Skip to content
Post Views: 167
அத்தியாயம் 27
கல்லூரி முடிந்து வீடு திரும்பிய குகனும் தமிழும் நிலா பாப்பாவை பார்த்ததும் குஷி ஆகிவிட்டனர்.
Advertisement
“ரெண்டு பேரும் போய் கை கால் கழுவிட்டு வாங்க, கவிக்கு பிடிக்கும்னு மிளகாய் பஜ்ஜி போட்டுட்டு இருக்கா மீனா” என்றார் சாந்தி.
“அத்தாச்சி அடிக்கடி இந்த பக்கம் வாங்க. அப்ப தான் எங்களுக்கு இந்த மாதிரி பலகாரம் எல்லாம் கிடைக்கும்” என்றாள் தமிழ்.
Advertisement
Advertisement
“இருங்க நான் போய் உங்க ரெண்டு பேருக்கும் கொண்டுட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள் கவி.
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன் அத்தாச்சி” என்று குரல் கொடுத்தான் குகன்.
Advertisement
தமிழுக்கு மட்டும் கொண்டு வந்து கொடுத்தாள் கவி.
“ஏன்டா காலேஜ் கேன்டீன்ல எதையாவது மொக்கிட்டியா?” என்றாள் தமிழ் வாயினுள் மிளகாய் பஜ்ஜியை வைத்து கொண்டே.
“ஹா ஹா.. காரம் சாப்பிட்ட அப்புறம் ஸ்வீட் சாப்பிட்டா எனக்கு பிடிக்காது.”
“ஸ்வீட்லாம் செய்யல குகன். இன்னிக்கு பஜ்ஜி மட்டும் தான்..” என்றார் சாந்தி.
“எங்க அம்மா மிளகாய் பஜ்ஜி செஞ்சாங்கன்னா, ஹல்வா கண்டிப்பா வரும்” என்றான் குகன் ரகசிய குரலில்.
“என்ன டா உளர்ற?” என்றாள் கவி.
“அது எல்லாம் குடும்ப ரகசியம்… நீங்க எல்லாம் சாப்பிடுங்க.. நான் கொஞ்ச நேரம் அப்புறம் சாப்பிடுறேன்” என்று நிலா பாப்பாவை யானை சவாரி கூட்டிக்கொண்டு சென்றான்.
நிலாவோ, கிளுக்கி சிரித்து கொண்டிருந்தாள்.
அன்று மாலை மனைவியை சமாதான படுத்தவென சீக்கிரமாக வீட்டிற்கு வந்தார் சிங்காரம்.
அங்கே சாந்தி, தமிழ், கவி, நிலா என்று இவர்களை எதிர்பார்க்காமல் திருத்திருத்தார்.
“என்ன தம்பி சீக்கிரம் வந்துட்டீங்களா? உங்க அண்ணனும் வந்துட்டாரா?” என்றார் சாந்தி.
“இல்ல அண்ணி, நான் மட்டும் தான் கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன்.”
“வா கவி.. எப்படி இருக்க?” என்று மருமகளை வரவேற்று பின்,
“நிலா பாப்பா.. தாத்தா கிட்ட வாங்க” என்று நிலாவை தூக்கி கொஞ்சினார்.
கவி உர்ரென்று அவரை முறைத்து பார்த்தாள்.
“பேக்கை கொடுங்க பெரியப்பா”, என்று அவர் கையில் இருந்த பைக்காக கை நீட்டினாள் தமிழ்.
“இருக்கட்டும் டா.. எங்க எழில் இன்னும் வரலையா?” என்றார்.
“இல்லையே பெரியப்பா..”
“இருங்க நான் போய் முகம் கை கால் கழுவிட்டு வரேன்” என்று திரும்பிய சிங்காரத்தை விடவில்லை கவியரசி.
“நீங்க பேசுனது தப்பு மாமா.. அத்தைக்காக பேச யாரும் இல்லைன்னு இப்படி சொன்னீங்களா?” என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தாள்.
அவர் அடுப்படியை எட்டி எட்டி பார்த்தார். மனைவி வந்து காப்பாற்றுவாள் என்று.
