Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 19

     கேசி வீடு வந்து சேர்ந்த போது, மணக்க மணக்க குங்குமப் பூ போட்ட பால் பாயாசம் நிறைந்த கிண்ணத்தை அவனுக்குக் கொடுத்தார் பைரவி. தாயை ஆச்சர்யமாகப் பார்த்தபடி நின்றிருந்தானே தவிர, அவர் கொடுத்ததை வாங்கவில்லை. அவன் இருக்கும் நிலைக்கு இனிப்பு கூட துவர்ப்பாகத் தான் தெரியும் என்பதால் அமைதியாக இருந்தான்.

     “எவ்வளவு நேரம் நீட்டிக்கிட்டே இருக்கேன். வாங்கி சாப்பிடு டா. இன்னைக்கு நம்ம வீட்டில் பெரிய நல்ல விஷயம் நடந்திருக்கு. நீ சித்தப்பா ஆகிட்ட. உன் அண்ணி குழந்தை உண்டாகி இருக்கா.” ஆனந்தமாய் பைரவி சொல்ல, கேசி ஆச்சர்யமாய் கீரவாணியைப் பார்த்தான்.

     “இன்னும் மூணே மாசத்தில் நம்ம வீட்டில் குழந்தைச் சத்தம் கேட்கும்.” பைரவி கூடுதல் தகவல் சொல்ல, “மூணு மாசத்திலா.” அதிர்வாய் கேட்டான் கேசி.



Advertisement

     அதைக் கேட்டதும் பைரவியின் முகம் சுருங்கியது. “அவ ஆறு மாசமா கர்ப்பமா இருக்காடா. நினைவு வந்த நேரம் உன் அண்ணன் ஆடின ஆட்டத்தில் பயந்து இவ்வளவு நாளும் மறைச்சு வைச்சிருக்கா.

     இந்தக் கொடுமை எந்த உலகத்திலாவது நடக்குமா. தகப்பன்கிட்ட அவனோட குழந்தை உருவான விஷயத்தை சொன்னா எங்க அவன் குழந்தையை எதுவும் பண்ணிடுவானோன்னு அம்மாக்காரி பயந்திருக்கா அந்த அழகில் இருந்திருக்கு நம்ம வீடு.”

     “அவளைச் சொல்லி என்ன பண்றது. பிள்ளைத்தாச்சிப் பொண்ணு என் கண்ணு முன்னாடியே சுத்திக்கிட்டு இருந்திருக்கா அதைக் கவனிக்க முடியாத அளவு சொந்த நினைப்பில் பைத்தியக்காரி மாதிரி இருந்திருக்கேன்.

Advertisement

     பாவி மக, இந்த மாதிரி நேரத்தில் எத்தனை ஆசை இருந்திருக்கும். ஒன்னைக் கூட வாய் திறந்து கேட்கலையே. வாய்க்கு ருசியா நாலு நல்லது கூட செஞ்சு கொடுக்கலையே அவளுக்கு.” எனத் தன் போக்கில் புலம்பினார்.

Advertisement

     வாணிக்காக பைரவி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நீலாவைத் தான் நினைக்கத் தூண்டியது மோகனனுக்கு. அவளுக்கும் நிறைய ஆசைகள் இருந்திருக்குமே. அவளுக்கும் நிறைய கவனிப்புகள் தேவைப்பட்டிருக்குமே. அவள் இருந்த நிலைக்கு அவளாலும் எதையும் வாய் திறந்து கேட்டிருக்க முடியாது. அமிர்தாவாலும் அவளுக்கு என்று பெரிதாக எதையும் செய்திருக்க முடியாதே என நினைக்க நினைக்க, தன் மீதே அப்படி ஒரு கோபம் வந்தது.

     முதன்முதலாக பள்ளியில் வைத்து தற்கொலை முயற்சி செய்யும் போதே செத்து ஒளிந்திருந்தால் இரண்டு பெண்கள் இல்லை அமிர்தாவோடு சேர்த்து மூன்று பெண்களின் வாழ்வும் தப்பித்து இருக்குமே எனத் தலையில் அடித்தான். வாணிக்கு மனது துடித்தது. முழுதாக இல்லாமல் போனாலும் அவன் நினைத்து வருந்தும் விஷயத்தில் சிலவற்றை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

     கர்ப்ப விஷயத்தை சொன்னால் அவன் கோபம் கொள்வான் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அவள் மறைத்ததற்கான முக்கியமான காரணமே, தன்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், நீலாவை நினைத்து குற்றவுணர்வில் துடிப்பானே, அவளோடு இருக்க முடியவில்லையே என்று தவிப்பானே என்பது தான்.

