Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 1

     நகரத்தின் இதயப்பகுதி என்று வர்ணிக்கப்படும் அந்த முக்கிய சாலை போர்க்களத்தைப் போல் காட்சியளித்துக்கொண்டிருந்தது. சில நாள்களில் வரக் காத்திருக்கும் தேர்தல் காய்ச்சல் ஊரின் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது.

     தார்ச்சாலை உருகி ஆவியாகும் அளவு கொழுத்திக் கொண்டிருந்த மதிய நேரத்து வெயிலை குளிர்விப்பது போல்  உயரமாகப் பறந்து கொண்டிருந்தன கட்சிக் கொடிகள். பெரிய அணை ஒன்றில் இருந்து கசிந்து வரும் நீரைப் போல, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் சாலையை ஆக்கிரமித்திருந்தது. அந்தப் பெரும் கூட்டத்தின் நடுவே பாறையைப் போன்ற இறுக்கத்துடன் நின்றுகொண்டிருந்தான் ஏசிபி சாருகேசி.

     சாலையின் இரண்டு பக்கங்களிலும் கயிறுகள் கட்டப்பட்டிருக்க, திரண்டு வந்த பொதுமக்கள் அனைவரையும் அந்தக் கயிற்றுக்குப் பின்னால் மட்டுமே நிற்க வைக்க கயிற்றின் முன்னே அரணாக நின்றிருந்தனர் அடிநிலைக் காவலர்கள். அவர்களுக்கு அவ்வப்போது வயர்லெஸில் ஆர்டர் கொடுத்துக்கொண்டே, கழுகு தோற்றுப்போகும் அளவிற்கு சுற்றிலும் கண்காணித்துக்கொண்டிருந்தான் சாருகேசி.



Advertisement

     தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கி இருந்தது. அப்படி இவன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நகரின் முக்கியமான பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கடைசி நேரத்தில் அனுமதி பெற்று வந்துகொண்டிருந்தார் வேட்பாளர் ஒருவர்.

     கடைசிகட்ட நெருக்கடி என்பதால் பெரிய அளவில் எந்த ஏற்பாட்டையும் செய்ய முடியவில்லை சாருகேசியால். இருந்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இந்த பிரச்சார நிகழ்வை முடித்துக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தவன், பம்பரமாக ஓடிக்கொண்டிருந்தான்.

     திறந்த நிலை வேன் ஒன்று மக்களின் சந்தோஷக்கூச்சலுடன் மெதுவாக சாருகேசி உருவாக்கிக் கொடுத்திருந்த மைய இடத்திற்குள் நுழைய, மக்கள் வெள்ளம் அந்த வாகனத்தைச் சூழ்ந்து கொள்ளப் பார்த்தது.

Advertisement

     “வேனுக்கு முன்னாடி ஒரு கிளியர் விண்டோ வேணும். யாரையும் டயர் பக்கத்தில் விடாதீங்க.” கணீர் குரலில் வாக்கிடாக்கியில் உத்தரவு இட்டுக்கொண்டே வேட்பாளர் வாகனத்தின் அருகே சென்றான் சாருகேசி.

Advertisement

     வேனின் மேல்தளம் வழியாக, கூப்பிய கரங்களுடன் மெதுவாக பொதுவெளியில் தோன்றினார் வேட்பாளர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்தது. வேலியைக் கிழத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, தங்களின் அன்பிற்குரிய வேட்பாளரைத் தொட்டுப் பார்க்கும் எண்ணத்தில் துடித்தன நூற்றுக்கணக்கான கரங்கள்.

     ஒரு இளைஞன் எப்படியோ காவலர்களை மீறி உள்ளே வந்து, வேட்பாளர் நிற்கும் வேனில் ஏற முற்பட, சுதாரித்த சாருகேசி தனது வலிமையான கரத்தால் அவன் இதயத்தில் கைவைத்து நிறுத்தி, அவனை கயிற்றிற்கு அந்தப் பக்கம் தள்ளினான்.

     வேட்பாளர் பேசிய அந்த இருபது நிமிடமும் சாருகேசிக்கு பெரும் சவாலாக இருந்தது. வெயில், வேர்வை, பெட்ரோல் புகை மற்றும் மக்களின் கூச்சல் என அந்த இடமே அத்தனை பரபரப்பாக இருக்க, சாருகேசியின் காக்கிச்சட்டை வியர்வையில் நனைந்து நிறம் மாறிப்போய் இருந்தது.

