ஜெகன் வீடு கட்டும் வேலையை தொடங்கி விட்டான். அவனின் இவ்வளவு வேகத்தை மீனாவே எதிர்பார்க்கவில்லை. அவளுக்குத்தான் அவனைப் பற்றி தெரியுமே கையில் காசு இருந்தால் பெரும்போடு இல்லாவிட்டால் வெரும்போடு என்று மீண்டும் மாறி விட்டானா?…
“இப்பவே என்ன அவசரம் வீடு கட்ட.. உங்க தொழில் இன்னும் கொஞ்சம் நல்லா வரட்டும். அத்தோடு பிள்ளைகள் பெருசான பாத்துக்கலாம்” என்றதற்கு..
“கையில இருந்தாலும் சேமிப்பா இருக்கட்டும்.. ஒரு வீடு கட்டணும்னா எப்படியும் ஐம்பது லட்சத்துக்கு குறையாமல் வரும்”
“நாம போட்டு இருக்கிற பிளான் அதுக்கும் மேல தான் வரும். ரொம்ப யோசிக்காம, ஆராயாமல் இறங்க மாட்டேன் மீனா. நீ வீணா கவலைப்படாத” என்னதான் கணவன் ஆறுதல் சொன்னாலும் அவளுக்கு பயமாக தான் இருந்தது.
Advertisement
அடுத்த நாளே ஜெகன் மனைவியை தன் கடைக்கு அழைத்து சென்றான். இதற்கு முன்பு வந்தாலும் வரவு, செலவெல்லாம் மீனாவுக்கு தெரியாது. மனைவியின் பயம் கண்ட பின், அவளிடம் வருமானத்தை காட்டினான் ஜெகன். அவளுக்கு பெரிதாக எதுவும் புரிய வில்லை. அவள் நடத்தும் சின்ன கடையில் அவள் கெட்டி தான். இதெல்லாம் புதிது. ஆனால், புரிந்து கொள்ள கூடிய ஒன்று ஜெகன் மிகவும் நன்றாக தொழில் செய்கிறான். நல்ல வருமானமும் கூட…
Advertisement
“ரொம்பவும் அடிபட்டு, செத்து பிழைத்து வந்து இருக்கேன் மீனா. இந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன். எனக்கு மூணு பிள்ளைகள் இருக்கு.. என் பொறுப்பு தெரியும்” பொறுமையாக மனைவிக்கு விளக்கினான்.
ஒரு பெரு மூச்சு தான் மீனாவுக்கு…
“உங்க பொறுப்பில் நானும் இருக்கேனா?” என்றாள் மீனா.
Advertisement
முகம் கனிய, “நீ எனக்குள்ள தான் இருக்க.. தனியா எல்லாம் உன்னை விட முடியாது” கடமையையை தாண்டிய ஒரு பேச்சு நடத்த ஜெகன் தொடங்க..
லேசாக சிரித்து பேச்சை குடித்து கொண்டு எழுந்தாள் மீனா. முகம் சுருங்கி போனது ஜெகனுக்கு… பிடி கொடுக்காமல் நழுவி கொள்கிறாள். முன்பு போல அல்லாமல் இப்போதெல்லாம் சாதாரண கணவன், மனைவியாக தான் இருக்கிறார்கள்.
பிள்ளைகளை பற்றி பேச ஆயிரம் இருக்கும் பெற்றவர்களுக்கு… வீட்டுக்கு என்று சொல்லி கொண்டு ஜெகன் மனைவி, மக்களுக்கு அவ்வளவு வசதிகளை செய்து கொடுத்தான். எதையுமே மறுக்க வில்லை மீனா. சில நாட்களில் குடும்பமாக வெளியே போவார்கள். நிறைய சிரிப்பு கொண்டாட்டம் இருக்கும். விவரம் தெரியாத வயதில் தன் பிள்ளைகளுக்கு எந்த அளவுக்கு சிரமத்தை கொடுத்தானோ அதை எல்லாம் ஈடு கட்டும் வகையில் பார்த்துக் கொண்டான் ஜெகன்.
மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு மனைவி பட்ட அத்தனை துன்பத்திற்கும் ஜெகனின் பொறுப்பில்லா தன்மை தான் காரணம். நிச்சயம் அவளால் மறக்க முடியாது. அந்த வலியை கடக்கும் அளவுக்கு நன்றாக வைத்துக் கொள்ள நினைத்தான். அதன்படி நடந்தும் கொண்டான். எப்படி இருப்பினும் இந்த உலகில் ஜெகனுக்கான வாழ்க்கை மனைவியும், பிள்ளைகளும் தான். அதை தாண்டி அவன் யோசிக்கக்கூட மாட்டான். எத்தனை குறைகள் இருந்தாலும் பொண்டாட்டி பிள்ளைகள் மீது அவன் கொண்ட பாசத்தை குறை சொல்ல முடியாது. அதை உணர்ந்தே இருந்தாள் மீனா. அதனால்தான் இத்தனைக்கு அப்புறமும் ஜெகனோடு ஒரு வாழ்க்கையை கொண்டு செல்ல முடிகிறது.
பெற்றவர்களாக சேர்ந்து இருப்பவர்கள் கணவன், மனைவியாக இடைவெளியில் நின்றார்கள். இந்த சில நாட்களில் ஒரே படுக்கையாக இருந்தாலும் பிள்ளைகள் மூவரும் ஒரு பக்கமும் கணவன், மனைவி ஒரு பக்கமும் தான் உறங்கிக் கொள்கிறார்கள். லேசாக உரசிக் கொண்டும், மற்றவர்கள் வாசனையை உணர்ந்து கொண்டும் தான் உறக்கம். ஆனாலும் அதை தாண்டி செல்ல முடியவில்லை ஜெகனுக்குள் நிறைய ஏக்கம், ஆசை. அவன் அறியாத மனைவியா நெருங்க எல்லாம் தயக்கமில்லை. ஆனால், நெருங்கிய பின் பிரளயமாகி போனால் என்ன பண்ணுவது என்ற கவலை தான். நீண்ட வருடங்கள் சென்ற மனைவியின் வாசம் அவனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. அதை அடக்க முடியாமல் தான் உருண்டு கொண்டிருந்தான்.
“தூக்கம் வரலைன்னா ஹாலுக்கு போங்க. நாங்க தூங்கி காலைல வேலைய பார்க்க வேண்டாமா?” என்று மனைவி சத்தம் போட,
“நீ தூங்கு” என்று சலித்துக் கொண்டே ஜெகன் வெளியே வந்து விட்டான்.
சண்டை போட்ட போது சேர்த்து வைக்க குடும்பமே நின்றது. இப்போதெல்லாம் இவரின் அக்கா கூட இந்த பக்கம் வருவதில்லை. சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றியவர்கள் சேர்ந்த பின் தள்ளி நின்று கொண்டார்கள் தனிமையை தருகிறார்களாம். தனியாக உறங்குவதற்கு எதற்கு தனிமை?…
மீனாவின் அம்மா கூட இந்த பக்கம் வருவதில்லை. ஒருவேளை புது கல்யாணமாக இருந்தால் இதை எல்லாம் மகளிடம் கேட்டு தெரிந்து கொண்டிருப்பார். மூன்று பிள்ளை பெற்ற பெற்றவர்களிடம் என்னவென்று கேட்பது.. இதையெல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை.
மூன்று பிள்ளை பெற்றால் என்ன? கணவனுக்கு மனைவி மீது ஆசை வராத? வரவில்லையே மீனாவுக்கு..
மீனாவின் வேலையை குறைக்க இன்னும் ஒருவரை கடைக்கு வேலைக்கு அனுப்பி இருந்தான் ஜெகன். மீனாவின் வேலைக்குறைய முகத்தில் களை வந்தது. நல்ல ஓய்வு அவளுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது. ஒருவேளை நிம்மதியான வாழ்க்கை கூட முகத்தில் பொலிவை கொடுக்கலாம். ஜெகன் தான் பக்கத்தில் வைத்துக் கொண்டு தள்ளி நிற்க முடியாமல் அல்லாடினான்.