Advertisement

     “என்ன அண்ணி இதெல்லாம்?” கேசி வாணியிடம் போக, “உங்க அண்ணனுக்கு பழசு எல்லாம் நினைவு வந்து பெங்களூர் வீட்டை விட்டு இங்க வந்த கொஞ்ச நாளில் தான் விஷயம் தெரிஞ்சது. அவர்கிட்ட சொல்லத்தான் நினைச்சேன். அவர் என்கிட்ட முகம் கொடுத்து கூடபேசல.

     அவர் பொண்டாட்டி இடத்தை பின்வாசல் வழியா வந்து பறிச்சுக்கிட்டேன்னு என் மேல கோபமா இருந்தார். அப்படி இருக்க அவரோட முதல் இரண்டு குழந்தைங்களோட இடத்தைப் பறிக்கிறதுக்காக என் குழந்தை வந்திடுச்சுன்னு நினைச்சு, என்னை வெறுத்த மாதிரி என் குழந்தையை வெறுத்துட்டா என்ன பண்றது? அதனால் தான் அமைதியா இருந்தேன்.” என எல்லோரும் ஏற்கும் படியான ஒரு காரணத்தைச் சொன்னாள். தன் காதலின் ஆழம் பற்றி தனக்குத் தெரியும். அது மற்றவர்களுக்குத் தெரியத் தேவையில்லை என்று நினைத்துவிட்டாள். அவள் மனதில் தெளிவான ஒரு திட்டம் இருந்தது. அதற்கு ஏற்ப தான் காய் நகர்த்தினாள்.

     “டாக்டர்கிட்ட காட்டுனீங்களா?” அக்கறையாய் கேட்டான் கேசி.

     “எங்க போற, எப்ப வருவன்னு என்னைக் கேட்க இந்த வீட்டில் யார் இருக்கா? நான் பாட்டுக்கு போவேன் வருவேன். திட்டம் போட்டு நான் எதையும் மறைக்கல. நீங்க யாரும் கண்டுபிடிக்கல அவ்வளவு தான்.” இலகுவாகச் சொன்னாள்.

     “ஆறு மாசம் னா வயிறு தெரியவே இல்லையே.” கேசிக்கு அடுக்கடுக்காக சந்தேகம் வந்தது.

     “நானும் உங்களை மாதிரியே தான் யோசிச்சு பயந்தேன். ஐந்து மாசத்தை தாண்டியும் எனக்கு பெருசா வயிறு வைக்கல. சந்தேகப்பட்டு டாக்டர் கிட்ட கேட்டப்ப உயரமா இருக்கும் பொண்ணுங்களுக்கு கர்ப்பப்பை விரிவடைய வயித்துக்குள்ள போதுமான இடம் இருப்பதால் வயிறு பெருசாக நாள் எடுத்துக்கிறது நடக்கிறது தான்னு சொன்னாங்க.

     அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கு தான். எவ்வளவு நாள் இப்படியே போகுதோ போகட்டும். கண்டுபிடிச்சு கேட்கும் போது சொல்லிக்கலாம் னு அமைதியா இருந்தேன். உங்க அண்ணன் இன்னைக்கு கண்டுபிடிச்சுட்டார். அவருக்கே தெரிஞ்ச பிறகு அத்தைக்கு சொல்றதுக்கு என்னன்னு சொல்லிட்டேன்.” என்று விளக்கம் கொடுத்தாள்.

     “அண்ணா” என்கிற அழைப்போடு மோகனன் அருகே செல்லப் பார்க்க, “வாழ்த்துகள் அது இதுன்னு ஏதாவது சொன்ன நான் கடுப்பாகிடுவேன்.” கடிக்காத குறையாகச் சொன்னான் மோகனன்.

     “அப்பாவாகி இருக்கிற உனக்கு வாழ்த்து சொல்லாம வேற என்ன சொல்லுவாங்களாம். சும்மா சம்மா கோச்சுக்கிட்டு இருக்காத. நடந்தது எல்லாம் போதும். இப்ப குழந்தையும் வந்தாச்சு, நடந்த எல்லாத்தையும் மறந்து வாணியை ஏத்துக்கிற வழியைப் பார்.” என்றார்.

