ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 31
அத்தியாயம் – 31
ரன்வீரின் பார்வை தன் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்த மிருதுளா, சங்கடமும் எரிச்சலும் ஒருசேர, கடலை பார்த்தவாறே பற்களுக்கிடையில், “எதுக்கு பொண்ணுங்களையே பார்க்காத மாதிரி இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்…
அவளது கேள்வியைக் கேட்டு இதழ் பிரித்து மென்மையாகச் சிரித்த ரன்வீர், “ஓ… அப்போ நீயும் என்னை கவனிச்சுட்டு தான் இருக்கிறியா?” என்று குறும்பாகக் கேட்டிட,..
”எனக்கு வேற வேலை இல்லை பாரு!” என்று அவள் கடுகடுக்க, ரன்வீர் விடாமல், “அப்புறம் எப்படிம்மா நான் உன்னைப் பார்க்கிறதை இவ்வளவு கரெக்டா சொல்ற?” என்று அவளை மடக்கினான்…
Advertisement
”பக்கத்துல உட்கார்ந்து இப்படித் தொடர்ச்சியா குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தா, அதை உணர்றதுக்குத் தனியா வேற வேலை எதுக்கு? என்னால அதை ஃபீல் பண்ண முடியாதா?” என்று அவள் படபடவென வினவிட…
அதற்கு ரன்வீர் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, “உன்னால என் பார்வையை மட்டுமில்ல மிருதுளா… என் காதலையும் கூடத்தான் ஃபீல் பண்ண முடியுது, ஆனா அதை ஏத்துக்கத்தான் உன் மனசு பிடிவாதம் பிடிக்குது,” என்று மிக மெல்லிய குரலில், அவளது இதயத்தைத் தொடும் வண்ணம் பதிலளித்தான்…
அவனது அந்தப் பதில் அவளை ஒரு நிமிடம் பேச்சற்றுப் போகச் செய்தது, அலைகளின் ஓசைக்கு நடுவே அவனது வார்த்தைகள் அவளுக்குள் ஒரு மௌனமான அதிர்வை ஏற்படுத்தின…..
”என்னாச்சு… உன் ஹாட்டை டச் பண்ற மாதிரி நான் பேசிட்டேனா?” அவளது அலைப்புறும் விழிகளை கண்டு அவன் குறும்புடன் வினவ, அந்தச் சூழலில் இருந்து தப்பிக்க நினைத்தவளோ, “அதெல்லாம் எதுவும் இல்லை, உங்களால அதை டச் பண்ணவும் முடியாது,” என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னவள்.. “எதுக்காக இப்போ இங்க வந்தீங்க?” என்று பேச்சை மாற்ற முயன்றாள் மிருதுளா…
Advertisement
”ஏன்… என் பொண்டாட்டி பக்கத்துல வந்து உட்கார எனக்கு என்ன தகுதி வேணும்?” என்று ரன்வீர் அழுத்தமாகக் கேட்க, அவனை முறைத்து பார்த்தவள்..
”பொண்டாட்டியா? இந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?” என்று அவள் சீற, ரன்வீரோ மிகவும் நிதானமாக..”தைரியம் இல்ல மிருதுளா… உரிமை! அந்த உரிமையை நான் என்னைக்குமே விட்டுக்கொடுக்க மாட்டேன், நீ வேணா கோபத்துல தள்ளி நிற்கலாம், ஆனா சட்டப்படியும் சரி, மனசளவுலயும் சரி… நீ எனக்கு மட்டும் தான்,” என்று அவன் சொன்ன விதம், அவளது கோபத்தை அதிகப்படுத்தினாலும், அடிமனதில் ஒரு மெல்லிய நடுக்கத்தையும் ஏற்படுத்தியது.
Advertisement
இருப்பினும் அவள்.. ”உரிமை கொண்டாடுறதுக்கு முன்னாடி, நீங்க செஞ்சதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க ரன்வீர், அன்னைக்கு…” என்று அவள் எதையோ கேட்கத் தொடங்க, ரன்வீர் குறுக்கிட்டு..
”அன்னைக்கு நடந்ததை பத்தி பேசினா உனக்கு கோபம் தான் வரும், எப்படியும் நான் சொல்றத நீ நம்ப மாட்ட, இப்போ நாம ஒரு அழகான இடத்துல இருக்கோம், நம்ம குடும்பமே சந்தோஷமா இருக்கு, அந்த சந்தோஷத்தை கெடுக்க வேண்டாமே” என்று அவன் ஏக்கத்துடன் கேட்க,
அந்த கணம் கடலிலிருந்த
சம்யுக்தா.. ”அண்ணா! அண்ணி! அப்படியே உட்கார்ந்து பேசிட்டு இருந்தா எப்படி? நீங்களும் வாங்க!” என்று அவள் கையை அசைத்து அழைக்க, உடனே அவனும்.. “வா போலாம்,” என்று அவன் கையை நீட்ட, மிருதுளா பயத்துடனும் தயக்கத்துடனும் “இல்ல… நான் வரல.” என்றாள்,..
