யுகத்தின் தலைவன் அத்தியாயம் 41
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 41
சிவராமனுடன் லட்சுமியும் தற்போது கடைக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
லட்சுமி எனக்கு போண்டா சாப்பிடலானு இருக்கு. வாங்கிட்டு வா.
டாக்டர் உனக்கு எண்ணெய் பண்டம் எல்லாம் கொடுக்க வேண்டானு சொல்லிருக்காங்க…
Advertisement
டாக்டர் அப்படிதான் சொல்லுவாங்க. அதுக்காக அப்படியே இருக்க முடியுமா?
கங்கா காலைலே உன்கிட்ட என்ன சொல்லிட்டு போச்சு?அப்பா என்ன கேட்டாலும் வாங்கி கொடும்மானு தானே…
சரி நீ கங்காகிட்ட ஃபோன் பண்ணி கேளு.அவ வாங்கி கொடுக்க சொன்னா. நான் வாங்கி தரே..
இருவரின் பஞ்சாயத்தையும் அவளிடம் கொண்டு சென்றனர்.
Advertisement
அப்பா டாக்டர் அதெல்லா சாப்பிடக் கூடாதுனு சொல்லிருக்காரு.
Advertisement
கங்கா,எனக்கு ஒரே ஒரு போண்டா அதுக்குமேலே நான் கேட்க மாட்டேன்.
சரிப்பா ஒன்னே, ஒன்னுதான்.அதுவும் எண்ணெய் அதிகமா இருந்தா. அம்மாக்கு கொடுத்தரனும்.
“சரி கங்கா” என ஃபோனை வைத்தவர். லட்சுமி!”கங்கா, என்கிட்ட ஏன்ப்பா ஒன்னு மட்டும் இன்னொன்னு கூட வாங்கி சாப்பிடுனு சொல்லுச்சு. அதுனால எனக்கு ரெண்டு போண்டா வாங்கி தா” என குழந்தையை போல அடம்பிடித்து வாங்கி உண்டார் சிவராமன்.
Advertisement
சல்மான் அடுத்த நாளே கன்னியாகுமரி சென்றுவிட்டதாக நித்யா கூறினாள். அதை கேட்ட கங்காவிற்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.அன்று அவனை பார்த்து வந்ததோடு சரி, ஃபோன் கூட செய்து கொள்ளவில்லை.
அன்று காதலர் தினம்.. பழைய நாட்களின் நினைவுகளால் சரியான தூக்கம் இல்லை, கங்காவிற்கு… மணியை பார்க்க காலை ஐந்து மணி. அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது. எனவே அவனது யுனிவர்சிட்டியின் இன்ஸ்டா பக்கங்களை புரட்டினாள்.அவனது ஃபோட்டோவையாவது பார்க்கலாம் என….
அதில் ஒரு வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு பதிவிடப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்யும் பேராசியர் முதல் கொண்டு துப்புரவு பணியாளர் வரை அனைவருக்கும் கிஃப்ட் கொடுக்கும் வீடியோ அது..அதில் சல்மான் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு,சிரித்து முகமாக பேசிக் கொண்டிருந்தான். அவனின் சிரித்த முகத்தை கண்ட கங்காவிற்கு தன்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தது.
அந்த வீடியோ யாருக்காக யாரால் எடுக்கப்பட்டது என்றெல்லாம் தெரியவில்லை… ஆனால் அதன் பின்னணியில் வந்த”அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற பாட்டு கங்காவிற்கு தான் யார்? என்பதையும் சல்மான் எந்தளவு அவள் எண்ணங்களில், நினைவுகளில், இதயத்தில் நிறைந்து இருக்கிறான் எனவும் உணர்த்தியது.
அந்த வீடியோவின் இறுதியில்,”அன்பு என்பது சில நேரங்களில் பெரிய விஷயமல்ல…யாரோ ஒருவருக்காக மனதார நாம் செய்யும் ஒரு சிறிய அக்கறை கூட…அலை போல வாழ்க்கையில் பரவி, ஒருநாள் பல மடங்கு அன்பாக மீண்டும் நம்மிடமே வந்து சேரும்.” என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.
சரிதானே…சல்மான் தனக்காக காட்டிய சிறிது அன்புதான். இன்று தன்னுள் பலமடங்காக பெருகி காத்திருக்கிறது என எண்ணிக் கொண்டாள்.
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!”
என்பதை போன்ற காதலில் எல்லாம் அவளுக்கு நம்பிக்கை இல்லை.அதைப்போல அவனை பார்த்தும் எல்லாம் காதல் வரவில்லை.
கங்காவை பொறுத்தவரை சிவராமன் சுவற்றில் ஆணி அடித்தால் கூட ஹீரோவாகத்தான் தெரிவார். சிறுவயதில் எல்லார் வீட்டிலும் கரண்ட் இருக்க சிவராமன் வீட்டில் மட்டும் பீஸ் போய் விட்டது.எட்டு மணிக்கு வந்தவர் திரிவிளக்கு வெளிச்சத்தில் வீட்டின் ஓரிடத்தில் மண்ணை கொஞ்சம் தோண்டி, ஒரு குச்சியை நட்டு அதில் ஒயர் செருகி ஐந்து நிமிடத்தில் கரண்ட்டை வர வைத்தார். இருமகள்களும் கரண்ட் வந்த குஷியில் விளக்கை ஊதி அணைக்க போட்டி போட்டனர்.
சிவராமன் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்,டூ,திரி என சொல்லி இருவரையும் விளக்கை ஊதி அணைக்க வைத்தார். ஆனால் கவனமாக விளக்கை கங்கா பக்கம் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவார்.
