Skip to content
Post Views: 760
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 11
மீனாவுக்கு கணவன் அடித்ததில் உண்டான வலியை விட தன்னை அடித்து விட்டானா என்ற அதிர்ச்சி தான் அதிகமாக இருந்தது. யார் கொடுத்த தைரியம்?…
தாலியை கட்டிவிட்டால், கட்டிய மனைவியை கை நீட்டி அடிக்கும் உரிமை வந்து விடுமா? தலை குனிந்து தாலியை வாங்கியவள், தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் என்று நினைத்தானா?…
Advertisement
மனம் என்ன தான் நியாயமான கருத்துக்களை முன் வைத்தாலும், எழுச்சியாக அவன் சட்டையை பிடிக்கும் ஆத்திரம் வந்தாலும்.. சராசரி பெண்ணாக கணவன் அடித்ததும் வலிக்கும் கன்னத்தை பிடித்துக்கொண்டு அழுகை தானே வந்தது. தற்போதும் மடங்கி அழுது கொண்டிருக்கிறாளே ஒழிய, ஒன்றுக்கு மூன்று அண்ணன்கள் இருந்தும் யாரிடமும் வாய் திறந்து சொல்ல வில்லையே. அது தானே ஆண்களின் தைரியம். மீனா அண்ணன்கள் முரட்டு தோற்றத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும், மனைவிகளை அதட்டலில் பயம் கொள்ள செய்வார்களே தவிர, ஒரு நாளும் கை நீட்டியதில்லை.
பக்கத்து வீட்டு விமலா அக்கா.. அப்போதிருந்து கணவன், மனைவி சண்டையை பார்த்து கொண்டு தான் இருந்தார். பரமு தான் முன்பே சொல்லி சென்றிருந்தார்.
“அடிக்கடி என்னால வர முடியாது விமலா. பிள்ளை பெத்த பச்சை உடம்புகாரி, ரெண்டு பிள்ளைகளை வச்சுக்கிட்டு சிரம படுவா.. நீ கொஞ்சம் பார்த்துக்க, வேற எதுவுன்னாலும் எனக்கு ஒரு போன் போடு” என்று தயவாக சொல்ல,
Advertisement
“எனக்கு தெரியாதா அக்கா. நான் மீனாவை பார்த்துக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க” என்றவள், காலையிலிருந்து மீனா வீட்டில் நடக்கும் சண்டையை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
Advertisement
மீனாவின் சத்தம் ஓங்கி கேட்கவும், சண்டையை விலக்கி மீனாவை வெளியில் கூட்டி வரத்தான் நினைத்தாள். அதன்படி மெல்ல எட்டி பார்க்க, ஜெகன்.. அவளை அடிப்பதை பார்த்து அதிர்ந்து போய் நின்று விட்டாள் விமலா.
இந்த காம்பவுண்டில் குடி வந்ததிலிருந்து ஜெகனிடம் ஒரு தப்பும் கண்டுபிடிக்க முடியாது. மீனா கூட கொஞ்சம் வாய் தான். ஆனால், ஜெகன் எப்போதும் நிமிர்ந்து பார்த்து கூட பேசாதவன். அப்படிப்பட்டவனா மனைவியை கைநீட்டி அடிக்கிறான், உடனே பரமுக்கு போன் செய்து விட்டாள்.
எவ்வளவு அழுதாலும் நடந்தது நடந்தது தானே. முகத்தை கழுவி முடியை மொத்தமாக கொண்டை போட்டாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் பிள்ளைகள் எழுந்து விடுவார்கள். பாவம் தமிழ் பால் பிஸ்கட் மட்டும்தான் சாப்பிட்டு விட்டு படுத்தாள். ஒரு குக்கரில் அரிசி, பருப்பு ஒரு உருளைக்கிழங்கு வேகவைத்து நெய் விட்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தாள்.
Advertisement
தனக்கென்று எதுவும் சமைத்து உண்ண தோன்றவே இல்லை. ஒரு தவறும் செய்யாமல் கைநீட்டி அடித்தவன் கணவனே என்றாலும் அவன் பணத்தில் உண்பதா? அவன் உழைப்பில் வளர்ந்த உடம்பு என்பதால் தான் எளிதாக கைநீட்டி விட்டானோ? ஏதேதோ எண்ணங்கள், அத்தோடு அழுகையும் …
மகனை மடியில் வைத்துக் கொண்டு அருகில் மகளை விளையாட விட்டிருந்தாள் மீனா. சொப்பு சாமன் வைத்து தாயிடம் சொல்லி விளையாடி கொண்டிருந்த தமிழ், தாயின் முகத்தை அடிக்கடி பார்த்து கொண்டாள். கலங்கிய கண்களும், நலுங்கிய தோற்றமும், அழுகிற முகமும் தமிழ் குட்டிக்கு அம்மா வித்தியாசமாக தெரிந்தாள். நடக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் வயதில்லாவிட்டாலும், கிரகிக்க முயன்றது குழந்தை.