”ஹேய் கமான் மிருதுளா… உனக்கும் ஆசை இருக்குன்னு எனக்குத் தெரியும்,” என்று அவன் மீண்டும் அவளைத் தூண்ட, “அதுதான் வரலைன்னு சொல்றேன்ல!” என்று அவள் சற்று கோபமாகவே உரைக்க, அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் விட்டுவிட்டான்…
சற்று நேரத்தில் கடலில் ஆடி முடித்துவிட்டு கரைக்கு வந்த சம்யுக்தாவும் வினோத்தும், “நீங்களும் வந்திருக்கலாம்ல?” என்று வினவ, ரன்வீரோ.. “உன் அண்ணிகிட்டயே கேட்டுக்கோ நீ,” என்று பந்தை அவள் பக்கம் திருப்பினான்…
Advertisement
”அண்ணி…” என சம்யுக்தா பாவமாக விழிக்க, அவளோ பேச்சை மாற்றும் விதமாக, “உங்க ஆட்டம் எல்லாம் முடிஞ்சதா? கிளம்பலாமா?” என்று கேட்டாள்.
”இன்னும் இருக்கு அண்ணி! பூலுக்குப் போகணும்ல… வாங்க வாங்க நீங்களும்,” என்று வினோத் உற்சாகமாகக் கத்திக்கொண்டே ஸ்விம்மிங் பூலை நோக்கி ஓட, “அண்ணா, அண்ணி வாங்க!” என்று சம்யுக்தாவும் அவர்களைப் பிடிவாதமாக அழைத்துச் சென்றாள்…
வீட்டின் அருகே இருந்த அந்த தெளிந்த நீல நிற நீச்சல் குளத்தின் அருகில் வந்து நின்ற கணம், வினோத்தும் சம்யுக்தாவும் ஒரு கணமும் தாமதிக்காமல் தண்ணீருக்குள் குதித்து தங்கள் அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கிட, ரன்வீரும் மிருதுளாவும் மேற்பரப்பில் நின்றபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்…
கடலை விட நீச்சல் குளம் பாதுகாப்பானது என்றாலும், அந்த நீரின் ஆழமும் மிருதுளாவிற்கு ஒருவிதத் தயக்கத்தை தந்தது, அவளை ஓரக்கண்ணால் கவனித்த ரன்வீர்… ”கடல் தான் பயம்னு சொன்னே… இது வெறும் ஏழு அடி ஆழம் தான், நான்கடில கூட நீ நிற்கலாம், இதுக்கும் பயமா?” என்று அவன் வினவ, மிருதுளா பதில் சொல்லாமல் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், அந்தத் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு மின்னியது அவளுக்குள் ஒரு சிறிய ஆசையைத் தூண்டியது உண்மைதான்…
ஆனால், ஆழத்தைப் பற்றிய அந்த பயம் அவளைத் தயாராக விடவில்லை, குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து கால்களை மட்டும் நனைத்துக் கொள்ளலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போதே வினோத்…
”அண்ணிதான் பயப்படுறாங்க, நீங்களாச்சும் வாங்களேன் அண்ணா!” என்று அழைக்க, ரன்வீர் ஒரு நிமிடம் மிருதுளாவைத் திரும்பிப் பார்த்தான், பிறகு என்ன நினைத்தானோ அதற்கு மேல் இளையவர்களை ஏங்க விட விரும்பாமல், சற்றும் யோசிக்காமல், தான் அணிந்திருந்த டீசர்ட்டை மட்டும் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, ஜீன்ஸுடன் அப்படியே நீச்சல் குளத்தில் குதித்துவிட, ‘தடால்’ என்று அவன் குதித்த வேகத்தில் தண்ணீர் சிதறி அருகிலிருந்த மிருதுளாவின் முகத்திலும் உடையிலும் பட்டது.
