Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி Final & Epilogue

அத்தியாயம் 26 

சுசீலாவின் பெற்றோர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் சீனியர் மருத்துவர்களாக இருப்பவர்கள்.



Advertisement

என்னதான் முக்கிய பதவி வகித்தாலும் நாற்பது நபர்களை எப்படி அனுமதிப்பார்கள்?

அவர் மாலதியிடம், “இங்க பாருங்க மதனி, கண்டிப்பா இவ்வளவு பேர் இருக்க முடியாது. அதிகபட்சம் நாலு பேர் மட்டும் தான் இருக்கணும்” என்று கூறிவிட்டு  முத்துவை பார்க்க சென்றுவிட்டார்.

Advertisement

Advertisement

மாலதி பாவையை என்ன செய்ய என பார்க்கவும்,

“நீ கவலை படாத எம் ஸ்கொயர், ப்ரதம் பார்த்துகிறதா சொல்லிட்டான். நீ அமைதியா இரு” என்று தோழியாய் அவரை அரவணைத்து கொண்டார்.

Advertisement

காலையில் இருந்து ஒரு தாயாய் அவரது தவிப்பை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.

மருத்துவமனைக்கு பின் பக்கம் தான் சுசீலாவின் பெற்றோர்கள் வீடு. “அனைவருக்கும் மதியம் அங்கே தான் உணவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். குழந்தை பிறந்தா அழுகிற சத்தம் அங்கே கேட்கும்.. நாம உடனே வந்துடலாம்” என்று அனைவரையும் பேக் செய்து அலேக்காக தூக்கி சென்று விட்டான் ப்ரதம். 

மாலதி, பாவை, ஹிருதய், கந்தசாமி நால்வர் மட்டும் அங்கேயே  தங்கிக்கொண்டார்கள்.

கந்தசாமி தீவிர யோசனையில் இருந்தார்.

“என்னத்த மாமா அப்படி யோசிக்கிறீங்க?” என்றார் மாலதி.

“இல்ல டீச்சரு, அது புள்ள நம்ம முத்து மாதிரி இருக்குமா இதயா மாதிரி இருக்குமான்னு தான் யோசிட்டு இருந்தேன்”

“நல்லபடியா பொறந்தா போதும் மாமா.. பொறுப்பை எல்லாம் முத்தாயி அம்மாச்சிக்கிட்ட கொடுத்திட்டேன்.”

“அப்புறம் எதுக்கு பதட்டமா இருக்க? எல்லாம் அம்மாச்சி பார்த்துக்குவா” என்றார் ஆறுதலாக.

ஹிருதய் அமைதியாக பூம்பாவையின் அருகில் அமர்ந்து கொண்டான். பாவையும் ஹிருதய்யும் அமைதியாக இருந்தனர். மாலதியும் கந்தசாமியும் சலசலவென பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு மணி நேரத்திலே சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று நர்ஸ் வந்து கூறி சென்றார்.

“டீச்சரூ சந்தேகமே வேண்டாம், புள்ள அப்படியே என் இதயாவை போலத்தான் பிறந்திருக்கு.. பாரு ஆர்ப்பாட்டமே இல்லாம அமைதியா பொறந்திருக்கான்” என்றார் ஆர்ப்பாட்டமாக.

“சும்மா இருங்க பெரியப்பா.. வலி இல்லாம பிள்ளை பிறக்குமா? முத்து அவ்வளவு பொறுமையா அமைதியா பிள்ளை பெத்திருக்கு” என்றார் பாவை பெருமையாக.

“ஆமா ம்மா” என்றான் ஹிருதய், சொல்லும் போதே அவன் கண்களில் இருந்து கோடாய் நீர் இறங்கியது.

வெளியே காட்டி கொள்ளாவிட்டாலும் அவனது தவிப்பு அனைவருக்கும் புரிந்துதான் இருந்தது. முத்துவின் மனசு நோக கூடாது என்று கூடவே நின்று அவளை பார்த்துக்கொண்டு தன்னை தைரியமாக காட்டிக்கொண்டிருந்தான்.

