Skip to content
Post Views: 3,059
அத்தியாயம் 6
தன்னை விட பத்து வயது மட்டுமே சிறிய பெண். தன் முப்பதாம் வயதில் தனக்கு முதன்முதலாக அறிமுகமானவளாக இருந்தாலும், பார்த்த நொடியில் இருந்து தான் பெறாத மகளாகத் தான் அமிர்தாவைப் பார்த்துக்கொண்டிருந்தான் மோகனன். தம்பியை தந்தை ஸ்தானத்தில் இருந்து வளர்த்ததாலோ என்னவோ, அவனின் காதலியாக அறிமுகமான அமிர்தாவும் அவனுக்கு மகளைப் போலத்தான் தெரிந்தாள்.
அவனுக்காவது தம்பியின் மீதான பாசம் அப்படியே அவன் காதலியின் மீது வந்தது என்று சொல்லலாம். ஆனால் அமிர்தாவுக்கு மோகனன் மீது வந்த பாசத்திற்கு காரணமோ, காரியமோ கிடையாது. காட்டுச்செடி போல் பல சிரமங்களுக்கு நடுவில் தன்னால் முளைத்து மிக வேகமாக வளர்ந்து, மிக குறுகிய காலகட்டத்தில் அவனைத் தன் தந்தைக்கு இணையாகப் பார்க்கும் அளவு வந்திருந்தாள்.
விவரம் தெரியும் முன்பே பக்கவாதத்தில் விழுந்து பேசும் திறனை இழந்திருந்த தந்தைக்கு அவள் தான் பணிவிடைகள் செய்திருக்கிறாளே தவிர, அவளுக்கு திரும்ப தந்தையின் அன்பு கிடைத்ததே இல்லை. அந்தக் குறையைப் போக்கியது மோகனன் தான்.
Advertisement
அமிர்தாவுக்கு தன்னை விட தன் அண்ணன் மீது தான் அன்பு அதிகம் என்பதில் கேசிக்கு சற்றே பொறாமை உணர்வு எப்போதும் உண்டு. ஆனால் அந்த பொறாமையைத் தாண்டி அவர்கள் உறவை ரசிக்க அவன் தவறியதே இல்லை.
“முப்பது வயசில் அப்பாவும், இருபது வயசில் பொண்ணும் கின்னஸ் சாதனை தான் போ.” என கலாய்த்தாலும் தனக்கு விருப்பமான நபர் மீது தன்னவளுக்கு இருக்கும் கட்டுக்கடங்காத அன்பை நினைத்து பெருமை தான் படுவான் கேசி.
மோகனனுக்காக, அவன் மீது இருந்த பெரும் மதிப்பிற்காக அமிர்தா செய்தது ஏராளம். ஆனால் அது அனைத்தையும் ஒரு நொடியில் சுக்குநூறாக்கி அவளோடு சேர்த்து அவளின் குடும்ப நிம்மதியையும் மொத்தமாக துடைத்து எறிந்திருந்தனர் அவனின் தம்பியும், தாய்மாமனும். மோகன் தவறு செய்யவில்லை என்றாலும் நடந்த அனைத்து தவறும் அவனைக் கொண்டு தான் நடந்தது என்பதில் அமிர்தாவுக்கு அவனை முழுதாக ஏற்கவும் முடியாத, விலகவும் முடியாத நிலை.
Advertisement
அழுது அழுது முகம் சிவந்து போய் இருந்தவளை தன்னை விட்டு விலக்கிய மோகனன் தன் கைக்குட்டை எடுத்து முகத்தை துடைத்துவிட்டான். அமைதியாக நின்று அவன் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அமிர்தா.
Advertisement
“என் முகத்தில் என் தம்பி தெரியுறானாக்கும்?” சின்ன சிரிப்போடு அவன் கேட்க, “தெரிஞ்சாலும் தான் என்ன பிரயோஜனம். ரசிக்கும் மனசு எனக்கு இல்லையே.” என்றவளின் வார்த்தையில் இருந்த விரக்தி ஒரு சில நொடிகள் மோகனனை அமைதியாக இருக்க வைத்து பின் தொடர வைத்தது.
