இப்படிக்கு, – 07
இப்படிக்கு,
அத்தியாயம் – 07
Advertisement
முகத்தில் பதட்டம் மிகுதியாக,சமயலறையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்,சித்ரா.காலையுணவை செய்து முடித்தவருக்கு,கணவரிடம் இருந்து அழைப்பு வர,அவர் சொன்ன செய்தியில்,தலையில் இடி விழுந்த உணர்வு.
“என்னம்மா..? பேயறஞ்ச மாதிரி இருக்க..? என்னாச்சு..?” காஃபியை குடித்து முடித்து விட்டு,டம்ளரை கழுவியவாறு கேட்டான்,அஜய்.
Advertisement
Advertisement
“டேய் உங்கப்பா இப்போ ஃபோன் பண்ணாருடா..உங்க அண்ணனுக்கு பொண்ணு பாத்து இருக்காராம்..” கூறும் போதே,அவருக்கு பதட்டம்.
வினய்யும்,அவர் சொல்லியதை கேட்டு அதிர்ந்து விட்டான்.பற்றிக் கொண்டு கோபம் வந்தது,அவனுக்கு.அத்தனை எரிச்சலாய் வர,தாய் மீது எரிந்து விழுந்தான்.
Advertisement
“என்னம்மா அப்பாவுக்கு..? கிறுக்கு புடிச்சி இருக்கா மா..?அவரு இஷ்டத்துக்கு அவன் வாழ்க்கய முடிவு பண்ணி கிட்டு இருக்காரு..” கடுகடுத்தவனை,பாவமாய் பார்த்தார்,சித்ரா.
“நா என்னடா பண்றது..?” அவர் முகத்திலும் கவலை அப்பிக் கிடந்தது.கணவரை எதிர்த்துப் பேசி பழக்கமில்லாத பெண்மணி அவர்.
கணவர்,ராமச்சந்திரன் ஒன்றும்,கொடுமைக்காரர் அல்ல.மனைவியை மதித்து அவருக்குரிய கண்ணியத்தை தந்து,வீட்டு வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அன்பான கணவர்,அவர்.
பிறருக்கு தீங்கு நினைக்காத மனிதரும் கூட.தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவருக்கு தொழிலிடத்திலும்,மற்றைய இடங்களிலும் நல்ல மரியாதையும் உண்டு.நெறி தவறாத அறம் மீறா,வாழ்க்கையை வாழ்பவரிடம்,குறை சொல்வதற்கும் எதுவும் இருப்பதில்லை.
ஒரு விடயம் தவிர,மகனின் வாழ்க்கையை தன் இஷ்டத்துக்கு வளைக்க நினைத்திடும் அந்த செயலைத் தவிர,மனிதரிடம் எந்தவொன்றையும் குறை காண இயலாது;இயலவே இயலாது.
“அப்பா கிட்ட பேசேன் மா..” ஆதங்கத்துடன் உரைத்தவனுக்கு,ஏன் தான் அண்ணனின் விடயத்தில் மாத்திரம்,தந்தை இத்தனை முரண்டு பிடிக்கிறாரரோ என்கின்ற ஆற்றாமை படர்ந்து விரிந்தது.
“நா சொல்லி உன் அப்பா கேக்காத விஷயம் இல்லடா தம்பி..ஆனா,இந்த விஷயத்துல மட்டும்,அவரு தன்னோட முடிவு தான் சரின்னு ஒத்தக் கால்ல நிக்கறாரு..நானும் எத்தன தடவ தான் பேசறது..”
அவனின் தாயாகவும்,அவரின் மனைவியாகவும் யோசித்து,இயன்றவரை அவரும் முயன்று பார்த்ததாயிற்று.கணவர்,கொஞ்சமும் இறங்கி வர,மறுக்கையில் அதற்கு மேலும்,அவர் என்ன தான் செய்திட..?
தன் நிலையை நினைக்கையில்,அவருக்கு பெருமூச்சு வர,கணவர் வரும் அரவம் கேட்டது.வேலை விடயமாக வெளியே சென்றிருந்த ராமச்சந்திரன்,இப்போது தான் வீடு வருவது.
வந்தவரோ,சித்ராவிடம் பேசியவாறு சமைத்திருந்த உணவுகளை மேசையில் எடுத்து வைத்து விட்டு,சித்ராவையும் உடன் அழைத்து அமர வைத்து அவருக்கும் சேர்த்து பரிமாறியவாறு,சாப்பிடத் துவங்கி இருந்தார்.
