Skip to content
Post Views: 8,848
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 9
விக்ரம் திருச்சிக்கு கிளம்பி விட்டான். மனம் முழுவதும் பிரபா நினைப்பு தான். ஆனால், அவனுக்கே ஒரு இடைவெளி தேவை பட்டது. காதல் என்று சொன்ன நொடி முதல் நட்பும், உறவும், இது சரி வராது என்று தான் சொல்கிறார்கள். உண்மையிலேயே இது சரி வராதா…
பிரபாவும் முகத்திற்கு நேரவே சொல்லி விட, நாலு பக்கமும் தோற்ற உணர்வு. தீ என்று தெரிந்த பின்னும் விரல் விடாதே என்ற மாமனின் அறிவுரை வேறு. அட, போங்கடா… இது தான வேண்டும். நான் போறேன். எதை மாற்ற முடியும் என்று பார்ப்போம். என்னை காணாமல் அவள் கொஞ்சம் தேடட்டும்.
Advertisement
அத்தோடு காதல் நொடியில் வந்து விடும். அதுவே விபரீதம் ஆனால், வாழ்க்கை நொடியில் முடிந்து விடும். கண்ணெதிரே உதாரணமாக ரேவதி அக்கா இருக்காங்க. அவங்களும் காதலிக்கும் போது பிரிவு, வேதனை, வேற வாழ்க்கை என்றெல்லாம் நினைத்து இருக்க மாட்டார்கள் தானே… அப்படியும் விபரீதம் தான் நடந்தது. இது எனக்கான சோதனை.
சினிமா காதல் அல்ல. துணிந்து விட்டால், வரும் பிரச்சனையை பார்த்து தான் ஆக வேண்டும். தனி ஒருவனாக ரெண்டு ஊரையும் எதிர்க்க வேண்டும். பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கும் போதே உதட்டில் சின்ன புன்னகை, தன் போனை எடுத்து பார்த்து கொண்டான்.
அதில் இருந்தது பிரபா தான். பஸ்ஸில் காத்திருக்கும் போது எடுத்தது. ஒரு பக்க முகம் தான் தெரிந்தது. அதில் இருந்த ஒற்றை கல் மூக்குத்தி மின்னியது.
Advertisement
“அவ்வளவு பெரிய அழகியாடி நீ… ரெண்டு ஊரவே எதிர்க்கிற அளவுக்கா உன் மேல பித்தா இருக்கேன். முறைச்சு பார்த்தே மாமனை மயக்கி வச்சு இருக்க… எனக்கு நீ பேரழகி தான். என் கண்ணு உன்னை தாண்ட மாட்டதே…” நினைத்து கொண்டவன் கிளம்பி விட்டான்.
Advertisement
விக்ரம் செல்வது மதன், அருணுக்கு ஒரு கை உடைந்தது போல தான். ஆனாலும், ஒரு பிரச்சனை முடிந்தது. பிரச்சனை என்பதை விட ஊர் கலவரம் முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
செல்வ குமார் உடன் காரில் விக்ரம் ஏறி கொள்ள, வண்டி நகர்ந்தது.
“எப்படி என்னை கண்டு புடிச்சீங்க…” என்ற விக்ரமின் கேள்விக்கு, செல்வம் அவனின் குரூப் எக்ஸாம் புக்கை தூக்கி கொடுத்தான்.
Advertisement
“அடச்சே…” நொந்து கொண்டான் விக்ரம்.
“நீ படிக்க உனக்கு புக் வாங்கி குடித்தா… பேர் கண்டுபிடிச்சா விளையாடுற… அப்ப கூட மாப்பிளை வசமா எங்கையோ சிக்கிட்டா ன்னு தான் நினைச்சேன். கள்ளி காடுன்னு யோசிக்கல. விருதுநகர் பஸ் ஸ்டாண்டுல உன்னையும், அந்த பிள்ளையையும் பார்த்திட்டு நம்ம பங்காளி தான் போன் பண்ணி சொன்னான்…”
ஓ… என்று மட்டும் தான் விக்ரம் சொன்னான். அவன் படிக்க வைத்திருந்த புத்தக பக்கத்தில் அவளின் பெயரை கண்டு பிடித்து, ஹார்ட் போட்டு விடுவான். அதாவது, ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களில் பி.ர.பா.வா.தி என்று ஒவ்வொரு எழுத்தையும் குறித்த வைக்க, செல்வம் எளிதாக கண்டு கொண்டார்.
