸ் சில ஃபாரம்களில் ராஜீவனை கையெழுத்து போடச் சொல்லி நீட்டினார்.

அந்த காகிதத்தை வாங்கிய ராஜீவனின் விரல்கள் நடுங்கின. அவனால் கையெழுத்துப் போட முடியவில்லை.
அவனது பார்வை அந்த ஃபார்மில் இல்லாமல்… அவசர சிகிச்சைப் பிரிவின் கதவிலேயே நிலைத்திருந்தது.

“அப்பா…”என்று மனதிற்குள் அழைத்தான்.சிறுவயதில் தான் கீழே விழுந்தபோது ஓடி வந்து தூக்கிய மனிதர்…பள்ளிக்குச் செல்லும்போது தன் தலைமுடியை கோதிவிட்ட மனிதர்… தான் தவறு செய்தபோதெல்லாம் கோபப்பட்டாலும், கடைசியில் தன்னை அணைத்துக் கொண்ட அதே மனிதர்…
இன்று ஒரு மருத்துவமனை அறைக்குள் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறார் என நினைத்த அவனது கண்கள் கலங்கின.

ராஜீவன் கையெழுத்து போட்டதும்… ராம மூர்த்தியை ஆப்ரேசனுக்குத் தயார் செய்தனர். அப்போது அங்கிருந்த செவிலியரிடம் தன் மகனையும் மருமகளையும் பார்க்க விரும்புவதாக கூற…ராஜீவனையும்,ரஞ்சிதாவையும் உள்ளே அழைத்தனர்.

இருவரையும் பார்த்தவர்,” ராஜீவா!” என தளர்ந்த குரலில் அழைத்தார்.

மிகவும் பலவீனமாக வந்த அந்தக் குரல் அவனை உலுக்கியது. உடனே அவன்  அருகில் சென்று, “அப்பா…”என தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டான்.அந்தக் கையில் வழக்கமாக இருக்கும் வலிமை இல்லை.

ராமமூர்த்தி மெல்ல சிரித்தபடி,சில நொடிகள் மூச்சைச் சீர்படுத்திக் கொண்டு,அவனது கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தார்.

ராஜீவா,அப்பா உனக்கு எப்பவும் நல்லது மட்டுந்தான் செய்வேன்…நீ கஷ்டப்படற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்.நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு நல்லது இல்லடா.அது உனக்கு வேண்டா… அது உன்ன கொஞ்ச கொஞ்சமா அழிச்சிரும்டா.அப்பா சொன்னா கேளுடா…

ராஜீவன் எதுவும் பேசாது தரையில் தன் கண்களைப் பதித்தான்.

ராமமூர்த்தியின் பார்வை மெதுவாக ரஞ்சிதாவைத் தேடியது.

அவள் ராஜீவனை விட்டு சில அடிகள் தள்ளி நின்றிருந்தாள். அவளது கண்களும் கலங்கியிருந்தன.

“ரஞ்சிதா…”என ராமமூர்த்தி அழைக்க, அவள் உடனே அருகில் வந்தாள்.

ராமமூர்த்தி அவளைப் பார்த்து,”என்னை மன்னிச்சிடும்மா.” என்றார்.

அவர் அடுத்த வார்த்தை பேசுவதற்குள், “மாமா… உங்க பொண்ணுகிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க?இப்போ உங்க உடல்நிலைதான் முக்கியம்.”என மேற்கொண்டு அவரை பேச விடாது, அந்த நிலையை சமாளித்தாள்.

“நான் கண்ணு மூடுறதுக்குல்ல… நீங்க ரெண்டு பேரும் மனசார சந்தோஷமா வாழறதே பாக்கனும்மா”
என்றார்.

ரஞ்சிதாவால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
அவளுக்குத் தெரியும்…
ராஜீவனின் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள்.அவனது வாழ்க்கையில் தான் ஒரு சுமையாகவே இருக்கிறோம் என்று…

அந்த எண்ணம் அவளை ஒவ்வொரு நொடியும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அப்படியிருக்க…
எப்படி மனசார சந்தோஷமாக வாழ முடியும்?அவளும் எதுவும் பேசாது கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.

ராமமூர்த்தி மீண்டும் ராஜீவனைப் பார்த்து, “எனக்கு ஒரு சத்தியம் பண்ணு” என்றார்.

என்னப்பா?”என்ற ராஜீவனின் இதயம் வேகமாக துடித்தது.

இந்த ஆப்ரேசன் முடிஞ்சு நான் உயிரோட வந்தாலும் சரி… வராம போனாலும் சரி…

“அப்பா, இப்படியெல்லாம் பேசாதீங்க…”
என்று அவரைத் தடுத்தான்.

ஆனால் ராமமூர்த்தி…தனது வலது கையை அவன் முன்னால் உயர்த்தி, “நான் சொல்லுறதை முதல்ல கேளு.” என்றார்.

ராஜீவன் அமைதியாக நின்றான்.

