Skip to content
Post Views: 4,708
அத்தியாயம் – 16
மாணிக்கத்தின் வீட்டிற்கு முதலில் சென்ற அகிலன் பூட்டிய வீட்டுக்கு வெளியே இருந்த டூலெட் பலகையை பார்த்துவிட்டு அதில் இருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்து விசாரித்தான். மாணிக்கம் வாடகைக்கு குடி இருந்ததாகவும் அவர் மனைவி இறந்தபின் அவர்களின் உறவினர் வந்து வீட்டை காலி செய்துவிட்டதாகவும் சொன்னார். அந்த உறவினர் எண் இருக்கிறதா என்று கேட்டுப்பார்த்தான். இல்லை என்ற பதிலே வந்தது. அகிலன் அழுத்திக் கேட்க, தினம் தனக்கு நிறைய எண்ணிலிருந்து அழைப்புகள் வரும் என்பதால் முக்கியமானவர்களை தவிர்த்து யார் எண்ணையும் பதிந்து கொள்வதில்லை என்றார்.
“அவங்க ரிலேட்டிவ் யாரையாவது தெரியுமா உங்களுக்கு?”
“அவர் காணாம போனதுக்கு விசாரிச்சப்போவே எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேனே சார். திரும்பவும் ஏன் சார் இப்படி ஆரம்பிக்குறீங்க.” அலுத்துக்கொண்டார் அந்த உரிமையாளர்.
Advertisement
அவரின் பதில் அவனை எரிச்சல்படுத்த, முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
“அவரை கண்டுபுடிக்குற வரைக்கும் உங்க ஒத்துழைப்பு வேணும் சார்.” என்று பணிவாகவே வேண்டினான்.
“அவரோட சொந்த ஊர் கடலூர் பக்கம் தன்னூர்னு சொல்லியிருக்காரு. அங்க போய் விசாரிச்சு பாருங்க.” என்று தகவல் கொடுத்து அழைப்பை துண்டித்தார்.
Advertisement
மாணிக்கத்தின் சுயவிவரங்கள் அடங்கிய கோப்பை ஒருமுறை படித்துப் பார்த்தான். அதிலுமே அவரின் சொந்த ஊர் தன்னூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போ முன்னாடியே ஸ்டேஷன்ல விசாரிச்சிருப்பாங்களே என்று எண்ணம் வந்தவனாய் சந்துருவுக்கு அழைத்துக் கேட்டான்.
Advertisement
“அந்த கேஸ் விசாரிக்க நான்தாண்டா அந்த ஊருக்கு போயிட்டு வந்தேன். அங்க அவருக்கு சொந்த வீடு இருக்கு. இப்போ வாடகைக்கு விட்டிருக்காங்க.” என்றான் சந்துரு.
“அவருக்கு கூடப்பிறந்தவங்க இருக்காங்களா?”
“ஒரு தம்பி குடும்பத்தோட சிங்கப்பூர்ல இருக்கார்னு கேள்விப்பட்டேன்.”
Advertisement
“அவர் நம்பர் இருக்கா?”
“இல்லைடா. அப்போ அவரோட வைஃப் இருந்ததால மத்தவங்களை பெருசா விசாரிக்கல.” என்ற சந்துருவிடம் வேறு சில விஷயங்கள் கேட்டுவிட்டு அங்கிருந்த கடையில் டீ குடித்தபடி டீக்கடைக்காரரிடம் விசாரித்தான்.
மாணிக்கத்திற்கு ஒரு தம்பி இருப்பதாகவும் அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என்பது வரை மட்டுமே தெரியும் என்றான் அந்தக் கடைக்காரன்.
மாணிக்கம் மனைவியின் உறவினர்கள் மூலமாவது தொடர்புகொள்ள முடியுமா என்று கேட்டுப்பார்த்தான்.
“அவர் சம்சாரத்தோட குடும்பம் கடலூர் டவுன்ல இருக்காங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இங்க அடிக்கடி வந்துட்டு போவாங்க, மத்தபடி எதுவும் தெரியாது.” என்றனர் அங்கிருந்த சிலர்.
