இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-14
வானத்திலிருந்த மேகங்கள் அத்தனையும் கருமேகமாய் உருவெடுத்து சூரியதேவனை தனக்குள் மறைத்துக்கொள்ள, மழை வருவதற்கான வானிலை அறிகுறிகளுடன் ஜில்லென்ற தென்றல் காற்று மேனியை தீண்டி செல்லும் அழகினை இரசித்தவாறு ஆழினியின் வருகைக்காக இல்லத்திலிருக்கும் தோட்டத்தில் காத்திருந்தான் விஜய சிவமாறன்.
அவனை வெகுநேரம் காக்க வைக்காமல் அவ்விடத்திற்கு வந்தவளை கண்டு மெலிதாக சிரித்தவன்
“உட்கார்ந்து பேசலாமா?” என்று வினவிய சிவாமறனின் மனதில் இனம்புரியாத அளவிற்கு படபடப்பு தொற்றி கொள்ள, அவனிடம் சரியென்பதை போல் தலையசைத்த ஆழினியும் அதே நிலையில் தான் தவித்து கொண்டிருந்தாள்.
மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்கும் சரக்கொன்றை மரத்திற்கு சற்று தெலைவிலேயே அதனுடன் போட்டிப்போடும் அளவிற்கு மாமரமும் செழுமையாய் வளர்ந்திருக்க, அவ்விரு மரங்களுக்கு நடுவில் கருங்கல் கொண்டு மேசையும் அதனை சுற்றி அமர்வதற்கு நாற்காலியும் அமைக்கப்பட்டிருந்தது.
Advertisement
மரத்தடி நிழலும் குளுமையான தென்றல் காற்றும் மனதிற்கு இதமளிக்க, அதனை சிறிதும் உணராத இருவரும் தங்கள் மனதில் யார் முதலில் பேசுவதென்று பலவித குழப்பத்தில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
தன் கடந்த காலத்தையும் குறிப்பாக தன் மனதிலுள்ளதையும் தன்னெதிரிலிருப்பவளிடம் கூறவேண்டுமென்று நினைத்தவன்
“ஆழினி…. நான்….” என்று சிவமாறன் ஏதோ கூற வருவதற்குள்
Advertisement
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டமில்ல….” என்று கூறிய ஆழினியை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.
Advertisement
தன்னெதிரில் அமர்ந்திருப்பவனை தீர்க்கமாக நோக்கியவள்
“என் தம்பிக்காகவும் பருவதம்மாக்காகவும் தான் உங்க கிட்ட பேசுறதுக்கு நான் சம்மதிச்சேன்…. ஆனா கல்யாணம்…. அது எனக்கு வேண்டாம்….” என்று கூறிய ஆழினியை கண்டு மெலிதாக சிரித்தவன்
“ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று வினவிய சிவமாறனை இயலாமையுடன் பார்த்த ஆழினியின் கண்கள் சட்டென்று கலங்க ஆரம்பிக்க அதை தனக்குள் சிரமப்பட்டு மறைத்தவள் விஜய சிவமாறனிடம் தன் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூற தொடங்கியிருந்தாள்.
Advertisement
ஆறு வருடங்களுக்கு முன்பு….
ஆழினியின் தந்தை பெயர் சந்தான கிருஷ்ணன். சிறு வயதிலிருந்தே கடவுளின் குழந்தைகள் வசிக்கும் இல்லமான ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர், கல்லூரி வரை நன்றாக படித்துமுடித்து வேலைக்கு சென்றதும் அங்கேயே வளர்ந்த ஆதிலட்சுமியை காதலித்து கரம்பிடித்தார். அவர்களின் காதலுக்கு பரிசாக கிடைத்தவர்கள் தான் ஆழினியும் இன்பனும்.
சந்தான கிருஷ்ணன் பணிபுரிந்த இடத்தில் சந்தித்த நண்பர் தான் ஆறுமுகம். பழகிய சிறு தினத்திலேயே இருவரும் உயிர் நண்பராய் மாறிப்போக, ஆறுமுகத்தின் மனைவி ராணியும் ஆதிலட்சுமியும் உற்ற தோழிகளாகினர். அவர்களின் தொடர்ச்சியை பின்பற்றும் விதமாய் அவ்விரு ஜோடிகளின் குழந்தைகளான ஆழினி, இன்பன் மற்றும் நீலவேணி மூவரும் நண்பர்கள் வட்டத்தில் ஐக்கியமாகியிருந்தனர். மூவரும் ஒரே பள்ளியில் படிக்க, ஆழினியை விட இரண்டு வயது சிறியவர்களான இன்பனும் நீலவேணியும் ஒரே வகுப்பில் படித்து பதின்பருவகாலத்தில் தங்களின் காதலை வளர்க்க தொடங்கிவிட்டனர்.
