Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 23

கீரவாணி அப்போது தான் கண் விழித்திருந்தாள். அவளை நார்மல் வார்டிற்கு மாற்றி இருந்தார்கள். கொழுகொழுவென பால் வண்ணத்தில் இருந்த மகளைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. அவளும், மகளுமாக தன் உலகத்தை சுருக்கிக்கொள்ளப் பார்த்தாள்.

மகளின் அருகே சிந்தனை முழுவதையும் எங்கோ வைத்தபடி அமர்ந்திருந்தார் பைரவன். நீலாவுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்துவிட்டது என்பதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவரின் மொத்த நிம்மதியும் பறிபோய் இருந்தது. மகளையும், பேத்தியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் செய்த அனைத்தும் பாவம் என்று தெரியும். அதனால் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது. மகளுக்காக கடவுளோ, கர்மாவோ யார் கொடுக்கும் தண்டனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் இருந்தவரின் இருதயத்தில் இடியை இறக்குவது போல், அவர் செய்த தவறுகளுக்கான தண்டனை மகளுக்கு அல்லவா கிடைத்திருக்கிறது. ஆசைப்பட்டவனோடு வாழவும் முடியாமல், அவனைப் பிரியவும் முடியாமல் அவள் படும் பாட்டைப் பார்க்க பார்க்க நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. தன்னையும் விட்டுவிட்டால் மகளுக்கு ஆதரவு என்று யாரும் இல்லை என்பதால் இழுத்துப் பிடித்து தன் உடல்நலத்தைக் காத்துக்கொண்டார்.



Advertisement

நீலாவைப் பார்த்த பின்னர், அவள் இவனோடு பேச மறுத்த பின்னர் நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போன்ற நிலையில் தடுமாற்றத்துடன் இருந்த மோகனன் ஒருகட்டத்திற்கு மேல் அங்கிருக்க முடியாமல் வீடு நோக்கி சென்றிருந்தான். பைரவி வாணியோடு இருந்து அவளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த அறையின் கதவைத் தட்டிவிட்டு யாரோ கதவைத் திறப்பது தெரிய அனைவரின் கவனமும் அங்கே சென்றது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் நீலா. அவள் பின்னே கோபமான முகத்துடன் அமிர்தாவும், இயலாமையோடு கூடிய வேதனை நிறைந்த முகத்தோடு கேசியும் வந்துகொண்டிருந்தனர்.

“எதுக்காக இந்தப் பொண்ணை இங்க கூட்டிட்டு வந்தீங்க?” பைரவன் கேட்க, “நான் தான் அவங்களை என்னோட கூட்டிட்டு வந்தேன். என் புருஷனோட குழந்தையைப் பார்க்கணும் போலத் தோணுச்சு.” என்றபடி குழந்தை இருந்த தொட்டில் அருகே சென்றாள் நீலா.

Advertisement

“நீலா” என்கிற அழைப்போடு பைரவி எழுந்துகொள்ள, அவரை ஒருபார்வை பார்த்துவிட்டு குழந்தையின் அருகே மெத்தையில் அமர்ந்த நீலா, குழந்தையின் கரத்தை தொட்டுப்பார்த்தாள்.

Advertisement

“ஏன் அமிர்தா குழந்தை நம்ம லவன் மாதிரி இல்ல.” என்று தங்கையிடம் கேட்க, “குழந்தை அவளோட அப்பா மாதிரி இருக்கா.” என்று குரல் கொடுத்தார் பைரவன்.

“அப்ப எங்க லவனும் அவனோட அப்பா மாதிரி தான் இருக்கான்னு நீங்களே ஒத்துக்கிறீங்க அப்படித்தானே.” வெடுக்கென கேட்டு வைத்தாள் அமிர்தா.

“என்ன தம்பி இதெல்லாம்.” பைரவன் கேசியிடம் வர, “நீலா அண்ணி வாணி அண்ணியை பார்க்கணும் னு சொன்னாங்க. அதனால் தான் கூட்டிட்டு வந்தேன். நாங்க இங்க இருந்து கிளம்பும் வரைக்கும் எந்தப் பேச்சும் பேசாதீங்க.” கட்டளை  தொணியில் சொன்னான்.

