Skip to content
Post Views: 5,464
அத்தியாயம் 17
மதுசூதனனன் பூர்ணியின் மீது கொண்டிருந்த ஊடலை எல்லாம் மறந்து மனைவியாகப் போகிறவளுடன் இணைந்து உற்றார் உறவினர்களை வரவேற்று, அவளுக்கு அறிமுகப்படுத்தி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து என மிகவும் சந்தோஷமாக இருந்தான்.
சங்கர், “போகஸ் லேம்பே வேணாம்..டி. உங்கண்ணன் முகத்திலயே தனி ஒளிவட்டம் தெரியுது….” என கிண்டல் செய்துகொண்டிருந்தான், பானுவிடத்தில். அவனது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது அவனது உள்ளத்தின் மகிழ்ச்சி. அத்தனை அழகாய் பூரணியுடன் பொருந்தி நின்றிருந்தான்.
Advertisement
மறுநாள் முகூர்த்தத்தன்று காலை குளித்து முடித்து தான் ரெடியாகி, சங்கரை வந்து எழுப்பிக் கொண்டிருந்தாள் பானு. அவன் எழாமல் புரண்டு படுக்கவும், அவனது தோளில் கைவைத்து அவனை அசைத்து எழுப்பினாள். அவளது தொடுதலில் கண்விழித்தான். பானுவின் அருகாமையில், அவளின் வாசம் உணர்ந்து, நிமிர்ந்து பார்த்தவனது நாசியை நிறைத்தது அவள் மேலிருந்து வந்த நறுமணம்.
தனது முகத்திற்கு நேராக ஈர முடியை விரிய விட்டு, வெளிர் மஞ்சள் பட்டுப் புடவையில் பளிச்சென்ற புது பொலிவுடன் குனிந்திருந்தவளைப் பார்த்ததும், காளையின் மனது கட்டவிழ்த்து கொண்டு அலைபாய துடித்தது.
அவளை இழுத்து மேலே சரித்துக் கொள்ள கை துடிதுடித்து… பரபரத்தாலும்…, இருக்கும் இடத்தையும், சூழ்நிலையும் கருதி தன்னை அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க முற்பட்டான்.
Advertisement
சங்கர், ‘குட்மார்னிங்’, என அவள் கையைப் பிடித்து தனக்கு பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு, அவளது முடியில், அவனது விரல்களை விட்டு அலைய விட்டான்.
Advertisement
“தலையை நல்லா துவட்டலையா……? இவ்வளவு ஈரமாயிருக்கு………….?”
அவனது தொடுகையில் வெட்கம் வந்து, அவனுக்கு பதில் கூற தடுமாறிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சங்கர், “மஞ்சள் பூசுனியா…… முகத்துல, முகமெல்லாம் மஞ்சாயிருக்கு………”
Advertisement
பானு, ஹ்ம்ம்…………….., “நீங்க எழுந்திருங்க. நேரமாகுது. நான் போய் உங்களுக்கு காப்பி எடுத்துட்டு வரேன்”.
“ம்ப்ச், கொஞ்ச நேரம் உட்காரு. இங்க வந்ததுல இருந்து ஓடிக்கிட்டே இருக்க. சரியா பேச கூட மாட்டேன்ற………. புருஷனை கண்டுக்கறதேயில்ல”.
இவனது வார்த்தையில் நாணம் வந்து அவன் கண்களை பார்க்க முடியாமல் உட்கார்ந்திருந்தாள்.
அவளது சிவந்திருந்த கைகளைப் பிடித்து பார்த்து “மருதாணி போட்டியா…….? அழகாயிருக்கு”, என அவளது உள்ளங்கையைப் பிடித்து அதில் முத்தமிட்டான். ‘ஏற்கனவே அவனது தொடுகையிலும் பார்வையிலும் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு, அவனது முத்தத்தில் உண்டான பரவசத்தால் நெஞ்சின் படபடப்பு கூடியது’. அவனைப் நிமிர்ந்து பார்க்க முடியாமல் முகத்தை குனிந்து கொண்டே உட்கார்ந்திருந்தாள் வெட்கத்தில்.