இருவரும் காதலிக்க தொடங்கிய சிறிது நாட்களிலேயே தங்கள் காதலை ஆழினியிடம் கூறிவிட, அடுத்த நாளே தங்களின் தாய் தந்தையர்கள் முன்பு நின்றிருந்த ஆழினியுடன் இன்பனும் நீலவேணியும் நின்றிருந்தனர். வயிற்றில் பயப்பந்துகள் உருண்டோடி கொண்டிருக்க தன்னெதிரில் அமர்ந்திருந்த பெற்றோர்களின் பதிலுக்காக காத்திருந்த இன்பன் மற்றும் நீலவேணியின் காதலுக்கு பெரியவர்கள் நால்வரும் நிறைவான மனதுடன் பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.
நன்றாக படித்துமுடித்து வேலைக்கு சென்ற பிறகு குறிப்பாக ஆழினியின் திருமணம் முடிந்த பிறகே இன்பன் மற்றும் நீலவேணியின் திருமணம் நடைபெறும் என்று பெரியவர்கள் தீர்மானமாய் கூறிவிட, அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் ஆழினிக்கு நன்றி கூறி அவளை அணைத்து கொண்டனர்.
தன் தம்பியின் காதலுக்கு உதவியவள் காதலின் பிடியில் சிக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நன்மதிப்பை பெற்று அவள் விரும்பிய செவிலியர் துறையை தேர்ந்தெடுத்திருந்தாள். ஆழினி செவிலியர் துறையில் தன் முதுகலை படிப்பின் இறுதியாண்டு படித்துமுடிக்கும் தருவாயில் தான் அவளது அன்னை ஆதிலட்சுமி திருமணத்தை பற்றி கூற முதலில் மறுத்தவள் தன் தந்தை சந்தான கிருஷ்ணனின் கூற்றுக்கு கட்டுப்பட்டு தன் பெற்றோர்களுக்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள்.
ஆழினியின் சம்மதத்தை கேட்டு மகிழ்ந்த இருவரும் அலசி ஆராயாமல் தேடிய மாப்பிள்ளை தான் எழிலரசன். ஆழினி முதுகலை படிப்பை படித்த கல்லூரியில் மருத்துவர் துறையில் படித்த சீனியர் மாணவரான எழிலரசன் தன் கல்லூரி படிப்பை படித்து முடிக்கும் தருவாயில் அவளிடம் தன் காதலை கூற, அவனது காதலை மறுத்தவள்
“சாரி, எனக்கு லவ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல…. நான் எங்க அப்பா அம்மா பார்க்குற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன்….” என்று ஆழினி கூற, அவள் இதை தான் தன்னிடம் கூறுவாள் என்று முன்பே அறிந்தவன் சிறிது நாட்கள் கழித்து தன் தாய் தந்தையருடன் அவர்களின் இல்லத்திற்கு ஆழினியை பெண் கேட்டு வந்துவிட்டான்.
ஆழினி கூறிய அனைத்தையும் அவளின் பெற்றோர்களிடம் ஒப்பித்தவன்
“ஆழினி படிச்சு முடிக்கிற வரை நான் வெயிட் பண்றேன் சார்…. உங்க விருப்பம் எதுவாயிருந்தாலும் எனக்கு ஓகே தான்….” என்று எழிலரசன் கூற, தன் காதலை ஏற்றுக்கொள் என்று வற்புறுத்தாமல் ஆழினியின் கூற்றிற்கு இணங்க பெற்றோருடன் பெண் கேட்டு வந்திருப்பவனின் குணம் சந்தான கிருஷ்ணனுக்கும் ஆதிலட்சுமிக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
இருவருக்கும் எழிலரசனை பிடித்தாலும் ஆழினியின் விருப்பமே எங்கள் விருப்பம் என்று கூறியவர்கள் அவளின் பதிலுக்காக காத்திருக்க, தன் பெற்றோர்களின் விருப்பத்தை அவர்களின் பார்வையாலேயே அறிந்தவள் எழிலரசனை திருமணம் செய்ய சம்மதித்திருந்தாள்.
