Skip to content
Post Views: 1,738

அகம் 12
இன்றைய மாலை நேரம் மெகந்தி நிகழ்ச்சியும் கொண்டாட்டமாக தான் ஆரம்பித்தது. இது வடக்கு பக்க சடங்கு என்றாலும், இதை இங்கு ஒரு நிகழ்ச்சியாக நடத்துவதால், வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து பெண்களும் சிறுவர்களும் அவர்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டனர்.
Advertisement
ராகவி அவள் கையில் மாதேஷின் பெயரை எழுதிக் கொள்ள, மாதேஷும் ராகவியின் பெயரை எழுதிக் கொள்வதற்காக மருதாணி இட்டுக் கொள்ளப் போவதாக கூறவும், அனைவரும் ஓ என்று கத்தி உற்சாக கூச்சலிட, ராகவி மாதேஷை காதலுடன் பார்த்தாள்.
Advertisement
நேற்றைய சம்பவத்தை ஓரளவுக்கு மறந்து நயந்தினி இன்றைய நிகழ்ச்சியில் கொஞ்சம் உற்சாகம் ஆகிவிட்டாள். அவளை அப்படி கண்டதில் நிகர்வேலனுக்கும் மகிழ்ச்சி. அவள் அங்கு இருந்ததால் அவனும் வேறு எந்த வேலையும் பார்க்காமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான். அவன் இருந்ததால் ரோஹனும் அங்கேயே இருக்க, “நீங்களும் மெகந்தி போட்டுக்கப் போறீங்களா? இல்லையில்ல, அப்புறம் எதுக்கு இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க?” என்று ராகவி காரணம் தெரிந்தும் வேண்டுமென்றே கேட்க,
Advertisement
“ஏன் நாங்கல்லாம் வச்சிக்கக் கூடாதா? பொண்ணுங்க நீங்க மட்டும் தான் மெகந்தி வச்சிக்கணுமா?” என்று ரோஹன் கேட்கவும்,
Advertisement
“அப்போ இவனுக்கு மெகந்தி போட்டு விடுங்க,” என்று நயந்தினி கூறினாள்.
அதற்கு ரோஹனோ, “ஆளை விடுங்கடா சாமி,” என்று பயந்தது போல் நடித்தான்.
நிகரோ, “நாங்க இங்க மாதேஷ்க்காக இருக்கோம், இத்தனை பொண்ணுங்க கூட அவரை எப்படி தனியா விட்டுட்டுப் போவோம்,” என்று காரணம் சொல்ல,
“ம்ம் நீங்க சொன்ன காரணத்தை நாங்க நம்பிட்டோம் நிகர்,” என்று ராகவி கூறினாள்.
இப்படியே கேலிப் பேச்சும் சிரிப்புமாக அவர்கள் இருந்த இடம் கலகலப்பாக இருக்க, கொஞ்சம் தொலவில் அமர்ந்திருந்த பேச்சியம்மாள் அதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தார். அவருடன் இன்னும் சில உறவுக்கார பெண்மணிகள் இருந்தனர். நீலவேணியும் கூட அங்கு தான் இருந்தார். இன்றைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விருந்து உணவுகள் சொன்னப்படி தயாராக இருக்கிறதா என்று சாகரியும் நளினியும் அங்கே சற்று தொலவில் பஃபே முறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இங்கே பேச்சியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு உறவுக்கார பெண்மணியோ, “அத்தை, நிகர் எப்போதும் பிஸியா இருப்பான். அவனை பார்க்கறதே கஷ்டம், ஆனா இந்த கல்யாணத்தில் அவனை எல்லா சடங்கிலும் பார்க்க முடியுது. அதிசயம் தான்,” என்று வியப்பாக சொல்லவும்,
“அவனுக்கு ராகவியை ரொம்ப பிடிக்கும், அத்தை பொண்ணா இருந்தாலும் அவளை தங்கையா தான் நினைக்கிறான். அவ கல்யாணத்தில் எல்லா சடங்கிலும் கலந்துக்கணும்னு நினைக்கிறான்.” என்று அதற்கு பேச்சியம்மாள் பதில் கூற,
“நிகர் எல்லா சடங்கிலும் கலந்துக்கிறது ராகவிக்காகன்னு எனக்கு தோனல, இது வேற யாருக்கோ மாதிரி தெரியுது பெரியம்மா,” என்று இன்னொரு உறவுக்கார பெண்மணி கூறினார்.