வினய்யை,சாப்பிட அழைத்திட,அவனோ அவர் மேலிருந்த எரிச்சலில் வெளியே வராமல்,அறைக்குள் அடைந்து கொண்டான்.
“பெரியவன் வந்ததும் நானே விஷயத்த சொல்றேன்..நீ எதுவும் சொல்லாதமா..” அவர் தன்மையாய் வினவிட,மனைவியவர் சரியென்று ஒப்புக் கொண்டாலும்,அவரின் தாயுள்ளம் பரிதவித்தது.
ராமச்சந்திரன் கிளம்பிச் சென்றதும்,கூடத்துக்கு வந்த வினய்யோ,அவர் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு அடுத்த நொடி,அழைப்பெடுத்திருந்தான்,அண்ணன் அவனுக்கு.
●●●●●●●
*அபினவ்வின் கதை..*
அவ அழுத்தம் என் மனசுக்கு ஒப்பாம போக,அவள திட்டி கிட்டே நா திரும்பிட்டேன்..ஆனாலும்,அன்னிக்கி நாள் ஃபுல்லா அடிக்கடி அந்தக் கண்ணும் அந்த அழுத்தமான பார்வயும் என் மைன்ட க்ராஸ் பண்ணிட்டே இருந்துச்சு..
மே பி,அவளோட அந்தப் பார்வ தான்,அவ எனக்கு வித்யாசமா தோண ஃபர்ஸ்ட் ரீசனா இருந்து இருக்கனும்..ரெண்டு நாள்,மைன்ட்ல இருந்தா..அப்றம் அவள நா காணல..அப்டியே மறந்தும் பொய்ட்டேன்னு நா நெனச்சி கிட்டு இருந்தேன்..
அவளுடனா நிகழ்வுகளை மறந்து விட்டேன் என்று நினைத்திருந்தேன்,அவளின் ஒற்றை தரிசனம் அழகாய் கூறி விட்டுப் போனது,இத்தனை நாள் அது என் மனதுக்குள் வெறுமனே மறைந்து மட்டுமே இருந்தது என்று.
அன்னிக்கி,எங்க காலேஜ்ல மேனேஜ்ம்ன்ட்கு எதிரா,காலேஜ் வாசல்ல ஒரு பிக்கட் ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க..
புதுசா மாறுன மேனேஜ்மன்ட்கும் ஸ்டூடன்ஸ்கும் இடையில ஏகப்பட்ட பிரச்சின..ஸோ,ஸ்டூடன்டஸ் நாங்க எல்லாரும் களத்துல எறங்கிட்டோம்..
அதெல்லாம்,காலேஜ் லைஃப்ல ஒரு மெமரபிள் மூமண்ட் தான்..கறுப்பு துணிய நெத்தில முடிஞ்சிகிட்டு ஷர்ட் கைய முட்டி வர இழுத்து விட்டு கெத்தா பசங்க எல்லாரும் கேட் வாசல்ல இருந்தாங்க..
அவங்களுக்கு சளச்சவங்க இல்லன்னு,கைல எதிர்ப்பு தெரிவிக்க மாதிரியான சென்டன்ஸ் எழுதுன போர்ட்ஸ புடிச்சிகிட்டு பொண்ணுங்க வேற..
நா பயந்தவன் கெடயாது..பட்,கொஞ்சம் அமைதியானவன்..
இப்டிலாம்,பிக்கட் நடந்ததுன்னா முழுசா சப்போர்ட் கொடுத்தாலும்,கூட்டமா சேந்து கத்துறது மட்டுந்தான்,என்னால முடியுமானது..
ஒத்த ஆளா தனியா நின்னு,மைக்க பிடிச்சி கூட்டமே ஆவேசமாகற மாதிரி கத்த என்னால முடியாது பா..ஸோ,அன்னிக்கிம் அப்டி தான்,ஃப்ரெண்ட்ஸ் க்ரூப்போட சேந்து நானும் சத்தம் போட்டு டயர்டாகி நின்னுட்டு இருக்க,பொண்ணுங்க பக்கம் இருந்து ஒரு வாய்ஸ் அப்டியே என் கவனத்த திருப்புச்சு..
சட்டுன்னு திரும்புனா..
