Skip to content
Post Views: 402
அத்தியாயம் – 9
தலைமை அமைச்சர் இல்லம், புதுதில்லி.
Advertisement
“என்ன தாங்க பிரச்சனை இந்த மனுஷனுக்கு?” என்று அயர்வாகக் கேட்ட வசுந்தராவை விசித்திரமாகப் பார்த்தார் சித்தார்த்.
அவசர அழைப்பின் காரணமாக இரவு உடை மேலேயே, ஹவுஸ் கோட் அணிந்து ஏறக்கட்டிய கொண்டையுடன், கண்ணாடியை கழற்றி, துணி கொண்டு அழுந்த துடைத்தவாறு, கேள்வியாக தன்னைப் பார்த்த வசுந்தராவை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
Advertisement
Advertisement
சற்று முன்னர் இருவருக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதத்தின் எச்சத்தை எதிர்பார்த்து வந்தவருக்கு, வசுந்தரா முகம் திருப்பாமல் பேசியது இன்ப அதிர்ச்சி. மனதுக்குள் அமெரிக்க அதிபருக்கு நன்றி சொன்னாலும், வசுந்தரா யாருடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற லேசான சுணக்கமும் இல்லாமல் இல்லை.
“நிறைய நாடுகளுக்கு முன்னாடியே போட்டது தான் மேம். இது தான் ஒரிஜினல் லிஸ்ட்” என்று வசுந்தரா அருகில் வந்து கோப்பை நீட்டும் போது தான், அவர் முகத்தில் அழுததற்கான தடம் லேசாகத் தெரிய, திடுக்கிட்டுப் பார்த்தார்.
Advertisement
லலிதா இன்னும் வராதிருக்க, சித்தார்த் தயக்கத்தை கைவிட்டவராய்,
“வசு, அழுதியா என்ன?” என்றார் அதிர்ச்சியாக.
“ம்ப்ச், அது இப்போ இர்ரிலவெண்ட் சித்தார்த்” என்று சட்டென அவரை கத்தரித்த வசுந்தரா,
“இந்த டிரேட் வார் தெரிஞ்ச பிரச்சனை தானே. ஏன் இது எமர்ஜென்சி ஆச்சு இப்போ?” என்றார் வேலையில் கவனமாக.
அதில் ‘அலுவலகத்துக்கான எல்லையில் மட்டுமே நீ நிற்க வேண்டும்’ என்ற எச்சரிக்கைத் தொனி இருக்க, சித்தார்த்தும் பெருமூச்சுடன்,
“எமர்ஜென்சி தான் மேம். இது நாம ரஷ்யா கிட்டேர்ந்து ஆயில் வாங்குறது நிறுத்தலைன்னு சொல்லி அதுக்கான பனிஷ்மெண்ட் மாதிரி, இந்தியாக்கு மட்டும் அதிகமா எக்ஸ்போர்ட் டேக்ஸ் போட்டு இருக்காங்க. அதுக்கான அனவுன்ஸ்மெண்ட் தான் ஒரு மணி நேரம் முன்னாடி வந்திருக்கு.
உலகமே ரஷ்யா உக்ரைனுக்கு எதிரா நடத்துற போருக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, அவங்களோட வர்த்தகம் எல்லாம் நிறுத்திட்டாங்க. ஆனா நாம அந்த ஸ்டேன்ஸ் எடுக்கலைல. அதுதான் பிரச்சனை”
“இதென்ன வம்பா இருக்கு. நமக்கு ரஷ்யாவோட ஒப்பந்தம் இருக்கு. அண்ட் டிஸ்கவுண்ட்டும் கிடைச்சது. அதுனால தானே எக்ஸ்டென்ஷனுக்கும் அக்ரீ பண்ணோம். க்ளோபல் ஸ்டெபிலிட்டிக்காக எல்லாரும்,” என்ற வசுந்தரா அந்த எல்லாரும் என்பதில் சற்று அதிகமாகவே அழுத்தம் கொடுத்து,
“எல்லாரும், அமெரிக்கா உட்பட, அதை அப்போ மறைமுகமா ஆதரிக்கவும் செஞ்சாங்க. இப்போ கண்ணை மூடிட்டு ஏதோ காரணம் சொல்லி என்ன பூச்சாண்டி காட்டுற வேலை?” என்றார் சீற்றமாக.