     “மறக்கணுமா எதை மறக்கணும், யாரை மறக்கணும். நீலாவையா, அவளோட எனக்கு நடந்த கல்யாணத்தையா, அவளோட நான் வாழ்ந்த சந்தோஷமான வாழ்க்கையையா, அவளுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைகளையா? யாரை மறக்கச் சொல்றீங்க.” கோபமாய் கத்தினான் மோகனன்.

     பைரவி ஏதோ சொல்ல வர, “குழந்தைக்காக ஏத்துக்கணும் அப்படின்னா நீலாவுக்கும் எனக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளுக்காக ஏன் மா நீங்க நீலாவை ஏத்துக்க நினைக்கல. அது சரி நீங்க என் குழந்தைகளையே ஏத்துக்கல, உங்ககிட்ட போய் நீலாவைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் பாருங்க.” சலிப்பாய் சொல்லிவிட்டு திரும்பினான் மோகனன். அவனுக்குள் பெரும் பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

     இப்போது கூட அவனால் வாணியையும் இந்தக் குழந்தையையும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதே சமயத்தில் மொத்தமாக கை கழுவவும் முடியவில்லை. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்தபடி தடுமாறிக்கொண்டிருந்தான்.

     “அண்ணா கோப்படாத, உன்னோட உடம்புக்கு ஏதாவது ஆகிடப்போகுது.” என்றபடி கேசி அவன் அருகே செல்ல, “என்னமாச்சும் ஆகிடாதான்னு தான் தினம்தினம் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். இது ஒரு வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நான் வாழ, நீயும் நம்மைப் பெத்த அம்மாவும் பல புண்ணிய காரியங்கள் எல்லாம் செஞ்சிருக்கீங்க.” கோபத்தில் கூட நக்கலைக் காட்டினான்.

     “உன்னோட உடம்பை இனி நீ தான் அண்ணா பார்த்துக்கணும்.” ஒருவித பிடிவாதத்தோடு கேசி சொல்ல, அப்போது தான் தம்பியின் முகத்தில் இருந்த உணர்வை உற்று நோக்கினான் மூத்தவன்.

     “என்னாச்சுடா உனக்கு. டிரான்ஸ்வர் எதுவும் கிடைச்சிருக்கா. நினைச்சா வந்து பார்க்க முடியாத இடத்துக்கு போகப் போறியா?” மோகனன் கேட்க, “அப்படியா கேசி, அது தான் நிஜம் னா உனக்கு இந்த வேலையே வேண்டாம். பேசாம ரிசைன் பண்ணிட்டு அண்ணன் மாதிரி சாதாரணமா ஏதாவது வேலையைப் பார். உங்க அண்ணன் எப்ப என்ன பண்ணுவான்னு யாராலும் கணிக்க முடியாதபடி இருக்கு. நீ இங்க இருக்கிறது தான் சரியா இருக்கும்.” என்றார் பைரவி.

     “இல்லம்மா இனி நான் இங்க இருக்க முடியாது. நான் போயாகணும்.” என்றவனை வாணி முதற்கொண்டு அனைவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர். அண்ணனைத் தாண்டி எதுவும் வேண்டாம் என்பவன், இன்று மாற்றிப்பேசினால் ஆச்சர்யம் வரத்தானே செய்யும்.

     அனைவரையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன், “இன்னும் இரண்டு நாளில் எனக்கும், அமிர்தாவுக்கும் ரெஜிஸ்டர் ஆபிஸில் வைச்சு கல்யாணம். அதுக்குப் பிறகு நான் அவளோட வீட்டுக்குப் போயிடுவேன். அப்பப்ப இங்க வந்து போனாலும் இனி நிரந்தரமா அங்க தான்.” உறுதியாய் சொன்னான்.

     தம்பியை ஒரு பார்வை பார்த்த மோகனன், “நாங்க சண்டை போடும் போது அமிர்தா போன் பண்ணி இருந்தா, ஆனா பேசல. திரும்ப கால் பண்ணும் போது எடுக்கவும் இல்ல. என்ன பிரச்சனை. எதுக்காக திடீர் கல்யாணம்.” கூர்மையாய் வந்தது மோகனன் வார்த்தைகள்.

     பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான் கேசி. தன்னவள் செய்த முட்டாள்தனத்தை கடைபரப்பி அவள் தன்மானத்திற்கு இழுக்கை உண்டாக்க அவனுக்கு மனம் வரவில்லை.