‘நல்லா வேணும்.. நின்னு பதில் சொல்லட்டும்’ என்று வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டு பஜ்ஜிகளை போட்டு எடுத்துக்கொண்டிருந்தார் மீனா.
“இல்லமா கவி, நான் போய் உங்க அத்தையை தப்பா சொல்லுவேனா? முதல்ல தப்பா நினைப்பேனா? சொல்ற விஷயத்தை கொஞ்சம் நிதானமா சொல்லலாமேன்னு சொல்ல வந்தேன்”
“அப்ப அத்தை என்ன நிதானம் இல்லாம பேசுனாங்களா? அந்த பொண்ணோட அம்மா, நம்ம பெரிய அத்தையை பத்தி விசாரிச்சா அப்படி தானே பதில் சொல்ல முடியும்?”
“அவங்க பொண்ணை பெத்தவங்க இல்லையா? மீனா கிட்ட கேட்டா தப்பா இருக்காதுன்னு நினைச்சிருக்கலாம் தானே? இப்ப உன்னை கட்டி கொடுக்கிறதுக்கு முன்ன, அன்பை கட்டிக்கொடுக்கிறதுக்கு முன்ன நாம விசாரிக்கலையா?”
“என்ன மாமா நீங்க, இப்ப எதுக்கு அவங்களுக்கு சப்போர்ட்டா பேசிட்டே இருக்கீங்க?”
“இப்ப உனக்கு உங்க அத்தை மேலே எவ்வளவு பாசம். அதனால தானே என்னை கேள்வி கேட்கிற? அப்படி தானே அவங்களுக்கு அவங்க பொண்ணு மேலேயும் பாசம் இருக்கும்.. நம்மளது பெரிய குடும்பம் இல்லயா?
“ஆமாம் “
“இன்னும் குடும்பம் பெருசா தானே ஆக போகுது.. பாலுக்கு குகனுக்கு, எழிலுக்கு அப்புறம் நம்ம தமிழ் குட்டிக்கு இப்படி அடுத்து அடுத்து கல்யாணம்.. அப்புறம் குழந்தை குட்டின்னு” என்று சிங்காரம் பொறுமையாக கவிக்கு எடுத்து கூறிக்கொண்டிருந்தார்.
“என்ன தமிழு, நான் ஸ்வீட்டோட காரம் சாப்பிடம்னு வெயிட் பண்ணா, இந்த அத்தாச்சியும் அப்பாவும் பேசிட்டே இருக்காங்க” என்று பெருமூச்சு விட்டான் குகன்.
“நானும் மாமா வந்ததுமே மோப்பம் பிடிச்சிட்டேன் டா குகன்.. நம்ம ராஜன் மாஸ்டர் ஸ்பெஷல் அல்வா வாசனை வருது.. அதான் நைசா பையை கேட்டேன், பெரியப்பா கொடுக்கலை.”
“அது சமாதான அல்வா தமிழு. அம்மா கையில தான் கொடுப்பாங்க.”
“என்னடா சொல்ற?”
“அம்மா கோவமா இருந்தா மிளகாய் பஜ்ஜி செய்வாங்க. அப்பா அல்வா வாங்கிட்டு வருவாங்க”
“ஓ.. அப்புறம்”
“ரெண்டயும் சேர்த்து வச்சு சாப்பிட்டு ஒரே கப்ல ரெண்டு பேரும் காபி குடிச்சா சண்டை முடிஞ்சதுன்னு அர்த்தம்..”
“டேய் இந்த ஐடியா சூப்பரா இருக்குதே.. “
அங்கே சிங்காரம் பொறுமையாக கவிக்கு பதில் அளித்து கொண்டிருக்கையில், தமிழும் குகனும் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
மனைவி வராமல் இருக்கவும்,
“இந்தா மீனா இதை வாங்கிட்டு போ,” என்று அவரே மனைவிக்கு குரலை கொடுத்தார்.
“இப்ப என்ன மாமா சொல்ல வரீங்க?” என்றாள் கவி இறங்கிவிட்ட குரலில்.