அதற்குமேல் அவளை சோதிக்க விரும்பாமல் எழுந்து அமர்ந்தான். “நீ போ நான் ரெடியாகிட்டு வரேன்” என தலையசைத்தான். கணவன் சொன்னதும் அங்கிருந்து விட்டால் போதும் என ஓடி வந்திருந்தாள் வேகமாக. அவளது ஓட்டத்தைப் பார்த்து முறுவலித்தவன் எழுந்து குளிப்பதற்காக பாத்ரூம் சென்றான்.
உற்றார் உறவினர்கள் சூழ, வந்திருந்த அனைவரின் வாழ்த்தோடும், பெற்றவர்களின் மனம் நிறைந்த ஆசிர்வாதத்தோடும் சுபமுகூர்த்தத்தில் தன் உள்ளம் விரும்பியவளை மங்களநாண் பூட்டி தன்னவளாக ஏற்றுக் கொண்டிருந்தான் மதுசூதனன்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து புது மணத் தம்பதியர்கள் மதுசூதனன் வீ்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே பானு ஆரத்தி எடுத்து அண்ணன் அண்ணியை வரவேற்றாள். மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து, அவர்களை ஓய்வெடுக்க சொல்லி அனுப்பினர்.
பூர்ணியுடன் வந்திருந்த அவளது அண்ணன் அண்ணி அவளை மதுசூதனன் வீட்டில் விட்டுவிட்டு, மாலை வருவதாக சொல்லி சென்றுவிட்டனர்.
மாதவி ஏற்கனவே பானுவிடம் பூர்ணிமாவைப் பற்றி கூறியிருந்தாள். அவள் கூச்ச சுபாவமுடையவள், யாரிடமும் சட்டென்று நெருங்கி பழகமாட்டாள். “நீ கொஞ்சம் பார்த்துக்கோ பானு” என சொல்லியிருந்தாள்
பானு தான் பார்த்துக் கொள்வதாக மாதவியிடம் கூறியிருந்தாள். சொன்னது போலவே, பூர்ணியை தனியாக விடாமல் அவளுடன் போய் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
பானுவின் பேச்சிலேயே அண்ணன் தங்கையின் நெருக்கம் பூர்ணிக்கு தெரிந்தது. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள், பூர்ணியின் கலைத்த முகத்தை பார்த்து, அவளை தூங்கி ஓய்வெடுக்க சொல்லி வந்துவிட்டாள்.
திருமண களேபரங்கள் எல்லாம் முடிந்திருந்தது. குலதெய்வ கோயில் பூஜை, மறுவீடு விசேஷங்கள் எல்லாம் முடிந்திருந்தது. புதுமணத் தம்பதிகளும் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல துவங்கினர்.
திருமணம் முடிந்து பானுவும் சங்கரும் சென்னைக்கு திரும்பியிருந்தனர். சரசுக்கு வருத்தம். இன்னும் இரண்டு நாட்கள் அவருடன் தங்கியிருந்து செல்லும் படி, அவர் கேட்டும், மகன் மருமகள் தங்கவில்லையென வருத்தம் அவருக்கு.
வேலையிருப்பதால் சென்னைக்கு கிளம்பியிருந்தனர். அது மட்டுமில்லாமல் பானு அடுத்த வாரத் தொடக்கத்தில் இருந்து, வேலையில் சேர வேண்டுமென்பதாலும் முன்கூட்டியே வந்திருந்தனர்.
சங்கர் வந்த அன்று காலையிலேயே வேலைக்கு சென்றிருந்தான். இரவு முழுதும் கார் ஓட்டி வந்தது அலுப்பாக இருக்கும், ‘’இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு.., நாளைக்கு வேலைக்கு போங்களேன்’’ என பானு கூறியும் மறுத்து வேலைக்கு கிளம்பியிருந்தான்.
பானு வேலைக்கு சேர்வதற்கு முன் ஒரு முறை சங்கரை அழைத்துகொண்டு, அவள் வேலையில் சேர போகும் இடத்தை நேரில் சென்று பார்த்து தெரிந்துகொண்டாள்.
