Skip to content
Post Views: 1,074
அத்தியாயம் 24
“போதும், இரண்டு பேரும் அதிகம் பேசிட்டீங்க. எங்க வாழ்க்கையோட துர்பாக்கிய நிலைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாதது உங்க வாழ்க்கை. எங்க வாழ்க்கையில் பிரச்சனைகளை விதி உருவாக்குச்சுன்னா, உங்க வாழ்க்கைப் பிரச்சனைகளை நீங்களே உருவாக்கிக்கிறீங்க.
எனக்கும் மோகனனுக்கும் கல்யாணம் ஆன போது உங்க இரண்டு பேரையும் நிறுத்தி வைச்சு நான் ஒன்னு சொன்னேன். நினைவு இருக்கா?” என்று நீலா கேட்க, ஆம் என்பதாய் தலையசைத்தனர் இருவரும்.
“கூடப்பிறந்தவங்க மேல அதிக அன்பு இருக்கிறது நல்லது தான். ஆனா எங்க மேல இருக்கும் பாசத்தினால் உங்களுக்குள்ள சண்டை வரக்கூடாதுன்னு சொல்லி இருந்தேன். அப்ப சரி சரின்னு தலையை ஆட்டிட்டு இப்ப அதை மட்டுமே வேலையா பார்த்து வைச்சிருக்கீங்க இரண்டு பேரும்.
Advertisement
சூழ்நிலை மாறி நாங்க எப்படியோ சமாதானம் ஆகிடுறோம் னு வைச்சுக்கோங்க. உங்க நிலைமை என்ன ஆகும். காலத்துக்கும் இப்படி யாரோ மாதிரி இருக்கப் போறீங்களா?” என்க,
“அதை காலத்துக்கும் ஒன்னா வாழப்போறவங்க தான் யோசிக்கணும். எனக்கு இன்னும் ஒரு வருஷமும், பத்து மாசமும் தான்.” அமிர்தா சத்தம் இல்லாமல் சொன்னாலும் அது நீலாவுக்கு கேட்க தான் செய்தது.
“அடி பின்னிடுவேன் அமிர்தா உன்னை. கல்யாணம் அவ்வளவு விளையாட்டா போச்சா உனக்கு. அம்மா இல்ல நம்மைக் கேட்க யார் இருக்கான்னு ஓவரா ஆடாத. நான் கேட்பேன், நீ தப்பு பண்றன்னு தெரிஞ்சா அடிக்கவும் செய்வேன்.” என்ற தமக்கையைப் பாவமாகப் பார்த்தாள் அமிர்தா.
Advertisement
“நீ எதுக்காக இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட, எப்படியான சூழ்நிலையில் சம்மதிச்சன்னு எனக்குத் தெரிய வந்திடுச்சு. அப்படியெல்லாம் செஞ்சு தான் என்னை நீ சரிபண்ணனுமா? நான் மீண்டு வரும் நேரம் நீ மொத்தமா அழிஞ்சு போய் நின்னா என்னால் அதைத் தாங்கிக்க முடியுமா?” கோபமாய் கேட்டாள் மூத்தவள்.
Advertisement
“கூடப்பிறந்தவங்க மேல அக்கறையும், அன்பும் சிலருக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? என் அக்கா மேல எனக்கும் நிறையவே அக்கறை இருக்கு. அவளைக் காப்பாத்த என்ன வேண்ணாலும் பண்ணலாம் னு துணிஞ்சு தான் இறங்கினேன். அதுக்காக சிலர் மாதிரி அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கல. என் சொந்த வாழ்க்கையைத் தான் கெடுத்துக்க நினைச்சேன். தப்பா இருந்தாலும் அவங்க பண்ண தப்பை விட கம்மி தான்.” என்றாள்.
“போதும் அமிர்தா, எங்களுக்காக நீங்க சண்டை போட்டது போதும். இதுக்கு மேலாச்சும் உங்க வாழ்க்கையை வாழப் பாருங்க.” என்றாள் நீலா.
