Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – இறுதி அத்தியாயம் 2

அத்தியாயம் – 23

அந்த காலை வேலையில் பரபரப்பாக கிளம்பியவளை மெத்தையில் படுத்தபடி சோபையாய் பார்த்துக்கொண்டிருந்தான் அகிலன். அனாசியமாக தலை வாரி கொண்டையிட்டவளை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவனது அணுக்கள் அத்தனையும் துடித்தாலும் அருகில் சென்றால் லத்தி சார்ஜ் தான் என்று தெரிந்து ரசிக்க மட்டும் செய்தான். 

“இன்னைக்கு ஜிம் போகலையா அகி?” என்று கேட்டபடி பெல்ட் போட்டாள் அதிரா.

“நைட்டே நிறைய ஒர்க்அவுட் போட்டாச்சு அதனால ரெஸ்ட் இன்னைக்கு.” என்றவனை சரியாக பதம்பார்த்து சீப்பு.



Advertisement

“டொமெஸ்டிக் வயலன்ஸ் மேடம். எனக்கும் சட்டம் தெரியும், அப்புறம் கேஸ் கொடுத்துடுவேன் பாத்துக்கோங்க.” சிரிப்பினூடே அவன் வாதம் செய்ய, அந்த சிரிப்பு அவளையும் தொத்திக்கொண்டது.

“கேஸ் கொடுக்கும் போது செக்ஷன் 326ஐயும் சேர்த்து கொடுத்துடு.” அது என்ன செக்ஷன் என்று அவன் யோசிக்கும் முன்னே லேசாக பல்தடம் பதியும் வண்ணம் வாகாக இருந்த அவனது வெற்றுத்தோளில் கடித்துவிட்டு ஓடினாள் அதிரா.

போர்வையை தூக்கி வீசிவிட்டு பாய்ந்து எழுந்தவன், “அதி…” என்று கத்திக்கொண்டே அறைக்கதவை திறந்து வெளியே செல்ல, அங்கு வேலையால் இருப்பது உணர்ந்து மீண்டும் உள்ளே பதுங்கிவிட்டான்.

Advertisement

உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உடை மாற்றி வந்தவன் கமுக்கமாக அமர்ந்து ஸ்மூத்தீ குடித்துக்கொண்டிருந்தவள் அருகில் எதுவோ எடுப்பது போல் சென்று, சமயம் பார்த்து இடை கிள்ளி கன்னத்தில் முத்தம் வைத்து நகர்ந்திட, அமர்ந்தவாக்கிலே துள்ளியவள் அவன் முதுகில் அடிக்கப்போக அவன் நழுவி வெளியே ஓடியிருந்தான்.

Advertisement

செல்லமாக அவனை கடிந்துகொண்டே மதிய உணவை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அதிரா. அலுவலகம் சென்று தேங்கியிருந்த வேலைகளை முடித்துவிட்டு கழிவுகளை ஆராய்ச்சி செய்யும் இடத்திற்கு வந்தாள். ஆராய்ச்சி முடிவுகள் தயாராய் இருந்தது.

“குப்பைகளோட ரியாக்ட் ஆகி ஏகப்பட்ட கெமிக்கல் காம்பொனன்ட்ஸ் நாங்க பைண்ட் பண்ணோம். ஆனா அதுல நோட் பண்ண கூடிய அதிக அளவுல இருக்குறது டீடீடி – டைக்ளோரோ டைபினைல் ட்ரைக்ளோரோயீதேன். இது மேன்மேட் இன்செக்டிசைட். இப்போ நம்ம நாட்டுலேயே மஹாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா இந்த மூணு இடத்துலதான் தயாரிக்குறாங்க. கேரளாவுல கூட க்ளோஸ் பண்ணிட்டாங்கனு நினைக்குறேன். அது எப்படி இந்த இடத்துல இவ்ளோ இருக்குனு புரியல.”

“டீடீடி தயாரிக்குற இடத்துல தான் இதோட அளவுகள் அதிகமா இருக்கும்னு சொல்றீங்களா?” என்று கேட்டாள் அதிரா.

Advertisement

“அஃப்கோர்ஸ். டீடீடி தயாரிக்க ஒருசில கெமிக்கல்ஸ் யூஸ் பண்ணுவோம். அந்த கெமிக்கலும் சாம்பிள்ஸ்ல குறிப்பிட்ட அளவு இருக்கு.” என்று அவர்கள் உறுதியாய் சொல்லவும் தெளிவு பெற்றவளாய் கிளம்பினாள் அதிரா.