மகளையே பார்த்துக் கொண்டிருந்த மீனாவும், பிள்ளை தன்னையே பாவமாக பார்க்கவும் நினைத்து ஏங்கி அழுவதை குறைத்தாள். சாதாரணமாக இருப்பது போல மகளிடம் காட்டிக்கொள்ள முயல, வந்து விட்டார் பரமேஸ்வரி.
“மீனா.. ஐயோ! நான் பெத்த மகளே” என்று கதறி கொண்டு வர,
தமிழ் சத்தம் கேட்டு பயந்து போனாள். “அம்மா.. எதுக்கு கத்துற, பிள்ளை பயப்படுது”
கிட்ட வந்து அவளின் தோற்றத்தை பார்த்தவர், “என்னடி சேலை இது?” என்றவாறு, மகள் முகத்தை உத்து பார்க்க, காலையில் இருந்ததற்கு இப்போது பரவாயில்லை.
ஆனால், முகம் லேசாக சிவந்து முகம் உப்பி இருந்தது. தாய் மனம் பொறுக்க வில்லை.
“எங்கடி இருக்கான் உன் புருசன். இதுக்குத்தான் அப்பா, அம்மா இல்லாட்டியும் நீ ஆசைப்பட்ட நான் உனக்கு கட்டி வச்சோமா? இம்புட்டு நாளும் கை நீட்டலையே? அப்பா இல்லாத பிள்ளைன்னா அனாதைன்னு நினைச்சுட்டானா?” என்றவர், போனை எடுக்க..
“யாருக்குமா போன் பண்ற?”
“உங்க அண்ணன்களுக்கு தான். அவங்க மூணு பேரும் வந்து நிக்கட்டும். அவனுங்களை வச்சுகிட்டு உன் புருசன் பதில் பேசணும்” என்றார் ஆத்திரத்தோடு,
“அம்மா வேணாம்மா. பெரிய பிரச்சனையாகி போகும்.. நீ கொஞ்சம் அமைதியா இரு” என்றாள் மீனா.
“இன்னுமும் என்னடி புருசனுக்கு சப்போர்ட். எம்புட்டு நான் சொன்னேன் அவன் வேணாம்னு. கொஞ்சமாச்சு பெத்தவங்க பேச்சைக் கேட்டியா? ஊர்ல இல்லாத அழகன் மாதிரி அவனை பார்த்து விழுந்த? இப்படி தவமிருந்து அவனை கட்டிக்கிட்டு நல்ல பரிசு கொடுத்துவிட்டான்” என்றதும் மீனாவுக்கு அழுகை தாங்க வில்லை.
முயன்று கேவலை அடக்கி கொண்டாள். ரொம்ப சத்தம் போட்டு அழுதால், தாய் தாங்க மாட்டார். அவர் சொன்னது போல தவமிருந்து தான் அவனை கட்டி கொண்டாள்.
மார்கழி மாத விரதம், மூன்று மாதம் பிள்ளையாருக்கு தண்ணி எடுத்து ஊற்றுவது, அருகம்புல் மாலை என்று மனம் கொண்டவனே மணாளனாக வர தவமிருந்து, கை தாலி வாங்கி கொண்டாள். அதற்கு தான் ஒரு பக்க கன்னம் வீங்கும் அளவுக்கு நன்றாக கொடுத்து விட்டான்.
“முகத்தை கழுவி தலையை சீவு, வேற சேலையை மாத்து.. என்னால உன் முகத்தை பார்க்க முடியல மீனா பெத்த வயிறு எரியுது” என்றார் பரமு.
இன்னும் பிரச்சனை என்னவென கேட்க வில்லை. மகளை அடித்த ரணம் தான் முன் நின்றது. மீனா தாயை பார்த்தாள்,
பெற்ற தாய்க்கான மகத்தவம் எங்கும் குறையாது போல.. ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை என்று கூட ஒதுக்கி இருக்கலாம். ஆனாலும், மனம் கேட்காமல் ஓடி வந்து விட்டார். அவருக்கு தன்னால் நிம்மதியை தர முடியவில்லையே என்று மருகினாள் மீனா.