‘என்னடா இது எங்கு திரும்பினாலும் முட்டுச்சந்தாக இருக்கிறது.’ என்று நினைத்தபடி அன்று அறைக்குத் திரும்பினான். முதல் நாள் அலைச்சல் என்றாலும் மறுநாள் நேரமே எழுந்து உடற்பயிற்சி கூடம் சென்றுவிட்டான். உடல் இருக்கும் அசதிக்கு விடுப்பு எடுத்துவிடலாம் என்று தோன்றினாலும் சூப் வாங்கிக்கொண்டு அதிராவை சந்தித்து பேசும் வாய்ப்பு போய்விடுமே என்று உடலை தூக்கிக்கொண்டு உடற்பயிற்சி செய்தான்.
‘இப்படியே கண்டினுவ் பண்ணுங்க.’ என்று உற்சாகப்படுத்திவிட்டு சென்றார் பயிற்சியாளரும்.
பயிற்சி முடித்து வழக்கம் போல் சூப் ஒன்றை வாங்கிக்கொண்டு அதிரா வீட்டுக்குச் சென்றான்.
உள்ளே நுழைந்தவனை ஆர்வமாய் பார்த்த அதிரா, “இன்னைக்கு என்ன?” என்று கேட்க, அவளெதிரே அமர்ந்தபடி, “முருங்கைக்கீரை சூப்.” என்று அவளிடம் கொடுத்தான்.
புன்னகையுடன் வாங்கிக்கொண்டவள் ஒரு சொட்டு பருகி, “நல்லாயிருக்கு.” என்று சொல்ல, வார்த்தைகளுக்கு ஏற்ப ஏறி இறங்கும் அவளது புருவங்களையும் விழிகளையும் விழியால் நோக்கி மனதில் பதித்துக்கொண்டான்.
“நேத்தி மாணிக்கம் வீட்டு பக்கம் விசாரிச்சேன்.” என்று அவன் சேகரித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டான்.
“உன் பிரெண்ட் விசாரிச்சிருந்தாலும் நீ ஒருமுறை அவங்க ஊருக்கு போய் விசாரி. ஒவ்வொருத்தரோட விசாரணை பாணியும் வழக்கை அவங்க பாக்குற கோணமும் வேற வேறையா இருக்கும். உன் பிரெண்ட் கண்ணுக்கு தெரியாதது உனக்கு தெரிய வாய்ப்பிருக்கு.” என்று ஊக்கப்படுத்தினாள் அதிரா.
“நாளைக்கே போறேன்.”
“ஏன் இன்னைக்கு போனா அந்த ஊருக்குள்ள உன்னை விடமாட்டாங்களா?” என்று அவள் நக்கலாய் பேச, அவன் இதழ்கள் தாராளமாய் விரிந்தது.
“ரியாக்ஷன் தப்பா இருக்கே, இந்நேரத்துக்கு உனக்கு கோபம் வந்திருக்கனும் அகிலன்.” என்றாள் அவள் புருவம் உயர்த்தி.
வாடாத புன்னகையுடன் எழுந்தவன், “நீங்க இப்படி பேசமாட்டீங்களானு தான் எதிர்பாத்துட்டு இருந்தேன்.”
“…”
“கசகசன்னு இருக்கு. நான் ரூமுக்கு போய் குளிச்சிட்டு கடலூர் போய்ட்டு வரேன்.” என்று இயல்பாய் அவன் சொல்லிவிட்டு கிளம்ப, செல்லும் அவனையே பார்த்திருந்தாள் அதிரா.
“மேடம் டிபனும் லஞ்ச்சும் பண்ணிட்டேன்.” என்ற வள்ளி அவள் கவனத்தை திருப்பியிருந்தாள்.
குளித்துக் கிளம்பியவளுக்கு வள்ளி கொண்டை போட உதவ, கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரிபார்த்துவிட்டு கிளம்பினாள். அலுவலகத்தில் பரிதி அவளுக்காக காத்திருந்தான்.
“என்ன அப்டேட் பரிதி?”
“அமைச்சர் வீட்ல நடந்த கலவரத்துக்கு காரணமான இயக்கத்தோட தலைவனை ஹைத்ராபாத்ல புடிச்சிருக்காங்க. இங்கேயும் நாம கேஸ் பைல் பண்ணியிருக்கோம். அதோட மெர்ஜ் பண்ணி கேஸை அவங்ககிட்ட ஒப்படைக்குறதா இல்லை நாம இங்க தனியா கேஸை ப்ரோஸீட் பண்றதானு பாக்கணும் மேடம்.”