புத்தகத்தில் விக்ரம் குறித்து வைத்து இருந்த பெயரும், விருதுநகரில் அவனோடு இருந்த பெண்ணின் பெயரும் ஒரே போல இருக்க, எளிதாக கண்டு கொள்ள முடிந்தது. இப்போதும் அவனாக யோசித்து தான் வருகிறான். விருப்பமில்லை எனில் நகர கூட மாட்டான். இந்த இடைவெளி அவனின் மனதை மாற்ற வேண்டும் என்று வேண்டி கொண்டான் செல்வம்.
விக்ரம் ஊருக்கு சென்றது அறியாமல், பிரபா … அவனை கல்லூரி செல்லும் வரை பார்வையால் அலசி கொண்டு இருந்தாள். அவள் சொன்ன ஒரு சொல்லில் அவன் ஒதுங்கியது ஏமாற்றமாக இருந்தது. அறிவு, முடிவு சரியானது என்று சொன்னாலும், மனம் அவன் வரவை எதிர்பார்த்தது. அவ்வளவு தானா உன் காதல். தாலி வரை பேசினான். சாதாரணமாக சொல்லி விட்டு அவன் ஒதுங்கி கொண்டான். தனக்கு அல்லவா மனதை ஏதோ செய்கிறது.
விக்ரம் அங்கிருக்கும் ஒரு கோச்சிங் கிளாசில் சேர்ந்து கொண்டான். கொஞ்சம் தீவிரமாக படிக்கவும் செய்தான். முயன்று தன் மனதை திசை திருப்ப பார்த்தான். மற்ற யாரை பற்றியும் அவனுக்கு பிரச்சனை இல்லை, பயமும் இல்லை.
ஆனால், வேண்டாம் என்று சொன்னது பிரபாவதி. ஒரு மேம்போக்காக சொல்லி இருந்தால் கண்டு கொள்ள மாட்டான். அவளுக்கும் பிடித்து இருக்கிறது, ஆசையும் இருக்க. நிரம்ப யோசித்து, பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்கமாக முடிவு எடுத்து இருக்கிறாள். அதை அசட்டை செய்ய முடியாது. அத்தோடு பிரபா சொன்னது எல்லாம் முழு உண்மை. கொலை வரை போக கூடிய ஆட்கள் தான். இவனுக்கு இருக்கும் வேகமும், துணிச்சலும் பெண்ணுக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது.
அதை விட இவர்கள் காதல் இரு குடும்ப பிரச்சனை மட்டும் தான் என்று ஒதுங்க மாட்டார்கள். அது ஊர் பிரச்சனையாக தான் மாறும். ஆக, பிரபா யோசித்தது சரி தான். பிரிவு கொஞ்சம் நியாயமான முடிவும் கூட…
எல்லாவற்றையும் சமாளித்து நிப்போம் என்று சொல்ல இருவரிடமும் காதல் வேண்டும். விக்ரம் ஒற்றை ஆளாய் நிற்க முடியாமல் ஒதுங்கி கொண்டான்.
பிரபா மனம் முழுவதும் விக்ரம் தான். என்னவோ அவனை கடக்க முடியவில்லை. இவள் அழகி தான். பலரின் ஆர்வமான பார்வையை கடந்து தான் வந்து இருக்கிறாள். இவளின் நட்பு வட்டங்களுடன் சேர்ந்து சைட் அடிக்க, கேலி செய்ய, கிண்டல் பேச என்று அந்த வயதிற்குரிய எல்லாம் பார்த்தவள் தான். விக்ரம் மாதிரி ஆட்கள் அவளுக்கு புதியவை அல்ல. ஆனால், விக்ரம் புதியவன். அவனின் பார்வை, சிரிப்பு, ரசனை எல்லாம் ஒரு மாதிரி மனதை பதைபதைக்க செய்யும்.
அடுத்தடுத்த விடுமுறைக்கும் பிரபா ஊருக்கு வர ஆரம்பித்தாள். ஒரு நாள் லீவு விட்டால் கூட கிளம்பி விடுவாள். தன்னை முழுதாக தவிர்பவனை ஒரு முறை காண மனம் ஏங்கியது. அவள் போக்கு அவளுக்கே பிடிபட வில்லை. விக்ரமும் அவள் கண்ணில் அக பட வில்லை.
