Skip to content
Post Views: 2,134
அத்தியாயம் 4
தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்கும் காவல்நிலையங்களுக்கு முன்னறவிப்பு இன்றி பார்வையிட வந்து, காவல்நிலைய நடைமுறைகள் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று கவனிப்பது சாருகேசியின் வழக்கம். அப்படித்தான் இன்றும் ஒரு காவல்நிலையத்திற்கு வந்திருந்தான். வரும் வழியில் ஒரு கல்லூரியைக் கடக்கும் போது அவனுக்குள் தன்னால் பெருமூச்சு எழுந்தது.
அவனும், அவனுடைய லைட்ஹவுஸ் ம் கடைசியாக சந்தோஷித்து சுற்றித் திரிந்தது அந்த வளாகத்திற்குள் தான் என்பதால் அவனுக்கு எப்போதுமே அந்த இடம் ஸ்பெஷல் தான். ஒவ்வொரு முறை அதைக் கடக்கும் போதும், தங்களுக்கு இடையேயான ஒவ்வொரு நினைவு வரும் அவனுக்கு.
இன்று, நண்பனிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தன்னைச் சந்திக்க வந்த அமிர்தாவின் கரத்தைப் பிடித்து அவள் உள்ளங்கையில் தான் மென்மையாக முத்தமிட்டதும், அதில் அதிர்ந்து புறாமுட்டைக் கண்களை விரித்தவள் அடுத்த கணம் காளியாக மாறி தன் தலைமுடியைப் பிடித்து ஆட்டியதும், அதைப் பார்த்து தன் நண்பர்கள் பட்டாளம் கொல்லென்று சிரித்து வைத்ததும் நினைவு வர, நிஜத்திலும் சின்ன சிரிப்பு வந்தது சாருகேசியின் உதட்டில்.
Advertisement
“என்னோட லைட்ஹவுஸ்” என்று செல்லம் கொஞ்சியவன், அவள் இருக்கும் தன் இதயப்பகுதியை மென்மையிலும் மென்மையாக தட்டிவிட்டுக்கொண்டான். இப்போதும் அவள் கரம் தன் தலைமுடிக்குள் இருப்பது போல் தோன்ற ஸ்டைலாக அதை கோதிவிட்டு அவள் நினைவில் இருந்து வெளியே வந்தான்.
அதற்குள் அவன் வந்து சேர வேண்டிய காவல்நிலையம் வந்திருக்க, சிரிப்பைத் தொலைத்து இறுக்கத்தை முகத்தில் தாங்கியவன் அதை விட இறுக்கத்தோடு உள்ளே வந்தான். அந்தக் காவல்நிலைய எஸ்ஐ மீது இலஞ்சம் வாங்காமல் எந்த வழக்கையும் எடுத்துக்கொள்ள மறுப்பதாக புகார் வந்திருக்க, அதைப் பற்றி விசாரிக்க தான் திடீர் விஜயம் செய்திருந்தான்.
அப்படி வந்தவன், ஸ்டேஷன் உள்ளே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த அமிர்தாவைக் கண்டதும் பதறிப்போனான்.
Advertisement
“லைட்ஹவுஸ்” என்கிற அழைப்போடு அவன் அருகே செல்ல, பழக்கப்பட்ட குரலில் அனிச்சையாக அமிர்தாவின் தலை நிமிர்ந்தது.
Advertisement
“உங்களுக்குத் தெரிஞ்சவங்களா சார்?” அந்த ஸ்டேஷன் எஸ்ஐ கேட்க, “என்ன பிரச்சனை?” என அமிர்தாவிடம் நேரடியாக கேட்டான் சாருகேசி. எல்லாம் உன்னால் தான் என்னும் நினைப்போடு பல்லைக் கடித்தபடி வேறுபக்கம் திரும்பி அமர்ந்துகொண்டாள் அவள்.
“சரியான திமிர் பிடிச்ச பொண்ணு சார். கூட வேலை செய்யுற ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அப்ரோச் பண்ணி இருக்கார். பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அத்தனை பேர் பார்க்க கன்னத்தில் அடிச்சு அசிங்கப்படுத்தி இருக்காங்க. தட்டிக்கேட்க வந்தவங்ககிட்ட அந்த மனுஷன் இவங்ககிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்ததா பொய் சொல்லி இருக்காங்க.” என பொய்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டே சென்றான் எஸ்ஐ.