தான் கோபித்துக் கொண்டு வெளியே வந்தால், மனைவி தன்னை தேடி வருவாள் சமாதானம் செய்யலாம் என்று காத்திருந்தான் ஜெகன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் வேலை செய்த அலுப்பில் மீனா நன்றாக உறங்கி விட்டாள்.
“அடிப்பாவி! என்ன இப்படி உறங்குகிறா?.. ஒட்டுமொத்தமா என்ன வெறுத்துட்டாளோ.. பிள்ளைகளுக்காகத்தான் கிட்ட சேர்த்துக்கிட்டாளா?” கவலையாக இருந்தது ஜெகனுக்கு…
ஒருவேளை குழந்தை பெற்ற பின் பெரும்பாலும் பெண்களுக்கு இதில் ஆர்வம் குறைந்து போகும் என்பார்கள். அப்படி தானோ?.. நாமும் வகை தெரியாமல் வரிசையாக கேப் இல்லாமல் மூன்று பிள்ளைகளை பெற்றாச்சு. பாவம் மீனா முழுசாக தாம்பத்திய வாழ்க்கையை வெறுத்துட்டா?.. பொண்டாட்டி இல்லாத சன்னியாச வாழ்க்கை போய், இப்போது பொண்டாட்டி இருந்தும் சன்னியாசியாக வாழனுமோ?…
விட்டத்தை பார்த்து கட்டான் தரையில் படுத்து விட்டான் ஜெகன். முன்பு போல கணவன் என்ற உரிமை எடுத்து அவளை அடக்கியாள நினைக்கவில்லை. புருஷன் பொண்டாட்டி என்றால் தாம்பத்தியம் மட்டும் கிடையாது தான். அதற்காக தாம்பத்தியம் இல்லாமலும் கிடையாதே?… ஆசையை அடக்கும் வழி தெரியாமல், மனைவியை வற்புறுத்தவும் மனம் இல்லாமல் உருண்டு கொண்டிருந்தான் ஜெகன்.
மீனா எப்போதும் போல அதிகாலையில் வேலையை ஆரம்பிக்க, ஜெகனும் தன் கடமையாக சூடாக டீ போட்டுக் கொண்டு வந்து வைத்தான். இப்போது சகஜமாக டீ குடித்துக் கொண்டே தம்பதிகள் இருவரும் எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.
“இன்னைக்கு என்ன மெனு மீனா?”
“என்ன பெரிய மெனு?.. எப்பவும் போல இட்லி, தோசை, சட்னி, சாம்பார் தான்” என்கவும்,
கண்டுபிடித்தாள் என்று அசட்டு சிரிப்பை சிரித்தவன் “பாவம் மீனா பிள்ளைங்க ஹாஸ்டல் மாதிரி நடத்துற நீ.. இப்பதான் வேலைக்கு ஆள் இருக்காங்களே.. நீ அப்படியே மேற்பார்வை பார்த்துக்கிட்டே பிள்ளைகளுக்கு வேற சமைச்சு கொடேன்”என்றான் கெஞ்சலாக..
“ஆக பொண்டாட்டி கஷ்டப்படுறாளேன்னு வேலைக்கு ஆள் வைக்கல. உங்க பிள்ளைகளுக்கு விதவிதமா சமைச்சு போட ஆள் வச்சிருக்கீங்க” என்று இடக்காக கேட்க.
“ஐயோ! மீனா” என்று அவள் கையை பிடித்தவன், “நிஜமாவே உன் மேல உள்ள லவ்வுல தான் இதெல்லாம் செஞ்சேன். இதுக்கும் பிள்ளைகளுக்கும் முடிச்சு போடாத. நைட் மட்டுமாவது பிள்ளைகளுக்கு புடிச்ச மாதிரி மெனு ஏற்பாடு பண்ணுங்க மேடம்” என்றான்.