அலுவலகத்துக்கு வந்தபின் பரிதிக்கு அழைத்தவள் அந்த இடத்தை பற்றி இருபது வருடங்களுக்கு முன் இருக்கும் தரவுகளை எடுத்துவருமாறு ஆணையிட,

“இருபது வருஷம் முன்னாடி அந்த ஏரியா வேற சரகத்து கண்ட்ரோல்ல இருந்துச்சு மேம். போன முறை நீங்க விசாரிக்க சொன்னப்போகூட மெனக்கெட்டு தேடி வாங்குனேன். கொஞ்சம் டைம் கொடுங்க, அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு பேசி அவங்களை கலெக்ட் பண்ணி எடுத்துட்டு வர சொல்றேன்.” என்ற பரிதிக்கு இரண்டு நாட்கள் முழுதாய் தேவைப்பட்டது காரியத்தை முடிக்க.

அன்று காலையே அந்த இடம் குறித்த விவரங்களை எடுத்துக்கொண்டு எஸ்.ஐ வந்திருக்கிறார் என்று உதவியாளர் உள்ளே வந்து சொல்லவும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை ஒதுக்கி வைத்தவள், “உள்ள வர சொல்லுங்க.” என்று நிமிர்ந்து அமர, கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

அவனோ அவள் பார்வையை கண்டுகொள்ளாது சல்யூட் வைத்து எடுத்து வந்திருந்த கோப்புகளை நீட்ட, அதை வாங்கி மேசையில் வைத்தவள் புன்னகை முகமாய் எழுந்து வந்தாள்.

“என் வேலை முடிஞ்சிடுச்சு. கிளம்பலாமா மேடம்?”

“வீட்ல கூட தெரியல. இப்போ இங்க இந்த யூனிபார்ம்ல உன்னை பிட்டா பார்க்கும் போது அப்படியே…” சொல்லாமல் செயலில் அவனை கட்டியணைத்துவிட, 

“வேலை நேரத்துல பெர்சனல் கொண்டுவரக்கூடாதுனு என் வைஃப் சொல்லியிருக்காங்க மேடம்.” என்று மேடமில் அகிலன் அழுத்தம் வைக்க, “சரியாத்தான் சொல்லியிருக்காங்க மிஸ்டர். அகிலன். அந்த இடம் உங்க ஏரியா கண்ட்ரோல்லையா வருது?” என்று வேலையில் அவள் கவனம் சென்றுவிட, இவன் தடுமாறிவிட்டான்.

“சும்மா நின்னவனை கட்டிபுடிச்சி தூண்டிவிட்டுட்டு நீ ஜம்பமா வேலை பாக்க உக்காந்துட்ட…” என்று சிணுங்கிக்கொண்டே அவளெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான் அகிலன். 

நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாலே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை, தண்ணீர் பாட்டிலை அவன் புறம் நகர்த்தி வைத்தாள். அரை பாட்டிலை காலி செய்தபின் நிதானத்துக்கு வந்தவன், “வேற எதுவும் டீட்டியல்ஸ் வேணுமா அதி?”

“இந்த பைல்ஸ் படிச்சியா?”   

“இல்லை. நேத்தி நைட் ஏட்டு கலெக்டர் ஆபீஸ் போய் இதை கலெக்ட் பண்ணி வச்சியிருந்தாரு. சரி பொண்டாட்டி வேலை செய்யுற அழகை பாப்போமேன்னு நானே எடுத்துட்டு வந்தேன்.” 

“மத்தது எல்லாம் வீட்ல பேசிக்கலாம். கிளம்பு.” 

“டிரைவரா இருக்குறப்போவும் சரி, காதலிச்சப்போவும் சரி, இப்போ புருஷனா இருக்கப்போவும் சரி… இந்த கிளம்புங்குற டயலாக் மட்டுமே மாறவே இல்லை. காப்பிரைட் வாங்கி வச்சிக்கோங்க மேடம்.” என்று சிரிப்புடன் அவன் எழுந்துகொள்ள, அவனை முறைத்துவிட்டு கோப்புகளில் மூழ்கிவிட்டாள் அதிரா.

அகிலன் சென்றதும் பரிதி புதிதாக கிடைத்த எழும்புக்கூட்டின் விவரங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தான்.