“குடும்பம் பெருசா ஆக ஆக பக்குவமா எல்லாத்தையும் கையாளனும். அதுவும் மூத்த தலைமுறையாக எங்களுக்கு பொறுப்பு அதிகம் இல்லையா..”
கவியின் கோவம் காத்துப்போன பலூன் போலானது.
தட்டுகளில் அல்வா வைத்து அனைவருக்கும் கொடுத்தார் மீனா.
“நீ தான் நம்ம வீட்டோட மூத்த பெண் குழந்தை கவி. எங்க அனுவோட செல்ல பொண்ணு. இப்படி பொறுப்பா கேள்வி கேட்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு டா. நானும் உங்க அத்தையை அப்படி சொல்லி இருக்க கூடாது தான். உங்க அம்மா இருந்திருந்தாலும் உன்னை மாதிரி தான் சண்டை பிடிச்சிருப்பா” என்றார் சிங்காரம் நெகிழ்வாக.
“நான் காஃபி போடறேன் நீ உட்கார்ந்து சாப்பிடு மீனா” என்று சாந்தி அடுபடிக்குள் சென்றார்.
நிலாவுக்கும் சாப்பிட எதாவது கொடுக்கவேண்டும் என்று பாப்பாவை தூக்கி உள்ளே சென்றாள் கவி.
குகனும் தமிழும் அல்வாவையும் பஜ்ஜியையும் எடுத்துக்கொண்டு டிவி முன்னால் அமர்ந்து விட்டார்கள்.
மனைவியிடம் பார்வையாலே மன்னிப்பை வேண்டினர் சிங்காரம்.. அல்வாவை எடுத்து அமைதியாக சாப்பிட்டு சமாதான கொடியை பறக்க விட்டார் மீனா.
சிறிது நேரம் சென்று, சாந்தி கொடுத்த காஃபியை ஒரு வாய் குடித்துவிட்டு, யாரும் பார்க்கிறார்களா என்று திரும்பி பார்த்துவிட்டு மனைவியிடம் டம்பளரை கொடுத்தார்.
அவரும் சிரித்துக்கொண்டே அந்த டம்பளரை வாங்கிக்கொண்டு தமிழ் குகன் இருந்த இடத்திற்கு நகர்ந்து விட்டார்.
சின்ன சின்ன சண்டைகளும் ரகசிய சமதானங்களும் கூட்டு குடும்பத்தின் சுகமல்லவா?
———————-
இரவு உணவின் போது பாலுவிடம் சாந்தி, “இந்த இடம் வேணுமான்னு யோசனையா இருக்கு பாலு. கவிகூட வேண்டாம்னு சொல்றா” என்றதும் சாப்பிட்டு கொண்டிருந்த பாலுவிற்கு புரை ஏறிவிட்டது.
“பார்த்து மெதுவா சாப்பிடு டா..” என்று அவன் தலையை தட்டி கொடுத்தார் சாந்தி.
“என்ன மா? காலையில தானே பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க?”
அவர் வீட்டில் நடந்தவைகளை கூறினார்.
“இந்த அத்தாச்சியோட!” என்று மனதிற்குள் நொந்து போனான் பாலு.
“விடு டா.. இதைவிட சூப்பர் பொண்ணா அம்மா பார்க்கிறேன்” என்று கூறி எழுந்து உள்ளே சென்று விட்டார் சாந்தி.
பாலுவிற்கு என்ன செய்வது என்று புரியாமல் எழிலுக்கு தான் அழைத்தான்
“நீங்க உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க.. அப்புறம் உதவி செய்றதா வேணாமான்னு முடிவு செய்றேன்” என்று கெத்து காட்டினாள் எழில்.
வேறு வழி இல்லமல் பாலு தங்கள் காதல் கதையை கூறி, பின் கவினிடம் உதவி கேட்டது, அவர் அம்மா மூலம் எதேர்ச்சியாக எல்லாம் செட் செய்தது, பிறகு லாவண்யாவின் அம்மா பேசியது, மீனா கூறியது, கவியரசியின் பஞ்சாயத்து, கடைசியாக சாந்தியின் முடிவு என்று அனைத்தையும் கூறினான்.
