Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநி

Rhythm 1

(Rythum) ரிதம் – சரிகமபதநி

 

ரிதம் – 1

 



Advertisement

சரிகமபதநி குரல் தேடல் இறுதிச்சுற்று என்ற பெரிய பதாகை அந்த மேடையின் மீது மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்தது.

 

அது ஒரு பொதுவெளி அரங்கமாக மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

Advertisement

 

Advertisement

பெரிய பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்க, ஒலிபெருக்கியில் அதைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினி அந்த நிகழ்ச்சியைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“‘சரிகமபதநி’ இந்தியாவின் பிரம்மாண்டமான குரல் தேடல்” என்று ஓங்கி கத்திக் கொண்டிருந்தாள்.

Advertisement

 

அப்படியே அந்த மேடைக்குப் பின்னால், இறுதிச்சுற்றுக்குத் தகுதியான போட்டியாளர்கள் பதட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

 

அதில் ஒருத்தியாக நத்தாஷாவும் கைகளைப் பிசைந்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவளுடைய தோழி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.

 

“இது என் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானதுடி. என் அப்பா அம்மா கிட்ட சண்டை போட்டுட்டு வந்திருக்கேன். இதுல நான் ஜெயிக்கலனா என் வாழ்க்கையே தோத்துப்போன மாதிரி” என்று வருத்தத்தோடு கூறினாள் நத்தாஷா.

 

“முட்டாள்தனமா பேசாத. இந்த மாதிரி போட்டிகளில் ஏற்கனவே கண்டஸ்டன்ட்டை தேர்வு செஞ்சுருவாங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப கூட ரெஸ்ட் ரூம் பக்கத்துல ரெண்டு பேர் இதைப் பற்றித் தான் பேசிட்டிருந்தாங்க. அப்ப நம்பல, ஆனா இப்ப நம்பணும்னு தோணுது” என்றாள் பிரீத்தி.

 

“அப்படியெல்லாம் இருக்காதுடி. இது எவ்வளவு பெரிய ப்ரோக்ராம். பெரிய டிவி சேனல்ல ஒளிபரப்பாகிட்டு இருக்கு. கண்டிப்பா அப்படியெல்லாம் இருக்காது” என்று கூறினாள் நத்தாஷா.

 

தகுதிச் சுற்றில் பெரும்பாலான வாக்குகளைப் பெற்று முன்னிலை எடுத்தது நத்தாஷா என்றாலும், நடுவர்கள் அவளைத் தேர்ந்தெடுத்திருக்கவில்லை. அப்போதே அவளுக்குச் சிறு ஏமாற்றம்தான்.

 

இருந்தாலும் கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வந்திருந்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. பதினோராம் வகுப்பிலேயே இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவள் கூற, தாயும் தந்தையும் நிராகரித்து விட்டார்கள்.

 

அவர்களும் இதையேதான் கூறினார்கள், ‘இது உண்மையாக நடக்கும் போட்டிகள் அல்ல, ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டு நடப்பது’ என்று.

 

ஆனால் முயற்சிக்காமல் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? பனிரெண்டாம் வகுப்பு என்பது வாழ்க்கையை நிர்ணயிப்பது என்று, அதை முடித்து 70 சதவீதத்தில் தேர்ச்சி பெற்று, கல்லூரியிலும் சேர்ந்து விட்டாள்.

 

எல்லாப் பெற்றோர்களைப் போல, பெண்கள் கல்லூரியில்தான் அவளையும் சேர்த்திருந்தார்கள்.

 

விதியே என்று அதற்குப் போய்க்கொண்டிருந்தவளுக்கு எண்ணம் முழுவதும் இதுபோல போட்டிகளில் கலந்துகொண்டு தன் குரலை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

 

முதல் வருடத்திலிருந்து பெற்றவர்களிடம் போராடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்துவிட்டாள். உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஏதேதோ பிதற்றி, தோழியின் துணையோடுதான் சென்னைக்கு வண்டி பிடித்திருந்தாள்.

 

பிரீத்தியுடன் சேர்ந்து அவள் சித்தி வீட்டில் தங்கித்தான் இந்த போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். பிறகு அவளுடனே சேர்ந்து மதுரைக்கு வண்டியைப் பிடித்து விடுவாள்.