“பார்க்கலாம்” என்றாள் பிகுவாக…
“கொஞ்சம் மனசுவை மீனா” என்று கெஞ்சி கொண்டே, அவள் கையை தட்டிக் கொடுத்தவன் மெல்ல மேல ஏறி அவள் தோளை தடவிக் கொடுத்தான்.
ஐந்து நிமிடத்திற்கு மேலாக அவளை சமரசம் செய்வதுபோல சமாசாரம் செய்து கொண்டிருக்க,
“என்ன நாலாவது பிள்ளை வேணுமா?” என்றாள் மீனா பட்டென்று..
திகைத்துப் போனான் ஜெகன் அவன் நினைத்துக் கொண்டிருந்தான் மலர் பிறக்கும் போது ஆபரேஷன் செய்துதான் பிறந்தாள். அதனால் அப்போதே மீனா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டாள் என்று நினைத்திருக்க.. அப்படி இல்லையோ?..
“உன் மூஞ்சிக்கு மூணு பிள்ளை பத்தாதாமா” வெடுக்கென்று கேட்க.
அதையெல்லாம் அசால்டாக தட்டி விட்டவன், “சந்தோஷமா ஒரு குழந்தையை பெத்துகணும் மீனா”
“மிச்ச மூணு பிள்ளைகளுக்கும் அழுதிட்டேவா என் பக்கத்துல வந்த”
“வெடுக்கு வெடுக்குன்னு பேசாத மீனா. ரொம்ப சந்தோசமா நாம எந்த பிள்ளையும் பெத்துக்கல துன்பத்திலும், துயரத்திலேயும் தான் குழந்தை பெத்துக்கிட்டோம். ஒரு குழந்தையாவது இன்பத்துல பெத்துக்கணும். கொஞ்சம் மனசு வை மீனா” மெல்ல மெல்ல முன்னேறினான்.
“ஆளை பாரு.. இன்பமா? அடுத்து மகிழ்ச்சி, ஆசைன்னு போவ போல.. மகராசனுக்கு ஏழு பிள்ளை கேட்குதாக்கும். மூணு பிள்ளையோட முடிச்சுட்டேன்” என்றதும்,
“அதானே உனக்கு மாமன் மேல உள்ள ஆசை பத்தி எனக்கு தெரியுமே!.. கண்டுக்காம இருக்கும்போதே நினைச்சேன்”
“என்ன நினைச்சீங்க”
“மூணு பிள்ளை பிறந்ததற்கு பின்னாடி எல்லாம் ஆஃப் மோடுக்கு போயிருச்சு” என்றதும்,
கையில் இருந்த செம்பை தூக்கி அவன் மீது எறிந்தவள், “பேச்சை பாரு. தண்ணி கொதிக்கிது ஓடி போயிடு” என்று சத்தம் போட, ஓடி விட்டான் ஜெகன்.
ஆனால், தன் முயற்சி மட்டும் கைவிடவில்லை மனைவிக்கு தன் மீது அவ்வளவு வெறுப்பு கிடையாது என்று அறிந்தவன் வேதாளமா தொடர்ந்தான்.
அன்று அப்படித்தான், தலையில் பூ வைத்து பூவாக இருந்த மனைவியை வாசம் பிடித்தவன் “
“என்ன மீனா உன் மேல ஒரு வாசம் வருது”
“என்ன வாசம்” என்றவளை அழுத்தி பிடித்து முகர்ந்தவன்,
“என்னமோ நம்ம கல்யாணமான புதுசுல உன் மேல ஒரு வாசம் வருமே அப்படி இருக்கு” உல்லாசமாக பேசியவனை பார்த்து,
“இப்ப மல்லிகைப்பூ எண்ணெய்ன்னு ஒன்னு புதுசா வந்திருக்கு. அதை வாங்கி பசங்களுக்கு தேச்சு விட்டேன். ஒருவேளை அதுவா தான் இருக்கும். பாருங்க” என்று கையை அவன் முகத்துக்கு நேரா நிட்டு..
