Skip to content
Post Views: 1,915
அத்தியாயம் 5
ஊரெங்கும் தேர்தல் அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்தது. அன்று காலை முதலே சாருகேசிக்கு வேலை அதிகம் இருந்தது. விடிந்தும் விடியாத பொழுதிலேயே வீட்டில் இருந்து கிளம்பியவன் ஓட்டுப்பதிவு முடிந்து வாக்கு மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து விட்டு, இரவு பத்து மணி அளவில் சோர்வாக வீடு வந்து சேர்ந்தான்.
உணவு மேஜையில் அவனுக்காக உணவு சூடாகக் காத்திருந்தது. ஆனால் அருகே இருந்து பறிமாற ஆள் இல்லை. அதைக் குறித்து பெரும்பாலும் அவன் கவலைப்பட்டது இல்லை என்றாலும், இன்று அந்த தனிமை அவனை மிகவும் வாட்டியது. பசிக்கும் வயிற்றுக்கு உணவு கொடுத்தால் தான் அது தன்னை நிம்மதியாக உறங்கவிடும் என்பது புரிய தாய் செய்து வைத்த சாப்பாத்திகளையும் குருமாவையும் தானே எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
அமிர்தாவிடம் சாரங்கனைப் பற்றி பேசிவிட்டு வந்து நான்கு நாட்கள் ஆகி இருந்தது. இந்த நான்கு நாட்களில் சாரங்கனுக்கு அழைத்து அவள் ஏதாவது பேசினாளா எனக் கேட்கலாமா என நாற்பது முறைக்கு மேல் நினைத்துவிட்டான். ஆனால் அவன் சொல்லும் பதிலைக் கேட்கும் அளவு உனக்குத் தைரியம் இருக்கிறதா எனக் கேட்டு அவனைத் மேற்க்கொண்டு செயலாற்ற விடாமல் தடுத்துவிட்டது மனசாட்சி. இப்போதும் அந்த நினைவில் பெருமூச்சுவிட்டவன் பாதியில் எழுந்துகொள்ளப் பார்க்க, அவன் தோளில் படிந்த அழுத்தமான கரத்தின் விசையால் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான் சாருகேசி.
Advertisement
திரும்பிப் பார்க்காமலே யாரென்னு உணர்ந்துகொண்டவனுக்கு உணர்வுகளின் தாக்கத்தால் கண்ணீர் வரும் போல இருந்தது. அண்ணா என்கிற அழைப்போடு எச்சில் கையோடு தனக்கு முன் நின்றவனை இடுப்போடு அணைத்துக்கொண்டான்.
“வெளியே புலி வீட்டுக்குள்ள எலியா? என்னோட வொயிட் குர்தாவுக்கு சாயம் ஏத்தினது போதும் கையை எடுடா போலீஸ்கார்.” என்றான் மோகனன்.
“நீ என்கிட்ட பேசி ஒரு வருஷம் ஆகுது தெரியுமா?” கரகரத்த குரலில் கேசி கேட்க, “இத்தனை சீக்கிரம் பேசிட்டேனேன்னு எனக்கும் வருத்தமா தான் இருக்கு. ஆனா என்ன பண்றது, அன்பு ஒரு மானம் கெட்டது.” சோமாகச் சொன்னபடி தானும் தம்பியின் அருகே இன்னொரு நாற்காலியில் அமர்ந்தான் மோகனன்.
Advertisement
சாருகேசி அண்ணனின் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, “என்னைப் பார்க்கிற இந்த பரிதாபப் பார்வையை என் பொண்ணு அமிர்தாகிட்ட காட்டி இருந்தாலுச்சும் அவ மனசு கொஞ்சம் இளகி இருக்கும்.” என்றபடி தனக்கும் சாப்பிட உணவை எடுத்து வைத்தான்.
Advertisement
“நான் வைக்கிறேன்.” என வேகமாக அந்த செயலை தான் ஏற்றுக்கொண்டான் சாருகேசி.
