Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – அத்தியாயம் 17

அத்தியாயம் – 17

“என்ன?”

அப்பட்டமான அதிர்ச்சி அவள் விழிகளில் பிரதிபலித்தது. கையிலிருந்த கோப்பை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தாள். அதே தான் அச்சடிக்கப்பட்டிருந்தது. 

மான்சியின் உடலில் குறிப்பிடத்தக்க அளவு பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக அறிக்கை வந்திருந்தது. 



Advertisement

“இது எப்படி சாத்தியம் பரிதி? மான்சியோட ஆர்கானிக் பார்ம்லேந்து தான் எல்லா காய்கறியும் அவங்க வீட்டுக்கு போகுதுனு அவங்க அம்மா சொன்னாங்களே…”

“ஒருவேளை இது தற்கொலையா இருக்குமோ? பூச்சிமருந்து குடிச்சி தற்கொலை பண்ணியிருப்பாங்களோ மான்சி?” கேள்வியாய் பார்த்தான் பரிதி.

மறுப்பாய் தலையசைத்தவள், “காஸ் ஆப் டெத் ரெஸ்பிரேடரி இஸ்யூ பரிதி. இது வேற ஏதோ?” என்றவள் என்னென்ன பூச்சிக்கொள்ளிகள் உடலில் கலந்திருக்கிறது என்று பார்த்தாள்.

Advertisement

“எக்ஸ்பெர்ட் ஒப்பீனியன் கேக்கணும் பரிதி. மான்சி உடம்புல இது இருக்குறதால என்னென்ன பாதிப்பு வந்திருக்க வாய்ப்பிருக்குனு தெரிஞ்சிக்கணும். இந்த கேஸ் எங்கெங்கேயோ போகுது.”

Advertisement

“அதேமாதிரி மிஸிங் கேஸ் ஏகப்பட்டது இருக்கு மேடம். எப்படி ஷார்ட்லிஸ்ட் பண்ணறதுன்னு தெரியாம திணறிட்டு இருக்காங்க.”

“ஹோல்ட் பண்ணுங்க பரிதி. ஸ்கெலிடன் அனலைஸ் பண்ணி வயசு, ஜெண்டர், ஹைட் எல்லாம் ப்ரிடிக்ட் பண்ணி சொல்லட்டும். அதை வச்சி நம்ம ஷார்ட்லிஸ்ட் பண்ணி பைண்ட் பண்ண ட்ரை பண்ணலாம்.” என்றவள் பரிதியை அனுப்பிவிட்டு எப்போதும் ஆலோசிக்கும் மருத்துவரை விடுத்து தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நம்பிக்கைக்குரிய ஆட்கள் குறித்து விசாரித்து அங்கு சென்றாள்.

மான்சியின் பழைய மருத்துவ அறிக்கைகள், உடற்கூறாய்வு அறிக்கை, தற்சமயம் புதிதாக கிடைத்த அறிக்கை அனைத்தையும் கொடுத்து இதில் ஒன்றுக்கு ஒன்று ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்தாள்.

Advertisement

“கண்டிப்பா தொடர்பு இருக்குனு சொல்ல முடியாது. பட் வாய்ப்பிருக்கு. மேடம். எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க. இதை கம்ப்ளீட்டா ஸ்டடி பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்.” என்றதும் ஏமாற்றமாய் உணர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாது, “இது முக்கியமான கேஸ் சோ கான்பிடென்ஷியலா இருக்கட்டும் இந்த விஷயம்.” என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள் அதிரா.

அலுவலகம் வரையிலான பயணம் நெடுகிலும் அவள் சிந்தனை முழுதும் மான்சி வழக்கில் குவிந்திருந்தது. கிடைக்கும் தகவல்களை வைத்து பார்க்கும் போது மான்சியின் இறப்புக்கு பின் ஏதோ பெரிய காரணம் மறைந்திருப்பதாகவே பட்டது. உடன் கிடைத்த மூன்று எலும்புக்கூடுகளும் மான்சி வழக்குடன் சம்பந்தபட்டிருக்கும் என்று அடித்துச் சொன்னது உள்மனது. எப்படி சம்மந்தப்பட்டிருக்கும் இரண்டுக்கும் இடையே இருக்கும் முடிச்சு என்ன? என்று யோசித்து யோசித்து மூளை சூடாகியது. பழச்சாறு குடித்து கொஞ்சம் இளைப்பாறினாள்.

அதன் பின்னும் அந்த யோசனை விட்டபாடில்லை. வேகமாக வழக்கு குறித்து வரைந்து வைத்திருந்த வரைவுகளை எடுத்துப் பார்த்தவள் பரிதிக்கு அழைத்து, “குப்பை கிடங்குக்கு வர லாரி, டிராக்டர் எல்லாத்தையும் விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?”

“ஒன்னும் தெரியாதுனு எல்லாரும் சாதிக்குறாங்க மேடம். இனிமே கலெக்ட் பண்ணி கிடங்குல டிஸ்போஸ் பண்ற எல்லாத்தையும் செக் பண்ண சொல்லியிருக்கேன்.”

