Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – அத்தியாயம் 20

அத்தியாயம் – 20

விடியலிலேயே எதையோ வாங்கிக்கொண்டு வந்து நின்ற அகிலனை எதுவும் சொல்ல முடியாமல் அவனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அமைதியாக தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் விஷு. வள்ளி வீட்டை ஒதுங்க வைத்துக்கொண்டு இருக்க, விஷுவே சமைத்தான். அவன் இருக்கும் போதெல்லாம் அதிராவுக்கு அவன்தான் சமைத்துக் கொடுத்துப் பழக்கம். அவளுக்கு வேண்டுமானால் வேறொருவன் முக்கியமாகிப் போகலாம் தனக்கு அவள் முக்கியம் தானே தன் பழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான். அகிலனுக்கும் சேர்ந்தே உணவு தயாராகியது. இதுதான் நிதர்சனம் என்று பொட்டில் அடித்தது போல் அதிரா சொல்லியிருக்க, அகிலனை ஒதுக்கும் எண்ணமும் இல்லை. 

அமைதியாய் இருப்பவனை யோசனையுடன் பார்த்தும் பார்க்காதது போல் கவனித்தான் அகிலன். நேற்று முறைத்தது என்ன, இன்று பம்முவது என்ன என்று நெற்றி சுருக்கியவன் தன் எதிரே நிற்கும் அதிராவைப் பார்க்க, அவள் அவன் வாங்கி வந்ததை பருகிக் கொண்டிருந்தாள்.

“நல்லாயிருக்கா? இன்னைக்கு என்னமோ புதுசா தேங்காய்ப்பால் போடவும் வாங்கிட்டு வந்தேன்.” என்றான் அகிலன்.



Advertisement

“நல்லாயிருக்கு அகிலன். தேங்காய்ப்பால் குடிச்சி வருஷம் ஆச்சு.” என்றவள் குடிப்பதை தொடர,

“ஆனாலும் உங்களுக்கு கல்நெஞ்சம்தான்.” என்று அகிலன் முகம் சுருக்க, என்ன சொல்கிறான் என்று காதை தீட்டி கேட்டுக்கொண்டிருந்தான் விஷு. 

“கல்நெஞ்சமா?” என்று அதிராவும் அதிர்ந்தாள்.

Advertisement

“தினம் வாங்கிட்டு வந்து கொடுக்குறானே அவனுக்கு வேணுமான்னு கேப்போம், அவனுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு இல்லாம எல்லாத்தையும் நல்லா உள்ள தள்ளுறீங்க மேடம்.” என்று மேடமில் அழுத்தம் கொடுக்க, அவனை முறைத்தாள் அதிரா.

Advertisement

“உனக்கு வேணும்னா வாங்கி குடிக்க வேண்டியது தானே. என்கிட்ட எதுக்கு பங்கு கேக்குற?”

“பகிர்தல் அன்பை பலப்படுத்தும்னு யாரோ சொல்லியிருக்காங்க.” என்றான் விழிகளை அலையவிட்டு.

அவனது நேரடி பதிலில் குப்பியை உதட்டில் சாய்த்து தன் உணர்வுகளை மறைத்தவள் குடிப்பது போல் பாசாங்கு செய்தாள்.

Advertisement

தன் பேச்சிற்கு என்ன எதிர்வினை வரும் என்று ஆவலுடன் காத்திருந்தவன் அவள் அமைதியாய் பருகவும் அவள் வாயை கிளற வழி தெரியாது அமைதியாகிப் போனான். 

குரலை செறுமியபடி அவர்களுக்கு குறுக்கே வந்து அமர்ந்த விஷு, “இன்னைக்கு மதியம் என் வேலை முடிஞ்சிடும். லன்சுக்கு வெளிய போலாமா அதி?” என்று கேட்க, அதிராவின் பார்வை அனிச்சையாய் அகிலனிடம் சென்று மீண்டது.

அவளது பார்வை பொறுக்காத விஷு, “ஈவினிங் பிளைட்ல டிக்கெட் போட்டிருக்கேன். லன்ச் முடிச்சிட்டு அப்படியே கிளம்பிடுவேன்.” என்றதும் அதிரா சம்மதமாய் தலையசைத்தாள்.

இங்கு அகிலனுக்குத் தான் எரிந்தது. ஆனால் வெளிக்காட்ட முடியவில்லை. வெளிக்காட்டும் உரிமையை அவள் கொடுக்கவில்லை என்பது பொட்டில் அடித்தது போல் அப்போதுதான் புரிய, தனக்குள் குழம்பிப் போனவன் எழுந்துவிட்டான்.

அவன் அப்படி எழுந்தது அதிராவுக்கு ஒருமாதிரியாகிவிட, சங்கடத்துடன் அவனை ஏறிட்டாள். முகத்தை உர்ரென்று வைத்திருந்தவனோ அவளிடம் சிறிய தலையசைப்புடன் விடைபெற்றான்.

“ஒழுங்கா உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு கூட தோணல. இவனையெல்லாம் உன் வாழ்க்கையா நம்பிட்டு இருக்க நீ.” அவன் நகர்ந்த நொடி அதிராவிடம் காய்ந்தான் விஷு.

“ம்ச்… அவன் அப்செட் ஆகிட்டான். இல்லைனா இப்படியெல்லாம் செய்ய மாட்டான்.”

“ஆமாமா, சார் ரொம்ப ரொம்ப அடக்கமானவரு, பணிவானவரு, நீ கிழிச்ச கோட்டை தாண்டாதவரு.” என்று விஷு கேலி பேச, அதிராவுக்கு கோபம் வந்துவிட்டது.

“என்னை பேச உனக்கு உரிமை இருக்குனு அவனையும் பேசலாம்னு நினைக்காத விஷு.”

