Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 14

     முதல் திருமண நாளை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதவண்ணம் மனைவிக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று நீலாம்பரியோடு ஊட்டி நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தான் மோகனன்.

     பத்து நாட்கள் அண்ணனும், அண்ணியும் தனியாகச் செல்வது சரியாகவே படவில்லை சாருகேசிக்கு. அண்ணன் முழுதாக குணமாகிவிட்டான் என்கிற நம்பிக்கை இருந்தாலும், உதவிக்கு யாரும் இல்லாமல் தனியாக அனுப்ப தைரியம் போதவில்லை தம்பிக்கு.

     திருமணம் முடிந்த நேரம் கூட அதையும், இதையும் சொல்லி குடும்பத்தோடு தான் தேக்கடி பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தான் கேசி. புதுமணத் தம்பதிகளுக்கான தனிமையை உருவாக்கி கொடுத்திருந்தாலும், பிரச்சனை என்று வந்தால் உதவிக்கு வரும் தொலைவில் எப்போதும் நின்றான் கேசி.



Advertisement

     நீலாம்பரி அதைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டாள். “அவனைத் தப்பா எடுக்காத நீலா. என் மேல கொஞ்சம் அதிகப்படியான அக்கறை.” என்று தம்பியை விட்டுக்கொடுக்காமல் மோகனன் பேச, “அவர் மாதிரி ஒரு தம்பி கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும். உங்களுக்கு அவர் மேல ஏதாவது வருத்தம் இருந்தா, அவரை என்னோட தம்பியாக் கொடுத்திடுங்க. என் தங்கச்சியை உங்க பொண்ணா வைச்சுக்கோங்க.” இரண்டே வாக்கியங்களில் மோகனன் மனதைக் குளிர்வித்திருந்தாள் நீலாம்பரி.

     அந்த நினைவு வந்து போக, “நாம திரும்பி வரும் வரை தம்பி தூங்குவாராங்கிறதே சந்தேகம் தான்.” என்று சிரித்தாள் நீலா.

     “கைப்பிள்ளையை பாதுகாக்கிற மாதிரி என்னை அவனுக்குள்ள பொத்தி பொத்தி வைச்சுக்கிறான். முன்னாடியாவது எனக்கு அண்ணன் மாதிரி தான் நடந்துக்கிட்டு இருந்தான். இப்ப இன்னொரு படி மேல போய் அப்பா மாதிரி நடந்துக்கிறான்.

Advertisement

     இங்க இருக்க ஊட்டிக்கு தனியா விடமாட்டேன்னு என்ன அலும்பு பண்ணான். அவனுக்கு பொண்டாட்டியா போகப் போற என்பொண்ணும், நாளைக்கு அவனுக்குப் பிறக்கப் போகும் பொண்ணும் ரொம்பவே பாவம்.” என்று கிண்டல் செய்ய, அவன் புஜத்தில் அடித்த நீலா அதிலே தன் தலையை சாய்த்துக்கொண்டாள்.

Advertisement

     ஊட்டியை நெருங்கிய நேரம் பயங்கரமாக இருட்டிக்கொண்டு வந்தது. இருபுறமும் அடர்ந்த மரங்கள் இருந்த சாலையில் வாகனங்களைப் பார்ப்பதே அரிதாகி இருக்க, நீலாவுக்கு நல்லபடியாக ஹோட்டலுக்கு போய் சேர வேண்டுமே என்கிற பதட்டம் வந்தது.

     அதைக் கவனித்து, “நான் இருக்கேன் இல்ல. உன்னை பத்திரமா பார்த்துப்பேன்.” என்று நம்பிக்கை கொடுத்த மோகனன் சொன்னது போலவே பத்திரமாக அவளை மலைகளின் இளவரசியிடம் அழைத்து வந்திருந்தான். அவளின் அழகை ரசித்து முடிக்க பத்து நாட்கள் போதவில்லை அவர்களுக்கு.

     சில நாட்கள் விடுமுறையை நீட்டிக்கலாமா என்று கூட யோசித்தான் மோகனன். ஆனால் வீட்டில் இருப்பவர்களை தேவையில்லாமல் கவலைக்கு உள்ளாக்க வேண்டாம். இந்த முறை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வீட்டிற்கு போய் சேர்ந்துவிட்டால், இதையே மேற்க்கோள் காட்டி இன்னும் பல சுற்றுலாவிற்கு திட்டம் போடலாம் என்று கணவனைத் தேற்றி சென்னையை நோக்கி திருப்பிவிட்டிருந்தாள் நீலாம்பரி.