Advertisement

     தன் உரையை முடித்துக்கொண்ட வேட்பாளர் நன்றி கூறி விடைபெற முயன்ற தருணத்தில், மூவ்… மூவ் என்று கத்தியபடி வேனுக்கு பாதையை உருவாக்கினான் சாருகேசி. சில இடங்களில் மக்கள் தங்களைக் கட்டுப்படுத்தி இருந்த காவலர்களின் கயிற்று வேலியை உடைத்துவிட்டு முன்னேறி வந்திருந்தனர். தன் அருகே நின்றிருந்த காவலர்களை வைத்து அவர்களைத் திறமையாக தடுத்து நிறுத்தினான் சாருகேசி.

     புழுதிப்படலம் அடங்கத் துவங்கியது. வேட்பாளரின் வண்டி கண்களில் இருந்து மறையும் வரை பார்த்திருந்த சாருகேசி, தனது கூலிங்கிளாஸை அணிந்தபடி, “டிராஃபிக்கை ரிலீஸ் பண்ணுங்க.” என்றுவிட்டு தன் ஜீப்பை நோக்கி நடந்தான்.

     ஏற்றுக்கொண்ட பணியை எந்த வித இடையூறும் இன்றி செவ்வெனே நிறைவேற்றி முடித்த நிம்மதியில் பெருமூச்சுவிட்டவன், தாகம் எடுப்பது போன்ற உணர்வில் தன்னுடைய காவல் வாகனத்தின் பேனட்டில் இருந்த தண்ணீர் கேனை எடுத்து திறந்து குடிக்க ஆரம்பித்தான். அவன் கொண்டு வந்திருந்ததோ சாதாரண தண்ணீர். ஆனால் இப்போது அவன் தொண்டைக்குள் இதமாக இறங்கிக்கொணடிருந்தது குளிர்ந்த மோர். வித்தியாசம் தெரிந்தாலும் அது கொடுத்த இதம் அவனை பாதியில் நிறுத்தவிடவில்லை.

     தனக்காக தன்னுடைய டிரைவர் வாங்கி வைத்திருக்கக் கூடும் என்கிற எண்ணத்தில் தன்போக்கில் அனைத்தையும் குடித்து முடித்திருந்தான். இதை சற்றே தாமதமாகக் கண்டிருந்த அவனின் டிரைவர் வேகமாக அவ்விடம் ஓடி வந்தார்.

     “என்னய்யா என்னாச்சு, எதுக்காக இப்படி ஓடி வர.” சாருகேசி காட்டமாய் கேட்க, “ஸ்சாரி சார்.” என்றபடி தயக்கத்தோடு அவர் அந்த வாகனத்தின் பின்னால் பார்க்க, தன் மடியில் பிறந்து எட்டு மாதங்களே ஆன இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு, துப்பட்டாவினால் அவர்களின் தலைப்பகுதியை மறைத்தபடி அமர்ந்திருந்தாள் அமிர்தவர்ஷினி.

     பார்த்ததும் பதற்றமாய் கூலிங் கிளாஸை கழட்டியபடி திரும்பிய சாருகேசி, “ஏதாவது செஞ்சா சொல்ல மாட்டியா யா?” என்று கான்ஸ்டபிளைத் தான் காய்ந்தான்.

     “பாவம் சார் அந்தப் பொண்ணு. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தனியா வந்திருக்கும் போல. ரோட் ஷோவுக்காக நாம பாதையை ப்ளாக் பண்ணவும் வெயிலில் நிற்க முடியாம குழந்தைங்களோட இங்க வந்துச்சு. தடுப்பூசி போட்டதால் குழந்தைங்க அழுகையை நிறுத்தவே இல்ல. என்ன செய்யுறதுன்னு தெரியாம அந்தப் பொண்ணு பரிதவிச்சு நின்னது ஒரு மாதிரி இருந்தது. அதனால் தான் வண்டிக்குள்ள உட்கார வைச்சேன்.” தவறு செய்துவிட்டவனைப் போல் தவிப்போடு சொன்னார் கான்ஸ்டபிள்.

     “நீ செய்ய நினைச்சது நல்ல காரியம் தான். ஆனா இப்படி செஞ்சிருக்கேன்னு என்கிட்ட சொல்லி இருக்கணும் இல்லையா?” எனக் கண்டித்துவிட்டு, சங்கடத்தோடு தன் காருக்குள் அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்க்க, குழந்தைகளை தயார் செய்துவிட்டு இறங்குவதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி.

