Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

இறுதி அத்தியாயம் : 30

இறுதி அத்தியாயம் : 30

அப்பா ராஜேந்திரனை அவன் பார்த்த கூர்மையான பார்வையில் அவர் அப்படியே அசையாமல் நின்றுவிட… பாட்டியின் அருகில் சென்று திருமாங்கல்யத்தை அவர் கையில் கொடுத்தான் ஆனந்த். அவர் கண்மூடி ஆசீர்வதித்துக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு தன் மாமன் மகளான ஆனந்தியின் கழுத்தில் பூட்டினான்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் அப்போதுதான் போன உயிர் திரும்பியது போல் இருந்தது. இளவரசிக்கு மட்டும் பயத்தில் கை, கால்கள் உதறின. பாட்டியின் காலில் விழுந்து தன் மனைவியுடன் ஆசி பெற்றான் ஆனந்த்.

ராஜேந்திரன் கோபத்தின் உச்சத்துக்கே சென்றார். “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அபிநயாவுக்கும் உனக்கும் கல்யாணம் ஏற்பாடு செஞ்சா… நீ அவளை யார்கிட்ட கொடுத்திருக்க? யாரைக் கேட்டு இந்த ஏற்பாட்டைச் செஞ்ச? நான் இதை ஒத்துக்க மாட்டேன்!” என்று கத்தினார்.



Advertisement

“யாரைக் கேட்கணும்? அவள் திருமணம் நடக்க உங்ககிட்ட சம்மதம் வாங்க வேண்டிய அவசியமில்லையே! அவள் என் மாமன் மகள். அவள் மனசுல செல்வா இருப்பது தெரிஞ்ச பிறகும், அவளைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ய என்னால் எப்படி முடியும்?”

“நீ பொய் சொல்ற! தகுதி இல்லாத யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு பாவமும் செய்யாத அபிநயாவின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிற! அவன் வேற சாதியைச் சேர்ந்தவன். அன்னைக்கு என் தங்கையின் உயிர் போகக் காரணமான குடும்பத்துல பிறந்தவன்! அவனை இந்த வீட்டு மருமகனா நான் ஏத்துக்க மாட்டேன். அபிநயா, இங்க வா! இல்லை, இவன் தான் வேணும்னு சொன்னா… இனிமே இந்த ஊருக்குள்ளேயே நீ வர முடியாது!” என்று எச்சரித்தார்.

செல்வா தன் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு வர… “நல்லா இருந்த குடும்பத்துல நுழைஞ்சு என் தங்கையின் வாழ்க்கையை அழிச்சதும் இல்லாம, இப்போ இந்த வீட்டுப் பெண்ணின் வாழ்க்கையையும் அழிக்க வந்திருக்கியா? அபிநயாவுக்கு என் மகனைத்தான் பிடிக்கும். அவனைத்தான் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்லியிருந்தா… மரியாதையா இங்கிருந்து வெளியே போடா!” என்று கத்தியவர், செல்வாவின் சட்டையைப் பிடித்து வெளியேற்ற முயன்றார்.

Advertisement

அப்போது சிவச்சந்திரன் அவருக்கு முன்பாக வந்து, மருமகனின் சட்டையிலிருந்த ராஜேந்திரனின் கையை விடுவித்தார். “என் தங்கையைக் கல்யாணம் செய்து வந்த இத்தனை வருஷத்தில் நீங்க எத்தனையோ தவறுகள் செஞ்சும், நான் இதுவரை உங்களை ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசல. என் மகளின் கல்யாணத்தை நீங்களே முடிவு செஞ்சு, கடமைக்குக் கொண்டு வந்து பத்திரிகை நீட்டியப்பவும் நான் எதுவும் சொல்லலை. அதுக்காக என் மகளைக் கட்டியிருக்கும் மருமகனை அவமதிப்பா பேசுறதைப் பார்த்துட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைக்க வேண்டாம்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினார்.

Advertisement

அத்தனைப் பேருக்கும் முன் தன்னை எதிர்த்துப் பேசியதும், “யாரிடம் பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” என்று எகிறினார் ராஜேந்திரன்.

“ஏன் தெரியாம? நீங்க திருந்திடுவீங்கன்னு தான் நானும் ஒவ்வொரு நாளும் பார்க்கிறேன். ஆனா நீங்க திருந்துற மாதிரி தெரியல! சொந்த வீட்டுலேயே எங்களை அடிமையா நடத்தி, என் தங்கையைக் காரணமாக்கி நீங்க செய்த அட்டூழியம் போதும்!” என்றவர், சபையின் நாகரிகம் கருதி மேற்கொண்டு பேசாமல் வாயை மூடிக்கொண்டார்.

