Skip to content
Post Views: 1,494
மைவிழி – 2(a)
சொன்னது போலவே சந்திரா வீட்டிற்கு செல்லத் தயாரானார் சரஸ்வதி. தடுத்த கணவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.
Advertisement
“போய் பேசிப் பார்போம்ங்க!அங்க தான் அவளுக்கான வாழ்க்கைன்னு எழுதிருந்தா.. அதுக்கான முயற்சிய நாம தானே எடுத்து வைக்கனும்!” என்றவரிடம் என்ன பேசுவதென தெரியவில்லை சத்யநாதனுக்கு.
வக்கீலையே வாயடைக்கும் வைக்கும் திறமை அவர் மனைவியிடம் மாத்திரமே இருந்தது.
Advertisement
Advertisement
தாயாய் சரஸ்வதியின் பயம் அவருக்கு புரியாமலில்லை. இருப்பினும் மகளுக்கு இங்கு அமையாது என அவர் மனம் சொல்லிக் கொண்டே இருக்க,
“சரி உன் திருப்திக்காக போலாம். ஆனா அங்க போய் சரி வரலன்னா மேற்கொண்டு நீ இந்த பேச்சை வீட்ல எடுக்கக் கூடாது. இதோட விட்டுடனும், சொல்லிட்டேன்”என்றார் சத்யநாதன் ஸ்ட்ரிக்ட்டாக.
Advertisement
“ஏங்க..”என இழுத்தவரிடம்,
“நான் சொல்றதை சொல்லிட்டேன். உனக்கு சரின்னா நான் சந்திரா வீட்டுக்கு வரேன், இல்லைன்னா….”
“ம்ம் ம்ம்ம், நீங்க சொல்றதை ஒத்துக்கறேன்”இறுதியில் விருப்பமில்லாது தலையசைத்து வைத்தார் சரஸ்வதி.
பங்கஜம் பேசிவிட்டு சென்றது மனதில் பதிந்திருக்க மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என உறுதியோடே இருந்தார் அவர். மனம் ஒரு பக்கம் ஏனோ உருத்தலாய் வேறு இருந்தது சரஸ்வதிக்கு.
படிப்பு படிப்பென ஓடிக் கொண்டிருக்கும் மகளுக்கு இது தான் திருமண நேரம் என கடவுள் சந்திரா மூலம் சொல்கிறாரோ எனவெல்லாம் நினைத்துக் கொண்டார்.
எனவே அவர் வீட்டிற்கு செல்வதாக முடிவே செய்து விட்டவர், அடுத்த தெருவில் இருந்த தனது அக்கா சங்கரியிடமும் இவ்விடயத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்தச் செய்தி வீட்டிலிருந்த வேதவியை தவிர மீதி அனைவருக்கும் சொல்லப்பட்டது. திருமணப் பேச்சு தப்பித் தவறி கூட அவளின் காதிற்கு சென்றால் பின் காளி அவதாரம் தான்.
தெரிய வந்தாலோ,
“நான் படிக்கணும்!எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாமெ’ன சொல்லப் போவது உறுதி. வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கப்படும் போதெல்லாம் அதிக பட்ச பெண்கள் சொல்லும் ஸ்டாண்டர்ட் டயலாக்!
எனவே வேதவிக்கு தெரிய வராது ரகசியமாய் வைத்திருந்தவர், மூத்த மகன் கனியனை போனில் அழைத்துச் சொல்ல, அவனுமே நாதன் போல் வேண்டாமெனத் தான் முதலில் மறுத்திருந்தான்.
“அந்த மலையரக்கிக்கு என்ன வயசாச்சுன்னு இப்போ கல்யாணத்துக்கு அவசரப்படரம்மீ. நான் வேதவியை அடிக்கடி அக்கான்னு கூப்பிடரதனால அவ எனக்கு மூத்தவன்னு நினைச்சிட்டிருக்க போல நீ!”என வம்பிழுக்க,
“இதையே தான் நானும் சொல்றேன்டா கனியா!”என இடையிட்டிருந்தாள் சங்கவி.