“என்ன முடிவு பண்ணி இருக்க?” என்று கேட்க, அந்தக் கேள்வியில் அதுவரை அவளைச் சுற்றி இருந்த மாயவலை அறுந்தது போன்ற உணர்வில் வேகமாக மோகனை விட்டு விலகி நின்றவள், “என்னோட எந்த முடிவும் உங்களையோ உங்க குடும்பத்தையோ பாதிக்கப் போறது கிடையாது. அதனால் நான் என்ன முடிவு எடுத்தாலும் அதைப் பத்தின கவலை உங்களுக்குத் தேவை இல்லை.” என்றாள்.
“என்னோட பொண்ணு, அவளோட இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவா பேசுறாளாக்கும்.” மிக சாதாரணமாக குழந்தைகளைப் பற்றி மோகனன் கேட்ட தொணியில் அமிர்தாவுக்கு வெடித்து வந்தது அழுகை.
Advertisement
“அவங்க பொறந்து எட்டு மாசம் ஆகுது. இப்ப தான் அவங்களைப் பத்தி விசாரிக்கத் தோணுதா?” நெஞ்சின் அடிஆழத்தில் இருந்து கேவலோடு கேட்டாள்.
அதற்கு கொஞ்சமும் குறையாத உணர்வுக் கலவையில், “எனக்கு அவங்களைப் பார்க்கணும். போட்டோ இருந்தா கொஞ்சம் காட்டுறியா?” கண்கள் விரிய அத்தனை ஆசையாய் கேட்டான் மோகனன். இத்தனை நாட்கள் இல்லாமல் அவன் திடீர் விஜயத்திற்கான காரணம் புரிந்ததும் கோபத்திற்கு பதில் இரக்கமே வந்தது அமிர்தாவுக்கு.
“நான் அவங்களைப் பார்க்கணும் அமிர்தா.” என்றவனின் குரலில் இப்போது அழுத்தம் குடிபெயர்ந்திருந்தது.
“வேண்டாம், நீங்க அவங்களைப் பார்க்க வேண்டாம். நடந்தது எல்லாம் நல்லதோ கெட்டதோ ஆனா எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு. அது திரும்ப ஆரம்பிக்கிறதில் எனக்கு விருப்பம் இல்ல. அவங்க என்னோட பசங்க. என்னோட பசங்க மட்டும் தான்.
அவங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எதிர்காலத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவங்களை வாரிசுன்னு உரிமை கொண்டாட மாட்டோம் னு எழுதிக்கொடுத்திருக்காங்க.” என்று அமிர்தா நிறுத்தும் முன்னர், “என் பொறுமையை சோதிக்காம அவங்க போட்டோவைக் காட்டு அமிர்தா. எனக்கு இன்னைக்கு அவங்களைப் பார்த்தே ஆகனும்.” கோபமாகச் சொன்னான் மோகனன்.
அவனைப் பார்த்து இடவலமாகத் தலையசைத்தவள், அவனை விட்டு சற்று தொலைவு சென்று அலைபேசியை எடுத்தாள். கிட்டத்தட்ட பதினைந்து மாதங்களுக்கு முன்பு கோபத்தில் சாருகேசியின் எண்ணையும், பல வருடங்களாக அவனோடு பேசிய பேச்சுகள், எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என அனைத்தையும் அழித்திருந்தாள். அலைபேசியின் நினைவில் இருந்து அழித்துவிட்டாலும் அவன் எண் அவளின் நினைவை விட்டுப் போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தங்கு தடையில்லாமல் ஒவ்வொரு எண்ணாக அழுத்தியவள் அழைப்பை விடுக்கப் போகும் கடைசி நிமிடத்தில் அதை நிறுத்திவிட்டு கீரவாணிக்கு அழைத்தாள்.