Advertisement

“இரண்டு குழந்தை பெத்திருந்தாலும் எனக்கு பிறந்த பிள்ளையை தூக்க தெரியல. அமிர்தா நீ வா, குழந்தையை எடுத்து என் கையில் கொடு.” ஆசையாய் கைகளை நீட்டியபடி கேட்டாள் நீலா. “நீ எதுக்கு மா என் பேத்தியை தூக்கணும்.” பிரச்சனைக்கு வந்தார் பைரவன்.

“உங்களைப் பேசாமல் இருங்கன்னு சொன்னேன் மாமா.” கேசி அதட்டியதையும் தாண்டி ஏதோ சொல்ல வந்தவர் முகத்தின் முன்னால் கரத்தை நீட்டிய நீலா, “உங்க பேத்தியோட அப்பா என்னோட புருஷன். அதனால் இந்தக் குழந்தையை நான் தூக்கக் கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாது.” என்பதாய் அவருக்கே ஆணையிட்டுவிட்டு, தங்கையின் உதவியோடு வாணியின் பிள்ளையை கையில் ஏந்தினாள்.

குழந்தையின் அழகில் சில நொடிகள் லயித்தவள், “ஏன் அமிர்தா லவன், லதாங்கி பிறந்த நேரமும் இப்படித்தான் இருந்தாங்களா?” ஆர்வமாய் கேட்டாள்.

அக்காவைப் பரிதாபமாகப் பார்த்த அமிர்தா, “அந்த நேரம் உனக்கு நாலு வாய் சோறு ஊட்டுறதுக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வரும். அப்புறம் எப்படி குழந்தை இப்படி கொழுகொழுன்னு இருந்திருக்கும். தேங்காய் மட்டை உயரம் கூட இல்ல இரண்டும். போராடி தான் மீட்டெடுத்தாங்க டாக்டர்ஸ்.

நீ கூட சமத்தா சொல்றதைக் கேட்டுட்டு இருந்துப்ப. ஆனா உன் பிள்ளைங்க இருக்கே அப்பப்பா. பகல் முழுக்க நல்லாத் தூங்கிட்டு இராத்திரி ஒரு பொட்டு தூங்காதுங்க, என்னையும் தூங்க விடாதுங்க. அதுங்க போடுற சத்தத்துக்கு பதில் சத்தம் நான் கொடுக்கணும். இல்லன்னா அவ்ளோ தான். அது மட்டுமா பசியில் சிணுங்க ஆரம்பிச்ச உடனே பாலைக் கொடுத்திடணும். இல்லன்னா கத்தி ஊரையே கூட்டிடுவாங்க.” பழைய நினைவில் சிலாகித்துச் சொன்னாள் அமிர்தா.

கற்பனையில் அதை நினைத்து சிரித்த நீலா, குழந்தையை தொட்டிலில் இடப்பார்க்க, “என்கிட்ட கொடுங்க.” என்று கை நீட்டினாள் வாணி. அவள் கையில் பத்திரமாக குழந்தையை ஒப்படைத்த நீலா அங்கிருந்து கிளம்பப் பார்க்க, “என்னம்மா முடிவு எடுத்திருக்க?” என்று கேட்டு நிறுத்தினார் பைரவன்.

நீலா அமைதியாக நிற்க, “நடந்த எல்லாம் உனக்கு இந்நேரத்துக்கு தெரிய வந்திருக்கும். நல்லதோ கெட்டதோ சீக்கிரம் நீ ஒரு முடிவுக்கு வந்தா எல்லோருக்கும் நல்லது.” என்றார் பைரவன். பதில் சொல்லாமல் அவள் கிளம்பப் பார்க்கும் போது, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே.” என்றாள் வாணி.

“நீங்க எதுக்காக என் அக்காகிட்ட பேசணும்.” கோபமாய் முன்னே வந்தாள் அமிர்தா. ஒரு வேகத்தில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டிருந்தாள் தான். ஆனால் அப்போது தான் கண்விழித்திருந்த தமக்கையிடம் அடுக்கடுக்கான துன்ப நிகழ்வுகளை மட்டும் சொல்லிவிட்டோமே எனத் தன்னைத் தானே திட்டியவளுக்கு, தன்னோடு சேர்த்து அந்த துன்ப நிகழ்வுகளை நடத்திக்காட்டியவர்கள் மேலும் கோபம் வந்திருந்தது. அதைத் தான் இப்போது வாணியிடம் காட்டினாள்.

