Skip to content
Post Views: 7,084
அத்தியாயம் – 2
ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த குப்பை மேடு நச்சுக்களின் சேர்க்கையினால் பற்றி எரிய, திகுதிகுவென வெளியேறிய புகை அம்மண்டலம் முழுதையும் நிறைத்து சுவாசிக்க ஏதுவான சுத்தமான காற்றை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தது.
தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைக்கப் போராட, சுற்று வட்டாரத்தை தன் நச்சு வாயுவால் சூழந்துகொண்ட தீ அணைவேனா என்று போக்கு காட்டியது.
“மணி பத்தாக போகுது. இன்னும் என்ன சார் பண்றீங்க?” என்று கறார் பிடித்தார் அந்த பகுதியின் தலைமை வருவாய்த்துறை அதிகாரி ரமேஷ்.
Advertisement
காலை ஏழு மணி அளவில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்று தகவல் வர, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை திணறிக்கொண்டிருக்கிறது.
“எதோ கேஸ்(வாயு) இருக்கு சார் அதான் அணைய விடாம திரும்ப திரும்ப பத்தி எரியுது.” என்றார் முழு கவசத்துடன் இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர்.
“பல வருஷமா இந்த குப்பை க்ளியர் பண்ணாம கிடக்கு. எந்த பொந்துல எந்த பாம்பு இருக்கோங்குற மாதிரி தான். எதனால எரியுதுனு கண்டுபுடிச்சு சீக்கிரம் கிளியர் பண்ணுங்க.” என்றவர் சைரன் சத்தத்துடன் சரேலென சீறிப்பாய்ந்து வந்து நின்ற காரை உற்றுப் பார்த்தார்.
Advertisement
அந்த சரகத்தின் காவல் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர், வார்டு கவுன்சிலர் என்று சம்மந்தப்பட்ட துறை தலைமைகள் ஏற்கனவே அவ்விடத்தில் குழுமி முகாமிட்டிருக்க, இப்போது வந்திருப்பது யார் என்று அவர் யோசிக்கவே அவசியமின்றி காரின் முன்பக்கம் மாவட்ட ஆட்சியர் என்ற பலகையை தாங்கி நிற்க, வேகமாய் ஓடிச் சென்று ஆட்சியரை வரவேற்றார் ரமேஷ்.
Advertisement
“ஃபுல் டீம் இறக்கியாச்சு சார். எல்லாம் கொஞ்ச நேரத்துல கிளியர் ஆகிடும்.” என்றவருக்கு ஒரு தலையசைப்பை கொடுத்த ஆட்சியர் குப்பை மேட்டை நெருங்கி ஏறெடுத்து பார்த்தார்.
வானோக்கி கொழுந்துவிட்டு எரியும் தழல் கரும் புகையை கக்கிய வண்ணம் தன் ஆவேசத்தை காட்டிக்கொண்டிருக்க, நூறடிக்கு சேர்ந்திருந்த குப்பையை அதிருப்தியாய் பார்த்தார்.
“ஐ நீட் திஸ் பிளேஸ் டூ பீ க்ளியர்ட் அட் தி எண்ட்.” ரமேஷிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றொரு சைரன் வைத்த கார் வந்து நிற்க, வேகமாக அதிலிருந்து இறங்கி வந்து ஆட்சியருக்கு சல்யூட்டு வைத்தாள் அதிரா.
Advertisement
“லுக் இண்டூ திஸ் இஸ்யூ. இட் டஸின்ட் சீம் சேஃப்.” என்றவர் கிளம்பிவிட, தொப்பியை கழட்டி தன் முழு உயரத்திற்கு நின்றவள் அண்ணாந்து பார்க்க, அந்த கரும் புகை இப்போது காற்று வீசும் திசைக்கு ஏற்ப அதோடு சேர்ந்து பயணித்து சற்று தள்ளி இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும் நுழைந்தது.
“சார், என்னென்ன மெஷர்ஸ் எடுத்திருக்கீங்க. நிலைமை கை மீறி போற மாதிரி இருக்கு. வீ நீட் டூ பீ க்விக்.” என்றவள் அங்கிருந்த குழுக்களின் தலைமை அதிகாரிகளை ஒன்றாக கூட்டினாள்.
“காத்து அடிக்கிற வாட்டத்துக்கு ஸ்மோக் ரெசிடென்ஷியல் ஏரியா பக்கம் போகுது. இப்போ இதை கட்டுப்படுத்தலைனா வீ வில் பேஸ் சீரியஸ் ரிபர்க்கஷன்ஸ்.” என்றவளை ரமேஷ் புரியாமல் பார்க்க, நெற்றியை தேய்த்துக்கொண்டவள், தீயணைப்பு அதிகாரியிடம் திரும்பினாள்.
“ஏன் இவ்ளோ நேரம் ஆகுது?”