மோகனன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, “நிஜமாவே உன் கோபம் போயிடுச்சா அண்ணா? என்னையும் அண்ணியையும் மன்னிச்சிட்டியா?” ஒருவித படபடப்போடு கேட்டான் கேசி. தந்தையின் முகத்தை கூட பார்த்திடாத கேசிக்கு தமையனே தந்தை. அவனுக்காக கொலையும் செய்யலாம் என்கிற நினைப்பில் இருந்தவன், கடைசியில் கொலையை விட பாதக செயலைச் செய்து காட்டி, தன் அண்ணனுக்குத் தான் சிறந்த தம்பி என்று காட்டி இருந்தான்.
தம்பியின் எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வி காதில் விழ, ஒரு பார்வை பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை மோகனன். “என்னைக் கூட நீ மன்னிக்க வேண்டாம். ஆனா அண்ணி பாவம். அவங்களையாச்சும் மன்னச்சிடு.” கெஞ்சினான் கேசி. இந்த முறை திரும்பிக் கூடப் பார்க்காமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தான் மூத்தவன்.
Advertisement
இதற்கு மேலும் அண்ணனிடம் பேசினால் அவன் கோபத்தை உணவில் காட்ட வாய்ப்பு இருக்கிறது என்று அமைதியாக தானும் சாப்பிட ஆரம்பித்தான் இளையவன். அவன் சாப்பிட சாப்பிட ஒவ்வொரு சப்பாத்தியாக வைத்துக்கொண்டிருந்தான் மோகனன். ஒரு கட்டத்தில் பசியே முற்றிலுமாக தீர்ந்து போய் இருந்தாலும் அண்ணன் வைக்கிறான் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தான் தம்பி.
அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையிலான பிணைப்பை தங்கள் அறை வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் கீரவாணி. கலிகால ராமன், இலக்குவனுக்கு சான்றாக இருந்த சகோதரர்கள் இவ்வளவு நாட்களாக தனித்தனி கரையாக இருப்பதற்கு அவளே காரணம் என்பதில் அவளுக்குள் ஒரு உருத்தல் இருந்துகொண்டே தான் இருந்தது. அது இன்று தீர்ந்ததில் சற்றே நிம்மதியானவள் சந்தோஷ பெருமூச்சோடு தங்கள் அறைக்குள் நுழைந்து தனக்காக தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
ஆயிரம் தான் கலகலப்பாக பேசி சிரித்தாலும், நடப்பது எதுவாக இருந்தாலும் அது தன்னைப் பாதிக்காது என்று கெத்தாக காட்டிக்கொண்டாலும், அவள் தாங்க முடியாத வலியில் சிக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை யாரும் அறியார். அறிந்த அவள் கணவனும் அதைத் தீர்க்க முன்வரவில்லை என்பது தான் வேதனையான விஷயமே.
உணவை முடித்துக்கொண்ட அண்ணன் தம்பி இருவரும் அவரவர் அறையை நோக்கி நடக்கத் துவங்க, “அண்ணியைப் பத்தி நான் சொன்னதைக் கொஞ்சம் யோசிக்கலாமே அண்ணா.” தனக்குள் இருந்த ஏக்கம் அனைத்தையும் ஒன்று திரட்டி வார்த்தையில் பொதிந்து கேட்டான் கேசி.
“முதலில் என் பொண்ணு அமிர்தாவை, உன் வாழ்க்கைக்கும் இந்த வீட்டுக்கும் வெளிச்சம் கொடுக்க வந்த உன்னோட லைட்ஹவுஸை மரியாதையோட இந்த வீட்டுக்குள்ள எப்படி கூட்டிட்டு வரதுன்னு யோசி. அதுக்கு பிறகு மத்ததைப் பார்த்துக்கலாம்.” என்க, “குழந்தைகளை விட்டுக்கொடுக்க அவ தயார் இல்ல. குழந்தைங்களை ஏத்துக்க என்னால் முடியாது. எல்லாத்துக்கும் மேல.” என்று ஆரம்பித்து முடிக்க முடியாமல் பெருமூச்சுவிட, அவன் சொல்ல வந்து நிறுத்தியது புரிந்த மோகனன் தம்பியை கடுமையாக முறைத்தான்.
“முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அதைக் கடந்து வரலாமே அண்ணா.” கெஞ்சுதலாகக் கேட்டான். கண்களை அழுத்தமாக மூடித்திறந்த மோகனன், “குழந்தைங்களை ஏத்துக்கிற அளவுக்கு உனக்கு பெரிய மனசு இல்லையா? இல்ல எல்லோரையும் மாதிரி நீயும் அந்தக் குழந்தைங்க இந்த வீட்டு வாரிசு இல்லன்னு நம்புறியா?” என்க, “அண்ணா ப்ளீஸ், இப்படியெல்லாம் பேசுறதுக்குப் பதில் என்னைக்கொன்னுடு, சந்தோஷமா செத்துப்போயிடுவேன்.” சொன்ன இளையவனின் வார்த்தையில் ஆரம்பித்து அவனுக்குள் ஓடும் இரத்தம் வரை குற்றவுணர்ச்சி கொட்டிக்கிடப்பதை மூத்தவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
“அமிர்தா வேணும் னு உனக்கு ஆசையில்லையா?” மோகனன் கேட்க, “ஆசை தானே, அது இருக்கு நட்சத்திரங்களோட எண்ணிக்கை அளவில். ஆனா ஆசையை துரத்திப் பிடிக்க வழியில்லையே.” இருட்டிக்கிடந்த வானத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னான். ஆசைக்கும், இயலாமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு போராடும் போராட்டத்தை தன் கண்களில் காட்டினான் அண்ணனுக்கு.
“இந்த வீட்டில் தானே அமிர்தாவால் வாழ முடியாது. டிரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊரில் நீயும் அவளும் குழந்தைங்களும் ஒன்னா வாழுறதுக்கு அவளுக்கு விருப்பமான்னு கேட்டுப்பாரேன்.” மூத்தவனாய் யோசனை சொல்ல, “எனக்கு எல்லாமே நீங்க தானேண்ணா. உங்களையும் அம்மாவையும் விட்டுட்டு நான் தனியா என் வாழ்க்கையை எப்படி பார்த்துட்டு போவேன். கஷ்டமோ நஷ்டமோ எனக்கு எல்லாம் உங்களோட தான்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
“இது தப்பு கேசி. அவளுக்காக எதுவுமே செய்யாத உனக்காக அவ பல தியாகங்கள் செய்யணும் னு எதிர்பார்க்கிறது என்ன காதல். நான், அம்மா எல்லாம் உன் வாழ்க்கையோட ஒரு சின்ன பாகம் தான். ஆனா அவ உன் வாழ்க்கையின் சரிபாதி. எங்களுக்காக யோசிச்சு அவளை விட்டுடாத.
உன் இடத்தில் நான் இருந்திருந்தா, சரிதான் போங்கடா, உங்க இரத்ததை பகிர்ந்துக்கிட்டதுக்கு என் அளவைத் தாண்டியும் பல காரியங்கள் செஞ்சுட்டேன். இனிமே எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம் னு எப்பவோ மொத்தமா போய் இருப்பேன்.” என்ற தமையனைப் பார்த்து சிரித்த கேசி,
“நீ அப்படியானவன் இல்லண்ணா. உனக்கு சுயநலமா யோசிக்க வராது. அப்படி நீ சுயநலமானவனா இருந்திருந்தா எதுக்காக கீரவாணி அண்ணியைக் கஷ்டப்படுத்தப் போற.” என்ற தம்பியை ஒருபார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றான் மோகனன்.