“அங்க என்ன கேஸ்ல புடிச்சிருக்காங்கனு தெரியல. எல்லாம் ஒரே கேஸ்னா மெர்ஜ் பண்றதை பத்தி யோசிக்கலாம். அது இப்போ ப்ரீயாரிட்டி இல்லை. நான் ஐ.ஜிகிட்ட பேசி அதை பாலோ பண்ணிக்குறேன். மான்சி கேஸ் என்னாச்சு?”
“அடோப்சி பண்றப்போ ஏதோ சந்தேகம் வந்து சாம்ப்பில்ல் டெஸ்ட் பண்ண கொடுத்திருக்காராம் டாக்டர். இன்னும் ரெண்டு நாள்ல ரிசல்ட் வந்துடும்னு சொன்னார். அதுல க்ளூ கிடைக்குதான்னு பாக்கலாம் மேடம்.”
சரியெனும் விதமாய் தலையசைத்தவள், “மாணிக்கம்னு ஒரு வீ.ஏ.வோ மிஸ்ஸிங் கேஸ் அகிலனை பாக்க சொல்லியிருக்கேன். விசாரிச்சு கைட் பண்ணுங்க.” என்று அவள் சொல்லவும் ‘அவனுக்கா’ என்று பார்த்தான் பரிதி.
“என்ன பரிதி?”
“‘இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி பாக்க சொல்றேன்.”
“இன்ஸ்பெக்டர் இன்வால்வ் பண்ண வேண்டாம். அகிலனே ஏதோ பைண்ட் பண்ணியிருக்கான், நம்ம கேஸுக்கு யூஸ் ஆகும். கோஆர்டினட் பண்ணிக்கோங்க.” என்றதும் ஒருவாறு தலையை ஆட்டிவிட்டு சென்றான் பரிதி.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம் அலைபேசி அடிக்க, அலைபேசி திரையில் அவள் தந்தையின் பெயர் மிளிர்ந்தது. போனை சைலென்டில் போட்டு ஆழ மூச்செடுத்து விட்டவள் அழைப்பை ஏற்றாள்.
“வீட்டுக்கு வந்துட்டியா அதிரா?”
“இப்போதான் கிளம்புறேன்.”
“கை எப்படி இருக்கு? டெய்லி எக்சைஸ் பண்றியா?”
“இப்போ பரவாயில்லை. ரெக்கவர் ஆகிட்டு இருக்கேன்.” கேள்விக்கான பதிலைத் தவிர வேற எந்த வார்த்தையும் தேவையில்லாது அவள் வாயிலிருந்து வரவில்லை.
அதில் வருத்தமுற்றவராய் வேதனைத் தழும்பும் குரலில், “அப்பா எப்படி இருக்கேனு கூட கேக்க மாட்டியா? வேண்டாதவனாகிட்டேனா நான்?”
“உங்களை தாங்கத்தான் குடும்பம் இருக்கே. அவங்க நல்லா பாத்துப்பாங்களே அப்புறம் நான் கேட்டு என்ன ஆவப்போவுது.” என்றாள் இவள் அசிரத்தையாய்.
“எதுவுமே மாறாதா?”
“மாற விடுவாங்களா உங்க குடும்பம். எனக்கெதுக்கு அதெல்லாம். நான் நல்லா இருக்கேன். என்னை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்.”
“சரி எதுவும் மாற வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கோடா. விஷு வேண்டாம்னா நான் வேற மாப்பிள்ளை பாக்கவா?” தணிவாகவே வேண்டினார் அவள் தந்தை.
“…”
“இருபத்தேழு ஆச்சுமா. உன் ஆசைப்படி படிச்ச, விருப்பப்பட்ட வேலைக்கு போய்ட்டு இருக்க. வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போக சரியான நேரம். உனக்கு நான் சொல்லணும்னு இல்லை. நல்ல முடிவா எடு.”
இவள் எதுவும் சொல்லாது மெளனம் காக்க, அந்த பக்கம் வருந்தி தன்னை சமன்படுத்திக்கொள்வதை உணர முடிந்தது அவளால்.
“உடம்பை கவனிச்சிக்கோ. எதுனாலும் கூப்பிடு. உனக்கு நான் வேணாம்னாலும் எனக்கு நீ வேணும். எங்க இருந்தாலும் சந்தோசமா இரு. நான் அப்புறம் பேசுறேன்.” என்று வைத்துவிட்டார்.
