Skip to content
Post Views: 34
கண்ணாமூச்சி 15
தன்னுடைய படுக்கையறையில் இருந்த பிரம்மாண்டமான எல்இடி திரையில், முன்னணித் தொலைக்காட்சி சேனல்கள் 24 மணி நேரமும் ப்ரேக்கிங் நியூஸாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த தன் வதந்திச் செய்திகளை நயனிகா மிகுந்த ஏமாற்றத்துடனும் ஆத்திரத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏர்போர்ட்டில் தான் போட்ட அந்தப் போலி நாடகத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த மீடியாவும் விஷ்வாவிடம் விளக்கம் கேட்க அவனது வீட்டை முற்றுகையிட்டிருந்தது. ஆனால், விஷ்வா தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்போ, கோபமான எதிர்வினையோ, அதிகாரப்பூர்வமான அறிக்கையோ வரவில்லை. அவன் காட்டிய அந்த இறுக்கமான மௌனம் அவளை ஏதோ ஒரு வகையில் நிலைகுலைய வைத்தது.
“வாட் த ஹெல்! அவன் ஏன் இன்னும் அமைதியா இருக்கான்?” நயனிகா தன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை மேஜை மீது சத்தமாக வைத்தாள்.
அவளருகே நின்றிருந்த அவளது மேலாளர் தீபக், தாடியைச் சொறிந்தபடி, “நயனிகா, விஷ்வாவோட இந்த மௌனம் நமக்குப் பெரிய மைனஸ். அவன் கோவப்பட்டு மீடியா முன்னாடி கத்தினாலோ, இல்ல இது பொய்னு பிரஸ் மீட் வச்சாலோ… நாம அதை வச்சு அடுத்தகட்ட விவாதத்தை ஆரம்பிக்கலாம். ஆனா அவன் எதையுமே கண்டுக்காத மாதிரி வீட்ல முடங்கிக் கிடக்கிறது நம்ம பிளானையே கொல்ற மாதிரி இருக்கு. நாம அடுத்த கட்டத்துக்குப் போயே ஆகணும்,” என்று சதி ஆலோசனையைக் கூட்டினான்.
Advertisement
“அடுத்த வாரம் ‘சிகண்டி’ படத்தோட இன்டோர் ஷூட்டிங் ஷெட்யூல் சென்னையில ஆரம்பிக்குது தீபக். அங்கே அவன் என்கிட்ட எப்படி நடந்துக்கிறான்னு பார்த்துட்டு, நம்மளோட அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்,” என்று நயனிகா கண்களில் வஞ்சம்கூடிப் பேசினாள்.
நாட்கள் நகர்ந்து, ‘சிகண்டி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்த ஸ்டூடியோவில் இன்டோர் ஷூட்டிங் விறுவிறுப்பாகத் தொடங்கியது. காரில் இருந்து இறங்கி, தன் மெய்க்காப்பாளர்கள் சூழ செட்டுக்குள் நுழைந்த விஷ்வாவின் முகம் எப்போதுமில்லாத அளவுக்குக் கடுகடுப்பாகவும், இறுக்கமாகவும் இருந்தது. வதந்திகளைப் பற்றிய எந்தவொரு கேள்விக்கும் அவன் துளியும் இடம் கொடுக்கவில்லை. ஊடகங்களின் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகளுக்கும் அவன் தன் இறுக்கமான மௌனத்தையே பதிலாக்கினான்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயனிகா அவனுக்கு இணையாக வந்து நின்ற தருணங்களில் எல்லாம், விஷ்வா அவளை ஒரு சக மனிஷியாகக் கூடக் மதிக்காமல் முற்றிலுமாகப் புறக்கணித்தான். காதலும் நெருக்கமும் நிறைந்த டூயட் காட்சிகளில் நடிக்கும்போது கூட, கட் சொன்ன அடுத்த கணமே அவளிடமிருந்து விலகி, தன் கேரவனுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். அவளோடு பேசுவதையோ, அவளது கண்களைச் சந்திப்பதையோ கூட அவன் முற்றிலுமாகத் தவிர்த்தான். ஒட்டுமொத்த செட்டின் முன்னிலையிலும் விஷ்வா காட்டிய அந்தப் புறக்கணிப்பு, நயனிகாவிற்கு ஒரு பெருத்த அவமானமாகவும் ஏமாற்றமாகவும் போய் முடிந்தது. அவளது அகம்பாவம் உள்ளூரக் காயப்பட்டு, பற்களைக் கடித்தாள்.