Advertisement

     கடந்து சென்ற பத்து நாட்களில் பல ஜென்மங்களுக்குத் தேவையான நினைவுகளை சேகரித்துக்கொண்டு காரில்  திரும்பிக்கொண்டிருந்தனர் கணவன், மனைவி இருவரும். நீலாவுக்கு தான் கருவுற்று இருப்பதற்கு வாய்ப்பிருப்பது போல் தோன்றியது. கணவனிடம் சொல்லலாமா என யோசிக்கும் போது, ஒவ்வொரு மாதமும் குழந்தைக்காக ஏங்கி அது இல்லை என்றதும் அவன் சோகமான நிகழ்வுகள் நினைவு வர, உறுதியாக தெரிந்ததும் சொல்லிக்கொல்லலாம் என நினைத்து அமைதியாக இருந்துவிட்டாள்.

     வரும் போது நடந்தது போலவே இப்போதும் இவர்கள் ஊட்டியைத் தாண்டியதும் வானம் இருட்டிக்கொண்டு மழை வருவது போல் தோற்றமளித்தது. நீலா கணவனைப் பார்க்க அவன் சாதாரணமாகத் தான் இருந்தான்.

     அவனையே பார்த்தபடி இருந்தவள், அவன் தன்னைப் பார்த்துக்கொள்வான் என்னும் அசைக்க முடியாத தைரியத்தில் தன்னை மறந்து உறங்க ஆரம்பித்தாள். அவள் உறக்கம் கலைய வேண்டாம் என்று மிதமான வேகத்திலேயே வானத்தை ஓட்டிக்கொண்டிருந்தான் மோகனன்.

     நிம்மதியான உறக்கத்தில் இருந்த நீலா திடீரென கார் பயங்கரமாக குலங்கி நிற்கவும் கண்களைத் திறந்தாள். மோகனன் படபடப்பாக கதவைத் திறந்து கொண்டு இறங்கப் பார்ப்பதை உணர்ந்து, அனிச்சை செயலாக அவன் கரம் பிடித்து தடுத்தாள்.

     “ஒன்னும் இல்ல நீலா. ஆடு குறுக்க வந்து விழுந்திடுச்சு போல. உயிரோட இருக்கா என்னன்னு பார்க்கிறேன்.” என்றுவிட்டு இறங்கப் பார்த்தான்.

     கிளம்பும் போது கொழுந்தன் சொன்ன பல அறிவுரைகளில், “அண்ணி பகலாவே இருந்தாலும் ஆள் இல்லாத ரோட்டில் வண்டியை நிறுத்தாதீங்க.” என்ற வரி நினைவு வர, “வேண்டாம் மோகன் போகலாம்.” என்றாள்.

     மனைவியின் பயத்தை உணர்ந்து தன்னிடத்தில் அமர்ந்த மோகனன் நீலாவின் தலையை தடவிக்கொடுத்துவிட்டு, அவள் எதிர்பாரா நேரம் கதவைத் திறந்து இறங்கிவிட்டான்.

     “என்ன பண்றீங்க?” என்றபடி அவளும் அவன் பின்னாலே இறங்கினாள். அளவில் நடுத்தரமான மலையாடு ஒன்று காரில் விழுந்து அடிபட்டு இறந்து கிடக்க, சற்றே சங்கடமாக இருந்தது மோகனனுக்கு. அவன் அதையே பார்த்துக்கொண்டிருக்க, “நீங்க மெதுவா தானே ஓட்டிக்கிட்டு இருந்தீங்க. ஆடு தானா ஓடி வந்து விழுந்திருந்தாலும் செத்துப் போற அளவுக்கு அடிபட்டு இருக்காது தானே.” நீலாம்பரி சொன்ன நேரம் தான், வண்டியில் விழுந்த ஆடு ஒருமுறை கூட கத்தவில்லை என்பதையும் மோகனன் உணர்ந்தான்.