“கரெக்ட் தான் மேம். ஆனா இதெல்லாம் யூசுவல் பவர் பாலிட்டிக்ஸ். தவிர்க்க முடியாது. அமெரிக்காவுக்கு நம்மளோட வளர்ச்சி எப்பவும் த்ரெட்டா தான் தோனும். அவங்க பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்றதெல்லாம் அதுனால தான். எக்கானமிய ஒடுக்குறதுக்கு என்னவெல்லாம் பண்ணனுமோ பண்ண முயற்சி பண்ணுவாங்க. அதுக்கு இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிறாங்க” என்று அதற்கும் பொறுமையாக பதிலளித்தார் சித்தார்த்.
“ஹம்ம்ம், என்ன ரெஸ்பாண்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க?” என்று சித்தார்த்திடம் கேட்டவர், அறையில் அரவம் கேட்டு திரும்ப, லலிதா வந்து விட்டார்.
“வாங்க லலிதா, சாரி நான் இன்னொரு கால்ல இருந்தேன். இது தான் பிரச்சனைனா நான் உங்க ரெண்டு பேரையும் வரவே சொல்லிருக்க மாட்டேன்” என்க, லலிதா சித்தார்த்தைப் பார்த்தார்.
சித்தார்த் தனக்கும் அது செய்தி தான் என்பது போல் தலையசைக்க,
“பரவாயில்ல மேம். திஸ் இஸ் த ஜாப். அது எனக்கும், சாருக்கும் நல்லா தெரியும். வீ ஆர் ஆல்வேஸ் பிரிப்பேர்ட்” என்ற லலிதா,
“சார் ஒரு டிராப்ட் ரெஸ்பான்ஸ் ரெடி பண்ண சொன்னார் மேடம், ஒரு வாட்டி பாத்துடுறீங்களா?” என்று தனது மடிக்கணிணியை வசுந்தராவிடம் நகர்த்தினார்.
அதை ஒரு பார்வை பார்த்த வசுந்தரா,
“உங்க டிராப்ட் ஓகே தான். ஆனா நான் ரெஸ்பான்ஸ் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்” என்றவுடன், சித்தார்த் அவரை யோசனையாகப் பார்த்தார்.
அவர் மௌனமாக இருக்க, லலிதாவே,
“ஏன் மேம்? ஒரு இனிஷியல் லைட் ரெஸ்பான்ஸ் கொடுத்துட்டா, அப்புறம் நம்ம எக்ஸ்டேர்னல் அஃபேர்ஸ் மினிஸ்டிரி வைச்சு பேச்சு வார்த்தை நடத்தி மிட்டிகேட் பண்ணலாம் மேம். இந்த சிச்சுவேஷன்ல அது தான் யூசுவல் ப்ரோட்டோக்கால்” என்றார்.
“கரெக்ட். பட் சில நேரம் சைலண்ட் தான் பவர்புல் ரெஸ்பான்ஸ். அமெரிக்காவோட கை பொம்மையா இருக்குறத நான் விரும்பல. ஒவ்வொன்னுக்கும் ரியாக்ட் பண்ணி அவங்ககிட்ட கைய கட்டி நின்னு அவங்க தயவை எதிர்பார்த்த காலமெல்லாம் நாம கடந்தாச்சு.
யாரை பகைச்சிகிட்டா யாருக்கு நஷ்டம்னு எப்போ பாடம் கத்துக்கிறது? அதுனால இதை ஒரு ரெண்டு நாள் அப்டியே விடுங்க. நோ ரெஸ்பான்ஸ் ஃப்ரம் எனி ஒன் இன் மை கவர்ன்மெண்ட்! ஈவன் பிரஸ் வாயை கிளறினாலும் இம்பாக்ட் அசேஸ் பண்றோம்னு மட்டும் சொன்னா போதும்” என்று முடித்து விட்டார் வசுந்தரா.
லலிதா சித்தார்த்தைப் பார்க்க, வெகு மெச்சுதலான பார்வை மட்டுமே அவரிடம்.