“இப்ப என்ன எழில் செய்றது?” என்றான் பாவமாக.
“வாவ்.. உங்களுக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னனா?”
“எழிலு..”
“நீங்க கவின் அண்ணாவை வரச்சொல்லுங்க.. அவங்க கிட்ட ஐடியா கேட்போம்”
கவினும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான்.
“அத்தாச்சியை சமாளிக்கனும் அண்ணா” என்று ஆரம்பித்தனர் இருவரும்.
“டேய் உன் காதல் கை கூட, என் குடும்பத்துல கும்மி அடிச்சுடாதீங்க டா.. அவளுக்கு தெரியாம நான் இவ்வளவு செஞ்சிருக்கேன்னு மட்டும் தெரிஞ்சா அவ்வளவு தான்..” என்று கையை தூக்கிவிட்டான் கவின்.
“பேசாம விஜயன் மாமா கிட்ட கேட்போமா?” என்றாள் எழில்.
“இல்ல எழில்.. அப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்” என்றான் பாலு.
மூவரும் தீவிரமாக யோசித்தனர்.
“எனக்கு ஒரு ஐடியா.. கவி அத்தாச்சிக்கு அவங்க தலைமையில உங்க கல்யாணம் நடக்கனும்னு ஆசை.. மத்தபடி எந்த பொண்ணா இருந்தாலும் அவங்களுக்கு பிரச்சனை இல்லை” என்றாள் எழில் தீவிர குரலில்.
பாலுவும் கவினும் மண்டையை ஆட்டினார்கள்.
“அதுக்கு.. நீங்க நேரா அவங்ககிட்ட போய், போட்டோல பார்த்ததுமே இந்த பொண்ணை எனக்கு பிடிச்சிடுச்சு.. மனசுல ஒட்டிக்குச்சு.. வேற யார்கிட்ட சொல்லவும் ஒரு மாதிரியா இருக்கு.. அதான் உங்க கிட்ட சொல்றேன். நீங்க தான் எல்லார்கிட்டயும் பேசி அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு” கேளுங்க..
“சரியா வருமா” என்று பாலு சந்தேகமாக கேட்கவும்,
“கண்டிப்பா வரும்டா பாலு.. எழிலு நீ எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.. இந்த மாதிரி அப்பப்ப எனக்கும் ஐடியா கொடும்மா.. இத்தனை நாளா இந்த மாதிரி ஐடியா எனக்கு தோனாம போயிடுச்சே?” என்றான் கவின் ஆச்சர்யமாக.
பின்னே, மனைவிக்கு அவளை யாரும் முன்னிறுத்துவதில்லை என்பது தான் குறையே. பிரச்சனை வரும்பொழுது, பரவாயில்லை விடு கவி என்று தான் இதுவரை கூறி இருக்கிறான்.
எழில் சொன்னது போல கூறினால் கவி மகிழக்கூடுமே என்று கவினின் மண்டைக்குள் பல்ப் எரிந்தது.
தன் காதல் அந்தரத்தில் தொங்கவே, எழில் கார்த்தி விஷயத்தை மறந்துவிட்டான் பாலு.
எழில் சொன்னதை போல கவியிடம் பேச, அது நன்றாக வேலை செய்தது.
“இதுக்கு எதுக்கு பாலு சங்கடப்படற? நீயாவா ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்ற? நாங்க காட்டுன பொண்ணை தான் பிடிச்சிருக்கு உனக்கு. என்கிட்ட சொல்லிட்ட இல்ல? நான் பார்த்துகிறேன்” என்று கவி உற்சாகமாகவே கூறினாள்.
அதன் பிறகு கவியே அனைவரிடமும் பேசி, கல்யாணம் வரை கொண்டு வந்துவிட்டாள்.
இப்படியாக பாலமுருகன் லாவண்யா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அன்பரசியின் பிரசவத்திற்கு முன்பாக திருமணத்தை முடித்துவிடலாம் என்று அனைவரும் கலந்து பேசி, இரண்டு மாதத்தில் முகூர்த்த தேதியை குறித்தனர்.