இப்போது நான் வேண்டும் என்பவரால் என்னை அழைத்து உடன் வைத்துக்கொள்ள முடியுமா? விட்டுவிடுவார்களா அவர் இரண்டாம் மனைவியும் அவர் பிள்ளைகளும்? இது முடிவில்லாத தொடர்கதை தானே என்று கசப்புடன் எண்ணியவள் போனையே வெறித்துப் பார்த்தாள்.
மனதில் பாரம் ஏற, “இன்னைக்கு ரவுண்ட்ஸ் வேண்டாம். வீட்டுக்கு போங்க.” என்றாள் ஓட்டுனரிடம்.
தமிழகத்திற்கு வந்தபின் தந்தையிடம் பேசும் நொடிகள் யாவும் அவளது காயங்களை கீறிவிட்ட வண்ணம் இருக்க, தளரத் துவங்கியது மனம். காக்கிச்சட்டை மாட்டியபின் விறைப்போடு புகுந்துகொள்ளும் எச்சரிக்கை உணர்வுகளை விடுத்து இயல்பாய் யாரிடமாவது பேசினால் சற்று தேவலாம் போலிருந்தது.
கோபித்து சென்ற விஷு இன்னும் அவளிடம் பேசவில்லை. தானாக அழைத்துப் பேசவும் தயக்கம். தனிமை வாட்ட, அமைதியாய் ஓட்டுனரிடம் கார் சாவி வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள். இவள் வந்ததும் சொல்லிக்கொண்டு கிளம்ப தயாராய் இருந்தாள் வள்ளி.
“டிபன் டேபிள்ல எடுத்து வச்சிட்டேன்மா. புள்ளையை இன்னைக்கு ஆஸ்பித்திரி கூட்டிட்டு போகணும். நான் கிளம்பவா?” என்று நின்ற வள்ளியையும் அனுப்பிவிட்டு உடை மாற்றக்கூட தோன்றாது அப்படியே அமர்ந்து சோபா பின்னே தலைசாய்த்து கண்மூடினாள்.
இளமைக்காலத்தில் ஏங்கித்தவித்த தவிப்புகளை கடந்து வர பழகிவிட்டோம் என்ற மிதப்பில் இருந்தவளுக்கு கொட்டு வைத்தது போல் இருந்தது அவள் எண்ணங்கள். இதற்கு தீர்வில்லை என்று தெரிந்துதான் தியானம், யோகா என்று மனதை ஒருநிலைப்படுத்தி திசை திருப்ப கற்றுக்கொண்டாள். இப்போதோ அதை செய்யும் எண்ணம் துளி கூட இல்லை. வேதனையில் உழன்று வருத்தத்தை அனுசரிக்கவே விழைந்தது உள்ளம். அறிவின் பேச்சை கேட்காது இல்லாத ஒன்றிற்கு ஏங்கித் துடித்தது மனது. சொட்டு நீர் ஒன்று போட்டிருக்கும் கனத்த பாதுகாப்பையும் மீறி இமையைத் தாண்டி கசிந்திட, பட்டென முழித்து விழிகளைத் துடைத்தாள் அதிரா.
இதற்கு மேல் அமர்ந்திருந்தாள் உடைந்துவிடுவோம் என்று உணர்ந்து உணர்ச்சிகளை கயிறிட்டு கட்டி இழுத்தவள் வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொள்ள எண்ணி எழும்ப, நான் இருக்கிறேன் என்று வந்தான் அகிலன்.
“இன்னைக்கு கடலூர் போயிருந்தேன்.” என்றபடியே மலர்ந்த முகத்தோடு அவளெதிரே வந்தமர்ந்தான்.
அவனின் வரவில் சற்று தெளிந்தவளாய் மீண்டும் அமர்ந்தவள் அவனைப் பார்க்க,
“சிங்கப்பூர் தம்பியோட நம்பர் வாங்கிட்டேன்.” என்று போனை ஆட்டியபடி குதூகளித்தான்.
“சரியான அலைச்சல். மாணிக்கத்தோட வைஃப் குடும்பத்தை புடிச்சி சிங்கப்பூர்காரர் நம்பர் வாங்கிப் பேசுனேன். அண்ணன் காணாம போயிருக்காரு என்ன ஏதுன்னு கேட்டுக்காம இருக்காருன்னு பாத்தா அவங்களுக்குள்ள குடும்ப பஞ்சாயத்து இருக்கும் போல. மாணிக்கத்தோட பேச்சுவார்த்தை அறுந்து பதினஞ்சு வருஷம் ஆச்சாம். அது எப்படியோ போகுது எப்போ இங்க வரீங்கன்னு கேட்டா இப்போதைக்கு வர வாய்ப்பில்லைங்குறாரு. இவரை வச்சிகிட்டு எப்படி கேஸ் சால்வ் பண்றது?”