சங்கரும் அவளுக்கு ட்ரெயின், பஸ் பயணத்தைபற்றின தகவல்களை, காது தீய கிளாஸ் எடுத்திருந்தான்.
முதல் நான்கு நாட்கள் அவனே அவளை வேலைக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான். வரும்போது அவளை பஸ் பிடித்து வர பழக்கியிருந்தான்.
அடுத்தடுத்த நாட்கள் காலையில் ரெயில்வே ஸ்டேஷனில் ட்ராப் செய்துவிட்டு, அவளை ட்ரெயின் பிடித்து செல்ல பழக்கினான்.
இதோ பானுவும் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனது. சேர்ந்த புதிதில் வேலை புரியாமல் திணறினாலும், முனைந்து கற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள்.
வேலைக்கு பஸ்ஸில் சென்று வருவதுதான் அவளுக்கு பெரிய அயர்ச்சியாக இருந்தது. மாலை வீடு வந்ததுமே எதையும் செய்யாமல் படுத்துவிடுவாள் அசதியால். கூட்ட நெரிசலில் பஸ் பயணம் செய்வது அவளை சோர்வுறச் செய்தது. சங்கரும் வருவதற்கு இரவு ஒன்பது மணிபோல் ஆகும் என்பதால், இவள் வேலையிலிருந்து வந்தவுடன் கொஞ்ச நேரம் படுத்து எழுந்தபின், மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினாள்.
சங்கரும் இவளுடைய வேலைப் பளுவை புரிந்து, அவனால் ஆன உதவியை செய்து தருவான். இருவருக்கும் எந்த பிணக்கும் இல்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
காலையிலேயே அரக்க பரக்க வேகமாக பூர்ணி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஜமுனா எழுந்ததும் மாட்டு வேலைகளை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுவிடுவார். அதை முடித்து அவர் வீட்டிற்குள் வருவதற்குள், பூர்ணி வேலைக்கு கிளம்பி செல்லத் தயாராகி விடுவாள்.
அவளுக்கான லன்ச்சை அவளே செய்து எடுத்துக் கொள்ள பழகியிருந்தாள். ஜமுனா செய்து தருவதாக கூறினாலும் மறுத்து தானே செய்து கொண்டாள்.
வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் அவர் ஒருவராகவே செய்வதால், தனக்காக லன்ச் செய்யும் வேலையை அவரிடம் திணிக்க விரும்பவில்லை. சிம்பிளாக கலவை சாதம் அல்லது தயிர் சாதம் என ஏதோ ஒன்றை செய்து எடுத்துக் கொள்வாள்.
நேரமிருந்தால் அவர் வந்து அவளுக்கு மார்னிங் டிபன் ஏதாவது செய்து கொடுப்பார். இல்லையென்றால் அவளே ஏதோ ஒன்று செய்து சாப்பிட்டு சென்று விடுவாள்.
மதுசூதனன் தினமும் அதிகாலையிலேயே ஒட்டலுக்கு சென்றுவிடுவான். கலியமூர்த்தியும் அவனுக்கு முன்னதாகவே எழுந்து சென்று விடுவார்.
அவர்கள் செல்வதற்கு முன் ஜமுனா எழுந்து அவர்களுக்கு எப்போதும் போல் டீப்போட்டு தந்து குடிக்க வைத்து தான் அனுப்புவார். பூர்ணி வேலை முடிந்து வரும் சமயங்களில் பெரும்பாலும் மதுசூதனன் வீட்டில் இருக்கமாட்டான்.
தினமும் மது வருவதற்கு இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகும். சில சமயங்களில் பின் இரவைக்கூட தாண்டிவிடும் அவன் வீடு வருவதற்கு.
ஆரம்பத்தில் பூர்ணிக்கு மதுவின் வேலையைப் பற்றி பெரியதாக தெரியவில்லை என்றாலும், போக போக அதனைப் பற்றி புரியும் போது மனதுக்கு வருத்தமாக இருந்தது.
ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அவன் ஓட்டலிலேயே கழித்துவிடுவதால், அவனுடைய அவளுக்கான நேரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. இது போக போக அவளுக்குள் ஏமாற்றத்தை கொடுத்தது. புதுமணப்பெண்களுக்கான எதிர்பார்ப்பு அவளிடமும் நிறையவே இருந்தது.