Advertisement
மறுபுறம், சென்னை டைடல் பார்க்கின் ரகசிய லேபிற்குள் பிரவீனும் அனன்யாவும் ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். சோல்மேட் செயலியின் அந்த விசித்திரமான குளறுபடிக்கான தீர்வை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷ்வா மற்றும் நிலாவின் மெய்நிகர் உலகங்கள் நிஜமாகவே ஒன்றோடொன்று முழுமையாக மெர்ஜ் ஆகியிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய அவர்கள் தீவிரமாகப் போராடினர்.
Advertisement
முதன்மைச் சர்வரில் இருந்து அவர்கள் பகுப்பாய்வு செய்து பிரித்தெடுத்த ஒட்டுமொத்த நரம்பியல் தரவுகளும், அந்தப் பயங்கரமான மென்பொருள் பிழை நிஜமாகவே நடந்திருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டின. இரு வேறு பயனாளர்களின் அலைவரிசையைச் சிஸ்டம் ஒரே ஐடியில் இணைத்திருந்தது. “அனன்யா, இது சும்மா ஒரு பக் இல்லை. இதனால விஷ்வாவோட ஒட்டுமொத்தப் பிரைவசியும், அந்தப் பொண்ணோட மனநிலையும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படப் போகுதோ தெரியல. அடுத்ததா என்ன பண்றதுன்னே எனக்குப் புரியல,” என்று பிரவீன் கவலையோடு தன் தலையைக் கோதினான்.
அப்போது அனன்யா அவனிடம் மெல்லத் தயங்கியபடி, “பிரவீன், விஷ்வா சார் அன்னைக்கு லிஃப்ட் வாசல்ல நிலாவைப் பார்த்தேன்னு சொன்னது நூறு சதவீதம் உண்மைதான். ஏன்னா… நிலா இப்போ நம்ம சோல்மேட் கம்பெனியிலதான் டேட்டா அனலிஸ்ட்டா இன்டெர்னா ஜாயின் பண்ணியிருக்கா,” என்று உண்மையை உடைத்தாள்.
பிரவீன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, அனன்யா தொடர்ந்தாள், “அன்னைக்கு லிஃப்ட்ல விஷ்வா சார் எப்படி அவளை அடையாளம் கண்டுக்கிட்டாரோ, அதே மாதிரி நிலாவும் விஷ்வா சாரை அடையாளம் கண்டுக்கிட்டா பிரவீன்!”
Advertisement
அன்று லிஃப்ட் கதவுகள் திறந்த அந்த ஒரு நொடியில், விஷ்வாவின் அந்தப் பரிச்சயமான உருவத்தைக் கண்டதும் நிலாவின் இதயமும் ஒரு கணம் ஸ்தம்பித்திருந்தது. மெய்நிகர் உலகில் பனிமலையிலும் கிராமத்து வயல்வெளியிலும் தனக்காக உருகிய அதே தன் விர்ச்சுவல் காதலன் தன் கண் முன்னால் நிற்பதைக் கண்டதும், அவளுக்குள் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் பொங்கின. ஓடிப் போய் அவனது மார்பில் சாய்ந்து, “விஷ்வா” என்று அழுதுகொண்டே அவனைக் கட்டியணைக்கத் துடித்தது அவளது எளிய இதயம்.