“அதை ஹோல்ட்ல வச்சிட்டு அடுத்த கேஸை பாக்கலாம்.”
தேட ஆலோசனை சொல்வாள் என்று பார்த்தால் இப்படி சொல்கிறாளே என்று பார்த்தான் அகிலன், “ஏன்?”
“மாணிக்கம் காணாமதான் போயிருக்காரு. உயிரோட இருக்கவும் வாய்ப்பிருக்கும் போது அவர் தம்பியை போர்ஸ் பண்ணி வர வைக்க முடியாது. ஒருவேளை அந்த எலும்புக்கூடு வேற ஒருத்தரோடதா கூட இருக்கலாம். இப்போதான மிஸ்ஸிங் கேஸ் எல்லாம் ஓபன் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். வேற யாரும் இல்லாத பட்சத்தில் மாணிக்கம் தம்பியை வர வச்சு டெஸ்ட் பண்ணலாம்.”
முதன்முதலாய் ஆர்வத்துடன் வேலை செய்ய எடுத்த வழக்கே இப்படி என்றதும் அவன் முகம் சோர்ந்தது.
“இட்ஸ் ஓகே அகிலன். நீ ட்ரை பண்ணியிருக்க அதுவே வொர்த் ஆப் அப்ரிஷியேஷன். அடுத்த கேஸ் நல்லா பண்ணலாம்.” சற்று நேரம் முன் ஆறுதலுக்கு யாரும் இல்லையே என்று நினைத்து வருந்தியவள் இப்போது அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். மனதின் வருத்தங்கள் யாவும் பின்சென்றது.
“ஏதோ நீங்களா இருக்கப்போய் என்னை கண்டுபுடிக்க சொன்னீங்க. வேற யாரும் கேஸ் ஹாண்டில் பண்ணலாம் சொல்ல மாட்டாங்க.”
“இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னு எல்லாம் ஆசை வந்துடுச்சா என்ன?” அதிர்வில் கேட்டாள் அதிரா. அவனது மாற்றங்கள் அவளுக்கு வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. தான் வழிகாட்டி தன் பேச்சை கேட்டு ஒருவன் நல்வழிக்கு மாற முயல்கிறான் என்று நினைக்கையிலேயே திருப்தியாய் உணர்ந்தாள்.
அவள் கேள்விக்கு உதட்டை சுழித்தவன், “அப்படிலாம் இல்லை. ஆனா இதுவும் நல்லா இருக்கு. முன்னாடி கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கு அக்யூஸ்ட்டை கூட்டிட்டு போறது புடிச்சாலும் புடிக்கலைனாலும் அவனுங்களோட மல்லுக்கட்டி அவனுங்ககூட பேசும் போதெல்லாம் பெருசா ஒன்னும் தோணாது. எப்படி எப்படியோ வாழறாங்க நாமளும் இப்படியே வாழ்ந்துட்டு போயிடுவோம்னு இருந்துருவேன்.”
“…”
“உங்களை பாத்தாதான் ஆச்சர்யமா இருக்கு. தனியா இருந்தாலும் எப்படியும் வாழலாம்னு இல்லாம இப்படித்தான் வாழணும்னு உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடு போட்டு எல்லாத்தையும் அழகா ஹாண்டில் பண்றீங்க.” என்று சொல்லவும் மென்னகை ஆட்கொண்டது அவளிதழ்களை.
“அது அவ்ளோ ஒன்னும் கஷ்டம் இல்லை. மனசு வச்சா நீயும் கட்டுக்கோப்பா அடுத்தவங்களுக்கு உதாரணமா வாழலாம்.”
“ஊதாரியா இல்லாம உதாரணமா இருன்னு சொல்றீங்க. இருந்துடுவோம்.” என்றான் அவனும் வசீகரப் புன்னகையுடன்.
“அலைஞ்சிட்டு வந்திருக்க நைட் மட்டையாகாம ஒழுங்கா காலையில ஜிம் போய்ட்டு எனக்கு சூப் வாங்கிட்டு வா.” என்றாள் இவளும் அதிகாரமாய்.
