Skip to content
Post Views: 17,199
இலக்கணம் பெண்மையே!…
அத்தியாயம் 15.2
இரு கைகளையும் தலையில் தாங்கி அமர்ந்திருந்தான் பிரகாஷ். சாலா விலகி சென்றதில் இருந்து இந்த மாதிரி தான் அமர்ந்து இருக்கிறான். இதற்கு முன் ஏதோ குழப்பத்திலும், குற்ற உணர்வில் இருந்தவனுக்கு, சாலாவின் பதில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி, திகைப்பு தான். சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்ததோ என்னவோ… அவள் அறிவுரை சொன்ன எல்லோரையும் எதிர்த்து நின்றது, குடும்பம் என்ற வட்டத்தை விட்டு வெளிவராத தன் மனைவி விசாலாட்சியா?…
“பிரகாஷ்…” என்ற குரலில் நிமிர்ந்து பார்க்க எதிர் நின்றது தீன தயாளன்.
Advertisement
விரக்தி சிரிப்பு பிரகாஷ் முகத்தில், “எல்லாம் முடிஞ்சு போச்சு… நீ, என் மனைவியை என்னோடு சேர்த்து வைப்பன்னு நினைச்சேன்…”
“நான் உன் நண்பனா இருந்து உன் கஷ்டத்துக்கு ஆறுதல் சொல்ல முடியுமே தவிர உன் தப்புக்கு துணை நிக்க முடியாது…” தெளிவாக சொன்னான் தீனா.
“நான் மன்னிப்பு கேட்டேன் தீனா, எனக்கு ஒரு வாய்ப்பு கேட்டேன்…”
Advertisement
“அந்த வாய்ப்பை உன் மனைவி தான் கொடுக்கணும். நானா உன்னோடு குடும்பம் நடத்த போறேன்…” நக்கலாக தீனா சொல்ல,
Advertisement
“டேய்… ஏன்டா?…” என்றான் இயலாமையை பிரகாஷ்.
“நிச்சயம் பிரகாஷ்… உன் மனைவி உனக்கு கொடுத்த வாய்ப்பை நீ பயன்படுத்தல… எனக்கு அப்படி தான் தோணுது…”
“என்னடா குழப்புற… சாலா என்னோட மன்னிப்பை ஏத்துகல…” வருத்தமாக பிரகாஷ் சொல்ல.
Advertisement
“என்னோட யோசனை நீ சொன்னது வச்சு என்னன்னா… உன் தப்பு தெரிஞ்சும் சாலா உனக்கு நேரம் கொடுத்து இருக்கலாம் இல்லையா…”
“புரியலடா, தெளிவா சொல்லு…”
“நீ யோசிச்சது தாண்ட… ஒரு வருசத்துக்கு முந்தியே சாலா நடவடிக்கையில உனக்கு மாற்றம் தெரிஞ்சது தான… அப்பவே உனக்கு ஒரு கெஸ் இருந்துச்சு தான. ஒருவேளை ஊரை கூட்டி அசிங்க படுத்தாம உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். நீ அந்த வாய்ப்பையும் உனக்கு சாதகமா பயன்படுத்தி ஆட்டம் போட்டு இருக்க…” என்று தீனா முடிக்க.
அப்படியும் இருக்குமோ என்று யோசனையானான் பிரகாஷ்.
“அப்புறம் என்ன பிரகாஷ். இனி உன் வாழ்க்கை உன் கையில்… ஒளிஞ்சு, மறைஞ்சு எல்லாம் சுத்த வேணாம். ஊர் பார்க்க சுத்துனாலும் யாரும் கேட்க மாட்டாங்க. நல்லா சம்பாரி அந்த காச சேர்த்து வச்சு வீக் எண்டல பார்ட்டி பண்ணு… வாழ்க்கையை என்ஜாய் பண்ணு…” என்று நக்கலாக தீனா சொல்ல.