போனை லவுட் ஸ்பீக்கரில் போட்ட படி மகனுடன் பேசிக் கொண்டிருந்தார் சரஸ்வதி. அந்த வேளை மூக்கை நுழைத்த இளைய மகளின் செய்கையில் கோபமாகியவர்,
“சங்கவி, மூத்தவங்க பேச்சுல சின்னப் பொண்ணு உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு”என அதட்ட,
“ஆமா, காலைல புலம்பும் போது மட்டும் சின்னப் பொண்ணு பெரிய பொண்ணாகிட்டாளோ ”என சரஸ்வதிக்கு கேட்பது போல் முணுமுணுத்தவள்,
“கனியா, நீ அரக்கின்னு கூப்பிடரது மட்டும் அவ காதுல விழுந்துச்சு வேதவி பூதவியா மாறிடுவாடா”என அண்ணன் காதில் போட்டு வைத்து விட்டு சிட்டாகப் பறந்திருந்தாள்.
போனின் அந்தப் பக்கம் சிரித்து வைத்தான் தமிழ் கனியன்.
“நீ எதுக்குடா சிரிக்கற? நீ வேதவியை அப்படி கூப்ட்டா அவளுக்கு புடிக்குமா என்ன? இனிமே அவளை அப்படியெல்லாம் கூப்பிடாதடா. பட்டப்பேர் வெச்சி கூப்பிட்டுக்க நீங்க என்ன இன்னும் சின்னக் குழந்தையா?”சரஸ்வதி மகனுக்கு அறிவுரை வழங்கத் தொடங்க,
“எப்டிம்மா கூப்பிடக் கூடாது..?” சிரிப்பை அடக்கிக் கொண்டு இவன் கேட்டு வைக்க,
“அதாண்டா மலையரக்கின்னு”என அப்பாவியாய் கூறியவரும் சிரித்து விட்டார்.
“ஹா ஹா!” – கனியன்.
வேதா அதிக பிடிவாத குணமும், கொஞ்சமாய் (?)கோபமும் குணமும் கொண்டவள். இவளும்,கனியனும் சிறு வயதாய் இருக்கும் போது சண்டை என வந்துவிட்டால் அண்ணனான கனியனையே அடித்து அழுக வைத்து விடுவாள் வேதவி. கிடைக்கும் கேப்பிலெல்லாம் கடித்தும் வைத்து விடுவாள்.அவள் கோபத்தைக் கொண்டே தங்கைக்கு(வேதவி) ஜாக்கி சான் கார்ட்டூனில் வரும் மலையரக்கியின் பெயரை வைத்திருந்தான் தமிழ்க் கனியன். போதாதற்கு தங்கையான வேதவியை அக்காவென அழைத்து கடுப்பேத்துவதுமுண்டு.
“கனியா!!”
“சரிம்மா நீ ஆரம்பிக்காத!இனி மலையர.. ச்சீ,வேதவி அக்காவை மரியாதையா பேசிப் பழகுறேன்.” என்றவன்,
“வேதவிக்கு இந்த விஷயம் தெரியுமாம்மா? ப்ச், இப்ப எதுக்கு ம்மா அவளுக்கு கல்யாணம்” என்றான் விருப்பமில்லாது.அவனது பார்வையில் வேதவி இன்னும் சிறிய பெண்ணே.
“டேய் கனியா, உங்கப்பா தான் அப்படி இருக்கார்னா நீ அவருக்கு மேல இருக்கடா!” என்றார் சரஸ்வதி. மகனாவது தன் பக்கம் நிற்க கூடாதா எனும் ஆதங்கம் அவர் குரலில்.
“சரிம்மா, நீ சொன்ன அந்தக் கர்ணன் வீட்ல போய் பாரு. அவங்க பேச்சுல எதுவும் சரியா இருக்கலன்னா, கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாணப் பேச்சை விட்டுடுங்க. அவ பிஹெச்டி முடிக்கட்டும்”
“உங்கப்பாவே உனக்கு பரவால்ல”
“அது என்னவோ வாஸ்த்தவம் தான். எங்கையாம் அவர்?”தந்தை பற்றி விசாரிக்கிறானாம்.
“இப்படி கேக்கறதுக்கு நீ கேக்காமலே இருக்கலாம்!அவர் அப்பாடா கனியா”என்றார் கண்டிப்பாய்.
“ம்ம் ம்ம்ம்!நான் போனை வைக்கிறேன். எனக்கு வேலைருக்கு” என நழுவினான் கனியன், பேச்சு வளர்க்க விரும்பாமல்.
மகனது இவ்வலட்சியத்தில் வருந்தினார் சரஸ்வதி.