     “அந்தக் குடும்பமே வேண்டாம் னு நாம தான் மொத்தமா ஒதுங்கிட்டோமே டா. அப்புறம் எதுக்காகடா இந்த முடிவு.” பைரவி அயர்ச்சியாய் கேட்டார்.

     “நீலா அண்ணியும், பசங்களும் இருக்கும் வரை அந்தக் குடும்பத்துகிட்ட இருந்து எப்பவும் நாம மொத்தமா ஒதுங்கிட முடியாது மா.” என்க, கோபம் வந்தது பைரவிக்கு.

     “என்னடா நீலா, நீலா. இவ இதோ இந்தக் கீரவாணி, உன் அண்ணனுக்கு மனநலப் பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சும் இரண்டாம் தாரமா கல்யாணம் ஆகி வந்திருக்கா. முதல் பொண்டாட்டியை நினைச்சு இந்த பைத்தியக்காரன் கண்டபடி செய்யும் எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு அவன் காலையே சுத்தி வரா. இவ அளவுக்கு இந்தக் குடும்பத்துக்காகவும் உன் அண்ணனுக்காகவும் நீலா என்னடா செஞ்சிருக்கா.” காட்டமாய் கேட்டார்.

     நீலா மீதான பரிதாபமும், பேரப்பிள்ளைகள் மீதான அன்பும் அவருக்குள் இருக்கிறது தான். ஆனால் தன்மகன் என்று வரும் போது மற்றவர்கள் எல்லாம் பின்னால் தான் அவருக்கு. நீலாவுக்காக காலத்திற்கும் வருந்த வேண்டுமானால் அவரால் முடியும். மற்றபடி மகனின் மனைவி என்றால் அது வாணி தான் என்னும் தீர்மானமான முடிவுக்கு அவர் என்றோ வந்துவிட்டார். வாணிக்கும், மோகனனுக்கும் இடையே ஒரு பிணைப்பு வரவே வராதோ என்று இத்தனை நாட்களாக பயந்து கொண்டிருந்தவருக்கு, தீர்வு சொல்லும் வகையில் குழந்தை செய்தி கிடைத்துவிட்டதில் இனி எல்லாம் சுகமே என்று அவர் நினைத்திருக்க, அதற்கு விடமாட்டேன் என்பது போல் வந்து நின்ற இளைய மகன்மேல் கோபம் வந்தது.

     தாயின் சொற்களைக் கேட்டு விரக்தியாகச் சிரித்தான் கேசி. “அண்ணனுக்காக நீலா அண்ணி என்ன செஞ்சிருக்காங்கன்னு கேட்டீங்க இல்ல. அவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு தெரிய வந்தா நீங்க யாருமே தாங்க மாட்டீங்க மா. விஷயம் தெரிய வந்த நொடியில் இருந்து உள்ளுக்குள்ள செத்துக்கிட்டு இருக்கேன்.” என்ற கேசி மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக கண்களைத் துடைத்தான்.

     “இந்த உலகத்தல் எந்த ஒரு பொண்ணும் தன் புருஷனுக்காக செய்யக்கூடாத விஷயத்தை என் நீலா அண்ணி அண்ணனுக்காக செஞ்சிருக்காங்க. நளாயினி கூட புருஷனோட ஆசைக்காக அவரை தலையில் சுமந்து போய் பரத்தையர் வீட்டில் தான் விட்டாங்க. ஆனா என் அண்ணி.” என்றவன் வாணி அருகே வந்து, “இப்படிச் சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. வருங்காலத்தில் என்ன நடந்தாலும் நான் சாகுற வரைக்கும் நீலாவும் எனக்கு அண்ணி தான்.” உறுதியாகச் சொன்னான் கேசி.

     “நீங்க அவங்களை அண்ணின்னு கூப்பிடக்கூடாதுன்னு நான் என்னைக்கும் சொன்னதே இல்லையே. அவங்க என்னைக்கும் உங்க அண்ணி தான். உங்க அண்ணனோட முதல் மனைவி தான். இல்லன்னு சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.” இயல்பாய் சொன்னாள் வாணி.

     நடந்ததை எப்படிச் சொல்வது என்று கேசி தடுமாறிக்கொண்டிருக்கும் போதே, “சோ, அந்தக் கொடூரம் நடந்த அன்னைக்கு, நடந்த எதையும் தடுக்காம நீலா அமைதியா இருந்ததுக்கு காரணம் ஊர் உலகம் சொல்ற மாதிரி அவ உயிருக்கு பயந்ததால் இல்ல, நான் நம்பிக்கிட்டு இருந்த மாதிரி குழந்தைகளுக்காகவும் இல்ல. மாறா எனக்காகத் தான் இல்ல.” கரகரத்த குரலோடு மோகனன் கேட்க, ஆச்சர்யமாக அண்ணன் பக்கம் திரும்பினான் தம்பி.