“அவனை சொன்னா உனக்கு கோவம் வருதுல்ல.”

“ஆமா வரும். என்ன செய்யணுங்குற அதுக்கு?”

“சந்தோசம்.” என்று இதழ்களை இறுக மூடிக்கொண்டான் விஷு.

“என்ன?”

“சந்தோஷமா இருந்தா சரி, இல்லைனு வச்சிக்கோ அவன் சட்டையை புடிக்க கூட யோசிக்க மாட்டேன்.” என்று எழுந்தவனை ஆயாசமாக பார்த்தாள் அதிரா.

“ரெண்டு பேரும் இப்படி புகைஞ்சிட்டே இருந்தா நான் பாவம் இல்லையா விஷு.”

“என்னை பாத்து வேணும்னே சீண்டுற அவன்கிட்ட போய் இந்த பாவ மூஞ்சியெல்லாம் காமி, நல்லா சோப் போடுவான்.” என்று பொறும,

“சோப் இல்லை சூப்.” என்று கிளுக்கிச் சிரித்தாள் அதிரா. 

அவள் சிரிப்பு அவனையும் இலகுவாக்க, “எப்படித்தான் உனக்கு அவனை புடிச்சிதோ தெரில.” என்றபடி உணவை மேசையில் எடுத்து வைக்க சென்றான்.

“எனக்கும் தான் தெரில.” என்றபடியே இவளும் பின்தொடர்ந்தாள்.

“நிஜமாவே நீ இந்த லவ் எல்லாம் பண்றியா அதி?”

“ஹே! நேத்தி தான மூச்சு முட்ட பேசுனேன் திரும்ப ஆரம்பிக்குற…”

“ஒரு ஐ.ஏ.எஸ் இல்லை ஐ.பி.எஸ்யை விரும்பியிருந்தா கூட எனக்கு இவ்ளோ பீல் ஆகியிருக்காது அவனை எப்படி அதி?” என்று விஷு பொறுக்க முடியாமல் மீண்டும் முறையிட, அவனை அழுத்தமாக பார்த்தவள், 

“கொஞ்ச நாளுக்கு என்னை விட்டு தள்ளி இரு விஷு. அப்போ தான் மூவ் ஆன் ஆவ.”

“அவன்கிட்ட மூஞ்சுல அடிச்ச மாதிரி கிளம்புன்னு சொல்லுவ, என்கிட்ட சுத்தி வளைச்சு சொல்ற.” என்று அதற்கும் ஒப்பிட்டு பேச, இதற்கு மேல் முடியாது எனும் விதமாய் அமைதியாக நகர்ந்துவிட்டாள். 

மதிய உணவு நேரம் விஷு அழைக்க, வேலை இருக்கிறது என்று அவனுடன் வெளியே செல்வதை தவிர்த்துவிட்டாள் அதிரா. மேலும் மேலும் அவனுடன் நெருங்கி அவனை சலனப்படுத்த விரும்பவில்லை. அவர்களின் நட்புக்கு எல்லைக்கோடு வகுக்காத வரை அகிலனும் அவனும் முட்டி மோதிக்கொள்வது நிச்சயம், அதனால் கொஞ்ச நாட்கள் தள்ளி இருப்பதே நலம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். 

உதவியாளரை அழைத்து உணவு வாங்கி வரச் சொன்னவள் அகிலன் செய்தி அனுப்பியிருக்கிறானா என்று அலைபேசி எடுத்துப் பார்த்தாள். இந்நேரத்திற்கு எப்போதும் உண்டு முடித்து அவன் செய்தி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. காலையும் உண்டுவிட்டதாய் செய்தி வரவில்லை. இவள் கிளம்பி அகிலனுக்கு காத்திருந்து மணியாகிவிட விஷுவுடன் சேர்ந்து சிற்றுண்டி முடித்தாள். அதனால் அகிலன் அவள் வீட்டில் காலை உணவு உண்ணாதது அவளுக்கு தெரியாமலேயே போனது. மதியத்திற்கு வீட்டில் சமைக்கவே இல்லை என்ன செய்கிறானோ என்று யோசித்தவள் வெகு நேரம் கழித்து அவனுக்கு அழைத்தாள்.

“சொல்லுங்க.” எடுத்ததும் ஒற்றை வார்த்தை தான் அவன் வாயிலிருந்து வந்தது.

“சாப்பிட்டியா?”

“என் நியாபகம் எல்லாம் இருக்கா உங்களுக்கு?” நக்கல் போல குத்தினான் அவன்.

“ம்ச். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி உனக்கு பழக்கமே இல்லையா?”

“என்னை மறந்தவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.” முறுக்கினான் அவன்.

“மறந்ததுனால தான் மெனக்கெட்டு உனக்கு போன் போட்டு கேக்குறேன் பாரு.” என்று இவளும் எகிறினாள்.

“போன் போட்டு கேட்டா ஆச்சா… பிரெண்டை பாத்ததும் என்னை மறந்துட்டு இப்போ சமாளிக்க வேண்டாம்.” 

கொஞ்சம் இடம் கொடுத்ததும் ஏறுறதை பாரு, என்னைய கெஞ்ச வைக்க ட்ரை பண்றான் என்று சுணங்கியவள், “ஏதோ ஒண்ணுமண்ணா பழகியிருக்கோமே சாப்பிட்டியானு அக்கறையா கேட்கலாம்னு பார்த்தா ரொம்பத் தான் முறுக்குற.”

“ஒண்ணுமண்ணா பழகுனோமா… அது எப்போ?” அவன் குரலில் நக்கல் தெறித்தது மீண்டும்.

“இதை நான் சொல்லல நீதான் சொன்ன. அப்போ உனக்குத்தான் நாம பழகுனது எல்லாம் தெரியுமா இருக்கும்.” என்று அவன் பக்கமே திருப்பி விட்டாள் இவள்.

