Skip to content
Post Views: 284
அத்தியாயம் 06
பறந்து விரிந்த அறையில் பஞ்சு மெத்தை கட்டில் இருக்க, தலையில் பெட்ஷீட்டை விரித்து படுத்து இருந்த துர்க்காவிற்கு தூக்கம் தான் தொலைதூரமானது.
Advertisement
தரையில் படுத்ததால் இல்லை 14 வருடங்களாக தரையில் தான் தூங்குகின்றாள். அதிலும் இந்த பத்து வருடங்கள் தனிமையில் தான் இருக்கின்றாள்.
ஆனால் இந்த இரண்டு வருடங்களாக தனிமை கொடுமையாக அவளைப் படுத்துகின்றது. காரணம் அவள் உடலின் மாற்றங்கள். புரண்டு புரண்டு படுத்திருந்தவருக்கு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை.
Advertisement
Advertisement
மாதத்தில் இரண்டு நாட்கள் அவள் பெண்மைக்கு உரிய ஹார்மோன்கள் சுரந்து, அவளை பாடாய்ப்படுத்துகின்றது. ஓர் ஆண் நம்மை உற்றுப் பார்த்து ரசிக்கும் போது உடல் கூசுமே, அதைவிட அதிகமாக உள்ளங்கால் இருந்து உச்சம் தலைவரை கூசியது.
கால்களை ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டாள். அடிவயிற்றில் சொல்ல முடியாத படபடப்பு, கால்களை மடக்கி சுருண்டு படுத்து பார்த்தாள். கை மடித்து கழுத்துக்கடியில் வைக்க, அவளின் விரல் பட்டு உடல் இதம் கண்டது. உணர்வுகளின் தாக்கம் தாள முடியாமல் படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள்.
Advertisement
உடலில் உஷ்ணம் கூடி அவளை வாட்ட எழுந்து பால்கனிக்கு வந்து நின்றாள். ஒற்றை வானில் நெற்றி பொட்டாய் முழுமதி ஜொலித்துக் கொண்டிருந்தது.
‘ஓஹோ இன்னைக்கு பௌர்ணமி இல்ல…’ மனதில் நினைத்துக் கொண்டாள்.
பெண்ணுக்கும் வெண்ணிலவுக்கும் சம்பந்தம் இருப்பது உண்மைதான் போலும். துர்காவிற்கு பௌர்ணமி நாளிலும் மாதவிடாய் வந்த 14 வது நாளிலும் தான் இந்த மாதிரி தொந்தரவுகள் வருகின்றன.
அவளும் என்ன செய்வாள் சரியாக இயங்கும் அவள் இனப்பெருக்க தொகுதி 14 ஆம் நாள் வெளியாகும் கருமுட்டைக்கு இணை வேண்டும் என்பதை, தன் சுரப்பிகள் கொண்டு செவ்வனே தன் வேலையை செய்கின்றது.
உடலின் மாற்றங்களினால் உணர்வுகள் கொந்தளிக்கின்றது. இதில் எதைக் குற்றமென்று சொல்வது.
தை மாத பனிவாடைக்காற்று மெதுவாக மென்மையாக அவளை தீண்டிச் செல்ல, காற்றில் அசைந்த அவள் புடவையின் உரசலிலேயே அவள் மேனி சிலிர்த்தது. வயிற்றில் கைகளில் இருந்த பூனை முடிகள் நட்டுக்கொண்டு நின்றன.
என்னடா இது அவஸ்தை என்று நினைக்கும் போது, அவள் பின் இருந்து ஒரு வலிய கரம் அவளை அணைப்பது போல் வரவும், விதிர்வித்து திரும்பிப் பார்க்க, யாரும் இல்லை. என்ன இது பிரம்மை தடுமாறி தவித்தாள்.
இதற்காகத்தானே தாயும் அத்தையும் காதல் பாடல்களோ படமோ பார்க்க விட்டதில்லை.
பிறகு எப்படி, நித்தியா அவள் தானே இவள் அருகில் இருந்து காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சிகளை பார்ப்பாள். அதன் தாக்கமாகத்தான் இருக்க வேண்டும்.
தலையை உலுக்கிக் கொண்டு எப்போதும் போல் குளியலறை சென்று குளிர்ந்த நீருக்கடியில் நின்றாள்.
