Skip to content
Post Views: 4,816
அத்தியாயம் – 10
வந்ததிலிருந்து அலைபேசியில் முகத்தை மறைத்திருக்கும் மகனை எதுவும் சொல்ல முடியாது சமையலறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் பார்வதி. காலையில் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வரும்போதே முகத்தில் சோர்வு அப்பட்டமாய் தெரியவும் காபி போட்டு வந்து கொடுத்தார் பார்வதி. அதை வாங்கிக் குடித்துவிட்டு அலைபேசியுடன் அமர்ந்தவன் தான் அதன் பின் நிமிரக்கூட இல்லை. அருகே சென்று கேட்கலாம் என்று நினைத்தால் கத்திவிடுவானோ என்று பயமாய் இருந்தது.
பையன் அம்மாவுக்கு பயப்படும் நிலை மாறி அம்மா மகனுக்கு பயந்திருப்பதுதான் காலத்தின் வளர்ச்சியா இல்லை அவர் வளர்ப்பு அப்படியா என்று எப்போதாவது அவர் யோசிப்பது உண்டு. இப்போதும் அவனை நெருங்க பயந்து கைபிசைந்து நின்றார்.
அம்மாவின் தவிப்பு, கலக்கம், அச்சம் எதுவும் தெரியாது போனை பார்த்துக்கொண்டிருந்தவன் அதிராவிற்கு குறுஞ்செய்தி டைப் செய்வதுமாய் பின் அதை அழிப்பதுமாய் யோசனையில் இருந்தான். அவனுக்கு அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏகத்திற்கு இருந்தது. ஒரு கையை வைத்துக்கொண்டு என்ன ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பாள் என்ற சிந்தனை இருந்தாலும் ஏனோ மனம் இப்படி அவள் நலம் வேண்டி இறங்கிப்போவது அவன் ஈகோவை அசைத்துப்பார்த்தது. அவள் மதிக்காத போது வலிய சென்று நலம் வேண்டுவதா என்று குறுஞ்செய்தி அனுப்ப யோசித்துக் கொண்டிருந்தான்.
Advertisement
அனுப்பித்தான் பார்ப்போமே மிஞ்சிப் போனா திட்டுவா, வாங்கிக் கொள்ளவேண்டியதுதான் நமக்கென்ன இது புதிதா என்று மனம் ஒருவாறு முடிவெடுத்து ஊக்குவிக்க, அப்படி அவள் நலம் வேண்டி தெரிந்துகொண்டு தான் ஆகவேண்டுமா. அவள் உன் உயர்அதிகாரி மட்டும்தான் என்றது சிந்தை.
இரண்டின் பேச்சையும் கேட்டு குழப்பம் அடைந்தவன் வாட்சப்பில் அவளுக்குரிய சேட் பாக்ஸை வெறுமென திறந்து வைத்திருந்தான். இன்றுவரை அவளுக்கு குறுஞ்செய்தியோ அழைப்போ செய்தது இல்லை. முதல் முறையாய் வாட்சப் பக்கத்தின் புகைப்படம் என்ன என்றும் ஆர்வமாய் தேடிப் பார்க்க, அதில் அவளது ஆளறி அட்டை தான் டீபியாய் இருந்தது.
‘க்கும் வேற வச்சிட்டாலும். கடமை உணர்ச்சி வத்திப் போயிடும்ல.’ சடைத்துக்கொண்டவன் போனை அந்த சோபாவில் தூக்கிப்போட்டு நிமிர்ந்தான்.
Advertisement
அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக நெருங்கிய பார்வதி, “சாப்புட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுயா… மதியம் போல வேணி வீட்டுக்கு ஒரு எட்டு போய் பார்த்து கூப்புட்டு வந்துறலாம்.”
Advertisement
“என்ன சாப்பாடு?” கைகளை மேலே தூக்கி நிமிர்ந்து, சோம்பல் முறித்தபடி பார்க்க,
“பூரி.” என்றார் பார்வதி. அவனுக்கு பிடிக்குமே என்றுதான் செய்தார். அதை உணர்ந்து ஆவலாய் ஒரு பார்வையோ, முகத்தில் சிறிய குதூகலிப்பாவது வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார் பார்வதி.