விழித்தே படுத்திருந்த கீரவாணி கணவனை உற்று நோக்கினாள். அவள் பார்வை தன்னைப் பாதிக்காதது போல் காட்டிக்கொண்டு மெத்தையில் படுத்து கண்ணை மூடிக்கொண்டான் மோகனன்.
அறைக்கு வந்த சாருகேசி தன் காக்கி உடையைக் களைந்து குளித்து இலகுவான உடைக்கு மாறியவன், இப்போதைக்கு இந்த உலகத்திலேயே தனக்கு சந்தோஷம் கொடுக்கும் ஒரே இடமான அந்த பீரோவைத் திறந்து பார்த்தான்.
அது யாவும் அவனுக்கும், அமிர்தாவுக்கும் இடையேயான காதல் பொக்கிஷங்கள். காதல் சொல்லிக்கொண்ட பின்னர் முதன்முதலாக எடுத்துக்கொண்ட புகைப்படம், தனக்காக அவள் எடுத்துக்கொடுத்த அளவு பத்தாத டீசர்ட், அவள் லிப்ஸ்டிக் கறை படிந்த தன் கைக்குட்டை, கிளிப், வாட்ச், சில காதல் கடிதங்கள், ஆகியவற்றோடு ஒரு துப்பட்டா கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தவனுக்கு, அதை அணிந்துகொண்டு அவள் இந்த வீட்டிற்கு வந்த நாள் நினைவு வந்தது.
“கேசி, அப்பா, அம்மா செத்துப்போயிட்டாங்க. அவங்களை என்ன செய்யுறதுன்னு கூட எனக்குத் தெரியல. எனக்கு எல்லாமே நீ மட்டும் தானே. என் கூட வாயேன்.” உச்சகட்ட பரிதவிப்பில் அவள் நின்றதும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் நினைவு வர பதறிப்போய் அந்த துப்பட்டாவை பீரோவுக்குள் வைத்து அடைத்தவன், எதையோ நினைத்து பயந்தது போல் மெத்தையில் வந்து படுத்து போர்வையால் தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டான்.
போர்வைக்குள்ளே அவனுக்கு மிக அருகே படுத்திருந்த அமிர்தவர்ஷினி, “இன்னும் எத்தனை நாள் உண்மையை பார்த்து பயந்து ஓடி ஒளியப் போற. ஒன்னு உண்மையை நேருக்கு நேரா சந்திச்சு பழகு. இல்லையா, என்னை மொத்தமா மறந்திடு.” என்று சொல்வது போல் தெரிய, கையை மட்டும் வெளியே நீட்டி பக்கத்தில் இருந்த டிராவுக்குள் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்தவன் தண்ணீரின் உதவி கூட இல்லாமல் விழுங்கினான். அதன் பிறகு வெகுநேரம் அவன் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது.
இன்னொரு பக்கத்தில் தன் வீட்டில் தன் அறையில் உறங்கிக்கொண்டிருந்த அமிர்தா, “நிம்மதியா தூங்கு கேசி.” என தன்னைப் போல் உளற, அதை இங்கே உணர்ந்தான் சாருகேசி. தன்னவள் தன்அருகே அமர்ந்து தலைகோதிவிடுவது போல் போன்ற சுகமான கற்பனையில் சிறிது சிறிதாக உறக்கத்திற்குள் நுழைந்தான்.
அடுத்த நாள் காலையில், தன் அலுவலகத்தில் வழக்கம் போல் உப்பு சப்பு இல்லாத வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த அமிர்தாவுக்கு மோகனன் அவளைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி தெரியவர, பெரும் அதிர்வோடு சேர்த்து அதிகபட்ச கோபமும் வந்தது.