அன்று விடுமுறை என்று ஊருக்கு வர, அவள் ஊருக்கு செல்லும் மினி பஸ்ஸில் மதனும், அருணும் இருந்தார்கள். அவளை பார்த்ததும், அவர்கள் சினேகமாக சிரிக்க, பிரபா கண்களில் ஒரு பரபரப்பு, ஆவல். இவர்களோடு தானே விக்ரம் சுத்துவான். எங்கே அவன்?… பார்வை அவர்களுக்கு பின்புறம் தேட,
மதனுக்கு மிகுந்த சங்கடம். அவளுக்கு என்னவென்று சொல்ல, அத்தோடு பிரபா பார்வை விக்ரமை தேட, அவன் தான் அதிர்ந்து போனான். இது என்ன புது வம்பு.
அவளை கணித்த அருண் தான், “மச்சான், விக்ரம் போன் போட்டானா?… நேத்து எனக்கு பேசலையே. அவங்க அக்கா வீட்டுல விருந்தாளியா போய் இருக்கான்னு பார்த்தா, அங்க இருந்து தான் படிக்க போறானாம். என்னவோ போ… அவன் இல்லாம எனக்கு ஒன்னும் ஓடல…” நாசுக்காக விசயத்தை கடத்தி விட்டேன்.
பிரபாக்கு பெரிய அதிர்ச்சி தான். எடுத்து சொன்னால் புரிந்து கொள்வான் என்று தெரியும். அவன் புரிந்து கொண்டதோடு ஒதுங்கியும் கொண்டான். எல்லாம் உடனே நடக்க, பிரபாக்கு வலித்தது.
அவள் முகம் பார்த்து, இருவரும் என்ன நினைக்க என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார்கள்.
“மச்சான்!… ஏதோ அவன் தான் இந்த பிள்ளையை விராட்டுறான் நினைச்சோம். பார்த்தா, அந்த பிள்ளைக்கும் நினைப்பு இருக்கும் போல…” யோசனையாக அருண் சொல்ல,
மதனுக்கும் அதே எண்ணம் தான். என்னடா உங்க காதல்? நொந்து கொண்டான்.
பிரபா வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேட தொடங்கி விட்டார்கள். அறிந்தவர், சொந்தம் என்று ஒவ்வொருவரிடமும் பிரபா ஜாதகம் பகிர பட்டது. விக்ரமும் ஒதுங்கி கொள்ள, வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க, என்ன செய்வது என்று தெரியாமல் பிரபா தான் தவித்து போனாள்.
முதலில் எல்லாம் விக்ரமை காண வேண்டும் என்றே ஊருக்கு வருபவள், இப்போது தவிர்க்க தொடங்கினாள். தினம் ஒரு ஜாதகம், மாப்பிள்ளை போட்டோ என்று வர மனசு படபடத்தது.
இன்னும் எட்டு மாசம் இருக்க படிப்பு முடிய. முன்பே தெரியும், மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று… அப்போது பெரியதாக எடுத்து கொள்ள வில்லை. இப்போது மாப்பிள்ளை என்றாலே மனதில் விக்ரம் தான் வந்து நின்றான்.
இந்த வாரம் வீட்டுக்கு போகும் போது ரெண்டு புது பட்டு புடவையும், ரெண்டு ஜோடி வளையலும் இருந்தது.
“என்னம்மா இது? புதுசா இருக்கு…” என்று பிரபா எடுத்து பார்க்க,
“ சீட்டு காசுல தான் எடுத்தேன் பிரபா. நாம அதிகம் பட்டு சேலை எடுக்கல.காசு இருக்கும் போது ரெண்டு ரெண்டா எடுத்து வைக்கணும். கழுத்துகுள்ள போடுற நகை தான் கணக்கு. உங்கப்பரு தான் மக கைல தங்க வளையல் மின்னனுமாம்…” முகம் முழுக்க சந்தோசமாக சொன்னார் கலை செல்வி.
“முன்ன நான் மட்டும் தான் கத்திட்டு கெடப்பேன். வயசு பிள்ளை இருக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு… இப்ப உங்கப்பனுக்கும் மக கல்யாணத்தை முடிக்க ஆசை வந்துருச்சு போல… மாப்பிள்ளை பார்க்க தீவிரமாக இருக்காங்க…” என்று செல்வி சொல்ல,
பிரபா விழியில் முனுக்கென்று நீர் நிறைந்து விட்டது. அப்பாவே முன் நின்றால் இனி கல்யாணம் தான். நெஞ்செல்லாம் பயமாக இருந்தது.