“அந்தக் குழந்தைங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லன்னு யார் வேண்ணாலும் சொல்லி இருக்கலாம். ஆனா என் மனசோட அடி ஆழத்தில் இருந்து ஒருநாள் ஒரு நொடி கூட நான் அப்படி நினைச்சது கிடையாது. எனக்கு அவங்களைப் பார்க்கணும் அமிர்தா. நீயே என்னைப் புரிஞ்சுக்கலன்னா எப்படி?” கேட்டுக்கொண்டே வந்தவன், அவள் செய்யும் காரியத்தைப் பார்த்துவிட்டு, “யாருக்கு கூப்பிடுற அமிர்தா?” தன் தம்பிக்கு அழைக்கிறாளோ என்கிற சந்தோஷத்தில் கேட்க, “உங்க பொண்டாட்டி கீரவாணிக்கு.” என்று சொல்லி அவன் சந்தோஷத்தில் கொள்ளி வைத்தாள்.
அவள் அழுத்தமாகச் சொன்ன வார்த்தைகளில் முகம் சுணங்கியவன், “என்னோட நல்லதுக்குன்னு சொல்லி சொல்லி சுத்தி இருக்கும் எல்லோரும் உன்னை வதைச்சாங்க. அதுக்குப் பழிவாங்கும் விதமா என்னை நீ பேசுறியா?” தாங்கிக்கொள்ள முடியாத வலியோடு கேட்டான்.
“உங்களைப் பழிவாங்கி நான் செய்யப் போறேன். என்னோட கோபம் எல்லாம் உங்க தம்பி மேல மட்டும் தான். நடந்தவைகளில் என்னை விட பாவப்பட்ட ஜீவன் இருக்குன்னா அது நீங்க தான். அதனால் எனக்கு உங்க மேல கோபத்தை விட பரிதாபம் தான் அதிகமா இருக்கு.” என்றவள் சில கணங்கள் தாமதித்து பெருமூச்சுவிட்டு, “என்ன தான் பேசினாலும், வருத்தப்பட்டாலும், நடந்த எதுவும் மாறாது. நடந்ததை ஏத்துக்கிட்டு கடந்து போறது தான் நல்லது.” என்றாள்.
“யாருக்கு நல்லது அமிர்தா? எனக்கு தானே, எனக்கு மட்டும் தானே. எனக்காகன்னு நீ, நீலாம்பரி, கேசி, அம்மா, கீரவாணின்னு இன்னும் எத்தனை பேர் தான் பாதிக்கப்படுவீங்க. இதுக்கு பேசாம என்னைக் கொன்னு இருக்கலாம். இல்ல என் கண்ணு முன்னாடி நடந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாம கிடந்தேனே அடுத்த நாளே நானே தற்கொலை பண்ணி செத்திருக்கணும்.” இருக்கும் இடம் மறந்து கத்தினான் மோகனன்.
இவ்வளவு நேரத்திற்குள் அமிர்தா விடுத்த அழைப்பின் வழியாக கணவனின் குரலைக் கேட்டு, நடந்ததை யூகித்த கீரவாணி எங்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டு சாருகேசியையும் அங்கே வரச்சொல்லிவிட்டு வேகவேகமாகக் கிளம்பினாள்.
கோபம், வருத்தம், தவிப்பு, குற்றவுணர்வு, அழுகை என பல உணர்வுகளால் பாதிக்கப்பட்டு துவண்டு கீழே விழத்தயாராக இருந்த மோகனனை அரும்பாடு பட்டு சமாதானம் செய்து, தன் அலுவலகத்தின் வெளியே இருக்கும் காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்ற அமிர்தா, சூடான தேநீர் அவன் மனதோடு சேர்த்து மனநிலையையும் மாற்றும் என்கிற நம்பிக்கையோடு வாங்கிக் கொடுக்க, அவளைப் பார்க்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாகக் குடிக்க ஆரம்பித்தான் மோகனன்.