அறிவழகனோ விடவில்லை, “எங்க அக்காவைக் கல்யாணம் செஞ்சு இந்த வீட்டுக்கு வந்த நாள் முதலா அதிகாரமா நடந்துக்கிட்டு… எங்க அண்ணனை ஒரேடியா அப்புறப்படுத்தி, எங்க அப்பாவுக்குப் பிறந்த வாரிசான எங்களையும் இல்லாம ஆக்கி, உங்க விருப்பப்படி ஆடிக்கிட்டு இருக்கீங்க! உடன் பிறந்தவளின் இறப்பிலும் தன் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த நினைக்கிற உங்ககிட்ட பேசுறதே அவமானம்!” என்று சீறினார்.

Advertisement

இளவரசி பயத்தில் உறைந்து போயிருக்க… “தங்கையோட கணவன்னு உங்களுக்கு மரியாதை கொடுத்தா, அதுக்காக என் மகளோட வாழ்க்கையையே அழிக்கப் பார்ப்பீங்களா? இன்னைக்கு செல்வாவுக்கும் அபிநயாவுக்கும் தான் கல்யாணம் நடக்க போகுது. என் மகள் செல்வாவைத்தான் விரும்புறான்னு எங்களுக்கும் தெரியும்!” என்றார் சிவச்சந்திரன் அதிரடியாக.

தனது கணவரை உடன் பிறப்புகள் எதிர்ப்பதை கண்டு பொறுக்காமலும், அடுத்து என்ன நடக்க போகிறதோ எனும் அச்சத்திலும் இளவரசி மூழ்கி இருக்க, “என்னம்மா… இவ்வளவு நடந்த பிறகும் கூட உங்களால் வாய் திறந்து பேச முடியலையா? உங்க கணவரை எதிர்த்துப் பேசினா அது அவமானம்கிற நினைப்புல இப்போவும் அழுதுட்டு இருக்கீங்களா?” என்றான் ஆனந்த்.

அவர் மௌனமாக கண்ணீர் வடிக்க, “எப்படி அம்மா உங்களால் இப்பவும் கூட அமைதியா இருக்க முடியுது? கூடப் பிறந்த அண்ணன், பெற்ற பிள்ளையின் வாழ்க்கையை விட உங்க கணவரின் வார்த்தைகள் தான் பெருசா போயிடுச்சா? அவருக்காக நாங்க எப்படி போனாலும் உங்களுக்கு கவலையில்லை, அப்படித்தானே?” என்றான்.

​தன்னைக் குற்றவாளியாக நிறுத்திக் கேட்பது தனது மகனா என்று இளவரசி அதிர, “எங்களுக்குப் பிடிக்காம இருந்தாலும், நாங்க வேறு ஒருவரை விரும்பினாலும் கூட அவர்களை மறந்து, நீங்க பார்த்து வச்சிருக்கும் நபரைத் தான் கல்யாணம் செய்யணுமா? ஜாதி, மதம், இனம், மொழி பார்த்து வர்றது காதலா? இல்ல, ரெண்டு மனங்களுக்கு இடையில் வர்றது காதலா? நாம காதலித்த துணையுடன் வாழப் போறோமா, இல்ல ஜாதி மதத்தோடு சேர்ந்து வாழப் போறோமா?” என்று வெடித்தான்.

​“நீங்க ஆயிரம் தப்பு செஞ்சிருந்தாலும் நான் மன்னிச்சிருப்பேன். ஆனா, ஆனந்தியை நான் உயிரா விரும்புறேன்னு தெரிஞ்சிருந்தும், அவகிட்ட போய் என்னை விட்டு விலகிப் போகச் சொன்னீங்களே… அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது!” என்றான் ஆனந்த்.

இளவரசி கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் கதற… தன் அப்பாவின் முன் சென்றவன், ஆனந்தியின் கையைப் பற்றி அழைத்து வந்து நிறுத்தினான். “இவள் யார்? எப்படிப்பட்ட வீட்டுல பிறந்தவ? இவளோட பெற்றோர் யார்னு உங்களுக்குத் தெரியுமா? இவளை நான் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாதுன்னு சொல்லித்தானே அவசர அவசரமா அபிநயாவுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு செஞ்சீங்க? என் மனசு, அதுல இருக்கிற நேசம் எதையும் நினைக்காம சுயநலமா நடந்துக்கிட்டீங்க… மாமாவோட விஷயத்துலேயே உங்களால் ஜெயிக்க முடியல, அப்புறம் எப்படி என் விஷயத்துல மட்டும் ஜெயிச்சிடுவதா நினைச்சீங்க?” என்று கேட்டான்.