அவனை முறைத்த பிரகாஷ், “டேய் நானே நொந்து போய் இருக்கேன்…”
“உன்னால ஒரு குடும்பமே சிதஞ்சு போச்சுடா…” என்றான் ஆதங்கமாக.
“தப்பு தான்டா. அது என்னையும் மீறி நடந்து போச்சு. ஷாலினிக்கும் எனக்கும் எல்லாம் ஒத்து போச்சு. பேசுற விசயங்கள்ல இருந்து சாப்பாடு, ரசனை, பாட்டு எல்லாம்… அவ கூட பழக ரொம்ப லேசா இருந்துச்சு. ரொம்ப ஃப்ரீயா பழகினேன். ஹேப்பியா ஃபீல் ஆனேன். எந்த கட்டுப்பாடும் இல்லை, அழுத்தமும் இல்லை. மைண்ட் ஃப்ரீயா இருந்தது… ஆனா, நான் கண்ட்ரோல தான் இருந்தேன். ஏதோ ஒரு இடம் எல்லாம் தப்ப போச்சு…”
“ஏதோ ஒரு இடத்துல உணர்ச்சி வசப்பட்டு தப்பு பண்ணிட்டேன்னு சொன்னாலும் ஏத்துக்க முடியாத தப்பு உன்னோடது… இதுல நீ ரெண்டு வருசமா திட்டம் போட்டு ஏமாத்தி இருக்க. நிஜமாவே நீ ஃபீல் பண்ணா, சாலா உன்னை வெளிய கொண்டு வாரத்துக்கு முன்னாடியே நீயே சரண்டர் ஆகி இருக்கணும். உன் தப்ப ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கணும். இல்லை மனைவி கிட்ட சொல்ல பயமா இருந்தா, ஷாலினியோட உன் உறவை முடிச்சு இருக்கணும். அதை விட்டு விசயம் சாலா மூலம் வெளி வந்த பின்னாடி ரொம்ப நல்லவன் மாதிரி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு எல்லோரையும் உன் பக்கம் திருப்புற…”
தலை குனிந்தவன், “சாலாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, என்னவோ என்னோடு அவளுக்கு செட் ஆகலை. என்னோட எதிர்பார்ப்பு மாறும் போது அவளால ஈடு கொடுக்க முடியலை. என்னோட தனிப்பட்ட விருப்பம், சாலாவோட இணைய முடியல. நான் எப்படி சொல்றது, ஒரு பத்து நிமிசம் ரெண்டு பேரும் பேசினா, பத்து வித்தியாசம் கண்டு பிடிக்கலாம். அவ்வளவு மாறி போச்சு…” என்று பிரகாஷ் சொல்லும் போதே,
“செருப்பால அடிப்பேன்டா நாயே…” பொறுக்க முடியாமல் கத்தி விட்டான் தீனா.
“டேய்…” அதிர்ந்து பார்த்தான் பிரகாஷ்.
“எங்க ஊருக்கு வந்து, சாலாவ பார்த்திட்டு நீ என்ன சொன்ன, “கட்டுனா இந்த பொண்ணு தான். என்னோட கூட்டு குடும்பத்தை அனுசரித்து செல்லும்ன்னு சொல்லி கட்டிக்கு போய்ட்டு, நாய்க்கு நாப்பது வயசுல நாய் குணம் வருது. உன் குடும்ப கஷ்டத்துக்கு சாலா ஏத்த பொண்ணு. அதுவே, உன்னோட பணக்கார வாழ்க்கைக்கு சாலா பட்டிக்காட்டு பொண்ணு…” கோபமாக தீனா சொல்ல
“அதில்லைடா, நான் வெளிய வேலைக்கு போறேன். எல்லோரையும் பாக்குறேன்…” என்று ஆரம்பிக்கும் போதே
“அதான்டா நானும் சொல்றேன். நீ வெளிய வேலைக்கு போற, வெளி உலகம் தெரியுது. சாலா குடும்பமே உலகம்ன்னு வாழ்ற பொண்ணு, வெளிய உலகம்லாம் அறியாது. நீ சொல்லி குடுத்தா தெரிய போகுது. நீ இல்லாம சொந்தமா தொழில் தொடங்கி நடத்துற பிள்ளைக்கு ஒன்னும் தெரியாத?… நீ சொல்றது வேடிக்கையா இருக்கு…”
“உன்னோடுட தப்புக்கு காரணம் சொல்லாத பிரகாஷ். நான் உனக்கு ஒரு விசயம் சொல்லவா… இரவு- பகல், இன்பம் – துன்பம், நல்லது – கெட்டது இது எல்லாம் என்ன?…”
“எதிர் சொல்…” புரியாமல் பிரகாஷ் சொல்ல
“சரி தான். ஒரு ஆணோட எதிர் சொல் என்னது?…” தீனா கேட்க.