“புதுசா எதுவும் இல்லை மேம். இறந்து மூணு வருஷம் இருக்குமாம். எலும்புக்கூடு வச்சி மட்டும் இறப்புக்கான காரணம் கணிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க.” என்றவனிடம் அகிலன் எடுத்துவந்து கொடுத்த கோப்புகளை நீட்டினாள்.

பரிதியும் படித்துப்பார்த்து புரியாது நிமிர்ந்தவன், “இதுக்கும் கொலைக்கும் சம்மந்தம் இருக்கும்னு நினைக்குறீங்களா?”

“இதுதான் சம்மந்தமே பரிதி. டீடீடி பயன்பாடுக்கு தடை விதிச்சத்துக்கு அப்புறம் கொஞ்ச கொஞ்சமா தயாரிப்பு ஆலைகளை மூடிட்டு வந்திருக்காங்க. ஆனா குப்பை கிடங்கா இருக்குற இடத்துல முப்பது வருஷம் முன்னாடி வரைக்கும் டீடீடி தயாரிக்குற தொழிற்சாலை இயங்கிட்டு இருந்திருக்கு. அதை ப்ராப்பரா மூடுறதுக்கு முன்னாடியே பையர் ஆக்சிடென்ட் ஆகி டெமாலிஷ் ஆகியிருக்கு. அன்ட் அது பையர் ஆன சமயம் இதே மாதிரி சுத்தி இருந்த நிறைய பேருக்கு சுவாச கோளாறு இருந்திருக்கு.”

“அவ்வளவு பெரிய பேக்டரி இருந்த இடத்துல எப்படி மேம் இந்தளவு ஜனங்க குடி வர அனுமதிச்சிருக்காங்க?”

“அப்போ பேக்டரி மட்டும்தான் இருந்ததா ரெகார்டஸ் இருக்கு. 90’ஸ்ல தான் மக்கள் அந்த பக்கம் குடி பெயர்ந்திருக்காங்க. அதாவது அந்த ஆக்சிடென்ட் முடிஞ்சி தோராயமா பத்து பதினைஞ்சி வருசம் அப்புறம் தான் நகரத்தோட வளர்ச்சியில மக்கள் அங்க குடிபோயிருக்காங்க.”

“அப்போ அத்தனை வருஷம் முன்னாடி தயாரிச்ச அந்த டீடீடியோட விளைவு இன்னும் இருக்குனு சொல்றீங்களா?”

“நிச்சயமா… மான்சி கேஸ் அப்போவே அதோட தீவிரத்தை நாம ஸ்டடி பண்ணோமே பரிதி. டீகேட்ஸ் ஆனாலும் அதோட பாதிப்பு மண்ணுல இருக்குனு சொல்லியிருக்காங்க. இப்போ ரீசென்ட்டா 2016ல ஈரோப் இங்கிலிஷ் நதியில மீன்கள் வச்சி பரிசோதனை பண்ணதுல இன்னுமே டீடீடியின் தாக்கம் அந்த மீன்கள்ல கவனிக்கப்படவேண்டிய அளவுல இருக்கிறதா கண்டுபுடிச்சிருக்காங்க.” என்றாள் அதிரா.

“ஆனா… அதுக்கும் இந்த இறப்புக்கும் என்ன சம்மந்தம் மேடம்? எப்படி இவங்க எல்லாம் அந்த குப்பை கிடங்குக்கு உள்ள போனாங்க? அப்படி நாத்தம் அடிக்குற இடத்துக்கு யாராவது வேணும்னே போவாங்களா? மான்சி ஆட்டோல தான போனாங்க, அவங்க ஏன் ஆட்டோலேந்து பாதில இறங்கி அந்த குப்பை கிடங்குக்கு உள்ள போயிருக்கனும்?”

“அதுதான் எனக்கும் புரியல. நீங்க என்ன நினைக்கறீங்க?”

“நான் கூட பேய், பிசாசுன்னு நினைச்சேன் இது என்ன உண்மையாவே அமானுஷ்யமா இருக்கு?” என்ற பரிதிக்குமே ஒன்றும் விளங்கவில்லை.

அவர்களுக்கு சடலமாய் கிடைத்தது மான்சி மட்டுமே. அவள் ஒருவளை கூராய்வு செய்ததன் பொருட்டே இத்தனை விஷயங்கள் தெரிய வந்திருக்க, எதையுமே அறுதியிட்டு கூற முடியவில்லை. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்ற யூகங்கள் மட்டுமே. 