பாலுவும் லாவண்யாவும் கைபேசியும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தனர்.
அனைவரும் கல்யாண வேலையில் பிசியாக இருக்க.. எழிலரசி கார்த்தியின் காதல் ஒரு பக்கம் ஜரூராக வளர்ந்து வந்தது.
——————–
அப்பா அம்மாவை அழைத்து செல்ல என ஊரிலிருந்து ரத்னாவின் தம்பி கதிர் அவரின் மூத்த பெண் நாகதாராவுடன் வந்திருந்தார்.
கை நிறைய அக்கா மகன்களுக்கு பரிசுகளை அள்ளி கொண்டு வந்திருந்தார்.
“என்ன பாட்டி பெரிய நாகுவை பார்த்ததும் இந்த நாகுவை மறந்துட்டீங்க போலயே.. ஒரு போன் கூட இல்லை” என்று பாட்டியுடன் சண்டை பிடித்தாள் நாகதாரா செல்லமாக.
புசுபுசு கன்னங்களோடு உரிமையாக பாட்டியுடன் சண்டை போடும் பேத்தியை குறுகுறுவென பார்த்திருந்தான் விக்கி.
பாசக்கார மாமா கதிரை விக்கிக்கும் கார்த்திக்கும் மிகவும் பிடித்திருந்தது. பதின் பருவத்தில் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு, தாய்மாமாவின் இந்த நெருக்கமும் பாசமும் நிறைவாக இருந்தது.
அதன் பின் அடிக்கடி இவர்களும் ஊருக்கு சென்று வந்தார்கள். அங்கே இருந்து வந்து சென்றார்கள். கார்த்தியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். பெரிய பெரியம்மாவின் பெரிய பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆனது. அதற்கு இவர்கள் குடும்பமாக சென்று வந்தார்கள். அனைவரிடமும் தாத்தாவும் பாட்டியும் பேரன்களை அறிமுகப்படுத்தினார்கள்.
அடுத்த சின்ன பெரியம்மாவின் மகளுக்கும் திருமணத்திற்கு பார்த்துக்கொண்டிருந்தனர்.
இங்க பாரு ரத்னா, “நாளைக்கு என் பேரப்பிள்ளைகளுக்கு எல்லாம் தாய் மாமன் சீர் உன் பசங்க தான் செய்யணும்” என்றனர் ரத்னாவின் அக்காக்கள்.
“கண்டிப்பா, நாங்க செய்றோம் பெரியம்மா” என்றான் கார்த்தி உடனே ஆசையாக.
ரத்னாவின் முகம் அவ்வளவு மலர்வாக இருந்தது.
ஊருக்கு திரும்பியதும், கார்த்தி எழிலிடம் ஊரில் நடந்தவைகளை ஆசையாக பகிர்ந்து கொண்டான்.
“இன்னும் ஆறு மாசம் ஜில்லு. அப்புறம் நாம வீட்ல சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம் சரியா?”
“சரிங்க பாஸ்.. உங்க இஷ்டபடியே “
“ஏன் ஜில்லு, பேசாம நாமளும் பாலு மாதிரியே வீட்ல ஏற்பாடு செய்றா மாதிரியே பண்ணிடலாமா?”
“அது எல்லாம் சரி வராது பாஸ்.. நாம உண்மையை சொல்லி, அவங்க ஒத்துக்கலைன்னா போராடி, அப்புறம் அவங்க சம்மத்ததோடு தான் கல்யாணம் செஞ்சுக்கணும்”
எழிலின் இந்த குணம் தான் கார்த்திக்கு அவளிடம் பிடித்த ஒன்று. ஆசையாக அவளை பார்த்து சிரித்தான்.
இப்பொழுது எல்லாம் கார்த்தியின் மில்லிமீட்டர் சிரிப்பு எழிலிடம் மட்டும் சென்டிமீட்டர் சிரிப்பாக மாறியிருந்தது.
error: Content is protected !!