“எனக்கு தெரியும். உங்களுக்கு தெரிஞ்சா நல்லது.” என்றான் அவனும்.

வாய்… வாய்… என்று முனகியவள், “எனக்கு வேலை இருக்கு. பை.” என்று அழைப்பை துண்டிக்க, இங்கு அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அடக்கமாட்டாமல் சிரித்தான் அகிலன்.

‘சுத்தல்ல விட பாக்குறீங்களா மேடம். இருக்குனு ஒத்துக்கிட்டா தான் என்னவாம்.’ செல்லமாய் உரிமையாய் கொஞ்சிக் கொண்டான்.

“ஆனாலும் நீயெல்லாம் வழிஞ்சி கொழஞ்சி நிப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கலைடா.” என்ற குரலில் பதட்டம் கொண்டவனாய் பட்டென திரும்பினான் அகிலன்.

அங்கு சந்துரு நிற்கவும் ஆசுவாசமாய் மூச்சுவிட்டவன் அலைபேசியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு, “என்னடா?” 

“யார்கிட்ட பேசிட்டு இருந்த?” சந்துரு குறுகுறுவென்று பார்க்க, அவன் பார்வையை தவிர்த்த அகிலன்,

“தெரிஞ்சவங்ககிட்ட.”

“உனக்கு மட்டும் தெரிஞ்சவங்களா எனக்கும் தெரிஞ்சவங்களா?” என்று நோண்ட, நழுவும் மீனாய்,

“எனக்கு மட்டும் தெரிஞ்சவங்ககிட்ட.” என்று நகரப் பார்த்தான் அகிலன்.

அவன் தோள் பிடித்து நிறுத்திய சந்துரு இப்படியும் அப்படியுமாய் பார்த்து, “இந்த மூஞ்சுல எரியுற பல்ப்பை பார்த்தா எனக்கும் தெரிஞ்சவங்களா இருக்கும்னு தோணுதே.” என்றதும் அகிலன் இதழ்கள் அதிரா நினைவில் அழகாய் விரிந்தன.

“டேய் டேய்… எஸ்.பி மேடம்கிட்ட தான கடலை போட்ட… எப்படிடா டேய்… நீ பாத்த, சிரிச்ச சரி. அவங்க ஏன்டா உன்னை பார்த்து சிரிக்கணும். மச்சக்காரன்டா நீ.” என்று அகிலன் இடையைக் கிள்ள, துள்ளி நகர்ந்தவன்,

“டேய் என்னடா பண்ற?”

“ஓஹோ… நாங்க கிள்ளக்கூடாதா. அப்போ அவங்க…” என்று அவனை ஓட்டித்தள்ள, இனிமையான அந்த பொழுதை ரசித்த வண்ணம் இருந்தான் அகிலன்.

“அப்போ இதுக்குதான் இந்த ஜிம், டயட், ப்ரோமோஷன் எல்லாம்ல?”

ஆமோதிப்பாய் தலையசைத்த அகிலன் தன்னை குனிந்து பார்த்து, “வெய்ட் குறைஞ்சிடுமாடா… அவங்களுக்கு மேட்சா இருப்பேனா நான்.”

“அந்த டயட் சாப்பாடு எங்கிருந்து வருதுன்னு ஒருவழியா கண்டுபுடிச்சிட்டேன்டா.” என்று கண்சிமிட்டிய சந்துரு நண்பனின் தோளில் கைபோட்டு வெளியே டீக்கடைக்கு அழைத்துச் சென்றான். அவனுக்கு மட்டும் டீ வாங்கிக்கொண்டு சற்று தள்ளி நின்றுகொண்டவர்கள், “நீ போடுற எபோர்டுக்கு கண்டிப்பா பலன் கிடைக்கும்டா. அதோட மேடம் சப்போர்ட் இருக்கு அதைவிட வேற என்ன வேணும் உனக்கு?”

“ம்ச்… அந்த ஒரே ஒரு மாணிக்கம் கேஸ் விசாரிக்க போனதுக்கே இன்ஸ்பெக்டருக்கு ஈகோ தலைதூக்கிடுச்சு. நாளைக்கு எங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்தா இளக்காரமா நினைப்பாருல்லடா. ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பியோடவான்னு எல்லாரும் பாப்பாங்கல்ல…” என்று வருந்திக் கேட்க, இதெல்லாம் கூட யோசித்திருக்கிறானே பிழைத்துக் கொள்வான் என்று நிம்மதியாய் உணர்ந்தான் சந்துரு.

“அதான் எஸ்.ஐ எக்ஸாம் எழுதலாம்னு இருக்கியேடா. பாஸ் பண்ணி எஸ்.ஐ ஆகிட்டா இவ்ளோ வித்தியாசம் தெரியாது.”

“ஆனாலும் வித்தியாசம் இருக்கும்ல.”

“அதுக்குன்னு ஐ.பி.எஸ் எழுதி பாஸ் பண்றியா?” என்று சந்துரு பார்க்க,

“வாய்ப்பேயில்லை.” என்று துள்ளினான் அகிலன்.

“அவ்ளோ எல்லாம் என்னால முடியும்னு நம்பிக்கை இல்லை. அதோட வேற ஸ்டேடுக்கு எல்லாம் மாத்தி போட்டா ஆளுக்கு ஒவ்வொரு ஊர்ல இருக்குற மாதிரி இருக்கும்.”

“இப்போ மட்டும் அவங்க இங்கேயே கடைசி வரைக்கும் இருந்துடுவாங்கனு நினைக்குறியா. நமக்கே நாலஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை டிரான்ஸ்பர் கொடுக்குறாங்க.” என்ற சந்துருவை அகிலன் கலக்கமாக பார்க்க, ஆதரவாக அகிலனின் தோள் தொட்டவன், “நீயே இவ்ளோ யோசிக்குறேன்னா மேடம் கண்டிப்பா யோசிப்பாங்கடா. எல்லாத்தையும் நீயே போட்டு குழப்பிக்காம அவங்களையும் கேளு.”