“நம்ம அணைக்க அணைக்க குப்பையோட மையத்துலேந்து புகஞ்சி திரும்ப புடிச்சிக்குது. சோ சென்டர் பார்ட்டுல இருக்குற தீயை அணைச்சாதான் இதை கண்ட்ரோல் பண்ண முடியும்.”
“அப்போ அதுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க சார். மேம் சொன்ன மாதிரி வீடுகள்ல இருக்குறவங்க இதை சுவாசிச்சா என்னென்ன பிரச்சனை வருமோ.” என்று கவலையாய் பார்த்தார் கவுன்சிலர்.
“நுரையீரல் சுவாச பிரச்சனை மட்டுமில்லை இந்த புகை இரத்தத்துல கலக்கவும் வாய்ப்பிருக்கு. மக்குற குப்பை மக்காத குப்பைன்னு தனியா பிரிக்காததுனால ஏகப்பட்ட கேஸ் காத்துல கலந்திருக்கு. சிலது கார்ஸினோஜெனிக், புற்றுநோய் உருவாக்குற தன்மையா மாறுறதுக்கும் வாய்ப்பிருக்கு.” என்றார் மற்றொரு அதிகாரி.
அதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரிய, வேகமாய் களமிறங்க திட்டம் வகுத்தனர். அதிக கொள்ளளவும் உயரமும் கொண்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டன.
மாஸ்க் வரவழைத்த ரமேஷ் அனைவருக்கும் விநியோகிக்க சொல்ல, மாஸ்க்கை அணிந்துவிட்டு கைகட்டி நின்று தீயணைப்பு நடவடிக்கைகளை கண்காணித்த அதிரா,
“இது நார்மல் ஃபையரா இல்லை திட்டமிட்டு யாராவது செஞ்சிருப்பாங்கன்னு நினைக்குறீங்களா? எனி ஐடியா?” என்று அருகில் நின்றிருந்த ஏரியா இன்ஸ்பெக்டரை விசாரித்தாள். அவர் தெரியவில்லை இனிதான் விசாரிக்க வேண்டும் என்றார்.
இன்றோடு அவள் இந்த மாவட்டத்திற்கு எஸ்.பி (சூப்பரின்டென்ட் ஆப் போலீஸ்) ஆக மாற்றலாகி வந்து சேர்ந்து நான்கு நாட்கள் முடிந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஊரின் பரப்பளவை, அதன் தனித்துவங்களை, அதன் பெருமைகளை, அதன் எல்லைகளை, அதன் இருண்ட பக்கங்களை விசாரித்து தெரிந்து கொண்டிருக்கும் நேரம்தான் இந்த தீ விபத்து நிகழ, சற்று நேரத்திலேயே இந்த விஷயம் பரபரப்பாகிவிட்டது.
சுற்றியுள்ள பல ஊர்களின் மொத்த கழிவுகளும் கொட்டப்படும் ஒரே இடம் என்பதோடு சென்னைக்கு மிக அருகே இருப்பதாலும் இன்னும் ஓராண்டில் இதன் அருகில் மத்திய அரசின் முக்கிய திட்டமொன்று வர வாய்ப்பிருப்பதாலும் இந்த விபத்து முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அதன் வீரியம் உணர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முடுக்கிவிட்டாள் அதிரா.
“தேவைப்பட்டா பக்கத்துல இருக்குற மக்களை பயமுறுத்தாம அப்புறப்படுத்துங்க. இந்த ஸ்மோக் எல்லாம் சரியானதும் திரும்ப எல்லாம் இயல்புக்கு வந்துரும்னு நம்பிக்கை கொடுங்க. கேஸுவாலிட்ஸ் வராம பாத்துக்கணும்.” என்ற அவளின் கட்டளைகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
நேரமாக நேரமாக சுட்டெரிக்கும் சூரியன் சோர்வடைய வைக்க, புகை குறைந்தபாடில்லை. ஊடகங்களும் சூழ்ந்துவிட, எரிச்சலாய் தலையாட்டியவள் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து பழச்சாறு எடுத்து வரச்சொல்லி பருகினாள்.
“சுத்தி இருக்குறவங்களை எவாக்குவேட் பண்ண ஸ்டார்ட் பண்ணியாச்சு. மேலிடத்துலேந்து பிரஷர், மீடியாவை சமாளிக்க சொல்லி.” என்று வந்த ரமேஷை ஆமோதிக்கும் விதமாய் பார்த்தவள்,
“எனக்கும் கால்ஸ் வந்துச்சு சார். ஏதாவது ஒரு பக்கம் தீயை அணைச்சதும் மீடியாகிட்ட பேசுனா அவங்க வாயை அடைக்கலாம். இல்லைனா மக்களை பயமுறுத்திடுவாங்க.”
“இப்போ மட்டும் பயமுறுத்தாமலா இருக்காங்க. ஆல்ரெடி பிரேக்கிங் நியூஸ்ல கிழிச்சிட்டு இருக்காங்க.”