“என் மனசு மரத்துப் போச்சு அக்கா. ஆதரிக்க ஆள் இல்லாம அநாதரவா இருந்த குழந்தைகளை இனி அவங்க என்னோட சொத்துன்னு எப்ப அள்ளியெடுத்து அணைச்சேனோ அப்ப இருந்து எனக்கு அந்தக் குழந்தைங்க தான் எல்லாம். எனக்கு அவங்க போதும். அவங்களை வளர்த்து ஆளாக்கி அப்படியே வாழ்ந்துட்டு போயிடுறேன்.” என்றாள்.
Advertisement
“நீ விரக்தியில் பேசுற அமிர்தா. அவங்க என்னோட குழந்தைங்க. அவங்களைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு என்னோடது. இவ்வளவு நாள் என்னை சுமந்த நீ, இனி காலத்துக்கும் அவங்களை சுமக்கணுமா? அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். குழந்தைங்களை என்கிட்ட கொடுத்துட்டு நீ கேசியோட கிளம்பு.” மனசாட்சி இன்றி பேசினாள் நீலா.
“நீ எதுக்காக இப்படி பேசுறன்னு எனக்குத் தெரியும் அக்கா. கோபமா பேசினா ரோஷம் பொத்துக்கிட்டு வந்து நான் அவரோட கிளம்பிடுவேன்னு நினைக்கிறியா? உன்னோட வேலை என்கிட்ட நடக்காது. இவருக்கு இரண்டு வருஷத்துக்கு ஒப்பந்த மனைவியா இருக்கிறதா சொல்லி இருக்கேன். அதை சரியா நிறைவைத்துவேன். அதுக்கு அப்புறம் எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நீயும், நானும் மட்டும் தான். நம்ம குழந்தைங்களைத் தவிர, வேற யாரும் நமக்குத் தேவையும் படமாட்டாங்க. நாம பாட்டுக்கு நிம்மதியா வாழ்ந்துட்டு போயிடலாம்.” என்றாள் அமிர்தா.
“இப்படி ஒரு யோசனை உனக்குள்ள வரக்கூடாதுன்னு தான் குழந்தைகளை தத்துக்கொடுக்கிற யோசனை சொன்னேன்.” என்று வாயைத் திறந்தான் கேசி.
நீலா அமைதியாக அவனைப் பார்க்க, “காரணம் ஒன்னு கிடைச்சதும் அதை சொல்லி நல்ல பேர் எடுக்கலாம் னு பார்க்காதீங்க. வெளியே என்ன பேசினாலும் அது தான் நிஜம் னு உங்க ஆழ் மனசுக்குத் தெரியும்.
குழந்தைங்களைப் பார்த்தா உங்க அண்ணனுக்கு எங்க அக்கா நினைவு வரும், உங்க புது அண்ணியோட சந்தோஷமா வாழ மாட்டார். உங்க அண்ணனுக்கும் புது அண்ணிக்கும் பிறக்கப்போற குழந்தைகளோட எல்லாத்துக்கும் இவங்க இரண்டு பேரும் போட்டிக்கு நிற்பாங்க. உங்க அண்ணன் அம்மா இல்லாத குழந்தைங்கன்னு இவங்களுக்கு ஆதரவா நிற்பார். அதனால் உங்க புது அண்ணி பிரச்சனை பண்ணுவாங்க. அதனால் உங்க அண்ணன் நிம்மதி பறிபோகும். அதுக்காக தான் குழந்தைகளை தத்துகொடுக்க நினைச்சேன்னு உண்மையை சொல்லுங்களேன். நீங்க தான் அரிச்சந்திரனோட மறுபிறவி ஆச்சே.” நக்கலாய் சொன்னாள் அமிர்தா.