அவனது அசுர உழைப்பைக் கண்டு அவள் வியந்தாலும், இது என்ன? குடும்பத்துக்காக நேரம் ஒதுக்காம, எப்பவும் வேலை வேலைன்னு தொழிலையே கவனிக்கிறாங்க என நினைத்து வருத்தம் வந்தது மனதில்.
திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவர்கள் எங்கும் வெளியில் சென்றதில்லை. திருமணமான இரண்டாவது நாள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுவிட்டு, அப்படியே சினிமாக்கு என்று அழைத்துச் சென்றவன்தான். அதன் பிறகு எங்கேயும் அவளை அழைத்துச் செல்லவில்லை.
அன்று விடுமுறை தினம் என்பதால் பூர்ணி விட்டில் இருந்தாள். மெல்ல எழுந்து குளித்து முடித்து கிட்சனுக்குள் வந்தவளுக்கு தலையை சுற்றியது, அங்கு சிங்கில் இருந்த பாத்திரத்தைப் பார்த்து. ஜமுனாவும் மாடுகளுக்கான வேலையை முடித்து அப்போதுதான் உள்ளே வந்தார்.
பூர்ணி, அவரிடம் ‘ஏன் அத்தை…? நீங்களே எல்லா வேலையும் செஞ்சு கஷ்டப்படனும், மாட்டைப் பார்த்துக்கறதுக்கும், வீட்டுல மேல் வேலை பார்க்கறதுக்கும், நாம வேணா ஆள் வச்சுக்கலாமா……..?’ என்றாள்.
ஜமுனா, “இவ்வளவு நாள் நான்தான பார்த்தேன், இப்ப எதுக்கு ஆளு…….?”
அவர் ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டாரோ என பயந்தவள் “நான் தப்பா எதுவும் நினைச்சி சொல்லல, அத்தை, உங்களுக்கு ஒத்தாசையா இருக்குமேன்னு.. தான் சொன்னேன்”.
“வீட்டு வேலையும் பார்த்துட்டு, கடை வேலையையும் பார்க்கறீங்களேன்னு சொன்னேன்”.
தினமும் காலை மாலை இரண்டு வேளையும், ஜமுனாதான் கலியமூர்த்தியின் டீக்கடைக்கு வடைக்கான மாவை அரைத்து தருவது. சட்னி, சாம்பார் எல்லாம் வீட்டிலிருந்து செய்து கொடுத்து விடுவார்.
தெம்பு இருக்கற வரைக்கும் செய்யறேன். எனக்கே முடியலன்னு தெரியறப்போ ஆள் வச்சிக்கலாம், என்று பாத்திரம் கழுவ சென்றார். அவளுக்கு சங்கடமாக இருந்தது. எல்லா வேலையையும் அவரே செய்வதை எண்ணி.
அவள் எது செய்தாலும் விடவும் மாட்டார். நீ சமைக்கறது உப்பு ஒரப்பு இல்லாம சப்புன்னு இருக்கு. மாமாக்கு மதுவுக்கு எல்லாம் சுள்ளுன்னு காரமா இருந்தாதான் பிடிக்கும் என அவளை சமையல் செய்யவும் விட மாட்டார்.
காய்கறிகளை நறுக்கிக் கொடுத்து, அவளால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்து உதவுவாள். மாதவியின் வீட்டிலும் சரி, சென்னையில் அவளது பெரியம்மாவின் வீட்டிலும் சரி வீடு பெருக்க, பாத்திரம் கழுவ என ஆட்கள் இருப்பதால், சமையல் வேலை மட்டும்தான் அவர்கள் செய்யுமாறு இருக்கும்.
இங்கே காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது முதல், தோட்டம் பெருக்கி சுத்தம் செய்வது, மாடு வேலைகளைப் பார்ப்பது, வீட்டில் சமைப்பது, கடைக்கு, வடைக்காக தினமும் இரண்டு வேளையும் மாவு அரைத்து தருவது என பெரிய பட்டியலே நீண்டது.