     “அண்ணா, சுற்றுலா தளங்களில் நடக்கிற எல்லா விஷயங்களும் வெளியே வருவது கிடையாது. ஊட்டியில் சில இடங்களில் வழிப்பறி நடக்கிறதா கேள்விப்பட்டேன். கொஞ்சம் சூதானமா இருந்துக்கோ.” என்கிற தம்பியின் எச்சரிக்கை நினைவு வர, சுற்றி முற்றி பார்த்துவிட்டு, ”நீலா வண்டியில் ஏறு.” என்றான் மோகனன்.

     நீலா காரை நோக்கி நகரும் நேரம் சாலையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் விரைந்து வந்தனர் ஐந்து நபர்கள். அதில் நால்வர் மோகனன், நீலா இருவரையும் பிடித்துக்கொள்ள, ஒருவன் மோகனின் உடலில் இருக்கும் நகைகள், வாலட், வாட்ச் போன்றவற்றை பிடுங்கிவிட்டு நீலாவிடம் வந்தான்.

     “உயிர் மேல ஆசை இருந்தா உன் உடம்பில் இருக்கும் நகைகளை நீயே எடுத்துக்கொடு.” என்று கட்டளையிட பயத்தோடு பார்த்தாள் நீலா.

     “நகை தானே போனா போகட்டும். எல்லாத்தையும் கழட்டி கொடுத்திடு நீலா.” திருடர்களின் பிடியில் இருந்து, வெளிவரப் பார்த்தவண்ணம் சொன்னான் மோகனன்.

     பயத்தில் அனைத்து நகைகளையும் கழட்டியவள் இறுதியில் தாலியில் கை வைக்க, ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. “இது மட்டும் என்னோட இருக்கட்டுமே.” திருடர்களைப் பார்த்து கைகூப்பிக் கேட்டாள்.

     ஆனால் கை வந்து சேர்ந்த மற்ற நகைகளை விட அதிக கனமாக இருந்த அதை விட்டுச்செல்ல திருடர்களுக்கு மனம் வரவில்லை. அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயமுறுத்த, “கொடுத்திடு நீலா.” என்று கத்தினான் மோகனன்.

     இல்லை என்பது போல் தலையாட்டிய நீலா, சாலையின் தொலைவில் இன்னொரு வாகனம் வந்து கொண்டிருப்பதைக் கவனித்து, உதவி கேட்பதற்காக சாலையின் நடுவில் போய் நின்றுவிட்டாள். மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இவளைக் கண்டதும் சடன் ப்ரேக் இட்டு நின்றது.

     புதிதாக ஆட்கள் வரவும் பயந்து போன திருடர்கள் கிடைத்தவரை போதும் என்று அங்கிருந்து கிளம்பிவிட, நீலா வேகமாய் மோகனன் அருகே சென்றாள். அவனை அவளும், அவளை அவனும் சோதித்து பார்த்து காயம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னால் தான் நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்களின் நிம்மதிக்கு ஆயுள் மிகவும் குறைவு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

     விரைவில் இங்கிருந்து கிளம்பிவிடலாம் என மனைவியை இழுத்துக்கொண்டு மோகனன் தன் கார் அருகே வரும் போது, கார் சாவியை கையில் சுற்றிக்கொண்டு நின்றிருந்தான் ஒருவன். இவர்களைப் பார்த்து தான் திருடர்கள் ஓடிச்சென்றனர் என்கிற நினைப்பில் நன்றி சொல்ல நினைத்த மோகனன் அவன் பார்வை விஷமமாக தன் மனைவி மேல் விழுவதை கண்டு கோபம் கொண்டான். ஆனால் தான் ஒருவன், அவர்கள் நாலைந்து நபர்கள் அவர்களிடம் சத்திரியனாக மோதுவதை விட சாணக்கியனாக மோதுவது தான் சரியாக இருக்கும் என்கிற நினைப்பில், தன் செல்போனை எடுத்து காவல்துறையை தொடர்புகொள்ளப் பார்த்தான் மோகனன்.

     அந்த நேரம் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக பின்னந்தலையில் பலமாக ஒரு அடி விழுந்தது. அடியின் வேகத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தான் மோகனன். பின்னிருந்து கையில் கட்டையோடு வந்த ஒருவன் மோகனின் செல்போனை காலால் மிதித்து உடைத்தான்.