அத்தனைப் பேருக்கும் முன்னால் தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் மகனை அவர் உறுத்துப் பார்க்க… “மாமாவின் கல்யாணத்தைக் காரணமா வச்சு, ரெண்டு ஊர் மக்களுக்கு இடையில் பிரச்சனையைத் தூண்டிவிட்டு, இன்னைக்கு வரைக்கும் அவங்களை ஒண்ணு சேர விடாம அராஜகம் பண்ணி, அவங்களுக்குக் கிடைக்க வேண்டிய எத்தனையோ நல்ல திட்டங்களைத் தட்டிப் பறிச்சீங்களே… உங்களுக்குத் தெரியுமா? உங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துட்டு இருந்ததே… அதுக்குச் சென்ற வாரமே தீர்ப்பு வந்திருக்கு!

​பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கிட்டு, ரெண்டு ஊருக்கு இடையிலயும் பிரச்சனையைத் தூண்டிவிட்டு, எத்தனையோ உயிரிழப்புகளுக்கும் மக்களோட வாழ்வாதாரம் பாதிக்கவும் காரணமா இருந்ததால், உங்களைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு வந்திருக்கு. காவலர்கள் எப்பவோ உங்களைக் கைது செய்ய வந்தும்… எந்தச் சாதியைச் சார்ந்த நபரை இதே வீட்டுல பிறந்த மாமா கல்யாணம் செய்ததால் நீங்க தடுத்து நிறுத்தி இத்தனைப் பிரச்சனையும் உருவாக்கினீர்களோ, அதே சாதியைச் சார்ந்த நபர் இந்த வீட்டுக்கு மருமகனா வருவதை நீங்க பாக்கணும்; உங்களால் நடந்த அராஜக வாழ்க்கை முடிவுக்கு வருவது கண்டு, இத்தனை நாளும் செய்த தவறை எண்ணி ஆயுசு முழுக்க வருந்தணும்; எந்த மாமாவை இல்லாம ஆக்கத் திட்டமிட்டு இத்தனையும் செய்தீர்களோ, அவரைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு தான்…” என்றவன்,

“அதோ அந்த நாற்காலியில் அமர்ந்து, தன் மகன் வருவானா மாட்டானான்னு தெரியாம வாசலையே பார்த்துட்டு இருக்காங்களே எங்க பாட்டி… அவங்களுக்குத் தெரியுமா தன் மகன் இந்த உலகத்திலேயே இல்லை, தன்னை விட்டுப் பிரிஞ்சு பல நாளாச்சு… தன்னை நினைத்தே தன் மகன் தனது உயிரை அர்ப்பணித்துவிட்டான்!” என்று ஆனந்தின் குரல் இடியாக இறங்கியது.

தொடர்ந்து அவன் ஆவேசமாக, “‘தன் தாயோட முகத்தைக் கடைசி வரை பார்க்க முடியாமப் போயிருமோ’ என்ற ஏக்கத்திலும், ‘தனது மகளைத் தாய்கிட்ட கொண்டு போய் சேர்த்து, அவங்ககிட்ட சில நாட்களாவது அவளை வளர விடணும், பாட்டியோட ஆசீர்வாதம் அவளுக்குக் கிடைக்கணும், எந்தத் தப்பும் செய்யாம இறந்துபோன பிரதீபாவின் ஆத்மா சாந்தியடையணும்’னு அவர் விரும்பினார். ​தாத்தாவும் நீங்களும் விட்ட சாபத்தால் பாதிப்படைஞ்ச அவரோட குடும்பம் விமோசனம் பெறவும், தான் இறந்துபோன விஷயம் கடைசி வரை தாய்க்குத் தெரியக் கூடாதுன்னு அவர் நினைச்சார். தன்னால தன் தம்பியும், சொந்த மண்ணில் பிறந்த உறவினர்களும் பாதிப்படையாம, அவங்க வாழ்வில் ஒரு விடியல் பிறக்கணும்னு எங்க மாமா தன் கடைசி ஆசையை வெளிப்படுத்தினார்.

​அதை நிறைவேத்தத்தான் ஆனந்தி இந்த ஊருக்கே வந்தாள்! அவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிருக்கேன். என் மாமனோட மகள்தான் என் மார்பில் உறையப் போகிறவள்!” என்று கணீரெனச் சொல்ல… பேயறைந்தது போலானார் ராஜேந்திரன்.

அவனது வார்த்தைகளில் அங்கிருந்த அனைவரும் சிலையாக உறைந்துபோக, அந்தச் சொற்கள் பாட்டி ஆனந்தவல்லியின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல விழுந்தன. நம்ப முடியாமல் பேரனைப் பார்த்தார். பேரனின் விழிகளில் வழிந்த கண்ணீரும், அவன் முகத்திலிருந்த கோபமும் அந்தப் பயங்கரமான உண்மையை அவருக்கு ஊர்ஜிதப்படுத்தின.

​ஆனந்த் மெலிதாகத் தலையசைக்க… அதுவரை பிடிவாதமாக வாசலையே பார்த்துக் கொண்டிருந்த அந்த விழிகளில் மரண பயம் வந்து ஒட்டிக்கொண்டது. தட்டுத்தடுமாறி நாற்காலியில் இருந்து எழுந்தவர், மார்பைப் பலமாகப் பற்றிக்கொண்டு ஆனந்தியைப் பார்த்துக் கையை நீட்ட… ஓடிச் சென்று அவரை அணைத்துக்கொண்டாள் ஆனந்தி!