ஆனால், அடுத்த கணமே அவளது எதார்த்த புத்தி அவளைத் தடுத்து நிறுத்தியது. ‘நிலா! அவசரப்படாதே. அவருக்கு உன்னைத் தெரியாது. விர்ச்சுவல் உலகத்துல நீ பார்த்தது வெறும் மாய பிம்பம். நிஜத்துல அவர் இந்தியாவின் மாபெரும் சூப்பர் ஸ்டார். இப்போப் போய் நீ அவர்கிட்ட பேசணும்னோ, தெரிஞ்ச மாதிரி காட்டிக்கணும்னோ நினைச்சா, உன்னை ஒரு பைத்தியக்கார, வெறிபிடித்த ரசிகைன்னுதான் இந்த உலகம் பார்க்கும், விஷ்வாவும் அப்படித்தான் நினைப்பாரு. எல்லாரும் உன்னை அசிங்கப்படுத்தித் தள்ளிடுவாங்க’ என்று அவளது உள்மனசு எச்சரித்தது.
அதனால்தான் அவள் குனிந்த தலை நிமிராமல், தன் உணர்ச்சிகளைத் தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டு, தன் கேபினை நோக்கி ஓடினாள். தன் இருக்கையில் வந்து அமர்ந்து, படபடவென்று அடித்துக் கொண்ட தன் இதயத்தைத் தன் கைகளால் அமுக்கிச் சமாதானப்படுத்த முயன்றாள். “அவர் ஏன் இங்க வந்திருக்கார்? ஒருவேளை இங்க யாரையாவது பார்க்க வந்திருப்பாரோ? அவருக்கு டைடல் பார்க்ல என்ன வேலை இருக்கும்?” என்று குழம்பினாள்.
விஷ்வாவை அலுவலகத்து வாசலில் பார்த்ததை மாலையில் நிலா அனன்யாவிடம் கூறிவிட்டாள், “அனன்யா… இன்னைக்கு ஆபீஸ் லிஃப்ட் வாசல்ல நான் விஷ்வாவை நேர்ல பார்த்தேண்டி. ஒரு நிமிஷம் என்னால மூச்சே விட முடியல, என் நெஞ்சே வெடிச்சுடும் போல இருந்துச்சு, அப்பறம்தான் என் புத்திக்கு உரைச்சுது, விஷ்வாவுக்கு என்னைத் தெரியாதுன்னு, நான் பாட்டுக்க விஷ்வான்னு அவரைக் கூப்பிடப் போயிட்டேன்,” என்று தன் தவிப்பைப் பகிர்ந்து கொண்டாள்.
நிலாவும் விஷ்வாவை நேரில் கவனித்திருக்கிறாள் என்ற உண்மையைக் கேட்டதும், அனன்யா ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போனாள். ஆனால், அனன்யா அந்தத் தருணத்திலும் நிலாவிடம் அந்த முக்கியமான உண்மையை அடியோடு மறைத்துவிட்டாள். விஷ்வா உண்மையில் வேறு எந்தக் காரணத்திற்காகவும் இங்கே வரவில்லை, அவன் தன் விர்ச்சுவல் நிலாவைத் தேடித்தான் பைத்தியமாக அலைகிறான் என்ற உண்மையை அவளிடம் சொல்லவே இல்லை. அவளைப் போல விஷ்வாவும் மெய்நிகர் உலகத்தின் பயனாளர் என்பதையும், இருவரின் மெய்நிகர் உலகங்களும் நிஜமாகவே ஒன்றோடொன்று இணைந்து ஒன்றாகியிருக்கின்றன என்ற மர்மத்தையும் அவளிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
அனன்யாவிற்குள் ஒரு மிகப் பெரிய பயம் குடிகொண்டிருந்தது. இந்த மென்பொருள் பிழையால் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் ஏற்படப்போகும் விபரீத விளைவுகளை நினைத்து அவள் உள்ளூர நடுங்கினாள்.