“அது உண்மையா இருந்தா கண்டிப்பா நான் சொல்லுவேன் தான். ஆனா அது உண்மை இல்லையே.” என்றவன் சில கணங்கள் தயங்கிவிட்டு, “இப்ப நான் சொல்லப்போறதை நீ நம்புவியா எனக்குத் தெரியல. அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் னு பேச்சு வரும் போது தான் நீலா அண்ணி கர்ப்பமா இருந்தது தெரிய வந்தது. பைரவன் மாமா கண்டபடி பேசி, நீ கோச்சுக்கிட்டு கிளம்பின பிறகு எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை.
அண்ணனுக்கு தான் பழைய நினைவுகள் இல்லையே. அவரோட குழந்தைங்களை என்னோட குழந்தைங்களா நான் வளர்த்துட்டு போறேன். அவர் அவரோட வாழ்க்கையை வாழட்டும் னு தான் முதலில் நினைச்சேன். ஆனா அந்தக் குழந்தைங்களை இந்த சமுதாயம் நிம்மதியா வாழவிடாதுன்னு எனக்குப் புரிய வைச்சான் ஒரு சின்னப் பையன்.”
“அவன் பேர் பாரிவேந்தன். அவன் அவனோட அம்மாவுக்கும் அவங்களோட முதல் கணவனுக்குப் பிறந்தவன். இதில் வேடிக்கை என்னென்னா பாரிவேந்தனோட சேர்த்து இரட்டைக் கருவா உருவாகிப் பிறந்த சபரிவேந்தன் அவன் அம்மாவுக்கும் அவங்க இரண்டாவது கணவனுக்கு பிறந்தவன். ஒரே நேரத்தில் அந்த அம்மா இரண்டு நபர்களோட பழக்கம் வைச்சிருந்தால் வந்த வினை அது. நடந்த இந்த விஷயத்தில் தப்பு முழுக்க அந்தப் பெண் மேல இருந்தாலும் பாதிக்கப்பட்டது என்னவோ அந்த சின்னப்பையன் தான்.
அவனோட உண்மையான அப்பா ஒரு செஸ் ப்ளேயர். ரொம்ப பிரபலமானவரும் கூட. அவர் இரண்டாவது முறையா உலகக்கோப்பை வாங்கின நேரம் அவரோட கடந்த காலத் தகவல்கள் சமூக வலைதளங்களால் தோண்டியெடுக்கப்பட்டதால் விஷயம் இந்தப் பையனுக்குத் தெரிய வந்து அதனால் பல அவமானங்களை சந்திச்சு இருக்கான்.
பதிநான்கு வயசு சின்னப்பையன் அவனுக்கு என்ன தெரியும். என் அம்மாவும் அவங்க புருஷனும் தப்பானவங்க. எனக்கு அவங்களோட இருக்கப் பிடிக்கல. என்னோட சொந்த அப்பாகிட்ட என்னை அனுப்பி வைங்கன்னு என் ஸ்டேஷனில் வந்து நின்னான். அவனோட நான் செலவளிச்ச சில மணி நேரங்களில் இந்த சமுதாயத்தால் அவன் எத்தனை பாதிக்கப்பட்டு இருந்தான்னு எனக்குப் புரிஞ்சது. அந்த நிலைமை என் அண்ணன் பசங்களுக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன்.” என்று கேசி நிறுத்த,
“மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தின கதையை விட மோசமா இருக்கு நீங்க சொல்ற கதை. அந்தப் பையனோட அம்மா தப்பு பண்ணி இருந்தாங்க அதனால் சங்கடம் உருவாச்சு. ஆனா இங்க என் அக்கா என்ன தப்பு பண்ணாங்க, எதுக்காக அவங்க குழந்தைங்களுக்கு பிரச்சனை வரப்போகுது.” கோபமாய் கேட்டாள் அமிர்தா.