     நீலா மோகனன் அருகே சென்று அவனை எழுப்பிவிடப்பார்த்தாள். “நீலா இங்க இருந்து ஓடிப் போ.” உயிர் போகும் வலியிலும் மனைவியைக் காப்பாற்ற தான் நினைத்தான் மோகனன். அவன் இரத்தம் நீலாவின் கைகள், அவள் அணிந்திருந்த சேலை இரண்டையும் நிறைத்திருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் தயங்கிய சில நொடிகளில் அவளைச் சுற்று போட்டனர் நான்கு நபர்கள். ஒருவன் மட்டும் ஒதுங்கி நின்றுகொண்டான்.

     “நீங்க ஊட்டிக்கு வந்த நாளில் இருந்து பார்த்துக்கிட்டு தான் இருந்தோம். சமயம் கிடைக்கும் போது தூக்கலாம் னு காத்திருந்தோம். கை மேல பலனா நீயே குறுக்க வந்து விழுந்துட்ட.” என்றபடி நீலாவின் கூந்தலைப் பிடித்து  தூக்கி நிறுத்தினான் ஒருவன். அவ்வளவு நேரம் இருட்டிக்கொண்டிருந்த வானம் பெரிய பெரிய தூறல்களாக விழத்துவங்கியது.

     தலைமுடி கொடுத்த வலியில் நீலா கத்த, அவளின் சத்தமும் மழையின் இரைச்சலும் மோகனனின் ஆழ் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் முக்கால்வாசி அழிந்து மிகக் குறைவான அளவில் மீதம் இருந்த கொடூர நிகழ்வுகளை தூண்டி விட்டிருக்க, பல வருடங்களுக்கு முன்பு நடந்தவை யாவும் இப்போது நடப்பது போல் அடிபட்ட தலையைப் பிடித்துக்கொண்டு அலறினான் மோகனன். அவன் சத்தம் கொடுத்த எரிச்சலில் மீண்டும் ஒரு அடி காலில் கொடுத்தான் ஒருவன். மோகனன் என்ன முயன்றும் அவனால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. நீலா என்று அவள் இருந்த திசையை நோக்கி கைகளை நீட்டி அழ ஆரம்பித்தான். அதனைத் தொடர்து இரண்டு மணி நேரத்திற்கு அவனுடைய கதறல் சத்தம் மட்டும் தான் அந்த இடத்தை நிறைத்தது.

     மழை மற்றும் மண் சரிவு ஆபத்து முன்னெச்சரிக்கை சொல்லப்பட்டிருந்ததால் பெரும்பாலும் யாரும் அந்தப் பக்கமாக வந்திருக்கவில்லை. ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கரைந்த மோகனனின் மூளை நரம்புகள் அழுத்தம் தாங்காமல் விரிவடைய, தலையில் இருந்து வந்த இரத்தத்துக்கு போட்டியாக மூக்கில் இருந்தும் இரத்தம் வடிய மொத்தமாக மயங்கினான் மோகனன்.

     நினைத்ததை சாதித்து முடித்த கயவர்கள், இவர்கள் இருவரும் பிழைத்தால் தங்களுக்கு ஆபத்து என்பதால் அருகே கிடந்த மரக்கிளையால் இருவரின் தலையிலும் பலமுறை பலமாக அடித்து உரை உயிராக்கிவிட்டு அவர்கள் வந்து காருக்குள்ளேயே வைத்து விபத்து ஏற்பட்டு மரத்தில் மோதி கார் தீப்பிடித்து எரிந்துவிட்டது போல் காட்சிப்படுத்திவிடலாம் என்கிற நினைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, சைரன் சத்தம் கேட்டு பதறிப் போயினர்.

     அங்கிருந்து சற்று தொலைவில் ஏற்பட்ட மண்சரிவில் சில மனிதர்கள் மாட்டிக்கொண்ட தகவல் கேள்விப்பட்டு அவர்களை மீட்க தீயணைப்புத் துறையினரின் வாகனம் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்தது. பிடிபட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் போட்டது போட்டபடி அப்படியே சென்றிருந்தனர் கயவர்கள்.