“ஓகே மேம்” என்று கணினியை எடுத்துக் கொண்ட லலிதா, அடுத்த உத்தரவுக்காக வசுந்தரா முகம் பார்த்து நிற்க,
“இதை ஒரு கான்ஃபரன்ஸ் கால்லயே முடிச்சிருக்கலாம். ரெஸ்பான்ஸ் தான் பண்ணவேண்டாம் சொன்னேன், நம்ம இண்டேர்னல்லா எப்டி டேக்கில் பண்றதுன்னு பார்க்கணும். பட் தேட் கேன் வெயிட் டில் டுமாரோ. கோ, கேட்ச் சம் ஸ்லீப் போத் ஆஃப் யூ” என்றவர் எழுந்து நின்றார்.
“குட் நைட் மேம்” என்ற லலிதா உடனே கிளம்பிவிட, சித்தார்த்தோ இருமனதாக நின்றிருந்தார்.
கோப்புகளை அந்தந்த இடத்தில் வைத்து விட்டு திரும்பிய வசுந்தரா, சித்தார்த் தயக்கமாக நிற்பதைப் பார்த்தார்.
“என்ன சித்தார்த், நீங்க கிளம்பலையா?”
“வசு, ஒரு ஃபைவ் மினிட்ஸ் ப்ளீஸ்” என்க, இது வரை அடக்கியிருந்த கோபம் பொங்கி விட்டது வசுந்தராவுக்கு.
“இன்னும் என்ன ஃபைவ் மினிட்ஸ் சிட்? அது தான் என்னைய எவ்ளோ கேவலமா பேச முடியுமோ அவ்ளோ கேவலமா பேசிட்டீங்களே” என்றார் நாவெனும் வாளை சுழற்றியடித்து.
திரும்பி வசுந்தராவின் அருகில் வந்த சித்தார்த்,
“ப்ச், ப்ளீஸ் வசு. நான் என்னிக்கும் உன்னைய கேவலமா நினைக்கக் கூட மாட்டேன். அது உனக்கும் தெரியும்! நான் சொன்னது உன்னோட டெசிசன் மேக்கிங் பத்தி தான்.
நீ ரெண்டு பேருல யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாதுன்னு தான் தள்ளி நின்ன. அது எனக்கும் தெரியும். வருணுக்கும் தெரியும். பட் அதுவே எங்க ரெண்டு பேரையும் ஹர்ட் பண்ணிடுச்சு.
நீ வருணை ப்ரெண்டா தான் பாக்குற, அது எனக்கு நல்லா தெரியும். ஆனா நீ என்கிட்ட வராட்டி அவன் எப்படி ஒரு வாழ்க்கைய அமைச்சுப்பான்னு நினைச்ச?
நீ தனியா நின்னேன்னா ஹி வாண்ட்ஸ் டு பி தேர் ஃபார் யூ, ஈவன் இஃப் யூ நீட் ஹிம் அஸ் அ ப்ரெண்ட். ஹி வோண்ட் மூவ் ஆன்! என்னை விட உனக்கு அவனை நல்லாத் தெரியுமே வசு…” என்றார், எப்படியாவது தன்னை புரிய வைத்து விடும் மன்றாடலுடன்.
“நீங்க சொல்றது கரெக்ட்னே வச்சுப்போம் சிட். இதை கேக்குறதுக்கு பத்து வருஷம் தேவைப்பட்டுச்சா உங்களுக்கு?” என்றார் சினத்துடன்.
“இந்தக் கேள்வில நியாயம் இல்லைன்னு உனக்கே தெரியும். உன்னோட டிசிஷனை மதிக்கிறது எனக்கு முக்கியமாப் பட்டுச்சு. அதுனால தான் தள்ளி நின்னேன். கவனி வசு. தள்ளி தான் நின்னேன். ஒட்டு மொத்தமா விலகிப் போயிடலை.
அந்த நேரத்துல உண்மையா மூவ் ஆன் பண்ணனும் அப்டின்னு முயற்சியும் பண்ணேன். ஆனா எதுவும் வேலைக்காகலை. சரி நமக்கு விதிச்சது இவ்ளோ தான்னு இப்படியே வாழ்க்கைய ஓட்டிடலாம்னு பார்த்தா, திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்கிறேன். என்னைய என்ன பண்ண சொல்ற?” என்றார் சலிப்பாக.