“உனக்கு இன்னும் நம்ம நாட்டோட நடப்பைப் பத்தி தெரியல அமிர்தா. ஒரு பொண்ணுக்கு பாலியல் அத்துமீறல் நடந்தா, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது பண்ணி தண்டனை கொடுத்து ஜெயிலில் அடைச்சுட்ட பிறகும் கூட நடந்து முடிஞ்ச சம்பவத்தில் அதிகமாக பாதிக்கப்படப் போறது அந்தப் பொண்ணும் அவளோட குடும்பமுமா தான் இருக்கும்.”
“முதலில் வரும் கேள்வியே அவ என்ன ட்ரஸ் பண்ணி இருந்தா, எதுக்காக நேரம் கெட்ட நேரத்தில் வெளியே சுத்தினா என்பது தான். அதுவாச்சும் பரவாயில்லைன்னு நினைக்கிற அளவுக்கு அடுத்தடுத்த கேள்விகள் வரும்.
தப்பு பண்ணவன் பணம் படைச்சவனா இருந்திருந்தா, நீயே விருப்பப்பட்டு போயிட்டு, பணம் தரலன்னதும் மாத்தி பேசுறியான்னு கேட்பாங்க.
காட்டுப் பாதையில் ஒரு பொண்ணு இறந்து கிடந்தா, கவர்மெண்ட் ரோட்டுக்கு லைட் போடுவாங்களா இல்ல காட்டுப்பாதைக்கு லைட் போடுவாங்களா, அந்த நேரம் அந்தப் பொண்ணுகூட போறதை விட அவ அம்மாவுக்கு வேற என்ன வேலைன்னு கேட்பாங்க.
சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு யார் என்னன்னு தெரியாதவன் பின்னாடி போனா அவ அனுபவிக்க வேண்டியது தான்னு சொல்லுவாங்க. முகத்தில் எச்சில் துப்பிட்டான்னு தான் தப்பா நடந்திருக்கான் அந்த ஆண். ஆக கெடுத்தவன், கெடுக்கப்பட்டவள் இரண்டு பேர் மேலும் தப்பு இருக்குன்னு நடுநிலையாளர்கள் பேசுவாங்க.
எல்லாத்துக்கும் மேல எல்லா விதமான சாட்சிகளும் இருந்தாலும், சரியான சாட்சிகள் இல்லன்னு ரிலீஸ் பண்ணிடுவாங்க.” என்று நிறுத்தியவன் சில நொடிகளில் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திவிட்டு,
“இந்த பாழாப்போன சோஷியல் மீடியாவால் அண்ணிக்கு நடந்தது பலருக்கு தெரிஞ்சிடுச்சு. அவங்க பெத்தெடுத்த குழந்தைங்களுக்கு என்னென்ன பெயர் கிடைச்சதுன்னு உனக்கும் தெரியும் தானே.” என்க, அமிர்தாவுக்கு ஆத்திரம் வந்தது. அவள் காது பட எத்தனை பேசிஇருப்பார்கள் சுற்றத்தவர்கள். சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதுபோல் நாம் கடந்துவிடுவோம். ஆனால் எதிர்காலத்தில் இந்த பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் முன்னாலே யாராவது இப்படியான கேள்விகளையோ, வார்த்தைகளையோ கொட்டிவிட்டால் இந்தப் பிஞ்சுகள் தாங்குமா என தான் யோசித்ததை நினைவு படுத்திப்பார்த்தாள்.
இருந்தாலும் கேசியிடம் விட்டுக்கொடுக்க முடியாமல், “அதுக்கு குழந்தைகளை யாருக்கோ தூக்கிக்கொடுக்கிறது தான் நீங்க கண்டுபிடிச்ச யோசனையா? அடுப்புக்கு தப்பி வாணலியில் விழுந்த கதை மாதிரி இருக்கு இது.