சற்று நேரத்தில் கீரவாணி, சாருகேசி இருவரும் அங்கே வந்து சேர, “இனி நீங்க பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன்.” என்றபடி கிளம்பினாள் அமிர்தா.
“அண்ணி பார்த்துக்கோங்க.” என்று அண்ணனை ஒப்படைத்த கேசி, அமிர்தாவைப் பின்தொடர்ந்து சென்று, “அண்ணன் எதுக்காக உன்னைத் தேடி வந்தார் அமிர்தா.” படபடப்பாகக் கேட்டான்.
அவனை நக்கலாகப் பார்த்த அமிர்தா, “என் குழந்தைங்களோட முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டார்.” என்க, “என்ன சொல்ற நீ? அண்ணா குழந்தைங்களைப் பார்த்தாரா?” பரபரப்பாகக் கேட்டான் கேசி. நொடியில் அவனுக்குள் பலபல கற்பனைகளும், கடந்த காலத்தில் நடந்த துயர சம்பவங்களும் வரிசையாக நினைவு வர, தலைமுடியை அழுத்தமாகக் கோதிக்கொடுத்தான்.
அமிர்தாவைத் தேடி அலுவலகம் வந்த அண்ணன் கண்டிப்பாக குழந்தைகளைப் பார்த்திருக்க முடியாது என்று அவன் நிம்மதிப் பெருமூச்சுவிட, அதை உணர்ந்தது போல், “என் செல்போனில் குழந்தைங்களோட போட்டோஸ் எக்கச்சக்கம் இருக்கு ஏசிபி சார். நான் நினைச்சா இப்பக் கூட அதையெல்லாம் உங்க அண்ணனுக்கு காட்ட முடியும்.” என்று கையில் இருந்த செல்போனை ஆட்டி ஆட்டிக் காட்ட, நடு வீதியில் பலர் பார்க்க நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைக்காமல் அமிர்தாவின் கழுத்தைப் பிடித்துவிட்டான் சாருகேசி. கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்து நன்றாகவே வெளியே தெரிந்தது.
அவன் பிடி வலியைக் கொடுத்தது தான். அதை மறைத்து நக்கலாகச் சிரித்த அமிர்தா, அவன் கரத்தை தன் கழுத்தில் இருந்து எடுத்துவிட்டு, “நமக்கு ரொம்பப் பிடிச்சவங்களுக்கு ஒன்னுன்னா ரொம்ப வலிக்கும் இல்ல கேசி. எனக்கும் வலிக்கிது. பதினைஞ்சு மாசமா ரொம்ப வலிக்குது. என் வலியை சொல்லி அழக்கூட எனக்குன்னு யாரும் இல்ல தெரியுமா?” என்க,
“ஐயோ என்னைக் கொல்லாதடி. இப்ப என்ன, நான் உன் பின்னாடி சுத்தி வந்து உன் மனசை மறுபடியும் கலைச்சிடுவேனோன்னு பயமா இருக்கா. சரி உனக்காக, உன்னோட நிம்மதிக்காக, என்னைப் பார்த்தா நொந்து போற உன் மனக்காயம் குணமாக மொத்தமா நான் உன்னை விட்டுட்டு போறேன் போதுமா?” கோபத்தில் கத்தினான் கேசி. ஊர் உலகத்தில் தன் சொந்த நன்மைக்காக பல தவறுகள் செய்த அனைவரும் நன்றாக இருக்க, பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தவறு செய்த தனக்கு ஏன் இத்தனை தண்டனை என்று வருந்தியது அவன் உள்ளம்.
“என்னால் உங்க அண்ணனை வெறுக்க முடியாது கேசி. உங்க மேலும் எனக்கு கொஞ்சம் அன்பு இருக்கு.” அமிர்தா சின்னக்குரலில் சொல்ல, கேசியின் கண்களில் சின்னதாய் மின்னல்.