“ம்க்கும்… அவங்க வாயை துறந்துட்டாலும்.” என்று அகிலன் சலிக்க,

“ஏன்டா இப்படி?”

“அவங்க வெளிப்படையா சொன்னாத்தானே நானும் பேச முடியும்.” என்று முகம் தூக்கினான் அகிலன்.

“நீயே அவங்களை எஸ்.பியா பாத்து மரியாதையாதான் பேசுற அப்புறம் எப்படி அவங்களுக்கு உன் மேல வேற எண்ணம் வந்து நெருங்கி மனசுல இருக்கறதை பேசுவாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தரணுமா உனக்கு. எங்க மரியாதை குடுக்கணுமோ அங்க குடு, போதும்.” என்று சந்துரு சொல்லவும் அகிலனின் முகம் யோசனைக்கு தாவியது.

“சொதப்பாம யோசிச்சு பண்ணு.” என்ற சந்துரு நண்பனை அழைத்துக்கொண்டு வேலை பார்க்க நகர்ந்தான்.

அன்றிரவு அதிரா உணவு உண்ணும் வேளையில் இவன் நுழைய, “வரமாட்டேன்னு நினைச்சேன்.” என்றபடியே மேசை நோக்கி அவள் செல்ல, எதுவும் சொல்லாது பின்தொடர்ந்தான்.

அமைதியாய் இருப்பவனை பார்த்துக்கொண்டே அதிரா தட்டில் தனக்கான சப்பாத்தியை எடுத்து வைத்துக்கொள்ள, அகிலனும் உண்ண அமர்ந்தான். வள்ளி ஏற்கனவே அவள் உண்ண ஏதுவாக சப்பாத்தியை பிய்த்து போட்டு வைத்திருந்தாள். மெதுவாக வலக்கையால் எடுத்து தாலில் குழைத்து உண்ண, அவளை பார்த்துக்கொண்டே அவனும் தனக்கு பரிமாறி உண்ணத் துவங்கினான்.

மின்விசிறியின் சத்தமும் அவர்கள் கிண்ணத்தை நகர்த்தும் சத்தத்தையும் தவிர்த்து அமைதியாக கழிந்தது. 

உண்டு முடித்து சோபாவில் அமர்ந்தவள் என்ன அமைதியா இருக்கான் என்று பார்க்க, பேண்ட் பாக்கெட்டிலிருந்து மடித்து வைத்திருந்த பேப்பரை எடுத்து நீட்டினான். யோசனையுடன் அவள் பிரித்துப் பார்க்க, அதில் எஸ்.ஐ தேர்வுக்கான பாடத்திட்டம் இருந்தது. 

“எப்படி படிக்கணும்னு சொல்லுங்க.” என்று கேட்டவனை வாஞ்சையாக பார்த்தவள் உள்ளே சென்று மூன்று புத்தகங்களை எடுத்து வந்தாள்.

“இது மூணையும் ரெஃபர் பண்ணா பார்ட் 2 க்ளியர் பண்ண வசதியா இருக்கும். இதை தவிர்த்து தினம் நியூஸ்பேப்பர் படி. கரெண்ட் அபையர்ஸ் புக் பப்பிளிகேஷன்ல சொல்லி நான் வாங்கித் தரேன். பார்ட் 1 தமிழ் தகுதித்தேர்வு. அதுக்கு நீதான் புக் ரெடி பண்ணனும் அகிலன்.” என்று அதிரா விளக்க, அவள் காட்டிய புத்தகங்களை புரட்டிப்பார்த்து அதிர்ந்து போனான்.

“மேத்ஸ்சா… பாத்தாலே தலை சுத்துது.” என்று புத்தகத்தை கீழே வைத்துவிட்டு தலையை பிடித்துக்கொள்ள, அதிராமல் சிரித்தாள் அதிரா.

“மேத்ஸ் ஏறாதுன்னு நினைச்சிகிட்டே புக்கை துறந்தா அப்படிதான் இருக்கும். பாஸ் பண்ற அளவுக்கு பிரிப்பேர் பண்ணிடலாம் அகிலன். புக்ஸ் எடுத்துட்டு போய் பிரிப்பேர் பண்ண ஆரம்பி.” என்று புக்கை எடுத்து நீட்ட, அதை கையில் வாங்காது அவளைப் பார்த்தவன்,

“நீங்க இதெல்லாம் படிச்சி தான் க்ளியர் பண்ணீங்களா?”

“இதை விட டஃப்பா.” என்றாள் கண்சிமிட்டி,

“அப்போ புக்ஸ் இங்கேயே இருக்கட்டும். டெய்லி இங்க வந்து படிச்சிட்டு போறேன். டவுட் வந்தா உங்ககிட்ட கேட்டு க்ளியர் பண்ணிக்க வசதியா இருக்கும்.” என்றவனை அடப்பாவி என்று பார்த்தாள்.

இதுதான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதா… 

“விட்டா சாப்பிட, படிக்கனு இங்கேயே டேரா போட்ருவ போல.” 

“இது கூட நல்ல ஐடியா தான். எவ்ளோ அலையுறது நானு…” என்றவனை அவன் கொடுத்த பேப்பரை ரோலாக சுற்றி தோளில் அடித்தாள்.

தோளை தேய்த்துக்கொண்டவன் ஆர்ப்பாட்டமாக சிரித்து, “ரொம்ப வலிக்குது மேடம். பாத்து பனிஷ்மென்ட் கொடுங்க.”