     தீயணைப்புத்துறையினரில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருக்கும் வாகனத்தைக் கவனித்து தான் மட்டும் இறங்கி பார்த்துவிட்டு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். விரைவாக மோகனன், நீலா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     இவருவருக்கும் அவசரசிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை நடந்தது. நாற்பத்தியெட்டு மணி நேரம் கழித்து தான் எதையும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கை விரித்திருக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர் கேசி, பைரவி, கல்யாணி, அமிர்தா நால்வரும். விஷயம் கேள்விப்பட்டு பைரவனும் அங்கே வந்திருந்தார்.

     அதுவரை வழிப்பறி தாக்குதல் என்றே யூகித்திருந்தனர் அனைவரும். நீலாவைப் பரிசோதித்த மருத்துவர் அவள் பலவந்தப்படுத்தப்பட்டு இருப்பதைச் சொன்ன நொடி குடும்பம் மொத்தமும் உறைந்து போனது.

     மொத்தமாக உடைந்து போய் தரையில் அமர்ந்த கல்யாணி, நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க, சாருகேசியோ தன் பிரியத்துக்குரிய அண்ணியை இப்படிச் செய்வதர்களை தன் கையாலே கொன்று போட வேண்டும் என்கிற வெறியை மிகவும் சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தான்.

     நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் விடாமல் அழுது கொண்டிருந்தாள் அமிர்தா. தாய்மார்கள் இருவருக்கும் தான் நடந்ததை சரியான முறையில் அணுகத் தெரியவில்லை என்றால் இவளும் இப்படி அழுதுகொண்டிருக்கிறாளே என வருந்திய கேசி, அமிர்தாவை தன் அருகே அமர வைத்து அவள் கைகளைப் பிடித்து தனக்குள் பொத்திக்கொண்டான்.

     “நடந்தது ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதுக்காக அழுதுக்கிட்டே இருந்தா சரியாகிடுமா? நம்ம வீட்டு பெரியவங்க இப்ப எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. இந்த நேரத்தில் நாம தான் பொறுப்பா நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கணும். எனக்கு அண்ணன் மேல நம்பிக்கை இருக்கு. இந்த விஷயத்துக்காக அவன் அண்ணியை வெறுக்க மாட்டான். அண்ணியோட மனநிலையை நினைச்சா தான் கவலையா இருக்கு. வெளியே இருந்து நாம என்ன சொன்னாலும் சம்பந்தப்பட்டவங்க அவங்களுக்கு தான் வலியும், வேதனையும்.

     நீ தானே தைரியமா இருந்து அவங்களையும், உன் அம்மாவையும் நடந்த கசப்பான சம்பவங்களில் இருந்து வெளியே கொண்டு வரணும். மெச்சூரிட்டி வயசைப் பொறுத்து வருவது கிடையாது. நம்மளோட சிந்தனைகளில் இருந்து வருவது. என் அமிர்தாவுக்கு சரியான முறையில் சிந்திக்கத் தெரியும் னு நம்புறேன்.” என்க, கன்னத்தில் வடிந்த கண்ணீரை அழுத்தமாகத் துடைத்தவள், “எனக்கு நீங்க ஒன்னு பண்ணனும் கேசி.” உறுதியான குரலில் சொன்னாள்.

     “எதுவா இருந்தாலும் செய்யுறேன்.” என்று வாக்குறுதி கொடுத்தான் கேசி. “அக்காவையும், மாமாவையும் இப்படிப் பண்ணவங்களை நீங்க தான் தண்டிக்கணும்.” ஒருவித வெறியோடு சொன்னாள் அமிர்தா.

     “கண்டிப்பா, என் அண்ணிக்கு கலங்கத்தை உண்டாக்கினவங்க யாரா இருந்தாலும் அவனுங்களுக்கு என் கையால் தான் வாய்க்கரிசி.” வைராக்கியத்தோடு சொல்லி இருந்தான் கேசி.

     நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பைரவன் எதையோ யோசித்தார். அடுத்த கணம் கேசியை தனியே அழைத்துச் சென்று, “நடந்த சம்பவம் மோகனன் தம்பிக்கு தெரியாம இருந்திருக்காது. அந்த பழைய மனநோய் திரும்ப வந்தா என்ன செய்யுறதுன்னு யோசிச்சீங்களா தம்பி.” என்று நிறுத்த, தலையில் இடி விழுந்த உணர்வு கேசிக்கு.