“அவங்க இரண்டு பேரும் ஏதோ பேசிக்கிறாங்க. உனக்கு என்னம்மா வந்துச்சு.” மகளைக் கண்டித்த அமிர்தாவை தான் கண்டித்தார் பைரவன்.

“அக்கா இங்க இருக்கும் எல்லோருக்கும் மனிதத்தன்மை மரத்துப் போய் ரொம்ப நாளாச்சு. சுயநலப்பிசாசா மாறி நிக்கிறாங்க. நீங்க கண்விழிச்சு வந்ததுக்கு சந்தோஷப்படலன்னா கூட பரவாயில்லை, வருத்தப்படுற கூட்டம் இவங்க. அதனால் தான் இங்க வரவேண்டாம் னு சொன்னேன். ஆனா நீங்க தான் உங்க புருஷனோட குழந்தையைப் பார்த்தே ஆகனும் னு பிடிவாதம் பிடிச்சு வந்தீங்க.” என நீலாவின் மீதும் குறைபடித்தாள் அமிர்தா.

“போகலாம் அமிர்தா.” என்றபடி நீலா முன்னடக்க, “எப்ப பேசலாம்.” என்று மீண்டும் கேட்டாள் வாணி. அமிர்தா சூடாக ஏதோ சொல்ல வருவதற்கு முன்னர், “சீக்கிரமே பேசலாம்.” என்றுவிட்டு தங்கையின் கரத்தை பிடித்து இழுத்தபடி வெளியேறினாள் நீலா.

“உடம்பைப் பார்த்துக்கோங்க அண்ணி.” வாணியிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு தானும் அவர்களைப் பின்பற்றினான் கேசி.

நீலாவோடு வீடு திரும்பினாள் அமிர்தா. உருவமாக கண்டு கழித்த தாய் தந்தையை புகைப்படமாகப் பார்க்க மனதிற்குள் வலித்தது நீலாவுக்கு. அவர்களின் புகைப்படங்களை கையால் வருடிப் பார்த்து, “நீங்க இப்படிப் பண்ணி இருக்கக் கூடாதும்மா.” வேதனையோடு சொன்னாள்.

“அவங்களை எதுக்காக அக்கா குறை சொல்ற. எல்லாத்துக்கும் காரணம் இதோ இங்க நிக்கிறாரே இவரும், இவரோட அம்மாவும் மாமாவும் தான். அவங்க ஆடின ஆட்டம் தான் பேயாட்டமா மாறி நம்ம குடும்பத்தை சுத்தி அடிச்சுட்டு போயிடுச்சு.” காட்டமாய் வந்தது அமிர்தாவின் வார்த்தைகள்.

கேசி எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் கொண்டு வந்திருந்த பொருட்கள் அனைத்தையும் வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்தான். அவன் முகத்தைப் பார்த்தவாறு, “அமிர்தா கொஞ்சம் அமைதியா இரு. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். யார் என்னன்னு பார்க்காம சும்மா வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் பேசிக்கிட்டு இருக்க.

பிரச்சனைகளை சமாளிக்க முடியாம, நமக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நபர்கள் சொன்ன வார்த்தைகளை பெருசா எடுத்துக்கிட்டு அப்பாவையும் கொன்னு அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னா அது அவங்க தப்பு தானே தவிர, அந்த முட்டாள்தனமான முடிவுக்கு வேற யாரும் காரணமாக மாட்டாங்க.

அவங்க இல்லையேங்கிற வலியைத் தாண்டி, யாரோ பேசினதுக்காக உன்னையும், என்னையும் தனியா விட்டுட்டு போன அம்மா மேல எனக்கு கோபம் தான் அதிகமா வருது.” என்றாள் நீலா.

“என்னக்கா பேசுற நீ, அம்மா பாவம். இவரும் இவங்க குடும்பமும் செஞ்ச அடுக்கடுக்கான துரோகத்தை தாங்கிக்க முடியாம தான் அவங்க தப்பான முடிவு எடுத்தாங்க.” கோபமாய் சொன்னாள் அமிர்தா.