“இப்போ எங்க குப்பையெல்லாம் கொட்டுறாங்க?” 

“ஏற்கனவே இருக்குற இடத்துக்கு பேக் சைட் மேடம்.”

“எதையும் மாத்த முடியாதுல்ல?” பெருமூச்சுடன் எதிரே இருந்த பேப்பர் வெயிட்டை சுற்றினாள்.

“நம்மாள முடிஞ்சது இவ்ளோதான் மேடம். புஷ் பண்ணியிருக்கோம், ஏதாவது மாற்றம் வருதான்னு பாப்போம்.”

“அந்த ஆட்டோ?”

“நோ மேம். அந்த ஆட்டோ மர்மமாவே இருக்கு. சுத்தி இருக்குற எல்லா ஸ்டேண்டலையும் விசாரிச்சாச்சு சந்தேகப்படும்படியா யாரும் சிக்கல.”

“பாரென்சிக் அப்டேட்ஸ் என்ன?”

“அதை விசாரிக்கத்தான் வந்திருக்கேன். பாத்துட்டு கூப்புடுறேன் மேம்.” என்று அழைப்பை துண்டித்தான் பரிதி.

அலைபேசியை கீழே வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவள் மனக்கண்ணில் வழக்கின் வரைவுகளை ஓடவிட்டு ஆராய்ந்தவண்ணம் கண்களை மூடினாள். இத்தனை வருடங்கள் அவள் சந்தித்த வழக்குகளிலேயே அவளை அதிகம் சுத்தலில் விடுவது இதுவாகத்தான் இருக்கும். எங்கோ கோட்டை விடுகிறோம் எங்கு எங்கு என்று அலசியது மனம். சிக்கவில்லை. அதிகம் அவளை சிந்திக்க விடாமல் காணொளியில் கலந்தாய்வு சந்திப்பு இருந்தது. அதில் பங்குகொண்டு பின் அலுவல் வேலைகளை முடித்துவிட்டு வீடு கிளம்ப இரவு ஏழாகிவிட்டது. 

இன்று ரவுண்ட்ஸ் போக வேண்டும் என்று ஓட்டுனரிடம் சொன்னவள் முதலில் வீடு சென்று உணவு முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு மேல் மீண்டும் கிளம்பினாள். சுற்றி ஒவ்வொரு இடமாக கண்காணித்து, செக் போஸ்ட் இருக்குமிடங்களில் பொதுவாக விசாரித்துவிட்டு அந்த நாளை நிறைவு செய்தாள்.

மறுநாள் எப்போதும் போல் விடிய, அனிச்சையாய் அவள் விழிகள் வாசலை தொட்டு தொட்டு மீண்டது. நேற்று காலையும் வரவில்லை இன்றும் வரமாட்டானோ என்று நினைத்துக்கொண்டே உலர் பழங்களை உண்டாள்.

“சார் இன்னைக்கு சூப் எடுத்துட்டு வரலையா?” என்று வள்ளி கூட கேட்டாள். அதிரா மறுப்பாய் தலையசைத்தாளே ஒழிய எதுவும் சொல்லவில்லை.

அன்று இரவு வரை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாது போக பரிதிக்கு அழைத்தவள், “என்ன பரிதி நேத்திக்கே பாரென்சிக் ரிப்போர்ட் வாங்க போறேன்னு சொன்னீங்க அதையும் காணோம், அடாப்ஸிக்கு போன எலும்புக்கூடு பத்தின டீட்டியல்சும் ஒன்னும் வரல. என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாம்? கேஸோட சீரியஸ்னஸ் உங்களுக்கு கூடவா புரியல. என்ன நினைச்சுகிட்டு எல்லாம் வேலை பாக்குறீங்க?”

“மேம் நம்ம நாட்டுல எழும்பக்கூடு ஆய்வு பண்றதுக்கு தனியா டிபார்ட்மென்ட் இல்லை.”

“அது தெரியாமத்தான் வேலை பாத்துட்டு இருக்கேனா நான். பாரென்சிக் எக்ஸ்பெர்ட்ஸ் அண்ட் அனாட்டமிஸ்ட் வச்சி நீங்கதான் சீக்கிரம் ரிசல்ட் வாங்கணும். நம்மளோட ப்ரியாரிட்டி அவங்களுக்கு புரியாது நீங்கதான் அழுத்தம் கொடுக்கணும். இதுக்கெல்லாம் என் வேலையை விட்டு நானே வந்து டிபார்ட்மென்ட் டிபார்ட்மென்ட்டா ஏறி இறங்கி அவங்களை போர்ஸ் பண்ணிட்டு இருக்க முடியுமா.” பரிதியை வாங்கு வாங்கென்று வாங்கியவள் அவளே அந்ததந்த துறையின் மேலதிகாரியை அழைத்து வழக்கின் தீவிரத்தை உணர்த்தி விரைந்து அறிக்கை தயாரித்து தரும்படி கேட்டுக்கொண்டாள்.