“உங்கப்பாவோட பேச்சை எடுத்தா மட்டும் அப்படியே வேலை வந்துடுமே உனக்கு!அந்த மனுஷன் அப்டி என்ன செஞ்சிட்டார்னு அவர் கூட பேசாம இருக்க கனியா? உங்களெல்லாம் பெத்து, வளர்த்து நீங்க கேட்ட படிப்பைக் கொடுத்து ஆளாக்கி விட்டதுக்கு அந்த மனுஷன் நாலு மாடு வாங்கி வீட்ல கட்டிப் போட்டிருக்கலாம்”என்றார் ஆதங்கமாய்.
“ப்ச், ம்மா!எதைப் பேச கூப்பிட்டு இப்ப எதைப் பேசற நீ.”என்றலுத்துக் கொண்டவன்,
“இதுக்கப்பறமும் இதைப் பத்தி பேசுவேன்னா..நான் அப்பறம் போன் பண்ண மாட்டேன் பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாய்.
அதென்னவோ ஆண் பிள்ளைகள் ஒரு வயதுக்கு மேல் வளர்ந்து விட்டார்கள் எனின் அப்பா என்பவர் பல சமயங்களில் ‘ஆப்பாக’ தெரிவதால் ஆகாதவர் ஆகிடுவார் போல. கனியனுக்கும் – சத்யநாதனுக்கும் இருப்பது வாய்க்கா வரப்பு தகராறு என்றாலும் பரவாயில்லை. எதற்கு முட்டிக் கொண்டார்கள் என அவர்களுக்கே தெரியாதது தான் இங்கு வேடிக்கையே!
பல வீடுகளில் இருப்பது போல் தான் தந்தை எது சொன்னாலும் அது தப்பாகவே தெரிய, குறிப்பிட்ட வயதுக்கு மேல் கனியன் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டான். இப்போது இவனுக்கு ஒட்ட நினைத்தாலும் பாழாய்ப் போன எக்கோ(ஈகோ)எனும் கழுதை தான் விட்ட பாடில்லை. ஆனால் என்ன இவர்கள் இருவருக்கும் இடையில் பாவமாய் உருளுவது சரஸ்வதியின் தலையே. இருவரையும் எப்படியாவது பேச வைத்து விடும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருந்தார் இவர்.
மகனிடம் மல்லுக் கட்ட முடியாத பட்சத்தில் கணவனை இறங்கிப் போகச் சொன்னாலும்,அவர் பார்க்கும் ஒற்றைப் பார்வையில் சரஸ்வதி கப் சிப்!
வக்கீலாய் இருந்தும் அதிகமாய் பேச மாட்டார் சத்யன். எதற்கும் ஒரு பார்வை. மீறி பேசினாலும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டன்பது போல் தான் இருக்கும் பேச்சும்.
“ஒரே வீட்லருந்துக் கிட்டு ரெண்டு பேரும் இப்படி மூஞ்ச திருப்பிட்டு இருந்தா நல்லாவா இருக்குங்க? கனியன் தான் பேச மாட்டான்னாலும் நீங்களாவது பேசறது தானே.?”என சரஸ்வதி எந்தப் பக்கம் பந்து போட்டாலும்,
“உன் பையன் கிட்டயெல்லாம் எனக்கு இறங்கிப் போக முடியாது! வேற ஏதாவது பேசறியா சரஸு?”என கடுப்பாய் சொல்லிச் செல்வார் நாதன்.
இவர்கள் சண்டை(?)யைப் பார்த்து சலித்துப் போன சரஸ்வதியும் ‘அடப் போங்கடா.!’எனும் மன நிலைக்கு வந்துவிட்டார்.
இப்போதும் அதை நினைத்த படியே மகனின் மிரட்டலுக்கு பதில் கொடுக்காது அமைதியாய் இருக்க, தாயின் மனநிலையை புரிந்து கொண்ட கனியன்,அவரை சமாதானப் படுத்த முயன்றான்.
“சரி மா, சாரி! மன்னிச்சிக்கோ உன் மூத்த புள்ளைய”
“ஒன்னும் வேணாம் போடா! என்னவோ செய்ங்க அப்பனும் மகனும்.. எனக்கென்ன வந்தது”கமறிய குரலில் கடுப்பாய் கூறியவர் மூக்கு சிந்துவது தெரிய,அங்கோ மகனுக்கு உருகி விட்டது.