“நான் என்ன சொன்னாலும் எனக்கு நோஸ்கட் கொடுக்கணுமா? நல்லா வருவ நீ” என்று சிணுங்கி கொண்டே நகர்ந்தான் ஜெகன்.
கணவனின் பார்வை அவளுக்கா புரியாமல் போகும்.. ஆனாலும் என்னவோ ஒரு தடை அதை தாண்ட தெரியவில்லை.
அன்று உறங்கும் போது அவளை அணைத்துக்கொள்ள,
“என்ன இது? டெய்லி உரசிட்டு தான் தூங்குவீங்க இது என்ன முன்னேற்றமா?”
“பக்கத்துல எதுவும் இல்லாம தனியா தூங்க ஒரு மாதிரியா இருக்கு மீனா” என்றான்.
“இப்படி என்னை புடிச்சா.. எனக்கு தூக்கம் வராது”
“அசதியில நான் தள்ளி படுத்தாலும் என் மேல படுத்து உருளுவா.. காலம் மலையேறி போச்சு” என்றதும்,
“உருண்டதும் போதும், வரிசையா மூன்று பெத்ததும் போதும் சலிச்சு போச்சு” என்றவளை எழுந்து பார்த்தவன்,
“நீயில்லாம வேற யாரு? இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேக்குற மூஞ்சிய பாரு” என்றதும்,
“இந்த வியாக்கியானத்தை அப்பவே நீ கடைபிடித்து இருக்கணும். இருக்க மட்டும் இடம் கொடுத்தா நான் எதுக்கு இன்னைக்கு..” என்று ஆரம்பித்தவனின் வாயில் அடி போட்டவள்,
“பொண்டாட்டி பின்னாடி தானே பரவாயில்லை” அவளை விட்டுவிட தயாராகவே இல்லை ஜெகன்.
“எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு..
என்னவாம் என்றவன் தன்னையே பார்த்து கொண்டான். தான் எதுவும் அசிங்கமாக இருக்கிறோமா?
அவனைப் பார்த்தவள் “காலம் ஓடிப் போச்சு. இனி புதுசா கையை தொட்டு, காலத் தொட்டு வைக்கப்பட்டு.. இனி எனக்கு எல்லாம் ஒண்ணுமே தோணாது விட்டுடுங்களேன்” என்றவளை அதிர்ந்து பார்த்தவன்,
“என்பது வயசுல பேச வேண்டியது இப்ப பேசிட்டு இருக்க மீனா. இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல” என்று அவளை தூக்கி கொண்டான்.
“ஐயோ! என்ன பண்ற”
“ஹாலுக்கு போலாம்”
“அச்சோ பெரிய பிள்ளை முழிக்கிற மாதிரி தெரியுது” என்றதும், ஜெர்க்காகி பார்த்தவன் அப்படி எதுவும் இல்லை என்றதும் அவளை முறைத்து பார்த்து, அவளோடு தான் நகர்ந்தான்.
நேருக்கு நேர் சண்டை போட்டவர்களுக்கு இந்த சமாதான உடன்படிக்கையில் நிறைய தயக்கம். தெரியாததும் புரியாததும் கிடையாது. பார்த்து பழகாதவனும் கிடையாது. ஆனாலும் விழுந்த ஒரு நீண்ட இடைவெளி அவளுக்குள் பெரிய தயக்கத்தை, அன்னியத்தை கொடுத்தது.
“எனக்கெல்லாம் அப்படி இல்லப்பா.. என் நினைப்பு முழுக்க உன் மேல தான்” அவளை சாய்த்தான் ஜெகன்.
அவன் மார்பில் விழுந்தவள், அவன் கை இடையை தடவ, துள்ளினாள் மீனா.