“உன்னை… தோப்புக்கரணம் போடு.” கால் மேல் கால் போட்டு தோரணையாய் அவள் சொல்ல, சிரிப்புடன் எழுந்தவன்,

“ம்ம் எழுந்திரிங்க.” என்று அவளைப் பார்க்க, நான் எதுக்கு என்று பார்த்தாள்.

“சாப்பிட்ட உடனே சின்ன வாக் போனா நல்லதுன்னு சொன்ன நியாபகம். வாக் போறதுக்கு முன்னாடி வார்ம்அப் மாதிரி தோப்புக்கரணம் போட்டா சாப்பிட்டது சீக்கிரம் செரிக்குமாம். எழுந்திரிங்க எழுந்திரிங்க…”

“நீ போடு. நான் எதுக்கு.” என்று சிலிர்த்தாள் பெண்.

“ரெண்டு கிலோ வெயிட் போட்டுட்டேன்னு அன்னைக்கு சொன்ன மாதிரி நியாபகம்.” என்று அவன் உந்த, இதனை எல்லாம் நினைவு வைத்திருக்கிறானே என்று பார்த்தவள் எழ முடியாது என்பது போல் அமர்ந்திருந்தாள்.

“அட்வைஸ் பண்ணா மட்டும் போதாது பாலோ பண்ணனும்.”

“என்னால தோப்புக்கரணம் எல்லாம் போட முடியாது போடா…” என்று அவள் முகம் திருப்ப,

“அதெல்லாம் போடலாம். கை தான் மடக்க முடியுதே.” என்றவனை முறைத்தவள்,

“நான் உன்னோட ஹையர் அபீஷியல் எனக்கே ஆடர் போடுறியா நீ…” என்று அதிரா வேண்டுமென்றே முறுக்க,

“அதெல்லாம் ஆபீஸ்ல மட்டும்தான். இப்போ இல்லை.” என்றான் அகிலனும் அலட்டாது. இவனை என்ன செய்வது என்று அதிரா அயர்ந்து பார்க்க, அவள் அலைபேசி ஒலித்து அவளை காப்பாற்றியது.

பரிதிதான் கூப்பிட்டிருந்தான். 

“குப்பை கிடங்குல எலும்புக்கூடு கிடைச்சப்போ ப்ரஸ் மீட்ல நீங்க சொன்னதை பாத்துட்டு திருச்சில ஒருத்தவங்க, கோயம்புத்தூர்ல ஒருத்தவங்க அண்ட் சென்னைல ஒருத்தவங்கனு மூணு பேர் பேமிலி மெம்பர் காணாம போயிருக்காங்கனு வந்திருக்காங்க மேம். டீட்டையில் கலெக்ட் பண்ணேன். அதுல மூணுமே நமக்கு கிடைச்ச ஸ்கெலிடனோட மேட்ச் ஆகுற மாதிரி இருக்கு மேம். என்ன செய்யலாம்.”

“நீங்க நேர்ல போய் அவங்க பேமிலி மெம்பர்சை விசாரிங்க பரிதி. எல்லாமே ஒத்துவந்தா டீ.என்.ஏ டெஸ்டுக்கு லீகலா அப்பளை பண்ணனும்.” என்று யோசனை சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க, அவளை பார்த்தபடி நின்றிருந்தான் அகிலன்.

“என்ன?” என்று அவள் புருவம் உயர்த்த,

“இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணலாமா?”

“எதை?”

“படிக்க…”

“அவ்ளோ ஆர்வமா?” 

“முத அட்டெம்ப்ட்லேயே க்ளியர் பண்ணிட்டா என் ரூட் சீக்கிரம் க்ளியர் ஆகிடும்னு பாக்குறேன்.” என்க, அவன் எதை சொல்கிறான் என்று புரிந்து கொண்டவள் சட்டென குனிந்து கொண்டாள். 

“ஆரம்பிக்கலாமா?” என்று அவள் அருகே இடைவெளி விட்டு அமர்ந்து புத்தகத்தை கையிலெடுக்க, அவர்களுக்கு இடையில் இருக்கும் சிறிய இடைவெளியை பார்த்தவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது முதல் பகுதியை விளக்கியவள் தினம் இப்படி படிக்க வேண்டும், இதெல்லாம் படிக்க வேண்டும் என்று மேலோட்டமாக சொன்னாள்.

“நீங்க பேசாம எனக்கு ஒரு டைம்டேபிள் மாதிரி போட்டு கொடுங்க. தினம் அதை முடிச்சாதான் தூக்கம் எனக்கு.”

“அவ்ளோ பிரஷர் போட்டுக்காத. மெனக்கெடு ஆனா உடம்பை கெடுத்துக்காத.” அக்கறையாக சொன்னாள் அதிரா. 

“அதெல்லாம் நீங்க பாத்துக்கோங்க. நான் படிக்க மட்டும்தான் செய்வேன்.” என்று அழிச்சாட்டியமாய் பேசினான்.

‘தைரியம் கூடிப்போச்சு.’ மனதிற்குள் கடிந்து கொண்டவள், “நான் ரெஃபர் பண்ணி எப்படி படிக்கணும்னு இன்டெக்ஸ் போட்டு வைக்குறேன். பாலோ பண்ணிக்கோ.” என்றவள் வேண்டுமென்றே கொட்டாவி விடுவது போல் செய்ய, அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது என்றெண்ணி கிளம்பிவிட்டான் அகிலன்.