தங்கையை ஒரு பார்வை பார்த்த நீலா, “உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்குப் பதில் சொல்லு பார்க்கலாம். கேசியும் அவர் வீட்டைச் சேர்ந்தவங்களும் செஞ்ச விஷயங்களைக் கடந்து, நம்மளோட அப்பா அம்மா தனியா விட்டுட்டு போன வேதனையைத் தாண்டி, ஊரும் உறவும் என்னை இகழ்வா பேசும்போது உருவாகும் இயல்பான கோபத்தை கட்டுப்படுத்தி, என் குழந்தைங்களோட கஷ்டப்படும் காலத்தில கூட நீ எந்த வித தப்பான முடிவையும் எடுக்கலையே. உன்னால் முடிஞ்சவரை எதிர்நீச்சல் தானே போட்ட. உனக்குள்ள இவ்வளவு தன்னம்பிக்கை தைரியம் இருக்குன்னா உனக்கு அதை சொல்லிக்கொடுத்து வளர்த்த அம்மாவுக்குள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்கணும்.

ஊர் உலகம் பேசினாலும் பரவாயில்லை, மூத்த பொண்ணை அவ குடும்பம் விலக்கி வைச்சாலும் பரவாயில்லை. நான் இருக்கும் வரை என் பொண்ணை நல்லாப் பார்த்துப்பேன்னு அவங்க நினைச்சிருந்தா சாவு அவங்க பக்கம் வந்திருக்குமா? இல்ல உனக்கும் தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்திருக்குமா?” என்க, பதில் சொல்ல முடியவில்லை அமிர்தாவால்.

“நாம எடுக்கும் முடிவுகளோட விளைவு நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் அதுக்கு நாம மட்டும் தான் பொறுப்பு அமிர்தா.” நீலா சொல்ல, “அவங்க தப்பே பண்ணாத மாதிரி பேசாத அக்கா.” வேகமாகச் சொன்னவளுக்கு மோகனன் மற்றம் கேசிக்கு ஆதரவாக தன் அக்கா பேசுவதை ஜீரணிக்கவே முடியவில்லை.

“நடந்தது எல்லாம் கஷ்டமான நிகழ்வுகள் தான். ஆனா அது நம்மைக் கஷ்டப்படுத்தும் நோக்கத்தோட நடத்தப்பட்டதா இல்ல வேற வழியே இல்லாம நடத்தப்பட்டதான்னு தான் யோசிக்கணும். இந்தக் கேள்விக்கு விடை கிடைச்சுட்டாலே தப்பு செஞ்சவங்களை மன்னிக்கிறதா இல்ல தண்டனை கொடுத்து விலகி நிக்கிறதாங்கிற குழப்பத்துக்கு விடை கிடைக்கும்.” என்று நீலா நிறுத்த, அமிர்தாவுக்கு கோபத்தில் அழுகை வந்தது.

“என்னக்கா ஆச்சு உனக்கு. எதுக்காக அவங்களுக்கு சப்போர்ட் பண்ற. அவங்க உன்னோட வாழ்க்கையைப் பறிச்சு வேற ஒருத்தங்களுக்கு கொடுத்திருக்காங்க. நீ பெத்தெடுத்த குழந்தைகளுக்கு அங்கீகாரம் கொடுக்காம கஷ்டப்படுத்தி இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல உனக்கு துணை இருக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் உன்னை அநாதரவா விட்டுட்டு போயிட்டாங்க.” எனக் கஷ்டங்களை அடுக்கிக்கொண்டே போனாள்.

“அந்த நேர சூழ்நிலைக்கு வேற என்ன செஞ்சிருக்க முடியும் னு நினைக்கிற அமிர்தா.” நீலா கேட்க, உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை அமிர்தாவால். இருந்தும் கேசியின் முன்னால் தோற்கக் கூடாது என்று நினைத்து,

“மனம் இருந்தால் மார்க்கம் உண்டுன்னு சொல்லுவாங்க. மோகனன் மாமாவோட மனப்பிறழ்வு அதிகமா தூண்டப்பட்டதால், உன்னைப் பார்க்கும் போதெல்லாம் குற்றவுணர்ச்சியும் தற்கொலை எண்ணமும் அதிகம் வரும் என்பது தான் சூழ்நிலைன்னா அதை சரிபண்ண தான் முயற்சி செஞ்சிருக்கணுமே தவிர, உன்கிட்ட இருந்து அவரை பிரிக்க திட்டம் போட்டு இருக்கக் கூடாது.