மனமும் உடலும் ஓரளவு கட்டுப்பட்டது. உடை மாற்றி விட்டு வெளியே வந்தாள். ஆனால் வெகு சீக்கிரம் உறக்கம் வரும் என்று தோன்றவில்லை. அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென்றாள்.
*****
மணி ஒன்றைக் கடந்து இருந்தது. தன் மார்பில் மகளை போட்டு தட்டிக் கொடுத்த பிரபாகரனுக்கு தூக்கம் வரவில்லை. அவனது திருமண பேச்சு சூடு பிடித்த இன்று அவன் முன்னாள் காதலி செல்லம்மாவை பார்ப்பான் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.
பார்த்த நொடி மனதில் இருந்ததை கேட்டு விட்டான். அதற்கு காரணம் அகிலனை பற்றிய உண்மை தகவல்களை அவன் கண்களால் கண்டு கொண்டதுதான். அகிலனை பற்றிய தகவல்கள் அரசல் புரசலாக வந்தாலும் பெரிதாக ஆராய தோற்றவில்லை.
தன்னை வேண்டாம் என்று சென்றவளின் கணவனை பற்றி விசாரித்து என்ன பயன், அப்படியே இவன் உண்மையை கூறினாலும் அவள் நம்ப வேண்டுமே.
அதைவிட பூர்ணா இருந்தவரை அவளை சமாளிப்பதற்கே பிரபாகரனுக்கு நேரம் போதவில்லை.
பூர்ணா இறந்த பின்னர் தான் அகிலனை ஒரு நாள் பின்தொடர்ந்து, அவன் வேறு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்டுகொண்டான். ஆத்திரமாக வந்தது அடக்கிக் கொண்டான்.
அஞ்சனாவிடம் அதை எப்படி கூறுவது என்று தான் தவித்துக் கொண்டிருந்தான். கண்டிப்பாக அவள் நம்பமாட்டாள் என்று தெரியும்.
இதுவரை குழந்தை இல்லாதவளை ஒரு குறையும் இன்றி ராணி போல் பார்த்துக் கொள்கின்றான். அவன் மீது குற்றம் சொன்னால் எப்படி நம்புவாள். அதுவும் இவன் சொன்னால் காதில் கூட வாங்க மாட்டாள்.
அவளுக்கே தெரிய வரவேண்டும், அதன் பின் அவளை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தவன், இன்று அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டான்.
“ஏன்டி செல்லம்மா உனக்கு இந்த நிலைமை.. அப்பா அம்மாவ விட்டுட்டு வர முடியாதுன்னு சொன்ன.. நீ விட்டுட்டு போனா நான் என்ன ஆவேன்னு தோணலையா டி.. சரி போனவ சந்தோஷமாவா வாழ்ற, போலியான வாழ்க்கை வாழ்ற.. எங்கிட்டயே வந்துடுடி செல்லம்மா.. அவன பத்தின உண்மை தெரிஞ்சதும் உடைஞ்சு போகாதடி.. உன் மாமா நான் இருக்கேன்.. இப்பவாவது எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு என்கிட்ட வந்துடி…” என்று வாய்விட்டு புலம்பியவன் கண்களில் ஒரு துளி கண்ணீர்.
எப்போதும் போல் அதை வெளி விடாமல் உள் இழுத்துக் கொண்டவன், தன் மனம் நிறைந்தவளின் நினைவலைகள் அமிழ்த்த, தூங்க முடியாமல் தன் மகளை மெதுவாக சரித்து தலையணையில் படுக்க வைத்தவன், அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு வந்தான்.
மாடியின் இறுதிப்படியில் காலை வைக்கும் போது, அங்கே வண்ணமற்ற வானவில்லாக, நிலவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தங்கையை கண்டான்.
மனதின் ஓரம் பழுத்த கம்பியால் இழுத்து விட்டது போல் ஒரு வலி. ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தும் காவி உடையில் காண சகிக்காத கோலத்தில், கலைந்த சித்திரமாக அவன் தங்கை கோலமயில்.