“என்ன நீ, என்னமோ பீடிகைப் போட்டு பேசற மாதிரி இருக்கு,” என்று பேச்சியம்மாள் அந்த பெண்மணியிடம் கேட்க,
“அன்னைக்கு பார்ட்டியில் பார்க்கும்போதே சந்தேகம் வந்துச்சு, உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்போல நினைச்சேன். அப்போ பார்த்தபோது ஏதோ வசதியான வீட்டு பொண்ணுன்னு தான் முதலில் நினைச்சேன். அதுக்குப்பிறகு தான் எனக்கும் விஷயம் தெரிஞ்சுது. உங்க அந்தஸ்துக்கு இப்படி ஒரு பொண்ணு பார்த்திருக்கீங்களேன்னு வியப்பாகவும் இருந்தது. சாகரி அக்காக்கு தெரிஞ்ச குடும்பம் என்பதால ஒத்துக்கிட்டீங்க போலன்னு நினைச்சேன். ஆனா இப்போ பார்த்தா உங்க யாருக்கும் விவரம் தெரியாது போலயே,” என்று அந்த பெண்மணி மறைமுகமாகவே பேசிக் கொண்டிருக்கவும்,
“எதுவா இருந்தாலும் பட்டுன்னு சொல்லு முத்து, என்ன விஷயம், பொண்ணு, அந்தஸ்துனு என்னென்னமோ பேசற,” என்று பேச்சியம்மாள் கோபப்பட்டார்.
“அதோ அங்க ராகவி பக்கத்தில் உட்கார்ந்திருக்க பொண்ணை தான் சொல்றேன். அவளுக்காக தான் நிகர் இங்கேயே சுத்திட்டு இருக்கறதா எனக்கு தோனுது. சாகரி அக்காக்கு அவங்க அம்மா ரொம்ப நெருக்கம் தானே, பார்த்தாலே தெரியுதே, இந்த பொண்ணை உங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க ஒத்துக்கிட்டீங்கன்னு நினைச்சேன்.” என்று நயந்தினியை காட்டி அந்த பெண்மணி கூறவும்,
“என்ன நீ விட்டா பேசிட்டேப் போற, நீயா ஏதாவது கதைக் கட்டி விடாத, எங்க நிகருக்கு தராதரம் பார்த்து பழக தெரியும், யாரோ ஒன்னுமில்லாத ஒருத்தியை கல்யாணம் கட்டிக்க அவன் நினைக்க மாட்டான் புரியுதா?” என்றார் பேச்சியம்மாள் கோபமாக,
“நான் சொன்னா நம்ப மாட்டீங்கன்னு தெரியும், இங்கப்பாருங்க இந்த போட்டோ காலையில் தான் வாட்ஸ் அப்க்கு வந்தது. யார் அனுப்பினாங்கன்னு தெரியல, ஆனா இதில் இருப்பது நம்ம நிகரும் அந்த பொண்ணும் தானே, நேத்து சங்கீத் நிகழ்ச்சியில் எடுத்தது போல,” என்று தனது அலைபேசியிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அந்த உறவுக்கார பெண்மணி காட்டினார். அதில் நிகர்வேலனின் அணைப்பில் நயந்தினி நின்றிருந்தாள்.
நேற்று நீச்சல் குளத்தின் அருகே அவளுக்கு ஆறுதல் கூற கட்டியணைத்தப்படி இருந்தபோது எடுத்த புகைப்படம் அது, அவினாஷ் தான் அதை எடுத்திருந்தான். நிகர்குழுமத்தின் வாரிசான நிகர்வேலன் மீது அவினாஷிற்கு எப்போதும் பொறாமை இருக்கும், இதில் அவினாஷை பெண்கள் விஷயமாக கண்டித்ததிலிருந்து ஒருவித வன்மமும் அவன் மனதிலிருந்தது. இதில் நேற்று தன்னை அடித்துவிட்ட நிகரை கொலை செய்யும் அளவிற்கு கோபம் இருந்தாலும், அந்தநேரம் ஒன்றும் செய்ய முடியாமல் அங்கிருந்து சென்றுவிட நினைத்த அவினாஷ், நிகர் அடித்ததில் கீழே விழுந்தபோது தனது பர்ஸ் எங்கேயோ விழுந்துவிடவும் அதை தேடி வந்தவன், அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து, சத்தமில்லாமல் அவர்களை புகைப்படம் எடுத்துவிட்டான்.