“கிழிக்கட்டும் சார். அடுத்த பிரேக்கிங் நியூஸ் வந்தா இதை மறந்துடுவாங்க. ஆனா பூசி மொழுகி பேசுற அரைகுறை உண்மை ஆபத்தானது சார்.”
“உங்களை யாரும் பூசி மொழுக சொல்லல மேம். நாம எடுத்துட்டு இருக்குற மெஷர்ஷ மக்களுக்கு சொல்லி நம்பிக்கை கொடுக்கணும். நம்ம வேலையை நாம கரெக்ட்டா செய்யுறோம்னு நிரூபிக்க வேண்டிய நிலைமையில இருக்கோம்.” என்றார் ரமேஷ்.
“நாம வேலை செய்றோம்னு செயல்ல காட்டுனா போதும் சார்.” என்றாள் அதிரா.
“நீங்க ஒன்னும் பேச வேணாம். வந்து நில்லுங்க, நான் ஹாண்டில் பண்ணிக்குறேன். உங்களோட பிரசென்ஸ் முக்கியம்.” என்று சிடுசிடுக்கவே செய்தார் மனிதர். எப்போதும் மேலிருந்து வரும் கட்டளைகளுக்கு உடன் படிந்தே சென்றவருக்கு அதிராவின் பேச்சுக்கள் நடைமுறைக்கு சாத்தியமற்ற வியாக்கியானங்களாக தோன்றியது.
நெற்றியை தேய்த்துக்கொண்ட அதிரா அழுத்தமாய் காலூன்றி நிற்க,
‘சின்ன வயசுல படிச்சு பாஸ் பண்ணி போஸ்டிங் வாங்கிட வேண்டியது, பெரிய பிரச்சனைன்னு வந்தா எப்படி ஹாண்டில் பண்ணனும்னு பிராக்டிகல் நாலெட்ஜ் சுத்தமா கிடையாது. உப்புக்கு பெறாத கொள்கை, நேர்மைனு தூக்கிட்டு வந்துட வேண்டியது.’ என்று முணுமுணுத்துவிட்டு நகர்ந்தார் ரமேஷ்.
அவரின் பேச்சு அவளை உசுப்பிவிட பல்லை கடித்தவள், “நீங்க என்ன சொன்னாலும் எரியுற தீயில எண்ணெய் ஊத்துற மாதிரியான ஹெட்லைன்ஸ் தான் சேனல்ல வரும். பிகாஸ், பத்திரிக்கை துறை எப்போவோ வியாபாரமாவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் மாறிடுச்சு. நீங்க என்ன சொன்னாலும் அவங்கவங்க கட்சிக்கு சாதகமாதான் அவங்க நியூஸ் சேனல்ஸ்ல போடுவாங்க. இட்ஸ் ஆல் அபௌட் பொலிடிகல் பெனிபிட்ஸ் அண்ட் டீ.ஆர். பி. பப்ளிக் பத்தி ஒருத்தருக்கும் கவலை இல்லை. சோ,” என்று அவள் கைவிரிக்க, மூக்கு கண்ணாடியை மேலேற்றியவர் அதிருப்தியாய் பார்த்துவிட்டு நகர்ந்தார்.
“மேம், ஆளுங்கட்சில அவருக்கு செல்வாக்கு இருக்கு. கொஞ்சம் பார்த்து பேசியிருக்கலாம்.” என்றார் அதுவரை அருகில் நின்றிருந்த அந்த இன்ஸ்பெக்டர்.
“இருக்கட்டுமே. என்ன பண்ணிட முடியும்? மிஞ்சிப்போனா வார்னிங் வரும். அவர் வயசுக்குதான் நான் பதில் சொன்னேன்.” என்று அதிராது சொன்னவள் மீண்டும் பார்வையை குப்பை மேடு நோக்கி திருப்ப,
“மதியம் கலெக்டரோட மீட்டிங் இருக்கு மேம்.” என்று வந்து நினைவுபடுத்தினான் ஏ.எஸ்.பி. பரிதி.
“எனக்கு அப்டேட் பண்ணிட்டே இருங்க. வெயில்ல எல்லாரும் டயர்ட் ஆகி ஒர்க் ஸ்லோ ஆக கூடாது. ஜூஸ், தண்ணி, டீ ஏதாவது வாங்கிக் கொடுத்து டீமை ப்ரிஸ்கா வச்சிக்கோங்க.” என்று அந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்லியவள் வண்டியை நோக்கி நடக்க, வழியில் பத்திரிகையாளர்களுக்கு ரமேஷ் பேட்டி கொடுப்பது தெரிந்தது.
அலட்சியமாய் தோள் குலுக்கியவள் என்னவோ செய்யட்டும் என்று காரை நோக்கி வேக எட்டுக்கள் வைக்க, ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் மைக்குடன் அவளை நோக்கி ஓடி வந்தார்கள்.