எஸ்,அவ தான்..அவளே தான் நின்னுட்டு இருந்தா..அதே மாதிரியான முக்கா கையோட காட்டன் சுடிதார்..வீ ஷேப்கு ஷால் போட்டு இருந்தா..
முதுகு வர தான்,அவ மொத்த முடியும் இருக்கும் போல..அத பின்னி இருந்ததால,அது கழுத்தோட நின்னு போயிருந்துச்சு..எங்களா மாதிரியே,அவளும் நெத்தில கறுப்புப் பட்டிய கட்டி இருந்தா..கைல ஒரு போர்ட்..ஃப்ரெண்ட்ஸ் கூட சின்னதா ஸ்மைல் பண்ணி பேசிட்டே,சத்தம் போட்டு கத்துனா பாருங்க..
கைலயும் கறுப்புத் துணிய அவ கட்டி இருந்தது,கைய தூக்கி அவ கத்தும் போது தான் தெரிஞ்சுது..அவ கண்ணுல தெரிஞ்ச அழுத்தம்..ஒரு மாதிரி கம்பீரமான அந்த வாய்ஸ்..எல்லாத்தயும் தூக்கி சாப்பட்ற,மாதிரி வைட் கோட்டோட அவ நின்னுகிட்டு இருந்த கோலம்..அசத்தலான கெத்து அது..
ஷார்ட்டா,சொல்லப் போனா,அந்த டைம் அவள பாக்கும் போது, எனக்கு வித்யாசமான ஒரு ஃபீல்..ஜஸ்ட் லைக் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு சொல்லுவாங்க..அந்த ஃபீல்..
அவ்ளோ,ஆளுமயா இருந்தா அவ..கண்ணு முழி விரிய,அவள மட்டுந்தான் பாத்துட்டு இருந்தேன்..சுத்தி பல பேர் இருக்க,அவ மேல தான்,என் ஃபோகஸ் முழுக்க..
அழுத்தமும் ஆளுமையுமாய்,திகழ்ந்தவளிடம் இருந்து என் விழிகளை என்னால்,திருப்ப இயலாமல் தான் போயிருந்தது,சில கணங்களுக்கு.
எப்பவுமே,பொண்ணுங்கன்னா அழகா இருக்கனும்னு சொல்லுவாங்க..எனக்குமே,சராசரியான விருப்பமா எனக்கு வரப் போற வைஃப் எனக்கேத்த மாதிரி அழகா இருக்கனும்னு ஒரு தாட் இருந்தது..பட்,அந்த செக்ண்ட் அவள மாதிரி கெத்தாவும் இருந்தா நல்லாருக்கும்னு,ஒரு தாட் சடன்னா மின்னலா வந்துப் போச்சுங்குறது உண்ம..
அவ அழகா எனக்கு தோணல..ஏன்னா,பாத்ததுமே பட்டுன்னு ஒட்டிக்கிற மாதிரி கலராவோ மூக்கும் முழியுமாவோ அவ இல்ல..நார்மல் தான்..
பாத்ததுமே,அவ அழகா எனக்கு தோணல தான்..ஆனா,அழகுன்னு நா நெனக்கிறது ஒடச்சி நொறுக்கி,என்னோட கண்ணோட்டத்தயே மாத்தப் போறது,அவ தான்னும் எனக்கு தோணலங்குறது தான் உண்ம..
செம அழகான பொண்ணுன்னு,ஒன்னு ரெண்டு பேர பாத்து நா நெனச்சது உண்டு..பட்,செம கெத்தான பொண்ணுன்னு மொத மொதலா தோண வச்சது,அந்த மகராசி தான்..
“என்ன இவ்ளோ கெத்தா இருக்கா..?” யோசிச்சி கிட்டு இருக்கும் போதே,ரித்விக் தொண்டய செருமுனான்..
வெறிச்ச மாதிரி ஷாக்கோட,நா அவளயே பாத்து கிட்டு இருக்குறது அவன் கண்ணுல தப்பாம விழுந்துருக்க,சந்தேகமா தான் என்ன பாத்தான்..
“என்ன மச்சி சைட்டா..?” மெதுவா,காதுல குனிஞ்சு அவன் கேக்க,ஓங்கி ஒரு மிதி அவன் கால..”சைட்லாம் இல்ல..” கடுகடுத்துட்டே,மொறச்சேன் அவன..