அதை எல்லோருக்கும் அனுப்பி நிகரை அசிங்கப்படுத்துவது தான் அவனது நோக்கம். ஆனால் தான் மாட்டிக் கொள்ள கூடும் என்ற பயத்தில் இதை யாருக்கு அனுப்புவது என்று அவன் யோசித்தான்.
இப்போது பேசிய உறவுக்கார பெண்மணியோ அன்று பார்ட்டியில் நிகர்வேலனும் நயந்தினியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து, “யார் இந்த பொண்ணு, நிகரோட நின்னுப் பேசிட்டு இருக்கா? இவள் தான் நாகராஜன் பெரியப்பா வீட்டுக்கு வருங்கால மருமகளோ என்பதுபோல் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அடுத்தவர் வீட்டு விஷயம் பேசுவதென்றால் அவருக்கு மிகவும் ஆர்வம் என்பது அவினாஷிற்கு நன்றாகவே தெரியும்,
அவர் பேசியதில் தான் அவன் நயந்தினியை கவனிக்க ஆரம்பித்தான். முன்னே ராகவி வீட்டில் அவளை சின்ன பெண்ணாக பார்த்தது. இப்போது அழகு பதுமையாக காட்சியளிப்பவளை கண்டு மயங்கிப் போனவன், தானாக அவளிடம் சென்று பேசினான். அவளும் பேச்சுக் கொடுத்தவள், பின் தன்னை கண்டுக் கொள்ளாததும் மது போதையும் தான் அவளிடம் அப்படி நடந்து கொள்ள வைத்தது.
இப்போது இருவரையும் அசிங்கப்படுத்தி பழிவாங்கும் எண்ணம் கொண்டவன், அந்த பெண்மணிக்கு வேறொரு எண்ணிலிருந்து அந்த புகைப்படத்தை அனுப்பினான். அவருக்கு அனுப்பிவிட்டால் போதும் அவர் அதைவைத்து ஏதாவது பிரச்சனை உருவாக்குவார் என்று நினைத்தான். அவன் நினைத்தது போலவே பேச்சியம்மாளிடமே நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார் அந்த உறவுக்கார பெண்மணி.
அந்த புகைப்படத்தைப் பார்த்த பேச்சியம்மாள் உள்ளுக்குள் கொதித்துப் போய்விட்டார். நீலவேணி அவரிடமிருந்து வாங்கி அதைப்பார்த்து அதிர்ந்தவர், “நான் அப்பவே சொன்னேனே யாராவது கேட்டீங்களா? அதுக்குத்தான் ஆள் தராதரம் பார்த்து பழகணும்னு சொல்வாங்க, நகை நட்டுக்கு ஆசைப்படுவாங்கன்னு பார்த்தா, பொண்ணை நம்ம நிகர் தம்பியோட பழகவிட்டு மொத்த சொத்தையும் வளைச்சு போட திட்டம் போட்டிருக்காங்க போல, பலே பொம்பளையா தான் இருக்காங்க, செலவே இல்லாம பொண்ணுங்களை கட்டிக் கொடுக்கும் வழி போல, அதான் பேச்சுக்கு கூப்பிட்டதும் 3 பொண்ணுங்களையும் கூட்டிக்கிட்டு பத்து நாள் முன்னயே வந்துட்டாங்கப் போல,” என்று பேச்சியம்மாளின் கோபத்திற்கு தூபம் போட்டார்.
உடன் இருந்த உறவுக்கார பெண்மணியோ, “அதான் பாருங்களேன். எப்படியெல்லாம் இருக்காங்க,” என்றவர்,
‘இப்போ என்ன செய்யப் போறீங்க பெரியம்மா,” என்று கேட்டார்.
பேச்சியம்மாள் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருக்க, அந்தநேரம் பார்த்து நளினியோ அன்று விருந்திற்கு செய்த இனிப்பை கொண்டு வந்தவர், “அம்மா உங்களுக்கு பாசுந்தி ரொம்ப பிடிக்குமாமே, இன்னைக்கு இதுதான் ஸ்பெஷல் எடுத்துக்கோங்க,” என்று கொண்டு வந்ததை நீட்டியவர்,
உடன் இருந்தவர்களிடம், “நீங்களும் எடுத்துக்கோங்க,” என்றார். பேச்சியம்மாவிற்கு கொண்டு வந்து கொடுப்பதில் அவருக்கு விருப்பமே இல்லை. ஆனால் சாகரி சொல்லவே கொண்டு வந்தார்.