நோ கமெண்ட்ஸ் என்று நடையினூடே சொன்னவள் காரில் ஏறவும், சீறிப்பாய்ந்து கிளம்பியது வாகனம். அதிருப்தியாய் அவளை பார்த்த பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பயந்து அவள் விரைந்து சென்றுவிட்டதாக சேனலின் கீழே செய்தி ஓடவிட்டனர்.
சட்டம் ஒழுங்கு பற்றி ஆட்சியருடன் கலந்தாலோசனை கூட்டம் முடிந்தபின் அலுவலக பணியில் மூழ்கியவளுக்கு பின் மாலை பொழுதில் அவரச அழைப்பு வர, மீண்டும் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தாள்.
ஆதவன் அடங்கி நட்சத்திரங்களுக்கும் நிலவுக்கும் வழிவிட, தேய்ந்த நிலவொளிக்கு போட்டியாக இரண்டு பீம் லைட்டுகள் அந்த இடத்திற்கு வெளிச்சம் கொடுத்தன.
“மேம் இந்த பக்கம்.” பதட்டமாய் இருந்த பரிதி குப்பை மேட்டின் பின்புறம் நான்கு பக்கமும் க்ரைம் சீன் டேப்பால் சுற்றப்பட்டிருந்த இடத்திற்கு அதிராவை அழைத்துச் சென்றான்.
சுற்றி நின்றிருந்தவர்களை விலக்கிக்கொண்டு செல்கையிலேயே தீய்ந்த வாடை நாசியை எட்ட, டேப்பை தலைக்கு மேல் தூக்கிவிட்டு உள்ளே சென்றாள் அதிரா.
ஒருபக்க முகம் சிதைந்து அலங்கோலமாய் பாதி உடல் தீயில் கருகி, ஆங்காங்கே எலும்புகள் வெளியே தெரியும் வண்ணம் சிதலமடைந்திருந்த ஒரு உடல் அங்கு கிடத்தப்பட்டிருந்தது.
“இந்த பக்கம் தீ கொஞ்சம் மட்டுப்பட்டதும் அப்புறப்படுத்த போனப்போ இந்த பாடி கிடைச்சுது மேம். உருவத்தை வச்சி பாக்கும் போது இது ஒரு பொண்ணோட சடலமா இருக்க வாய்ப்பிருக்கு.” என்று பரிதி சொல்லிக்கொண்டிருக்க, ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்த அதிரா கையுறை எடுத்துவரச் சொல்லி கைநீட்ட, உடனே கையுறையுடன் வந்தார் இன்ஸ்பெக்டர்.
அந்த சடலத்தில் பார்வையை நிலைக்கவிட்டவள் நிமிர்ந்து, கூரிய விழிகளால் சுற்றத்தை நோட்டமிட்டாள். சடலத்தில் சந்தேகம் கொள்ளும்படியான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றாலும் தீ விபத்தின் காரணம் பிடிபடுவது போல இருந்தது. தற்செயலாக நடந்த விபத்தாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த காவல்துறையின் கோணம் மாறி இந்த கொலையை மறைப்பதற்காக வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டிருக்குமோ என்ற திசையில் சிந்திக்கத் துவங்கியது.
தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரித்தனர். உடல் தீயில் கருகி இருந்தாலும் முடிந்தமட்டும் புலப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் போதே அது ஒரு பெண் சடலம் என உறுதி செய்யப்பட்டது. ஆதார புகைப்படங்கள் எடுத்தவுடன் உடல் அப்புறப்படுத்தப்பட, ரமேஷை பார்த்தாள் அதிரா.
இருக்கும் தலைவலியில் இதுவேறா என்ற கடுப்புடன் கைகடிகாரத்தை பார்த்தவண்ணம் நின்றிருந்தார் ரமேஷ்.
“எவ்ளோ நாளா இந்த குப்பையெல்லாம் க்ளீன் பண்ணாம இருக்கு?” என்ற கேள்வி ரமேஷ் நோக்கி பாய, அவர் எரிச்சலை மறைத்தபடி பதில் சொன்னார்.
“நான் இங்க வந்து ரெண்டு வருஷம் ஆகுது. அதுக்கு முன்னலேந்தே இப்படி தான் இருக்கு.”
“அல்மோஸ்ட் நூறடிக்கு குப்பை சேர்ந்திருக்கு, க்ளீன் பண்ண எந்த ஆக்ஷனும் எடுத்த மாதிரி தெரியலையே.”
“யாருக்கும் தொந்தரவு இல்லாம இருக்கிறதால அப்படியே விட்டாச்சு. எனக்கு முன்ன இருந்தவங்களும் எதுவும் பண்ணல.”
“உங்க வீட்டு வாசல்ல குப்பை எடுக்காம இருந்தா யாரும் வந்து எடுக்கலன்னு அப்படியே விட்டுருவீங்களா, என்ன சார் நீங்க?” பொறுப்பில்லாமல் இருக்கிறீர்கள் என்று அவள் கொட்டு வைத்து பேச, அவரின் முகம் கடுகடுவென மாறியது.