அன்னை தந்தையின் கூற்றுக்கு மதிப்பு கொடுத்து ஒன்றும் அவன் துர்க்காவிற்கு வேறு வாழ்வு அமைத்துக் கொடுக்காமல் இல்லை. அவளும் எனக்கு எதிலும் விருப்பம் இல்லை என்று தானே ஆணித்தனமாக கூறுகின்றாள். வேண்டாம் என்று மறுப்பவளை வற்புறுத்தி எப்படி வாழ வைப்பது?.
இழுத்து பெருமூச்சு வெட்டவன், மெதுவாக நடந்து சென்று தங்கையின் அருகில் நின்று கொண்டான்.
இத்தனை நாட்களாக இல்லாமல் இந்த சில வருடங்கள் தனக்குள் ஏன் இந்த மாற்றங்கள், தவறான எண்ணங்கள் என்று தான் போக்கில் அந்த வெண்மதியிடம் விடையைத் தேடிக் கொண்டிருந்தவள்,
தன் அருகில் அரவம் தெரியவும் திடுக்கிட்டு திரும்பியவள், தமையனை கண்டு கொண்டு அமைதியானவள், அவ்விடம் விட்டு நகர பார்க்கவும் “நில்லு துர்க்கா!…” என்ற அண்ணனின் ஆளுமையான குரலில் ஆணி அடித்தால் போல் அவ்விடம் நின்றாள்.
அவள் நிலவைப் பார்த்து நிற்க, மொட்டைமாடி அரைசுவரில் திரும்பி சாய்ந்து நின்றவன் தங்கையை ஊற்றிப் பார்த்தான்.
நிலவையோ அவனையோ பார்க்காமல் நிலத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். “ஏன் தூக்கம் வரல?…” அழுத்தமாக கேட்டான்.
என்ன சொல்லுவாள் இதுபோன்று தமையன் அழுத்தமாக கேள்வி கேட்டதில்லை. இவளாக ஏதாவது பேச நினைத்தால் மட்டுமே தமையன்மார்களை நெருங்குவாள்.
அவர்களிடம் பெரும்பாலும் (என் வாழ்க்கை வேறு உங்கள் வாழ்க்கை வேறு என்னை நினைத்து உங்கள் வாழ்வை வீண் செய்யாதீர்கள்) என்று அறிவுரை கூறிவிட்டு சென்றுவிடுவாள்.
அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவள் வாயிலிருந்து இரண்டு அண்ணன்களாலும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
ஆனால் இதற்கு மேல் பிரபாகரன் விடுவதாக இல்லை. தனக்கே இரண்டாவதாக ஒரு வாழ்க்கை என்று யோசித்த பின் தங்கை வாழ்க்கையை கண்டிப்பாக சீர் செய்ய வேண்டும் என்ற ஒரு முடிவுடன் துர்க்காவை பிடித்துக் கொண்டான்.
“ஒன்னும் இல்ல ண்ணா.. நல்லா தூங்கிட்டு தான் இருந்தேன் ஏதோ ஒரு கெட்ட கனவு அதான் சும்மா கொஞ்ச நேரம் இங்க இருந்தேன்.. இப்ப தூக்கம் வருது நான் போய் தூங்குறேன்…” என்று பரபரப்புடன் பதில் சொன்னாள்.
இத்தனை நாட்கள் மனதில் உறுபோட்டு, அண்ணன்களிடம் மனப்பாடம் ஒப்பிக்கும் போது, வராத பதற்றம் இப்போது திடீரென அண்ணன் கேட்ட கேள்வியில் பதில் சொல்ல வேண்டும் என்றதும் வந்தது.
14 வருடங்கள் முன்பு பாசமான அண்ணன் தங்கை தான். 10 வருடங்கள் முன் இந்த வீட்டிற்கு திரும்பி வந்த பின்னர் தான் இத்தனை இடைவெளி.
பிரபாகரனும் அவள் வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்து முடிந்த கரிய சம்பவங்களின் பாதிப்பாக இருக்கலாம் என்று விட்டுவிட்டான்.
ஆனால் இனிமேல் விடுவதாக இல்லை. “நான் வரும்போது தனியா நிலவ வெறிச்சிட்டு இருந்த.. இப்போ நான் வந்ததும் தூக்கம் வந்துடுச்சா.. சரி அப்படியே தூக்கம் வந்தாலும் இந்த அர்த்த ராத்திரியில நான் தூங்காம ஏன் இங்க வந்தேன்னு கேட்க தோணலையா துர்க்காம்மா…” என்று அவன் இறுதியாக கூறிய அவள் பெயரில்,
அண்ணன் தோளில் சாய்ந்து கொள்ள தோன்றிய தன் மனதை இழுத்து பிடிக்க மிகவும் சிரமப்பட்டாள்.