     சாருகேசிக்கு தான் குடித்த மோர் யாருடையதாக இருக்கும் என்கிற யூகம் வர, எதுவுமே குடிக்காமல் புரைஏறப் பார்த்தது. சமாளித்தவன் சுற்றி முற்றி ஏதாவது கடை இருக்கிறதா எனப் பார்க்க ஆரம்பித்தான். அவன் நேரம் அப்படி ஒன்றும் தெரியவில்லை.

     கான்ஸ்டபிள் அவளுக்கு கார் கதவைத் திறந்துவிட, “ஒரு குழந்தையை கொஞ்சம் பிடிங்கண்ணா.” என்றவள் அவனிடம் நீட்ட, தன்னால் சாருகேசியின் கரம் நீண்டிருந்தது அவ்விடத்தில்.

     விருட்டென்று மீண்டும் அவள் குழந்தையைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ள, அதில் அவள் கரம் தடுப்பூசி போட்ட இடத்தில் அழுத்தவும் வீரிட்டு அழுதது குழந்தை.

     குழந்தையின் அழுகையில் கோபம் வரப்பெற்றவனாக, “ஏன் நான் தொட்டா அந்தக் குழந்தைக்கு என்ன ஆகிடும் னு இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ற? நான் அவங்களுக்கு யாருன்னு தெரியும் தானே.” டிரைவர் அருகில் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் முளைத்துவிட்ட கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.

     “நான் எதையும் மறக்கல ஏசிபி சார். மறக்கிற மாதிரியான சம்பவங்களும் இல்ல நடந்தது. என் குழந்தைங்க மேல உங்களை மாதிரி நல்ல குடும்பத்து மனுஷங்களோட நிழல் பட்டா, ரிவேர்ஸ்ஸா ஏதாவது நடந்து உங்களுக்கு கஷ்டம் வந்திடப்போகுது. நீங்க தேவதைகளா இருங்க, நானும் இந்தக் குழந்தைகளும் என்னைக்கும் சாத்தானோட அவதாரமாவே இருந்துட்டுப் போறோம்.” என்றவள் கான்ஸ்டபிள் உதவியைக் கூட நாடாமல், தன் ஒரே கரத்தால் இரண்டு குழந்தைகளையும் மார்போடு அணைத்துக்கொண்டு இறங்கினாள்.

     அவள் இப்போது உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் ஒருகாலத்தில் அவன் சொன்ன வார்த்தைகள். அது அச்சுப்பிசகாமல் வெளியே வந்து அவன் இதயத்தை வலிக்கச் செய்தது. எதுவும் பேசாமல் அவள் என்ன செய்கிறாள் என்பதையே பார்த்தான்.

     “உங்களோட கார் னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா ஏறி இருக்க மாட்டேன்.” என்றுவிட்டு முன்னே நடந்தவளின் கையைப் பிடித்தவன், தன்னுடைய தண்ணீர் கேனை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

     அவனை ஒரு பார்வை, அவன் கொடுத்த தண்ணீர் கேனை ஒரு பார்வை பார்த்தவள் தன் கையில் இருந்ததை வேண்டுமென்றே கீழே போட, அது சரியாக கேசியின் காலிலே விழுந்தது. வலித்தது தான் என்றாலும், அவளுக்கு தான் கொடுத்ததை விட இது ஒன்றும் அத்தனை பெரிய வலி இல்லை என்பதால் அமைதியாக நின்றிருந்தான்.

     இரண்டு குழந்தைகளையும் மார்போடு அணைத்தபடி ஸ்லிங் பேக்கில் மாட்டியவள், கிளிப்புகள் அனைத்தும் சரியாக பொருந்தி இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டு தன் ஸ்கூட்டியை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

     அவள் பாதையின் குறுக்கே கரம் நீட்டித் தடுத்த கேசி, “இப்படிப் போறது குழந்தைங்களுக்கு பாதுகாப்பு இல்ல. உனக்குத் தான் கார் ஓட்டத் தெரியுமே. பேசாம ஒரு கார் வாங்கிடு.” வேகமாகச் சொன்னான்.

     “கார் வாங்குற அளவுக்கு என்னோட குடும்பம் உங்க குடும்பம் மாதிரி பரம்பரை பணக்காரங்க கிடையாது. மாச சம்பளத்துக்கு பிச்சை எடுக்கிற நடுத்தரக் குடும்பம்.” என வலிக்க வலிக்க அடித்துவிட்டு நடக்கத் துவங்கினாள் அமிர்தா.

