நாட்கள் வருடங்களாக ஓடியிருக்க அன்று காலை லாரி ஆபிஸ் சென்ற சக்திப்பிரியா அவன் அறைக் கதவை அடைத்துவிட்டு நேரே சென்று அவனின் மடியில் அமர்ந்து அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
“நாள் தள்ளிப் போயிருக்கு காலைல டெஸ்ட் பண்ணேன் ரெண்டு கோடுதான்” என்றாள், அவள் சொல்லியதை மெல்ல மெல்ல உள்வாங்கியவன் அவளை இன்னும் இன்னும் தன்னோடு இறுக்கினான்.
“சொல்லுடி” என்றான் மெல்லிய புன்னகையும் கரகரத்த குரலுமாக.
Advertisement
Advertisement
“நீங்க அப்பா ஆகப்போறீங்க அத்தான்” என்றாள் அவன் கண் பார்த்து.
“அப்போ நீ…” என்றான் விரிந்த சிரிப்போடு.
Advertisement
“உங்க பிள்ளைக்கு அம்… அம்மா” என்றவள் இதழ்கள் நடுங்கியது விழிகளில் நீர் கோர்த்தது.
“அதை இப்படி அழுதுகிட்டே சொல்லுவியா” என்றவன் விழிகளிலும் நீர் நடுங்கும் அவள் இதழ்களைத் தன் வசப்படுத்தினான், மூன்று வருடங்கள் கடந்து இந்த வரம் கை வந்திருந்தது அவர்களுக்கு.
ஒவ்வொரு மாதமும் ஏமாற்றம் சூழ பயம் பிடித்தது சக்திப்பிரியாவுக்கு நிறையப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள அவள் கனவு காண ஒரு பிள்ளைக்கே கடவுள் கருணை காட்டவில்லையே என்று துவண்டுபோனாள்.
“எந்தக் குறையும் இல்லை குழந்தை பிறக்கும்” என்றுதான் மருத்துவர்களும் கூறினர் ஆனால் காத்திருப்பு மட்டும் நீண்டுகொண்டே சென்றது, இதோ அவள் ஏங்கித் தவித்த பிள்ளை வரம் வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தச் சந்தோஷத்தைக் கடந்துவிட முடியவில்லை அழுகையில் கரைந்தாள் அவள், தன் அணைப்பிற்குள்ளே வைத்திருந்தான் அவன்.
அங்கிருந்து நேரே சென்றது மருத்துவமனைக்குத்தான் உறுதி செய்து மருந்துகள் வாங்கி வீட்டிற்கு வந்து தகவல் சொல்ல அன்புக்கரசி உடனே இனிப்பு செய்ய ஓடினார்.
மகேந்திரனும் பூர்ணிமாவும் அடுத்த ஒருமணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டனர், முத்துவும் அவன் மனைவி மலரும் கூட உடனே வந்துவிட்டனர் முத்துவுக்கு மகேந்திரனே முன்னின்று பெண் பார்த்துத் திருமணத்தை முடித்துக் கொடுத்திருந்தார்.
சித்ராவை கையில் பிடிக்க முடியவில்லை போனோடு ஓடினாள் சௌமியாவுக்கு தகவலைச் சொல்ல, மாலைபோல வரதராஜன் வனஜா வந்திருந்தனர் நிர்மலா திருமணம் முடிந்து சென்னைக்கு வாழச் சென்றுவிட்டாள் அவளும் தகவல் அறிந்து அழைத்துப் பேசினாள்.
கதிர் கூட ஷர்மியுடன் வந்து சென்றான், மறுநாளே ஸ்டெபி மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு வந்து பார்த்துச் சென்றார், பவுனுத்தாயும் கவிதாவும் மட்டுமே வரவில்லை அவர்களை யாரும் கணக்கிலும் எடுக்கவில்லை.
சௌமியா பார்க்க வேண்டும் என்று கேட்கச் சிவபாலன் சென்று அவளை அழைத்துவந்தான், மூன்று நாட்கள் இங்கே தங்கி அனைவருடனும் ஒன்றாக நேரம் செலவிட்டு சந்தோஷமாகச் சென்றாள் அவள்.
பார்த்துக்கொள்ள ஆட்களுக்கா பஞ்சம் சக்திப்பிரியா தாய்மையை முழுதாக ரசித்து அனுபவித்து நாட்களைக் கடத்தினாள் சிவபாலன் சக்திப்பிரியா தம்பதிக்கு முதல் குழந்தை ஆண் பிள்ளையே.