“என்ன மேடம் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு. என்னை நிக்க வச்சு கேள்வி கேட்க உங்களுக்கு எந்த ரைட்சும் இல்லை. நானும் உங்களை மாதிரி பப்ளிக் சேர்வெண்ட் அண்ட் உங்களை விட சீனியர்.”
“உங்க கடமையை நீங்க செஞ்சிருந்தா நான் ஏன் சார் கேட்க போறேன். காலைலேந்து தீயை அணைக்க போராடுறாங்க, இப்போ நைட் மணி ஒன்பதாகுது. இன்னும் முடியல. ஒரு பாடி வேற கிடைச்சிருக்கு, நீங்க ஒழுங்கா இதை கிளியர் பண்ணி மெயின்டெய்ன் பண்ணி இருந்தா எங்களுக்கும் உங்களுக்கும் இந்த தலைவலியே இல்லை.”
“விட்டா நான் வந்து கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணியிருக்கணும்னு சொல்வீங்க போல. கவர்மென்ட் என்ன அலாட் பண்றாங்களோ அதை செயல்படுத்துறது தான் எங்க வேலை. இதை கிளியர் பண்ணி ப்ராப்பரா டிஸ்போஸ் பண்ண கவர்மென்ட்கிட்ட சரியான பிளானும் இல்லை, மிஷின்சும் இல்லை. அவங்க சப்போர்ட் இல்லாம நான் மட்டும் என்ன பண்ண முடியும்?” கொதித்துவிட்டார் மனிதர்.
“இவ்ளோ குப்பை அப்புறப்படுத்தாம இருந்தா நோய் பரவுறதுக்கு எவ்ளோ சான்ஸ் இருக்கு, கேர்லஸ்ஸா பேசுறீங்க சார். நமக்கு ஒரு வேலை நடக்கணும்னா நாமதான் போராடனும். அவங்க அப்ரூவல் கொடுக்கல, ரிசோர்சஸ் இல்லைன்னு குத்தம் சொல்லி ஒரு பயனும் இல்லை.”
“ஃபைன்! முடிஞ்சா அப்ரூவல் வாங்கி இதை கிளியர் பண்ணுங்க.” தெனாவட்டாக சொன்ன ரமேஷ் அங்கிருந்து சென்றுவிட, முகத்தில் கடுமை கூட கைகளை பின்னே கட்டிக்கொண்டு தீயணைப்பு நடவடிக்கைகளை கண்காணித்தாள்.
‘ரைட்டு, இந்த மேடமுக்கு வாய்ல வாஸ்து சரியில்லை.’ என்று நினைத்தது வேறு யாருமில்லை அவர்களது உரையாடலை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஏ.எஸ்.பி. பரிதி தான்.
“வேடிக்கை பார்த்தது போதும் ஏ.எஸ்.பி சார் போய் வேலையை பாருங்க. இப்போ கிடைச்ச பாடி யாரு என்னனு பார்த்து கேஸை பாலோ பண்ணி எனக்கு அப்டேட் கொடுங்க.” என்றவள் அவனை தீர்க்கமாய் பார்த்துவிட்டு கிளம்ப, சல்யூட் வைத்தான் பரிதி.
அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை படித்துக்கொண்டே நடந்து சென்றவள் எதிரே நிழலாடவும் சுதாரித்து நின்றுவிட, அவளெதிரே வந்தவன் சுதாரிக்காது இவள் மீது மோதப்பார்க்க, சட்டென உடலை இடப்பக்கம் வளைத்தாள் அதிரா. அதில் அவள் தோளில் லேசாக இடித்து நகர்ந்து கீழே கிடந்த கல்லில் மோதி அவன் தடுமாறினான்.
“வாட்ச் அவுட்.” என்று விழி விரித்தவள் நொடிப்பொழுதில் அவன் கைபிடித்து நிறுத்தினாள்.
ஒருவர் கைபிடித்து நிறுத்தவும் நிகழ்வுக்கு வந்தவன் அலைபேசியை பாக்கெட்டில் போட்டுவிட்டு நிமிர,
“ஆர் யூ மேட்? எதிர்க்க யார் வர்றா என்னனு எல்லாம் பாக்காம என்ன டியூட்டி பாக்குறீங்க நீங்க?” என்ற அதிராவின் குரலில் அதிர்ந்ததை விட அவள் காக்கி சட்டையில் இருந்த அசோக சக்கரம், ஒற்றை நட்சத்திரம் மற்றும் I.P.S என்ற பேட்சை கண்டு தன்னால் ஒரு இறுக்கம் வந்தது.
அவனை விட மேலதிகாரி என்று சொல்ல அந்த அடையாளங்கள் போதுமானதாக இருக்க, ஐவிரல்கள் சேர்ந்து அவன் கை தன்னால் உயர்ந்து நெற்றி அடைந்து சல்யூட் அடித்தது. அருகில் இருந்த அவன் நண்பன் கரமும் சல்யூட் அடித்து இறங்கியது.