மெல்ல உள்ளே போக, சாப்பாட்டு பேசையில் இவளின் ஜாதகம் இருக்க, அதற்கு கீழ வேற ஒன்று இருந்தது.
மெதுவாக திறந்து பார்க்க, ஏதோ மாப்பிள்ளை போட்டோ, அவன் விவரம் எல்லாம் இருக்க, தலை கிருகிருவென வந்தது பிரபாக்கு. இவள் தான் முன்பே மாப்பிள்ளை பார்க்க சம்மதம் சொன்னது. இனி பின் வாங்க முடியாது. என்ன செய்ய?…
அந்த வரன் பிள்ளை பொருத்தம் சரி இல்லாமல் தள்ளி போனது. கொஞ்சம் நிம்மதி அவளுக்கு… ஆனால், விடுவாரா தமிழ் செல்வம். அடுத்தடுத்து ஜாதகம் நிறைய வர தொடங்கியது. வார வாரம் பிரபா ஊருக்கும் வந்து கொண்டிருந்தாள்.
நிறைய வரன் இவர்கள் தான் தட்டி கழித்தார்கள். எல்லா முடிவும் செல்வி தான்.
“இங்க பாருங்க சித்தப்பா… பார்த்தா கவர்மெண்ட் மாப்பிள்ளை தான் வேணும். இவங்க அப்பா ஒரு வேலை பார்க்க போய் தான் நாங்க நல்லா இருக்கோம். மாசம் ஆனா பென்சன் வருது. எம் மகளுக்கும் அப்படி தான் மாப்பிள்ளை வேணும். வாத்தியார் மாப்பிள்ளை வந்த ரொம்ப நல்லது. ஏன்னா இவளும் அதுக்கு தான் படிச்சு இருக்கா… கூட குறையா கேட்டா கொடுப்போம். மாப்பிள்ளை நாங்க எதிர் பாக்குற மாதிரி தான் வேணும்…” செல்வி தெளிவாக சொல்ல,
பிரபா மனதில் விக்ரம். அவன் என்ஜினீயர். அதுவும் டிப்ளோமோ படித்து போனவன்.
இந்த காரணத்தால் மட்டும் தான் பிரபா கல்யாணம் தள்ளி போகுது. இல்லையேல் குவிந்த வரணுக்கு கல்யாணமே முடிந்து இருக்கு.
வாத்தியார் மாப்பிள்ளை பார்க்க வயது கூடுதலாக இருந்தது. அதற்கு தமிழ் செல்வம் ஒத்து கொள்ள வில்லை. “என் மக சின்ன பிள்ளை. அதுக்கு போய் ஒன்பது வருட மூத்த ஆளா, வேற பாருங்க…”
ஜவுளி கடை பொம்மை போல வாரம் ஒரு சேலை கட்டி அலங்கரித்து கொண்டு மாடல் போல நிற்க வேண்டும். அதுவும் இதுவரை வந்த வரன்கள் எல்லாம் இவர்களால் தான் நிராகரிக்க பட்டது. அதில் கலை செல்விக்கு கொஞ்சம் பெருமையும் கூட…
பிரபா ஒரு நாள் மெல்ல சொல்லி பார்த்தாள்.
“அம்மா, எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்…”
“எதுக்கு, வயசு கூடி போகும். முகம் நல்லா இருக்கும் போதே கட்டி கொடுக்கணும். கொஞ்ச வயசு கூடுனாலும், அது ஒரு குறையா போகும் பிரபா…” என்றார் தாய்.
“எனக்கு இன்னும் படிப்பு முடியலம்மா. படிப்பு முடியட்டும்…”
“இப்பாவேவா கல்யாணம் பேச போறோம். பாக்குறோம், அவ்வளவு தான். அது அமஞ்சு, பேசி, பூ வச்சு, நிச்சயம் பண்ணி, கல்யாண நாள் குறிக்கும் போது உன் படிப்பு முடிஞ்சுடும்…”
“எனக்கு மேல படிக்கணும்ன்னு ஆசை…” தயங்கியே பிரபா சொல்ல,
“ஏதே! உன்கூட படிச்ச பாதி பேர் பிள்ளைகாரி. நீ என்ன மேல படிக்கணும்ன்னு சவுடால் பேசுறவ. போதும் நீ படிச்சு பட்டம் வாங்குனதும், படிக்கிறேன்னு சொத்தை அழிச்சதும். பின்னாடி இருக்குற மண்ணை தட்டி விட்டுக்கு உங்க வீடு போய் சேரு. உனக்கு பிந்தி ஒருத்தன் இருக்கான், நினைப்பு இருக்கா… படிக்கிறது, வேலைக்கு போறது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் உன் பாடு, உன் புருசன் பாடு…” என்று முடித்து விட்டார் செல்வி.