சிறு வயதிலிருந்து வேலையில் சேரும் வரையில் அவனுக்கு பிடித்தது செய்துகொடுத்தால் அப்படியே மலர்ந்துவிடும் அவன் முகம். அதைக் கண்டு திருப்திப்பட்டுக்கொள்ளவதற்காகவே மகனை பார்த்துப் பார்த்து கவனிப்பார். இப்போதெல்லாம் அந்த சிரித்த முகம் மறந்தும் அவனை நிறைக்கவில்லை. எந்நேரமும் ஏதாவது யோசனையிலும் கடுகடுப்பிலுமே இருந்துவிடுகிறான். பெற்ற தாய்க்கு வலித்தது. எதுவும் செய்ய முடியவில்லை. மகனை மாற்ற முடியவில்லை. அவன் போக்கில் செல்லட்டும் என்று விட்டுவிட்டார்.
Advertisement
அகிலன் குளித்து வந்து வாய்க்கு வக்கனையாக இருந்த பூரிகளை நன்கு உள்ளே தள்ளவிட்டு, “வெளில போய்ட்டு வந்துறேன்.” என்று கிளம்பிவிட்டான்.
தாய் எப்படி இருக்கிறார், தங்கையை அழைத்து வரவேண்டும் என்றாரே அது எதற்கு, நாளை இருக்கும் விஷேஷத்திற்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமா ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை அகிலன். அவன் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிட்டான். அவனின் அலட்சியத்தில் கலங்கும் போல் இருந்த கண்களை கசக்கி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டு சிற்றுண்டியை உள்ளே தள்ளினார் அவனைப் பெற்ற பாக்கியவதி. நல்லவேளை மகனின் வரவை எதிர்பார்க்காது அவன் அனுப்பி வைத்திருந்த பணம் கொண்டு வேணிக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டார். இல்லையென்றால் சிரமம்தான்.
வெளியே சென்றிருந்தவன் மதியம் போல் வீட்டுக்கு வந்தான், “வேணி வீட்டுக்கு எப்போ போகணும்?”
இப்போதாவது கேட்டாயே என்ற ஆசுவாசத்துடன் ராகுகாலம் முன் வேணி வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வரவேண்டும் என்றார். சரியென்றவன் மதியம் உண்டு சற்று நேரம் படுத்துவிட்டு ஒன்றரை மணி போல இருவரும் கிளம்பினர்.
அண்ணனைக் கண்டதும் வேணியின் முகம் மலர்ந்து போனது.
“ரொம்ப நாளா ஆளையே காணுமே மச்சான். வேலை அதிகமோ?” என்று இயல்பாய் அகிலனிடம் பேச்சுக் கொடுத்தான் வேணியின் கணவன்.
அவனிடம் முகத்தை காட்டாது கேட்டதற்கு பதில் கூறினான் அகிலன். அதுவே பார்வதிக்கு போதுமானதாக இருந்தது. அவர்களிடமாவது முகம் கொடுத்து பேசுகிறான் என்ற நிம்மதி அவருக்கு. அந்த நிம்மதியுடன் சம்மந்தி கொடுத்த காபியை குடிக்க, வேணி அம்மாவை பார்ப்பதுமாக அகிலனை பார்ப்பதுமாக இருந்தாள்.
“என்ன வேணி?” மகள் பார்வை உணர்ந்து தாயின் முகத்தில் கேள்வி.
ஒன்றுமில்லை என்று அவசரமாய் தலையாட்டியவள் தன் மாமியார் முகம் பார்த்து குனிந்து கொண்டாள். எப்போது கிளம்பலாம் என்று பொறுமையை இழுத்துப் பிடித்து வேணி கணவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தான் அகிலன். மகனின் எண்ணம் புரிந்தே ராகுகாலத்தை காரணம் காட்டி சீக்கிரம் கிளம்புகிறோம் என்று எழுந்துகொண்டார் பார்வதி. வேணியும் அப்பாடா என்று எழுந்துகொள்ள, வேணியின் மாமியார் தன் மகனிடம் கண் காட்டினார்.
புரிந்துகொண்டவன், “அப்புறம் மச்சான் எவ்வளவு நாள்தான் நீங்களும் தனியா சென்னையில இருப்பீங்க. கல்யாணம் பண்ணி குடும்பமா செட்டில் ஆகிடுங்க. என்ன அத்தை மச்சானுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடலாமே?” என்று ஆரம்பிக்க, உடனே மகன் முகத்தைத்தான் பார்த்தார் பார்வதி.