“பெண்…” என்றான் பிரகாஷ்.
“பார்த்தியா ஒரு ஆணோட எதிர் சொல் தான் பெண். ரெண்டும் வேற வேற, எப்பவும் ஒத்து போகாது. ஒரு ஆணோட ரசனை, எதிர்பார்ப்பு, எண்ணம், செயல் எல்லாம் வேற… ஒரு பொண்ணோட எதிர்பார்ப்பு, ரசனை, செயல் எல்லாம் வேற. ரெண்டும் ஒத்து போகாது. ஆனா, அது ரெண்டும் தான் பொருத்தம். இது இயற்கை. எந்த ஆணுக்கும் பொண்ணு கூட ஒத்து போகாது. அப்படி இருந்தும் சேர்ந்து தான் இருக்கும். அது வெளிநாட்டுல லவ்வுன்னா, நம்ம ஊர்ல தாம்பத்தியம். அந்த ஒன்னு ரெண்டு பேரையும் கட்டி போடும்…”
“உன்னோட ரசனைக்கு ஒத்து போகணும்ன்னா நீ ஒரு ஆணை தான் கட்டி இருக்கணும். நீ, என் சரிபாதின்ற நினைப்பு இருக்கு பாரு, அது அனுசரிச்சு, விட்டு கொடுத்து, தட்டி கொடுத்து குடும்பத்தை கொண்டு போய் கரை சேர்த்துடும். நம்ம முன்னோர்கள் எல்லாம் அப்படி தான் வந்தாங்க. நாமும் அப்படி தான். நம்ம வாழ்க்கை முறை மாறாது. நம்மளையும் வெளிய விடாது…”
பிரகாஷ் மெளனமாக இருந்தான்.
“ஒரு அரசியல்வாதி தன் குடும்பத்தை கூட விட்டுட்டு பொது சேவை செய்ய அரசியலுக்கு வந்தாராம். அஞ்சு முறை நின்னும் தோத்து தான் போனார். ஒரு நாள் ஏன்னு தெரிஞ்சுக்க அந்த ஊர் ஆள கூப்பிட்டு கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?…”
“நீங்க உங்க குடும்பத்தையே சரியா கவனிக்கல. உங்களை மந்திரி ஆக்குன எங்க குடும்பத்தை எப்படி கவனிப்பிங்கன்னு கேட்டாராம்… அத்தோட அந்த அரசியல்வாதிக்கு பேச்சே வரலை…”
“பிரகாஷ் வாழ்க்கைன்றது நல்லது, கெட்டது கலந்து தான் இருக்கும். நமக்கு ஒரு கெட்டது நடக்கும் போது ஆறுதல் சொல்லி துணை நிக்கிற ஓர் நல்ல உறவு மனைவி மட்டும் தான். “எனக்கு பசிக்குது…” இந்த வார்த்தையை பெத்த தாயை தவிர வேற ஒருத்தர் கிட்ட சொல்லி இருப்போம். அது கட்டுன மனைவி கிட்ட மட்டும் தான். எனக்கு ஒத்து வரலன்னு சொல்லி அம்மாவ மாத்துறோமா, அப்பாவா மாத்துறோமா…. கிடையாது. அவங்க எப்படி இருந்தாலும் அவங்களை நீ அனுசரிச்சு தான் போவ… ஏண்டா டேய்!… பெத்தவங்களை, கூட பொறந்தவங்களை, பிரண்ட்ஸ்ஸ, உன் கூட வேலை பாக்குற ஆட்களை கூட அனுசரிச்சு போவ, உன்னை மட்டும் நம்பி வந்த உன் பொண்டாட்டிய அனுசரிக்க மாட்ட… நல்லவன் தான்டா நீ…”
பிரகாஷ் மெளனமாக எல்லாவற்றையும் உள் வாங்கி கொண்டு இருந்தான்.