     அதுவரை அண்ணியைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தவன் அப்போது தான் அண்ணனைப் பற்றி யோசித்தான். கடவுளே, அண்ணன் அந்த நொடி எந்த மாதிரியான சித்திரவதைகளை அனுபவித்தானோ, இனி என்னென்ன செய்வானோ, நார்மலாக இருப்பானா இல்லை முன்பைப் போல் எதுவும் செய்து வைப்பானோ என்று பயந்து கொண்டிருக்க, அவன் பயம் உண்மை என்பது போல் ஆழ்ந்த மயக்கத்தில் சிகிச்சையில் இருக்கும் போதே பயத்தில் படுக்கையை நனைத்தான் மோகனன்.

     தலைக்காயத்தை சுத்தப்படுத்தி, சேதங்களை அளவிடுவதற்காக எம்ஆர்ஐ எடுத்திருக்க, ரிசல்ட் வரும் நேரத்திற்காக மருத்துவர்கள் காத்திருந்த வேளையில் தான் இது நடந்தது. ஆழ்ந்த மயக்கத்திலும் அவன் உடலில் மெல்லிய அதிர்வும், நடுக்கமும் இருந்து கொண்டே இருக்க, இவை யாவும் மனநலப் பாதிப்பைத் தொடர்ந்த அறிகுறிகள் என்பதால்  சந்தேகத்தில் மோகனனின் மெடிக்கல் ஹிஸ்டரியை மருத்துவர் விசாரிக்க, பயந்துகொண்டே சொன்னான் கேசி.

     “என்ன சார் இது? இவ்வளவு லேட்டா சொல்றீங்க?” என்று மருத்துவர் கேட்ட நொடியில் மோகனன் இருந்த அறையில் ஏதோ சத்தம் கேட்டது. மருத்துவரோடு சேர்ந்து கேசியும் உள்ளே சென்று பார்க்க, இன்னும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்து வெளியே வராத நிலையில் உள்ளிருந்து உந்தித்தள்ளும் உணர்வுகளால் வலிப்பு வந்து உடல் தூக்கிப்போட ஆரம்பித்திருந்தது மோகனனுக்கு.

     பயந்து போன கேசி அண்ணனின் கைகளைப் பிடித்துக்கொள்ள, பைரவன் தங்கை மகனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். மருத்துவர் ஊசி போட்ட பிறகும் சில  நொடிகளுக்கு வில்லாக வளைந்து தான் அடங்கியது மோகனின் உடல்.

     வெடவெடத்துப் போனான் கேசி. மயக்கத்தில் இருக்கும் போதே இப்படி என்றால், சுயநினைவு வந்துவிட்டால் என்று நினைக்கும் போதே பயம் நெஞ்சைக் கவ்வியது. என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் போது நீலாவுக்கான முதல்கட்ட சிகிச்சை முடிந்திருந்தது. அவளைப் பரிசோதித்த மருத்துவர் சொன்ன செய்தியை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.

     “அந்தப் பொண்ணுக்கு தலையில் நல்ல அடி. தன்னை தவறான நோக்கத்தில் அப்ரோச் பண்ணவங்ககிட்ட இருந்து உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக எதிர்ப்பு காட்டாம இருந்திக்காங்க போல. அதனால் உடம்பில் காயங்கள் பெருசா இல்ல. தலைக்காயத்தோட ஆழம் ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பிறகு தான் சொல்ல முடியும்.” என்று சொன்ன நொடி, “என்ன சொன்னீங்க, அந்தப் பொண்ணு எதிர்க்காம ஏத்துக்கிச்சா?” அருவருப்போடு கேட்டது பைரவன் தான்.

     “அவங்க பண்ணது சரியான செயல் தான் சார். சூழ்நிலை மோசம், காப்பாத்த யாரும் இல்ல என்கிற சூழ்நிலையில் உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக அமைதியா இருக்கிறது தான் சரி. இவங்க மீறி இருந்தா அவங்க என்னென்ன செஞ்சிருப்பாங்களோ. தினம் தினம் செய்திகளில் வருவதைப் பார்த்து இருக்கீங்க தானே. உங்க வீட்டுப் பொண்ணு சரியா யோசிச்சு அவங்க உயிரைக் காப்பாத்தி இருக்காங்க. இதுக்கு நீங்க சந்தோஷம் தான் படணும்.” என்றார் மருத்துவர். தினம் ஆயிரம் உடலைப் பார்க்கும் அவருக்கு உடலைவிட மனம் பெரிதாகத் தெரியும். ஆனால் பழைமையில் ஊறிப்போன பைரவி, பைரவன் சகோதர சகோதரிகளுக்கு நீலாம்பரியின் மீது பிடித்தமின்மை வந்தது.