மறுநாள் போராட்டத்திற்கு அனுமதி வேண்டி குவிந்திருந்த கடிதங்களை அந்தந்த பகுதி வாரியாக பிரித்தனுப்பி அவர்களையே பார்த்துக்கொள்ள சொல்லும்படி கொடுத்தனுப்பினாள். சிக்கலும் கலவரமும் வர வாய்ப்பிருக்கும் இடங்களை மட்டும் தனக்கு தெரிவித்தால் போதுமென்றும் சொல்லி அனுப்பினாள். 

மறுநாளும் அகிலன் வராது கண்ணாம்பூச்சி ஆட, எவ்வளவு நாள் இப்படி வராம இருப்பான் என்று சுவாரசியமாக நினைத்துக்கொண்டே மதியம் போல ஆராய்ச்சி நிலையம் சென்றாள். இரண்டு நாள் அவகாசத்தில் மொத்தமாய் கரைத்துக் குடித்திருந்த அந்த ஆரய்ச்சியாளர் தனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ள, முதலில் அதிர்ந்தவள் இன்னுமாய் குழம்பிப் போனாள். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் வைத்து பார்க்கும் பொழுது மான்சி இறப்புக்கும் அவளது விவசாய நிலத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று திண்ணமாக நம்பினாள்.

அடுத்து வழக்கை எப்படி கொண்டு போவது என்று சிந்தித்து அமர்ந்தவளுக்கு அழைத்த பரிதி, “போன்ஸ் எல்லாம் அரேஞ் பண்ணிட்டாங்க மேம். நீங்க வந்தீங்கன்னா பாத்துடலாம்.” என்று தன்மையாய் அழைக்க,

“உங்களுக்கும் டோஸ் விட்டாதான் எல்லாம் வேகமா நடக்குமோ?” என்று கேட்டுவிட்டு, அவன் சொன்ன இடத்திற்கு சென்றாள்.

அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தையும் மனித உருவ வரிவடிவில் வைத்திருந்தனர்.

“மொத்தம் மூணு பாடி மேடம். மூணுமே ஆண்தான்.” என்றவர் ஒரு வடிவைக் காட்டி, “வயசு நாப்பதுலேந்து நாப்பத்தஞ்சி இருக்கும். இறந்து ஏழெட்டு மாசம் ஆகியிருக்கலாம். வலது கால்ல ஃப்ராக்சர்  இருக்கு, ஆண்டிமார்ட்டம் – இறப்புக்கு முன்னாடியே அடிபட்டு கியூர் ஆகியிருக்கு. இறக்குற சமயத்துல எந்தவித அழுத்தமோ விபத்து நடந்ததுக்கான அடையாளமோ இல்லை.”

“எப்படி இறந்திருப்பாருனு சொல்ல முடியுமா?” என்று கேட்டாள் அதிரா. 

“போஸ்ட் மார்ட்டம் மாதிரி எல்லாத்தையும் கண்டுபுடிக்க முடியாது மேடம். ஸ்கெலிடன் வச்சி லிமிடட் விஷயங்கள் மட்டும்தான் தோராயமா சொல்ல முடியும்.” 

சரியென்றவளாய் அவர்கள் சொன்ன தகவல்களை கேட்டுக்கொண்டாள். அடுத்தடுத்து கிடத்தப்பட்டிருந்த கூடுகளும் முப்பத்திலிருந்து நாற்பது வயது, நாற்பதிலிருந்து ஐம்பது வயது இருந்தது. அதில் ஒருவரை சுட்டிக்காட்டிவர், “இவர் இறக்குறதுக்கு முன்னாடி தலையில அடிபட்டிருக்கு. இந்த ஸ்கல்ல சின்னதா கிராக் இருக்கு பாருங்க. இறக்குறதுக்கு முன்னாடி ஏதோ ஷார்ப் ஆப்ஜெக்ட்ல மோதியிருக்கணும். மேபீ தடுமாறி கீழ விழுந்திருக்கலாம், பாக்குறதுக்கு காயம் அப்படித்தான் இருக்கு.”

“இந்த இஞ்ச்யூரினால இறந்திருக்கலாமா?” என்று பார்த்தாள் அதிரா.

“நாட் ஷ்யூர் மேம். காயம் ஆழமா இருக்கு பட் இந்த காயத்துனால இறந்திருக்க வாய்ப்பு கம்மினு தான் சொல்வேன்.”

“இரண்டு பேருக்கு இஞ்ச்யூரி இருக்கு. இந்த மூணாவது ஆளுக்கு?”

“அவருக்கு அடி எதுவும் இல்லை. ஹீ ஈஸ் நார்மல்.” 

“மூணு பேரோட இறப்புக்கான காரணம் கண்டுபுடிக்க முடியாதா?” என்றதற்கு கைவிரித்தனர்.

“மூணு பேரும் வெவ்வேற காலகட்டத்துல இறந்திருக்காங்கனு மட்டும் உறுதியா சொல்ல முடியும்.” என்றவர் மூவரின் இறப்பு மாதத்தை தோராயமாக கணித்து சொன்னார்.