“இந்த ஆப்ரேசன் முடிஞ்சு நான் உயிரோட வந்தாலும் சரி… வராம போனாலும் சரி…உன் வாழ்க்கையே இனிமே நீ ஒழுங்கா வாழணும். நீயும், உன் மனைவியும் சந்தோஷமா  ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழணும்.எனக்கு பேரன்… பேத்தி வேணும்டா…

எனக்கு சத்தியம் பண்ணி கொடு ராஜீவா எக்காரணத்தை கொண்டும்…நீ அந்த கந்தசாமியோட சூழ்ச்சி வலைலே விழுந்தறே மாட்டேனு….உன் மனைவியோட சந்தோஷமா குழந்தை குட்டினு வாழ்வேனு…”என பரிதாபமாக அவனிடம் கையை நீட்டிவாறு இறைஞ்சி கேட்டார்…

அந்த வார்த்தைகள் அவனது நெஞ்சில் முள்ளாய் இறங்கின. தன்னை நோக்கி உயர்த்தி இருக்கும் தன் தந்தையின் கையை தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

“நீங்க சொல்ற மாதிரி நடக்கும்ப்பா… நீங்க நல்லபடியா திரும்பி வாங்க… நான் உங்களை ஏமாத்த மாட்டேன்.” என்று வாக்குக் கொடுத்தான்.

ராமமூர்த்தியின் கண்களில் திருப்தி தெரிந்தது.அவர் மெதுவாகத் தன் கையை அவனது தலையில் வைத்தார்.

அடுத்த நொடியே… வெற்றிகரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

ராஜீவனின் மனதுக்குள் மட்டும் ஒரு சூறாவளியே கிளம்பிக் கொண்டிருந்தது.
அவன் சில நொடிகள் கண்களை மூடினான். முதலில் பிரியாவின் முகம் நினைவுக்கு வந்தது.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன…”என்ற அவளது குற்றம் சுமத்தும் சொற்களும் விழிகளும் அவன் முன் வந்து போனது.

அதன் பிறகு… ரஞ்சிதாவின் முகம்.
திருமண நாளில் இருந்து தன்னை நம்பிக்கையோடு நோக்கும் அந்த விழிகள்…அவளை காயப்படுத்த இவன் உபயோகித்த வார்த்தைகள்…என ஒன்றன் பின் ஒன்றாக அவன் மனதில் ஓடினர்.

“நான் என்ன பண்ணிட்டிருக்கேன்?”
என்ன கேள்வி அவனது நெஞ்சில் குற்றவுணர்வை பெருக்கியது.

ஒரு பக்கம்… பிரியா. அவளிடம் கொடுத்த வாக்குறுதிகள்.

இன்னொரு பக்கம்… ரஞ்சிதா.எந்தத் தவறும் செய்யாமல், தன் வாழ்க்கைக்குள் வந்து சிக்கிக் கொண்ட ஒரு பெண்.

அதற்கும் மேலாக… அப்பா. தன் மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஆசையோடு உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்.

ராஜீவன் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டான்.
கண்ணீர் விரல்களுக்கு இடையே வழிந்தது.

ஒரு வாரம் கழிந்திருந்தது…
மருத்துவமனையில் ராமமூர்த்தி அனுமதிக்கப்பட்டிருந்ததால், வீட்டில் வழக்கமாகக் கேட்கும் அவரது குரல் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது.

அம்பிகா கணவர் அருகிலேயே இருந்து அவரை கவனித்துக் கொண்டார்.
ராஜீவனும் வேலைக்குச் செல்வதை குறைத்துக் கொண்டு, பெரும்பாலான நேரத்தை மருத்துவமனையிலேயே கழித்தான். ரஞ்சிதாவும் முடிந்தவரை அம்பிகாவுடன் மருத்துவமனையில் கழித்தாள்.

அந்த ஒரு வாரத்தில்… ராஜீவன் அவளிடம் அதிகமாகப் பேசவில்லை.
ஆனால்…முன்பு போல அவளை முற்றிலுமாக புறக்கணிக்கவும் இல்லை.

அவள் கொண்டு வரும் உணவை வாங்கிக் கொள்வான்.அவள் கேட்கும் சிறிய விஷயங்களுக்கு தலையசைப்பான்.
அவளது இருப்பை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான்.

ஆனால்…அவன் மனதுக்குள் இருந்த குழப்பம். மட்டும் இன்னும் அப்படியே இருந்தது.

அன்று மருத்துவர் ராமமூர்த்தியை பரிசோதித்துவிட்டு புன்னகையுடன்,
“இப்போ நல்லா இருக்கீங்க. இன்னும் சில நாட்கள் கவனமா இருக்கணும். அதிகமான வேலை கூடாது. டென்ஷன் கூடாது. நேரத்துக்கு மருந்து எடுத்துக்கணும். உணவு விஷயத்திலும் கவனமா இருக்கணும்.” என்றார்.