முதல் பிள்ளைக்குத்தான் அவர்கள் மூன்று வருடம் காத்திருக்க வேண்டி வந்தது மகனுக்கு ஒன்றரை வயது ஆனபோதே அடுத்த ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்துவிட்டாள் சக்திப்பிரியா.
“போதும்” என்ற கணவனின் பேச்சை எல்லாம் இந்த விஷயத்தில் அவள் கேட்பதாயில்லை மூன்றாவதும் ஆண் பிள்ளை.
மூன்றாவது பிள்ளைக்கு இரண்டு வயது முடிந்திருந்தது அன்று முழுதும் கணவனை முறைத்துக்கொண்டு சுற்றினாள் சக்திப்பிரியா, அவனும் கண்டுகொள்ளவில்லை இரவு அவர்கள் அறையில் மகனை அவள் உறங்கவைத்துவிட்டு அவனுக்கு முகம் திருப்பிப் படுத்திருக்க அவளை மெல்ல இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான் சிவபாலன்.
“எனக்குக் கோவம்” என்றாள் அவள்.
“எனக்கு இல்லை” என்றான் அவன்.
“ஏன் அத்தான் இப்படி செஞ்சீங்க என்கிட்டே கூடச் சொல்லல” என்று முகத்தைத் திருப்பினாள்.
“உன்கிட்டத்தான் முக்கியமா சொல்லக் கூடாது, என்னடி நினைச்சிட்டு இருக்க ரெண்டு போதும் சொன்னேன் கேக்கல மூணு ஆயிடுச்சு அப்பவும் கேக்கல இப்போ நாலாவது வயித்துல” என்று வயிற்றைத் தடவியவன்.
“நீ தைரியமாத்தான் உள்ள போற எனக்குத்தான் நெஞ்சே அடைக்குது போதும் சக்தி, சாமி நமக்கு நாலு பிள்ளைங்க குடுத்திருக்கார் நீ என் வாழ்க்கைல வந்ததே மனசு நிறைஞ்சு கிடக்குடி இப்போ நம்ம பிள்ளைங்க இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு, உங்களை என் கைக்குள்ள வெச்சு பத்திரமா பாத்துக்கிட்டா போதும்னு இருக்கு” என்றான்.
“அப்போ என் சபதம்”.
“அடியே உன் சபதத்துல ஜெயிச்சுதான இருக்க சக்தி சக்தின்னு கிறுக்கு பிடிச்சுதான சுத்துறேன்” என்றான் அவளின் கழுத்தில் முத்தம் வைத்து அவள் மெல்லச் சிரித்துக்கொண்டாள்.
ஒரு வாரத்திற்கு முன் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறான் அவளிடம் சொல்லவில்லை, அதற்குத்தான் இந்தச் சண்டை அவளின் சண்டையையெல்லாம் எப்படிச் சமாதானம் செய்வது என்று அவனுக்கா தெரியாது.
மறுநாள் மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்துகொண்டனர் வெளியில் வந்த சக்தி முகம் கொள்ளா புன்னகையோடு கணவனை நக்கலாகப் பார்க்க அவன் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
“சாதிச்சிட்ட” என்றான் கள்ளச் சிரிப்போடு.
“சாமர்த்தியம் உங்களுதா என்னோடதா” என்றாள் அவள்.
“ரெண்டுபேரும்தான்” என்றவன் அவளைக் கவனமாக அழைத்துச்சென்று ஜீப்பில் அமர்த்தினான் மறுபக்கம் ஏறி அமர்ந்தவன் அடுத்த நொடி அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
இன்று ஸ்கேன் செய்தபோது தெரிந்தது இரட்டைப் பிள்ளைகள் என்று, கால சக்கரம் வேகமாகச் சுழன்றுகொண்டிருந்தது மூன்று ஆண் இரண்டு பெண் பிள்ளைகள் என்று சக்திப்பிரியா சிவபாலன் வாழ்க்கை நிறைவாய் சென்றது.
பிரியம் பார்லர் வேறொரு கிளையும் துடங்கியிருந்தாள் சக்தி, சிவபாலன் புதுத் தொழில்களின் பின்னே ஓட அவனின் முதல் தொழிலான லாரி ஆபிஸை மகேந்திரன் பொறுப்பாகப் பார்த்துக்கொள்கிறார்.