அவர் நீட்டிய இனிப்பை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. பேச்சியம்மாளோ நளினியை முறைத்தப்படி இருக்க, “என்ன நினைச்சதை சாதிச்சதுக்கு இனிப்பா?” என்று நீலவேணி கேட்டார்.
நளினி அவரை புரியாத பார்வை பார்க்க, “இவளை சொல்லி என்ன, என் மகளை சொல்லணும், ஃப்ரண்ட்னு இவளுக்கு அதிக இடம் கொடுத்ததுக்கு இவ புத்தியை காட்டிட்டால்ல, அதுக்குத்தான் தராதரம் பார்த்து பழகணும்,” என்று பேச்சியம்மாளும் பேச,
இன்னுமே இங்கு நடப்பதை புரிந்து கொள்ள முடியாமல் நளினி அதிர்ச்சியோடு நின்றிருக்கவும், “இந்த ஸ்வீட் ஒன்னு தான் இப்போ குறைச்சல்,” என்று சொல்லி நளினி கையில் வைத்திருந்த இனிப்பை வேகமாக தட்டிவிட்டார் அவர்,
அந்த செயலில் நளினி மிகவும் அவமானமாக உணர, பேச்சியம்மாள் கத்தி பேசியதும், அவர் இனிப்பை தட்டி விட்டதில் கேட்ட சத்தத்திலும் சாகரி பதறி அங்கு வர, நிகர், ராகவி, நயந்தினி, ரோஹன், மொழி, மதி, மாதேஷ் இவர்களும் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். மொத்தமாக்ஃ அங்கு கூட்டமே கூடிவிட்டது.
சாகரியோ, “என்னாச்சு நளினி?” என்று தோழியிடம் கேட்க,
“என்னென்னு தெரியல சாகரி. என்னென்னமோ சம்பந்தமில்லாம ரொம்ப மோசமா பேசறாங்க உங்க அம்மா,” என்றார் நளினி.
“அம்மா என்னம்மா அப்பாவி மாதிரி நடிக்கறீங்க, உணமையில் எங்க அண்ணி தான் அப்பாவி. அதான் உங்க நடிப்பு அவங்களுக்கு புரியல,” என்று நீலவேணி பேச,
“அண்ணி, பார்த்து பேசுங்க, எதுக்கு நளினியை தேவையில்லாம பேசறீங்க,” என்று சாகரி கேட்கவும்,
“அவ பேசினதில் என்ன தப்பு, உனக்கு தான் இவளோட் சுயரூபம் புரியல, இவளை வைக்க வேண்டிய இடத்தில் வச்சிருக்கணும், அதைவிட்டு அதிக இடம் கொடுத்த, இப்போ இவளோட புத்தியை காட்டிட்டால்ல,” என்று பேச்சியம்மாள் பேசியதில், நளினி கூனி குறுகிப் போனார்.
அன்னையை அவர்கள் மோசமாக பேசுவதை அதிர்ச்சியோடு பார்த்தப்படி நயந்தினி நின்றிருக்க, மதியும் மொழியும் அன்னையின் அருகே போய் நின்று கொண்டவர்கள், “எங்க அம்மா நீங்க சொல்ற மாதிரியெல்லாம் கிடையாது. ஏன் அவங்களை மோசமா பேசறீங்க,” என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்கள்.
அதற்கு நீலவேணியோ, “உன் திட்டத்துக்கு ஒரு பொண்ணை ட்ரெயினிங் செய்திருக்கன்னு நினைச்சேன். இந்த வயசுல இந்த பொண்ணுங்களையும் ட்ரெயின் செய்ய ஆரம்பிச்சிட்ட போல, எல்லோருக்கும் உன்னைப்பத்தி தெரிஞ்சிடுச்சுன்னு நீயே அமைதியா நின்னுட்டு இருக்க, இதுங்க பதில் பேசுதுங்க,” என்று பேசவும்,
அவர்கள் எதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று புரியவில்லையென்றாலும், “என் பொண்ணுங்களை எதுக்கு பேசறீங்க, நீங்க இப்படியெல்லாம் பேசினா அமைதியா இருப்பேன்னு நினைச்சுக்காதீங்க,” என்று நளினி கோபப்பட,
“நீ பிழைக்கும் பிழைப்புக்கு ரோஷம் வேற வருதா?” என்று பேச்சியம்மாள் பதில் பேசினார்.