ஜமுனா வேலைக்கு ஆள் வைத்து கொள்ள மறுத்து விட்டதால், மதுவிடம் பேசிப் பார்க்கலாம் என எண்ணத்தை மாற்றிகொண்டாள் மனதில்.
அன்று வெளியிலிருந்து, இரண்டு வீட்டு விசேஷங்களுக்கு விருந்துக்கான ஆர்டர் வந்திருந்ததால் மதுசூதனன் பகலில் வீட்டுக்கு வரவேயில்லை. இரவு வருவதற்கும் பதினொரு மணிக்கு மேல் ஆகியது.
பூர்ணிமாக்கு விடுமுறை அன்று கூட கணவனுடன் இருக்க முடியாததை நினைத்து ஏமாற்றமாக இருந்தது. அன்று இரவு அவன் வந்த அரவம் கேட்டும், கண்ணைத் திறக்காமல், அசையாமல் படுத்திருந்தாள், அவன் மீதிருந்த கடுப்பில்.
மனைவி உறங்குவதைப் பார்த்தவன், சத்தம் செய்யாமல் சென்று குளித்து உடை மாற்றி வந்து படுத்தான். பூர்ணியின் அருகில் படுத்தவன் அவளை இழுத்து அவனது மார்போடு அணைத்துக் கொண்டான் வாகாக.
அவனது செயலில் கண் திறந்து பார்த்தவள், ‘’விடுங்க’’ என அவனிடம் இருந்து விலக முயன்றாள்.
மது, “நீ தூங்கலன்னு தெரியும், சும்மா தூங்கற மாதிரி கண்ணை மூடிட்டு படுத்திருந்தா….. தூங்கறதா நம்பிடுவேனா……..?”
“இதான் நீங்க வீட்டுக்கு வர நேரமா….? வீட்டுல ஒருத்தி இருக்கான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா….? எனக்கு இன்னைக்கு லீவு தான, பகல்லயும் வீட்டுக்கு வரல. அட்லீஸ்ட் நைட்டாவது சீக்கிரம் வந்திருக்கலாம் இல்ல. அதுவும் இல்ல…” என முறுக்கிக்கொண்டாள்.
“ஓஹ்…… அதான், கோவமா……., இன்னைக்கு வெளியிலிருந்து இரண்டு பெரிய ஆர்டர்டா…….., கூடயிருந்து கரெக்டா டெலிவரி பண்ண வேண்டியதா இருந்தது. கூடயில்லனா ஏதாவது செஞ்சு சொதப்பிடுவாங்க. அதான் பகல்ல வரமுடியல………..”
“எப்பவும் வேலைதானா….. அட்லீஸ்ட் நான் வீட்ல இருக்கற நாள்லயாவது என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் இல்ல………”
‘எனக்கும் ஆசைதான், உன்கூட இருக்கனும்னு, ஆனால் வேலை இருக்குல. ஒட்டல் பிஸ்னஸ் நீ நீனைக்கற மாதிரி கிடையாது. ஒவ்வொன்னும் கூடயிருந்து பார்த்து வேலை செய்யனும், வேலையும் வாங்கனும், அப்பதான் எல்லாம் சரியா நடக்கும்’.
“பெரிய பெரிய ஓட்டல்ல மேனேஜர், சூப்பர்வைசர்னு ஆள் போட்டு தொழில் செய்வாங்க. என்னோடது சின்ன ஓட்டல்”.
“இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். நானே கூட நின்னு வேலை வாங்கனாதான் வேலை ஆட்கள் கரெக்டா செய்வாங்க, தப்பு வராம பார்த்துக்கலாம். அவங்க செய்யட்டும்னு விட்டுட்டு வந்தா, சாபாட்டுல டேஸ்ட் சரியாயில்லாம போகலாம். சொல்ற நேரத்துல சரியா டெலிவரி பண்ணுவாங்களான்னு தெரியாது. ஏகப்பட்ட குளறுபடி பண்ணுவாங்க. அவங்களை நம்பி விட்டோம்னா… ஓட்டல் பேர் கெட்டுப் போயிடும்”.