“மாமான்னு சொல்லு மீனா. எல்லாம் சரியா போகும்”
“ஆமா நான் புதுசா கல்யாணம் பண்ண பருவச்சிட்டு உன்னை கொஞ்சுறாங்க” அந்த நேரத்திலும் அவனிடம் பகடி பேசினாள்.
“இந்த வாய் இருக்கே” என்றவனின் முதல் முற்றுகை அங்கு தான்.
“மாமா சொல்லுடி”
“முடியாது. என்னை விட்டு தள்ளி போ..” அப்போதும் அவனை விளக்குவதில்லை குறியாக இருக்க,
“மாமா சொல்லாம நானும் விடுறதா இல்லடி” என்றவன் மீனா மாமா என்று அலறும் வரை விடவில்லை.
நடு ராத்திரியை எட்டி இருந்தது. பௌர்ணமி வானம் அழகாக தெரிய, மீனா உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு பக்க கதவை திறந்து வெளி வாசலில் அமர்ந்து இருந்தான் ஜெகன்.
புரண்டு படுத்தவளுக்கு என்னமோ வித்தியாசமாக தெரிய எழுந்து பார்த்தாள். அவன் அருகே சென்று தோள் தொட,
அவளின் கையை பிடித்து கொண்டவன், “தேங்க்ஸ்” என்றான்.
அவள் ஏன் என்பது போல பார்க்க, “நிஜமா நான் நினைக்கவே இல்லை. எப்படியும் உன் கூட சேருவேன்னு நினைச்சேன். ஆனாலும், உன் காதல் மாறாம இருக்குன்னு நினைக்கல. சின்ன வயசுலயே அவசரத்திலும், ஆசையிலும் கல்யாணம் குழந்தைன்னு ஓடிட்டாலும்.. இவ்வளவு கஷ்டத்துக்கு அப்புறமும் நமக்கான காதல் இருக்கு. எனக்கு சொல்ல வார்த்தையே இல்லை. நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கற ஆழமான காதல். எந்த இடத்திலும் நம்மள ஒன்று சேர்த்துறது. நீ மட்டும் இல்லாம போயிருந்தா வழி மாதிரி ஒண்ணுமே இல்லாம போயிருப்பேன். உனக்கு நான் என்ன செய்வேன் மீனா” என்றான் லேசாக கண்கள் கலங்க..
“முதல்ல நீங்க தப்பு. நான் சரின்ற எண்ணத்துல இருந்து வெளிய வாங்க. ஒரு உறவு கடைசி வரைக்கும் நன்றி உணர்ச்சியோடே கொண்டு போக முடியாது. எத்தனையோ கணவன் மனைவிக நம்மள தாண்டியும் கஷ்ட நஷ்டத்தை கடந்து வந்துட்டு தான் இருக்காங்க. ஏதோ ஒரு இடத்துல நம்ம கூட மேல ஏறிட்டோம். நிறைய பேரு அதோடவே வாழ்ந்துட்டு போயிடறாங்க”
“சில நேரம் என் மேலே கோபமா இருக்கும். உனக்கு என்ன அப்படி அவன் மேலன்னு.. உங்க மேல கோபம் வெறுப்பு இருந்தாலும் உங்களுக்கு ஏதாவது ஆகிரனும்ன்னு எல்லாம் நான் நினைக்கவே மாட்டேன். என்னோட காதல் உங்ககிட்ட ரோஷத்தோட இருக்க விடல. கோபப்பட்டு ஒதுக்கி வச்சேன். கடைசி வரை தனியா நிக்க நினைக்கல” என்றவள்,
அவனின் தோள் சாய்ந்து, “கடவுள் நமக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும், அந்த கஷ்டத்திலிருந்து விடுவிக்க சொல்லி திரும்ப நாம கடவுளைத்தான் தேடுவோம். அந்த மாதிரி தான் நானும் உங்களை சுத்தி மட்டும் தான்” என்றதும் அவளை இறுக அணைத்து கொண்டவன்,
“என்ன நம்புர தானடி மீனா” என்றான் கண் கலங்க.