“அம்மா என்னம்மா இப்படியெல்லாம் பேசறிங்க, இப்படி பேசற அளவுக்கு நளினியும் அவ பொண்ணுங்களும் என்ன செய்தாங்க,” என்று சாகரி கேட்க,
அதுவரைக்கும் நடப்பது புரியாமல் பார்த்திருந்த நிகர்வேலனோ, “அதானே பாட்டி, நம்ம விருந்தாளியா வந்தவங்களை இப்படித்தான் பேசறதா?” என்று கேட்டான்.
அதற்கு பேச்சியம்மாளோ, “என்ன இவங்களை சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கா, அந்த அளவு ஆகிப் போச்சா, இவங்களிடம் எதைப் பார்த்து மயங்கின டா நீ. நம்ம அந்தஸ்து என்ன? அதுக்கும் கொஞ்சம் கூட ஒத்து வராத இந்த வீட்டில் போய், ஏன் டா உனக்கு இப்படி புத்தி போகுது.” என்ற பேச்சியம்மா,
“இதில் உன்னை குத்தம் சொல்ல முடியாது. எல்லாம் இவளுங்களை சொல்லணும், என்ன சொக்குபொடி போட்டாளுங்களோ,” என்று புலம்ப ஆரம்பிக்கவும்,
இங்கு பிரச்சனை ஆரம்பிக்கும்போதே ரோஹன் தன் தந்தைக்கும் மாமாவிற்கும் அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்களுடன் நாகராஜனும் இருக்க, மூவரும் உடனே அங்கு வந்துவிட்டனர்.
அவர்கள் அங்கு வரும்போது பேச்சியம்மாள் புலம்பிக் கொண்டிருக்க, “என்ன விஷயம்?” என்று சேகரன் கேட்கவும்,
“தெரியல ண்ணா, அம்மா திடீர்னு நளினியை மோசமா பேசறாங்க, எதுக்குன்னே தெரியல,” என்று சாகரி அதற்கு பதில் கூற,
“இதோ இருக்காங்களே இவங்க பொண்ணை நம்ம நிகர் தம்பியோட பழகவிட்டு சொத்தை வளைச்சு போடப் பார்க்கிறாங்க, அதுக்கு தான் அத்தை புலம்பறாங்க,” என்று நீலவேணி நளினியை காட்டி விவரத்தைக் கூறவும், அவர்கள் வைத்த குற்றச்சாட்டில் நளினி அதிர்ந்து போய்விட்டார். நயந்தினியும் அவர்கள் பேசுவது புரியாமல் விழிக்க,
“எதுக்கு இப்படி அபாண்டமா பேசறீங்க,” என்று நீலவேணியை கேட்ட நிகர்வேலன்.
“இவங்க சொன்னதுக்கா பாட்டி நீங்களும் இவங்களை இப்படி மோசமா பேசறீங்க,” என்று பேச்சியம்மாளை கேட்டான்.
அதற்கு நீலவேணியோ, “நாங்க ஒன்னும் அபாண்டமா பேசல, இதோ இந்த போட்டோவை பார்த்து தான் பேசறோம்,” என்றவர்,
“அந்த போட்டோவை காட்டு முத்து,” என்று உறவுக்கார பெண்மணியிடம் கூற,
“இன்னைக்கு காலையில் தான் இந்த போட்டோ எனக்கு வாட்ஸ் அப்ல வந்தது. யாரு அனுப்பினா தெரியல, ஆனா இதில் இருப்பது நிகரும் இந்த பொண்ணும் தானே, அதைத்தான் நான் பெரியம்மாவிடம் காட்டினேன்.” என்று அந்த பெண்மணி புகைப்படத்தை காட்டவும், அதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க,
நளினியோ அருகில் இருந்த நயந்தினி கன்னத்தில் பளாரென்று ஒரு அறை வைக்கு, நிகர்வேலனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அந்தநேரம் அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
“வரமாட்டேன்னு சொன்னவளை கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு நல்லப் பெயர் வாங்கிக் கொடுத்துட்ட,” என்ற நளினி அவளை திரும்ப அடிக்கப் போக
“இரு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம எதுக்கு பிள்ளையை அடிக்கிற,” என்று சாகரி அவரை தடுத்தார்.