“பதில் தெரியாத கேள்வியா கேட்குறதுனால இப்ப யாருக்கு என்ன பிரயோஜனம் சிட்? நமக்கு நடுவுல ஏதோ ரிலேஷன்ஷிப் இருக்கு, இல்ல கிரியேட் பண்ணலாம்னு நினைச்சா அதுக்கான இடமும், நேரமும் இது கிடையாது.
நாளைக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. ஏற்கனவே ரொம்ப லேட். வீட்டுக்குப் போய் தூங்குங்க” என்றார் நிர்தட்சண்யமில்லாமல்.
“ரைட்! இது சரியான இடமும் நேரமும் இல்லைன்னா எது சரியான இடம்னு சொல்லிட்டா நல்லா இருக்கும். அதுவும் ஏன் கேக்குறேன்னா, திரும்பி ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு, இதை சொல்றதுக்கு உனக்கு அஞ்சு வருஷம் ஆச்சான்னு நீ கேட்றக் கூடாதில்ல? யோசிச்சு வைங்க மேம்” என்று பல்லைக் கடித்தபடி கூறியவர், திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டார்.
சித்தார்த் வெளியேறிய பின்னரும் வெகு நேரம் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார் வசுந்தரா. தலையை பின் சாய்த்து, கால்களை தளர்வாக நீட்டி விட்டத்தை வெறித்தவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தது. அதை துடைக்கும் எண்ணமின்றி அசையாமல் அமர்ந்தவரின் மனமோ புது தில்லியில் மூவரும் ஒன்றாகப் படித்த காலங்களில் தேங்கி நின்றது.
அவர்களது கல்லூரிக் காலம் ஒன்றும் இயல்பான கொண்டாட்டத்துடன் மட்டுமே இருந்திருக்கவில்லை. மூவரும் முதுகலைப் படிப்பில் இருந்ததால் அதற்கேற்ற பக்குவமும் இருந்தது. அதற்கும் மேல் அவர்களது தெளிவான குறிக்கோள்கள் ஒரு தீவிர வட்டத்திற்குள்ளேயே நிறுத்தி விட்டது எனலாம்.
வசுந்தராவும், சித்தார்த்தும் தத்தம் தந்தையர்கள் வழியை பின்பற்றி, கடினமான, ஒன்றிய அரசின் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவும் பாடங்களை தேர்ந்தெடுக்க, வருணனோ வசுந்தராவிற்காக மட்டுமே கிடைத்த பாடத்தில் சேர்ந்திருந்தார்.
அதை நினைத்த பொழுது வசுந்தராவுக்கு இப்போதும் நண்பனை நினைத்து பெருமையும், நெகிழ்ச்சியும். ஆரம்பப் பள்ளியில் பிடித்த கரத்தை விடவே மாட்டேன் என்பது போல், பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும், அதற்குப் பின்னர் முழுவதுமான அரசியல் வாழ்க்கையிலும் இன்று வரை தோள் கொடுத்துத் தாங்கியவர் ஆயிற்றே.
சித்தார்த் அவரது படிப்பின் கடைசி வருடத்தில் இருந்த போதே, போட்டித் தேர்வுகளின் துவக்க சுற்றுகளில் தகுதி பெற்று கடைசி கட்ட ஆயத்தங்களில் இருந்தார். பல்கலைக் கழகத்தின் ஒரு திட்டத்தின் மூலமாக, முதல் வருடத்தில் இருந்த வசுந்தராவிற்கு, போட்டித் தேர்வு வழிகாட்டியாகவே சித்தார்த் அறிமுகமானார்.
வழிகாட்டியென்றாலும் கிட்டத்தட்ட ஒரு கண்டிப்பான ஆசிரியர் போலவே நடந்து கொள்ளும் சித்தார்த்தின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், கண்டிப்பு கலந்த வழிகாட்டலுமே வசுந்தராவை அவரிடம் ஈர்த்தது.
வருணின் குறும்பையும், சீண்டலையுமே அதிகமாக கண்டிருந்தவருக்கு இருபதுகளின் துவக்கத்தில் இருந்த சித்தார்த்தின் பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் வெகு சுவாரசியமாக இருந்தது.