​அவள் முகத்தை ஏக்கம் பொங்க ஊடுருவிப் பார்த்தவர், அவள் தன் மகனின் அச்சு அசலான வாரிசு என்பதை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தார். “அ… அன்பு… அன்பு…” என்று அவர் குரல் கம்ம, மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினார். ஆனந்திக்குத் துக்கம் தொண்டையை அடைக்க, வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாமல் அவர் மார்பில் சாய்ந்து மௌனமாய் அழுதாள்.

​“அன்பு… அன்பு இப்ப இல்லையா? என் புள்ள என்னைப் பார்க்க வர மாட்டானா? ஐயோ!! எங்காச்சும் ஓரிடத்துல அவன் நல்லா இருப்பான், இந்த உசுரு போறதுக்கு முன்னே ஒரு தடவையாவது பார்த்துட மாட்டாமான்னு ஏங்கியது எல்லாம் நிராசையாப் போயிடுச்சா?” என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் ஆனந்தவல்லி.

“என் மகன் உயிரை எடுக்க உன்னால எப்படி முடிஞ்சது இறைவா? என் உயிரை எடுத்தாவது அவனை வாழ வச்சிருக்கக் கூடாதா?” என்று கதறியவர் கண்கள் சொருக, அப்படியே நிலைகுலைந்து சரிந்தார்.

அன்புச்செல்வனின் வாரிசுதான் ஆனந்தி என்ற உண்மை காட்டுத்தீயாய்ப் பரவ, அதுவரை திகைத்து நின்றிருந்த வீட்டு நபர்கள் அனைவரும் ஓடிச் சென்று அவர்களை சுற்றிக்கொண்டனர்.

அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பதறிப் போன ஆனந்தி, “பாட்டிம்மா! அப்பா எங்கே இருந்தாலும் உங்களை ஒரு நாள்கூட மறந்ததில்லை. இப்பவும் அவர் ஆத்மா உங்களைச் சுத்திதான் இருக்கும். இந்த வீட்டுல எல்லாரும் முன்பு போல சந்தோஷமா இருந்தாத்தான் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும்,” என்று ஆறுதல் சொல்லியும், புத்திர சோகத்தைத் தாங்க முடியாமல் அவர் துடியாக துடித்தார்.

​உடன் பிறந்த தம்பிகள் இருவரும் தங்கள் அண்ணனும் அண்ணியும் இல்லையென்பதை எண்ணி விம்மித் தணிந்தார்கள். அம்பிகாவும் ஜானகியும் ஆனந்தியை அணைத்துக்கொள்ள… இளவரசி அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள். இப்படியெல்லாம் நடக்கும் என்று துளியும் எதிர்பாராத ராஜேந்திரன் செய்வதறியாது நின்றார்.

தன் மருமகனின் அதிர்ச்சி கலந்த முகத்தைப் பார்த்த ஆனந்தவல்லி, “இப்போ உனக்குச் சந்தோஷமா? இனிமேலாவது நிம்மதியா இருப்பியா? என் மகன் எப்போ இங்க வருவான், அவனை எப்படியெல்லாம் துரத்தி அடிக்கலாம்னு காத்துக்கிட்டு இருந்தியே… உனக்கு அந்தக் கஷ்டத்தைக்கூடத் தராம அவனே ஒரேடியா போயிட்டான்! இனி நீ ஆசைப்பட்ட மாதிரியே இந்த வீட்டுல நிம்மதியா இரு!” என்றார் அழுகையூடு …

​மாமியாரின் வார்த்தைகளில் ராஜேந்திரன் உறைந்து போயிருக்க, “உன்னால என் வாழ்க்கை அழிஞ்சு, நிம்மதி பறிபோய், என் புருஷன்கிட்டக்கூடப் பேச முடியாமப் போய்… அவர் சாகுற காலத்துலயும் நடந்ததை மறக்க முடியாமல்தானே கண்ணை மூடினார்? அப்படியும் உன் பழிவெறி தீரலயா? உனக்கு உன் தங்கை மேல இருக்கிற அதே பாசம்தான் எங்களுக்கும் எங்க புள்ளை மேல இருக்கும்னு ஒரு நாளாவது நினைச்சுப் பார்த்தியா? பெத்த அப்பனையே மகனுக்கு எதிரியா மாத்திவிட்டு, சொந்த வீட்டுப் படியேறி வரவிடாமப் பண்ணிட்டியே! என் புருஷன் உன்னை எந்த இடத்துல வச்சு நடத்துனார்… புள்ளைங்க உனக்கு என்ன மரியாதை தந்தாங்க… இந்த ஊரும் உறவும் உன்னை எப்படிக் கொண்டாடினாங்கன்னு ஒரு நாளாவது யோசிச்சியா? பழிவெறியிலேயே இத்தனை வருஷத்தையும் ஓட்டிட்டியே, இனிமே யாரை இல்லாம ஆக்கப்போற?” என்றவர், மகனின் இறப்புச் செய்தியை ஏற்க முடியாமல் ஒப்பாரி வைத்தார்.