அன்புக்கரசிக்கும் பூரணிக்கும் வீட்டையும் பிள்ளைகளையும் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது, ரங்கசாமி தென்னந்தோப்பையும் சக்தியின் பெயரில் இருக்கும் நிலத்தில் விவசாயமும் பார்த்துக்கொள்கிறார்.
முத்து இப்பொழுதும் சிவபாலனின் வலங்கை தான் அவனின் மனைவி சக்திப்பிரியாவின் பார்லரில் வேலை செய்கிறாள், அவனுக்கும் இரண்டு குழந்தைகள்.
கதிர் ஷர்மிக்கும் இரண்டு குழந்தைகள் தொழிலில் அவனும் முன்னேறிக்கொண்டு இருக்கிறான், அவனிடம் எந்த மாற்றமும் இல்லை இப்பொழுதும் அண்ணனிடம் வந்து நிற்பான் எதுவென்றாலும்.
ஷர்மியும் சக்தியுடனும் குடும்பத்துடனும் நல்ல முறையிலே பழகினாள் பவுனுத்தாயி உலகை நீங்கி மூன்று வருடங்கள் ஆகிறது, ஸ்டெபியையும் பிராத்தனாவையும் தள்ளி வைத்தாலும் பார்த்திபனை தள்ளி வைக்க அவரால் முடியவில்லை.
பேரனைத் தொட்டுத் தடவிப் பார்த்து மகன்மீதான ஏக்கத்தைத் தீர்த்துக்கொண்டார். கொல்லி கூடப் பார்த்திபன் தான் வைத்தான் கவிதாவிடம் எந்த மாற்றமும் இல்லை அனைத்திலிருந்தும் ஒதுங்கிக்கொண்டாள்.
சித்ராவை தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருக்க சௌமிக்கு இன்று தான் கல்யாணம், பார்த்திபன் அண்ணன் ஸ்தானத்தில் நின்று அனைத்தையும் செய்தான் சிவபாலன் செய்யவைத்தான்.
சௌமியாவும் பெரிதாக அவர்களிடம் விலகலைக் காண்பிக்கவில்லை. வீடே ஆட்டமும் பாட்டுமாகக் களைகட்டியது ஒரத்தநாட்டிலிருந்து சிவபாலன் குடும்பம் அதிகாலை வந்து சேர்ந்திருந்தது சக்திப்பிரியாவும் மலரும் மட்டும் இரவே வந்துவிட்டனர்.
பிறகு… ஊருக்கே மேக்கப் செய்துவிடும் சக்தி தன் வீட்டுப் பெண்ணை விட்டுவிடுவாளா, இதோ தாலி கட்டி பந்தி முடிந்து வீடு வந்து விளக்கேற்றி மாப்பிள்ளை வீடு சென்றுவிட்டனர், பையன் பெங்களூரில் இருக்கிறான் இன்னும் ஒரு வாரத்தில் அவனுடன் கிளம்பிவிடுவாள் சௌமியா.
கவிதாவை தன்னுடன் வரச்சொல்லிக் கேட்டுப்பார்த்தும் கவிதா மறுத்துவிட்டாள் இந்த வீட்டை விட்டு எங்கும் வரமாட்டேன் என்று அவள் கூறிவிட விட்டுவிட்டனர், அருகிலே கதிர் குடும்பம் ஸ்டெபி இருக்கப் பயமில்லை.
இரவு வீட்டிற்கு வந்து படுத்ததுதான் தெரியும் சக்திப்பிரியாவுக்கு யாரேனும் அவளைத் தூக்கிச் சென்றால் கூடத் தெரியாத அளவுக்கு அப்படியொரு அசதி உறக்கம் குழந்தைகள் கூட அவளைத் தொல்லை செய்யாமல் பார்த்துக்கொண்டான் சிவபாலன்.
மறுநாள் காலையிலே வீட்டில் அனைவரும் கிளப்பிவிட்டனர் ரங்கசாமியும் அன்புக்கரசியும் “நாங்க ஒரு வாரம் கவிதா கூட இருந்துட்டு வரோம் தம்பி சௌமியும் கிளம்பிட்டா இப்போ சட்டுன்னு தனியா ஆயிட்ட மாதிரி இருக்கும்” என்க “சரி” என்றுவிட்டான்.
மகேந்திரனும் பூர்ணிமாவும் பிள்ளைகள் ஐந்து பேரையும் அழைத்துச் சென்றுவிட்டனர் “நாலு நாள் அங்க இருக்கட்டும் மாப்ள லீவ் தான பாப்பாக்கும் உங்களுக்கும் ரெஸ்டே இல்லை வேலையெல்லாம் கிடக்கட்டும் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிச் சென்றனர்.