”ஷ்ஷ்” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் கீழே பார்க்க, ரன்வீர் தண்ணீருக்குள்ளிருந்து தலையைச் சிலுப்பியபடி வெளியே வந்தான், நனைந்த அவனது கேசம் நெற்றியில் சரிய, அவளைப் பார்த்து புன்னகையை வீசியவனிடம் அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
அதன் பிறகு தண்ணீருக்குள்ளேயே ரன்வீர், வினோத் மற்றும் சம்யுக்தா மூவரும் சேர்ந்து ஒருவரையொருவர் துரத்தி விளையாடத் தொடங்கினர், அவர்கள் சிரிப்பதையும், தண்ணீரை வாரி இறைப்பதையும் பார்த்த மிருதுளாவிற்கு இப்போது பயத்தைத் தாண்டி ஒரு தனிமை உணர்வு ஏற்பட்டது, அந்த மகிழ்ச்சியில் தானும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவளது முகத்தில் தெரிந்தது…
அவளது முக மாற்றத்தைக் கவனித்த ரன்வீர் மெல்ல நீந்தி அவளுக்கு மிக அருகே வந்தவன், குளத்தின் ஓரத்தில் கைகளைப் பதித்து அவளை நிமிர்ந்து பார்த்து.. “ரொம்ப ஆழம் கிடையாது மிருதுளா… நான் உன் கையைப் பிடிச்சுக்கிறேன், வர்றியா?” என்று மிகவும் மென்மையான குரலில் கேட்டான்.
வினோத்தும் சம்யுக்தாவும் கூட.. “வாங்க அண்ணி… ப்ளீஸ்!” என்று கோரஸாகக் கத்த, மிருதுளாவின் மன உறுதி கொஞ்சம் கொஞ்சமாகத் தளரத் தொடங்கினாலும் ரன்வீரின் உதவியுடன் நீச்சல் குளத்தில் இருப்பதும் அவளுக்குப் பிடிக்கவில்லை, அவனது அண்மையை இப்போதைக்குத் தவிர்க்க நினைத்தவள், “நான் வரல!” என்று மீண்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டாள்…
தன் முயற்சி பலிக்காததால் ரன்வீரும் ஒரு மெல்லிய சலிப்போடு தன் தம்பி, தங்கையுடன் விளையாட ஆரம்பித்துவிட்டான், தண்ணீருக்குள் அவர்கள் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை…
”எங்களுக்கு நீச்சல் கத்து கொடுத்ததே ரன்வீர் அண்ணா தான் அண்ணி… நீங்களும் வந்தா உங்களுக்கும் சூப்பரா கத்து கொடுப்பாரு,” என்று வினோத் நீரில் டைவ் அடித்தபடி கூற, “அதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம்,” என்றாள் அவள் மழுப்பலாக…
”அட போங்க அண்ணி! இந்த சான்ஸ் எப்போ மறுபடி கிடைக்கும்னு நினைக்கிறீங்க” என்று சம்யுக்தா வற்புறுத்த, மிருதுளா மட்டும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்…
அந்த நேரம், ஸ்விம்மிங் பூல் ஓரத்தில் இருந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த ரன்வீரின் போன் விடாமல் ஒலிக்கத் தொடங்கிட.. “சம்யு! உன் அண்ணாவோட போன் ரிங் ஆகுது பாரு,” என்று மிருதுளா குரல் கொடுக்க, ரன்வீர் தண்ணீருக்குள்ளிருந்தே, “அதை என்கிட்டயே சொல்றதுக்கு என்ன?” என்று சொல்ல,.. அவள் அதற்குப் பதில் பேசாமல் மௌனமாக இருக்க, அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை…
இளையவர்கள் இருவரும் இவர்களின் இந்த மெல்லிய ஊடலைக் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள், எப்படியாவது அண்ணியை நீச்சல் குளத்தில் இறக்கிவிட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள், ஆனால், அதற்கான சரியான சந்தர்ப்பம் தான் அமையவில்லை.