கோபமாக வெளியே வந்தவள், “எப்பவும் என்னைப் பார்த்தால் ஓடி ஒளியுறதை தானே வழக்கமா வைச்சிருப்பீங்க. இப்ப என்ன புதுசா நீங்களே என்னைத் தேடி வந்து இருக்கீங்க. கண்ணாம்மூச்சி விளையாட்டு போரடிச்சு போய், ஆடு புலி ஆட்டம் ஆடலாம். அதில் எப்படி ஆட்டை ஏமாத்தி புலிகிட்ட கொண்டு போய் சேர்க்கிறதுன்னு யோசனையில் வந்து இருக்கீங்களா?” படு நக்கலாகக் கேட்டாள்.
“என் பொண்ணு ஆடா, அவ புலியாச்சே.” சின்ன சிரிப்போடு மோகனன் சொல்ல, அவனின் என் பொண்ணு என்கிற வார்த்தையில் வெயிலில் வைத்த பனிக்கூழைப் போல் மொத்தமாக உருகிப்போனாள் அமிர்தா.
ஒரு காலகட்டம் வரை அவள் தந்தையை விட, அவள் உயிராய் காதலித்தவனை விட அதிகம் மரியாதைக்குரிய நபராக இருந்தவன் மோகனன். ஒரு நாள் கூத்து அவர்கள் அனைவரின் தலையெழுத்தையும் மாற்றி எழுதி இருக்க, அனைத்திற்கும் இவனே காரணகர்த்தா என்றாலும், இவனை ஒற்றை சொல் கடிந்து சொல்ல முடியாமல் நிற்பதை நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டாள் பெண்.
“என் பொண்ணு இன்னும் என்னை முழுசா வெறுத்திடல அப்படித்தானே.” என்க, திரும்பி நின்று வெதும்பினாள் அமிர்தா.
“உன் எதிர்காலத்தைப் பத்தி என்னடா யோசிச்சு வைச்சிருக்க?” ஆதரவாக அவள் தலை தடவிக் கேட்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ஆறுதல் தேடும் வேகம் வந்தாலும், சின்ன தலையசைப்பில் தன் உணர்வுகள் அனைத்தையும் உதறித் தள்ளியவள், “உங்க தம்பிக்கு கல்யாண ஆசை வந்தா, உங்க பாரம்பரிய குடும்பத்துக்கு வாக்கப்பட வரிசையில் காத்திருக்கும் பொண்ணுங்களில் யாரையாவது பிடிச்சு கட்டி வைக்க வேண்டியது தானே. அவ்வளவு ஏன் உங்களோட மனைவி கீரவாணிக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க தானே. அவங்க உங்க தம்பிக்கும் உங்க குடும்பத்துக்கும் சரியா வருவாங்க. கல்யாணம் பண்ணி வைங்க. சொந்தமும் விட்டுப்போகாது, சொத்தும் விட்டுப்போகாது. விஷத்துக்கு விஷம் சரியா இருக்கும்.” பற்களைக் கடித்தபடி சொன்னாள்.
“என் பொண்ணு நடந்த எதையும் மறக்கல போல.” மோகனன் சோகமாகக் கேட்க, “ஏன் மறக்கணும், எதுக்கு மறக்கணும். எதையும் நான் மறக்கல. மறக்கவும் மாட்டேன். என் வாழ்நாள் முழுக்க இதை அப்படியே மனசில் வைச்சிருப்பேன். சின்ன கஷ்டத்தைப் பார்த்து பயந்து ஒளிஞ்ச எனக்கு, இன்னைக்கு பல கஷ்டங்களை அசால்ட்டா தாங்கிக்கிற பக்குவத்தைக் கொடுத்தது இந்த கொடூரமான நினைவுகள் தான். அதனால் இதை மறக்க மாட்டேன்.” ஆவேசமாகப் பேசினாள்.
அவளை இழுத்து தன் மார்போடு மோகனன் பொத்திக்கொள்ள, பல நாள் சங்கடங்கள் தீரும் அளவு அழ ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷினி.
error: Content is protected !!