“நிலாவும் என்னை மாதிரி ஒரு எளிய, நடுத்தரக் குடும்பத்து பொண்ணு. அவளோட வாழ்க்கை அமைதியானது, ஆரவாரமில்லாதது. அவளைப் போய் விஷ்வாவோட இந்த ஆடம்பரமான, போலித்தனமான, கிசுகிசுக்கள் நிறைந்த சினிமா வெளிச்சத்துக்குள்ள தள்ளி விட்டா, அவளோட நிம்மதியான வாழ்க்கை மொத்தமாகச் சிதைந்து சாம்பலாயிடுமே!’ என்று அனன்யா பயந்தாள். நயனிகா போன்ற நரிகள் வாழும் அந்தச் சினிமா உலகத்தின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகும் நிலைக்கு நிலாவைத் தள்ளிவிடக் கூடாது என்று அனன்யா உறுதியாக முடிவு செய்தாள்!
ஆனால் நயனிகாவிற்கு அப்படிப்பட்ட நல்லெண்ணம் எதுவும் இருக்கவில்லை, விஸ்வநாத்தின் புறக்கணிப்பு அவளை நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது.
நயனிகாவின் கேரவனுக்குள் ஏசி குளிரூட்டியின் சத்தம் மட்டுமே மெல்லியதாகக் கேட்டுக்கொண்டிருக்க, உள்ளே நிலவிய வெப்பமோ தகிக்கும் எரிமலையைப் போல இருந்தது. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஒப்பனைப் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் முகத்தைப் பார்த்த நயனிகாவின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்திருந்தன.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்று விஷ்வா காட்டிய அந்த உச்சகட்ட அலட்சியமும், ஒட்டுமொத்த செட்டின் முன்னிலையிலும் தன்னை ஒரு வெறும் காட்சிப் பொருளாகக் கூட மதிக்காமல் கடந்து சென்ற அந்தப் புறக்கணிப்பும் அவளது அகம்பாவத்தை அடியோடு சுட்டெரித்திருந்தது.
“என்னைத் தாண்டி அவன் என்ன பெருசா சாதிச்சிட முடியும் தீபக்?” நயனிகா தன் கைகளை இறுக்கிக் குட்டினாள்.
“தமிழ் சினிமாவோட டாப் ஹீரோயின் நான். மீடியா முழுக்க நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம்னு நியூஸ் ஓடிட்டு இருக்கு. ஆனா அவன் செட்டுக்குள்ள வந்தா நயனிகான்னு ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டு, ரோபோ மாதிரி வந்து நடிச்சுட்டுக் போறான். ஐ ஃபீல் சோ இன்சல்டட்!”
கேரவனின் சோபாவில் சாய்ந்து அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ சில எடிட்டிங் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருந்த தீபக், நயனிகாவை நோக்கித் தன் தந்திரமான பார்வையைத் திருப்பினான். உதடுகளில் ஒரு நரித்தனமான புன்னகை அரும்பியது.
“கூல் நயனிகா, கூல்… விஷ்வா அவனோட மௌனத்தால நம்ம பிளானை உடைக்கலாம்னு நினைக்கிறான். ஆனா அவனுக்குத் தெரியாது, சினிமாவுல மௌனத்தை விடப் பெரிய ஆயுதம் வேற எதுவும் இல்லைன்னு. அவன் பேசலனா என்ன? நாம அவனைப் பேச வைக்கலாம். அவனோட இந்த அமைதியை அவனோட சம்மதம்னு மீடியா நம்புற மாதிரி அடுத்த கட்டச் சதியை நான் ஆல்ரெடி ரெடி பண்ணிட்டேன்,” என்றான் தீபக் லேப்டாப்பை அவளை நோக்கித் திருப்பி வைத்தபடி.