“பிரகாஷ், நீ வேலை செய்யிற இடம், உன்னை சுத்தி இருக்குற ஆட்கள் எப்படி இருந்தா நமக்கு என்னடா… நாம நம்ம வாழ்க்கையில சரியா தான் இருக்கனும். காக்கா மேல பறக்க தான் செய்யும். அதை தடுக்க முடியாது. அது நம்ம தலையில உட்காரம தடுக்கலாம் தானே. நீயும் தடுத்து இருக்கணும்…”
“எனக்கு புரியுது தீனா. தப்பு பண்ணிட்டேன், ஆனா என்ன பண்ணனும் தெரியலை…” முகம் கசங்கினான் பிரகாஷ்.
“உனக்கு இன்னும் புரியலடா… குடிகாரனை கூட ஏத்துப்பாங்க நம்ம மக்கள். அவன் குடிப்பான் தான், ஆனா ரொம்ப நல்லவன்…” இப்படி சொல்லுறவங்க கூட, பொம்பளை சகவாசம் இருக்கு, ஆனாலும் நல்லவன்தான்னு யாரும் சொல்ல மாட்டாங்க…” கண் கலங்கியது பிரகாஷ்க்கு.
“நீ மிக பெரிய சந்தேக வட்டத்துகுள்ள வந்துட்டட பிரகாஷ். அடுத்து உன்னை எல்லாரும் சந்தேகமா தான் பார்ப்பாங்க. பொண்ணுக உன் கிட்ட கவனமா பேசுவாங்க, பொண்ணு இருக்குற வீட்டுக்குள்ள உன்னை விட மாட்டாங்க, உதவின்னு யாரும் உன்னை நெருங்க மாட்டாங்க… இனி தான் நீ சொசைட்டிய பார்க்கணும்…” என்று பெருமூச்சு விட்டவன்.
“என் கிட்ட முன்னவே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நான் பேசி உன்னை வெளிய கொண்டு வந்திருப்பேன். நல்ல படியா வாழ்க்கையில முன்னேற நேரத்துல கவுந்து போனையேடா…” என்று நண்பனின் தோலில் தட்டி கொடுத்தான். பிரகாஷ் கண்களில் நீர் நிறைந்து நின்றது.
“நம்ம மனசே நமக்கு வழி காட்டும். ஒரு விசயம் செய்யிறதுக்கு முன்னாடி தப்பு, சரின்னு உணர்த்திடும். அப்பவே நல்ல விதமா நாம திருந்திரனும். இல்லை, கொடுக்குற விலை அதிகம். ஒரு பொண்ணு புருசன் கூட வாழ்ந்ததா தான் அவளுக்கு மதிப்புன்னு சொல்லுவாங்க… ஆனா, சொல்லாத ஒன்னு ஒவ்வொரு மனுசனும் தன் கடைசி காலத்துல உணருறது. ஒரு புருசனுக்கும் பொண்டாட்டி கூட இருந்தா தான் மதிப்பு…” என்று தீனா சொல்லி முடிக்க, பிரகாஷ் அவனை தாவி அனைத்து கொண்டான். அவன் கண்கள் நீரை பொழிந்தது.