அவர் முழுசா குணமாகிட்டாருன்னு சொல்லி தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க. மறுபடி பிரச்சனை வந்தால் அதை சரிபண்ணி உன்னோட அவரை சேர்த்து வைக்கிறது தானே நியாயம். அதை விட்டுட்டு அவருக்கு வேற கல்யாணம் பண்ணி வைச்சா அது துரோகம் இல்லாம வேற என்னது?” பெருமூச்சுவிட்டு கோபமாய் கேட்டாள் அமிர்தா.

சோபாவில் அமர்ந்திருந்த நீலாவின் கால்கள் அருகே அமர்ந்த கேசி, அவள் கண்களைப் பார்த்து, “அன்னைக்கு சூழ்நிலை கணிக்கவே முடியாததா இருந்துச்சு அண்ணி. அண்ணன் தற்கொலை முயற்சி பண்ணி கால்வாசி உயிரோட நாங்க அவரை வேற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகும் வரை எங்களுக்கு அவரோட உயிரைத் தாண்டி எதுவும் மனசில் நிற்கல.

அவர் உயிரைக் காப்பாத்திக்கொடுத்த டாக்டர், அவருக்கு பழைய நினைவுகள் எதுவுமே இல்லன்னு சொன்னதோட விட்டு இருந்திருந்தா கூட இதெல்லாம் நடந்து இருக்காதோ என்னவோ. அண்ணன் இனி உங்களோட வாழ்வது நடக்காத காரியம். உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் உங்களைக் காப்பாத்த முடியலையேங்கிற குற்றவுணர்வு தான் அவர் மனசில் இருக்கும். அழுத்தம் தாங்காம ஒன்னு அவரே அவர் வாழ்க்கையை முடிச்சுப்பார், இல்லன்னா இயற்கையாவே அவர் ஆயுள் குறைஞ்சிடும் னு சொன்னார்.

சின்ன வயசில் இருந்து அவரைக் காப்பாத்தி இவ்வளவு தூரம் கூட்டிட்டு வர நாங்க பட்ட பாடு யாருக்கும் தெரியாது அண்ணி. எங்க குடும்பத்தோட பல வருஷப் போராட்டமும், அண்ணனோட உயிரும் போயிடக்கூடாதுன்னு பைரவன் மாமா சொன்ன யோசனைக்கு நாங்க ஒத்துக்கிட்டோம்.

தப்புன்னு தெரியும். ஆனா அண்ணனோட உயிரைக் காப்பாத்த அந்த தப்பு பண்ணா தப்பில்லைன்னு தான் தோணுச்சு.” கரகரத்த குரலில் சொன்னான்.

“உங்க அண்ணன் மட்டும் தான் உங்க குடும்பத்து ஆளா, என் அக்கா உங்க வீட்டு ஆள் இல்லையா? அவ வயித்தில் இருந்த குழந்தைங்க உங்க வீட்டு வாரிசு இல்லையா? அண்ணனுக்கு ஒன்னுன்னதும் பெரிய பாவத்தையே பண்ணத் துணிஞ்ச நீங்க, உங்க அண்ணிக்காகவும் அவங்க வயித்தில் இருந்த குழந்தைகளுக்காகவும் என்ன செஞ்சீங்க.” என்க, பதில் சொல்லத் தெரியாமல் தலையைக் குனிந்தான் கேசி.

“பார்த்தீங்களா அக்கா, இதுதான் இவங்களோட உண்மையான முகம். உங்களுக்காக ஒரு சின்ன காரியம் கூட செய்யல இவங்க. இப்ப வந்துட்டாங்க பெருசா அண்ணின்னு.” கோபப்பட்டாள் அமிர்தா.

“எனக்காக கேசி என்ன செஞ்சு இருக்கணும் னு நினைக்கிற அமிர்தா.” நீலா கேள்வி எழுப்ப, “என்ன வேண்ணா செஞ்சிருக்கலாம். உங்களைப் பார்த்தா அவர் அண்ணன் உயிருக்கு ஆபத்துன்னு தான் டாக்டர் சொன்னாரே தவிர, இன்னொரு கல்யாணம் உடனடியா பண்ணனும், இல்லாமப் போனா அவர் உயிர் போயிடும் னு ஒன்னும் சொல்லல. அந்த வகையில் உங்க வாழ்க்கையை நினைச்சிருந்தா மோகன் மாமாவுக்கு இரண்டாம் கல்யாணத்தை இவர் நடத்தி வைச்சிருக்க மாட்டார்.