அறைக்கு சென்று உடை மாற்ற, தமிழ் மெல்ல எட்டி வைத்து தன் அம்மாச்சி சேலையை பிடித்து இழுத்தாள். பிள்ளைக்கு வந்ததும் தூக்கிக் கொஞ்சும் தன் பாட்டி கண்டுகொள்ளாமல் இருக்கவும் கவனத்தை எதிர்த்தால் போல..
“ஐயோ! என் தங்க பிள்ளை. உங்க அப்பன் இழுத்து விட்டதுல உன்னை மறந்துட்டேன் பாரு..” என்று தூக்கி கொள்ளவும் தான், பிள்ளை முகத்தில் சிரிப்பே வந்தது.
மீனா வேற சேலை மாற்றி, தலையை பின்னி வரவும், ஜெகன் உள்ளே வந்து விட்டான். காலையில் மனைவியை அடித்து விட்டு சென்றதில் இருந்தே ஒரு பெரிய குற்ற உணர்ச்சி. தான் தான் வேண்டுமென்று கட்டிக்கொண்ட தன் மனைவிக்கு நியாயம் செய்யவில்லையே என்று…
அவனும் என்ன செய்வான், மனைவி நம்பிக்கையை காப்பாற்ற வில்லை. அவளுக்கு வாக்குறுதி கொடுத்த படி நகையை வைத்து முன்னேற முடியவில்லை. தன் சரிபாதி இடம் எதுவும் ஒளித்து மறைக்காமல் சொல்லவும் முடியவில்லை. அவள் வாயை அடக்க கட்தினான், சண்டை போட்டான் அதையும் மீறி மீனா பேசவும் வேற வழி இன்றி கை நீட்டி விட்டான். தப்பு என்று தெரிந்தே செய்த தவறு..
மனைவியை சமாதானம் செய்ய தான் மதியமே வீட்டுக்கு வந்தது. கையில் உணவு பார்சல் இருந்தது. பரமு, மருமகனை பார்த்ததும் கொதித்து போனார்.
“யாரை கேட்டு எம் பிள்ளை மேல கை வச்ச.. அவளுக்கு என்ன கேட்க ஆளு இல்லையா? உனக்கு தான் ஆள் இல்லை” என்று சத்தம் போட, ஓடி வந்தாள் மீனா.
“அம்மா”
“வாய மூடு, நீ பேசாத.. என்ன கோபமா இருந்தாலும் கை நீட்டலாமா? அப்படி என்ன தப்பு பண்ணிட்டா என் மக.. உன்னை விட்டு வேற ஒருத்தனை பார்த்தாளா?” என்று அங்காரமாக கேட்க.
“அத்தை.. என்ன பேசுறீங்க. என் மேல கோபத்தை காட்ட உங்க வளர்ப்பை குறை சொல்லாதீங்க” என்றான் ஜெகன்.
அவன் மனமே அவனை சுட்டது. அவன் தப்பை மறைக்க மனைவியை கைநீட்டி விட்டான். பெற்ற தாயே என்றாலும் கோபத்தில் கூட தன் மனைவியை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொன்னதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“ஆமா, பெரிய வளர்ப்பு.. மூணு ஆம்பள பிள்ளைகளுக்கு அடுத்து பிறந்த ஒத்த பொம்பள பிள்ளைன்னு தொட்டு தொட்டு பார்த்து வளர்த்ததுக்கு முகம் வீங்கி போற அளவுக்கு அடிச்சு வச்சிருக்க.. அப்படிப்பட்ட ஒருத்தன் தான் வேணும்னு ஒத்த கால்ல நிக்கிற அளவுக்குள்ள இருக்கு எங்க வளர்ப்பு. உன்னை சொல்லி தப்பில்லப்பா.. இவளுக்கு செல்லம் கொடுத்து வளத்து இருக்காரு பாரு இவங்க அப்பன். அவர சொல்லணும்?” பேசும் போதே கணவனின் நினைவில் பரமுக்கு கண் கலங்கியது.