பத்து நிமிடத்தில் சுசீலாவின் அம்மா, பூங்குவியலாக இருந்த பிள்ளையை வெள்ளை துணியில் சுற்றி கொண்டு வந்தார். 

“யார்கிட்ட முதல்ல கொடுக்க?” என்று கேட்டார் சிரித்து கொண்டே.

“பிள்ளைய அவன் அப்பாகிட்டவே கொடுங்க” என்றனர் பாவையும் மாலதியும் ஒன்றுபோல.

“இல்ல அத்தை, தாத்தாகிட்ட முதல்ல கொடுங்க” என்றான் ஹிருதய்.

தாத்தாவின் தவிப்பை கூடவே இருந்து பார்த்துக்கொண்டிருப்பது அவன் தானே. முத்து கருத்தரித்த நாள் முதல், இவர்களை விட ஆவலாக இருப்பதும் அவர்தான். பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வார். மற்றவர்கள் கண்களுக்கு தெரியாவிட்டாலும், கூடவே இருக்கும் ஹிருதய்யுக்கு தெரியும் அல்லவா?

அவன் அன்பில் உருகித்தான் போனார் கந்தசாமி. முதலில் ஹிருதய்யை தான் ஆரத்தழுவி கொண்டார்.

பின் கொள்ளு பேரனை ஆசையாக வாங்கினார்.

அப்படியே குட்டி ஹிருதய் தான்..

சிறிது நேரத்தில் முத்துவையும் ரூமிற்கு மாற்றியவுடன் ஹிருதய் தான் மனைவியிடம் குழந்தையை காண்பித்தான்.

“அட குட்டி தக்காளி மாதிரி இல்ல இருக்கான், தக்காளி?” என்று கூறினாள்  கணவனை பார்த்து காதலாக.

அதன் பிறகு, இவர்கள் குடும்பத்திற்காகவே தனியாக ஒரு செக்யூரிட்டியையும் நர்ஸையும் நியமித்தார்கள் மருத்துவமனையில்.

அரைமணி நேரத்திற்கு இருவர் என்று அட்டவணை போட்டு ஒவ்வொருவராக வந்து பார்த்து சென்றார்கள்.

————

குழந்தை பிறந்து முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு மீண்டும் அனைவரும் ஒன்று கூடினார்கள்.

குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும் உரிமையை முத்தாயி காதம்பரி கேசவன் ஜோடியிடம் கொடுத்திருந்தாள். 

கேசவனுக்கும் காதம்பரிக்கும் முத்தாயியின் அன்பு மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று அவர்களது இளமை காலத்தில் இருவரும் எத்தனை யோசித்திருப்பார்கள்.

அதே போல சொந்தங்களில் குழந்தைகள் பிறக்கும் போது எல்லாமே என்ன பெயர் வைக்கலாம் என்று தங்களுக்குள் நினைத்து பார்த்து கொள்வார்கள்.

ஆனால் ஒருவர் கூட இவர்களிடம் கருத்து கேட்டது இல்லை. அப்படி இருக்கையில், “நீங்க தான் குட்டி தக்காளிக்கு பெயர் வைக்கணும் கேசவப்பா”  என்று முத்து கேட்டுக்கொண்டதில் அவருக்கு அத்தனை ஆனந்தம்.

காதம்பரியும் உணர்ச்சி வசத்தில் இருந்தார். சிவங்கரி கூட இம்முறை ஒன்றும் கூறவில்லை. தங்கையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவர் மனதையும் கொஞ்சம் இளக செய்திருந்தது.

 

ஆனாலும் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மாவா இருக்கும். காதம்பரிக்கு அழைத்து,

“இங்க பாரு காது, கொஞ்சம் மாடர்ன்னா பெயர் செலக்ட் பண்ணுங்க” என்று தினம் தினம் ஒரு முறை கூறி விடுவார்.

முத்து தான் என்ன பெயர் என்று விழா அன்று அனைவருக்கும் கூறினால் போதும் நர்ஸ் அம்மா, அதுவரை சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் என்று கூறியிருந்தாள்.

அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள் என்ன பெயர் வைக்க போகிறார்கள் என்று.