நம்ம மேல உண்மையான அக்கறை இருந்திருந்தா அம்மா, அப்பாவோட சாவுக்கு வந்திருப்பார். என் மேல காதல் இருந்திருந்தா எல்லோரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்துட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்த எனக்கு உறுதுணையா நம்ம வீட்டோட வந்திருக்கலாம்.

எல்லாத்தையும் விட முக்கியம் குழந்தைகளையாச்சும் அவங்க வீட்டு ஆளுங்களை ஏத்துக்க வைச்சிருக்கலாம். இதில் எதையுமே அவர் பண்ணல. அவருக்கு நான், நீங்க லவன், லதாங்கி யாரும் தேவை இல்லை. அவரோட அண்ணன் மட்டும் போதும்.” மனதில் இருந்தது எல்லாவற்றையும் சொன்னாள் அமிர்தா.

குனிந்த தலை நிமிரவே இல்லை கேசி. “அவ சொல்றது எல்லாமே உண்மை தான் அண்ணி. அந்த நேரம் எனக்கு என் அண்ணனைத் தவிர வேற எதுவும், யாரும் தெரியல. என்னால் உங்களுக்காக வருத்தப்பட முடிஞ்சது, அக்கறைப்பட முடிஞ்சது. ஆனா நீங்களா அண்ணனான்னு வரும் போது என் மனசு தன்னால் அண்ணன் பக்கம் போயிடுச்சு.” என்றுவிட்டு தலைகுனிந்தான்.

“என் அக்கா மட்டுமா தராசு தட்டில் இறங்கிப் போனாங்க.” என்று கேட்டு நிறுத்தினாள் அமிர்தா. காலங்கள் கடந்த பின்னாலும் மனதில் பச்சை ரணமாக உருத்திக்கொண்டிருக்கும் வலி அது அவளுக்கு.

அண்ணனுக்காக அண்ணியை வேண்டாம் என்றதற்குக் கூட சரியோ தவறோ ஒரு நிலையான காரணம் அவனிடம் இருந்தது. ஆனால் தன்னை வேண்டாம் என்று சொன்னதற்கு என்ன காரணம் இருந்தது அவனிடத்தில். ஒருமுறை, ஒரே ஒரு முறை கூட தன்னிடம் பேசவில்லையே. தன்னை சமாதானம் செய்து கரம்பிடிக்க வேண்டும் என்று முயற்சிக்க கூட இல்லையே. என் அண்ணன் அளவு உன்னை எனக்குப் பிடிக்கும் என்று சொன்னவன், அதை செயலில் காட்டவில்லையே. அண்ணனைக் காப்பாற்ற அத்தனை செய்தவன் தங்கள் காதலுக்காக ஒரு செங்கலைக் கூட நகர்த்தவில்லையே. வேண்டாத பிள்ளை போல் நடுத்தெருவில் அல்லவா விட்டுவிட்டுப் போனான் என்று கண்ணீர் சிந்தினாள். அவள் மனநிலை புரிந்தது கேசிக்கு. ஆனால் என்ன செய்வது என்று தான் புரியவில்லை.

மனைவியை பந்தயம் வைத்து இழக்கும் வரை தெரியாத விபரீதம், மனைவி எதிரிக்கு அடிமையானாள் என்று தெரிந்த போது வந்து அழுத தர்மனைப் போல் இப்போது தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தான் கேசி.

“காலம் காலமா பெண்களுக்கு உயிரை விட கற்பு தான் முக்கியம் னு பெண்கள் மனசில் மட்டும் இல்ல ஆண்கள் மனசில் கூட அழுத்தமா பதிய வைச்சிருக்காங்க. அப்படிப்பட்ட கற்பை இழந்த என்னை விட்டு, வேற பொண்ணை அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சதைக் கூட என்னால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா அத்தனை அவசரம் ஏன்? அவருக்கு நினைவு வந்த பிறகு செஞ்சிருக்கலாமே. இல்ல குறைந்தபட்சம் ஒருவருஷம் வரை வெயிட் பண்ணி அவருக்கு நினைவு வரவே வராதுன்னு உறுதிப்படுத்திக்கிட்ட பிறகு செஞ்சிருக்கலாமே. நினைவு வந்த நேரம் அவர் எப்படித் துடிச்சு போய் இருப்பார்.” நீலா கேட்க, பதறிப் போய் அவள் கால்களைப் பிடித்தான் கேசி.