தலையசைத்து ஏற்றுக்கொண்டவள் சைகையால் கையை கீழிறக்க சொல்லிவிட்டு, “இன்னைக்கு நீங்கதான் நைட் டியூட்டியா?”
“எஸ் மேம்.” என்றனர் ஒரு சேர.
“அங்க இங்க நின்னு தூங்காம கூட இருந்து எல்லாம் பார்த்து ஏ.எஸ்.பி’க்கு அப்டேட் பண்ணுங்க.” என்று கட்டளையாய் சொன்னவள் எதிரில் நின்ற கான்ஸ்டபிள் இருவரின் சட்டையின் நேம்பிலேட்டில் இருந்த பெயரை குறித்துக்கொண்டு நகர்ந்தாள்.
அவள் நகர்ந்ததும் அவளை கடுப்பாய் பார்த்து முணுமுணுத்தது அதில் ஒருவனான அகிலனே தான். அன்று அவனுக்கும் சந்துருவுக்கும் தான் இரவு பணி கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே எரிச்சல் உற்றிருந்தவன் அதிராவின் அதிகாரத்தில் இன்னும் சிடுசிடுப்பானான். சந்துரு தான் அவனை அடக்கி உருட்டி வேலையில் கவனம் செலுத்த வைத்தான்.
அவள் வாகனம் சீரான வேகத்தில் செல்ல, அந்த நாள் முடிந்தது என்று உடலுக்கு தளர்வு கொடுக்காமல் நிமிர்ந்து அமர்ந்தவள் கூர் விழிகளால் சுற்றத்தை நோட்டமிட்டபடி இருந்தாள்.
“எத்தனை வருஷமா நீங்க இங்க இருக்கீங்க?” என்று இடையே டிரைவரிடம் கேள்வியும் கேட்டாள்.
“பத்து வருஷமா இங்கதான் வண்டி ஓட்டுறேன் மேடம்.”
“இப்போ ஃபையர் ஆச்சே அந்த ஏரியா எப்படி? எதுவும் ஜாதி பிரச்சனை, கட்சி சண்டை, ரவுடியிசம் இருக்கா?”
“அதெல்லாம் எதுவும் இல்லை மேடம். அமைதியான ஏரியா தான். இங்க தங்கியிருக்க முக்கால்வாசி பேர் சென்னைல வேலை பாக்குற ஐ.டிகாரங்க தான். சின்ன சின்ன உட்கட்சி கோஷ்டி பூசல் இருக்கு மேடம். ஆனா எதுவும் கலவரம் ஆகுற அளவுக்கோ கொலை கொள்ளை அளவுக்கோ பெருசு இல்லை.”
அமைதியாய் கேட்டுக்கொண்டவள் வீடு வந்ததும் உரியதை எடுத்துக்கொண்டு இறங்கிக்கொண்டாள். டிரைவர் காரை அவ்வீட்டின் வராண்டாவில் நிறுத்திவிட்டு சாவியை ஒப்படைத்துவிட்டு கிளம்ப, இடையில் கைவைத்து உடம்பை முறித்தவள் பின்னங்கழுத்தை தேய்த்தவண்ணம் அறைக்குள் சென்று குளித்து உடைமாற்றி வந்தாள்.
பசி வயிற்றை கிள்ளுவது போல் இருக்க, வேலை குறித்த எண்ணமெல்லாம் பின் சென்று சமையலறை அவளை ஈர்த்தது. சமைக்கும் அளவுக்கு பொருள்கள் இன்னும் வாங்கி அடுக்கவில்லை என்பது நினைவு வர, அலைபேசி எடுத்து பரிதிக்கு அழைத்துக்கொண்டே குளிரூட்டியில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.
“தீ கட்டுக்குள்ள கொண்டு வந்தாச்சு. விடியுறதுக்குள்ள முழுசா அணைச்சிடலாம் மேம்.” என்றான் பரிதி அழைப்பை ஏற்றதும்.
“ஹான், க்ளோசா வாட்ச் பண்ணுங்க. ஹவுஸ் கீப்பிங் அண்ட் சமையலுக்கு ஆள் கேட்டிருந்தேனே என்ன ஆச்சு?”
“ஹவுஸ் கீப்பிங் பிரச்சனை இல்லை ஆள் ரெடியா இருக்கு. ஆனா நீங்க கேக்குற மாதிரி சமைக்க தான் ஆள் தேடிட்டு இருக்கேன் மேம்.”
“கொஞ்சம் சீக்கிரம் பாருங்க பரிதி.” என்றாள் சோர்வான குரலில்.
“இட்லி, தோசை, உப்புமானா ஓகே. ஆனா இந்த சேலட், பேக்ட் ஐட்டம்ஸ் எல்லாம் செய்ய தெரியாதுன்னு எல்லாரும் பின்வாங்குறாங்க மேம்.”