அவன் பேசபேச சாருகேசியின் உடல் விரைப்பாக மாறுவதை அமிர்தா மட்டும் தான் கவனித்தாள். உதவிக்கென்று யாரும் இல்லாமல் இருட்டும் வேளையில் தனியாக காவல்நிலையத்தில் மாட்டிக்கொண்ட தன்னை நினைத்து சற்று முன்னர் வரை கழிவிரக்கத்தில் தவித்தவளுக்கு, அபயம் என்கிற சொல்லைக் கேட்டு அருள் தர வந்த ஆபத்பாந்தவனாக தெரிந்தான் சாருகேசி.
Advertisement
எஸ்ஐ தன் புராணத்தை நிறுத்தவில்லை. எப்படியாவது அமிர்தா தவறானவள் என்கிற பிம்பத்தை சாருகேசியிடம் உணர்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கண்டதையும் பேசிக்கொண்டே போக, “ஷட் அப்.” என்று கத்தினான் சாருகேசி. அவன் கோபம் அங்கிருந்த அத்தனை பேருக்கும் பயத்தைக் கொடுத்தது என்றால் அமிர்தாவுக்கு மட்டும் சின்ன ஆறுதலைக் கொடுத்தது.
“என்ன நடந்ததுன்னு சொல்லு அமிர்தா.” சாருகேசி திடமாய் அவளிடம் கேட்க, “கூட வேலை செய்யும் ஒருத்தர், தபுதரன். ஒன்பது வயசில் குழந்தை இருக்கு. என்கிட்ட மறுமணத்துக்காக கேட்டார். விருப்பம் இல்லன்னு மென்மையா சொல்லிட்டு விலகத்தான் நினைச்சேன். அவன் பேசின பேச்சு ரொம்ப அநாகரிகமா இருந்தது. என்னை மீறி கையோங்கிட்டேன். கூட்டம் கூடவும் அந்த ஆள் தட்டை திருப்பிப் போட்டுட்டான். என் குடும்பத்து மேல ஊருக்குள்ள இருக்கிற நல்ல எண்ணம் உங்களுக்கே நல்லாத் தெரியும். என்னை யார் நம்புவாங்க. அதனால் தான் இங்க நிக்கிறேன்.” அவனைப் பார்த்தபடி கோர்வையாகச் சொல்லி முடித்தாள்.
“நான் அப்படி என்ன தப்பா பேசினேன்னு சொல்லச்சொல்லுங்க சார் பார்க்கலாம்.” என்றபடி வந்தான் அமிர்தாவுடன் பிரச்சனை செய்தவன். மான, ரோஷத்துக்கு அஞ்சுபவள் தான் பேசியதை வெளியே சொல்ல மாட்டாள் என அவன் உறுதியாக நினைத்திருக்க, அதை பொடிப்பொடியாக தகர்த்து எறிந்திருந்தாள் அமிர்தா.
சாருகேசியை அழுத்தமாகப் பார்த்தபடி ஒவ்வொரு சொற்களாக உதிர்த்தாள். “யாரோ முகம் தெரியாத மூணு பேர் பலவந்தப்படுத்தியதை ஏத்துக்க முடியாம தான் உன் புருஷன் உன்னை விட்டுப் போயிட்டானாமே. குழந்தைங்க கூட அவனுக்குப் பிறந்தது இல்லன்னு சந்தேகப்பட்டு வேண்டாம் னு சொன்னானாமே. எனக்கு அவன் அளவுக்கு குறுகிய புத்தி எல்லாம் கிடையாது. எனக்கும் ஒரு குழந்தை இருக்கு. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. மூணு குழந்தைகளையும் ஒரே மாதிரி வளர்க்கலாம்.
அம்மா எனக்கு கல்யாணம் ஆகாத பொண்ணை தான் பார்ப்பேன்னு உறுதியா இருக்காங்க. ஆனா எனக்கு கைக்குழந்தையோட இருக்கிற பொண்ணுன்னா இஷ்டம் கொஞ்சம் அதிகம் னு சொன்னான். அதான் அடிச்சேன்.” அமிர்தா சொல்லி முடித்த நொடி, சாருகேசி அடித்த அடியில் கீழே விழுந்திருந்தான் அவன். அத்தோடு அவனை விடவில்லை சாருகேசி. பூட்ஸ் அணிந்த தன் காலால் மிதிமிதியென மிதிக்க, ஒருவித குரூரத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்தாள் அமிர்தா.