“அம்மா, மாமாவைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என் மனசிலோ அண்ணன் மனசிலோ அப்படியான எண்ணம் துளி கூட கிடையாது. நீங்க ஒரு பொக்கிஷம் அண்ணி. அதை கொள்ளையர்கள் வழிப்பறி பண்ணிட்டு போய் இருக்கலாம். அதுக்காக உங்களோட புனிதம் போயிடுமா இல்ல திரும்பி கோவிலுக்கு வரும் போது சாமி கழுத்தில் ஏற உங்களுக்கு தகுதி இல்லாம போயிடுமா. கடவுள் சத்தியமா அப்படி நினைச்சு அண்ணன் கல்யாணத்துக்கு அவசரம் காட்டல.” என்று படபடக்க, அமிர்தாவுக்கு சற்றே நிம்மதி. நீலா அமைதியாகத் தான் இருந்தாள்.

“அவரோட வாழ்க்கை உங்களோட இனி அமைய வாய்ப்பில்லைன்னு உறுதியா டாக்டர் சொன்ன பிறகு, அவர் வாழ்க்கை முழுக்க தனிமரமா வாழ்வதைப் பார்க்கணுமான்னு ஒருவித வலி வந்துச்சு. அப்ப தான் பைரவன் மாமா அண்ணனுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாமேன்னு சொன்னார். உங்களை நினைச்சு கஷ்டமா தான் இருந்தது. ஆனா எத்தனையோ காதல்கள் பிரியுது, கல்யாணங்கள் விவாகரத்தில் முடியுது. அப்படி பிரிஞ்ச பிறகு அவங்க வேற ஒரு வாழ்க்கையை சந்தோஷமா வாழுறாங்க தானேன்னு மனசைத் தேத்திக்கிட்டேன் அண்ணி.” இதைச் சொல்லவே அத்தனை சங்கடமாக இருந்தது கேசிக்கு. ஆனால் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் மேற்க்கொண்டு தொடர்ந்தான்.

“அந்த நேரம் என்னோட மனசில் இருந்தது முதலில் அண்ணன் குணமாகி வந்த பிறகு நடப்பை எடுத்துச் சொல்லி உங்க இரண்டு பேருக்கும் விவாகரத்து வாங்கி சில வருடங்கள் இடைவெளி எடுத்து அவருக்கு வேற ஒரு கல்யாணம் பண்றது தான். ஆனா அண்ணன் உங்களை கைவிடுவதை விட ஒருசில நாள் வாழ்ந்தாலும் உங்களோட வாழ்ந்து சாகத் தான் துணிவாருன்னு பைரவன் மாமா சொன்னார். அண்ணனைப் பத்தி தெரிஞ்ச எனக்கும் அப்படித்தான் நடக்கும் னு புரிஞ்சது. அப்படி நடந்தா அவர் வாழ்க்கையோடு சேர்த்து உயிரும் போடும் னு தான் அவர் நினைவு இல்லாத நேரத்திலேயே.” என்று இழுத்தான். செய்த கொடுஞ்செயல்களுக்கு காரணத்தை சொல்லிவிட்டானே தவிர, அதை நியாயப்படுத்த முடியவில்லை.

“டாக்டர் ஒன்னு சொன்னா அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு நம்பணுமா? குறைந்தபட்சம் ஒருமுறையாச்சும் உங்க அண்ணனையும், என் அக்காவையும் சந்திக்க வைக்க முயற்சி பண்ணி இருக்கலாம். ஒருவேளை அந்த நேரம் உங்க அண்ணனுக்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தா அதுக்கு அப்புறம் எந்த முடிவையும் எடுத்திருக்கலாம். அதைக் கூட என்னால் ஏத்துக்கிட்டு இருந்திருக்க முடியுமோ என்னவோ.

ஆனா எந்த முயற்சியுமே செஞ்சு பார்க்காம, டாக்டர் சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக என் அக்காவை கைகழுவி விட்டுட்டீங்க இல்ல. இதுவே உங்களுக்கு அண்ணனுக்குப் பதில் அக்கா பிறந்திருந்தா இப்படியா மறுகல்யாணம் பண்ணி வைச்சிருப்பீங்க. எப்படியாச்சும் அவங்க மனநோயைக் குணப்படுத்தி அவங்க புருஷனோட சேர்த்து வைக்க தானே நினைச்சிருப்பீங்க.