பிரபாக்கு கண் கலங்கியது மாப்பிள்ளை என்றாலே விக்ரம் முகம் தான் முன் வந்து நின்றது. அவன் நினைவு மனசை விட்டு போக மாட்டேன் என்றது. கோபமாகவும் வந்தது, அழுகையும் வந்தது.
அந்த முறை விடுதிக்கு செல்லும் முன், பஸ் ஸ்டாண்டில் நின்று இருந்த மதன், அருணை கண்டு அவர்களை நெருங்கினாள்.
“என்னைக்கும் இல்லாமா, இந்த புள்ளை ஏன் நம்மளை நோக்கி வருது…” என்று பார்க்க,
“நான் உண்டு, என் படிப்பு உண்டுன்னு தான் இருந்தேன். உங்க ப்ரெண்ட நான் என்னைக்காவது நிமிந்து பார்த்து இருக்கேனா?…” என்றவள்,
“அன்னைக்கு ஒருத்தன் பொண்ணு பார்க்க வந்ததுக்கு, அடிச்சு ஊரா விட்டு விரட்டி விட்டாரு தானா?… இன்னைக்கு நூறு பேரு வாரான். எங்க அவரு? நீங்க எல்லாம் சேர்ந்து வந்து தான அன்னைக்கு எனக்கு பூ வச்சீங்க. அதுக்கு என்ன பதிலு? நான் சொன்னேனு சொல்லியே அவர் கிட்ட கேளுங்க? …” என்று கோபமாக சொன்னவள், நகர்ந்து விட,
“அட்ரா சக்கை… இதுக்கு சொல்லுடா பதில?… வீரம் விளைஞ்ச மண்ணா, தமிழ் நாட்டு பொண்ணா… பார்த்தியா தில்ல. போடு போனை உன் மச்சானுக்கு, அதுக்கு என்ன பதில் சொல்றான்னு பாப்போம்…” ஒரே சந்தோசம் அருணுக்கு.
என்னவோ பாரம் மனதை அழுத்த, கேட்டு விட்டாள்.அதன் பிறகு அது பெரிய முட்டாள் தனமாக தெரிந்தது. இவள் தான் வேண்டாம் என்றது. இப்போது இப்படி பேசி வைத்தால் என்ன நினைப்பான்.
அடுத்த இரண்டு வாரத்துக்கு அவள் ஊர் பக்கமே தலை காட்ட வில்லை. அவளுக்கு என்ன யோசிக்க என்று புரியவும் இல்லை. அவனை பிடித்து இருக்க, அது தான் அழுத்தமாக, அழுகையாக வெளி வருகிறது போல…
தந்தையே போன் செய்து வர சொன்ன பின் தான் ஊருக்கே வந்தாள். விருதுநகர் பஸ் ஏறி ஊருக்கு செல்ல அமர, அவசரமாக அவள் பக்கத்தில் அமர்ந்தாள் ஒருவள்.
யார் என்று பார்க்க, விக்ரமின் இரண்டாம் அக்கா ஜெய சந்திரா. கையில் மூணு வயது பெண் குழந்தையோடு, நிறைய பைகளோடு அமர்ந்து இருந்தாள்.
பிரபாக்கு என்னவோ ஒரு சந்தோசம். விக்ரமின் அக்காவை ஆர்வமாக பார்த்தாள். விக்ரமின் ஜாடை தெரிந்தது.
குழந்தை சிணுங்க, பைகளோடு போராடி கொண்டு இருந்தவள், குழந்தையை பார்க்க நிமிர, போன் வேறு அடித்தது.
“என் கிட்ட குடுங்க. நான் வச்சு இருக்கேன். ஜன்னலோரம் பிடிச்சு இருந்தா, நல்லா காத்து வரும்…” என்று ஆசையாக குழந்தையை வாங்கி கொண்டாள்.