‘ஹப்பா… ரொம்ப நாள் இவனை சமாளிக்க முடியாது.’ என்று அவன் கிளம்பியதும் நினைத்துக்கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர, தினம் இரவு உணவு முடித்து ஒரு மணி நேரம் அவன் படிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டது. அவனுக்காக அவளும் அமர்ந்து சொல்லிக்கொடுப்பாள். காலை வேளையில் இவன் மட்டும் ஒரு மணி நேரம் படித்துவிட்டு கிளம்புவான். கடினமாக இருந்தாலும் அவளுக்காக விரும்பி செய்தான். உறங்கி, குளித்து, கிளம்ப மட்டுமே அவனது அறை தேவைப்பட்டது. மற்ற நேரம் முழுதும் ஒன்று காவல் நிலையம் இல்லை அதிரா வீடே கதி என்று மும்மரமாக படிப்பில் கவனம் செலுத்திய சமயம் தீபாவளி திருநாள் நெருங்கியது.

“தங்கச்சி நம்ம வீட்ல இருந்தாலும் தீபாவளி வரிசை வைக்கணும்னு அம்மா சொன்னாங்க. நான் போய்ட்டு வரலாம்னு இருக்கேன்.” என்றவனை வாஞ்சையாக பார்த்தாள் அதிரா. நம்ம வீடு என்று உணர்ந்து சொன்னானா இல்லை இயல்பிலேயே அவளை அவன் குடும்பத்தில் இணைத்து சொன்னானா என்று தெரியாது ஆனால் நிறைவாய் உணர்ந்தாள் அவள்.

“எப்போ டெலிவரி?”

“ஜனவரினு சொல்லி இருக்காங்க. அப்போதான் இந்த பரீட்சை வரும்னு நினைக்குறேன்.” என்றான் அவன் யோசனையாக.

“பாத்துக்கலாம் அகிலன்.” அவள் தெம்பாய் பேச,

“ம்ம்… தீபாவளிக்கு நீங்க உங்க வீட்டுக்கு போறீங்களா? ஷ்… உங்க குடும்பம் பத்தி சொல்லவே இல்லையே…” என்று சங்கடமாய் பார்த்தான் அகிலன்.

பேச்சு வாக்கில் அவனது தங்கை குடும்பம் அவனுக்கு பெண் தர தயாராய் இருக்கிறது, மறுத்துவிட்டேன் என்பது வரை பகிர்ந்திருந்தான். ஆனால் அவள் ஒருநாளும் அவளது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசியதில்லை. அகிலனுக்கு கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் அவளை நெருங்க யோசித்து அமைதியாகிவிடுவான். இன்று தன்னை போல் எதர்ச்சியாக கேட்டிருக்க, எதிரே இருந்த சுவரை வெறித்தவள்,

“நாலு வயசு இருக்கும். அம்மா முகம் நல்லா மனசுல பதிய ஆரம்பிச்ச நேரம் ஆக்சிடெண்ட்ல தவறிட்டாங்க. பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க நாளைக்கு அதுக்கு பாக்கணும்னு சொல்லி அப்பாக்கு அவங்க வீட்ல இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சாங்க… 

ம்ச்… அவங்களுக்குனு குழந்தைங்க பிறக்குற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போச்சு. அதுக்கப்புறம் நான் முக்கியமா அவங்க முக்கியமானு பிரச்சனை வந்து… அவங்க கை அறுத்துக்க போய் என்னை ஹாஸ்டல்ல போட்டுட்டாங்க. அதிலேந்து இப்படியே இருந்து பழகிட்டேன்.” என்றவளை வலி நிறைந்த பார்வை பார்த்தான் அகிலன்.

“அங்க போறதே இல்லையா?”

விரக்தியாக சிரித்தவள், “உரிமையில்லாத இடத்துக்கு போக விருப்பமில்லை அகிலன். சந்தோசமோ வலியோ எல்லாத்தையும் சமாளிக்க பழகிட்டேன்.”

“அம்மா பக்கம் சொந்தகாரங்க இருப்பாங்களே, அங்க போகலாமே…” என்று கேட்க, அவள் சொன்ன பதில் இன்னும் அவனை அதிர வைத்தது.

“அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டது என் அம்மாவோட கூடப்பிறந்த தங்கச்சி. அக்கா பொண்ணுன்னு என்மேல பாசமா தான் இருந்தாங்க ஆனா யாருக்குதான் உரிமையை பங்கு போட்டுக்க புடிக்கும் சொல்லு… அவங்க பசங்களா நானான்னு வரும் போது சித்திக்கு அவங்க பசங்க முக்கியமா போயிட்டாங்க. அவங்களையும் குறை சொல்ல முடியாது அம்மா இடத்துல சித்தியை பொறுத்துன என்னோட தாத்தா பாட்டிக்கு சித்தி வேறன்னு புரியல. எல்லாத்துலயும் அம்மா இப்படி அப்படினு கம்பேர் பண்ணி இன்செக்யூர் பீல் வரவச்சிட்டாங்க. எப்படியோ நான் படிக்க எந்த தடையும் இல்லை. இங்கேயிருந்து தள்ளி போகணும்னு தான் டெல்லிக்கு போய் படிச்சேன். அங்கேயே கொஞ்ச வருஷம் சுத்திட்டு இருந்தேன். இங்க ட்ரான்ஸ்பெர் வரும்னு எதிர்பாக்கல.”

“இந்த வருஷம் தீபாவளியை அமர்களமா கொண்டாடுறோம் ஓகேவா?” என்று அகிலன் பெரிதாய் கை விரித்து சொல்ல, சத்தமாய் சிரித்த அதிரா,

“நம்ம வேலை என்னனு மறந்துடுச்சோ வருங்கால எஸ்.ஐக்கு. எல்லா நாளும் நமக்கு ஒர்கிங் டேதான்.”

“அது இருந்துட்டு தான் இருக்கும். அதுக்காக வருஷத்துக்கு ஒரு முறை வர பண்டிகையை விடுவாங்களா? இந்த வீக் போறோம் டிரெஸ் எடுக்குறோம். தீபாவளி காலையில வெடி வெடிச்சு கொண்டாடுறோம் அப்புறம் வேலையை பாக்குறோம்.” என்று அகிலன் திட்டத்தை வகுக்க, 

“இப்போதான் தீபாவளிக்கு ஊருக்கு போறேன்னு சொன்ன?”