“நான் என்ன கேக் செஞ்சி தரசொல்லியா கேக்குறேன். பேக்ட் வெஜிடபிள்ஸ்ல நியூட்ரியண்ட்ஸ் லாஸ் கம்மி சோ பேக்ட் சாலட்ஸ் அதிகம் எடுத்துப்பேன்.” என்றவள் நெற்றியை சொரிந்தபடி, “அவன்ல எப்படி செய்யுறது என்னனு நானே சொல்லித் தரேன். கத்துக்க ரெடியா இருக்குறவங்களை கூட்டிட்டு வாங்க.”
அவன் சரியென்று அழைப்பை துண்டிக்க, பிரிட்ஜில் இருக்கும் காய்கறிகளை எடுத்து வந்து கழுவி சதுரமாய் நறுக்கியவள் தேவையான அளவு ஆலிவ் எண்ணெய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அவனில் வைக்கும் முன் நெற்றியில் அடித்துக்கொண்டு கொஞ்சம் டோஃபுவையும் சதுரமாய் நறுக்கி காய்கறியுடன் சேர்த்து டிரேயில் அடுக்கி மைக்ரோவேவ் அவனில் தள்ளிவிட்டாள். அது தனக்குரிய நேரமெடுத்து வேக, அதிரா மறுநாள் உண்ண பச்சை பயிறு மற்றும் கொஞ்சம் நட்ஸ், உலர் அத்தி, சூரியகாந்தி விதைகள், பேரிச்சை போன்றவற்றை ஊற வைத்தாள். குளிரூட்டியில் இருந்த மாதுளை பழத்தையும் எடுத்துவந்து அதன் முத்துக்களை உதிர்த்து ஒரு கண்ணாடி டப்பாவில் அடைத்து மீண்டும் குளிரூட்டியில் வைத்தாள்.
இதுதான் அவளது உணவு முறை. தினமும் ஏதாவது பயிறு இல்லை சுண்டல் வகைகளுடன், சாலட் மற்றும் பழங்கள் கண்டிப்பாக இருக்கும். மதியம் பாரம்பரிய அரிசி சோறுடன் காய்கறிகள் சேர்ந்த குழம்போ, கூட்டோ, கறியோ இடம் பெற்றுவிடும். வேலை பளுவினால் மதிய உணவு சமைக்க அவளுக்கு நேரம் இருப்பதில்லை.
இதற்கு முன் தேசத்தின் பல நகரங்களில் பணியில் இருந்திருந்தாலும் தலைநகரான தில்லியில் பணியில் இருந்தபோது பழகிய இந்த உணவு முறையை இன்றளவும் கடைபிடிப்பது வேலையாள் இன்றி போராட்டமாகவே இருந்தது. இருந்தாலும் முயன்றளவு வெளி உணவை தவிர்த்து சரிவிகித உணவை எடுக்க முயன்றுகொண்டிருக்கிறாள். சமைக்க குக் கிடைத்துவிட்டால் நிம்மதி என்ற எண்ணத்துடன் வெந்த காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் மாற்றி உண்ண அமர்ந்தாள்.
அருகில் இருந்த போன் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியெழுப்ப, யாரென்று எடுத்துப்பார்த்ததும் புன்னகை தவழ்ந்தது அதரங்களில். உடனே அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
“தமிழ்நாட்டுக்கு போனதும் இந்த தமிழனை மறந்துட்டிங்களே மேடம்.” என்ற உற்சாக குரல் அழைப்பு ஏற்கப்பட்டதும் சிரிப்புடன் வரவேற்றது.
“ஹே! அதெல்லாம் இல்லை விஷு. ஏரியா புதுசுல்ல சோ நூல் புடிக்க லேட் ஆகுது. அண்ட் டூ மை பேட், இன்னும் குக் கிடைக்கல.”
“மேடம் மாஸ்டர் செப் ஆச்சே அப்புறம் என்ன கவலை?”
“என்ன விளையாட்டா? நாள் முழுக்க சுத்திட்டு ராத்திரி வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு ரெடியா இருந்தா…” என்று கண்ணை மூடி சிலிர்த்தவள், “அந்த பீலே தனிதான்.”
“அதுக்குதான் சொல்றேன், இந்த விஷூவை புடிச்சு போட்டுக்கோ. தினம் உனக்கு வகை வகையா சமைச்சி வைப்பேனாக்கும்.” என்றான் விஸ்வநாதன் தன் வசீகர குரலில்.
“ம்ச். இந்த டாபிக்கை விடமாட்டியா விஷு? எனக்கு பீல் வரலடா.” என்று சளித்தாள் அதிரா.
“எல்லாரும் அந்த பீலோடையா கல்யாணம் பண்ணிக்குறாங்க? போக போக வந்துரும் அதி.” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.
“நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கவே கூடாதுனு என்னை நினைக்க வைக்குற. நீ எனக்கு பிரென்ட் மட்டும்தான் டாட்.” என்றாள் அவளும் அழுத்தமான குரலில்.
“ஓகே ஓகே கூல். நான் அதைப்பத்தி பேசல. ஊர் எப்படி இருக்குனு சொல்லு. எல்லாம் செட் ஆகிடுச்சா?”
“அங்கங்க இந்த புல்லிங்கோ சுத்திகிட்டு இருந்தாலும் த்ரடனிங்கா எதுவும் தெரில. கோஷ்டி மோதல் இருக்கு பட் ரவுடியிசம் மக்களோட இயல்பை பாதிக்குற அளவுக்கு இல்லை. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணா கட்டுக்குள்ள கொண்டு வந்துரலாம்.” என்று இவள் விளக்க, தில்லியில் இருக்கும் அவன் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“ஏம்மா போலீஸ் கொஞ்சம் நிறுத்துறியா. ஊருன்னு சொன்னதும் அங்கிருக்கிற யுனிக் புட்ஸ், பீச் சைட் சன் ரைஸ், சன் செட் இப்படி ரசனையா எதையாவது பாத்தேன், ட்ரை பண்ணேன்னு சொல்லுவேன்னு பார்த்தா லத்தி, ஹேண்ட்கஃப், துப்பாக்கின்னு பேசிட்டு இருக்க.” என்று அவன் அலற, இவள் வாய்விட்டு சிரித்தாள்.
தன் மீது அவனுக்கு நாட்டம் இருக்கிறது என்று தெரிந்தும் அவனை அவள் விலக்காது இருப்பதற்கு காரணம் இதுதான். இதழ் பிரித்து, வாய் திறந்து அவளை சிரிக்க வைப்பவன் அவன் ஒருவனே. தனிமையை என்றுமே வெறுக்காதவள் என்றாலும் வேலை கொடுக்கும் இறுக்கம் தளர்ந்து எச்சரிக்கை உணர்வை ஒதுக்கி வைத்து அவளை இயல்பாய் வைப்பது அவனுடன் பேசும் தருணங்கள் மட்டுமே. அதை இழக்க விரும்பாதவள் அவன் உணர்வுகளை இலகுவாய் எடுத்துக்கொண்டாள். அவளை பற்றி தெரிந்தமையால் அவனும் இயல்பாய் விட்டுவிடுவான்.
ஆனால், “அங்கிள்கிட்ட பேசுனியா?” என்று கேட்டு அவள் சிரிப்பையும் அவ்வப்போது துடைத்து எறிந்துவிடுவான்.
எப்போதும் போல் அவள் முகம் இளக்கம் இழந்து வெறுமை பூசிக்கொள்ள, பார்க்காமலேயே அவள் முகம் எப்படி இருக்கும் என்று அனுமானித்த விஷ்வநாதன், “அட்லீஸ்ட் நீ ட்ரான்ஸ்பர் வாங்கி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கேன்னு சொல்லலாமே.” என்று குரல் தழைத்து வேண்டினான்.
“இப்போவே தெரிஞ்சிகிட்டு என்ன பண்ண போறாரு? மாசம் ஒரு தடவை பேசுவாரே அப்போ சொல்லிக்குறேன்?”
“சரி, பாத்துக்கோ. குட் நைட்.” என்று அவன் அழைப்பை துண்டிக்க, பெருமூச்சு எடுத்து விட்டவள், உணவை முடித்துவிட்டு உறங்க சென்றாள்.
மெத்தையை பார்த்ததும் உறக்கம் கண்ணை சுழற்ற, அமர்ந்தவாக்கில் கண் மூடி எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி பத்து நிமிடம் தியானம் செய்துவிட்டே படுத்தாள். படுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்.
என்ன பிரச்சனை வந்தாலும் சரி, தினம் இருமுறை வேகம், விவேகம், அலைப்புறுதல், யோசனை, வருத்தம் என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்து மனதை நிர்மலமான நிலைக்கு இழுத்துச் செல்லும் தியானத்தை நித்தமும் செய்துவிடுவாள். மனதை கட்டுக்குள் வைத்திருந்தால் தன் உடலோடு சேர்ந்து மனமும் சொல் பேச்சு கேட்டு, பார்க்கும் உத்தியோகத்திற்கு உபாயங்கள் செய்யும் என்பது அவள் எண்ணம் மட்டுமல்ல நம்பிக்கையும்.
உடல், மனம் இரண்டும் தன் கட்டுக்குள் இருப்பது தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்துவதுடன் தொழில் முறையில் வழக்கை விரைந்து முடிக்க உதவும், அதுதான் தன் பலம் என்று இறுமாப்புடன் இருப்பவளை சோதிக்கும் விதமாய் அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைந்தன. அதற்கு முதல் படியாய் குப்பை மேட்டில் கிடைத்த சடலத்தின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவள் மேசைக்கு வந்தது.
error: Content is protected !!