தத்து கொடுக்கணும் னு சொல்றீங்களே. தத்தெடுக்கப்பட்ட எத்தனை குழந்தைகள் அந்தக் குடும்பங்களால் கஷ்டப்படுறாங்க தெரியுமா? அப்படியான கஷ்டங்களை என் குழந்தைகளும் அனுபவிக்கணும் னு நினைச்சீங்களா?” கோபமாகக் கேட்க,
“தத்துக்கொடுக்கப்பட்டு நல்லபடியாக வாழும் குழந்தைகளும் எத்தனையோ பேர் இருக்காங்க. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை காலம்காலமா நடந்துக்கிட்டு தான் இருக்கு. அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களைக் காப்பாத்தி அவங்களுக்கு வேற ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும் னு தான்பேசுறோமே தவிர, அடுத்த ஜெனரேஷன் பெண்களுக்கு கல்யாணமே பண்ணக்கூடாதுன்னு யாரும் நினைக்கலையே.
நல்ல குடும்பமா பார்த்து தத்து கொடுக்கலாம் னு தான் நான் நினைச்சேன். மனபிறழ்வால் பாதிக்கப்பட்ட அப்பா, மனநிலை சரியில்லாத அம்மான்னு இல்லாம, இந்த சமுதாயத்தோட கொடூரமான பக்கங்களை தெரிஞ்சுக்காம கடைசி வரைக்கும் நல்ல வாழ்க்கையை அவங்க வாழ்ந்தா நல்லா இருக்குமேன்னு தான் நினைச்சேன். இந்த முடிவு சரியா தப்பான்னு எனக்குத் தெரியல. தப்புன்னு நீ சொன்னாலும் நான் கண்டிப்பா ஏத்துப்பேன்.
அதே மாதிரி நான் யோசிச்ச அந்த கிறுக்குத் தனமான யோசனையில் துளி அளவாச்சும் குழந்தைங்களோட நலம் இருக்கு என்பதை நீயும் ஒத்துக்கணும். நம்மளோட இருந்து கஷ்டப்படுறதுக்கு பதில் எங்கேயாவது தூரமா இருந்தாலும் நல்லா இருக்கட்டும் னு நினைப்பதும் அன்பு தானே.” என்றான்.
“நல்ல சமாளிக்கப் பார்க்கிறீங்க மிஸ்டர் கேசி. ஒரு உறவு வேணும் னு நினைச்சா அதைத் தக்க வைச்சுக்க ஆயிரம் காணரங்கள் கிடைக்கும். உங்களுக்கு என் குழந்தைங்க தேவைப்படல. அதனால் தான் சப்பைக் கட்டு கட்டிக்கிட்டு இருக்கீங்க.” என்றாள் அமிர்தா.
“நீ நம்ப மாட்ட. இருந்தாலும் சொல்றேன். அண்ணனுக்காக அண்ணியை விட்டுக்கொடுத்தேன். இவ்வளவு நடந்த பிறகு என்னோட நீ சந்தோஷமா வாழ முடியாதுன்னு உனக்காக உன்னை விட்டுக்கொடுத்தேன். எத்தனையோ காதல்கள், கல்யாணங்கள் பிரியுது. அதுக்குப் பிறகும் கூட அவங்க சந்தோஷமா வாழுத் தானே செய்யுறாங்கன்னு நீ சொன்ன மாதிரி சப்பைக்கட்டு கட்டி தான் என்னை நானே ஏமாத்தினேன்.