“வரிசை வைக்க போறேன்னு சொன்னேன் தீபாவளிக்கு போறேன்னு சொல்லலையே… நாளைக்கு நைட் போய் வச்சிட்டு மறுநாளே வந்துடுவேன்.”

இடையில் துறையின் பதவி உயர்வு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவன் ஊருக்கு செல்லவும் அதை வீட்டில் பகிர்ந்து கொண்டான்.

“சூப்பர் அண்ணா… மருமகனோ மருமகளோ வர நேரம் நீ எஸ்.ஐ ஆகிடுவ..” என்று வேணி குதூகலிக்க, மகனிடம் தெரியும் மாற்றத்தில் நெகிழ்ந்துவிட்டார் பார்வதி. 

முன்பு போல் குத்தல் பேச்சு இல்லை, வாரம் இருமுறை அவனே அழைத்து நலம் விசாரிப்பது ஆகட்டும், வேணியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்பதாகட்டும் அவனது மாற்றத்தில் தாயாய் அவர் உருகிவிட்டார். அவருக்கு எங்கே தெரிந்தது இங்கு விவரம் கேட்டு அந்த பக்கம் ஒப்பிவித்து அவள் முகத்தில் படரும் மெச்சுதல் பார்வை பார்க்கவென முதலில் வீட்டில் பேச ஆரம்பித்தவன் போகப்போக அவனே இளகி போய்விட்டான் என்று. 

வேணி வீட்டில் வரிசை வைக்கும் போது மீண்டும் அவன் திருமண பேச்சு வர, அங்கு மறுத்தவன் வீட்டிற்கு வந்து அதிராவை பற்றி சொல்லிவிட்டான்.

“அந்த எஸ்.பியா… பெரிய பதவில இருக்காங்க நமக்கு ஒத்துவருமாயா?” என்று பார்வதி பார்க்க, அவரை முறைத்தவன், “இப்போ நான் இப்படி இருக்க காரணமே அவங்கதான். என்னையே சமாளிக்குறாங்க வீட்டையெல்லாம் அழகா மேனேஜ் பண்ணுவாங்க.” என்கவும் வீட்டில் பெரிதாக மறுப்பில்லை. 

ஊருக்கு திரும்பி வந்ததும் அன்று காலையே சொல்லிவிட்டான் உடை எடுக்க செல்லவேண்டும் என்று. அதிரா தயங்கி நின்றாள்.

“எப்போ ப்ரீனு சொல்லுங்க, நாம போய்ட்டு வந்துரலாம்.”

“அதெல்லாம் வேண்டாமே.”

“எனக்கு வேணும்.” என்று பிடிவாதமாய் நின்றவனுக்கு இரவு வரை பிடிகொடுக்கவே இல்லை அதிரா. 

இரவு உணவு முடித்து எழுந்தவன், “கடை பூட்டுற நேரம். கூட்டம் இருக்காது இப்போ போலாம்.” என்று நின்றான்.

“டையர்டா இருக்கு அகிலன்.” என்று கண்களை மூடிக்கொள்ள,

“அப்போ நான் எடுத்துட்டு வரதை நீங்க போட்டுக்கணும். டீல்?” என்று இவன் பேச, அப்பப்பா எப்படியெல்லாம் மடக்குகிறான் என்று நினைத்தவளுக்கு அவனுடன் செல்ல விழைந்தது மனம்.

இங்கு வந்த நான்கு மாதத்தில் வேலை விடுத்து சொந்த விஷயங்கள் எதற்கும் வெளியே செல்லவில்லை அவள். அவன் இவ்வளவு வற்புறுத்தும் போது சென்று பார்ப்போமே என்று தோன்ற, எழுந்துகொண்டாள்.

“பிரெண்டோட வண்டி தான் இருக்கு. நாம உங்க கார்ல போலாமா?”

“டிபார்டெண்ட் கார் வேண்டாம். நீ வெளில புக் பண்ணு, நான் வந்துறேன்.” என்று நகர்ந்தவள் குர்தி செட்டில் கிளம்பி வந்தாள். 

இவன் போலீஸ் உடையில் இருக்க, “இதோட வரப்போறியா?”

“இதுக்கு என்ன? யூனிபார்ம் பாத்ததும் நல்லா எடுத்து போடுவாங்க.” என்றவனை முடிந்த மட்டும் முறைத்தவள், “வேலைக்கும் பர்சனலுக்கும் வித்தியாசமே காட்ட மாட்டில்ல… எங்க போனாலும் இன்புலூயன்ஸ் யூஸ் பண்ணா அதுல பர்சனல் ஸ்பேஸ் எங்க இருக்கு. ரெண்டுக்குமே உண்மையா இருக்கிறது இல்லை.” என்று முணுமுணுத்து பிடிவாதமாய் அமர்ந்துகொள்ள,

“போற வழில என் ரூமுக்கு போய் மாத்திட்டு வரேன். இப்போ வர்றீங்களா?” என்று அவன் இறங்கி வர, சமாதானமாகி கிளம்பினாள்.

செல்லும் வழியில் அறைக்குச் சென்று உடை மாற்றி பின் இருக்கையில் வந்து அவளருகில் அமர்ந்துகொண்டவன், “பர்சனல்… பர்சனல்…” என்று கேலி பேசியபடி சற்று நெருங்கியே அமர்ந்தான். ஏதாவது பள்ளத்தில் காரின் டயர் விழுந்து எழுந்தால் இருவரின் தோள்களும் உரசிவிடும் என்ற நிலையில் இருந்தனர்.