அவன் எந்த உணர்ச்சியும் காட்டாது கல்லென நிற்க, சங்கடமாய் சிரித்த பார்வதி, “வேணி பிரசவம் முடியட்டும் மாப்பிள்ளை. அவனுக்கு இன்னும் வயசு இருக்கு.”
“அட, வேணியோட அஞ்சு வயசு பெரியவர். என் வயசுதான் அவருக்கும். சீக்கிரம் பண்ணிடலாமே அத்தை. என்னோட சித்தப்பா பொண்ணுக்கு இப்போதான் பாக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஒத்துவந்தா நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகிடுவோம்.” நயமாய் பேசினான் வேணியின் கணவன்.
“இப்போவே நாம ஒன்னுக்குள்ள ஒன்னுதானே மாப்பிள்ளை.” என்றான் அகிலனும் நயமாய்.
“இருந்தாலும் நீங்க இருக்கும் போது நாங்க வெளில பாத்தா நல்லா இருக்குமா சொல்லுங்க. ஒன்னும் அவசரம் இல்லை யோசிங்க மச்சான். அத்தை சொன்ன மாதிரி வேணி பிரசவம் முடிஞ்சதுமே முடிச்சிக்கலாம்.” என்றான் வேணியின் கணவனும் அசராது.
அழுத்தம் கொடுக்கிறானா என்று அகிலன் அளவிடும் பார்வை பார்த்து எழுந்துகொள்ள, பார்வதி தாமதிக்காது மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
“நைட்டே வந்துடுங்க மாப்பிள்ளை.” பெயருக்கு வேணியின் கணவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் அகிலனும்.
திருச்சி அருகிலிருக்கும் துறையூரில்தான் வேணியை கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ஒரு மணி நேர பயணம். கார் எடுத்திருந்தான் அகிலன். திருமணம் பற்றி பேசவுமே அண்ணன் முகத்தில் வந்துபோன விருப்பமின்மையை கண்டுகொண்டமையால் வேணி வாய் திறக்கவில்லை. பயண நேரம் முழுதும் அவனுக்கு பயந்து அமைதியாகவே கழிந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய், “என்ன வேணி இதெல்லாம்?” என்றுதான் கேட்டான் அகிலன்.
“ண்ணா,”
“விட்டா நாளைக்கே அவர் தங்கச்சிக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு போல உன் புருஷன்?”
“உனக்கே தெரியும்ல அவங்க கஷ்டப்படுற குடும்பம். ரொம்ப எல்லாம் சீர் வரிசை செய்ய முடியாது, நீயும் கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்க. அதான் எங்க வீட்ல விருப்பப்படுறாங்க.” என்றாள் வேணி தயங்கித் தயங்கி.
“அவங்க விருப்பப்படுறாங்கனு எல்லாம் ஒத்துக்க முடியாது. இந்த பேச்சு இதுக்கு மேல வரக்கூடாது. சொல்லிடு உன் வீட்ல.” என்று கண்டிப்புடன் சொல்ல, கலக்கமாய் பார்த்தாள் வேணி.
“என்ன?” அவளின் கலக்கம் உணர்ந்து அவன் கேட்ட விதம் கூட கடுகடுப்பாய் வர, வேணியின் கலக்கம் கூடிப்போனது.
“நீ ஒத்துக்க மாட்டேன்னு ஏற்கனவே சொன்னேன். அவங்க கேக்க மாட்டேங்குறாங்க.”
“உன் புருசன், உன் மாமியார் தானே அவங்க இதை சமாளிக்க தெரியாதா உனக்கு.” என்று கேட்டவன், “திரும்ப இந்த பேச்சு வந்தா என்கிட்ட பேச சொல்லு. நான் பேசிக்குறேன்.”
“பக்குவமா பேசுயா… நம்ம பொண்ணு வாழுற வீடு.” என்ற பார்வதியிடம்,
“எல்லாம் எனக்குத் தெரியும்.” என்று சிடுசிடுத்தான் அவன்.
அதன் பின் அம்மாவும் மகளும் அவனை நெருங்கவே இல்லை. ஆனால் அவர்கள் பயந்தது போல வேணிக்கு மருந்து பிழிந்து சடங்கெல்லாம் முடித்து சொந்தபந்தங்கள் கிளம்பிய பின் நெருங்கியவர்கள் மட்டும் தேங்கியிருந்தனர்.