 

‘அல்ட்ரா லக்சரி ஷூவை’ அணிந்து கொண்டு அவளைக் கடந்து கொண்டிருந்த கால்கள் அப்படியே தேங்கி நின்றன. அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு கடந்தன.

 

போட்டியாளர்கள் தனித்தனியாக மேடையில் பெயர் சொல்லி அழைக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் மேடை ஏறித் தங்கள் திறமைகளைக் காட்டிவிட்டு வந்தார்கள்.

 

வைல்ட் கார்டில் நுழைந்தவர்களும் அதில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள். இறுதிச்சுற்றுக்கு ஆறு பேர்கள் தேர்வானார்கள். அதில் நத்தாஷாவும் ஒருத்தி.

 

இரண்டு இரண்டு பேர்களாகப் போட்டிப் பாடலைப் பாட வேண்டும். நத்தாஷாவுடன் ஒரு ஆண் பாடகன் தேர்வு செய்யப்பட்டிருக்க, அடுத்து இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று ஆறு பேரையும் பிரித்திருந்தார்கள்.

 

போட்டி ஆரம்பமானது. மற்ற இருவரும் பாடிவிட்ட பிறகு, நத்தாஷாவும் அவளுடன் பாட வந்தவனும் மேடை ஏறினார்கள்.

 

முதலில் வாய்ப்பு அவளுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அவள் தொடங்கும் பாடலை போட்டியாக அவன் அடுத்த வரிகளைப் பாட வேண்டும்.

 

“சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்.

அறைகுறை

விஷயங்கள் அறிந்தவர்

புரிந்தவர் மேடை ஏறலாமோ

சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள்

வேண்டும்…..” என்று அவள் பாடலைத் தொடங்கியிருக்க,

 

பல பேரின் இதழ்கள் மெச்சுதலாக விரிந்தன.

 

“என் ….. முருகனின்

திருவடி தருகிற அருளிது

மேடை ஏறியதும் பாடல்

ஓடி வரும் ராகம் பாவம் கேளு……”

 

அந்தப் பாடகனும் நான் உனக்குச் சளைத்தவன் இல்லை என்ற ரீதியில் பாடி முடித்தான்.

 

“ஆ ஆஆஆஆ…

ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம் என்

கான மழை நீயும் இன்று

கேளு கல்யாணி….”

என்று முடித்தாள் நத்தாஷா.

 

“உன்னைப்போல்

நான் மேதையில்லை

ஆனாலும் நான்

பேதையில்லை பாடுவதை

பாடு கலைவாணி….” என்று பாடினான்.

 

இப்படியே அவர்களுக்குள்ளும் போட்டி வலுவாக இருக்க, இருவருமே நன்றாகப் பாடினார்கள். அவர்களின் குரல் வளம், பாடல், பாடிய விதம் என்று இறுதிச்சுற்றுக்குத் தேர்வானார்கள்.

 

அவர்களோடு சேர்த்து இன்னும் ஒரு பெண்ணும் – ஆணும் தேர்வாகியிருக்க, நான்கு பேரில் யார் போட்டியை வெல்லப்போவது?? என்று எல்லோருக்குமே பதற்றம் குடிகொண்டது.

 

தங்கள் வீட்டில் அமர்ந்து அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நத்தாஷாவின் பெற்றோருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. என்னதான் இது தேவையற்ற வேலை என்று ஒதுக்கி நிறுத்தினாலும், மகள் இந்த நிலையை எட்டியிருக்கும்போது அதை பெருமையாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். அவள் ஜெயிக்க வேண்டும் என்று நூறாயிரம் வேண்டுதல்களையும் வைத்துக் கொண்டிருந்தனர்.

 

எத்தனை எத்தனை போராட்டங்களை நிகழ்த்திவிட்டு அந்தப் போட்டிக்கு வந்திருக்கிறாள்! அது எல்லாம் அவள் கண் முன்னால் நிழலாடி மறைந்தது. இது அவளுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு, அதைத் தவறவிடக் கூடாது என்ற பதற்றம் அதிகமாகவே இருந்தது.

 

தொகுப்பாளினி இறுதிச்சுற்றுப் போட்டியாளர்கள் பெயரை ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தாள்.

 

அதில் மற்றவர்கள் எல்லாம் மேடை ஏறிப் பாடி முடிந்த பிறகுதான், கடைசியாக நத்தாஷாவின் பெயர் அழைக்கப்பட்டது. அவளும் தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு மேடை ஏறினாள்.