“மக ஆசைப்பட்டாச்சு, பிள்ளை கைக்குள்ள நிக்குன்னு உன் கையில் பிடிச்சு குடுத்தாரு.. மேல இருக்குற அந்த மனுசனுக்கு நிம்மதியா இருக்கும். எப்படி எல்லாம் என் மகளுக்கு மாப்பிள்ளை வந்துச்சு. ஆனா, உன்னை போய் தேர்ந்தெடுத்தா பாரு. அவளுக்கு இது வேணும். அப்பா, அம்மா இல்லை, கூட பிறந்தவங்களும் இல்லை. வளர்ப்பு சரியா இருக்காது, சொத்தும் கிடையாது வேணாம்னு நான் தலப்பாட அடிச்சேன். எங்க கேட்டாங்க அப்பாவும் மகளும்…” ஆதங்கம்.. பரமு மேலும் தொடர்ந்து பேச,
ஜெகன் தன் மனைவியை முறைத்தான். அவள் தான் போன் செய்து சொல்லி கொடுத்தாள் என்று…
“அம்மா, என்னம்மா இது? கொஞ்சம் அமைதியா இரும்மா” கணவனின் முக கோபத்தையும் தாண்டி தாயின் பேச்சு அவளுக்கு வலியை கொடுத்தது.
“அத்தை.. இது சாதாரண புருசன், பொண்டாட்டி சண்டை தான். எங்களுக்குள்ள நாங்க அடிச்சுக்கிறோம், கூடிக்கிறோம். நீங்க இதுல தலையிடாதீங்க” செய்த தப்பு குத்த அமைதியாக தான் இருந்தான். ஆனால், தொடர்ந்து மாமியார் பேசவும் தான் கோபம் வந்துவிட்டது.
“அது எப்படி நான் வாயை மூடிக் இருக்க முடியும். அதுசரி உனக்கு பெத்தவன்னு ஒருத்தி இருந்தா.. அந்த அருமை தெரியும். அதுவும் இல்லாம அக்கா தங்கச்சி யாராவது இருக்கணும். அப்பத்தான் குடும்பம், வளர்ப்பு பாசம்னா என்னன்னு தெரியும். நீ ஒத்தையில நிக்கிற வர வாங்கிட்டு வந்து இருக்க. உனக்கும் முத பிள்ளை பொம்பள பிள்ளை தான்”
“அம்மா…” என்று மீனா கத்த,
“நடிக்காதடி எல்லாத்துக்கு நீ தானே காரணம். உனக்கு தெரியும் உங்க அம்மா எப்படி பேசுவாங்கன்னு.. அப்படி இருந்தும் உடனே போன் பண்ணி உங்க அம்மாவ வர சொல்லிட்ட. ஆமா நான் யாரும் இல்லாதவன் தான். நான் வேணும்னு தானே என் பின்னாடி அலைஞ்ச.. கட்டுனா உங்கள தான் கட்டுவேன் மாமான்னு என் பின்னாடி வந்து சொன்னது யாரு?” என்று ஜெகன் வார்த்தையை விட, நொறுங்கி போனாள் மீனா.
“பாத்தியா மீனா எப்படி பேசுறான் பாரு” விட்டேனா பாரு என்று பரமுவும் பேச,
“நீங்க பேசாதீங்க. எங்க பிரச்சனை நாங்க பாத்துக்கிறோம். நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புங்க” நிதர்சன்னியமாக ஜெகன் பேச,
ஐயோ! இப்படி சொல்லி விட்டானே.. இனி இது அண்ணன்கள் வரை தொடருமே என்று பயமாக இருந்தது மீனாவுக்கு…
“உன் வீடு நான் எதுக்கு இருக்க போறேன். ஆனா நீ அடகு வச்சிருக்கது எல்லாம் நாங்க போட்டு விட்ட நகை. அதை வச்சு உன் பஞ்சாயத்து எல்லாம் தீர்த்து கிட்ட.. உனக்கு பொண்ணு கட்டிக் கொடுத்து உன் கடனும் சரி பண்ணி கொடுத்த நாங்க வீட்டை விட்டு வெளியே போகணுமா?..” செய்த தப்பை கொஞ்சமும் உணராமல், மாமியார் என்ற மரியாதையும் இல்லாமல் அடக்கி பேசுபவன் மேல் அவ்வளவு கோபம் வந்தது.
அப்ப நாங்க தான் பிரச்சனையா உங்களுக்கு?.. நான் உங்க பொண்ணோட புருசன்றது கணக்குல கிடையாது. நகையை கொடுத்துட்டா உங்க மகளை கூட்டிட்டு போயிடுவீங்களா?” என்று ஜெகனும், அவர் வார்த்தைக்கு எதிர்த்து கேட்க.