“மச்சான் நான் சொன்னதை யோசிச்சீங்களா?” வேணியின் கணவன் ஆரம்பிக்க, அகிலன் பெரியப்பா பிடித்துக்கொண்டார். தெரிந்துதானே அவன் ஆரம்பித்தது.
விஷயம் பகிரப்படவும், “என்ன பார்வதி அவன்தான் புரியாம பேசுறான்னா அவன் விருப்பத்துக்கு விட்டிருவீயா? நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். வயசு இருபத்தேழு ஆச்சு. எல்லாம் கல்யாணம் பண்ற வயசுதான். நல்ல சம்பந்தம் வரப்போ முடிச்சிடனும்.” என்றார் பெரியப்பா.
“எனக்கு இஷ்டம் இல்லை பெரியப்பா.” அந்த பேச்சு பிடிக்காமல் அகிலன் பட்டென சொன்னான்.
“ஆரம்பிக்ககுள்ள அப்படித்தான் இருக்கும். போய் பொண்ணை பாத்தா எல்லாம் புடிச்சிடும்.” அகிலனிடம் சொன்னவர் வேணி கணவனிடம், “பொண்ணோட ஜாதகம் கொடுங்க மாப்பிள்ளை. பாத்துட்டு சொல்றோம்.” அகம் மகிழ்ந்துவிட்டான் அவன்.
“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இந்த பேச்சை இதோட நிறுத்துங்க.” விட்டால் அனைவரையும் குதறிவிடும் வேகம் அகிலனிடம்.
“பேசாம இருடா. இதெல்லாம் பெரியவங்க பேசிப்போம்.” என்று அவனை கண்டுகொள்ளாது பேசச் செய்தார் பெரியப்பா.
அகிலன் மறுத்து எதுவும் கத்துவதற்குள், “வேணி பிரசவத்த முதல்ல பாத்துடலாம் மாமா. அதுக்குள்ள அவனும் தயாராகிடுவான்.” என்று நிலையை சுமூகமாக்க முயன்று அதில் வெல்லவும் செய்தார் பார்வதி.
என்னவோ போங்க என்று கிளம்பிவிட்டனர் மிச்ச சொந்தங்கள். வேணி கணவன் இரவு தங்கிவிட்டு மறுநாள் மனைவியை அழைத்துக்கொண்டு செல்கிறான்.
எல்லாரும் கிளம்பியதும் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டான் அகிலன்.
“என்ன வேணி கல்யாண பேச்சு எடுத்தாலே உங்கண்ணன் இப்படி கத்துறான். ஏதாவது செட்டப் வச்சிருக்கானா?” என்று வேணி கணவன் கேட்க, அதிர்ந்து பார்த்த வேணி,
“ஏங்க, அண்ணன் இருக்கும் போது இப்படி பேசி வச்சிடாதீங்க. ஆடித்தீத்துடும்.”
“அடிபோடி, உன் அண்ணன் பாத்த நாள்லேந்து அப்படிதான் இருக்கான். வேற ஏதாவது சொல்லு.” என்றுவிட்டு நேரமே படுத்துவிட்டான்.
சரியாக பேருந்து கிளம்பும் அரை மணி நேரத்திற்கு முன்னே வீடு வந்த அகிலன் பை எடுத்துக்கொண்டு கிளம்ப,
“சாப்பிடாம கிளம்புறியே.” பார்வதி நிறுத்த,
“சாப்பிட்டேன். வேற ஏதாவது வேணிக்கு செய்யணும்னா செஞ்சிடு.” கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
“மாப்பிள்ளைகிட்ட சொல்லிடு.” என்று வேணியிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.
திருச்சியில் கிளம்பி சென்னை வரும்வரையிலுமே குடும்பத்தினர் தேவையில்லாது கல்யாண பேச்சை எடுத்து மூக்கை நுழைக்கிறார்கள் என்று பொறுமிக்கொண்டிருந்தான். அறைக்கு வந்ததும் சந்துரு வேகமாக அவனைக் கிளப்பிக்கொண்டு கொடியேற்றி அணிவகுப்பு நடக்கவிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். ஆம், அன்று சுதந்திர தினம்.
நண்பர்கள் இருவரும் அணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை, விழாவிற்கு பாதுகாப்பு நிமித்தமாய் சென்றிருந்தனர். அந்த மைதானத்தை சுற்றி காவலர்கள் இருக்க, இவர்கள் ஓரிடத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தனர். அகிலனின் முகம் சட்டென அதிர்ந்து பின் தவிப்பாகி பின் கோவத்திற்கு மாறியது.