திருமணமாகி வந்த இத்தனை வருடங்களில், அவர் எத்தனையோ தவறுகள் செய்தபோதும் கூட ஒரு வார்த்தை பேசாத மாமியார், முதன்முதலாக மனதில் உள்ளதைக் கொட்டிய போதுதான், தனது தவறின் வீரியம் புரிந்தது ராஜேந்திரனுக்கு. மைத்துனர்கள் இருவரும் தன்னை அருவருப்பாகப் பார்ப்பதையும், தன் சொந்த மகனே தன்னைத் தீயாய் முறைத்துக்கொண்டு நிற்பதையும் கண்டவர், தான் எத்தகைய பாதகத்தைச் செய்துவிட்டோம் என்பதை எண்ணி நிலைகுலைந்து போனார்.

​தன் மகள் இளவரசியைக் குற்றம் சாட்டும் விதமாகப் பார்த்த ஆனந்தவல்லி, “நீ பெண்ணா பிறந்ததை நினைச்சு சந்தோஷத்துல உங்க அப்பா தரையில கால் படாம வளர்த்தார். ஆனா, நீ அவரோட குடும்பமே அழிஞ்சு போற நிலையில இருந்தும் கூட, யாருக்காகவும் ஒரு வார்த்தை பேச மாட்டேங்குறியே… இதுக்காகவா உன்னைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தோம்?” என்று கேட்டவர், ஏற்கனவே நலிந்திருந்த உடல்நிலையும், இப்போது ஏற்பட்ட மன அழுத்தமும் தாளாமல் மூர்ச்சையற்று விழுந்தார்.

ஆனந்த் பதறியபடி பாட்டியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று தவித்தான். ஆனந்தவல்லி மயக்கத்தின் பிடியில் ஆழ்ந்திருப்பதை உணர்ந்து, அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டான். பின், பாட்டியைத் தன் மனைவியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, ஆவேசம் குறையாத விழிகளுடன் தன் தந்தையைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

“உங்களுக்கு மகனாகப் பிறந்த பாவத்துக்காக நான் வெட்கப்படுறேன்… வேதனைப்படுறேன்… அவமானப்படுறேன்! இந்த உடலில் ஓடும் மொத்த ரத்தத்தையும் வெளியேற்றி, என்னை அன்பு மாமா போன இடத்துக்கே அனுப்பிட மாட்டேனான்னு துடிக்கிறேன். என்னை உயிரோடு கொன்னுட்டீங்க… உங்க மகன் செத்துட்டான்!” என்றான் ஆவேசமாக.

ஆனந்தி, பாட்டியைத் தன் சித்தியிடம் ஒப்படைத்துவிட்டு அவன் அருகில் வந்து கையைப் பற்றி அழுத்த… அவளை அணைத்துக் கொண்டவன், “இவளை மட்டும் நான் சென்னையில் வச்சுப் பார்க்காம இருந்திருந்தா… இன்னைக்கு அபிநயாவை அவள் மனதார விரும்பியவன் கையில் ஒப்படைத்து, நீங்க கட்டி காப்பாத்திய கோட்டையை உடைத்தெரிஞ்சு, உங்க முன்னாடியே என் உயிரையும் மாய்த்திருப்பேன்! எங்க மாமாவை இழந்து எங்க பாட்டி துடிப்பது போல நீங்களும் துடிக்கணும்… புத்திர சோகம் எவ்வளவு பெரிய கொடுமையானதுன்னு நீங்களும் உணரணும்! சுயநலமா இத்தனை வருஷமா நடந்துக்கிட்ட நீங்க, உங்க வாரிசை பார்க்க முடியாம ஏங்கணும். உங்களுக்கு யாரும் இல்லாம அநாதையாப் போகணும்!” என்று சபித்தான்.

“ப்ளீஸ் ஆனந்த்… உங்களைக் கட்டுப்படுத்த முயற்சி பண்ணுங்க!” என்று ஆனந்தி பதறினாள்.

அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், “நீ பாவம் பார்க்கவும், பரிதவிப்புடன் நடக்கவும் ஏற்ற நபர் அவர் இல்லை!” என்று கண்களில் வழியும் நீரைத் துடைத்தான். அடுத்த கணமே, தகப்பன் இத்தனை வருடங்களாகச் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் செல்வாவிடம் ஒப்படைத்தான். “இதை நீங்களும், இவரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துடுங்க” என்றான்.