……….

 

ஆண் – “நறுமுகையே

நறுமுகையே நீயொரு

நாழிகை நில்லாய், செங்கனி ஊறிய வாய் திறந்து

நீயொரு திருமொழி சொல்லாய்,

அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதரல நீர்வடிய கொற்றப் பொய்கள்

ஆடியவள்

நீயா??….

அற்றைத்

திங்கள் அந்நிலவில் நெற்றிதரல

நீர்வடிய கொற்றப் பொய்கள்

ஆடியவள் நீயா…”

 

பெண் – “திருமகனே திருமகனே

நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழிமொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப்பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும்

நீயா…??

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா……”

 

சற்று அழுத்தமாக ஆண் குரலில் ஆரம்பித்தவள், மேல் ஸ்துதியில் பாடினாள். அதன் பிறகு பெண் குரலில் பாடினாள். மாற்றி மாற்றி அவள் ஆண் குரலிலும் பெண் குரலிலும் பாடிக்கொண்டிருக்க, கூட்டம் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தது. உண்மையில் நன்றாக பாடினாள்.

 

ஆண் – அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதரல நீர்வடிய கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா….

 

பெண் – ஆ ஆஆ ஆஆஆ

ஆண் – நீயா

பெண் – ஆ ஆஆ ஆஆஆ

ஆண் – நீயா

பெண் – ஆ ஆஆ ஆஆஆ

ஆண் – நீயா

 

அதிலும் இந்த வரிகள் சளைத்ததே இல்லை.. அவ்வளவு அழகாகப் பாடினாள். சிறு பிசகுகூட இல்லை.

 

பாடல் ஒலியைவிடக் கரகோஷ ஒலி அதிகமாகக் கேட்டது.

 

அல்ட்ரா லக்சரி ஷூவுக்குச் சொந்தக்காரன் சற்று சத்தமாகவே கைகளைத் தட்டினான். அவனுடைய கைத்தட்டல் அடுத்து அமர்ந்திருந்தவரின் செவிப்பறையைக் கிழித்துவிடும் அளவிற்கு இருந்தது.

 

அவனுடைய ஆக்ரோஷமான கைத்தட்டலிலேயே, அவன் எந்த அளவுக்குப் பாடலை ரசித்திருக்கிறான் என்பதை அருகில் இருந்தவர்களுக்கு விளங்க வைத்தது.

 

அத்தனை நாட்களும் அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய அந்த மூன்று ஜாம்பவான்களும்,  மெய்மறந்து கேட்டுவிட்டுப் பாடல் முடிவடையும்போது எழுந்து கைதட்டிப் பாராட்டினார்கள்.

 

கிட்டத்தட்ட அவள்தான் ஜெயிப்பாள் என்று அங்கு இருந்தவர்கள் எல்லோரும் நம்பினார்கள்.

 

ஆனால், அதன் பிறகு மக்களாக வோட்டிங் செய்ய வேண்டும் என்று ஒரு எண்ணைக் கொடுத்து, “உங்கள் ஓட்டை ஆரம்பிக்கலாம்” என்று தொகுப்பாளினி கூறிவிட்டுச் செல்ல,

 

அந்த ஜாம்பவான்கள் தாங்கள் வாங்கிய காசுக்கு மேடையில் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை முடித்து மூவரும் சென்று அமரும்போது, ஓட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

அதை அறிவிப்பதற்குத் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு பெரிய நடிகனை மேடைக்கு ஏற்றியிருக்க, அவன் கையில் கார்டுகள்  திணிக்கப்பட்டது.

 

நால்வரும் மேடைக்கு ஏற்றப்பட்டார்கள். நால்வரின் முகத்திலும் பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

அந்த லக்சரி ஷூவுக்குச் சொந்தக்காரன் நத்தாஷாவையே விழி எடுக்காமல் பார்த்திருந்தான்.

 

கார்டு கொடுக்கப்பட்ட அந்த நடிகன், மூன்றாவது வெற்றியாளரின் பெயரை வாசித்தான். கரகோஷம் வானைப் பிளந்தது.

 

இரண்டு உதடுகளையும் மடித்துக் கடித்து மற்றவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

 

இரண்டாவது பெயர். அனைவரின் பதற்றமும் அதிகரித்தது. அதற்கும் கைதட்டல் அதிகமாகவே இருந்தது.