“டாக்டர்… எப்போ நான் வீட்டுக்குப் போகலாம்?”என்றார் ராம மூர்த்தி

“இன்றே…போகலாம்.”என்றதும்…அவரது முகத்தில் குழந்தைத்தனமான சந்தோஷம் தெரிந்தது.

அன்று மதியம்… ராமமூர்த்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல… ராஜீவன் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.அம்பிகா தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டார். ரஞ்சிதா அவருக்குத் தேவையான மருந்துகளை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

ராஜீவன் அவள் அருகில் வந்து… “எல்லா மாத்திரையும் எடுத்துட்டியா?”
என்றான்.

ரஞ்சிதா சிறிய ஆச்சரியத்துடன்,
“எடுத்துட்டேங்க…” என்றாள்.

அவ்வளவுதான் அவன் தலையசைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

சிறிது நேரத்தில்… ராமமூர்த்தி மெதுவாக நடந்து வந்து காரில் ஏறினார்.வீட்டின் வாசலில்…கார் வந்து நின்றதும்…ராமமூர்த்தியை பார்க்க அக்கம் பக்கத்தினர் சிலர் வாசலுக்கு வந்தனர்.

“வாங்கண்ணா… இப்போ எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்…”என்று ஒவ்வொருவரிடமும் புன்னகையுடன் பதில் சொன்னார்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன்… ஒரு நொடி அப்படியே நின்றார்.இரு வாரம் மருத்துவமனையில் இருந்தவருக்கு…
அந்த வீட்டின் வாசனை கூட புதிதாகத் தோன்றியது. வாசலில் ரஞ்சிதா போட்டிருந்த கோலம்…சுவரில் இருந்த கடவுள் படங்கள்… சமையலறையிலிருந்து வந்த சாம்பார் மணம்…எல்லாமே அவரை ஏதோ ஒரு விதமாக நெகிழச் செய்தது.

அம்பிகாவின் சமையலும் கவனிப்பும் அவருக்கு புதுத் தெம்பு தர இரு வாரங்களில் நன்கு தேறினார்.

அன்று மாலை காற்று வாங்க வெளியில் அமர்ந்திருக்க ராஜீவன் வேலை முடிந்து அப்போதுதான் உள்ளே வந்தான்.

ராஜீவா…என அழைக்க…அவனும் கீழே அமர்ந்து கொண்டான்.அவன் கைகளை பிடித்தபடி,” சிறிது நேரம் பேசியவர்… நான் கேட்டதை மறந்துடாதே…”
என்றார்.

ராஜீவனின் முகம் உடனே மாறியது.
அவனுக்குத்தான் தெரியுமே…தந்தை எதைப் பற்றி பேசப் போகிறார் என்று.

“அப்பா… இப்போதான் ஹாஸ்பிடல்ல  இருந்து வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க.”
என்று பேச்சை மாற்ற முயன்றான்.

ஆனால் ராமமூர்த்தி விடவில்லை.
“நீங்க ரெண்டு பேரும் மனசார வாழ ஆரம்பிக்கணும்.” என்றார்.

அவனது மனதிற்குள் மீண்டும் மீண்டும் அதே இரண்டு முகங்கள் மோதின.
பிரியா… ரஞ்சிதா…

“திருமணம் நடந்துடுச்சு… இனி எப்படி இருந்தாலும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகணும்…”என்று மனதை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால்… மனம் மட்டும் அதற்கு சம்மதிக்கவில்லை.

அந்த குழப்பத்தோடும், வேதனையோடும்… அன்றிரவு இருவரும் கணவன்-மனைவியாக இணைந்தனர்.
அது காதலால் நடந்ததல்ல… ஆசையாலும் நடந்ததல்ல… ஏற்கனவே நடந்த திருமணத்தை எப்படியாவது வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நடந்தது.

அந்த இரவு முடிந்தது…ஆனால் ராஜீவனின் மனக்குழப்பம் மட்டும் முடியவில்லை.

ரஞ்சிதாவுடன் வாழ்வது பிரியாவுக்குச் செய்யும் துரோகம் என்ற குற்றவுணர்வு அவனைத் தொடர்ந்து வாட்டியது.  இந்த வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு நாட்களை நகர்த்தினான்.

இரண்டு மாதங்கள் கழித்து… ரஞ்சிதாவின் கர்ப்பம் உறுதியானது.
அந்த செய்தி ராம மூர்த்திக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தந்தது.

அதே நேரத்தில் ராஜீவனுக்கு குஜராத்தில் ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டில் வேலை கிடைத்தது.

“கொஞ்ச நாள் தூரமா இருந்தாலாவது இந்த குழப்பத்திலிருந்து விடுபடலாம்…” என அந்த வாய்ப்பை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டான்…

வீட்டை விட்டு கிளம்பும் முன் ரஞ்சிதாவிடம் எதுவும் சொல்லாமல்…
குஜராத்தை நோக்கிப் புறப்பட்டான்.

–கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!