“அதெல்லாம் கரெக்ட்டா வாங்கிட்டு வந்துருவேன். இப்போவாச்சு உங்க கை எப்படி இருக்குனு சொல்லுவீங்களா?” இப்போதாவது அவள் உடல்நிலை குறித்து மனம் திறப்பாளா என்று எதிர்பார்ப்புடன் அவளை ஏறிட, அவன் எண்ணத்தை பொய்க்காமல், கைகளை லேசாக மேலே தூக்கிக் காண்பித்து, “இந்த அளவுக்கு தூக்க முடியுது. போகப் போக நார்மல் ஆகிடும்.”
“கஷ்டம்ல. பாத்து இருந்திருக்கலாமே. ஆபீஸ்ல சைன் கூட போடா முடியாது.” வருத்தம் தோய்ந்த குரலில் அவன் மொழி வெளிப்பட, விழிகள் அவள் கையிலேயே பதிந்திருந்தது.
“எல்லாம் சேர்ந்ததுதான் இந்த வேலை அகிலன். மக்களை பாதுகாக்க வேண்டிய பணியில இருக்கோம். இதுக்கே இப்படின்னா ஆர்மில இருக்குறவங்களை என்ன சொல்வ? அட்லீஸ்ட் நம்ம உயிருக்காவது உத்திரவாதம் இருக்கு.”
“ம்ம்ம். உங்களுக்கு ஏன் இந்த வேலைக்கு வரணும்னு தோணுச்சு?”
“உன் பிளாஷ்பேக் அளவுக்கு எல்லாம் எனக்கில்லைபா… ஐ.ஏ.எஸ் தான் ட்ரை பண்ணேன் இது க்ளிக் ஆச்சு. அப்படியே இதுக்கு தயாராகிட்டேன். ஊர் ஊரா சுத்தி இப்போ இங்க வந்திருக்கேன்.” என்றவளிடம் மருந்துக்கும் வெளிப்பூச்சில்லை. வெகு இயல்பாய் அவள் பேச, இவனுக்கு இந்த நொடிகள் முடியாது நீளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
“அடுத்த மாசம் அஞ்சாந்தேதி தங்கச்சிக்கு வளைகாப்பு. நீங்க கண்டிப்பா வரணும்.”
“நானா?” அவளிடம் மெல்லிய அதிர்வு. அலுவலகம் தொட்டு வேலை விஷயங்கள் பேசும் போதெல்லாம் இல்லாத ஒரு தடுமாற்றம் அவளிடம்.
“கோவில்ல தான் பண்றோம். காலையில பத்து மணிக்கு ஆரம்பிச்சி ஒருமணி நேரத்துல முடிஞ்சிடும். காலையில கிளம்பி வந்தீங்கன்னா அன்னைக்கே நீங்க திரும்ப இங்க வந்துடலாம்.” அவளை தன் வீட்டு நிகழ்வுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் நிரம்ப இருந்தது.
கையை ஒருமுறை பார்த்துக்கொண்டவள் தெளிந்தவளாய், “ஒர்க் தகுந்த மாதிரி பாக்கலாம் அகிலன்.”
வரமுடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொல்லாமல் பாக்கலாம் என்றாளே அதுவே போதும் என்று எண்ணியவனாய், மலர்ச்சியுடன் தலையசைத்து விடைபெற்றான்.
இரண்டு நாள் சென்றிருக்கும் அன்று இரவு தோய்ந்த முகத்துடன் அவள் இல்லம் சென்றிருந்தான். அலுவல் விட்டு வந்த அதிரா இரவு உணவு உண்டு கேஸ் பைல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வந்து அமர்ந்ததும், “என்ன மூஞ்சு உன் ஊர் வரைக்கும் போயிருக்கு?” கேலியிழையோட அவனை கூர்ந்துப் பார்க்க,
“இன்ஸ்பெக்டருக்கு நான் அந்த கேஸ் விஷயமா கடலூர் போனது புடிக்கலை. நீயெல்லாம் கேஸ் விசாரிக்குற அளவுக்கு போயிட்டியான்னு ரெண்டு நாளா ஒர்க் லோட் அதிகப்படுத்திட்டாரு.”
“நாந்தான் போக சொன்னேன்னு சொன்னியா?”
“அது தெரிஞ்சி மனுஷன் கொதிச்சிட்டாரு. பெரிய சகாவாசம் வச்சிக்கிட்டு தலைமேல் ஏறி உக்கார பாக்குறியான்னு வச்சி செஞ்சிட்டாரு. கடுப்பா இருக்கு. எதுக்கு இதெல்லாம் பண்ணனும்னு இருக்கு. அப்படி நான் விசாரிச்சதுல என்ன குறைஞ்சிடுச்சு இப்போ?” என்று இவன் பொறிந்து தள்ள அவளிடம் அமைதியே.