அதிராவும் இன்ன பிற விவரங்களை கேட்டுக்கொண்டு கிளம்பினாள். உடன் வந்த பரிதியிடம், “மான்சி கேஸோட இதை லிங்க் பண்ண வேண்டாம். ரெண்டையும் தனித்தனியாவே ஹாண்டில் பண்ணுவோம்.”

“மான்சி கேஸ்ளையும் எந்த முன்னேற்றமும் இல்லையே மேம்.” என்று நெற்றி தேய்த்தான் பரிதி. அனைத்தையும் யோசித்துப் பார்க்க தலை வலிப்பது போலிருந்தது அவனுக்கு.

“பாக்கலாம் பரிதி. உள்ள சொன்ன டீடெயில்ஸ் எல்லாத்தையும் ரிட்டர்ன்ல வாங்கிடுங்க. அவங்க சொன்ன ஏஜ் க்ரூப் வச்சி அந்த ஏஜ் க்ரூப்ல ஆக்சிடென்ட் ஆகியிருக்குற ஜென்சை மேட்ச் பண்ணி ஷார்ட்லிஸ்ட் பண்ணுங்க. அண்ட் மிஸ்ஸிங் கேஸ் மட்டும் செக் பண்ணாதீங்க. ஆதாரம் இல்லாம க்ளோஸ் பண்ண கேஸ் அப்புறம் கண்டுபுடிக்க முடியலைன்னு வேற பாடி வச்சி க்ளோஸ் பண்ண கேஸ் இப்படி எல்லாத்தையும் க்ராஸ் செக் பண்ணுங்க. அட்லீஸ்ட் ஒருத்தரையாவது ஐடென்டிபை பண்ணா கேஸை ப்ரோஸீட் பண்ண யூஸ்புல்லா இருக்கும்.” என்று யோசனைகள் சொல்லிவிட்டு கிளம்பியவள் அகிலனுக்கு அழைக்க, வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

மூன்று நாள் கழித்து அழைப்பு வருகிறது அவனுக்கு. அன்று விருப்பத்தை சொன்னபின் அவள் முன் சென்று நிற்க தைரியம் அற்றவனாய் பதுங்கிக் கொண்டிருக்கிறான். இப்போது அவளாகவே அழைக்கவும் நெஞ்சுக்கூடு பதட்டத்தில் அடித்துக்கொள்ள, அலைபேசியை இறுகப் பற்றியவன் கீழுதட்டை பற்களால் கடித்து தன்னை நிதானிக்க முயன்றான். என்ன சொல்வாள்? அன்று சொன்னதற்கு கண்டபடி திட்டிவிடுவாளோ? இல்லை ஒரேடியாக தனக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொடுத்து ஊரை விட்டே அனுப்பி தன்னை ஒதுக்கிவிடுவாளோ என்றெல்லாம் எண்ணி அஞ்சினான்.

“போன் அடிச்சிட்டே இருக்கு எடுக்காம என்ன பண்ற?” என்று சந்துரு பின்னிருந்து எட்டிப்பார்க்க, தலையை சரித்துப் பார்த்தவன் சற்று தள்ளிச் சென்று அழைப்பை ஏற்றான்.

“மாணிக்கம் கேஸ் பைல் எடுத்துட்டு வா.” என்று மட்டும் சொல்லி அவள் அழைப்பை துண்டிக்க, காதிலிருந்து அலைபேசி எடுத்து நெற்றி சுருங்க சந்தேகத்தோடு பார்த்தான்.

‘என்ன ஒன்னுமே சொல்லல? சாதாரணமா பேசுறாங்க?’ குழப்பத்தில் நின்றவன் அவள் கேட்டதை எடுத்துக்கொண்டு கிளம்ப தயங்கி நின்றான்.

நேர்ல கூப்புட்டு திட்டுவாங்களோ?’

எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி சொல்லுவன்னு ஒருவேலை அடிச்சிட்டா?

நான் உன்னோட ஹையர் அபீஷியல்னு மறந்து போச்சான்னு கத்துனா? 

கொஞ்சம் சிரிச்சு பேசுனா போதுமே இளிச்சிட்டு வந்துருவீங்களேன்னு அசிங்கமா கேட்டுடா என்ன பண்றது?

எந்த தைரியத்துல பேசுனாடா லூசுப்பயலே என்று தன்னைத்தானே திட்டியும் கொண்டான்.

ஒருகட்டத்தில் தேற்றிக்கொண்டு அவள் முன் கோப்புடன் நிற்க, வெகு இயல்பாய் அதை வாங்கிப் பார்த்தாள். 

பாரென்சிக் அதிகாரிகள் சொன்ன வயதோடு மாணிக்கத்துடைய வயது ஒத்துப்போனது.