“இந்தியா பாகிஸ்தான் மேட்ச் பைனல்ஸ் பார்க்கிற மாதிரி டென்ஷனா இருக்கு ரம்ஸ்” என்றாள் ஹாசினி ரம்யாவிடம்.

“ஆமா ஹாசி..”

முத்தாயியும் ஹிருதய்யும் குழந்தையை தூக்கி கொண்டு வந்து ஊஞ்சலில் அமர்ந்தார்கள்.

குழந்தை காதுல மூனு முறை பெயரை கூறுமாறு நித்யகல்யாணி காதம்பரியிடம் கூறினார்.

அவர் கணவர் கை பிடித்து இவர்கள் அருகில் வந்தார்.

காதம்பரி மூன்று முறை குழந்தையின் காதில் பெயரை கூறினார்.

“அருள்கந்தன்… அருள்கந்தன்.. அருள்கந்தன்..” 

அனைவரும் கூறி கூறி பார்த்தார்கள்.

“சூப்பர் செலக்ஷன்” என்று மனதார கூறினார்கள் முத்தாயியும் ஹிருதய்யும்.

அனைவருமே பாராட்டி கை தட்டினார்கள்.

கந்தசாமியின் கண்கள் கலங்கிவிட்டது.. என் பெயரை சேர்த்து அழகா பொருத்தமா வச்சிருக்காங்களே என்று.

“எப்பொழுதுமே மேன்மக்கள் மேன்மக்களே! “என்றார் பூம்பாவை கணவரிடம்.

அவரும் ஆமோதிப்பாக தலையை ஆட்டிக்கொண்டார்.

—————–

அருள்கந்தன் உருவத்தில் மட்டுமே அவன் அப்பாவை கொண்டு பிறந்திருந்தான்.

குணத்தில் அப்படியே முத்தாயி தான்.

ஹிருதய் ஒருவனால் தான் முத்தாயி, கந்தசாமி, அருள் மூவரையும் சமாளிக்க முடியும். 

ஹாசினிக்கு படித்து முடித்து இப்பொழுது மத்யப்ரதேசத்தில் உள்ள போபால் நகரில் வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். தனியாக இருந்து பழக வேண்டும் என்று முத்தாயி தான் அவளை வெளி மாநிலத்திற்கு அனுப்பி இருந்தாள்.

எப்படி சமாளிக்க போகிறாளோ என்று அனைவரும் பயந்ததிற்கு மாறாக  அழகாக சமாளித்தாள் ஹாசினி.

இன்னும் ஓராண்டு வேலை பார்த்த பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி விட்டாள்.

ரம்யா படித்து முடித்து இப்பொழுது சௌந்தருடன் இணைந்து வேலைகளை கவனிக்க தொடங்கி இருக்கிறாள். அதில் சௌந்தருக்கு அத்தனை பெருமை.

ப்ரேம் படித்து முடித்து வெளியே நல்ல வேலை கிடைத்தபோதிலும், அதை மறுத்துவிட்டு ஹிருதய்யுடன் இணைந்து கொண்டான்.

தனியாக அவனுக்கு ஒரு பிசினஸ் அமைத்தது தர ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து வைத்திருந்தான் ஹிருதய்.

கார்மேகம் தாத்தா செம்பருத்தி டீ குடித்தால் உடம்புக்கு நல்லது என்று ஒரு முறை கூறி இருந்தார். அதன் படி, இவர்கள் தோட்டத்தில் இருக்கும் செம்பருத்தி பூக்களை எடுத்து நிழல் காய்ச்சலில் நன்றாக காயவைத்து அதை பொடி செய்து என்று ஹிருதய்யே தயார் செய்தான். அதில் ஒரு ஸ்பூன் கொதிக்கும் நீரில் போட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும்.

மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. பின் இவர்கள் குடும்பத்தார் அனைவர்க்கும் தயார் செய்து கொடுத்தான்.

அதையே மார்க்கெட்டிங் செய்தால் என்ன என்று தோன்றவும், கந்தசாமி தாத்தாவிடம் பேசி, ஒரு பக்கம் வயலில் செம்பருத்தி பயிரிட்டனர்.