“என்ன ஒன்னுமே சொல்லாம இருக்கீங்க. எல்லாத்துலையும் நேர்மை இருக்கணும்னு சொல்வீங்க. இதுக்கு பேசாம இருக்கீங்க.” தனக்கு சாதகமாய் இன்ஸ்பெக்டரை திட்டி ஒன்றும் சொல்லவில்லையே என்ற ஆற்றாமையில் பேசினான் அகிலன்.
“அரசியல் நம்ம வாழ்வோட கலந்த ஒன்னு. புதுசா வர்றவங்களை அவ்வளவு சீக்கிரம் மேல வரவிடாது. சூழ்ச்சி செஞ்சு கீழ தள்ளனும்னு இல்லை மட்டம் தட்டி பேசியும் ஒருத்தவங்களை மேல வரவிடாம பண்ணலாம். இப்போதான ஆரம்பிச்சிருக்க இன்னும் நிறையா இருக்கு.”
“அட்லீஸ்ட் பாஸிட்டிவா பேசலாம்ல.” என்று அவன் முகத்தை தொங்கப்போட,
“சரி சொல்லு என் வேலையைப் பத்தி என்ன நினைக்குற?”
நெற்றி சுருக்கி எதற்கு இப்படி கேட்கிறாள் என்று யோசித்த வண்ணம், “பெரிய பதவில இருக்கீங்க. நிறைய டென்சன் நிறைய சலுகையும் கூட…”
“ஆஹான் என்ன சலுகை?”
“நீங்க நிறைய பங்ஷனுக்கு போற மாதிரி இருக்கும். அந்த சாக்குல வேலையிலிருந்து பிரேக் கிடைக்கும். இதெல்லாம் சலுகை இல்லாம வேறென்ன?”
“அந்த பங்ஷன் எல்லாம் முடிச்சி அன்னைக்கு உள்ள வேலையை அன்னைக்கே பாக்கணும். இக்கட்டான சூழ்நிலையை கையாள தெரிஞ்சிருக்கணும். ஏதாவது பிரச்சனைன்னு வரும்போது எல்லாருக்கும் பதில் சொல்ற நிலையில இருப்போம். எங்களுக்கு அசிஸ்ட் பண்ண டீம் இருக்கும் அது ஒன்னுதான் ப்ளஸ். மத்தபடி உன்னை விட அதிக பார்ஷியாலிட்டி, அரசியல் எல்லாத்தையும் பாத்துதான் வந்திருக்கேன். ஐ.பி.எஸ்ஸே ஆனாலும் எங்களை மட்டம் தள்ளவும் ஆட்கள் எனக்கு மேல இருந்துட்டே இருப்பாங்க. நாமதான் அதெல்லாம் கடந்து வர பழகிக்கணும்.”
“என்னவோ போங்க… எனக்கு கடுப்பா இருக்கு. ரெண்டு நாளா டெஸ்க் ஜாப் கொடுத்து கடுப்பாக்கிட்டாரு. பேசாம வேலையை விட்டுறலாமான்னு தோணுது.”
“ஈசியா கிடைச்ச வேலைல அதனாலதான் அதோட அருமை தெரியாம இப்படி பேசுற. வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற வேலையை தேடித்தான் பாரேன்.” சூடாக அவள் கொதிக்க, கோபத்தில் முகத்தை திருப்பிக்கொண்டான் அகிலன்.
சில நிமிடங்கள் இருவருக்கும் இடையே கனத்த மெளனம். கிடைத்த வேலையை நேசித்து செய்யாமல் அது தன் ஆதாயத்துக்கு ஏற்றவாறு இல்லை என்று குறை படிக்கிறானே என்ற கோபம் அவளுக்கு. இத்தனை தூரம் வந்தபின் எனக்கு சாதகமாய் பேசாது இப்படி பேசலாமா என்று ஆதங்கம் அவனுக்கு. ஆனால் ரோஷம் விட்டு அவனே பேச்சை தொடர்ந்தான்.