     “உங்க பொண்ணு என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கா பார்த்தீங்களா அண்ணி. எது எதில் பயந்து போய் அமைதியா இருக்கிறதுன்னு விவஸ்தை வேண்டாம்.” பைரவி கல்யாணியிடம் கேட்க, “அப்ப அவளை வேற என்ன பண்ண சொல்றீங்க. கடைசி வரை போராடி அவங்ககிட்ட இருந்து உயிர்வதையை பரிசா வாங்கி இருக்கணுமா? ஒருவேளை அவ எதிர்த்து அதனால் அவங்க எங்க அக்காவை அடிச்சு அதில் அவ செத்துப்போய் இருந்தா என்ன பண்ணுவீங்க.” அமிர்தா கோபமாய் கேட்க,

     “மானத்தைப் பறிகொடுத்து உயிர்வாழ்வதற்குப் பதில் கௌரவத்தோடு செத்துப் போய் இருக்கலாம். குலதெய்வமா வைச்சு என் தங்கச்சியோட குடும்பமே அவளைக் கடைசி வரை கொண்டாடி இருக்கும். ஆனா இப்ப என்ன நடந்தது. இனி என் தங்கச்சியும், மோகனன் தம்பியும் வெளியே கௌரவமா நடமாட முடியுமா?” பைரவன் கேட்க, “இது எங்க குடும்ப விஷயம். இதில் தலையிட நீங்க யாரு? இன்னொரு வார்த்தை என் அக்காவைப் பத்தி தப்பா பேசுனீங்க. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” கோபமாகச் சொன்னாள் அமிர்தா.

     “அமிர்தா அமைதியா இரு.” என்று அவளை அதட்டினான் கேசி.

     “கேசி அவர்.” அமிர்தா அழுகையோடு நிறுத்த, “மாமா பேசினது தப்பு தான். இனிமேல் அப்படி பேசக்கூடாதுன்னு நான் சொல்லி வைக்கிறேன். நீயும் அவரை பேசாத.” என்க, கோபம் இருந்தாலும் மனதோடு அதை வைத்துக்கொண்டு தலையாட்டினாள் அமிர்தா.

     மோகனன், நீலாம்பரி இருவரையும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அங்கே நின்ற ஒரு சிலர் நடப்பை வீடியோவாக எடுத்திருக்க, அது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. நீலாவின் முகத்தை ப்ளர் செய்தவர்கள் மோகனன் முகத்தை அப்படியே விட்டிருக்க, கேசிக்கும் பைரவிக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அவர்கள் அளவு இல்லாமல் போனாலும் ஒன்று இரண்டு கல்யாணிக்கும் வர அதற்கே அவர் நொந்து போய் இருந்தார்.

     பைரவியால் உறவினர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. மொத்தமாக மனது விட்டுப்போனது. மகன் கண்விழிக்கட்டும் பிறகு இதற்கோற் முடிவை அவன் எடுப்பான் என்று காத்திருந்தார்.

     அடுத்த நாள் முதலில் கண் விழித்தது மோகனன் தான். தலையில் உயிர் போகும் வலி வந்தது. கைகளால் தலையைப் பற்றிக்கொண்டவனுக்கு முதலில் நினைவு வந்தது சிறுவயது கொடூர நிகழ்வுகள் தான். பயத்தில் கையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பிய்த்துப் போட்டவன் இரத்தம் வழியும் கரங்களோட அந்த அறையின் மூலையில் போய் அமர்ந்துகொண்டு கைகளால் காதுகளை மூடிக்கொண்டு அப்பா இறந்துவிட்டார் என்கிற நினைவு கூட இல்லாமல் அப்பா என்று கத்தினான்.