தனது அப்பாவின் பேச்சைக் கேட்டுத் தாத்தா நடந்துகொண்ட முறைக்காக ஊர் மக்களிடம் மன்னிப்பை யாசித்தான். இத்தனை வருடங்களாக ராஜேந்திரன் கவனித்து வந்த அத்தனை பொறுப்புகளையும் இரண்டு மாமன்மார்களின் வசமாக்கினான். உயர் காவல் அதிகாரியின் அருகில் சென்று இரு ஊர்களுக்கு இடையில் இதுநாள் வரை இருந்த கட்டுப்பாடுகளைத் தகர்த்து எறிந்து, இனிவரும் நாட்களில் எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.

அவர் அவனது நல்ல மனதை வியந்து பாராட்ட, தகப்பனின் நிலைகுத்திய பார்வை, தாயின் கதறல், அவனைப் பார்த்து நிற்கும் ஊர் மக்கள் என எதையும் கண்டுகொள்ளாமல், பாட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவன், அங்கிருந்தவர்களிடம் அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தான்.

ஆனந்திக்கு அமெரிக்கா செல்லும் நாள் நெருங்கிவிட்டதை அறிந்திருந்த ஆனந்த், இருவருக்கும் பயணச் சீட்டு பெற்றிருந்தான். பாட்டி மயக்கம் தெளிந்த பின்னர் அவரிடம் அனைத்தையும் விலாவாரியாகத் தெரிவித்து, தாங்கள் வரும் வரை பத்திரமாக இருக்குமாறு கூறினான். அதோடு, இந்த வீட்டு வாரிசான ஆதர்ஷைக் கையோடு அழைத்து வந்து ஒப்படைப்பதாக உறுதி அளித்தான்.

அவர் முழுமனதுடன் சம்மதிக்க… சாட்டையாய் சுழன்றடித்த மகனின் வார்த்தைகளாலும், புழுவைப் போலத் தன்னைப் பார்த்துச் சென்ற உறவினர்களின் பார்வையாலும், ஊர் மக்களின் கோபத்தாலும் நிலைகுலைந்து போன ராஜேந்திரன், தன்னைக் கைது செய்ய வந்திருந்த உயர் அதிகாரியிடம் சென்று தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இளவரசி, கணவனும் இல்லாமல், மகனும் இல்லாமல், ஆறுதல் சொல்ல அருகில் உடன்பிறந்தவர்களும் இல்லாமல் பித்துப் பிடித்தவர் போலானார். ஒரே நாளில் ஆண்டவன் அவரது தலையெழுத்தை மாற்றியிருந்தார்.

*******

நேராக விமான நிலையத்திற்கு வந்து அமெரிக்காவிற்குச் சென்ற ஆனந்த், தன் மாமன் மகனைக் கண்டதும் கண்கலங்கினான். அவனது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தவன், அங்கிருந்து ஊருக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்தான். ‘அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்துவிட்டுச் சென்னையிலேயே வசிக்கலாம்’ என்று ஆனந்த் சொல்ல… ‘தம்பியின் விருப்பம் அறியாமல் எதையும் செய்ய வேண்டாம். இப்போதைக்குக் கபிலனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நாம் சென்னையில் உள்ளதைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்றாள் ஆனந்தி. அவனுக்கும் அதுவே சரியாகப்பட, பூபாலனும் அவர்களின் எண்ணத்திற்கு சம்மதம் தெரிவித்து, தன் மகனையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனந்தை அங்குள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தி, தனது நிறுவனத்தின் மேலாளராகக் கபிலனை நியமித்து, கணவனுடன் தன் வாழ்க்கையைக் காதலுடன் ஆரம்பித்தவள், தன்னைப் பார்க்க வந்த ஹிரித்திக் மற்றும் அவன் அப்பாவைக் கண்டுகொள்ளாமல், சில நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து தனது வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் கிராமத்திற்குப் புறப்பட்டாள்.

“அக்காவும் இல்லாம, தங்கையும் இல்லாம… என்னை இப்படிப் பனிக்காட்டுல விட்டுட்டுப் போறியே, இது உனக்கு நியாயமா இருக்கா?” என்று கபிலன் கேட்க…
அட்டகாசமாகச் சிரித்த ஆனந்த், “நம்ம கிராமத்துப் பெண்களை விட இங்கே நிறைய மாடல் மாடலா சூப்பர் பிகருக இருக்காங்க! நான் அவசரப்பட்டுக் கட்டிக்கிட்டேன்… நீ நல்லா என்ஜாய் பண்ணு!” என்று கண்சிமிட்ட, ஆனந்தி கணவனின் செவியைப் பற்றித் திருகினாள்.