நயனிகா குழப்பத்துடன் அருகில் வந்து பார்த்தாள். திரையில், ‘சிகண்டி’ படத்தின் முந்தைய ஷெட்யூலில் எடுக்கப்பட்ட ஒரு காதல் காட்சியின் எடிட் செய்யப்படாத வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. அதில் விஷ்வா அவளது கைகளைப் பிடித்துப் பேசுவது போன்ற ஒரு நெருக்கமான கோணம் இருந்தது.
“இது பழைய ஷூட்டிங் வீடியோ தானே தீபக்? இதை வச்சு இப்போ என்ன பண்ண முடியும்?” என்றாள் சலிப்புடன்.
“இப்போதான் ட்விஸ்ட்டே இருக்கு நயனிகா. இந்த வீடியோவோட பேக்ரவுண்டை மாத்தி, இது ஏதோ ஒரு ரகசிய இடத்துல நீங்க ரெண்டு பேரும் பர்சனலா டைம் ஸ்பெண்ட் பண்ணும்போது எடுத்த மாதிரி லீக் பண்ணப் போறேன். அதுமட்டுமில்ல, விஷ்வா உனக்கு ஒரு காஸ்ட்லி டைமண்ட் ரிங் கிஃப்ட் பண்ணியிருக்கான், கூடிய சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் கல்யாணச் செய்தி சொல்லப் போறீங்கன்னு ஒரு நெருக்கமான வட்டாரத் தகவலை சினிமா வெப்சைட்டுகளுக்கு அனுப்பப் போறேன். இதைப் பார்த்ததுக்கு அப்புறமும் அவன் அமைதியா இருக்கானான்னு பார்ப்போம்!” என்று தீபக் தன் விஷமத்தனமான அடுத்த அடியை விவரித்தான்.
நயனிகா ஒரு நொடி யோசித்தாள். விஷ்வாவின் மௌனம் தன்னை இந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்கும் போது, அவனது நிஜ வாழ்க்கையைச் சிதைக்கத் தான் எடுக்கும் இந்த முடிவு தவறில்லை என்றே அவளது வஞ்சக மனம் எண்ணியது. “செய் தீபக்! இன்னைக்கு நைட்டே இந்த நியூஸ் சோஷியல் மீடியாவுல தீயா பரவணும். விஷ்வா இதைப் பார்த்துட்டு அலறி அடிச்சுட்டு மீடியா முன்னாடி வந்து நிக்கணும்,” என்று பற்களைக் கடித்தபடி ஒப்புதல் அளித்தாள்.
மறுபுறம், சென்னை டைடல் பார்க்கின் சோல்மேட் தலைமை லேபில், நள்ளிரவைத் தாண்டியும் கணினிகளின் திரைகள் நீல நிற வெளிச்சத்தைக் கக்கிக் கொண்டிருந்தன. பிரவீனும் அனன்யாவும் ஒரு நொடி கூடக் கண் அயராமல், அந்த மென்பொருள் பிழையின் வேர்களைத் தேடி சர்வரின் ஆழமான பகுதிகளுக்குள் கோடிங்குகளைச் செலுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அனன்யா திரையில் ஒரு குறிப்பிட்ட நரம்பியல் சிக்னல் பகுப்பாய்வு வரைபடத்தைக் காட்டினாள். “பிரவீன், இங்க பாருங்க… விஷ்வா சாரோட நியூரல் டேட்டாவும், நிலாவோட டேட்டாவும் நம்ம சிஸ்டத்தோட சென்ட்ரல் ஏஐ கோர்ல ஒரே டைம்-ஸ்டாம்ப்ல இணையா ப்ராசஸ் ஆகியிருக்கு. அதாவது, விஷ்வா சார் எப்போதெல்லாம் அந்த விர்ச்சுவல் ஹெட்பேண்டை மாட்டி நிலாவை நினைச்சாரோ, அதே மில்லிசெகண்ட்ல இங்கே சென்னையில நிலாக்கு மாடல் லகின் பண்ண மெசேஜ் அனுப்பியிருக்கு, அதனால நிலா தன் ஹெட்பேண்டை ஆன் பண்ணியிருக்கா. நம்ம சிஸ்டத்தோட அல்காரிதம், இந்த ரெண்டு பேரையும் இருவேறு தனித்தனி யூசரா பார்க்காம, ஒரே அலைவரிசையில இயங்குற இணைக்க வேண்டிய சுயவிவரங்களா தப்பா கணிச்சு, ரெண்டு பேரோட உலகத்தையும் ஒன்னா இணைச்சிருக்கு!”