கனகச்சிதமான காவல் உடையில், சிகையை நேர்த்தியாய் கொண்டையில் அடக்கி, நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையுடன் அதிரா மேடை நோக்கி மிடுக்காக நடந்து சென்றுகொண்டிருந்தாள். கழுத்திலிருந்த பெல்ட் இடம்பெயர்ந்தது போல் அவளது வலக்கையில் இருந்தது. கழுத்தோடு சேர்த்து கையை தாங்கிப்பிடிக்கும்படி பெல்ட் போட்டிருந்தாள்.
‘ஓய்வெடுக்காமல் இங்கு என்ன வேலை? கைக்கு என்ன ஆகிற்று. ஏன் பெல்ட் அணிந்திருக்கிறாள்?’ என்று ஏகப்பட்ட கேள்விகள் அகிலனுக்கு. போய் கேட்க முடியாதே. முக்கிய அதிகாரிகள் பலர் அவளிடம் வந்து பேசிச் சென்றனர். சற்று நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தேசிய கொடி ஏற்றிய பின் அனைவரும் நிமிர்ந்து சல்யூட் வைக்க, கையில் இருக்கும் பெல்ட் காரணமாக அதிரா மட்டும் அமைதியாய் நின்றாள். அதற்காகத்தான் பெல்ட் அணிந்ததே. கொடி ஏற்றியபின் அனைவரும் சல்யூட் அடித்து மரியாதை செய்யும் நேரத்தில் தான் மட்டும் கை உயர்த்தாது நின்றால் அது மரியாதையின்மையோடு பேசுபொருளாகிவிடும். அனைவரிடமும் சென்று அவள் நிலையை விளக்கிக்கொண்டிருக்கவும் முடியாது. எனவே பார்வையாய் இருக்கும் படி பெல்ட் வாங்கி போட்டுக்கொண்டாள்.
பின் விழா மேடையில் ஆட்சியருடன் அமர்ந்து அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாள். சிறப்பாய் பணி செய்தவர்களை ஊக்குவிக்கும் விதமாய் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஆட்சியர் பரிசு வழங்க இவள் அமைதியாய் அவர் அருகில் நின்றிருந்தாள். விழா முடியும் வரை அகிலனின் பார்வை அவளை விட்டு இம்மியும் நகரவில்லை.
அனைத்தும் முடிந்து ஆட்சியர் கார் வரை அவருடன் அதிரா நடக்க,
“அந்த கேஸ் என்னாச்சு?”
“இன்வெஸ்டிகேஷன் போய்ட்டு இருக்கு சார். கண்டுபுடிச்சிடுவோம்.” நம்பிக்கையாக பதில் சொன்னாள் அதிரா.
“இன்வெஸ்டிகேஷனை ஸ்பீட்அப் பண்ணுங்க. நீங்களும் மெடிக்கல் லீவ் எடுத்து கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க.” என்றுவிட்டு காரில் ஏறிக்கொண்டார் ஆட்சியர்.
அவர் கிளம்பியதும் சுற்றியிருந்த கூட்டம் கலைந்து குறைவது போல் இருக்க, வேகமாக அவளை நெருங்கினான் அகிலன். அதிரா யாருக்கோ போன் செய்துகொண்டிருந்தாள், “மேடம்.” என்று இவன் சென்று நின்றான்.
திரும்பிப்பார்த்தவள் முகம் அவளது காலை வேளை மலர்ச்சியை காட்டியது, “ஊர்லேந்து வந்தாச்சா? எப்படி இருக்காங்க அம்மாவும் தங்கச்சியும்?”
“உங்க கைக்கு என்னாச்சு?”
அவள் கேள்விக்கு பதில் கூறாது அவன் எதிர்கேள்வி எழுப்ப முறைத்தவள், “திருந்தவே மாட்டீல்ல?”
புரியாது முகம் சுருக்கியவன், “ஏன் எனக்கென்ன? நான் என்ன திருந்தனும்.”
“நல்ல மூட்ல இருக்கேன். டென்ஷன் பண்ணாம கிளம்பிடு.”
“நானும் டென்ஷன் ஆக விரும்பல.” முகம் திருப்பிக்கொண்டான்.