அவன் சத்தமாகச் சிரித்துக்கொண்டே அவளை அணைத்துக்கொள்ள… “எப்படியோ இரு துருவங்களும் ஒன்றை ஒன்று சேர்ந்துடுச்சு! எனக்கும் உங்களிடமிருந்து விடுதலை… சந்தோஷமாப் போயிட்டு வாங்க! நானும் எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்குதான்னு டிரை பண்றேன்” என்றான் கபிலன்.

“கிடைச்சதும் சொல்லுடா”

“எதுக்கு அதையும் துரத்தி விடவா?” என்க, மூவரும் சிரித்தபடி விடை பெற்றனர்.

மூவரும் ஊருக்கு வரப்போகும் விஷயத்தை அறிந்த அனைவரும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். மகனின் மறு வடிவாய்ப் பிறப்பெடுத்து இருக்கும் பேரனை அணைத்துக் கண்ணீர் சிந்திய ஆனந்தவல்லி, ‘நானும் அவனுடன் மருத்துவமனையிலிருந்து பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட, தன்னைப் போலவே இருக்கும் ஆதர்ஷைக் கண்ட நகுலனுக்கு அவனை மிகவும் பிடித்துப்போனது.

செல்வநாயகம் தன் அத்தை மகனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள, பல வருடங்களுக்குப் பிறகு அனைவர் மனதும் நிம்மதியாக உணர்ந்தது.

அபிநயா வாய் திறந்து சொல்லாமலே தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வர… மகளைக் காண்பதற்கு அவளது பெற்றோர் வருவதும், அவள் கணவனுடன் தன் பிறந்த வீட்டிற்குச் செல்வதுமாக உறவு நீடித்தது. அத்தனை வருடங்களாகத் தங்களது உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல முடியாமல் பரிதவித்த ஊர் மக்கள் அனைவரும், இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர்!

ஆனந்த், மாமாவின் தொழிற்சாலையில் வேலையைத் தொடங்கி, அவர்களின் பழைய வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்தான். சென்னையிலும் இங்கேயுமாக அவனது தொழில் பெருகி வளர்ந்தது. ஆனந்தி கணவனின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்க, அவர்கள் வாழ்க்கை இனிதாய் நகர்ந்து சென்றது.

மூன்று சிறுவர்களும் அவர்களைத் தங்களோடு வருமாறு அழைத்தும், ஆனந்த் வர மறுத்துவிட்டான். அதனால், மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வந்ததும் அக்காவின் வீட்டிற்கு ஓடி வருவது அவர்களுக்கு வாடிக்கையானது. பாட்டியின் அருகாமையும், இங்கு நடக்கும் இயற்கையான சிகிச்சை முறைகளும் ஆதர்ஷின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தின.

மலை உச்சியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு, இரண்டு ஊர் மக்களும் மீண்டும் ஒற்றுமையுடன் சென்று பங்கேற்றனர்! ஒரு காதலால் பிரிந்த குடும்பம் மற்றொரு காதலால் ஒன்று சேர்ந்தது. ஒரு காதல் கல்யாணத்தால் உருவாகிய பிரச்சனைகள், அதற்குக் காரணமாக இருந்தவர்களின் வாரிசுகளால் மீண்டும் ஒன்றானது. குடும்பத்து மகிழ்ச்சியும், ஊர் மக்களிடம் காணப்பட்ட சந்தோஷமும் அனைவரையும் நிம்மதியுடன் வாழ வைத்தது.

ஆனந்தியின் வயிற்றில் அவளது அத்தானின் வாரிசு உருவாக… தன் காதலை அவன் விதவிதமாகக் கொட்டிக் கவிழ்த்தான். தந்தை சிறையில் இருக்க, தாய் கணவனையும் மகனையும் காண முடியாத ஏக்கத்திலும், அதிகப்படியான மன அழுத்தத்திலும் சித்த சுவாதீனமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனந்தி எத்தனையோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல், தன் பிடியில் உறுதியாக இருந்தான் ஆனந்த்.

என்னதான் தவறு செய்திருந்தாலும், குடும்பமே சந்தோஷமாக இருக்கும்போது இளவரசி மட்டும் மருத்துவமனையில் இருக்கும் நிலை, அவளது உடன் பிறந்தவர்களைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியது. இளவரசியை வீட்டிற்கு அழைத்து வரலாம் என்றாலும், அவள் எப்போதும் மகனையும் கணவரையுமே நினைத்துக்கொண்டிருந்தாள். இது குறித்து ஆனந்திடம் முறையிட்டபோது, “அவரது மகன் இறந்துவிட்டான்” என்று ஒற்றை வார்த்தையில் அவன் முடித்துவிட்டான்.

அதனால் ஆனந்தி, இரு சித்தப்பாவுடன் சேர்ந்து மாமனாரை மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் இறங்கினாள்.