“தொழில்ல நல்ல பேர் எடுக்கனும்றது ரொம்ப முக்கியம். ஏதாவது ஒரு… கஸ்டமர் கிட்ட பேர் கெட்டுப் போயிடுத்துனா கூட நமக்குதான் நஷ்டம். அதுவும் இப்பதான் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்கேன்”.
“என்னுடைய எத்தனை நாள் கனவு தெரியுமா………….?ஓட்டல் ஆரம்பிக்கனும்றது. கடன் வாங்கிதான் தொழிலே ஆரம்பிச்சுருக்கேன். கடனை நான் சரியா அடைக்கனும்னா, நேரம் காலம் பார்க்காம உழைச்சா தான முடியும்.
பூர்ணி, “புரியுது, இருந்தாலும் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசந்தான் ஆகுது. காலையிலயும் எழுந்ததும் கிளம்பிடறீங்க. நைட்டும் லேட்டாகுது வீட்டுக்கு வர, எப்பதான் நான் உங்களோட இருக்கறது”.
பெரு மூச்சு விட்டவன், “கஷ்டந்தான் உன்னோட ஆசை புரியுது. தொழில் வளர்ற வரைக்கும்ர நாம இதுலாம் அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஆகனும்”.
“இத்தனை கேள்வி கேட்கறயே, புருஷன் வந்ததும் சாப்பிட்டானான்னு கேட்டியா…………………. நீ ?”
“இன்னுமா…. சாப்பிடல. நீங்க எப்பவும் சாப்பிட்டு தான வருவீங்கன்னு, நான் விட்டுட்டேன்”.
“பொண்டாட்டி இன்னைக்கு வீட்ல இருக்காளே, வீட்டுல போய் சாப்பிடலாம்னு வந்தேன்…”
“நிஜமாவே நீங்க சாப்பிடலையா…., சும்மா எனக்காக சொல்றீங்களா….? என்றாள் நம்பாமல்”.
“ம்ப்ச், பசிக்குதுடா……..”
எழுந்து உட்கார்ந்து அவனைப் பார்த்தவள், அவன் முகத்தில் தெரிந்த கலைப்பில், ஏதும் பேசாமல், நேராக கிட்சன் சென்று கேஸை ஆன் செய்தாள்.
அவள் பின்னாடியே வந்து நின்றான் மது.
மது, “என்ன ஸ்பெஷல் இன்னைக்கு, மருமகள் வீட்டுல இருக்க…….., அம்மா ஏதாவது செஞ்சிருப்பாங்களே….”
ஹ்ம்ம், “அத்தை இன்னைக்கு அடையும் அவியலும் செஞ்சாங்க……….., உங்களுக்கு தோசை ஊத்தவா, அடை தட்டவா………?”
“இந்நேரத்துல அடை சாப்பிட்டா செரிக்காது, தோசையே ஊத்து….”
” டேஸ்டா நல்லா இருக்கு, பிஞ்சு பரங்கிக்காய் சீவி போட்டு செஞ்சிருக்காங்க. செம டேஸ்ட். ஒன்னே ஒன்னு சாப்பிடறீங்களா………? “
ஹம்ம்….
ப்ரிட்ஜிலிருந்து அடை மாவை எடுத்தவள், முதலில் தோசைக் கல்லில் எண்ணெய்யை தடவிவிட்டு கரண்டியால் அடை மாவை எடுத்து சுற்றி ஊற்றினாள். அது சரியாக ஊற்ற வராமல் கட்டி கட்டியாக கல்லோடு ஒட்டி, திரட்டிக்கொண்டு வந்தது.
“அத்தைக்கு மட்டும் கரெக்டா வந்தது, எனக்கு சரியா வர மாட்டுது….”.
அவளைப் பார்த்து சிரித்தவன், “இப்படி வா பூர்ணி, நான் ஊத்தறேன்” என்று தனது கைகளைக் கழுவி வந்து அடை மாவை கைகளாலேயே எடுத்து தட்டி விட்டான் தவாவில்.
பூரணி, “அத்தை கூட கையாலதான் தட்டினாங்க, நான் கரண்டி போட்டதால தான் வரலையா…………?”