     லைட்ஹவுஸ் என தனக்குள் முனகியவன், “குறைஞ்சபட்சம் போற இடத்துக்கு ஆட்டோவிலாது போய் வா.” என எதுவுமே நடக்காதது போல் பேச, ஒருபக்கம் கோபமும் இன்னொரு பக்கம் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. எதையும் அவனிடம் காட்டக்கூடாது என்று தீர்மானமாக முடிவு செய்தவள் அப்படி ஒருத்தன் தன்னிடம் பேசினான் என்கிற எந்த நினைப்பே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

     “மேடம் தெரிஞ்சவங்களா சார்?” கான்ஸ்டபிள் கேட்க, “ரொம்ப.” என்றுவிட்டு கண்களை மூடி பெருமூச்சுவிட்டான் கேசி.

     காலையில் இருந்து செய்த வேலையால் உடலும், பார்க்க கூடாதவளைப் பார்த்ததில் மனதும் வெகுவாகச் சோர்ந்திருக்க, அவனின் மனம் அவன் வீட்டைத் தேடியது.

     சோர்வோடு வந்த இளைய மகனை வரவேற்று குளிர்பானம் கொடுத்தார் சாருகேசியின் தாய் ஆனந்தபைரவி. “வாங்க கொழுந்தனாரே, எல்லாரும் லைவ்வில் வேட்பாளரைப் பார்த்தா நம்ம குடும்பம் மட்டும் வேட்பாளருக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்காரரை சைட் அடிச்சோம்.” என்றபடி சிரித்துக்கொண்டே வந்தாள் அவன் அண்ணி கீரவாணி.

     “எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி.” என மேலே பார்த்து கரம் நீட்டினான் கேசி.

     “தம்பி, நான் சொன்னதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியாப்பா?” பைரவி மகனின் தலை வருடியபடி கேட்க, “என்ன தைரியம் இருக்கணும் உனக்கு?” என இதே தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டும் அவனின் லைட்ஹவுஸ் தான் நினைவுக்கு வந்தாள் சாருகேசிக்கு.

     “என்ன கொழுந்தனாரே கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்போமான்னு தானே கேட்டோம். அதுக்குள்ள ஐயா டூயட் ஆட போயிட்டீங்க போல.” கீரவாணி கிண்டல் செய்ய, “கல்யாணம் பண்ணுற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்லை அண்ணி. இதை நீங்களே அம்மாவுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைங்க.” என்றுவிட்டு தன்அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.

     “இவனை என்ன தான் பண்றது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பான்.” என்ற பைரவியின் கவனத்தை, “அம்மா” என்கிற அவர் மூத்தமகன் மோகனனின் குரல் கலைத்தது.

     “போய் உன் புருஷனுக்கு சாப்பாடு எடுத்து வை மா.” மருமகளிடம் தன்மையாக அவர் சொல்ல, “எதுக்கு அத்தை இதெல்லாம். நான் எடுத்து வைச்சு, அவர் சாப்பிடமா போறதுக்கு நீங்களே எடுத்து வைச்சிடலாம்.” சிரித்தபடியே சொன்னாள் கீரவாணி.

     “அருமையான பொண்ணும்மா நீ. ஆனா உன்னோட அருமை அவனுக்குப் புரிய மாட்டேங்கிது பாரேன்.” சோகமாகச் சொல்ல, “எல்லாத்துக்கும் கால நேரம் னு ஒன்னு இருக்கு இல்ல. பார்த்துக்கலாம் விடுங்க.” என்று கண்ணடித்தாள் கீரவாணி.

     “அம்மா வந்து சாப்பாடு வைக்கிறீங்களா? இல்ல நான் இப்படியே ஆபீஸ் போகட்டுமா?” மோகனன் கத்த, “வரேன் பா.” என்று பயந்துகொண்டே மூத்தமகனைத் தேடிச் சென்றார் பைரவி.

     தன் அறை வாசலில் நின்றுகொண்டு இவற்றை பார்த்துக்கொண்டிருந்தான் சாருகேசி. ஏதோ ஒன்றை நினைத்து அவன் ஆரம்பித்த கோலம், எங்கெங்கோ சென்று யாருக்குமே பிரயோஜனம் இல்லாத அலங்கோலமாக மாறிப்போய் இருப்பதை நினைத்து காலம் கடந்து  வருந்தினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!