“மாணிக்கத்துக்கு முன்னாடி ஏதாவது ஆக்ஸிடென்ட்ல ஃப்ராக்சர் ஆகியிருக்கானு விசாரி. கிடைச்ச எலும்புக்கூடுல ஒருத்தருக்கு வலது கால்ல ஃப்ராக்சர் இருக்கு. ரெண்டும் ஒத்துப்போச்சுன்னா வீ ஸூட் காண்டாக்ட் ஹிஸ் ப்ரதர்.” என்றதுக்கு அவள் முகத்தையே வெறித்துப் பார்த்திருந்தவன், “அவ்வளவுதானா?” என்று உதட்டுக்குள் முணுமுணுத்தது சத்தமாய் அவள் செவியிலும் விழுந்தது.

“அவ்வளவுதான் கிளம்பலாம் நீ.” என்றாள் அவளும் பதிலுக்கு.

அவள் பதிலில் அதிர்ந்து பார்த்தவன் எச்சில் கூட்டி விழுங்கியபடி, “மூணு நாளா சூப் வாங்க முடியல.” என்று பேச்சை தானே துவங்கினான்.

“தினமும் எனக்கு வாங்கிட்டு வரணும்னு அவசியம் இல்லையே. உனக்கும் வேலை நிறையா இருக்கும்.” என்று பதில் கூறி அவனை திணறடித்தாள்.

“அப்படியெல்லாம் இல்லை.”

“அப்போ ஃப்ரீயா இருந்துட்டே வரலையோ. அவாய்ட் பண்றியா என்னை?” என்று மேலும் மேலும் அவனை தடுமாறச் செய்தாள்.

“இல்லை இல்லை…”

“அவாய்ட் பண்ணலாம். தப்பில்லை.” என்றுவிட்டு கோப்புகளில் பார்வை பதிக்க, சொல்வதறியது நின்றான் அகிலன்.

அவன் இன்னும் நகராது நிற்பதை உணர்ந்து தலை நிமிர்த்தியவள், “ஏதாவது சொல்லனுமா அகிலன்?” என்று கேட்க, அவன் தலை எல்லா பக்கமும் ஆடியது.

குழம்பி புருவம் உயர்த்தி, “எஸ் ஆர் நோ?” என்று பார்க்க, 

“நோ.” என்றிருந்தது அவன் இதழ்கள்.

“அப்போ கிளம்பலாமே…” என்று கதவு நோக்கி அவள் கையை நீட்ட, நெஞ்சை நீவிவிட்டபடி வெளியேறினான்.

அவன் வெளியேறியதும் தாராளமாய் புன்னகை ஒன்று அவளிதழில் வந்தமர்ந்து சம்மணமிட்டுக்கொண்டது. 

மறுநாள் விடியலில் சூப்புடன் வந்துவிட்டான் அகிலன். முதல் நாள் அவள் இயல்பாய் பேசிவிட்ட தைரியம் அவனை மீண்டும் சூப் வாங்க உசுப்பியிருக்க, தடுமாற்றமும் இருக்கத்தான் செய்தது. தயங்கித் தயங்கி வாசலில் இருந்தவாறே சூப்பை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் முகத்தைப் பார்க்க,

“ஜிம், உன் டயட் எல்லாம் எப்படி போகுது?” நேற்று போல் இன்றும் இயல்பாய் அவள் பேசிக்கொண்டே உள்ளே செல்ல, பதில் வராது அவன் நிழலையும் உணராது திரும்பிப்பார்த்தவள் அவன் வாசலியேயே நிற்பது கண்டு,

“ஏன் அங்கேயே நிக்குற? உள்ள வா.” என்று அழைக்க, தயக்கத்துடன் உள்ளே சென்றான்.

‘அன்று நான் சொன்னது ஒருவேலை இவங்க கேக்கலையோ?’ என்று யோசித்தவன் அவள் இருக்கையை காட்டிய பிறகே அமர்ந்தான்.

“ஆமா என்ன டயட் பாலோ பண்ற?” என்று கேட்டவள் முகத்தையே அவன் உற்றுப் பார்க்க, மெலிதாக சிரித்தவள், “என் முகத்துல அப்படி என்ன இருக்குனு வெறிச்சி வெறிச்சி பாக்குற?” என்று கேட்டுவிட, தெளிந்து சங்கடமாய் தெளிந்தான்.

“கேக்குறதுக்கு பதில் சொல்லாம பழிவாங்குறியோ?”  

“இல்லையில்லை… லோ கார்ப் டயட் பாலோ பண்ண சொன்னாங்க.” என்றான் பதட்டத்துடன்.

“பாலோ பண்றியா?”

மறுப்பாய் அசைந்தது சிரம், “கிடைக்குற நேரத்துல கிடைக்குறதை சாப்புட்டு வாழுற என்னால எப்படி அதை பாலோ பண்ண முடியும்?”

“என்ன கிடைச்சதை சாப்புடுறீயா? எவ்வளவு பேர் அதுகூட கிடைக்காம இருக்காங்க தெரியுமா. ஹோட்டல்ல தான சாப்புடுற, இப்போதான் டயட் மெனு ப்ரொவைட் பண்ற ஹோட்டல்ஸ் எல்லாம் வந்துடுச்சே. அங்க சாப்புட வேண்டியதுதான?”