வசுந்தராவை வைத்து தான் சித்தார்த்திற்கு வருணனுடன் பழக்கம். பல நேரம் சித்தார்த் வசுந்தராவை சந்திக்கும் போது, நகமும் சதையும் போல, வருணனும் கூடவே சுற்றுவார். இருவருடைய நட்பைப் பார்த்து இன்று வரை சித்தார்த்திற்கு பிரமிப்பு தான்.
தேர்வு குறித்த ஆயத்தங்களுக்கான பயிற்சி நடக்கும் போது, அவர்களை தொந்தரவு செய்யாமல், வருணன் அமைதியாக ஒருபக்கம் அமர்ந்து ஏதாவது அரசியல் சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார்.
அது போன்ற ஒரு நாளில் தான், சித்தார்த் வசுந்தராவிடம் தன் காதலைப் பகிர்ந்தார். தன்னை காணும் போது வசுந்தராவின் கண்களில் வெளிப்படும் ஆர்வத்தை சரியாக இனம் கண்டிருந்தார் சித்தார்த். வருணன், வசுந்தரா இருவரின் நடத்தையில் காதலின் சாயல் இல்லாதிருக்க, அதுவும் சற்று தைரியத்தைக் கொடுத்தது அவருக்கு.
வருணன் அங்கிருப்பதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் கூறுவதை எப்படியும் வசுந்தரா வருணணிடம் கலந்தாலோசிப்பார் என்பதால், இயல்பாக, வருணன் இருக்கும் போதே மனம் திறந்து விட்டார்.
வசுந்தரா கண்களில் மெலிதான ஆச்சரியம் என்றால், வருணன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி.
“என்ன சொன்னீங்க?” என்று வருணன் சுதாரிக்கும் முன்னே வார்த்தைகள் அவரையும் மீறி விழுந்திருந்தது. தள்ளி அமர்ந்திருந்தவர் சட்டென்று இவர்களிருவருக்கும் அருகில் வந்து நின்று விட்டார்.
“உனக்கு ஏதுக்கு மேன் சொல்லனும்? அதெல்லாம் கேட்க வேண்டியவங்களுக்கு சரியா தான் கேட்டிருக்கு” என்றார் சித்தார்த் சிரிப்புடன்.
வசுந்தராவும் அதை மறுத்து எதுவும் சொல்லாமல் வெட்கச்சிரிப்புடன் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆனால் பார்வை இப்போது வருணனிடம் நிலைத்திருந்தது.
“வசு?” என்று வருணன் வசுந்தராவை கேள்வியாகப் பார்க்க, அப்போதும் அவர் வருணைத் தான் ‘எனக்கு சம்மதமே, நீயும் ஒத்துக்கொள்ளேன் ப்ளீஸ்’ என்ற பாவனையுடன் பார்த்து வைக்க, வேகமாக தலையை குலுக்கியவர்,
“உங்களுக்கு நடுவுல என்னைய இழுக்காதீங்க” என்றபடி தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு விருட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
வருணன் கிளம்பியதும், வசுந்தராவின் அருகில் அமர்ந்து, அவரை தோளோடு சேர்த்தணைத்தார் சித்தார்த்.
“ஓய், என்ன உங்க ஃபிரெண்ட் பெர்மிஷன் கொடுத்தாத் தான் ஓகே சொல்லுவீங்களா மேடம்?”
“ஓகே சொல்றதுக்கு முன்னாடியே, நீங்க மேல கை போடுறீங்க சார், ரொம்ப தப்பாச்சே” என்றார் வசுந்தராவும் சிரிப்புடன்.
“ஹா ஹா, உங்களுக்கு தான் மேடம் உங்க ஃபிரெண்ட் பெர்மிஷன் எல்லாம் வேணும். எனக்கு உங்க பெர்மிஷன் தான் எப்போவே கிடைச்சிருச்சே” என்றவர் வசுந்தராவின் கைகளை ஆசையாக வருடினார்.
அதில் கூசி சிலிர்த்த வசுந்தரா,
“இதெல்லாம் எப்போ நடந்துச்சாம்?” என்றார் லேசான திணறலுடன்.