அனைவரும் கிளப்பிவிட வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்மணி வந்து கூட்டித் துடைத்து வேலைகளையும் முடித்தார், பூரணியும் அன்புக்கரசியும் சமையல் வேலைகளை முடித்துவிட்டே சென்றிருந்தனர் மதியம் ஒருமணிபோலத் தான் எழுந்தாள் சக்திப்பிரியா.
வீடே மியூசியம் போல அமைதியாக இருக்க அவளுக்குப் புரிந்தது தாயும் தந்தையும் குழந்தைகளை அழைத்துச்சென்றுவிட்டனர் என்று சிரித்துக்கொண்டாள், எழுந்து நன்றாக ஒரு குளியல் போட்டுக் கீழே வரச் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தான் சிவபாலன்.
அவள் கொலுசொலியில் அவன் புலன்கள் விழித்துக்கொண்டது அவன் இதழ்கள் விரிய வேகமாக வந்தவள் அவன் மடியில் அமர்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
“சக்தி…”.
“ஹ்ம்ம்…”.
“பசிக்குது”.
“எனக்கும்”.
“சாப்பிட்டுப் போய்…”
“போயி…”
“தூங்கலாம்” என்றான் சிரிப்பில் அவன் உடல் குலுங்க மெல்லத் தலை உயர்த்தி அவனைப் பார்த்தவள்.
“அப்போ சிவாக்கு சக்தி வேண்டாம்” என்றாள் அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே.
“அதுக்கான பதில் உனக்கே தெரியும்” என்றவன் அவளைத் தூக்கிக்கொண்டே கிட்சன் சென்றான் ஒரே தட்டில் உண்டு மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து படம் பார்த்தனர்.
“வெளில போலாமா” என்றாள் சக்தி.
“சரி போகலாம் புடவை கட்டிக்கோ சக்தி” என்றான், அவளைத் தஞ்சை பெரியகோவிலுக்குத் தான் அழைத்துச்சென்றான் அவன் முதல் முதலாக அவளைப் பார்த்தது அங்குதானே.
கணவன் வாங்கித்தந்த பூவைச் சூடிக்கொண்டு மலர்ந்த புன்னகையோடு மனம் நிறையக் கோவிலைச் சுற்றித் தொழுது விட்டு அவன் அருகில் அமர்ந்திருந்தாள் சக்தி.
அவளின் விரல்களைக் கோர்த்துக்கொண்டு தன் தோள் சாய்த்தான் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “லவ் யு” என்க, அவள் உச்சியில் இதழ் பதித்தான்.
இன்னும் அவனை நெருங்கி அமர்ந்தவள் அவனைக் கட்டிக்கொண்டாள் சிவபாலனுக்கு எப்பொழுதுமே கடவுளிடம் வேண்டுதல்கள் இருந்ததில்லை. சக்தி அவன் வாழ்வில் வந்தபிறகு தவறாமல் இறைவனுக்கு நன்றியை மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
சிவபாலன் மிகச் சிறந்த மகன், அருமையான உடன்பிறப்பு, மிகச் சிறந்த தந்தை தனக்குக் கிட்டாமல் போன அந்த அன்பைத் தன் குழந்தைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான், ஆனால் அவன் வாழ்க்கையில் எது அவனுக்கு மிகவும் இன்றியமையாதது எது இல்லாமல் அவனால் சுவாசிக்கவே முடியாது என்று கேட்டால் நொடியும் தாமதிக்காமல் அவன் விழிகள் அவனின் சக்தியைத் தழுவிவிடும் அவளைக் கடந்துதான் அவனுக்கு யாருமே எதுவுமே.
கரடு முரடாகப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் தெரிந்தாலும் மென்மையான மனம் கொண்டவன் அவன், ஒற்றையாக நின்றவனின் தனிமையைப் போக்கி அவனை ஒரு நந்தவனத்தின் உள்ளே குடியமர்த்தி அழகு பார்த்திருக்கிறாள் அவன் சரிபாதி.
அவளைவிடச் சிறந்த வரம் என்ன இருக்கிறது அவன் வாழ்வில், தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்தைப் பார்த்தவன் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம் சக்தியை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தவன் “நன்றி” என்றான் பெருவுடையாரிடம் நெஞ்சம் நிறைய.