சேகரனும், “இதில் ரெண்டுப்பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்க, அப்படியிருக்க இந்த பொண்ணை மட்டும் அடிக்கறதில் நியாயம் இல்லம்மா,” என்றவர்,
“நிகர் என்னடா இது?” என்று மகனை கேட்டார்.
அதற்கு பேச்சியம்மாளோ, “நம்ம பிள்ளை மேல தப்பிருக்காது. வயசு பையனிடம் வந்து இவ தான் பேசி மயக்கியிருப்பா, அதான் நம்ம பிள்ளையும் மய்ங்கிட்டான். இதுங்களை முதலில் இங்க இருந்து துரத்தி விடுங்க,” என்று மிகவுமே மோசமாக பேசவும்,
“பேச்சி, வார்த்தையை யோசிச்சு விடு, என்ன பேச்சு இதெல்லாம், ஆரம்பத்தில் நீ பேசும்போதே கண்டிச்சிருக்கணும், விட்டதுக்கு ரொம்ப மோசமா பேசற, என்ன இதெல்லாம்?” என்று நாகராஜன் மனைவியை கண்டித்தார். பேச்சியம்மாளும் அதற்குப்பிறகு வாயை திறக்கவில்லை.
நிகர்வேலனோ, “விஷயம் என்னன்னு தெரியாம பேசாதீங்க பாட்டி, இந்த போட்டோ நேத்து ஸ்விம்மிங் பூல் கிட்ட எடுத்தது. இதை கண்டிப்பா அவினாஷ் தான் எடுத்திருப்பான். அவன் மோசமான காரியம் செய்ய துணிஞ்சிட்டு, இப்போ இப்படி ஒரு போட்டோவை எடுத்து அதை வச்சு புது பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறான். ராகவி கல்யாணம் நல்லப்படியா நடக்கணும்னு அவனை சும்மா விட்டது தான் தப்பா போச்சு,” என்று கோப்பட,
“நல்லா இருக்கே கதை, நீங்க கட்டிப்பிடிச்சு நிற்கறதுக்கு என் மகனை காரணம் காட்றீங்க, அவன் என்ன செய்தான்?” என்று நீலவேணி மகனுக்காக பேசவும்,
“உங்க மகன் என்ன செய்தான்னா கேட்கறீங்க, அவன் செஞ்சதை வெளியில் சொல்லவே அசிங்கமா இருக்கு, அப்படியே நல்ல மகனை பெத்துட்ட மாதிரி பெருமை படாதீங்க,” என்ற நிகர்வேலன்,
“நேத்து அவினாஷ் என்ன செய்தான்னு தெரியுமா ப்பா, நேத்து சங்கீத் நிகழ்ச்சி பாட்டு சத்தத்தில் பேச முடியாதுன்னு ஸ்விம்மிங் பூல்க்கிட்ட போய் நயந்தினி போன் பேச போயிருக்கா, அவ அங்க போனது தெரிஞ்சு அவளிடம் அவினாஷ் மிஸ்பிகேவ் செய்ய முயற்சி செய்தான். சரியான நேரத்துக்கு நான் போனேன். இல்ல என்ன விபரீதம் நடந்திருக்கும்னு தெரியாது. அவன் குடிச்சிருந்தான் வேற, ராகவி கல்யாணத்தில் எதுவும் பிரச்சனை ஆகக் கூடாதுன்னு அடிச்சு துரத்திட்டேன். அந்தநேரம் பயத்தில் உடல் நடுங்க நயந்தினி நின்னுட்டு இருக்கவும், அவளை அணைச்சு ஆறுதல் சொன்னேன். இதை இவ்வளவு பெரிய விஷயமா ஆக்கறீங்க,
நம்ம வீட்டு கல்யாணத்தில் கலந்துக்க வந்த பொண்ணுக்கு இங்க ஒரு விபரீதம் நடக்க இருந்ததுக்கே நாம தான் பொறுப்பு ஏத்துக்கணும், இதில் அந்த பொண்ணையும் அவங்க குடும்பத்தையும் தப்பா பேசும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” என்று கோபப்பட்டான்.