அவள் தாயும் அத்தையும் ஓர் ஆணை தீண்டுவது குற்றமென்று சொற்களால் வதைத்தது, தன் அண்ணனையே நெருங்க தயங்கினாள். எந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாத தடுமாற்றம்.
அண்ணனின் கேள்வியில் ‘அதானே அவன் ஏன் இந்த இரவில் குழந்தையை தனியாக விட்டு விட்டு இங்கு வரவேண்டும்’ என்று தோன்ற
“மன்னிச்சிடுங்க ண்ணா.. அது, உங்களுக்கு தொந்தரவா இருக்காம போகலாம் என்ற அவசரத்துல கேட்கல.. என்னாச்சு ண்ணா…?” என்று தயக்கமாக கேட்க
“உன்ன மாதிரி தான் மனசு சரியில்ல…” என்று அவன் சொல்ல
விழுக்கென அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள். “என்ன சரிதானே…” என்றான் தங்கையை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.
துர்க்காவோ “அ..அது.. அது…” என்று தயங்க,
“துர்க்காம்மா உனக்கும் எனக்கும் இடைய நிறைய இடைவெளி விழுந்திருச்சு தான்.. ஆனாலும் ஒரு தங்கையா உன்ன பத்தி தெரியலனாலும்.. ஒரு பொண்ணா உன்ன புரிஞ்சுக்க முடியும்.. சாதாரணமா அம்மாவே கெட்ட கனவு கண்டா பூஜை அறையில தான் இருப்பாங்க.. ஆனா நீ எப்பவுமே கடவுள் பூஜைனு இருக்கிறவ.. கெட்ட கனவு கண்டு இருந்தா சாமி முன்னாடி தான் இருந்திருப்ப.. இப்படி தனிமையில நிலவ வெறிச்சிட்டு இருக்க மாட்ட…” என்று அவன் அவள் முகத்தை பார்த்து சொல்ல.
அவளால் அதற்கு மேல் பொய் சொல்ல முடியவில்லை. அதற்கு ஏற்றார் போல் பிரபாகரனும் “இல்லன்னு பொய் சொல்லாத.. எப்பவும் விபூதியும் மாலையுமா இருப்ப.. இப்போ எதுவும் இல்ல…” என்று சொல்லவும் தான்
தான் இருக்கும் கோலம் உரைத்தது. குளித்துவிட்டு அப்படியே தானே வந்திருந்தாள். “அண்ணா! அது வந்து…”
“ஏன்டா எங்க யார்கிட்டயும் மனசு விட்டு பேச முடியாத அளவுக்கு நாங்க உனக்கு தூரமா போயிட்டோமா?.. இல்ல நீ சொல்றத புரிஞ்சுக்காம தப்பா எடுத்துப்போம்னு நினைக்கிறாயா?…”
“அச்சோ அண்ணா, அப்படியெல்லாம் இல்ல…”
“அப்போ என்ன தான்டா பிரச்சனை.. ஒரு மணிக்கு மேல தட்ட தனியா இங்க வந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன.. இந்த வாழ்க்கைய நீயா தான் விருப்பப்பட்டு வாழ்றதா சொன்ன.. ஆனா இந்த வாழ்க்கையில நீ சந்தோஷமா இல்ல என்றது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.. பல வருஷத்துக்கு முன்னாடி உனக்கு நடந்தது விதியோட விளையாட்டு.. அதுக்காக உன்ன நீயே வருத்திக்கிறயா?…” என்று ஆதங்கமாக பிரபாகரன் கேட்க
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல ண்ணா.. ஏனோ தெரியல தூக்கம் வரல அதான் இங்க வந்தேன்…” என்று தன் வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றாள் துர்க்கா.