 

“முதலாம் வெற்றியாளரின் பெயர்” என்று தொகுப்பாளினி கூறிய பிறகு,

 

அந்த நடிகன் மற்றொரு பெயரைச் சொல்ல, வானம் பிளக்கும் அளவிற்குப் பேரொலியாக கரகோஷம் எழுந்தது.

 

உடலில் உள்ள நாளங்களெல்லாம் அதிர்ச்சியிலிருக்க, நத்தாஷா அங்குச் சந்தோஷத்தில் கத்திக்கொண்டிருந்தவர்களைப் புரியாமல் பார்த்தாள்.

 

எல்லோருமே நன்றாகப் பாடினார்கள். ஆனால் அவள் பாடியது மிக வித்தியாசமாக இருந்தது. எல்லோரின் கரகோஷ ஒலியும் அவள்தான் ஜெயிப்பாள் என்ற நிர்ணயத்திற்குக் கொண்டு வந்திருந்தது.

 

ஆனால் இது என்ன???

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த நத்தாஷாவின் தாயார் புலம்ப ஆரம்பித்தார். “நான் அப்பவே சொன்னேன். இவள் கேட்கல” என்று கண்ணீரோடு தன் கணவனைப் பார்த்தார்.

 

அவரும் தன் மனைவியை ஆரத்தழுவிச் சமாதானப்படுத்தினார். தொலைக்காட்சியில் மேடையில் நின்றிருந்த அவளைக் காட்டவே இல்லை. மேடையில் அவள் எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை பெற்றவர்களுக்கு. அவளுடைய தோழி பிரீத்தி நத்தாஷாவை அந்தக் கூட்டத்தில் தேட ஆரம்பித்தாள்.

 

ஆனால், அங்கிருந்த இரு ஜோடிக் கண்கள் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அவள் இன்னும் மீளவில்லை என்பது தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, யாரும் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை, அவனைத் தவிர.

 

வெற்றியாளர்களின் பெற்றவர்கள், உறவினர்கள் என்று மேடையில் கூட்டம் சேரச் சேர, அவள் பின்னுக்கு நகர்த்தப்பட்டுக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளுடைய தோழி பிரீத்தி வந்து அவளைத் தோளோடு அணைத்தபடி அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

 

தன் தொடையில் கையை வைத்து ஊன்றி எழுந்தவன், ஊப்ப், என்ற ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டபடி, கைகள் இரண்டையும் அசட்டையாக தட்டிக்கொண்டு, மேடைக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

 

மடிந்து அமர்ந்து குலுங்கிக்குலுங்கி அழுதுகொண்டிருப்பவளின் முன்னால் சென்று நின்றான்.

 

‘வெற்றி அது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். தோற்றவர்களை ஓரம் நிறுத்திவிடும்’. ஆனால் அவர்கள் உண்மையில் தோற்றவர்களா?? அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

 

“எக்ஸ்கியூஸ் மீ மிஸ் நத்தாஷா” என்ற குரலில்,

 

அவள் அழுதுகொண்டே நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவன் தன் விசிட்டிங் கார்டை அவள் முன்னால் நீட்டினான்.

 

அவள் புருவம் இடுங்கப் புரியாமல் பார்த்தாள்.

 

“நாளைக்கு என்னை இங்க வந்து பாருங்க” என்றான்.

 

அவள் வாங்கவில்லை. பிரீத்தி வாங்கினாள்.

 

அவன் தோற்றம், ஆளுமை எல்லாம் அவளை அந்த நிலையில் வாங்க வைத்திருந்தது. ஆனால் நத்தாஷா இன்னுமே தெளிவாகாமல் இருந்தாள்.

 

அவன் திரும்பித் தோரணையாக நடக்க ஆரம்பித்துவிட்டான்.

 

“ஏய் மிஸ்டர். நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு கிடையாது” என்று சத்தமாகக் கத்தினாள் நத்தாஷா.

 

“ஈவன் ஐ ஆம் டூ நாட்” என்று பபுள்காமை மென்றுகொண்டே அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவனும் சென்றுவிட்டான்.

 

பெண்கள் இருவரும் வாயைப் பிளந்து அவனைப் பார்த்தனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!