“அப்போ..?” அவன் சந்தேகம் அடங்கல போல..”ரொம்ப கெத்தா இருக்கா..” அவ்ளோ தான்னு,நானும் பதில் சொல்ல,அவனும் ஒத்து கிட்டான்..
ஏன்னா,நா அப்டி பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு திரியுற ரகம் இல்லன்னு அவனுக்கு நல்லா தெர்யும்..அவனும் அப்றம்,எதுவும் தோண்டித் துருவல..
ரெண்டு நாள் கழிச்சி வீட்டுக்கு வந்தேன்..ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நாள் லீவ் கெடச்சுது..
வீட்டுக்கு வந்ததும்,நல்ல கவனிப்பு..நல்லா தூங்கி அடுத்த நாள் காலைல எழுந்ததும்,அம்மா வந்தாங்க..
வந்தவங்க,ரெண்டு மூனு வரன் வந்துருக்கு அபின்னு,சொல்லவும் சரின்னுட்டு நானும் பாத்தேன்..பட்,எதுவும் மனசுக்கு படல..
அம்மாவுக்கு அதுல ஒரு பொண்ண ரொம்ப புடிச்சி இருந்துருக்கும் போல..நா வேணாம்னதும் அவங்களுக்கு கோவம் வந்துருச்சு..எதுவும் பேசாம,எந்திரிச்சு பொய்ட்டாங்க..
அப்டியே,நைட்டும் வர,நா ஐ பேட்ட பாத்து நோட்ஸ் எடுத்து கிட்டு இருந்தேன்..கைல காஃபியோ அம்மா பக்கத்துல வந்து உக்காந்து கிட்டாங்க..
நா என் வேலய செஞ்சு கிட்டே,அம்மாவோட பேச்சுக்கு காது கொடுத்து பதில் சொல்லி கிட்டு இருந்தேன்..
“உனக்கு எப்டிடா அப்போ பொண்ணு பாக்க..?” அவங்க கேக்க,நா பதில் சொன்னேன்..சொல்றப்போ,எதுவும் தெரில..அவ்ளோ ஆழமா மனசுல பதியல..ஆனா,அம்மா திரும்ப சொல்லவும் தான்ன்ன்ன்ன்ன்ன..
“அப்போ நல்ல கெத்தா தைரியமா அழுத்தமான பொண்ணு தான் பாக்கனுமா உனக்கு..?” தாயவர் யோசனையுடன் கேட்கும் போது,கோடி மின்னல் இதயத்தில் வெட்டிச் சென்ற உணர்வில் திரும்பிய, என் உயிர் உறைந்து போயிருந்தது.
●●●●●●●●
“என்ன ஆகாஷ் இது..?” சிணுங்கியவளோ,அவனுக்கு சில வார்த்தைகளை திட்டுக்களாக வழங்கி விட்டே,அழைப்பை துண்டித்திருந்தாள்.
கட்டிலில்,இளம் நீல நிற சேலையொன்று,மடித்து வைக்கப்பட்டிருந்தது.அதை தழுவிய அவள் பார்வை,தொடர்ந்து கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தை உரச,ஏனோ சிணுக்கமாய் வந்தது.
சேலை கட்டுவது,அவளுக்கு பிடிக்காது.அவனோ,அவளுக்கென பார்த்து பார்த்து வாங்கிய சேலையை கட்டி வரச் சொல்லியிருக்க,சிறு கோபம் எழுந்தாலும்,அவனின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லவும் மனமில்லை,அவளுக்கு.
தவிப்பும் வெட்கமுமாய்,சேலையை உடுத்தி விட்டு தன் விம்பத்தை ஆராய,அவள் விழிகளிலுமே கொஞ்சம் பிரமிப்பு தெரியத் தான் செய்தது.
“அழகா இருக்க யாழி..” தன்னைத் தானே,கொஞ்சிக் கொண்டவளுக்கு புதிதாய் ஒரு நாணப் படபடப்பு.அடிக்கடி,அவள் மனதில் எழும் கனம் கூட,இப்போது முற்றாய் அமிழ்ந்து போனது போல் தோன்றிட,அவளிதழ்களில் மலர்ந்த முறுவலொன்று.
கூந்தலை தளர்வாய் பின்னி,முன்னே போட்டுக் கொண்டவளோ,பொருத்தமான ஜிமிக்கியொன்றையும் காதில் மாட்டிக் கொள்ள,அவள் அவளுக்கே,புதிதாய் தெரிந்தாள்.