“இப்போ என்ன பண்ணனுங்குறீங்க? அவரை சகிச்சிக்கிட்டு போராடி மேல வரணுமா நான்? அப்படி போராடுனா விட்டுருவாங்களா என்ன? இப்போ கான்ஸ்டபிள் இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சி சீனியர் கான்ஸ்டபிள் அப்புறம் ஹெட் அதுதானே…” என்று பொறும, அவனை நிதானமாய் பார்த்தவள், “ப்ரோமோஷன் வாங்கணும்னு எண்ணமெல்லாம் இல்லையா?”
“ம்க்கும்… அதான் வருஷம் ஓடிட்டு இருக்கே. வேலைக்கு சேர்ந்து அஞ்சு வருஷமாகுது. இன்னும் ரெண்டு மூணு வருசத்துல சீனியர் ப்ரோமோஷன் வரும்.” சிரத்தையின்றி பேசினான் அகிலன்.
“அப்போ கடைசி வரைக்கும் உன் அப்பா விட்டுட்டு போன வேலையில் ப்ரோமோஷன் வாங்கி காலத்தை தள்ளிடம்லாம்ன்னு இருக்க. நீயா உழைச்சு ஒன்னும் செய்யப்போறதில்லை.” என்று அவள் அழுத்தமாய் குத்த, தலை குனிந்தவன் முகத்தை அழுந்தத் துடைத்தான்.
“அப்பா கூட க்ளோஸ் எல்லாம் இல்லை. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் நடுப்புற ஷேர் பண்ணிக்காத ஒரு பாண்ட் இருந்துச்சு. கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கலைனாலும் தேவைப்பட்டத வாங்கிக்கொடுத்து எங்களை நல்லா பாத்துக்கிட்டாரு. திடீர்னு ஒருநாள் அவர் இல்லைனதும் தான் எந்த அளவுக்கு அவரை சார்ந்திருக்கேன்னு புரிஞ்சுது. அவர் இருக்கும்போது இன்னும் நல்லா அவரை பார்த்துட்டு இருந்திருக்கணும்னு தோணுச்சு. ஆனா முடியாதே…” என்கையிலேயே அவன் குரல் பிசிறு தட்ட,
“எதையெதையோ நினைச்சு இப்படி தேங்கி இருக்கிறதை விட நீ முன்னேறி நல்ல விஷயங்கள் செய்யும் போது அவர் ஆன்மா நிம்மதியடையும். அவரோட வாழ்த்தும் ஆசிர்வாதமும் எப்போதும் உன்கூடவே இருக்கும்.” என்றாள் அவனை தேற்றும் விதமாய்.
முகத்தை அழுந்தத் துடைத்தவன், “என்னவோ புடிக்காமையே இத்தனை நாள் இந்த வேலையில இருந்துட்டேன். இனி மாத்திக்க முயற்சி பண்றேன்.”
“தட்ஸ் குட்.”
“எனக்கும் புடிக்காம, என்னை யாருக்கும் புடிக்காம நிம்மதியே இல்லை. எதுலேயும் மனசு போக மாட்டேங்குது.”
“அது முன்ன… இப்போ தினம் ஜிம் போற. உன்னை நீயே மாத்திக்க முயற்சி பண்ற. ஐ கேன் பீல் தி டிஃபரென்ஸ். முன்ன இருந்த சிடுசிடுப்பு, ஆர்வமின்மை இப்போ உன்கிட்ட இல்லை. மாணிக்கம் கேஸ் விசாரிக்க எவ்வளவு தீவிரமா நீ இறங்குனேனு நான் பாத்தேன் அகிலன். யூ கேன் மேக் இட் பிக். யாருக்கு தெரியும் இப்படியே போச்சுன்னா நீ ஐ.பி.எஸ் பாஸ் பண்ணினாலும் பண்ணுவ.” என்றதற்கு மறுப்பாய் தலையசைத்தான் அகிலன்.
“என்ன?” என்று அவள் புரியாது பார்க்க,
“ஒரு ஐ.பி.எஸ் போதும். நான் வேணும்னா டிபார்ட்மென்ட் எக்ஸாம் ட்ரை பண்ணி எஸ்.ஐ ஆக முயற்சி பண்றேன். அப்போதான் ஒருத்தராவது ஒரு ஸ்டேட்ல நிலையா இருக்க முடியும்.” என்றவன் அவள் புரிந்துகொண்டு வாதிடும் முன் கிளம்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தவனாய் சட்டென எழுந்துகொண்டான். அவள் முகம் பாராது கிளம்பியும் விட்டான்.
error: Content is protected !!