“அவங்க சொல்ற டயட் எல்லாம் பட்ஜட்ல வராது மேடம். ப்ரோடீன் பவுடர் மட்டும் தான் வாங்குனேன் அதுக்கே என் சம்பளத்துல கொஞ்சம் துண்டு விழுந்துடுச்சு.” சற்று இயல்பாய் பேச்சு வந்தது அகிலனிடம்.

“டயட் சார்ட் கொடுத்திருக்காங்களா போன்ல இருக்கா?” என்று கேட்க, அவன் அலைபேசி எடுத்து நீட்டினான்.

அதில் இருந்ததை படித்துப் பார்த்தவள், “மார்னிங் சோக் பண்ணி சாப்புடற ஐட்டம் எல்லாமே நீ ரூம்ல வாங்கி ஊற வச்சி சாப்புடலாம். எப்போதும் சாப்புடுற கடையில அசைவம் எல்லாம் எண்ணெய் கம்மியா போட்டு செய்ய சொல்லி வாங்கி சாப்புடு. அண்ட் நைட்… வெஜ் சாலட் எல்லாம் காய்கறி வாங்கி வச்சி கட் பண்ணி சாப்புடலாம். இதுல என்ன கஷ்டம் உனக்கு?” 

“சொல்றதுக்கு ஈஸியா இருக்கும். சாப்புடும் போதுதான் கஷ்டம் புரியுது. ம்ச் இடையில பசிக்குது வேற. இதெல்லாம் என்னால முடியும்னு தோணல.”

“எல்லாம் முடியும். ஒரு பத்து நாள் இங்க வந்து சாப்புடு. வள்ளியை செய்ய சொல்றேன்.” என்றதும் அப்பட்டமாய் அதிர்ச்சி காட்டியது அவன் முகம்.

“புதுசா ஒரு விஷயத்தை மாத்தணும்னா ஒரு பத்து நாள் தம் கட்டி ட்ரை பண்ணாலே நம்மால பாதியை மாத்திக்க முடியும். எடுத்ததும் டயட் பாலோ பண்ணாம இருக்க இப்படி சாக்கு சொல்லி தள்ளிபோடுறதுக்கு பதில் இங்க கொஞ்ச நாள் சாப்புட்டு செட் ஆகிட்டு அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி வெளில செய்ய சொல்லி சாப்பிடு.” என்க,

‘நிஜமாதான் சொல்றாங்களா?’ என்று பார்த்தான் அகிலன். 

அவன் சந்தேகத்தை போக்கும் விதமாய் வள்ளியை அழைத்து அவனுக்கும் சேர்த்து காய்கறி சாலட் போல் செய்ய சொன்னாள்.

“ரெடி ஆகி வந்து இங்க சாப்புடு.” என்றுவிட்டு அவள் அலைபேசி பார்க்க, இவன்தான் அதிர்ந்து போனான்.

‘என்ன நடக்குது இங்க? நான் அன்னைக்கு சொன்னதை கேட்டுமா இவங்க இப்படி நடந்துக்குறாங்க?’ என்ற யோசனையில் இருந்தவனை அவளது கூர்பார்வை நெளிய வைக்க, உடனே சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான். 

அவள் நடவடிக்கை கலக்கத்துடன் குழப்பத்தையும் பரிசளிக்க, ஏதோ யோசனையிலேயே அனிச்சையாய் கிளம்பிக் கொண்டிருந்தவனை அதிசயமாய் பார்த்தான் சந்துரு. 

“என்னமோ வித்தியாசமா இருக்க? என்னடா விஷயம்?”

“…”

“சொல்லமாட்ட. வந்து தொலை.” என்ற சந்துரு வண்டியோட்ட பின் அமர்ந்திருந்த அகிலன், உணவகம் எதிரே வண்டி நிற்கவும்தான் தெளிந்தவனாய் சுற்றி முற்றி பார்த்தான். 

தொண்டை செறுமியவன், “நீ சாப்பிட்டு ஸ்டேஷன் போ. எனக்கு வேலை இருக்கு.” என்றவனாய் வண்டியை எடுக்க, செல்லும் அகிலனை விசித்திரமாய் பார்த்து நின்றான் சந்துரு.

பதற்றத்தோடு சேர்ந்த உல்லாசத்தை அனுபவித்தபடி அதிரா வீடு நோக்கி வண்டியை விரட்டினான். அவளுடன் சேர்ந்து உண்ணப் போகிறோம் என்ற கற்பனையே வெல்லப்பாகாய் இனித்தது. சிறகின்றி பறப்பது போல் அவனின் நாளங்கள் யாவும் கிளர்ந்து வேதியல் மாற்றம் நிகழ்த்த, வண்டியின் வேகமும் கூடியது. ஆனால் அனைத்தும் அவள் வீடு செல்லும் வரைதான். 

கேட்டிற்குள் நுழையும் போதே அவளது வாகனம் இல்லாததை கவனித்துவிட்டான். 

‘என்னை வரசொல்லிட்டு அவங்க கிளம்பிட்டாங்களா?’ சுணக்கத்துடனே உள்ளே நுழைய, வள்ளி இவனுக்காவே காத்திருந்தாள்.