“அந்தக் கொஞ்ச அன்பு எதுக்குமே பயன்படாது. என்னோட காதல், ஊற்று மாதிரி இயற்கையா வந்தது. நீ தவிச்ச நின்ன நேரத்தில் எல்லாம் துணையா நின்னது. ஆனா அந்த ஊத்து மேல ஆசிட் ஊத்தி அழிச்சுட்டு, கொஞ்ச நாளைக்குப் பிறகு அதே இடத்தில் நல்ல தண்ணீ ஊத்தை தேடுறது ரொம்பத் தப்பு. பிரிஞ்ச நாம பிரிஞ்சதாவே இருக்கட்டும்.” என்றுவிட்டு நகர்ந்தாள் அமிர்தா.
அவள் கடைசியாகச் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளைக் கேட்டபடி வந்த மோகனன், “என்ன காரியம் பண்ணி வைச்சிருக்க? உன் தலையில் எதுக்காக டா நீயே மண்ணள்ளிப் போட்டுட்டு இருக்க.” சீற்றமாய் கேட்டான் தம்பியிடம்.
“காலை சுத்தி வர நாய்க்குட்டியா இருந்தாலும், திரும்ப திரும்ப எட்டி உதைக்கும் போது ஒரு சில முறை தான் திரும்ப அதே அன்போட அந்த மனுஷன் பின்னால போகும். ஒருகட்டத்துக்கு மேல ரோஷப்பட்டு நீ வேண்டாம் போடான்னு போயிடும். நான் எம்மாத்திரம்.” சுட்டெரிக்கும் சூரியனைப் போல் சூடான வார்த்தைகளை விட்டாலும்,
மனதிற்குள், “அவ தான் வேணும் னு நான் கிறுக்குப் பிடிச்சு சுத்துறதால் தானே, எனக்காக யோசிச்சு நீ அவகிட்ட பேச போய் இருக்க. இதனால் உனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா நான் என்னண்ணா பண்ணுவேன். உனக்காகன்னு எத்தனையோ பண்ணிட்டேன். அதில் இதுவும் ஒன்னா இருந்துட்டு போயிடுது. காதல் தானே போனாப் போகுது.” என்று மனதோடு நினைத்துக்கொண்டான்.
வெறும் கற்பனை என்ன செய்துவிடும் என்று கேட்கலாம். சுகமான கற்பனைகளால் கசப்பான நிகழ்காலத்தை இனிமையாகக் கழிப்பவர்களும் இங்கே உண்டு. அதே சமயம் கசப்பான, எதிர்மறையான கற்பனைகளால் இனிமையான நிகழ்காலத்தைக் கெடுத்தவர்களும் அநேகம். சாருகேசி இதில் இரண்டாவது ரகம். எதுவும் தவறாக நடந்துவிடுமோ என நடக்கும் முன்பே பதறிப்போகிறவன் அதைத் தடுக்கிறேன் என்று இதுவரை செய்தது அனைத்தும் தவறான காரியங்கள் தான்.
இப்போதும் அப்படி ஒன்றைத் தான் செய்தான். அண்ணனுக்காக காதலைக் கைவிடுவது என்று முடிவு செய்த பின்னர், அடுத்து செய்ய வேண்டியதை வேகவேகமாக பட்டியலிட்டது அவன் மனம். அதையெல்லாம் செய்து முடிக்கும் போது அரை உயிராக ஆகி இருப்போம் என்கிற உண்மையும் புரிந்தது தான். அண்ணனுக்காக என்றால் மீதம் இருக்கும் பாதி உயிரையும் சேர்த்து கொடுக்கலாம் எனத் தீர்மானமாக நினைத்தவன் நேரே அண்ணி கீரவாணியிடம் வந்தான்.