     “என்னைக் கத்த வைக்காதீங்க ப்ளீஸ்.” என நீலா அந்த பயங்கரவாதிகளிடம் கெஞ்சும் சத்தம் இப்போது நடப்பது போல் காதிற்குள் கேட்க, மோகனின் தலை திடீரென பாரமானது. மூளை நரம்புகள் வெடிப்பது போல் வலித்தது. ஒரே இடத்தில் நின்றாலும் பூமி படுவேகமாக சுற்றுவது போல் தெரிய, இரண்டு கரத்தாலும் தலையைப் பிடித்துக்கொண்டு தடுமாறினான்.

     “கேசி அவரைப் பிடிங்க, நான் மாத்திரை எடுத்து வரேன்.” என்று தங்கள் அறை நோக்கி ஓடினாள் வாணி.

     “மெதுவா போ வாணி.” எனக் கீழ் இருந்து கத்தினார் பைரவி.

     சில நிமிடங்களில் ஓரளவு சமநிலைக்கு வந்திருந்தான் மோகனன். ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் முணுமுணுவென குத்திக்கொண்டிருந்த உணர்வை அவனால் தடுக்க முடியவில்லை.

     “நான் என்னடா பாவம் பண்ணேன்.” மோகனன் அப்பாவியாகக் கேட்க, பதில் சொல்லத் தெரியவில்லை அங்கிருந்த யாருக்கும். நீலாவின் கணவன் மீதான அன்பை, மரியாதையை, காதலை உணர்ந்த வாணிக்கு தான் அவள் நிழலுக்கு கூட ஈடாக மாட்டோம் என்றே தோன்றியது. பைரவிக்கும் மனம் வலித்தது தான். ஆனால் காட்டிக்கொள்ளாமல் நின்றிருந்தார்.

     “இதுக்கும் உங்க கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம். அக்காவுக்கு பண்ண பாவத்தை தங்கச்சிக்கு பிராயச்சித்தம் பண்ணி கழிக்கலாம் னு நினைச்சியா?” மோகனன் கேட்க, இல்லை என்று தலையாட்டியவன், அமிர்தா செய்ய நினைத்த காரியத்தைச் சொல்ல, “ஏய்” என்கிற ஆங்கார கத்தலுடன் தம்பியின் சட்டையைப் பிடித்த மோகனனுக்கு உடல் கிடுகிடுவென ஆடத்துவங்கிவிட்டது.

     இது வலிப்பு வருவதற்கு முன்னரான நிலை என்பது புரிய, அண்ணனை தரையில் நெடுஞ்சாண்கிடையாக படுக்க வைத்த கேசி, கை கால் என சூடு பறக்க தேய்த்துவிட்டான். சற்று முன்னர் தான் காய்ச்சி எடுத்து வைத்திருந்த பாலைக் கொண்டு வந்து கணவனுக்கு குடிக்க கொடுத்தாள் வாணி. வெகுநேரம் பிடித்தது மோகனன் சரியாவதற்கு.

     உடலின் சக்தி மொத்தமும் வெளியேறிவிட்டது போல் மிகவும் சோர்வாக சோபாவில் சாய்ந்திருந்தான். கண்கள் நிலைகுத்தி விட்டத்தைப் பார்த்தபடி இருந்தாலும் நிற்காமல் கண்ணீர் வடிந்தது.

     அண்ணனின் காலடியில் அமர்ந்த கேசி, “சரியான நேரத்தில் அவளை நான் தடுத்துட்டேன். இனி எப்பவும் அவ அந்த மாதிரி முடிவுக்கு போகக்கூடாதுன்னு தான் பணத்தை சாக்கு வைச்சு கல்யாணத்துக்கு கார்னர் பண்ணி இருக்கேன். எங்களோட வாழ்க்கை கண்டிப்பா சவால் நிறைந்ததா தான் இருக்கும். ஆனா அவளை சந்தோஷமா பார்த்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னை நம்பி உன் பொண்ணை எனக்கு கொடு அண்ணா.” என்றான்.

     “கல்யாணத்துக்கு நாங்க யாரும் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாளோ.” வாணி சரியாகக் கேட்க, சங்கடமாக தலையாட்டினான் கேசி.