காதில் அலைபேசியை வைத்தபடி அதிரா நகர, வேகமாய் அவளை நெருங்கி, “எப்படி வந்தீங்க? கார் சாவி இருக்கா?” என்று கைநீட்ட,
“பரிதியோட வந்தேன்.” என்று சொல்லும் போதே பரிதி வந்திருந்தான்.
“உங்களுக்குத்தான் அடிச்சேன் பரிதி.”
“சாவி சார்.” அகிலன் பரிதியிடம் கை நீட்டியிருந்தான்.
பரிதி அதிராவைப் பார்க்க, அவள் தலையசைக்கவும் சாவியை ஒப்படைத்தான்.
கார் எங்கே என்று கேட்டுக்கொண்டு அகிலன் முன்னே நடக்க, பின்னே பேசியபடி பரிதியும் அதிராவும் வந்து ஏறிக்கொண்டனர். முன்னே அமராது அதிரா பின்னே செல்லவும் அகிலனின் பார்வை பின்னே சென்று மீண்டது.
“எங்க போகணும்?”
“ஆபீசுக்கு.” என்றாள் அதிரா.
“ரெண்டு நாள் கூட ரெஸ்ட் எடுக்க முடியாதா உங்களால?” திரும்பிப் பார்த்து அகிலன் சலிப்பாய் கேட்க, புருவம் உயர்த்திய அதிரா எதுவும் சொல்லவில்லை.
‘வாயை துறந்தா என்னவாம்? என்னையெல்லாம் இந்த மிரட்டு மிரட்டுறாங்களே இவங்களை மிரட்டி ரெஸ்ட் எடுக்க சொல்ல ஆளில்லையா?’ முணுமுணுத்துக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
“இன்னைக்கு கூட கலெக்டர் கேஸ் பத்தி கேட்டாரு பரிதி.”
“விசாரிச்சிட்டு இருக்கேன் மேம். அந்த ரெண்டு ஜெண்ட்ஸை ட்ரேஸ் பண்ணியாச்சு. ஒருத்தர் பழனி, இன்னொருத்தர் கன்னியாகுமரி. ரெண்டு பேருமே ஒரே ஆபீஸ். ரெண்டு நாள் ஆபீஸ் வரணுமாம், அப்போ மட்டும் இங்க வந்துட்டு போறாங்க. இப்போ சொந்த ஊர்ல தான் இருக்காங்க.
அந்தந்த ஏரியா இன்ஸ்பெக்டரை விசாரிக்க சொல்லி இருக்கேன். கொடி ஏத்திட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு கான்டேக்ட் பண்றேன்னு சொல்லி இருக்காங்க.”
“அவங்களை மட்டுமே நம்ப முடியாது பரிதி. அவங்க இன்வெஸ்டிகேஷன் ஸ்டைல் வேற மாதிரி இருக்கும். நம்ம ஒருமுறை நேர்ல விசாரிச்சிடலாம். எப்போ திரும்ப இங்க வராங்கன்னு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிடுங்க.” என்ற அதிரா ஏதோ யோசித்துவிட்டு பின் பரிதி புறம் திரும்பினாள்.
“மான்சியோட அடோப்சியும் அவங்களோட ஓல்ட் மெடிக்கல் ரெகார்ட்ஸையும் யாரவது தெரிஞ்ச டாக்டர்கிட்ட காமிச்சு ஒபீனியன் வாங்கணும் பரிதி. அதுல ஏதாவது க்ளூ கிடைக்க கூட வாய்ப்பிருக்கு.”
“பண்ணிடலாம் மேம். ரெகார்ட்ஸ் கலெக்ட் பண்ணி ஒப்பீனியன் வாங்கிட்டு சொல்றேன்.”
“மான்சி அம்மாகிட்டயிருந்து ரெகார்ட்ஸ் நான் கலெக்ட் பண்ணிட்டேன்.” என்றவள் அலுவலகம் சென்றதும் அந்த கோப்புகளை பரிதியிடம் ஒப்படைத்தாள்.
“பெண்டிங் பைல்ஸ் எல்லாத்தையும் க்ளியர் பண்ணிட்டு கிளம்புறேன். அர்ஜென்ட்டா எதுனாலும் எனக்கு கூப்பிடுங்க.” என்று அவனை அனுப்பி வைத்தவள் தேங்கியிருந்த கோப்புகள், சுற்றறிக்கைகளை சரிபார்த்து அனுப்பி வைத்தாள்.