“சரி தூக்கம் வரல.. ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில் இது மட்டும் போதாது.. இந்த வாழ்க்கையில நீ சந்தோஷமா இல்ல துர்க்காம்மா.. வேற யாரையும் பத்தி யோசிக்காத அண்ணன நம்பி உன் மனச சொல்லு.. உனக்கு நல்லதா ஒரு வாழ்க்கைய அமைச்சு தர வேண்டியது என் பொறுப்பு…” என்று அன்பாக கேட்க
கலங்கத் துடித்த கண்களை கட்டுப்படுத்தியவள் காதில் (ஒழுக்கமான பொம்பள ஒருத்தனோட தான் வாழ்வாள்) என்ற அன்னையின் வார்த்தைகள் எதிரொலிக்க,
“இல்ல ண்ணா, எனக்கு எந்த வாழ்க்கையும் வேணாம்.. நான் எங்கேயும் போகல.. இங்கேயே இப்படியே இருக்கேனே…” என்றாள் அவசரமாக.
அவளின் அவசரமாக வந்து விழுந்த வார்த்தைகளிலும், கண்களின் அலைப்புறுதலிலும் இது அவள் மனம் உவந்து கூறும் பதில் இல்லை என்பது மட்டும் புரிந்தது. இருந்தும் மேற்கொண்டும் அவளை வற்புறுத்த தோன்றாமல்
“சரி வேற வாழ்க்கை வேணாம்.. இங்கேயாவது நீ பழையபடி இருக்கலாமேடா.. எங்ககிட்ட இருந்து ஏன் விலகி நிற்கிற…?” என்று கேட்க
“இல்ல ண்ணா.. நான்…” என்று அவன் முகம் பார்த்து சமாளிக்க முயன்றவள், அண்ணன்காரன் கைகள் இரண்டையும் விரித்து, மெல்லிய புன்னகையுடன் வா என்று அழைக்க,
முதலில் தயங்கியவள், பின் சிறிய கேவலுடன் தாய் பறவை இறகுக்குள் அடைக்கலமாகும் குஞ்சாக அவன் கைகளுக்குள் புகுந்து, தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள்.
இருவரின் உடலில் ஒருவகை சிலிர்ப்பு. மனதில் தாய்மை உணர்வாக பாசம் உற்றெடுத்தது.
தங்கையின் தோளில் ஒற்றை கையை போட்டு, மற்றைய கையால் தலையை வருடி கொடுத்தான்.
அத்தனை இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது இருவருக்கும். நொடிகள் நிமிடங்களாக அப்படியே நின்றனர். துர்க்காவிற்கு உண்மையாகவே இப்போது தூக்கம் வந்தது.
அப்போதுதான் தமையன் ஏன் இங்கு வந்தான் என்று பதில் கூறாதது நினைவு வர, கன்னத்தில் வழிந்து காய்ந்து இருந்த கண்ணீரை துடைத்தவள், அவனை விட்டு விலகி இடுப்பில் கையை வைத்தபடி
“சரி நீங்க ஏன் ஆதூ குட்டிய தனியா விட்டுட்டு இங்க வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே…?” என்று கேட்க
தங்கை நின்ற தோரணையில் பழைய குட்டி தங்கையை கண்டவன், விரிந்த புன்னகையுடன் அவள் தலையில் உள்ளங்கையை வைத்து அழுத்தி “பெருசா ஒன்னும் இல்ல.. காலையில என் கல்யாண விஷயம் சூடு பிடிச்சிருச்சு அந்த யோசனை தான்.. அத நானே பாத்துப்பேன் நீ கவலைப்படாத…” என்று கூற
அண்ணனை எதிர்த்து எதுவும் கூற விரும்பாமல் “சரி ண்ணா வாங்க போய் தூங்கலாம்…” என்று அழைக்க, பிரபாகரனும் தங்கையுடன் கீழே வந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
துர்க்காவும் அறைக்குள் செல்லும் தமையனை பார்த்துவிட்டு, தன் அறைக் கதவை சாற்றி விட்டு படுக்கையில் விழுந்தாள்.
அண்ணன், தங்கை இருவருக்கும் இப்போது மனது சற்று சமன்பட்டிருக்க, நித்ராதேவியும் அவர்களை அணைத்துக் கொண்டாள். விடியப் போகும் விடியல் யார் யாருக்கு பூபாளமாக அமைய போகுமோ என்பது தெரியவில்லை.
error: Content is protected !!