“மேடம் கிளம்பிட்டாங்க. நீங்க சாப்டீங்கன்னா நானும் வீட்டை பூட்டிட்டு கிளம்பிடுவேன்.” என்று அவன் முகம் பார்த்து சொல்ல, ஏமாற்றத்துடனே உண்ணும் இடத்திற்கு சென்றான். 

நால்வர் அமர்ந்து உண்ணும் அளவு சிறிய மேசையில் இவனுக்கானதை எடுத்து வைத்த வள்ளி, ஒரு பையை அவனிடம் நகர்த்தி, “மதியத்துக்கு பேக் பண்ணிட்டேன்.” என்று சொல்ல, என்ன முயன்றும் வெளிப்படத் துடிக்கும் அதரங்களை அடக்கமுடியவில்லை அவனால். சிரித்து வைத்தது. வள்ளி அவனது பூரிப்பான முகத்தை சந்தேகத்துடன் பார்த்தவள் என் வேலை முடிந்துவிட்டது என்பது போல் தள்ளி நின்றுகொண்டாள்.

சிற்றுண்டி பிடிக்கவில்லை என்றாலும் அதிரா வீட்டில் உண்பதால் அமிர்தமாய் தொண்டையில் இறங்கியது. வேகமாய் உண்டு முடித்தவன் உண்டுவிட்டதாய் அதிராவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மதிய உணவையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். 

வயிறு நிரம்பியிருந்தாலும் நாவின் அரும்புகள் திருப்தியடையாததாய் வடையும் டீயும் கேட்க, வண்டியின் முன் மாட்டியிருக்கும் பையை அவ்வப்போது கவனத்தில் கொண்டுவந்து மனதை திசை திருப்பினான்.

காவல் நிலையம் வந்தவன் கையில் புதிதாய், புதிராய் ஒரு பை தென்பட அகிலன் அதனை மேசைக்கு கீழே வைக்கவும் விரைந்து வந்து அதை மேலே எடுத்தான் சந்துரு.

“என்னடா இது புதுசா? எங்க போய்ட்டு வர?” கேள்விகள் கேட்ட வண்ணம் அந்த பையை சந்துரு திறக்கப்போக, அவனை திறக்கவிடாமல் பிடித்துக்கொண்டான் அகிலன்.

“நான் திறக்கக்கூடாதா அப்படியென்ன ரகசியத்தை ஒளிச்சு வச்சிருக்க?” என்று பிடிவாதமாய் அகிலன் கையை உதறிவிட்டு சந்துரு பையிலிருந்தவற்றை எடுத்து வைத்தான்.

உணவு கேரியர் ஒன்றும் பழச்சாறு ஒன்றும் அதில் இருந்தது. அகிலனும் கூட ஆச்சர்யமாய் பார்த்தான்.

“என்னடா இது? எனக்குத் தெரியாம சாப்பாடெல்லாம் கட்டிட்டு வந்திருக்க?” என்று ஒவ்வொரு கேரியரை திறந்து பார்த்து இன்னும் அதிர்ந்தான்.

“இத்துனூண்டு சோறு போதுமா உனக்கு?” என்று கேட்ட சந்துருவிடமிருந்து கேரியரை பிடுங்கி மீண்டும் பையினுள் வைத்தவன், “இது டயட் சாப்பாடு. வெய்ட்டும் தொப்பையும் குறைக்கனும். இனிமே இப்படித்தான்.” என்று அதை கீழே வைக்க,

“எங்க வாங்குன?” என்று அடுத்த கேள்வி வந்தது.

“தெரிஞ்ச இடத்துல.” வேலை பார்ப்பது போல் பாவனை செய்துகொன்டே சொன்னான் அகிலன்.

சந்தேகமாய் பார்த்த சந்துரு, “எவ்வளவு?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு?”

“நானும் வாங்கலாம்னு தான் கேட்டேன்.”

பட்டென்று நண்பனை நிமிர்ந்து பார்த்த அகிலன், விழிகளை கூர்மையாக்கி, “உனக்கெதுக்கு?”

“நீ மட்டும்தான் வெய்ட் குறைப்பியா நானும் குறைப்பேன்.” என்று சந்துரு வீம்பாய் பேச, அவன் வயிற்றிலேயே கிள்ளுவது போல் விரல்களை வைத்த அகிலன், “கிள்ளுறதுக்கு கூட சதையில்லை உனக்கெதுக்கு டயட்?”

“பேச்சு நடவடிக்கை எதுவும் சரியில்லை. என்ன திருகுதாளம் பண்றேன்னு சீக்கிரம் கண்டுபுடிக்கிறேன்டா.” என்றபடி நகர்ந்தான் சந்துரு.

அவன் நகர்ந்ததும் அப்பாடா என்று மூச்சுவிட்டவன் அலைபேசி எடுத்து அதிரா பதில் செய்தி அனுப்பியிருக்கிறாளா என்று பார்த்தான். குறுஞ்செய்தியை பார்த்துவிட்டாள் என்பதற்கு அடையாளமாய் நீல டிக் விழுந்திருக்க, பதில் ஏதும் அனுப்பவில்லை அவள். உதட்டை பிதுக்கியவன் அன்றைய வேலையை மாலை நேரம் முடித்துக்கொண்டு அதிரா சொன்னதை விசாரிக்க சென்றான்.