இரவு வீட்டிற்கு வந்ததும் அகிலனிடம் இதை பகிர்ந்துகொள்ள, 

“மாணிக்கத்தோட தம்பி அடுத்த மாசம் சிங்கப்பூர்லேந்து வராரு. அவரை புடிச்சி டெஸ்ட் எடுத்துடுங்க.” என்றான் அகிலன்.

“ஹே, சூப்பர்டா…” என்று அதிரா அவனை கட்டிக்கொண்டாள். அவளுக்குத் தெரியும் வரவே முடியாது என்று வெளிநாட்டில் அமர்ந்துகொண்ட மாணிக்கத்தின் தம்பியை ஒரு வருடமாக பேசி கரைத்து இவன்தான் வரவழைத்திருக்கிறான் என்று. 

ஏற்கனவே திருச்சியில் இருந்து காணாமல் போனதாய் வந்த கம்ப்ளைண்டுக்கும் டீ.என்.ஏ சோதனை வாய்தாவில் சிக்கி நிற்கிறது இப்போது இதை எப்படி சாத்தியமாக்கிக்கொள்வது என்று அவள் யோசித்தாள்.

“நான் ஒன்னு சொல்லுவேன் நீ என்னை திட்டக்கூடாது.” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன், “லீகலா இல்லாம அன்அபீஷியலா மாணிக்கத்தோட தம்பிக்கு டீ.என்.ஏ எடுங்க. வேற வழியே கிடையாது.” 

அதிரா அதிருப்தியாய் பார்த்தாள்.

“வேற வழி இருக்கானு நீயே சொல்லு.” என்று இவன் பார்க்க, சோர்வாய் சோபாவின் பின் தலை சாய்த்தாள் அதிரா.

“எப்போதும் நேர்மையாவே இருக்க முடியாது அதி. இது நான் சொல்லித்தான் உனக்கு புரியுமா என்ன? உன் மனநிம்மதிக்காக தான் சொல்றேன். லீகலா இப்போதைக்கு இது முடியாது. சோ… பாத்துக்கோ.” என்றதோடு முடித்துக்கொண்டான்.

வேலை விஷயங்களை பகிர்ந்துகொண்டு ஆலோசிப்பார்களே ஒழிய இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருவருமே ஒருவரை ஒருவர் நிர்பந்திப்பது இல்லை. என் வழக்கு என் பாணியில் பார்த்துக்கொள்கிறேன் என்று இருப்பார்கள் இருவரும். இந்த வழக்கிலும் அப்படி யோசனை கொடுத்து ஒதுங்கிவிட்டான் அகிலன்.

வேறு வழியின்றி அவன் சொன்னது போல் தனியாய் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தாள் அதிரா. மாணிக்கத்தின் தம்பியை சம்மதிக்க வைத்து அவரை கமுக்கமாக கூட்டி வந்து கூட்டிச் சென்றான் அகிலன். 

ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் வந்திருக்க, கிடைத்த அந்த எலும்புக்கூடு மாணிக்கத்தினுடையது என்று உறுதியாகவும் மாணிக்கத்தின் ஒட்டுமொத்த விவரங்களையும் அகிலன் சேகரிக்க சென்றான்.

“அந்த வீ.ஏ.ஓ மாணிக்கம் அப்படி இப்படினு லஞ்சம் வாங்கி இருக்கார் மேடம். அவர் மேல ஒரு கேஸ் கூட இருக்கு.” என்று விளக்கம் கொடுத்த அகிலனிடம்,

“என்ன கேஸ்?” என்று கேட்டிருந்தான் பரிதி.

மூவரும்தான் அவள் அறையில் இருந்தார்கள். 

“அந்த குப்பை கிடங்குக்கு பட்டா போட்டு பிளாட்டா மக்கள்கிட்ட விக்க ரெடியா இருந்த ஒரு பில்டர்கிட்ட காசு வாங்கிட்டு சைன் போட்டு கொடுத்திருக்காரு.” என்றதும் அதிராவும் பரிதியும் முழித்தார்கள்.

“அப்போ அந்த பில்டர் கொலை பண்ணி அவரை அங்க போட்டிருப்பாங்களோ?” என்று பரிதி கேட்க,

“அப்டின்னா அவர் காணாம போனதுக்கு விசாரிச்சப்போவே தெரிஞ்சிருக்குமே. அப்போவே எந்த தடயமும் கிடைக்கல.” என்றான் அகிலன்.