எப்போதும் அலை போல் ஆர்ப்பரிப்புடன் பேசும் வசுந்தரா, இன்றோ சிறிது வெட்கமும் தயக்கமுமாக பேசுவதைப் பார்த்த சித்தார்த்திற்கு அவரை அள்ளி அணைத்துக் கொள்ளும் பேராவல். ஆனால் தோளில் கை வைப்பதற்கே அசாத்திய துணிவு தேவைப்பட்டிருக்க, அணைக்கும் ஆசையை அடக்கித் தானே வைக்க வேண்டும். அதை வெளிக்காட்டாதவராய்,
“ஐ நோ வசு. கொஞ்ச நாளாவே உன் பார்வைல இருக்க மாற்றம் கூட தெரியாம இருக்குமா என்ன? நீயாவே சொல்லிடுவன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா மேடம்க்கு அந்த யோசனையே இல்லை போல.
இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு. அப்புறம் கோர்ஸ் முடிச்சு, ஐ.எப்.எஸ் டிரெயினிங் ஆரம்பிச்சிடுமே. ஐ காண்ட் கேரி திஸ் அலோன் எனி மோர். இருக்குறப்போ உன் கூட ப்ராப்பரா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் சொல்லிட்டேன் வசு. இந்த டைம் திரும்ப கிடைக்காது டார்லிங்” என்றார் வசுந்தராவின் கையை தன் நெஞ்சோடு பதித்து.
அதைக் கேட்டதும் ஏதோ கனவு கலைந்தது போன்று நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்த்தார் வசுந்தரா.
“என்னடா?” என்றார் சித்தார்த் வசுந்தராவின் பார்வையைப் புரிந்தவராக.
“அதுக்குள்ளயா?” என்றார் வசுந்தரா. ஏதோ குழந்தையிடம் மிட்டாயைக் காட்டி உடனே பறித்துக் கொண்டது போல் இருந்தது அவர் முகம்.
“ம்ம்ம், உனக்கு தான் தெரியுமே. மூனு மாசம் UPSC கிளியர் பண்ண எல்லா சிவில் சர்வெண்ட்ஸ்க்கும் LBSNAA1, மூசோரில காமன் டிரெயினிங் இருக்கும். அதுக்கப்புறம் IFS சூஸ் பண்ணவங்களுக்கு ஆறுலேர்ந்து ஒன்பது மாசம் FSI2 டெல்லில டிரெயினிங். கடைசியா ஃபாரின் லாங்குவேஜ் டிரெயினிங் அந்தந்த கண்ட்ரில இருக்கும். எல்லாம் சேர்த்து புரொபேஷன் பீரியடே ஒரு மூனு வருசம் ஆகிடும். அந்த டைம்ல நினைச்ச நேரத்துக்கு எல்லாம் பார்க்கவோ, பேசவோ முடியாதுமா”
“ரைட் பாத்துக்கலாம். நீங்க சொல்றதும் சரி தான்” என்ற வசுந்தரா,
“இருந்தாலும், அந்த கண்ணாமூச்சி ஆட்டம் எனக்கு பிடிச்சு தான் இருந்துச்சு” என்றார் கண்களை சிமிட்டி.
இப்போதும் அந்த வசுந்தராவை நினைத்து லேசான புன்னகை சித்தார்த்திடம். துறு துறுவென எதையாவாது பேசிக்கொண்டு, ஓரிடத்தில் கால் பாவாமல் ஓட்டமாக இருக்கும் நடையோடு, இன்றைய வசுந்தராவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒருவர் தான் சித்தார்த் காதலித்த வசுந்தரா. அதன் எச்சங்களை இன்று தேடினாலும் கிடைக்காதே.
அது சித்தார்த்திற்கு புரியாமல் இல்லை. கடந்த நீண்ட வருடங்களில் இருவருமே முற்றிலும் மாறி விட்டனர் தான். அவர்களது பொறுப்பும், பணிச்சூழலும் மாற்றாமல் இருந்தால் தான் அதிசயம்.
ஆனால் ஆதி நேசம் மாறி விடுமா? இல்லை அது போன்ற ஒன்று இல்லவே இல்லையென்று நிருபிக்க முயல்கிறாரா வசுந்தரா என்ற குழப்பம் தான் சித்தார்த்திற்கு. வீடு திரும்பும் வழி நெடுக அதையே யோசித்து வந்தவர் அன்றைய நீண்ட நாள் தந்த அயர்வில் வாகனத்திலேயே உறங்கி விட்டிருந்தார்.
error: Content is protected !!