அதுவும் நல்லா பூக்க ஆரம்பித்தது. அப்பொழுது, இவ்வளவு இலைகள் இருக்கே, இதை என்ன செய்யலாம் என்று மீண்டும் கார்மேகம் தாத்தாவிடம் கேட்டான். அன்று முத்துவும் உடன் வந்திருந்தாள்.

“தண்ணீல இருந்து தங்கத்தை எடுத்துடும் போலயே உன் புருஷன்” என்று முத்தாயியிடம் கூறி சிரித்து கொண்டனர் தாத்தாவும் பாட்டியும்.

“பூவை விட இலை இன்னும் நல்லது கண்ணு.. அதுல இருந்து எண்ணெய்  காய்ச்சலாம், ஷாம்பு செய்யலாம், அதுலயும் டீ தயாரிக்கலாம். தலைமுடிக்கும் சருமத்துக்கும் மிகவும் நல்லது. நானே பக்குவம் காண்பிச்சு கொடுக்கிறேன் இது எல்லாம் செய்ய” என்று கூறி விளக்கம் கூறினார் மாணிக்கவல்லி.

பிறகு என்ன.. அடுத்து தயாரானது செம்பருத்தி ஹெர்பல் ப்ராடக்ஸ்.. இந்த பிரிவை தான் ப்ரேமிற்கு கொடுப்பது என்று நினைத்திருந்தான்.

“ஆனால்  அவனோ, கொஞ்ச நாள் உங்க கிட்ட வேலை பார்கிறேன் அத்தான். கொஞ்சம் அனுபவம் கிடைச்சதும் தனியா பார்கிறேன்” என்று கூறி விட்டான்.

இங்கே வேலைக்கு சேர்ந்த பிறகு தான் அவனுக்கு புரிந்தது எத்தனை  கடுமையான உழைப்பாளி ஹிருதய் என்று. கந்தசாமி தாத்தாவிற்கு அவன் ஸ்பெஷல் எதனால் என்றும் விளங்கியது.

பூம்பாவையும் ஸ்ரீகாந்தும் இப்பொழுது ஊருக்கு வந்துவிட்டார்கள்.

அருள்கந்தன் ஸ்ரீகாந்த் பூம்பாவையின் செல்லம். பயங்கர சுட்டி. 

சிவங்கரி முன் போல பூம்பாவையை மட்டம் தட்டி பேசுவது கிடையாது. அவரும் பாதி நாள் இவர்களுடன் ஊரிலும் பாதி நாள் மிருதுளாவுடன் சென்னையிலும் என்று இருந்து கொள்கிறார்.

அன்று ஊரில் இருந்து ப்ரதமேஷ் சுசீலா குடும்பத்துடன் வந்திருந்தார்கள். ஸ்ரீ  காந்தலட்சுமி தாயார் கோவிலில் திருவிழா என்று.

ஸ்ரீகாந்த் தான் கோவில் கமிட்டி தலைவராக இருக்கிறார். இந்த கோவிலை புதுப்பித்ததிலிருந்து இவர்கள் பங்காளிகள் குடும்பங்கள் அனைத்துக்குமே நல்ல முன்னேற்றம் தான்.

கோவில்  பூசாரி, வருடா வருடம் திருவிழா மாதிரி நடத்துவோம் என்று கேட்டு கொண்டத்தின் படி இந்த வருடம் தான் முதன் முதலாக ஆரம்பிக்கிறார்கள்.

அதற்காக தான் அனைவரும் பூம்பாவை வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

“என்ன ப்ரோ எங்க அத்தை.. தங்க அத்தை” படத்தை இப்ப எல்லாம் ஓட்றது  இல்லை போலவே என்று அவனை வம்புக்கு இழுத்தாள் முத்து.

“எல்லாம் கல்யாணம் முடியுற வரைக்கும்தான் முத்து.. அப்புறம் பொண்டாட்டி பின்னாடி தான் சுத்துவாங்க.. நான் எத்தனை பேரை பார்த்து இருக்கேன்” என்றார் சிவங்கரி.

“அப்படியா க்யூட்டிம்மா..” என்றாள் முத்து புதிய செய்தியை கேட்பது போலவே.