ஆழினியின் பதிலை கேட்டு சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியுடன் அமர்ந்திருந்த ஆறுமுகமும் ராணியும் மகிழ்ச்சியடைய, ஆழினி மற்றும் எழிலரசனை கிண்டலடித்த இன்பனும் நீலவேணியும் அவ்விடத்தையே கலகலப்பாக மாற்றியிருந்தனர். அவர்களின் குடும்பத்தையும் ஒற்றுமையும் கண்ட எழிலரசனின் தந்தை கலைவாணனின் மனம் மகனின் வாழ்க்கை அவன் விருப்பப்படி நல்ல இடத்தில் அமைந்ததை நினைத்து ஆனந்தமடைய, அவரருகில் அமர்ந்திருந்த எழிலரசனின் அன்னை மகேஷ்வரியின் முகத்திலோ சிரிப்பு என்பது சிறிதளவும் இல்லாமல் மனதில் கோபத்துடன் அமர்ந்திருந்தார்.
மருத்துவனாய் பணிபுரியும் தன் மகனுக்கு அதே துறையிலிருக்கும் பெண்ணையே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார் மகேஷ்வரி. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் மருத்துவம் படிக்கும் அவரது தம்பி மகளை எழிலரசனுக்கு திருமணம் செய்து குடும்ப சொத்துக்களை தன்னிடமே வைத்து கொள்ள திட்டம் தீட்டிய மகேஷ்வரிக்கு எழிலரசனின் காதல் அதிர்ச்சியையும் அதைவிட அதிகமாய் செவிலியரான ஆழினியின் மீது வெறுப்பையும் வளர்த்துவிட்டது.
தன் காதலை பற்றியும் காதலியை பற்றியும் எழிலரசன் கூறும்போது மறுப்பு தெரிவித்த மகேஷ்வரியிடம் மகனின் வாழ்க்கையை முன்நிறுத்தி அவரை தற்சமயம் சமாதானப்படுத்தி ஆழினியின் இல்லத்திற்கு அழைத்து வந்தார் கலைவாணன். ஆனால் பணத்தின் மேலிருந்த ஆசை மட்டும் மகேஷ்வரிக்கு தீர்ந்தபாடில்லை. நிலைமை கைமீறி போனலும் தன் மகனுக்காக சற்று மனமிறங்கியவர் அவரது பணத்தாசையை ஆழினியின் பெற்றோரிடம் பூடகமாக காட்டும் நாளுக்காக காத்திருந்தார்.
மூன்று மாதத்தில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று பெரியவர்கள் முடிவெடுத்திருக்க, ஆழினி மற்றும் எழிலரசனின் திருமண வேலையானது விறுவிறுப்பாக நடைபெற ஆரம்பித்திருந்தது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நேரத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் மருத்துவ ஆலோசனை கூட்டம் ஒன்றில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய நிலை எழிலரசனுக்கு ஏற்பட, இரண்டு வாரத்தில் திரும்பிவிடவதாக கூறிவிட்டு டெல்லிக்கு சென்றுவிட்டான். இதற்காகவே காத்திருந்தது போல் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருந்தார் மகேஷ்வரி.
திருமண வேலையில் மூழ்கியிருந்த கலைவாணனுக்கு தெரியாமல் ஆழினியின் இல்லத்திற்கு சென்றிருந்தார் மகேஷ்வரி. ஆழினியின் இல்லத்தில் சந்தான கிருஷ்ணனும் ஆதிலட்சுமியும் மட்டுமே இருக்க, மகேஷ்வரியை இன்முகமாய் வரவேற்றவர்களிடம் பெயருக்கென்று பேசியவர் தான் வந்ததுக்கான நோக்கத்தை கூற தொடங்கியிருந்தார்.
“நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல…. என் பையனுக்கு டாக்டர் பொண்ணு தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்…. இவ்வளவு ஏன்? என் தம்பி பொண்ணும் டாக்டர் தான் ஆஸ்திரேலியாவுல படிக்கிறா, அவளுக்கும் இவனுக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டோம் ஆனா அவன் என்னவோ கடைசியில லவ்வு கிவ்வுன்னு உங்க பொண்ணை வந்து காட்டிட்டான்…. என் பையனோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம், இருந்தாலும் என் சொந்தத்துக்கு நடுவுல வெறும் வீட்டிலிருந்து மருமகளை நான் கூட்டிட்டு வந்துட்டேன்னு காட்டமுடியுமா?” என்று மகேஷ்வரி கூறியதை கேட்டு ஆழினியின் பெற்றோர்கள் இருவரும் அதிர்ச்சியிலிருக்க, அவர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்திருந்தார் எழிலரசனின் தாயார்.