     கேசி உள்ளே விரைந்து வந்தான். அண்ணனை அப்படிப் பார்த்ததும் பதறிப்போய் அருகே சென்று அவனைத் தன்னோடு அணைத்துக்கொள்ள, “சரஸ்வதி அக்கா” என்றுவிட்டு வேக வேகமாக பெருமூச்சு வாங்கியவன், திடீரென சுவாசிப்பதை மொத்தமாக நிறுத்திக்கொண்டான்.

     “அண்ணா என்ன ஆச்சு உனக்கு?” என்று கேசி அவன் முதுகில் தட்ட, நினைவுக்கு வந்து மூச்சுவிட்டவன், “நீலா எங்க? அவளுக்கு என்னாச்சு? அவ என்னைக் கூப்பிட்டு கத்தினா. இரண்டு முறை கத்தினா. அன்னைக்கு சரஸ்வதி அக்கா கத்தின மாதிரியே கத்தினா. அவங்களை மாதிரி நீலாவையும் என்னால் காப்பாத்த முடியலையா? அவளும் செத்துட்டாளா? இந்தக் கோழையால் அவனை நம்பி வந்த பொண்ணைக் காப்பாத்த முடியலையா? அவளைத் தொலைச்சுட்டேனா? அவளே போன பிறகு நான் எதுக்காக உயிரோட இருக்கணும். பொண்டாட்டியைக் காப்பாத்த முடியாத புருஷன் எல்லாம் எதுக்காக உயிரோட இருக்கணும்.” என தன்போக்கில் எதை எதையோ புலம்பியவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அழுதான் கேசி. புலி வருது கதையில் கடைசியில் புலி வந்தேவிட்டதை உணர்ந்தான். பைரவனோடு வந்த மருத்துவர் ஊரி போட்டு மோகனனைக் கட்டுப்படுத்தி படுக்க வைத்தார்.

     அவன் ஓரளவு சமாதானமாகவும் வெளியே வந்த கேசி, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலையைக் கோத, “நான் ஒரு யோசனை சொல்லவா தம்பி? பேசாம உங்க அண்ணனுக்கும், அந்தப் பொண்ணு நீலாவுக்கும் விவாகரத்து வாங்கிடுங்க.” என்றார் பைரவன்.

     “என்ன பேசுறீங்க மாமா? யாரோ பண்ண தப்புக்கு அண்ணி என்ன பண்ணுவாங்க. இன்னொரு முறை இப்படிப் பேசாதீங்க.” கோபமாய் சொன்னான் மோகனன்.

     “உண்மை தான். அந்தப்பொண்ணு நீலா மேல எந்தத் தப்பும் இல்ல தான். மோகனன் தம்பி மத்த ஆண்களை மாதிரி தெளிவான ஆளா இருந்தா நாம இந்தளவு யோசிக்க வேண்டியது இல்ல. நாலஞ்சு கவுன்சிலிங் போய் வந்து நடந்ததை மறந்து குடும்பத்தை பார்த்திருப்பார். ஆனா நம்ம தம்பி அப்படி இல்லையே. இனி நீலா அவரோட இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவளைக் காப்பாத்த முடியலையேன்னு குற்றவுணர்ச்சியும், பழைய கொடூரங்களும் தான் அவரைத் தாக்கும். இதுக்கு நாம அனுமதிக்கணுமா?” என்றார் பைரவன்.

     “அண்ணி பாவம் மாமா.” என்ற கேசிக்கு மாமன் சொன்ன யோசனையை நினைக்கும் போதே அத்தனை வலித்தது. அந்த நினைவோடு  அண்ணன் இருந்த அறைக்குள் வர, அவன் உயிரையே ஆட்டம் காண வைக்கும் அளவிற்கு, அந்த அறையின் திறந்த வெளி ஜன்னல் அருகே நின்றிருந்தான் மோகனன்.

     “அண்ணா என்ன பண்ற? கீழே இறங்கு.” என்று கத்த, “என்னைச் சுத்தி இருக்கிற யாரையும் என்னால் காப்பாத்த  முடியாதுன்னா இந்த உயிரைக் காப்பாத்தி வைச்சு என்ன செய்யப்போறேன்.” என்றுவிட்டு தம்பி தன் அருகே வரும் முன்னர் கீழே குதித்திருந்தான் மோகனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!