பிரவீன் தன் கைகளில் இருந்த காபி கப்பை மேஜை மீது வைத்துவிட்டு, கணினியின் திரையை உற்றுப் பார்த்தான். அவனது முகம் அதிர்ச்சியிலும் பயத்திலும் வெளுத்திருந்தது. “காட்! அனன்யா, நீ சொல்றது நிஜமா இருந்தா… இது சாதாரண சாஃப்ட்வேர் பக் இல்லை. இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப விபத்து! இருவேறு நிஜ மனிதர்களோட மூளை அலைவரிசையும் நரம்பியல் சிக்னல்களும் விர்ச்சுவல் உலகத்துல ஒண்ணா இணைந்து, அவங்க ஒரே எக்ஸ்பீரியன்ஸைத்தான் பகிர்ந்து வாழ்ந்திருக்காங்களா?”
“ஆமாம் பிரவீன்… அதுதான் உண்மை,” அனன்யாவின் குரல் நடுங்கியது. “விஷ்வா சார் தேடுற அந்த நிலா வேற யாரும் இல்ல, நம்ம ஆபீஸ்ல இன்டெர்னா இருக்கிற என் ஃபிரண்ட் நிலா தான். ஆனா… இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் இப்போதைக்கு வெளிய வரக்கூடாது. விஷ்வா சாருக்கும் தெரியக் கூடாது, நிலாவுக்கும் தெரியக் கூடாது.”
பிரவீன் அவளைப் புரியாமல் பார்த்தான். “ஏன் அனன்யா? விஷ்வா அவளைத் தேடிட்டு இருக்கான். நிலாவும் விஷ்வாவை நினைச்சு உருகிட்டு இருக்கா. உண்மையைச் சொன்னா ரெண்டு பேரும் நிஜ உலகத்துல ஒண்ணா சேர்ந்துடுவாங்கல்ல? சந்தோஷமான விஷயம்தானே?”
“நீங்க ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க பிரவீன்,” அனன்யா கலக்கத்துடன் கூறினாள். “விஷ்வா சார் ஒரு சாதாரண மனிதர் இல்லை. அவர் சுத்தி எப்போதுமே கேமரா வெளிச்சமும், நயனிகா போன்ற நரிகளோட சதிவலையும், மீடியாவோட அசிங்கமான கிசுகிசுக்களும் சூழ்ந்திருக்கு. நிலா ரொம்பவும் சாதாரணமான பொண்ணு, நடுத்தரக் குடும்பத்துல பிறந்து, அமைதியான சூழல்ல வளர்ந்த ஒரு அப்பாவி. விர்ச்சுவல் உலகத்துல அவ பார்த்த விஷ்வா வேற, நிஜ உலகத்துல இருக்குற இந்த சூப்பர் ஸ்டார் விஷ்வாவோட வாழ்க்கை வேற. அவளைப் போய் இந்தத் திரையுலகத்தோட போலித்தனமான, ஆபத்தான வெளிச்சத்துக்குள்ள தள்ளிவிட்டுட்டா, அவளோட நிம்மதியும் வாழ்க்கையும் மொத்தமா சிதைஞ்சு சாம்பலாகிடும். இந்த மென்பொருள் பிழையால ஒரு அப்பாவியோட வாழ்க்கை அழியிறதை என்னால ஒரு தோழியா பார்த்துட்டு இருக்க முடியாது!” என்று தன் நெஞ்சில் இருந்த பாரத்தைக் கொட்டினாள் அனன்யா.