“பொண்ணுக்கு அம்பது பவுன் நகை, பத்து லட்ச ரூபா ரொக்கம், கட்டில், பீரோ, ட்ரெஸிங் டேபிள், கார், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், வீட்டுக்கு தேவையான பாத்திரம் பண்ணடம்னு எல்லாமே முறைப்படி செஞ்சிடுங்க…. என்ன அப்படி பார்க்குறீங்க? இதெல்லாம் நானென்ன வச்சு அனுபவிக்கவா போறேன்? எல்லாம் உங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தான? டாக்டர் மாப்பிள்ளைக்கு இது கூட பண்ணலன்னா எப்படி? எல்லாம் சரியா இருக்கும்னு நம்புறேன்….” என்று கூறியவர் இத்தனை நேரம் பேசிய அனைத்தும் தன் மகனுக்கும் கணவருக்கும் தெரிய கூடாதென்று சந்தான கிருஷ்ணன் மற்றும் ஆதிலட்சுமியை எச்சரித்துவிட்டு சென்றிருந்தார்.
மகேஷ்வரியின் திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆழினியின் பெற்றோர்கள் எழிலரசனின் குணத்திற்காக குறிப்பாக மகளின் சந்தோஷத்திற்காக அவர் கூறிய அனைத்தையும் செய்துவிடலாம் என்று ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக இது ஆழினிக்கும் அவளிடம் அனைத்தையும் ஒப்பிக்கும் இன்பனுக்கும் தெரிந்துவிடவேக்கூடாதென்று முடிவெடுத்திருந்தனர். ஒருவேளை மகேஷ்வரியின் இச்செயலானது ஆழினிக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்று அவளது பெற்றோர்கள் அவளுடன் நிச்சயம் உயிருடன் இருந்திருப்பார்கள், விதி யாரை விட்டது? நல்லவர்களுக்கு தான் சோதனை காலமென்பது என்றும் அழியாக்காலமாய் இருக்கிறது.
தெரிந்தவர் தெரியாதவரென்று அனைவரிடத்திலும் கடன் வாங்கி மகேஷ்வரி கேட்ட அனைத்தையும் எழுபத்தி ஐந்து சதவீதம் செய்து முடித்திருந்தார் சந்தான கிருஷ்ணன். மீதமிருந்த இருபத்தி ஐந்து சதவீதத்தை நிறைவு செய்ய சொந்த இல்லம் கட்டுவதற்காக வாங்கிய நிலத்தை விற்க முடிவெடுத்திருந்தனர் ஆழினியின் பெற்றோர்கள்.
தங்கள் இஷ்ட்ட தெய்வமான அம்மன் கோயிலுக்கு சென்று வழிப்பட்டுவிட்டு அங்கேயே நிலத்திற்கான காசோலையை பெற்றுக்கொண்டு வரலாம் என்று திட்டம் திட்டிய சந்தான கிருஷ்ணன் தன் குடும்பத்தாரிடம் அதை பற்றி கூற, மாதவிடாயின் காரணத்தினால் கோயிலுக்கு வரவில்லை என்று கூறிய ஆழினியை ஆறுமுகத்தின் இல்லத்தில் தங்கவைத்துவிட்டு ஆதிலட்சுமியையும் இன்பனையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றிருந்தார் சந்தான கிருஷ்ணன்.
தன் தாய், தந்தை மற்றும் தம்பியின் வருகைக்காக காத்திருந்த ஆழினிக்கு தெரியாத எண்ணிலிருந்து அலைபேசி அழைப்பு மட்டுமே வந்தது. அவளின் பெற்றோரும் தம்பியும் பயணித்த மூன்று சக்கர வாகனமானது (ஆட்டோ) விபத்துக்குள்ளாகிவிட்டது என்ற செய்தியை அலைபேசியின் மறுமுனையில் ஒருவர் கூறியதை கேட்டவளின் உலகம் அந்நொடியே இருண்டுவிட, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து சுயநினைவை இழந்து அவ்விடத்திலேயே மயங்கி சரிந்திருந்தாள் ஆழினி.
ஒளி வீசும்….