விக்ரமின் அக்கா மகள் என்பதே குழந்தை மீது ஆர்வத்தை தூண்டியது. ஏதோ ஒரு சொந்தம் என்ற உணர்வு வந்தது.
அப்பாடா… என்று நிமிர்ந்த சந்திரா. “நன்றிம்மா, என் நாத்தனார் வீட்டுக்கு போயிட்டு வாரேன். வேண்டாம்னு சொன்னாலும் கேட்காம நிறைய குடுத்து விட்டாங்க. பிள்ளையை வச்சு கிட்டு அல்லாடி போயிட்டேன்…” என்றவள்,
“உன் பேர், ஊர் என்ன?” என்று கேட்க.
பிரபா சொன்னாள். “அட நம்ம ஊர். மிலிட்டரிக்கார மகளா நீ. அடையாளமே தெரியலை. நல்ல அழகா இருக்க…” என்று சொல்ல, பிரபா சிரித்து கொண்டாள்.
அடுத்து வந்த சங்கரன் கோவில் ஸ்டாப் இறங்கி தான் வேற பஸ் மாற வேண்டும். முழு நேரமும் பிள்ளையை பிரபா வைத்து கொண்டாள்.
சந்திரா ரெஸ்ட் ரூம் போக உதவி செய்தாள். இருவரும் நன்றாக பேசினார்கள். பொதுவாக, பிரபா குணம் அப்படி கிடையாது. விக்ரம் அக்கா என்ற காரணம் மட்டுமே முன் நின்றது.
ஒரு பேக்கரியில் சென்று டீ குடித்து விட்டு பின் தான் ஊருக்கு செல்ல பஸ் ஏறினார்கள். சந்திராக்கு, இவள் உடன் வந்தது நல்ல வசதி. மூணு மணி நேர தனியே பயணம் என்று பயந்து இருந்தவள், நம்ம ஊர் பெண் தெரியவும், நன்றாக ஒட்டி கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர்கள் ஊருக்கு வந்து இறங்கி விட்டார்கள். பஸ் நின்ற உடன் பைகளோடு சந்திரா இறங்க. பிள்ளையோடு அடுத்து பிரபா இறங்கினாள்.
“அக்கா…” என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க, அங்கு விக்ரம் நின்று இருந்தான். அவள் அதிர்ந்து போய் பார்க்க,அவனுமே பிரபாவை எதிர்பார்க்க வில்லை. பார்த்து ஐந்து மாதத்துக்கு மேல் ஆனது.
“பிரபா இவன் தான் என் தம்பி…”
“தெரியும்…”
“தெரியுமா? பக்கத்து ஊர் தானே தெரிய வாய்ப்பு இருக்கு. இவன் கல்யாண விசயமா தான் ஊருக்கு வந்தேன். பொண்ணு சொந்தம் தான். நாளைக்கு காட்டு மாரியம்மன் கோவில்ல பூஜை இருக்கு, நீயும் வந்திரு…” என்று சந்திரா சொல்ல,
பிரபா முகம் மாறி போனது.
“டேய் ஒரு டீ வாங்கி கொடுடா. அவ்வளவு தூரம் என் கூட எனக்கு ஒத்தாசையா வந்தா…” என்று சந்திரா சொல்ல,
“இல்லை வேணாம். எனக்கு லேட் ஆச்சுக்கா. நான் வாரேன்…” என்று நகர,
“வா, ஒரு ஜூஸ் குடிச்சுட்டு போலாம். பார்க்க சோர்ந்து போய் தெரியுறா…” என்று விக்ரம் சொல்ல,
“ மோசகாரன், இப்படி அக்கறையா பேசி தான் என்னை மோசம் பண்ணிட்டான். வேற பொண்ணு கூட கல்யாணத்துக்கு நிக்கிறவன் கிட்ட என்ன பேசி வச்சு இருக்கேன். எவ்வளவு அவமானம்…”
ஒன்றும் சொல்லாமல் பிரபா நகர, தன் அக்காவை ஒரு பார்வை பார்த்தவன்,
“பிரபா, நான் பேசிட்டு இருக்கேன். வா கடைக்கு போகலாம்…”
“உங்க அக்கறை ஒன்னும் எனக்கு வேணாம். நீங்க ஒரு பொய்காரன், ஏமத்துகாரன்…” என்றவள், அழுதுவிடாமல் இருக்க, வேகமாக நகர்ந்து விட்டாள்.
error: Content is protected !!