“சார்” என பதறிக்கொண்டு வந்து தடுத்தான் எஸ்ஐ. “இங்க ஒரு லேடி போலீஸ் கூட கிடையாது. அப்புறம் எப்படி இவங்களை இங்க கூட்டிட்டு வந்த?” அப்பட்டமான மிரட்டல் தொணியில் சாருகேசி கேட்டது உயிர்வரை நடுக்கத்தைக் கொடுத்தாலும்,
“பொண்ணுங்க தப்பு பண்ணா கண்டிக்கிறதுக்காக ஸ்டேஷன் வரவழைச்சு, அவங்களோட அப்பா அம்மா இல்ல கார்டியன் கூட அனுப்பி வைக்கிறது வழக்கம் தானே சார். அப்படி தான் செஞ்சேன். இங்க கூட அவங்க ஆட்டோவில் தான் வந்தாங்க.” முயன்று திடமாக தன்னைத் தானே காட்டிக்கொண்டு சொன்னான் எஸ்ஐ.
“கண்டிக்க கூட்டிட்டு வந்தியா? இவங்ககிட்ட விசாரிச்சியா? இவங்க டீடைல்ஸ் எல்லாம் கேட்டு வாங்குனியா?” என்க, எச்சில் விழுங்கினான் எஸ்ஐ.
“ஒரு வார்த்தை இவங்களை விசாரிச்சு இருந்தாலும், இவங்க யாரு, இவங்களுக்கு நான் யாருன்னு தெரிய வந்திருக்கும். ஆனா இவங்களை நீ விசாரிக்கவே இல்ல.” என்றவன் அமிர்தா பக்கம் திரும்பி, “எத்தனை மணிக்கு இங்க வந்த?” என்க, “மூணு மணி நேரத்துக்கும் மேல ஆகுது.” கடுப்போடு சொன்னாள் அவள்.
“ராஸ்கல் என்னடா உன் திட்டம்?” என சாருகேசி அவன் யூனிபார்ஃம் காலரைப் பிடிக்க, “திட்டம் எல்லாம் போடல சார். இவங்களுக்குன்னு யாரும் இல்ல, இருட்டும் நேரம் வரை இங்க வைச்சிருந்து, அப்புறம் கண்டிச்சு அனுப்பி வைச்சா, அவங்க மனசில் பயம் வரும். அதை சாதமாகப் பயன்படுத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சிடுவேன்னு கம்ப்ளைண்ட் கொடுத்தவன் சொன்னான் சார். ஒரு பொண்ணுக்கு மறுவாழ்க்கை கிடைக்குமேன்னு நல்ல எண்ணத்தில் தான் செஞ்சேன்.” என்றவனை கொலைவெறிப்பார்வை பார்த்தான் சாருகேசி.
“நல்ல எண்ணம் உனக்கா? இதை நான் நம்பணுமா? உன்மேல ஏகப்பட்ட இலஞ்சப் புகார் வந்திருக்கு. அதோட இதுவும் ஒன்னு. வைச்சுக்கிறேன் உன்னை.” என்றவன் எஸ்ஐ யை விட்டுவிட்டு, அமிர்தாவிடம் வம்பிழுத்தவனிடம் சென்றான்.
“சார், நீங்க தான் அவங்க புருஷன்னு எனக்குத் தெரியாது சார். ஏதோ ஆசையில் தப்பா பேசிட்டேன். மத்தபடி நான் நல்லவன் தான் சார்.’’ வேகமாக தானே ஒப்புக்கொண்டான் அவன்.
“ஆண் துணை இல்லாத ஒரு பொண்ணை உன் வசதிக்கு இழுக்க இவ்வளவு திட்டம் போட்ட நீ நல்லவனா?” என்க, வேகமாக அமிர்தா பக்கம் வந்தவன், “மேடம் இனிமே நீங்க இருக்கிற பக்கமே நான் வரமாட்டேன். இந்த ஒருமுறை என்னை மன்னிச்சுவிடச் சொல்லுங்க மேடம்.” கைகூப்பி கெஞ்சினான்.
எரிமலை வெடித்து வெளிவரும் லாவாவின் வேகத்தில் கோப தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உள்ளங்கையை இறுக்கி அதைக் கட்டுப்படுத்தியவள், கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, “என்மேல பொய்யா குற்றம் சுமத்தினதை ஒத்துக்கிட்டு, நிஜத்தில் என்ன நடந்ததுன்னு எழுதி, என்கிட்ட பரஸ்பர மன்னிப்பு கேட்கிறதா கையெழுத்துப் போட்டுக்கொடுத்துட்டு கிளம்பு.” என்றாள்.