“எனக்கு உங்க தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம். அவங்களுக்கும் சம்மதமா கேளுங்க. அப்படி சம்மதிச்சா எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கல்யாணம் வைச்சுக்கலாம்.” இயந்திர மனிதனைப்போல் சொன்னான்.
“ஏன் கொழுந்தனாரே, ஊருக்குள்ள உங்க அண்ணனோட உயிரும், மனசும், வாழ்க்கையும் மட்டும் தான் பெருசா? அவர் மட்டும் தான் அம்மாவோட வயித்தில் இருந்து பிறந்தார். நாங்க எல்லாம் களிமண்ணா இருந்து மனுஷனா மாறினோமா? அத்தனை அசால்ட்டா சொல்றீங்க என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு.
காதல், தாம்பத்யம், குழந்தை எல்லாத்தையும் தூக்கிப்போடுங்க. அவளைப் பார்த்து ஆத்மார்த்தமா சிரிக்கவாச்சும் முடியுமா உங்களால்.” என்றவளின் கேள்விளே, தன் அண்ணனிடம் இருந்து அப்படியொன்று அவளுக்கு கிடைக்கவே இல்லை என்பதை புரியவைக்க தலையைக் கோதினான் தம்பி.
“அண்ணனுக்கும், தம்பிக்கும் வேற வேலையே இல்லையா? உங்களோட இயலாமைக்கு இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையைத் தான் சீரழிக்கப் போறீங்க. முதலில் நான் இப்ப என் தங்கச்சியா? நான் தான் காதல் னு பைத்தியக்காரத்தனமான கண்ணை மூடிக்கிட்டு கிணத்தில் விழுந்தேன். என் தங்கச்சியை என்னால் தள்ளிவிட முடியாது.
அண்ணனும் தம்பியும் மத்த விஷயத்தில் எப்படியோ. ஆனா காதல், கல்யாணம் னு வரும் போது ஒரே மாதிரி தான். இன்னும் நாலு வருஷம் கழிச்சு என் தங்கச்சிக்கு கல்யாணம் நடந்தாலும் சரி தான். அவளுக்குப் பிடிச்ச, அவளைப் பிடிச்ச ஒருத்தனோட தான் அவ கல்யாணம் நடக்கும். அதனால் வேற பொண்ணைப் பாருங்க. இல்ல வேண்டாம் வேற எந்தப் பொண்ணு வாழ்க்கையையும் வீணாக்கிடாதீங்க. ஒன்னு அமிர்தாவை கன்வின்ஸ் பண்ணி அவளோட வாழப்பாருங்க. இல்லையா மொத்தமா காலத்துக்கும் கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திடுங்க. உங்க பாசத்துக்கும், பழிக்கும் பொண்ணை பகடைக்காயா மாத்தாதீங்க.” கோபத்தில் வெடித்துவிட்டு கிளம்பினாள் கீரவாணி.
“அண்ணி சொல்லிட்டு போறதெல்லாம் நிஜமா அண்ணா. அதிகப்படியா நாங்க உன்கிட்ட எதையும் எதிர்பார்க்கல தான். ஆனா அவங்களோட உயிர்ப்பா ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்திக்கிறது இல்லையா நீ. அவங்களை ஒரு நல்ல தோழியாவாச்சும் பார்க்கலாம் தானே.” குறையாத ஆதங்கத்தில் கேட்டான் கேசி.
“அதுக்கு அவ நீலாம்பரி இல்லையே.” என்கிற ஒரே வார்த்தையில் தன் மனநிலையை விளக்கிவிட்டு சென்றான் மோகனன்.
“கடவுளே.” என தலையில் கை வைத்தபடி அந்த மொட்டை வெயிலில் நின்றான் கேசி. “நடந்த, நடக்கும், நடக்கப்போகும் எதற்கும் நல்ல ஒரு தீர்வு யாராவது சொல்லுங்களேன்.” என்கிற புலம்பலோடு, தாயைப் பிரிந்த சேயாய் அநாதரவாக நின்றான்.
error: Content is protected !!