“நிச்சயமா மாமா. நம்பிக்கை இல்லாம அடுத்த ஒரு அடிய யாராலும் வைக்க முடியாது. நான் உங்களை முழு மனசோடு நம்புறேன்”
“நிச்சயம் மீனா. என்னால வாய் வார்த்தையா சொல்லி புரிய வைக்க முடியாது. ஆனால், இனி உன் கூட வாழ்ற வாழ்க்கை என்னோட காதலை புரிய வைக்கும். இந்த மாமனுக்கும் உன்னை தாண்டி எதுவும் இல்லடி. நீ இல்லாம எல்லாம் எனக்கு வாழவே தெரியாது. இந்த அவசரக்காரன் சாவுல கூட உனக்கு முந்தி போனும்” என்றதும் அவன் வாய் மேல் ஒரு அடி வைத்து,
“என்ன பேச்சு இது?” என்றாள் கோபமாக..
“என் காதலை சொன்னேன்”
“அதை நீங்க சொல்லவே வேணாம். அந்த காதல் புரிஞ்சதால தான். இன்னைக்கு இந்த வாழ்க்கை” என்றவளை அழுத்தி பிடித்தவன், அவளோடு மூழ்க.
தன் பலத்தை திரட்டி கணவனை தள்ளி விட்டவள், “திரும்ப உங்க காதலை காட்டுனா, காலையில நான் எழுந்தரிக்க முடியாது. பிள்ளைகளை யார் பாக்குறது. போங்க இளம் வயசு பையனாட்டம் துள்ளாம” சடவாக சொல்வது போல உள்ளே சென்று விட்டாள்.
சிரித்த முகமாக அவளை பின் தொடர்ந்தான், கண் மூடி படுத்திருந்த அவளை தன் பக்கம் சாய்க்க,
“நிஜமா முடியல. தூங்கணும் மாமா” என்றவளை, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்,
“இப்படியே தூங்கு” என்றான்.
மீனா தலையை திருப்பி பிள்ளைகளை பார்க்க, “எப்படியும் நாம தான் முதல்ல முழிப்போம். அப்புறம் என்ன பயம் மீனா தூங்கு” என்று தட்டி கொடுக்க. நிம்மதியாக கண் மூடினாள் மீனா. மனைவியை அணைத்து அவனும் நிம்மதியாக உறங்க தொடங்கினான்.
ஒரு வருடத்திற்கு பின்…
புது பொலிவோடு நிமிர்ந்து நின்றது ஜெகனின் வீடு. அன்றுதான் பால் காய்ச்சி முடித்தார்கள். கிளி பச்சை வண்ண சேலையும் வைரக்கல் அட்டியையும் என்று மீனா ஜொலித்தாள். குடும்பமாக நிற்கும் மகளைப் பார்த்து பரமுக்கு பெருமை தாங்கவில்லை. ரோசக்காரி ஜெயித்துக் கொண்டாளே!…
தற்போது பரமு மகள் வீட்டோடு இருந்து கொண்டார். மூன்று ஆண் மக்கள் இருந்தாலும் அவர் தனியாகத்தான் இருந்தார். இங்கு மூன்று பிள்ளைகள் இருக்க நிச்சயம் அவர் துணை தேவை என்று ஜெகன் நினைத்தான்.
மீனா கடையில் இருக்கும் போது பிள்ளைகளை பார்த்துக் கொள்வார். சில நேரங்களில் மகளுக்கு ஒத்தாசையாக அவரும் கடையில் இருப்பார். வயதான காலத்தில் அவரை தனியாகவும் விட முடியாது.
மருமகன் அழைத்ததும் சந்தோஷமாக இருந்தாலும் மகள் வீட்டிலா என்ற தயக்கம் முதலில் இருந்தது.
ஜெகன் தான் “எனக்கு பெரியவர்கள் என்று யாரும் இல்லை அத்தை. நீங்கள்தான் உடன் நின்று வழிநடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டான்” மீனாவுக்கும் சந்தோசமே!..