கைகளை இறுக கட்டிக்கொண்டு அமர்ந்த அதிராவின் தோள்களை நிமிடத்துக்கு நிமிடம் உரசும்படி சாலையின் குழிகள் உபயம் செய்ய இருவரின் இதழ்களும் ஓயாது விரிந்திருந்தது.

அந்த பிரமாண்ட கடையில் கூட்டம் குறைந்திருக்க, முதலில் அதிராவுக்குத்தான் பார்க்கலாம் என்றான். சரியென்று அவனுக்கு உடன்பட்டு அதிரா சல்வார் இருக்கும் இடத்திற்கு செல்ல, அகிலனின் முகம் புடவை தளத்தில் பதிந்து மீண்டது.

அதிரா தனக்கு பிடித்தது போல் பார்க்க, அகிலன் அவள் ட்ரையல் பார்க்க எடுக்கும் உடைகளை கையில் வைத்தபடி பின்தொடர்ந்தான். இடையே அவனுக்கு பிடித்த இரண்டு உடைகளையும் சேர்த்துக் கொடுக்க, கண்டுகொண்டவள் முதலில் அதை போட்டுப்பார்த்தாள். அவன் கொடுத்த இரண்டில் ஒன்று திருப்தியாய் இருக்க, வெளியே வந்தவள், “இது மட்டும்தான் சைஸ் கரெக்ட்டா இருக்கு. இதுவே ஓகே.” என்க, சிறகில்லாமல் பறந்தான் அகிலன். 

“உங்களுக்கு போட சிரமம் இல்லையே? கை எதுவும் வலிக்குதா?” என்று கேட்டுக்கொண்டான்.

“இது பிரென்ட்ல கொஞ்சம் பட்டன் இருக்கு. சோ கஷ்டம் இல்லை.” என்று சொல்லி பில் செக்ஷனுக்கு செல்ல, அகிலன் தன் பர்ஸை எடுக்கவும் உரிமையை அதை பிடுங்கியவள் தன் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.

“நாந்தான் கொடுப்பேன்.” என்றவனிடம், “எஸ்.ஐ ஆனதும் முத மாச சம்பளத்துல வாங்கிக்கொடு.” என்றுவிட்டாள்.

அடுத்து அவனுக்கு பார்க்க செல்ல, “முன்னாடியே எடுக்கலையா?” 

“நீங்க எடுத்து தர மாட்டிங்களா?” என்று கேட்க, அவளே ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தாள்.

ட்ரையல் பார்த்து வெளியே வந்தவன், “லூசா இருக்கு.” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, எதற்கு சிரிக்கிறான் என்று பார்த்தாள் அதிரா.

“வெய்ட் குறைஞ்சிருக்கு. ஒரு சைஸ் சின்னது பாக்கலாம்.” என்றவனிடம் அத்தனை உற்சாகம்.

அவனது களிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள அவளது உடை நிறத்திலேயே சட்டையொன்று அவள் கண்ணில் பட, அதை எடுத்து நீட்டினாள். கள்ளச் சிரிப்புடன் வாங்கிப் போட்டு பார்த்து வந்தவன் பில் செக்ஷன் நகர,

“அந்த சட்டை கரெக்ட்டா இருக்கா? வெளில வரவே இல்லை. நான் பாக்கல.” என்று அதிரா முகம் சுருக்கினாள்.

“நீங்களும்தான் ட்ரையல் ரூமலையே மாத்திட்டு வந்துட்டீங்க.” என்றான்.

‘பழிக்கு பழியா.’ என்று பார்த்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பில் செய்துவிட்டு இருவரும் வெளியே வர, அகிலன் பைகளை வைத்துக்கொண்டான்.

கார் புக் செய்ய அதிரா அலைபேசியில் செயலியை பார்த்துக்கொண்டிருக்க, அதை பிடுங்கியவன், “சின்ன வாக்?” என்று ஆர்வமாய் பார்க்க, லேசாக அசைந்தது அவள் தலை. 

இடப்பக்கம் இருந்த நடைப்பாதையை காட்டியவன் அவளை இடப்பக்கம் விட்டு வலப்பக்கம் நடந்தான்.

கூட்டம் குறைந்த அந்த வேளையில் கடைகள் ஒவ்வொன்றாய் பூட்டிக்கொண்டிருந்தனர். சாரல் காத்தோடு சேர்ந்து லேசான தூறலும் விழ, கைகளை உடலுடன் கட்டிக்கொண்டு நடந்த அதிரா பக்கவாட்டில் அவனை அவ்வப்போது பார்த்த வண்ணம் நடக்க,

“முன்னாடி பாத்து நடக்கணும்.” என்று அவளை சட்டென்று பிடித்து தன் புறம் இழுத்திருந்தான் அகிலன்.

ஒரு நொடி அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது இடப்பக்க தோளில் சாய்ந்திருக்கிறோம் என்பது மட்டும் கருத்தில் பதிய அப்படியே லேசாக நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பார்வைக்கு வாட்டமாய் அவனது கூர்நாசி வேகமாக மூச்சுக்களை இழுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. அவளது தலை அவனது நெற்றியை எட்டியிருக்க, அவனது உயரம், நிறம், அவனது கூர் விழிகள் என்று அவனது முகத்தை அப்போதுதான் ஆராய்ந்தாள். முன்பு எட்ட நின்று அவனை பார்த்து பழகியதற்கும் இத்தனை அருகில் இப்போது பார்ப்பதற்கும் மலையளவு வித்தியாசம் தெரிந்தது. அவனது விழிகள் ஈர்ப்பது போல் பிரம்மை உருவாக கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவனது கரங்கள் அழகாய் அவள் தோள் சுற்றி முன்னோக்கி நடத்தி அழைத்துச் சென்றது. காரில் ஏறி அவளை வீட்டில் விடும் வரையிலும் இருவருக்கிடையில் இருந்த அந்த மாயவலை அறுபடவே இல்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!