ஷாலினி ஒரு மூலையில் குறுகி உட்கார்ந்து இருந்தாள். அவள் நிலை பித்து பிடித்தவள் போல் இருந்தது. கங்கா தான் ஓயாமல் அழுது கொண்டு இருந்தார். அவள் தந்தை பார்க்கவே பாவமா அமர்ந்திருந்தார். எந்த சொந்ததிடமும் முகம் கொடுத்து பேச முடியவில்லை.
கங்கா, தன் பெரிய மகளை அழைத்து, “தாரணி கொஞ்ச நாள் ஷாலினி உன் வீட்டுல இருக்கட்டும். முடியாதுனு சொல்லாத, அவளை இப்போ ஊருக்கு கூட்டி போக முடியாது. யாருக்கும் பதில் சொல்லவும் முடியாது. கொஞ்ச நாள் தான், அப்புறம் வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம்…”
“ஓ… அனுப்பி வையேன். அப்புறம் நானும் சாலா அக்கா மாதிரி என் வாழ்க்கை போச்சுன்னு வந்து பஞ்சாயத்து வைக்க வேண்டிய தான்…” கோபமாக தாரணி சொல்ல.
“தாரணி…” என்று கங்கா அதிர்ந்து நிக்க.
“உம் மகளுக்கு யாராவது நல்லா வாழ்ந்த, அந்த வாழ்க்கை இவளுக்கு வேணும். அவ புத்தி அப்படி… நாளைக்கு என் வீட்டுக்குள்ள வந்து என் வாழ்க்கையை கெடுக்கட்டுமா…”
“ஏண்டி இப்படி பேசுற. மாப்பிளை வயசு என்ன இவ வயது என்ன…”
“அப்போ பிரகாஷ் மாமா வயசு மட்டும் என்னம்மா… இவளுக்கு அவர் மேல ஆசை வரல. என்னால உன் மகளை நம்ப முடியாது. என்னை ஆளை விடு…” என்று தாரணி ஒதுங்கி கொள்ள. அக்காவையே அடிபட்ட பார்வை பார்த்தாள் ஷாலினி.
பாண்டியம்மாள் ஒரு பக்கம் கத்தி அழுது கொண்டு இருந்தார். இவ்வளவு பேசி சரிகட்டி வைக்க மகள் கலைத்து விட்டாளே… அவர் ஒரு பக்கம் கத்த, முத்தையா ஒரு பக்கம் பேச, சாலா முகத்தில் சலனமில்லை.
குமரன், சித்ரா இருவரும் பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்று இருந்தார்கள். தேவி கோழி குழம்பு வைத்து நடுவீட்டில் எடுத்து வைத்தாள்.
பாண்டியம்மாள் அதிர்ந்து பார்க்க, தேவி கண்டு கொள்ளவே இல்லை.
“ ஏண்டி, துக்க வீடு மாதிரி நாங்க நொந்து கிடக்கோம். உனக்கு என்ன பகுமானமா…”
“ நெசமாவே பகுமாணம் தான். அம்புட்டு சந்தோசமா இருக்கேன்…”
“எதுக்கு…”
“உன் மகள்க ரெண்டு பேர் வாழ்க்கையும் முடிஞ்சு போனதுக்கு…” அலட்டாமல் சொல்ல.
“என்ன…” நெஞ்சில் கை வைத்தார் பாண்டியம்மாள்.
“ஆமா, அத்தை. என் மகள்க ரெண்டு பேரும் தலை நாள்ல ஆம்பிளை பிள்ளை பெத்து நல்லா இருக்காங்க. நீ மலட்டு சிரிக்கின்னு சொல்லி என்னை ஒதுக்கிவச்சையே. இன்னைக்கு அவ்வளவு பெருமை பட்ட உன் மக வாழ்க்கை என்ன ஆச்சு. முத்து மாதிரி பிள்ளை பெத்தும் மூலையில முடங்கியாச்சு…” என்றவள்.
“பிள்ளை பெறாத மலட்டு வயிறு இன்னைக்கு தான் குளிர்ந்து இருக்கு… நான் தான் மடப்புரம் பத்திரகாளி கிட்ட நியாயம் கேட்டேன்…”
error: Content is protected !!