கழுத்தில் மெல்லிய செய்னுடன்,கண்ணாடி வளையல்கள் கைகளில் இடம் பிடித்திருக்க,கீழே வந்தவளுக்கு திருஷ்டி கழித்திருந்தார்,அவளின் தாயார்.
“அழகா இருக்கடி..”அவர் கன்னம் தொட்டுச் சொல்ல,அவளுக்கோ ஆணவனின் எதிர்வினை என்னவாக இருக்குமோ என்று நினைக்கையில் உள்ளுக்குள் வெட்கம் மேலிட,வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது.
அடுத்த சில நிமிடங்களில்,அவன் கூறிய இடத்துக்கு வந்திறங்க,அந்த உணவகத்தில்,அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்காதது,யோசனையைத் தர,அவனுக்கு தான்,அழைப்பெடுத்தான்.
அழைப்பு ஏற்கப்பட,”ஆகாஷ்” என்று அவள் கூறும் முன்பே,”ஃபர்ஸ்ட் ப்ளோர்கு வா..” என்றான்,ஆணவன்.குரல் சிறு பேதத்துடன் ஒலித்ததை,அவள் உணரவில்லை.
“நம்மள அலய வக்கிறதே வேலயா போச்சு..” என்று முணுமுணுத்துக் கொண்டே,படிக்கட்டுக்களில் ஏறினாலும்,ஏனோ அதீதமாய் வெட்கம் வந்தது.
அவளுக்கே அவள் அழகாகத் தெரிய,இதில் அவனை எப்படி எதிர்கொள்வதாம் அவள்..? பெண்மை வெகுவாய் தவித்து நிற்க,ஒவ்வொரு படியைக் கடக்கையிலும் தேகத்தினுள் தள்ளாட்டத் துளிகள் ஒன்று கலந்திடும் உணர்வு.
அவனைக் காணும் முன்பே,அத்தனை சிவந்திருந்தாள்.எந்நாளும் இல்லையென்றாலும்,எப்போதாவது அவளின் பார்வை துளைக்கும்.அந்தக் கணங்களில் செத்துத் தான் பிழைப்பாள்,அந்த விழிவீச்சில் இருந்து தப்ப முடியாமல்.
இதோ,இன்று,அவன் விருப்பத்துக்கு சேலை அணிந்து அவனை சந்திக்க வந்திருக்க,அவனை..
அவன் பார்வையை..
அவன் சீண்டலை..
அவன் முகபாவங்களை..
எப்படித் தான்,தாங்குவதாம்..?
யோசித்தவளுக்கு,அப்படியே திரும்பிப் போனால் என்னவென்று தோன்றியது.
இது என்ன புதுவிதமான படபடப்பு என்று அவளுக்கு புரியவேயில்லை.நாணம் என்றாலும்,இப்படி முகம் சிவந்து தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம், என்று பெண்மை அவளின் மனசாட்சியிடம் சண்டை பிடித்தது.
இதயம் சந்தம் தப்பித் துடிக்க,தேகமெங்கும் விரவிப் பரவ துவங்கி மென் உஷ்ணத்தில்,அவள் உயிர் உருகிக் கரைந்திட,எச்சில் கூட்டி விழுங்கியவாறே படிக்கட்டுக்களை கடந்து கொண்டிருந்தவள்,சட்டென ஏதோ தோன்ற விழி நிமிர்த்திட,அப்படியே நின்று விட்டாள்.
அவன் தான்,அவளை அளவெடுத்தவாறு மேற்படியில் நின்றிருந்தான்.ஒற்றைக் கையில் பேன்ட் பாக்கெட்டில் நுழைத்து பாதங்களை அகலமாய் தரையில் ஊன்றியிருக்க,விழிகளில் இரசனையைத் தாங்கி அவன் ஊடுருவும் பார்வை பார்த்திருக்க,சட்டென அவளிமைகள் தாழ்ந்தன.
தாழ்ந்த இமைகள் ஒரு கணம் நிமிர்ந்து,அவன் விம்பம் களவாடி விட்டு,மீளவும் விழிகளுக்கு கொஞ்சமாய் தாழிட,அவளின் பாவனையில் எழுந்த புன்னகையை,இதழ் கடித்து அடக்கினான்,ஆணவன்.
தொடரும்.
🖋️அதி..!
2026.05.24