இரண்டு நாள் விடுப்பு எடுக்கப்போவதால் செய்ய வேண்டிய அவசர வேலைகளை முடித்துவிட்டு வெளியே வர அகிலன் காத்திருந்தான். அமைதியாய் பின்னே ஏறிக்கொண்டு வீட்டிற்கு செல்லும்படி கட்டளையிட,
“எப்போதும் முன்னாடிதான உக்காருவீங்க?” அகிலன் ஓட்டுநர் இருக்கையிலிருந்து திரும்பிப்பார்த்து கேட்க,
“இதுக்குகூட காரணம் சொல்லனுமா?” என்று அவள் எரிந்து விழுந்தாள். இவன் முகம் சுருங்கிப்போனது.
“கை எப்படி இருக்கு?” கொஞ்சம் தூரம் சென்றபின் கேட்டான். பதிலில்லை. கண்மூடி அமர்ந்திருந்தாள்.
“உங்களைத்தான்… கழுத்துல பெல்ட் போட்டிருந்தாங்க அதை எடுத்துட்டீங்க. கையில போட்டிருக்கீங்க. ரொம்ப முடியலையா என்ன?”
“…”
“கை அசைக்க முடியுதா?”
“…”
“வலி இருக்கா?”
“…”
“பிசியோ பண்றீங்களா?”
“…”
“ம்ச்… நீங்க கேட்டு நான் பதில் சொல்லாம இருந்தா அழுத்தம், திமிரு. அப்போ உங்களை என்ன சொல்றது?” இயல்புக்கு மாறாக இழுத்துப் பிடித்திருந்த பொறுமை பறந்திருந்தது.
“நானும் நீயும் ஒண்ணா?” அழுத்தமாக கேட்டிருந்தாள். அவன் வாய் பட்டென மூடிக்கொண்டது.
நிச்சயமாக ஒன்றில்லை என்றது மனம். அவள் கோபுரம், இவன் தெருக்கோடி. அவள் நேர்த்தி, இவன் குளறுபிடி. அவள் நேர்மை, இவன் பிசகு. அவள் நிறைவு, இவன் குறைவு. உணர்ந்தவன் தலை கோதினான். இதெல்லாம் ஏன் யோசிக்கிறோம் என்று லேசாக தலையை தட்டியும் கொண்டான்.
அமைதியாக வீட்டில் இறக்கிவிட்டு அன்று போல் உரிமையாக உள்ளே செல்ல படியில் கால் எடுத்து வைக்க, முன்னே சென்று கொண்டிருந்தவள் நின்று,
“வண்டியை ஆபீஸ்ல விட்டுட்டு சாவியை பரிதிகிட்ட குடுத்துடு. ரெண்டு நாள் கழிச்சி வா. நான் லீவ்.” என்றுவிட்டு உள்ளே செல்ல,
“ஹே அதி… வந்துட்டியா…” உற்சாகத்துடன் செவி தீண்டிய குரல் நோக்கி பட்டென பார்வையை திருப்பினான் அகிலன்.
நீல நிற டீசர்டும், சாம்பல் நிற ஷார்ட்ஸுமாய் நேர்த்தியான ஒப்பனையில் இருந்த ஒருவன் வந்து அதிரா கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். சட்டென அகிலன் குனிந்து தன்னை பார்த்துக்கொண்டான்.
“ம்ச் விடு… ம்கூம், முடியாது. நான் மாட்டேன்…” குழைவாய், கெஞ்சலாய், சிரிப்பாய் அதிராவின் குரல் மட்டும் வெளியிலிருந்த இவனுக்குக் கேட்க, காதில் யாரோ அமிலம் ஊத்தியது போல் இருந்தது அகிலனுக்கு. அங்கு நிற்க முடியும் என்று தோன்றவே இல்லை. கால் பரபரவென்றது. நெஞ்சம் தடதடத்தது. ஏன் இப்படியெல்லாம் தான் உணர்கிறோம் என்ற தவிப்பு வேறு ஒருபுறம் அவனை ஆட்டுவிக்க, தலையை பிடித்துக்கொண்டான்.
“ஹே, வெயிட், வெயிட்… டிரெஸ் மாத்திட்டு வரேன். அப்புறம் ஊட்டிவிடு.” என்ற அதிராவின் குரல் மீண்டும் ஒலிக்க, அவன் கால்கள் அவன் பேச்சைக் கேட்காது உள்ளே சென்றது. அங்கு அவன் கண்ட காட்சி சுகிக்கவில்லை.
error: Content is protected !!