இவர்களை பார்த்து பேசிவிட்டு செல்வோம் என்று வந்திருந்தார் மாலதி.

“என்ன எம்.ஸ்கொயர், உங்க மாமியார் அதுவா வந்து இப்படி அப்பாவியா சிக்குதே..” என்றார் மாலதி தோழியிடம்.

“நீ வேற எம் ஸ்கொயர். ரெண்டு பேரும் கூட்டாளிங்க. வேற யாராவது வலையில விழுவாங்களான்னு பார்த்துகிட்டு இருப்பாங்க.. இப்ப நீ போய் வாலண்டீயர விழுந்து வைக்காத.. வா நாம உள்ளார போவோம்” என்று அவரையும் இழுத்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

‘எப்படி இருந்த என் பிரெண்ட இப்படி மாத்திவச்சிருக்கியே மகளே’ என்று முத்துவை பார்த்துவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

“என்ன ப்ரோ பேச்சை காணும்?” என்று மீண்டும் ப்ரதமை கேட்டாள்.

“அருள் உங்களை கூப்பிட்ட மாதிரி இருக்கே..” என்றான் அவன் அசையாமல்.

அலர்ட்டாகி விட்டாள் முத்தாயி.

“இல்ல இல்ல அவன் க்யூட்டிம்மாவை தான் தேடிகிட்டு இருந்தான். நீங்க இருந்து பார்த்திட்டு வாங்க க்யூட்டிம்மா, எனக்கு ஒரு கேஸ் விஷயமா நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு” என்று உள்ளே ஓடிவிட்டாள்.

“நாலு வயசு வாண்டுக்கு இருக்கிற மரியாதை எனக்கு இல்லையே” என்றான் ப்ரதமேஷ் சிரித்து  கொண்டே.

வெளியே புல்லட் சத்தம் கேட்டது.

புல்லட்டில் கந்தசாமியுடன் வந்து இறங்கினான் அருள்கந்தன். அவர்களுக்கு பின்னே கைநிறைய பைகளுடம் வந்தான் ஹிருதய்.

“மாமா, என்ன வேடிக்கை.. அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று அதட்டினான் அருள்கந்தன் ப்ரதமேஷை பார்த்து.

பாவையின் செல்லம் யார் என்பதில் ப்ரதமேஷிற்கும் அருளுக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்.

கோவில் திருவிழாவை மிகவும் சிறப்பாக முன்னின்று நடத்தினர் ஸ்ரீகாந்த்தும் பூம்பாவையும்.

சிவங்கரி இப்பொழுது மனதார காந்தலட்சுமி தாயாரிடம் தங்கள் குடும்பத்தை நல்லப்படியாக வைத்திருப்பதற்கு மனதார நன்றி கூறினார்.

“கோவில் விஷேசத்தில எந்த கலாட்டாவும் பண்ண கூடாது. யாரிடம் வம்பு சண்டைக்கு போக கூடாது” என்று கந்தசாமி முத்தாயி இருவரிடமும் பலமுறை எச்சரித்திருந்தார் நித்யகல்யாணி.

அதை எல்லாம் கேட்கும் ரகமா இவர்கள்.

திருவிழாவில் பெண்களை கலாட்டா  செய்த ஒருவனை இருவரும் அடி  வெளுத்திருந்தார்கள்.

யாரும் பார்க்கவில்லை என்று நினைத்திருக்க, அருள்கந்தன் அதை பார்த்து விட்டான்.

“அருளு இதை அம்மச்சிகிட்டயும் பாட்டிக்கிட்டயும்  சொல்லக்கூடாது” என்று இருவரும் அவனிடம் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டுக்கொண்டார்கள்.

“பார்க்கலாம்” என்று அமர்த்தலாக கூறி விட்டு சென்று ஸ்ரீகாந்துடன் நின்றுகொண்டான்.

அவனது செய்கையில் புன்னகை அரும்பியது தாத்தாவிற்கும் பேத்திக்கும்.

அவன் செய்யும் கலாட்டாவில் தங்களையே பார்த்து மகிழ்ந்து கொள்வார்கள்.