வினோத் மெல்ல சம்யுக்தாவின் காதில், “அக்கா… பேசாம நான் மேலே போய் அண்ணியை ஸ்விம்மிங் பூல்ல தள்ளி விட்டுடட்டுமா?” என்று ரகசியமாகக் கேட்க, சம்யுக்தா கண்ணை உருட்டி, “அப்புறம் அண்ணன் உன்னை கட்டி வச்சு அடிப்பாரு, பரவாயில்லையா?” என்று சொல்ல,..”ஐயையோ! அப்போ வேண்டாம் சாமி,” என்று பின்வாங்கினான்…
”இரு, நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்,” என்று சம்யுக்தா ஒரு முடிவுக்கு வந்தவளாக, “அண்ணி… ஆழத்துக்கு வர வேண்டாம், அட்லீஸ்ட் இப்படி மேலே உட்கார்ந்து காலை தண்ணிக்குள்ள விட்டாவது உட்காருங்களேன், நாம பால் கேட்ச் போட்டு விளையாடலாம்,” என்றாள்…
மிருதுளா யோசிப்பதைப் பார்த்த சம்யுக்தா, அவள் மறுக்கும் முன்னே, “இப்போவும் மாட்டேன்னு சொன்னீங்கன்னா அப்புறம் நான் கோச்சிப்பேன், உங்ககிட்ட பேசவே மாட்டேன்!” என்று செல்லமாக மிரட்டிட, வேறு வழியின்றி, அந்த மிரட்டலுக்குப் பணிந்தவளாக, மிருதுளா மெல்லத் தன் சுடிதாரை சரி செய்துகொண்டு, நீச்சல் குளத்தின் விளிம்பில் அமர்ந்து தன் பாதங்களை ஜில்லிப்பான நீரினுள் விட்டாள். தண்ணீர் அவளது கணுக்கால்களைத் தீண்டிய போது ஒரு மெல்லிய சிலிர்ப்பு அவளுக்குள் பரவியது…
தண்ணீருக்குள் இருந்த ரன்வீர் அமைதியாக அவளை கவனித்தான், அவளது முகத்தில் தெரிந்த அந்த மெல்லிய பயம் கலந்த ரசனை அவனை ஏனோ ஈர்த்தது…
”இந்தாங்க அண்ணி… கேட்ச்!” என்று சம்யுக்தா பந்தை தூக்கிப் போட, விளையாட்டு சூடுபிடிக்கத் தொடங்கியது, ஆனால் அவள் மேலே அமர்ந்திருப்பதால் சரியாக அவர்களுடன் விளையாட முடியவில்லை, அவளது மனம் மெல்ல மெல்ல அந்த உற்சாகத்தில் கரையத் தொடங்கிட, குளிர்ந்த தண்ணீரும், அவர்களின் கள்ளமில்லாத சிரிப்பும் பயத்தை விட ஆசையை அதிகம் தூண்டியது…
அவள் சட்டென்று ஒரு முடிவெடுத்தவளாய், “சம்யு… நானும் உள்ளே வரேன்,” என்று மெல்லிய குரலில் சொல்ல, அவள் சொன்னதைக் கேட்டதும் சம்யுக்தாவிற்க்கும் வினோத்திற்க்கும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது…
“சூப்பர் அண்ணி! வாங்க வாங்க!” என்று சம்யுக்தா உற்சாகமாகக் கத்திக்கொண்டே ஓடி வந்து தன் கையை நீட்டிட… மிருதுளா ரன்வீரை ஒரு முறை ஏறிட்டவள், பின் சம்யுக்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, மிக மெதுவாக, ஒவ்வொரு அடியாக நீச்சல் குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கினாள், தண்ணீர் அவளது முழங்காலைத் தாண்டி இடுப்பு வரை வந்தபோது, ஒரு நிமிடம் பயத்தில் சம்யுக்தாவின் கையை இறுகப் பற்றிட.. ”பயப்படாதீங்க அண்ணி… நாங்க இருக்கோம்ல,” என்று வினோத் அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்று தைரியம் கொடுத்தான்.
முழுவதுமாக நீருக்குள் இறங்கியதும், அந்த ஜில்லிப்பு அவளுக்கு ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ரன்வீர் அவளுக்குச் சற்று தள்ளி நின்று, அவள் தண்ணீருக்குப் பழகுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
”இப்போ எப்படி இருக்கு அண்ணி?” என்று சம்யுக்தா கேட்க, “முதல்ல கொஞ்சம் பயமா இருந்தது சம்யு… ஆனா இப்போ ரொம்ப நல்லா இருக்கு,” என்று குழந்தைத்தனமான ஒரு சிரிப்போடு பதிலளித்தாள் மிருதுளா…
அவளது அந்தப் புன்னகையில் ரன்வீர் மொத்தமாகத் தன்னைத் தொலைத்தான், கோபமும் முறைப்புமாக இருந்தவள், இப்போது ஒரு சின்னப் பெண்ணைப் போலத் தண்ணீரில் கைகளால் அடித்து விளையாடுவதைப் பார்க்க அவனுக்கு அவ்வளவு அழகாக இருந்தது…
”வினோத்… பால் போடு!” என்று மிருதுளாவே உற்சாகமாகக் கேட்க, அந்த நீச்சல் குளம் இவர்களின் சிரிப்புச் சத்தத்தால் நிறையத் தொடங்கியது…