‘அடை மாவு கட்டியா இருந்தா கையால தட்டினா தான் நல்லா வரும். கொஞ்சம் தண்ணி சேர்த்து கலந்தேனா கரண்டியால ஊத்த வரும்’. அம்மா எப்பவும் கையால தட்டற மாதிரி கெட்டியாதான் அரைப்பாங்க.
அவனை ஆச்சர்யமாக பார்த்தாள். “நீங்க வீட்லயே இருக்கறது இல்ல. உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்…..?”
அவள் தலையில் தட்டிவன், “அறிவே நான் பொறந்ததிலிருந்து எங்க அம்மா கூட தான் இருக்கேன், அவங்க சமையலை சாப்பிட்டுதான் வளர்ந்திருக்கேன்”. என்றான்.
‘அவங்க எப்படி செய்வாங்கன்னு எனக்கு தெரியாதா…….?’
‘ஹ்ம்ம்……. அதுக்கு கேட்கல…?’ எங்க வீட்டு ஆம்பிளைங்க எல்லாம் கிட்சன் பக்கமே வர மாட்டாங்க. சென்னையில பெரியப்பா, அண்ணன், இங்க அக்கா வீட்டுலயும் மாமாகூட, யாருமே கிட்சன் பக்கம் வந்து நான் பார்த்தது இல்ல.
நீங்க கரெக்டா சொன்னதும், அடை தட்டனதையும் பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அதான் கேட்டேன்.
“சின்ன வயசுல அம்மா சொல்லி குடுத்ததுதான் இது எல்லாம். எப்பவும் வீட்டு வேலைக்குன்னு ஆள் எல்லாம் கிடையாது. எல்லா வேலையும் அம்மாவும் நாங்களும் தான் செய்வோம். அதனால சின்ன வயசிலேயே எனக்கும் பானுக்கும் கிட்சன் வேலைய எல்லாம் அம்மா பழக்கிட்டாங்க……”
அவங்க சமையல் அவ்வளவு ருசியா இருக்கும், “அதுவும் அவங்க அரைச்சு தர அந்த வடை மாவுல வடை போட்டோம்னா கடையில கொஞ்ச நேரத்துலேயே எல்லா வடையும் வித்து முடிஞ்சுடும். அதுக்கு அவ்வளவு டிமான்ட்”.
அம்மா இல்லாதப்ப…, “நாங்க வேற யாராவது அந்த மாவு அரைச்சா, அந்த டேஸ்ட் வரது இல்ல. அது அவங்க கைப் பக்குவம்”. அவங்களோட ஸ்பெஷல்னுகூட சொல்லலாம்.
அதான் இன்னைக்கும் விடாம அவங்களை அரைச்சு தரச் சொல்லி அப்பா கடைக்கு வாங்கிட்டு போறார்.
“அவங்க சமையலோட ருசிய பார்த்துதான், எனக்கு ஓட்டல் ஆரம்பிக்கற ஐடியாவே வந்தது”.
‘நானே உங்ககிட்ட பேசனும்னு நினைச்சேன், நல்லவேளை நீங்களே ஞாபகப் படுத்திட்டீங்க…………….’
“வீட்டு வேலைக்கு ஆள் வைச்சா, என்னங்க…………………?”
அவளை திரும்பி பார்த்தவன், “இதை யார் சொன்னா…………? நீயே சொல்றயா…………….., இல்ல அம்மா சொன்னாங்களா…………………..?”
‘அத்தை சொல்லல, நான்தான் சொல்றேன்.’
“ஏன்? இத்தனை நாள் அம்மா தான செஞ்சாங்க, இப்ப மட்டும் என்ன………..?”
“என்னடா…………..இது?” அம்மாவும் பிள்ளையும் ஒரே மாதிர கேள்வி கேட்கறாங்க………. என நினைத்தாள்.
“நான் அதுக்கு சொல்லல, எல்லா வேலையும் அத்தை ஒரே ஆளா செஞ்சு கஷ்டப் படறாங்க இல்ல, அட்லீஸ்ட் பாத்திரம் கழுவ, மாடு வேலைய பார்க்க மட்டுமாவது ஆள் வைக்கலாம் இல்ல…..”