“இல்லை இதை நம்பமாட்டேன். நடந்த விஷயத்தை திசை திருப்ப என் மகன் மீது நிகர் பழி போட்றான். அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா நேத்தே எல்லோரிடம் சொல்லியிருக்க வேண்டியது தானே, நிகர்க்கு எப்போதும் என் மகனை கண்டா ஆகாது. அதான் இப்படியெல்லாம் பழி போட்றான்.” என்று நீலவேணி கூற,
“உங்க மகனை ஏன் எனக்கு பிடிக்காம போகணும், அவனோட கேரக்டர் சரியில்லன்னு தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிட்டு இருப்பேன். ஆனா கல்யாண வீட்டிலேயே இப்படி நடந்துப்பான்னு நான் நினைக்கவேயில்லை. உங்க மகன் அப்படியே சொக்க தங்கம்னு பேசறீங்களே, அவன் எதுவும் செய்யலன்னா இப்போ இந்த நேரத்துக்கு இங்க இருக்கணுமே? எங்க கூப்பிடுங்க,” என்று அவன் கேட்டதும்,
மகனைப் பற்றியும் தெரியும், காலையிலிருந்து அவன் இங்கு இல்லை என்பதும் தெரியும், அதனால் நீலவேணி பதில் பேச முடியாமல் திணர, “அவினாஷ் பத்தி தெரியாததா? தெரிஞ்சும் அவனுக்கு பரிஞ்சு பேசிட்டு வர, எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு கல்யாணத்தில் வந்து இப்படி ஒரு காரியம் செய்ய துணிஞ்சிருப்பான். நேத்தே எனக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா நானே அவனை உண்டு இல்லைன்னு செய்திருப்பேன். இப்படி ஒரு மகனை பெத்துட்டு நீ அதிகமா பேசற நீலா, கல்யாணம் முடியட்டும் அப்புறம் தான் இருக்கு அவனுக்கு,” என்று கார்மேகன் கோபப்பட்டார்.
அந்த உறவுக்கார பெண்மணியோ, “நீ சொன்னமாதிரியே நடந்திருக்கட்டும், அதுக்காக அந்த பொண்ணை கட்டிப்பிடிச்சிக்கிட்டு நிற்கணும்னு ஏதாவது இருக்கா? உங்களுக்குள்ள எதுவும் இல்லாம இப்படி நிற்க முடியுமா?” என்று கேட்க,
“என்ன பேசறீங்க, அதான் சொன்னேனே, நான் அங்க போகலன்னா பெருசா விபரீதம் நடந்திருக்கும், அந்த நேர பயத்தில் நடுக்கத்தோட நின்றிருந்தவளை ஆதரவா அணைச்சேன். அவளும் அந்தநேரம் ஒரு ஆதரவு தேவைப்படவும் என்னை அணைச்சிக்கிட்டா இதில் எந்த தப்பும் இருக்கறதா எனக்கு தெரியல,” என்று நிகர்வேலன் விளக்கம் அளிக்கவும்,
“அதானே அதில் என்ன தப்பு இருக்கு?” என்று ராகவி கேட்க,
“எனக்கும் இது தப்பா தெரியல,” என்று ரோஹனும் கூறினான்.
“சரி இதோட இதை பெரிசுப்படுத்தாம விட்டிடுவோம், என்ன நடந்ததுன்னு அதான் நிகர் விளக்கம் சொல்லிட்டானே, இதுக்கு மேலேயும் இதை தப்பா பேசக் கூடாது.” என்று நாகராஜன் கூறினார்.
“நிகர், இந்த போட்டோவை அவினாஷ் வேற யாருக்கெல்லாம் அனுப்பியிருக்கான் பாத்து இது நிறைய பேருக்கு போகாம் இருக்கமாதிரி பார்த்துக்கோ,” என்று சேகரன் மகனுக்கு உத்தரவு போட்டவர்,
பின் நளினியை பார்த்து, “எங்க பக்கம் ரொம்பவே மோசமா பேசிட்டாங்க, அவங்க சார்பா நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ம்மா,” என்று நளினியிடம் மன்னிப்பு கேட்க,
நளினி அதற்கு எந்த பதிலும் பேசவில்லை. அந்த அளவுக்கு நடந்த விஷயத்தில் அவர் காயப்பட்டிருந்தார். அதற்குமேல் அங்கு நிற்கவும் அவருக்கு மனமில்லாததால் அவர் அங்கிருந்து செல்ல, மூன்று பெண்களும் அவரின் பின்னால் சென்றனர். நிகர்வேலனால் அதை மௌனமாக பார்த்திருக்க மட்டுமே முடிந்தது.
அகம் சேர்வான்…
error: Content is protected !!