மாணிக்கம் வீட்டினருகில் விசாரித்ததில் அதிரா சொன்னது போல் அவருக்கு விபத்து நடந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியாகியது. தன் முதல் வழக்கில் புதிய திருப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் இரவு நேரே அதிரா வீட்டிற்கு வண்டியை விட, சந்துரு அழைத்துவிட்டான்.

“என் டியூட்டி முடிஞ்சுடுச்சு. ரூமுக்கு போக வேண்டியதுதான். வண்டி எடுத்துட்டு எங்க போன?”

“நான் வர நேரமாகும். நீ ஆட்டோ இல்லைன்னா லிப்ட் கேட்டு போயிடு.”

“டேய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை. வண்டி என்னோடது ஆனா முக்காவாசி நேரம் நீதான் அதை வச்சி சுத்திட்டு இருக்க.”

“எனக்கு வேலை இருக்கு. டைம் வேஸ்ட் பண்ணாத. வைக்குறேன்.” அழைப்பை துண்டித்துவிட்டான் அகிலன். 

மறுபுறம் நண்பனை வசைபாடியபடி அறைக்கு சென்று சேர்ந்தான் சந்துரு. இங்கு அதிராவுக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தான் அகிலன். அரைமணி நேரம் சென்றுதான் அதிரா வந்தாள். வாசலில் அமர்ந்திருக்கும் அவனைப் பார்த்து சின்னதாக புன்னகைத்தவள் சாவியை அவனிடம் நீட்டி கதவை திறக்கச்சொல்ல, இவன் சிரத்தையாய் செய்தான்.

அதிராவும் சாவி வாங்கிவிட்டு ஓட்டுனரை அனுப்பி வைக்க, அவளது பையை தானே வந்து வாங்கி உள்ளே எடுத்துச் சென்றான் அகிலன். அதிரா ஆச்சர்யமாய் பார்க்க, அவன் பையிலிருந்த கேரியரையும் அவளதில் இருந்த கேரியரையும் எடுத்து கிட்சன் சிங்க்கில் வேறு போட்டு வர, அனைத்தையும் ஒருவித சுவாரசியத்துடன் பார்த்தாள் அதிரா.

“இன்னைக்கு மாணிக்கம் வீட்டுப்பக்கம் போய் விசாரிச்சிட்டு வந்தேன். நீங்க சொன்னமாதிரி அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி கால் உடைஞ்சிருக்கு.”

மெச்சுதலாய் பார்த்தவள், “ரைட் லெக்தானே?” என்று கேட்க, கண்களை மூடி நாக்கை கடித்தான் அகிலன்.

மெச்சுதல் பார்வை இடுங்கும் விதமாய் மாற, “தீர விசாரிக்கணும் அகிலன். ஒரு சின்ன விஷயத்தை கூட விடக்கூடாது. எதையும் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரு சின்ன துரும்பு கூட கேஸுக்கு துருப்பு சீட்டா இருக்கலாம். அடுத்த முறை இப்படி பொறுமையா சொல்லிட்டு இருக்க மாட்டேன்.”

தவறு செய்த பிள்ளையாக தலைகுனிந்தவன், “இனி கவனமா இருக்கேன்.” என்க, அவள் முகம் இளகியது.

சில நொடி அமைதிக்கு பின், “இன்னைக்கு புட் க்ரேவிங்ஸ் இருந்துச்சா?” 

“ம்ம்… அதில்லாமலா. ஸ்டேஷனை தாண்டும் போதெல்லாம் வடையும் பஜ்ஜியும் கட்டி இழுத்துச்சு. கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன்.” என்றான் ஏதோ சாதனை புரிந்த தொனியில்.

“குட். தினம் இப்படியே பாலோ பண்ணு.”

“கஷ்டம்தான்.” என்று இவன் முகம் சுருக்க, 

“இதைவிட கஷ்டமான விஷயம் ஒன்னு சொல்லவா?” என்று அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க, என்ன என்பது போல் பார்த்தான் அவன்.

“நைட் வள்ளி லீவ். எப்போதும் எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரவான்னு கேட்டுட்டே இருப்பியே. இன்னைக்கு ரெண்டு பேருக்கும் சேர்த்து நீதான் சமைக்கணும்.” என்றதும் நெஞ்சில் கைவைத்து விட்டான் அகிலன்.

“இதுதான் நிஜமான பழிவாங்கல்.” 

“கை நல்லாயிருந்தா நான் ஏன் உன்னை கேக்கபோறேன்.” என்று சொல்லிக்கொண்டே அவள் அறைக்குள் புகுந்து கொள்ள, இவன் யோசனையுடன் சோபாவில் அமர்ந்து யூடியூப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். டயட் உணவு செய்வது எப்படி என்று… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!