“மாணிக்கம் காணாம போன நேரம் நைட் ஒன்பதுலேந்து பத்து. மான்சி மிஸ் ஆனதும் கிட்டத்தட்ட அதே நேரம்தான்…” என்ற அதிராவை குறுக்கிட்ட அகிலன்,

“அந்த பேக்டரி பையர் ஆகிஸிடெண்ட் ஆனதா போட்டிருக்குற நேரமும் அதே ஒன்பதுலேந்து பத்து தான்…” என்றான். 

“அப்போ… இது எல்லாத்துக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருக்கு. ஆனா எந்தவொரு தடயமும் இல்லை. எப்படி இறப்பு நடந்ததுனும் தெரியல. எப்படி மான்சியும் மாணிக்கமும் அங்க போனாங்கனும் தெரியல.” என்று தலை பிடித்தான் பரிதி.

“எதுவுமே கிடைக்காத பட்சத்துல இந்த கேஸை க்ளோஸ் பண்றதை தவிர வேற வழி இல்லை.” என்ற அதிராவை அதிர்வாய் பார்த்தனர் மற்ற இருவரும்.

“நம்ம நாட்டுல வருஷத்துக்கு ஏறத்தாழ ஏழரை லட்சம் கேஸ் எவிடென்ஸ் இல்லாம, குற்றவாளியை கண்டுபுடிக்க முடியாம க்ளோஸ் பண்றாங்க. அதுல இதுவும் ஒன்னாக போகுது.” என்றாலும் அதிராவின் மனம் சமன்படவே இல்லை.

“அப்போ எல்லாத்துக்கும் துவக்கப்புள்ளி அந்த ரசாயன உரம்தான்ல.” என்ற பரிதியை ஆமோதிப்பாய் பார்த்த மற்ற இருவருக்குமே இதன் முற்றுப்புள்ளி தெரியவில்லை. 

“அந்த குப்பை கிடங்கை தோண்ட தோண்ட புதையல் மாதிரி மனித கூடுகள் வந்துட்டு தான் இருக்கும்.” முடிவே இல்லாத காற்புள்ளியாக தெரிந்தது வழக்கு.

இன்றளவும் அரசின் அஜாக்கிரதையால் அனுமதிக்கப்பட்ட ரசாயனங்களை தாண்டி தடைசெய்யப்பட்ட பலவும் நல்லது என்ற போர்வையில் உலவிக்கொண்டிருக்கிறது. சிலர் லாபத்துக்காவும், சிலர் அறியாமையிலும் செய்யும் சிறு தவறுகள் பலரின் உடலில் தீங்கு ஏற்படுத்தி ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் புதிய புதிய நோவுகளை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது. இதில் சிலர் அதை உபயோகிக்கும் போதே உயிர் நீத்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பல உயிர்கொல்லிகளாகவும் இருக்கிறது. இதெல்லாம் ஆட்சியாளர்கள் கவனத்திற்கு செல்கிறதோ இல்லையோ இயற்கை அனைத்தையும் அமைதியாய் தன்னுள் வாங்கி பன்மடங்காய் திருப்பிக் கொடுக்க காத்திருக்கிறது. 

மான்சியும் மாணிக்கமும் ஏதோவொரு வகையில் இயற்கைக்கு இசைந்து போகாது எதிராய் செய்ய முயன்றதற்கு இயற்கை அளித்த பரிசு மரணம் என்று எடுத்துக்கொள்வதா இல்லை இனியொரு சந்ததி மனிதனின் கண்டுபிடுப்புகளுக்கு பலியாவதை தடுக்க நிகழ்ந்த மரணங்கள் இது என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியாத வண்ணம் அந்த வழக்கு முற்று பெறாத அமானுஷ்யமாகவே இருந்தது.

காலமாற்றங்களுக்கு ஏற்ப வாழப் பழகிய மனிதன் என்று சுகத்துக்கும் வசதிக்கும் பழகி தங்கள் வசதிக்கு காலத்தை வெல்ல முயன்றார்களோ அன்று ஒருங்கே துவங்கியது புதிய கண்டுபிடிப்புகளும் அழிவுப்பாதையும். என்ன விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய். நல்லது செய்ய முடியாவிடினும் கேடு நினைக்காது இருந்தால் ஊழ்வினை நம்மை காக்கும்.

மான்சியின் பண்ணையும் இறப்புகளுக்கு காரணமான அந்த குப்பை கிடங்கும் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.

ஆனால், அந்த டீடீடி ரசாயனத்தின் வீரியம் குறையும் வரை இறப்புகள் தொடருமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!