அன்று இரவு தான் சென்னைக்கு புறப்படுகிறார்கள் சென்னை குரூப். அதனால் முத்தாயி அவர்கள் வீட்டில் அனைவரையும் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்.

வீடு திரும்பியதும்,சிறிது நேரத்தில் ப்ரதமேஷின் மகன் ரிஷியை கீழே தள்ளிவிட்டுவிட்டான் அருள்.

பார்த்திருந்த முத்தாயி, “என்ன அருள் பண்ற? இப்படி அடிக்கலாமா? சாரி கேளு” என்று அவனை மிரட்டவும்,

“நீயும் கந்து தாத்தாவும் இப்படி தானே அந்த அண்ணாவை கோவில்ல தள்ளிவிட்டிங்க? நான் தள்ளி விட்டதுல ரத்தம்லாம் வரலையே.. நீங்க அந்த அண்ணா மூக்கை குத்துன அப்ப ரத்தம் டர்ர்ன்னு ஊத்துச்சே ம்மா.. அப்புறம் தாத்தா அந்த அண்ணா கையை பின்னாடி பிடிச்சு முறுக்கி காலாலே அவர் வயித்துல எக்கி குத்துனாரு இல்ல..” என்று சண்டையை ஒரு அங்குலம் கூட விடாமல் அனைவருக்கும் படம் போட்டு காட்டினான்.

“டேய் டேய்..” என்று இவர்கள் தடுத்ததை எல்லாம் அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

“அம்மாவும் தாத்தாவும் அடிச்சிருந்தா ஏதாவது காரணமா இருக்கும் அருள். அவங்க அடிச்சவங்க தப்பு பண்ணிருப்பாங்க” என்றான் ஹிருதய்.

“சட்டத்தை நாம கையில எடுத்திக்கலாமா அப்பா” என்றானே பார்க்கலாம். 

அனைவரும், “இப்ப காப்பாத்து அவங்களை” என்று ஹிருதய்யை பார்த்தனர்.

“கரெக்ட்..அப்ப சண்டை போடறது தப்புன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. அப்புறம் நீ எதுக்கு ரிஷி அண்ணாவை தள்ளி விட்ட? அதே மாதிரி அம்மா தாத்தா தப்பு பண்ணா, நீ  அதை பெரியவங்க கிட்ட தானே சொல்லணும்”

“கரெக்ட் ப்பா.. நான் பாட்டிக்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லி, எனக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுத்தாங்களே தாத்தா.. அப்புறம் அம்மாகூட எனக்கு நான் கேட்ட கிரிக்கெட் பேட் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காங்க.. அதான் நான் யார்கிட்டயும் சொல்லல ப்பா” என்றான் அழகாக.

“முத்து, பிள்ளையா பெத்து வச்சிருக்க.. சரியான குட்டிச்சாத்தான்” என்றார் கந்தசாமி முத்தாயியிடம்.

“எல்லாம் டீச்சருங்க ட்ரைனிங் அய்யா.. என்ன செய்ய?”

“அத சொல்லு.”

“சரி, அத அம்மாச்சி பாட்டி பேசிப்பாங்க. நீ ரிஷிக்கிட்ட சாரி சொல்லு” என்றான் ஹிருதய்.

“நோ மாமா.. அவன் என்னை அடிக்கல.. நாங்க ரெண்டு பேரும் ஃபைட் பண்ற மாதிரி ஆக்ட்டிங் தான் பண்ணோம்.. இது புது கேம்.” என்றான் ரிஷி விளக்கமாக.

“நல்ல கேம்.. போங்கடா அங்குட்டு” என்று சபையை கலைத்துவிட பார்த்தார்  கந்தசாமி.

ஆனால் யாரும் அசைவது போல தெரியவில்லை.

பின் டீச்சர்களின் பாசமான பார்வையில் இருந்து தப்பிக்க இருவரும் வேலை இருப்பதாக கூறி புல்லட்டில் பறந்துவிட்டனர்.

இன்னிக்கு எத்தனை பஞ்சாயத்தை இழுத்து வைக்க போறாங்களோ …………

சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!