நல்ல விஸ்தாரமான இடம் வீடும் அதற்கு பக்கத்திலேயே சற்று தாராளமாக்கி கடையை விரிவுபடுத்திக் கொடுத்தான் மனைவிக்கு.. அத்தோடு இன்னும் ரெண்டு பேரை வேலைக்கு வைக்க மீனாவுக்கு தான் விருப்பமில்லை அப்படி ஒன்னும் பெரிய கடை இல்லையே…
ஆனால், ஜெகன் விடவில்லை, “நீ உன் தொழில நல்லா நடத்துற மீனா. அதே நேரத்துல குடும்பத்தையும் பார்க்கணும். நீ ஒரு பக்கம் நான் பக்கம்ன்னு ஓடிட்டு இருக்கோம், பிள்ளைக வளந்துட்டு வராங்க. இந்த நேரத்துல என்னை விட உன்னுடைய கவனிப்பு தான் அதிகம் தேவை” என்று புரிய வைத்தான்.
மீனா திரும்பி பெரிய மகளைப் பார்த்தாள். ஒன்பது தொடக்கத்தில் மகள் இருந்தாள். இப்போதெல்லாம் தாய் தந்தையை அருகில் விடாமல் அவளை தான் குளித்து கொள்கிறாள். இன்னும் ரெண்டு, மூன்று வருடம் தான் மகள் பெரிய பிள்ளையாகி விடுவாள். கணவன் சொன்னதன் காரியம் புரிய அவன் வார்த்தைக்கு உடன்பட்டாள்.
விசேஷம் நல்லபடியாக முடிந்து வந்திருந்த சொந்தங்களை எல்லாம் அனுப்பி வைத்து நிமிர, தன் சின்ன மகளை தூக்கி வைத்து தன் நாட்களோடு பேசிக் கொண்டிருந்தான் ஜெகன். மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டாலும் நல்ல அழகன் தான். தன் உடம்பில் தான் மூன்று பிள்ளை பெற்று அடையாளம் தனியாக தெரிகிறது. இடுப்பு ஒரு பக்கம் வயிறு ஒரு பக்கம் என்று வித்தியாசமான உடல் அமைப்பாகிவிட்டாள் மீனா. இப்போதெல்லாம் இந்த பூசிய உடல்வாகையும் மூன்று பிள்ளைகள் கொடுத்த தொப்பையையும் சரி செய்ய முடிவதில்லை. இதோடவே வாழ பழகி விட்டாள். கோடு விழுந்து தொங்கி போன வயிற்றையும் முத்தம் கொடுத்து கொஞ்சி சிலிர்க்க வைக்கும் கணவனை நினைத்து முகம் சிவந்தாள்.
மனைவியை கவனித்தவன் பிள்ளையை மாமியாரிடம் விட்டு, “என்ன மீனா. பார்வை பலமா இருக்கு”
“மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு இருக்க மாமா”
முகம் பூரித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “என்னடி அரைக்கிழவன் ஆயிட்டேன்”
“அப்படியா என் கண்ணுக்கு அதெல்லாம் தெரியலையே மாமா” என்றாள் ரசனையாக.. மனைவியை பெருமை பொங்க பார்த்த ஜெகனின் கண்களிலும் காதல் வழிந்தது. நிறைவான காதல் குறைவாக எதையும் நினைக்காதே…
காதலிப்பதா பெரிய விஷயம். எத்தனை கஷ்டம் வந்தாலும் அந்த காதலில் நிலை நின்று ஜெயிப்பது தானே விஷயம். திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் வாழ்க்கை. அவர்களை நல்முறையில் வளர்த்தெடுப்பதல்லவா வாழ்க்கை. கஷ்டம் வரும்போது நொந்து கொள்வதா காதல். எத்தனை கஷ்டத்திலும் கைவிடாமல் கரை சேர்வது அல்லவா காதல்!…