பிரவீன் அவளது வார்த்தைகளில் இருந்த எதார்த்தமான உண்மையை உணர்ந்து மௌனமானான். ஆனால், அந்த மர்மத்தை எவ்வளவு நாட்களுக்குத் தங்களால் மூடி மறைக்க முடியும் என்ற பயம் இருவரின் மனங்களையும் கவ்விக்கொண்டது.
அதே நள்ளிரவு நேரத்தில், தன் சிறிய அறையில், நிலா ஜன்னலோரம் அமர்ந்து தூக்கமில்லாத கண்களுடன் மொபைல் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். சோசியல் மீடியா முழுக்க விஷ்வாவைப் பற்றிய புதிய கிசுகிசுக்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தன. ‘விஷ்வா-நயனிகா ரகசியக் காதல்… கூடிய விரைவில் திருமணம்!’ என்ற தலைப்புகள் அவளது இதயத்தை அணுவணுவாகச் சித்ரவதை செய்து கொண்டிருந்தன.
அவளது மனதில் அன்று காலையில் லிஃப்ட் வாசலில் நடந்த அந்த ஒரு நொடிச் சந்திப்பு மீண்டும் மீண்டும் நிழலாடியது.
கறுப்புத் தொப்பியும் கூலிங் கிளாஸியும் அணிந்திருந்தாலும், அவளது கண்கள் அந்த சூப்பர் ஸ்டாரை அச்சு அசலாக அடையாளம் கண்டுகொண்டிருந்தன. அவளது விர்ச்சுவல் காதலனின் அதே கம்பீரம், அதே அலைவரிசை! அவன் தன்னைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற அந்த ஒரு நொடியில், நிலாவின் ஒட்டுமொத்த உடம்பும் நடுங்கி, அவளது இதயம் அதன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது.
‘அவரைப் பார்த்த உடனே ஓடிப்போய் கட்டிப்பிடிச்சு, கதறத் துடிச்சுதே என் பைத்தியக்கார மனசு… எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!’ நிலா தன் முகத்தைத் தன் கைகளால் மூடிக்கொண்டு அழுதுகொண்டே நினைத்துப் பார்த்தாள்.
“அவர் இந்தியாவின் உச்சகட்ட நட்சத்திரம். நான் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இன்ஜினியரிங் ஸ்டூடண்ட். விர்ச்சுவல் உலகத்துல எனக்காக உருகுனது எல்லாமே ஒரு கம்பெனியோட சாஃப்ட்வேர் கோடிங் தான்கிறதுக்கு இந்த நியூஸ் தான் சாட்சி. அவர் நிஜ உலகத்துல நயனிகாவோட சந்தோஷமா இருக்கார். நான் தான் ஒரு நிழல் பிம்பத்தைக் காதலிச்சு என் நிஜ வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்குறேன்” என்ற எண்ணத்தால் அதீத குற்ற உணர்ச்சியும் ஏமாற்றமும் அவளைத் துளைத்தெடுத்தன.
விஷ்வாவின் நினைவுகளில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்றும், தன் தோழி அனன்யா சொன்னது போல தன் கரியரில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனக்குள் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டாள் நிலா. தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, நாளை காலை ஆபீஸில் செய்ய வேண்டிய டேட்டா அனாலிசிஸ் ஃபைல்களைப் பார்க்கத் தொடங்கினாள்.
விஷ்வா தன் விர்ச்சுவல் தேவதையைத் தேடித் தவித்துக் கொண்டிருக்க… நிலா அவன்தான் தன் காதலன் என்ற உண்மை தெரியாமல் அவனிடமிருந்து விலகி ஓடிக் கொண்டிருக்க… அனன்யாவும் பிரவீனும் அந்த மாபெரும் ரகசியத்தைக் காக்கப் போராடிக் கொண்டிருக்க… விதி தன் அடுத்த ஆபத்தான காயை நகர்த்தத் தயாரானது!
error: Content is protected !!