ஆனா உங்க இரண்டு பேர் எதிர்காலத்து மேலும் எனக்கு நிறையவே அக்கறை இருந்தது. நீங்க இரண்டு பேரும் நல்லா வாழனும் னு ஆசைப்பட்டேன். குழந்தைங்க உங்களோட இருக்கும் போது கிடைக்கும் வாழ்வை விட, அவங்க இல்லாதப்ப உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் னு நினைச்சேன். என்னோட அபத்தங்களுக்கு இதுவும் ஒரு காரணம்.” என்க,
“உங்க அண்ணனுக்கு பக்கபலமா நிக்காம போய் இருந்தா நீங்க ஆசைப்பட்ட பொண்ணு உங்களுக்குக் கிடைச்சிருப்பா, உங்களை தினம் தினம் கொல்லும் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுதலை கிடைச்சிருக்கும். ஆனாலும் நீங்க தெரிஞ்சே உங்க அண்ணனைத் தானே தேர்ந்தெடுத்தீங்க. அப்படி இருக்க ஒரு அம்மாகிட்ட வந்து உன்னோட குழந்தைங்களை விட்டுட்டு வா, நான் உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுதரேன்னு சொல்றது அபத்தமா தெரியல.” கோபமாகக் கேட்டாள்.
கேசி அமைதியாகவே இருக்க, “நீங்க சரியான சந்தர்ப்பவாதி. உங்களை மறுபடியும் நம்புறதோ இல்ல உங்க மேல அன்பு காட்டுறதோ நடக்கும் னு எனக்குத் தோணல. அதனால் எந்த வகையிலும் என்கிட்ட வராதீங்க.” என்றுவிட்டு குழந்தைகள் அருகே போய் அமர்ந்துகொண்டாள்.
தங்கை, தங்கை கணவன் இருவரையும்மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் நீலா. அடுத்த இரண்டு நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. மூன்றாம் நாள் காலை பத்து மணிஅளவில் அமிர்தாவின் எண்ணில் இருந்து மோகனனுக்கு அழைப்பு வந்தது. அதைப் பார்த்ததுமே படபடப்பானான் மோகனன். உடல் முழுக்க உதற ஆரம்பித்தது. அவன் நினைப்பு சரிதான் என்பது போல் எதிர்பக்கம் அழைப்பில் இருந்தவள் நீலாவே.
“நான் உங்ககிட்ட பேசணும் மோகன். சாயங்காலம் ஆறு மணிக்கு பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்திடுங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். அந்த அலைபேசியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மோகனன். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அந்த தருணம் வந்துவிட்டது என்று புரிந்தது. ஆனால் என்ன பேசுவது, எப்படி தன் மனதை அவளுக்குப் புரிய வைப்பது என்று புரியாமல் இருந்தான்.
அனைத்திற்கும் ஆதி அவன் தான். அந்த வகையில் அனைத்தையும் அவன் தான் முடித்தும் வைத்தாக வேண்டும். ஆனால் அந்த நெஞ்சுரமும், மனவலிமையும் அவனிடம் இல்லை. நீண்ட நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் மாலை நேரம் வந்ததும் கனத்த மனதோடு நீலாவைக் காண புறப்பட்டான்.
முதல்முறையாக தம்பி, தாய் இருவரிடமும் சொல்லாமல் வெளியே புறப்பட்டான். இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை, அனைவரும் பயப்படும் படி தன் இதயம் துடிப்பை நிறுத்தினாலும் கூடப் பரவாயில்லை இவர்களிடம் எதையும் சொல்லக் கூடாது என்று தீர்க்கமாக நினைத்தான்.
தன்னவர்கள் தன்னைக் குறித்து பயம் கொள்கிறார்களே என அவர்கள் எடுக்கும் பல முடிவுகளுக்கு பணிந்து சென்ற பழக்கம் தானே, தன் வாழ்வை கால்பந்து போல் உதைத்து விளையாட அவர்களுக்கு இடம் கொடுத்தது. தன் வாழ்வை அடுத்தவர்கள் நிர்ணயித்தது வரை போதும். நல்லதோ கெட்டதோ இனி நம் வாழ்வை நாம முடிவு செய்வோம் என்கிற நினைப்போடு புறப்பட்டான்.
“எங்க போறீங்க தம்பி?” பைரவன் கேட்க, “என் பொண்டாட்டியைப் பார்க்க போறேன்.” என்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் மோகனன்.
error: Content is protected !!