இதை போன்ற எந்த ஹீரோயிசத்தையும், அக்கறையையும் அவன் இவளின் மனதை அடைய காட்டவில்லை.தன் இயல்பான பேச்சினாலும், நற்குணங்களாலுமே இவளின் மனதை நிரப்பி நிற்கிறான்.
கங்காவின் பார்வையில்,மற்ற ஆண்களோடு ஒப்பிடுகையில் எப்படி சிவராமன் தனித்து தெரிவாரோ… அதற்கு சற்றும் குறைவில்லாது சல்மானும் தனித்து தெரிவான் அவளுக்கு மட்டும்…
அவன் வேற்று மதத்தை சார்ந்தவன், அதுமட்டுமல்ல தன்னை விட ஒருவயது குறைந்தவன் இதெல்லாம் சிவராமன் ஏற்றுக்கொள்ள மாட்டார். என்றெல்லாம் அறிவு கூற,அவனை மறந்துவிட இதயம் மறுத்தது.அவன் தன்னைவிட நீ வயதில் பெரியவள் என்ற எல்லையில் இவளை நிறுத்தி இருந்தால், இவளும் அந்த எல்லையிலேயே நின்றிருப்பாள். ஆனால் அவனே அந்த தடையை உடைத்து இவளை இயல்பாக்கினான்.
அதுமட்டுமல்ல… இதுவரை சல்மான் என்ற ஒருவனை மட்டுமே அவளது எண்ணங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவன் வீட்டிற்கு சென்று வந்த பிறகுதான், அவன் பின்னால் இருந்த அந்த குடும்பத்தின் அன்பும், பாசமும், நம்பிக்கையும் அவளுக்கு புரிந்தது.
அவன் அப்பாவும் அம்மாவும் எத்தனை உணர்வுகளோடு அவனை வளர்த்திருக்கிறார்கள்… இப்போது அந்த வீட்டின் மொத்த நம்பிக்கையும் சல்மான் ஒருவன் மீது மட்டுமே நிற்கிறது.
அப்படி இருக்க, அவன் கூறியது போல வேறு மதப் பெண்ணை அவன் மணந்தால் சுற்றத்தார் என்ன சொல்வார்கள்? அவன் அம்மா அதை ஏற்றுக் கொள்வார்களா? என்ற எண்ணங்கள் அவளை குழப்பின.
ஆனால் இத்தனைக்கும் நடுவில் கூட… எந்த நிலையிலும் அவனை விட்டு விலக அவளது மனம் மட்டும் மறுத்தது.
சல்மான் நாற்பது நாள் கழித்து அவன் அம்மாவையும் கன்னியாகுமரியே அழைத்துச் செல்ல முடிவு செய்திருப்பதாக மாலதி கூறினாள்.
அவர்கள் கிளம்புவதற்கு முன், மீண்டும் ஒருமுறை நித்யா,மாலதி, கங்கா மூவரும் சல்மான் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
கங்கா அவன் அம்மாவிற்காக ஒரு ப்ரேயர் மேட்டையும், சால்வையும் வாங்கினாள்.
தினமும் மாலதி ஃபோன் செய்வது… “இன்று வேண்டாம். அவர்கள் வீட்டில் ஏதோ சடங்காம்” என ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டாள்.
நித்யா கடுப்பாகி, கங்கா!” நான் வரலே.. இவள பத்திதா நமக்கு தெரியுமே. சரியான கேப்மாறி.அவன் வீட்டுல நடக்கற விசயம் இவளுக்கு எப்படி தெரியுமாம்?இவ ஏதோ கேம் ப்ளே பண்றா.இதுக்கு மேல இவள நம்ப வேண்டா..
எனக்கும் அந்த சந்தேகம் வந்துச்சு நித்தி.நான் உனக்கு எப்படி தெரியும்னு? கேட்டே… ‘கோ ஸ்காலர்’சொன்னாங்கனு சொன்னாடி.
‘கோ ஸ்காலர்’ ஒரு பையன்.அவன் எப்படி இவ்வளவு தூரம் சல்மான் வீட்டுல நடக்கறதே எல்லாம் தெரிஞ்சுகிட்டு இவகிட்ட சொல்வானா?எனக்கு என்னமோ இவதான் அவங்க அம்மாகிட்ட பேசிட்டு, உன்கிட்ட ‘கோ ஸ்காலர்’ னு பொய் சொல்லிட்டு இருக்கானு தேணுது.
“சரி நானும் போகல” என நித்யா வழிக்கே கங்காவும் சென்றாள்.
அன்று சிவராமனை மன்த்லி செக்கப்பிற்கு அழைத்துச் சென்றாள் கங்கா.அவரை பரிசோதித்த டாக்டர்.. அவருக்கு ஹார்டில் இருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்யை கொழுப்பு அடைத்துள்ளது. இது ஆரம்ப நிலைதான் மாத்திரையிலேயே சரிபடுத்தி விடலாம் என அதற்கும் மாத்திரையை எழுதி கொடுத்தனர்.
எவ்வளவு மாத்திரையைதான் அவருக்கு கொடுப்பது? என்ற கவலையிலேயே வந்தவளை…ஏன் கங்கா முகம் ஒருமாதிரி இருக்கு?என கேட்டார் சிவராமன்.
“நான் எப்போப்பா பழைய அப்பாவை பார்ப்பே?என்னாலே தானேப்பா உனக்கு இவ்வளவு கஷ்டம். என்னால தானேப்பா உனக்கு இவ்வளவு மாத்திரை டெய்லியும் சாப்பிடற மாதிரி ஆயிடுச்சு” என அதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியேற்றி அழுக ஆரம்பித்தாள்.