“ப்ச் ம்மா!இப்ப எதுக்கு அழற..!நான்லாம் ஒரு ஆளுன்னு என் மிரட்டலுக்கு அழுவியா? அப்செட் பண்றம்மீ என்னை?”
“ஆமா,அழுகறாங்க! அடிக்கற வெயிலுக்கு கண்ணு வேர்க்குது, தொண்டை வேற கரகரங்குது, போவியா?”என்ற சமாளித்தலுடன் கண்களை துடைத்துக் கொண்டு தொண்டையைச் செருமிக் கொண்டார் சரஸ்வதி.
தாய் கொடுக்கும் பர்ஃபாமன்சில் வரப் பார்த்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன்,
“ம்ம்மா! மறுபடியும் ஒரு முறை சொல்றேன். வேதாக்கு இந்த சம்பந்தம் சரி வரலைன்னா இத்தோட இந்தக் கல்யாணப்ச் பேச்சை நிறுத்திடற” என்று விட்டே அழைப்பைத் துண்டித்திருக்க, மனது நெருடியது சரஸ்வதிக்கு.
மகள் திருமணத்தில் தான் மட்டுமே அவசரப்படுகிறமோ என நினைத்துக் கொண்டவர், மனது கேளாமல் தன் சகோதரியிடமும் புலம்பத் தொடங்க, சங்கரி தான் ஒரு வழியாய் ஆறுதல் படுத்தியிருந்தார்.
இப்படியாய் சரஸ்வதியின் புலம்பலுடன் நாதனின் சிடுசிடுப்பும் சேர்ந்து கொள்ள அன்று மாலையே சந்திராவின் சொந்த ஊருக்கு பயணப்பட்டனர்.
எதுவோ அவசரமென ஊருக்குச் சென்றிருந்தார் சந்திரா. சந்திராவின் கணவருக்கு அவர்கள் சொந்த ஊரிலேயே தொழில் என்பதால் சந்திராவும்,அவரின் இளைய மகனும் தான் ஈரோட்டில் குடியிருந்தனர். இளைய மகனின் படிப்புக்காகவே குடி பெயர்ந்திருக்க சந்திராவின் கணவர் அவ்வப்போது ஈரோடு வந்து செல்வார். பெரிதாக வசதி இல்லையென்றாலும் நல்ல மனிதர்கள் என விசாரித்ததில் தெரிந்து கொண்டார் சத்யநாதன்.
அதுவே இவரை, சரஸ்வதியின் முடிவிற்கு சம்மதிக்க வைத்தது எனலாம்!
ஆனால் நாதன் இதுநாள் வரையிலும், மூர்த்தியை (சந்திராவின் கணவர்) சந்தித்திருக்கல்லை. இருப்பினும் திருமண விடயம் பேசுவதால் முறையாக இருக்க வேண்டுமென்று இரண்டு நாட்களுக்கு முன்பு அவரிடம் பேசியிருந்தார். இருவருக்குமிடையே நன்றாகவே பேச்சு வார்த்தை முடிந்திருக்க மனைவியிமும் பகிர்ந்து கொண்டிருந்தவரை இன்றே திருமணம் பற்றி பேச போகலாம் என நச்சரித்திருந்தார் சரஸ்வதி.
செல்லும் வழி முழுவதும் கடவுளிடம் வேண்டுதல் வைத்தபடியே வந்த மனைவியைப் பார்த்து சலித்துக் கொண்டார் சத்யன்.
“சந்திரா ஈரோட்டுக்கு வந்த அப்பறம் போயிருக்கலாமே சரஸு! எதுக்கு தான் நீ இப்படி அவசரப்பட்டறியோ?” என அலுத்துக் கொண்டவரிடம்,
“இன்னைக்கு நாள் நல்லாருக்குங்க! அவங்க வேற எங்கூர்ல வெச்சு பேசலாமான்னு கேட்டாங்க. என்னால மறுக்க முடியல!”என்றார்.
மறுப்பாக தலையசைத்தவரின் முகம் யோசனையைத் தத்தெடுத்துக் கொண்டது. இன்று காலையில் மூர்த்தியை அழைத்து அங்கு வருவதாக நாதன் கூறிய போது அவர் குரலிலிருந்த தடுமாற்றமும், எதையோ மறைக்கும் பேச்சும் சட்டதரணியான சத்யநாதனுக்கு சந்தேகத்தை விதைக்காமல் இருப்பின் தான் வியப்பு!
error: Content is protected !!