இங்க பிரச்சனைகளுக்கு சொல்யூஷன் சொல்றதுக்கு கூட அவங்க ஆணா பெண்ணான்னு தான் முதலில் பார்க்கிறாங்க. ஆம்பிளைங்களோட மறுகல்யாணத்துக்கு, கல்யாணம் ஆகாத பொண்ணு கிடைக்கும். ஆனா பொண்ணோட மறுகல்யாணத்துக்கு குழந்தையோட இருக்கிற ஆண் தான் கிடைப்பான். அவனுக்கும் கூட தான் ஏதோ அந்தப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த உணர்வு தான் இருக்கும்.” பலநாள் கோபங்கள் அனைத்தையும் காட்டினாள் அமிர்தா.

“நம்ம நாட்டில் இன்னும் பல பேருக்கு மனநோயைப் பத்தின சரியான புரிதல் இல்ல அமிர்தா. டிப்ரஷன் என்கிற வார்த்தையை இலகுவா சொல்லுற நபர்களுக்கு, மனபிறழ்வோட வலி எப்படி புரியும் சொல்லு.

என் அண்ணனை சின்ன வயசில் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கிறதால் சொல்றேன். மனநலத்தில் பிரச்சனை உள்ளவங்க எல்லாம் ரொம்ப பாவம் அமிர்தா. அவங்க பார்க்க நம்மை மாதிரி சாதாரணமா தான் இருப்பாங்க. ஆனா அவங்களோட உணர்வுகள் நம்மை விட பல மடங்கு அதிகமா இருக்கும்.

ஒரே விஷயத்துக்கு நாம உணரும் சோகத்தின் அளவை விட அவங்க பல மடங்கு அதிகமா சோகமாவாங்க. சோகம் மட்டும் இல்ல சந்தோஷம்,கோபம் எல்லாமே நாம உணரும் அளவை விட அவங்க அதிகமா தான் உணர்வாங்க. நீலா அண்ணிக்கு நடந்த கொடூரம் நமக்கே பயங்கர அதிர்ச்சி என்னும் போது அண்ணனை அது எந்தளவு பாதிச்சு இருக்கும் னு யோசிச்சு பாரு.” என்க, கண்ணை மூடி நிதானித்தாள் நீலாம்பரி.

“எந்த சோகமும் இங்கே நான்கு நாட்கள் தான்னு கவிஞர்கள்  சொல்லி இருக்காங்க. அதோட அர்த்தம் நல்ல மனநிலையில் இருக்கும் நமக்கு ஒரு விஷயத்தோட பாதிப்பு நாள் போக போக குறைஞ்சுக்கிட்டே போகும்.

ஆனா மனஅழுத்தத்தில் இருக்கிறவங்களுக்கு அவங்களை பாதிக்கிற சோகம் நாள் போக போக அதிகமாக தான் ஆகும். அண்ணன் பார்த்த காட்சிகள் காலத்துக்கும் அவர் மூளையை விட்டுப் போகாது. அவர் அண்ணியை விட்டு தள்ளி இருக்கும் போது எப்போதாவது நினைவு வந்து அவரை சங்கடப்படுத்தும் அந்த நினைவுகள் அண்ணி கூட இருக்கும் போது அவங்களைப் பார்க்கும் ஒவ்வொரு நேரமும் நினைவு வந்து அவரைக் கஷ்டப்படுத்தும். இதில் உனக்கு சந்தேகம் இருந்தால் உனக்குத் தெரிஞ்ச டாக்டர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ.” என்று அமிர்தாவிடம் சொன்னவன் நீலா பக்கம் வந்து,

“இவ்வளவு பேசுறதால் நான் என்னோட செயலை நியாயப்படுத்துறேன்னு நினைக்க வேண்டாம். அந்த தப்பை நான் செய்ய மாட்டேன். இப்ப இதையெல்லாம் நான் சொல்றதுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம் நடந்த எல்லாத்தையும், எல்லோரையும் மறந்து, நீங்களும் ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்.” என்றான்.

“அப்ப இப்பவும் என் அக்காவையும் உங்க அண்ணனையும் சேர்த்து வைக்க மாட்டீங்களா?” அமிர்தா கேள்வி எழுப்ப பதில் சொல்லத் தெரியாமல் நின்றான் கேசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!