அவர்களின் நல்ல மனதை நினைத்துக் கண்கலங்கிய ராஜேந்திரன், தான் செய்த தவறுக்கான தண்டனையாகக் கடைசிவரை சிறையிலேயே இருக்க விரும்புவதாகச் சொன்னார். ஆனாலும் அவர்கள் பிணையில் அவரை அழைத்து வந்து இளவரசியைப் பார்க்கச் செய்தனர். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் இருந்த தோற்றத்திற்கும், இப்போது அவளது நிலைக்கும் உள்ள வேறுபாடு அவரைப் பரிதவிக்கச் செய்தது.

தன்னால்தான் இத்தனையும் ஆகிவிட்டது என்று அவர் உடைந்து அழுதார். மகனிடம் மன்னிப்பைப் பெற முடியாது, மனைவியிடம் தனது இருப்பை உணரச் செய்ய முடியாது என்ற நிலையில், தன் தவறுகளை எண்ணி வாய்விட்டு அழுதார். மைத்துனர்கள் இருவரும் அவரைத் தங்களுடன் அழைத்துச் செல்ல முயல, அவர்களுக்குத் தான் செய்த பாவத்தை நினைத்து வேதனைத் தீயில் மூழ்கினார்.

இத்தனைக்குப் பிறகும் தங்கள் மீது கோபப்படாமல் இருக்கும் மருமகளிடம் மன்னிப்புக் கேட்க ஆசைப்பட்டார். ஆனந்தையும் அழைத்து வர அவள் முயற்சி செய்தும், அவன் வர மறுத்துவிட்டான். அவனை முறைத்துக்கொண்டு தனியாகச் சென்றவள், மாமனாரின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாள்.

வழக்கறிஞர் மூலம் ராஜேந்திரனை நிரந்தரமாக விடுவிக்கச் செய்தபோது, அவர் அந்த வீட்டிற்கு வர மறுத்துத் தனது பழைய வீட்டிற்கே செல்ல முயன்றார். ஆனால் மைத்துனர்கள் இருவரும் அவரையும் இளவரசியையும் தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்றனர். ஆனந்த் அவர்கள் மீது கோபத்துடன் இருந்தாலும், தன் வயிற்றில் மகவைச் சுமந்திருக்கும் காதல் மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டான்.

உண்மையான காதல் என்பது ஒரு நொடியில் உருவாகி, உயிர் போகும் வரை நிலைத்திருப்பது. அப்படிப்பட்ட காதலை மகனும் மைத்துனனும் ஏற்றுக்கொண்ட போதிலும், ராஜேந்திரனுக்கு அவர்களின் பாசம் கடைசி வரை கிடைக்காமலேயே போனது. மகன் அன்று கேட்ட கேள்விகள் அவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. தன் மனைவி தன்னை அடையாளம் காண முடியாத நிலையிலும், அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து ஒரு நிழலாகப் பார்த்துக்கொண்டார் ராஜேந்திரன்.

தந்தையிடம் ஏற்பட்ட மாற்றம் தெரிந்தாலும் ஆனந்த் அவர்கள் இருக்கும் பக்கமே செல்லவில்லை. அவர் தான் செய்த தவறை நினைத்து முழுவதுமாக திருந்தி சரியாகட்டும். தன்னைப் பிரிந்து இருந்தால் தான் அவர் செய்திருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணரக்கூடும்; அம்மாவின் நிலையைப் பூரணமாக அறிந்தால் மட்டுமே காதலுக்கும் கடமைக்கு வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் புரியும்; எத்தனைப் பெரிய வாழ்க்கையை இத்தனை வருடங்களில் இழந்து இருக்கிறோம் என்பதும் தெரிய வரும் என்று அமைதியாக இருந்து கொண்டான்.

கணவனிடம் தெரிந்த மாற்றத்தில், அவன் என்றேனும் ஒருநாள் பெற்றோரை நிச்சயமாக மன்னித்து ஏற்றுக்கொள்வான் என்று நம்பி, அவன் மீதும், மாமனார் மாமியார் மீதும் உயிர் நேசத்தை கொட்டினாள் ஆனந்தி.
அவனும் கர்ப்பமாக இருக்கும் மனைவியின் மனம் கோணாதவாறு நடந்து கொண்டான். அவனது நேசம் அவளை முழுமையாகச் சரணடையச் செய்தது. அவனது நாடி நரம்புகளில் புகுந்து அவள் நர்த்தனம் ஆட… ஆனந்தின் உயிரும், ஆனந்திக்குள் ஊடுருவிய பேரின்பமும் தாளம் தப்பாமல் ஒன்றிணைந்து, இருவரின் ஜீவனுக்குள் லயமாக ஒலித்தது. அந்த நேசம் அலைகடலை விடவும் விரிந்து, இந்த வையகம் நிலைத்திருக்கும் வரை அவர்கள் காதலையும் நினைவுகூர வைக்கும்!

***முற்றும்***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!