“வீட்டுல எல்லாம் அம்மா டிசிஷன் தான். அம்மாக்கு வேணும்னா…., அவங்க வச்சுப்பாங்க. நீ இதுல எல்லாம் தலையிடாத…….. பூர்ணி”
“அவளுக்கு அவன் அப்படி பேசியது என்னவோபோல் இருந்தது. ஏன்? நான் தலையிடக் கூடாது? அப்ப நான் இந்த வீட்டு ஆள் இல்லையா……?” என உள்ளுக்குள் முரண்டியது.
‘அவங்க மட்டும் தனியா வேலை செய்யும் போது பார்க்க கஷ்டமாயிருக்கு, அதான் சொன்னேன்…’
“பாரக்க கஷ்டமாயிருந்தா……………. நீயும் கூட செய்……….”
“எவ்வளவு ஈசியா…. சொல்றான்? என்னால போய் மாட்டுத் தொழுவத்தில நின்னு வேலைப் பார்க்க முடியுமா……? இங்க சமையல் வேலையாவது செய்யலாம்னா……, உன் சமையல் சரியில்லன்னு அதையும் விடமாட்றாங்க…….”
“இதோ இவனே சொல்றானே, அம்மா சமையல் ருசியா இருக்கும்னு, அதனால தான் எனக்கு ஓட்டல் ஆரம்பிக்கற ஐடியாவே வந்ததுன்னு..”.
“என்னன்னு சொல்றது இவன்கிட்ட, என்னால சாணியெல்லாம் அள்ள முடியாதுன்னா……………,? இல்ல உங்கம்மா சமைக்கவே விட மாட்றாங்கன்னா……………..” எது சொன்னாலும் அது தவறாக போகும் என முடிவு செய்து, வாயை மூடிக் கொண்டாள்.
அந்த அடையுடன், ஒரு தோசையையும் ஊத்திக் கொடுத்து அவன சாப்பிட்டதும், ப்ரிட்ஜில் மீதத்தை எடுத்து வைத்து உள்ளே வந்து படுத்தனர்.
மது, “பானு போன் பண்ணாளா உனக்கு………?”
ஹ்ம்ம்….., பேசியிருந்தாங்க. “நம்மள அங்க விருந்துக்கு வரச் சொல்லி கூப்பிட்டிருந்தாங்க….”
ஆமாம். எனக்கும் போன் பண்ணியிருந்தாள் அண்ணிய கூட்டிட்டு வாண்ணேன்னு. மாப்பிள்ளையும் கூப்பிட்டாரு போன்ல. எப்ப போலாம்..?
வர சாட்டர்டே சன்டே வர முடியுமான்னு கேட்டாங்க. அவங்களுக்கும் லீவா இருக்குமில்லன்னு.
இரண்டு நாள் முடியாது, சாட்டர்டே நைட் கிளம்பி சன்டே மார்னிங் அங்க இருக்கற மாதிரி போயிட்டு அன்னைக்கு நைட்டே கிளம்பிடலாம். எனக்கு இங்க வேலையிருக்கும்.
சென்னைக்கு போனா……….., எங்க பெரிம்மா வீட்டுக்கும் போகனும்…….
அங்கலாம் என்னால வர முடியாது பூர்ணி. ஏன்னு உனக்கும் தெரியும், தெரிஞ்சே என்னை கூப்பிடாத…..
அந்த வார சனிக்கிழமையன்று திட்டமிட்டபடி மதுவும் பூர்ணியும் சென்னைக்கு விருந்திற்கு கிளம்பியிருந்தனர்.
கணவனை வெட்டவா குத்தவா என்ற ஆத்திரத்தில் உட்கார்ந்திருந்தாள் பூர்ணிமா.
பூர்ணிக்கு மனதெல்லாம் காய்ந்தது கோவத்தில் கணவனின் மீது. பயங்கர கடுப்பில் இருந்தாள் கணவனின் மீது. பானு வீட்டிற்கு விருந்துக்கு செல்கிறோம் பேர்வழி என எல்லோரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டாகிற்று.
தொடரும்.
error: Content is protected !!