     பட்டென்று அவன் கரத்தை பிடித்துக்கொண்ட மோகனன், “அவ என்ன பேசினாலும் பொறுத்துப் போ டா. எப்படியாச்சும் உன்மேல அவளுக்கு இருக்கும் காதலை தூசி தட்டி வெளியே எடு. அவளை நல்லபடியா வாழ வை.” என்க, “கண்டிப்பா அண்ணா.” என்றவன், அண்ணன் மூச்சுவிடவே சிரமப்படுவதை உணர்ந்து கைத்தாங்கலாய் அவனை அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.

     ஆண்கள் இருவரும் சென்றதும் சோர்வோடு பொத்தென்று அமர்ந்தனர் பெண்கள் இருவரும். “என்னத்தை உங்க பங்குக்கு நீங்க எதுவும் சொல்லலையா?” வாணி கேட்க, “நான் ஆடிப்போய் இருக்கேன் வாணி. பச்சைப்பிள்ளை மாதிரி இருப்பா நீலா, அத்தைங்கிற பேச்சுக்கு எதிர் பேச்சு பேசினது கிடையாது. அவளுக்கு கோபமே வராதுன்னு நான் பலமுறை யோசிச்சு இருக்கேன். அவளுக்குள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்கு பாரேன்.” என்க,

     “தனக்கு ரொம்பப் பிடிச்சவங்களுக்கு ஒன்னுன்னா பொண்ணுங்க என்ன வேண்ணா செய்வாங்க அத்தை. அன்னைக்கு நீலா பண்ணதும், இன்னைக்கு அமிர்தா செய்யப் பார்த்ததும் அதுதான்.” என்று கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்ட வாணி, தன் வயிற்றைப் பார்த்து நான் பண்ணதும் அப்படித்தான் எனத் தன்னோடு நினைத்துக்கொண்டாள்.

     கேசி கீழே வர, “இன்னும் என்ன யோசனை கொழுந்தனாரே. அதுதான் நீங்க ஆசைப்பட்ட படி உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் கல்யாணம் ஆகப்போகுதே.” என்று கலகலப்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முயற்சித்தாள் வாணி.

     “பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன். பேசாம எல்லாப் பிரச்சனைக்கும் காரணமா இருந்த அந்த கண்ணகிநகர் வீட்டை வித்திடுவோமான்னு தோணுது. ஆனா அது நடக்கிறதுக்கும் நாள் ஆகும் இல்ல. நீலா அண்ணி ஹாஸ்பிடலில் இருக்காங்க. இப்பவே ப்ரண்ட்ஸ்கிட்ட கடன்கேட்டு தான் அமிர்தா அவங்களை அங்க வைச்சிருக்கா. உடனடியா பணம் கிடைக்கிற மாதிரி ஏதாவது பண்ணனும்.” என்றான்.

     சத்தமில்லாமல் அறைக்குள் சென்ற பைரவி, தன்னுடைய நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். கேசி அவரை ஆச்சர்யமாகப் பார்க்க, “என்னடா உன் அம்மாவை வில்லி மாதிரி பார்க்கிற. எனக்கும் நல்ல மனசு இருக்கு. என் பையனோட உசுரைக் காப்பாத்திக் கொடுத்தவளோட உயிரை நான் காப்பாத்தி, அவளுக்கு பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ண நினைக்கிறேன்.” என்றார்.

     “என்னத்தை ரொம்ப நாள் அப்புறம் உங்க உண்மையான குணம் வெளியே வருது போல. ஆமா, நீலா நல்லபடியா குணமாகிட்டா அவங்க உங்க மூத்த பையனைக் கேட்டு இங்கே வருவாங்க. அதுவும் சும்மா எல்லாம் வரமாட்டாங்க. இந்த வீட்டோட முதல் இரண்டு வாரிசைக் கொண்டு வருவாங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க.” சிரிப்போடு வாணி கேட்க,

     “இதுவரைக்கும் நாடகத்தை நடத்தின ஆண்டவனுக்கு இதுக்கு மேலும் நடத்தத் தெரியும். எனக்கு என்னவோ நீலா குணமாகி வரும் நாள் எல்லாப் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்திடும் னு தோணுது.” பைரவி ஆரூடம் சொல்ல, “கண்டிப்பா.” என்றாள் கீரவாணி. அவள் பேச்சில் ஒரு உள்ளர்த்தம் இருந்ததை அவள் மட்டுமே அறிவாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!