அவன் பயத்தோடு சாருகேசியைப் பார்க்க, “மேடம் சொல்ற மாதிரி செய்.” என்றவன் அமிர்தாவைப் பார்க்க, அவள் திறமையாக அவன் பக்கம் திரும்பாமலே இருந்தாள்.
சில நிமிடங்களில் அமிர்தா கேட்டுக்கொண்டது போல் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தான் பிரச்சனை செய்தவன். அதை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்தவள், யாரிடமும் அனுமதி பெறாமல் அந்த காவல்நிலையத்தை விட்டு வேகமாக வெளியேறினாள். அவள் செய்கையில் முளைவிடப்பார்த்த சின்ன புன்னகையைக் கட்டுப்படுத்தியவன், அவள் பாதையை மறைத்தான்.
“அடிக்கடி என் பாதையில் குறுக்க வரீங்க. உங்களையும் ஒரு மன்னிப்பு கடிதம் எழுத வைச்சா தான் சரியா வரும் போல.” கோபமாகச் சொன்னாள்.
“நீ என்னை மன்னிப்பன்னா ஒரு லெட்டர் என்ன? ஓராயிரம் லெட்டர் கூட எழுதி தரேன்.” என்றான். அவன் சொன்ன தொணியே செய்வான் என்பதைச் சொல்ல, “ஆயிரம் என்ன கோடிக்கணக்கில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தாலும் நீங்க செஞ்ச பாவத்துக்கு மன்னிப்பும் கிடைக்காது, விமோச்சனமும் கிடையாது.” வெடுக்கென்று சொன்னாள்.
அதுவரை அவன் முகத்தில் இருந்த இளக்கம் எங்கோ போய் இருக்க, “சரி நீ என்னை மன்னிக்க வேண்டாம். என்னோட வாழவும் வேண்டாம். வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ.” சின்னக் குரலில் சொன்னவனை நம்பாமல் பார்த்தாள்.
“பண்ண தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கிறது சரி. ஆனா எந்த தப்பும் செய்யாத நீ எதுக்காக தனியாக் கிடந்து கஷ்டப்படணும். உறுதுணையா நிக்க ஆள் இல்லாததால் தானே கண்டவனும் மிஸ் யூஸ் பண்ண நினைக்கிறான். உன் பக்கத்தில் பலமான ஆள் இருந்தா யாருக்காச்சும் இந்த நினைப்பு வருமா?” என்றான்.
“உருகி உருகி காதலிச்சு, எல்லாத்துக்கும் நானாச்சுன்னு தைரியம் கொடுத்து கூட இருந்தவங்களே சமயத்தில் சுயலாபத்துக்காக புதைகுழியில் தள்ளும் போது, முன்ன பின்ன தெரியாதவனை எப்படி நம்புறது.” என்கிற பதிலில், உன்னைத் தாண்டிச் செல்வது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் ஆண்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லாததால் தான் தனித்து இருக்கிறேன் என்பதை அவள் சொல்லாமல் சொல்ல,
“நம்ம கூட படிச்ச சாரங்கன் தெரியும் தானே. சமீபத்தில் தான் அவனோட மனைவி பிரசவத்தில் இறந்து போனாங்க. குழந்தையை பார்த்துக்க முடியாம திண்டாடுறான். உனக்கு ஓகேன்னா சொல்லு. அவன்கிட்ட பேசுறேன். என்னால் முடியாத சில விஷயங்கள் அவன்கிட்ட உனக்குக் கிடைக்கலாம்.” எங்கோ பார்த்தபடி சொன்னான்.
குழந்தைகளைப் பற்றி பேசுகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள் அமிர்தா. இதைச் சொல்வதற்கு அவன் எத்தனை சிரமப்பட்டிருப்பான் என்பது அவளுக்கே தெரியும். செய்த செயல்களுக்கு அவன் படும் துயரம் போதவில்லை என்று தோன்ற, “அவன் நம்பர் என்கிட்ட இருக்கு. நானே பேசிக்கிறேன்.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
யோசனை சொன்னது அவன் தான் என்றாலும், அதை அத்தனை விரைவில் அவள் ஏற்றுக்கொள்வாள் என்று அவன் யூகித்திருக்கவில்லை. அவளின் நலனை நினைத்து பயந்த மனதே, இனியாயினும் நிம்மதிகொள் எனத் தன் மனதை மிரட்டிப் பார்க்க, அவள் இல்லாமல் உன் நலம் என்ன ஆகும் எனக் கேள்வி கேட்டு அவனைத் தவிக்க விட்டது மனசாட்சி.
error: Content is protected !!