மீனாவுக்கு அழுகை தாங்க வில்லை. கணவனுக்கு, நான் அவ்வளவு எளிதாக போய்விட்டேனா?.. என் காதல் உண்மை. என்னையே மறக்கும் அளவுக்கு ஜெகன் மீது அவ்வளவு காதல். அது கொஞ்சம் கூட அவனை பாதிக்க வில்லையா?.. ரொம்ப எளிதாக அரட்டு பேசுகிறான், கை நீட்டுகிறான். வீட்டை விட்டு போ என்கிறான். என் அன்புக்கு கூலி இதுவா?…
ஆனால், ஜெகன் மனைவின் அன்பை உணர்ந்தான். அவளுக்கு தன் மீதுள்ள காதலின் ஆழம் அறிந்ததால், தன்னை விட்டு செல்ல மாட்டாள் என்று திண்ணமாக நம்பினான். அது கொடுத்த அகந்தை தான், இந்த பேச்சு. அது தன் மேல் உண்மையாக நேசம் கொண்ட மனைவிக்கு எவ்வளவு வலியை கொடுக்கும் என்று யோசிக்கவில்லை.
“பாத்தியாடி இவனுக்காகத்தான் எங்களை எல்லாம் எதுத்து இவனுக்கு கழுத்து நீட்டுனியா? கிளம்பு வீட்டுக்கு” என்றார் இறுகி போய்…
“அம்மா…” நைந்து போன குரலில் மீனா அழைக்க,
“பேசாத, ஒரு வார்த்தை பேசாத. அவன் மூஞ்சிக்கு நேரா போனு சொல்றியான்ல்ல. அதுக்காகவாது ரோசப்பட்டு பத்து நாள் அங்க வந்து இரு” என்று பிடிவாதமாக பரமு அழைக்க,
எதுவும் பேசாமல் அழுது கொண்டே நின்றாள் மீனா.
“இங்க பாரு மீனா.. நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குன்னு அவனும் பார்க்கட்டும். கொஞ்சமா அவன் தப்பை அவன் உணரவில்லை. நீ அவனிடம் விட்டுக் கொடுத்து போற வரைக்கும் அவன் திருந்த மாட்டான். ஒரு வாரம் நம்ம வீட்டுக்கு வா” என்று கட்டாயப்படுத்தி தாய் அழைக்க, வேற வழி இல்லாமல் மீனா கிளம்பினாள்.
அப்படியெல்லாம் மனைவி தன்னை விட்டு செல்ல மாட்டாள் என்று இருந்த ஜெகன். அவள் கிளம்புவதை பார்த்ததும் கொஞ்சம் பயம் வந்தது. நிறைய பேசி காயப்படுத்தி விட்டோமோ என்று அப்புறம் வருந்தினான்.
மீனா தனக்கு தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு பிள்ளையை தூக்க, வேகமாக வந்தவன் வெடுக்கென்று அவளிடம் எழுந்து பிள்ளையை பிடுங்கிக் கொண்டான். மீனா திகைத்து பார்க்க,
“உங்க அம்மா பேச்ச கேட்டுட்டு நீ தான் போறல்ல.. நான் எதுக்கு என் பிள்ளையை விட்டுக் கொடுக்கணும். எம்புள்ளை என்னோட தான் இருக்கும்” என்றான் வீம்பாக,
மீனா கண் கலங்க தாயை பார்த்தாள், “நீ வா மீனா. ரெண்டு நாளைக்காவது பிள்ளைகளை வைத்து பார்க்கட்டும். அப்பத்தான் உன் கஷ்டம் அவனுக்கு தெரியும். அவன் பிள்ளைக தான, அவன் பார்க்கட்டும்” என்றார் பரமு.
அவளுக்கு கணவன் மீது கோபம் தான். சில நாட்கள் தாய்வீடு சென்று வருவது நல்லதே என்று நினைத்தாள். ரொம்ப எளிதாக கைநீட்டி விட்டான் அடுத்த பிறகும் போக வழி இல்லாமல் அங்கேயே இருந்தால் அது இன்னும் இளக்காரத்தை தான் ஜெகனுக்கு கொடுக்கும்.. அதனால் தான் அம்மா அழைத்ததும் உடன் செல்ல தயாரானாள். அதற்காக பிள்ளைகளை விட்டு எல்லாம் பெற்றவள் எவ்வாறு இருப்பாள். அதுவும் மகனுக்கு இன்னும் தாய் பால் குடுக்கையில்…
பிள்ளை பாத்ரூம் போனால் கூட துணி மாற்றி விடாமல் மீனா என்று இவளைத்தான் அழைப்பான். அப்படி இருப்பவன் எப்படி ரெண்டு பிள்ளைகளை பார்ப்பான்.
“நீ வாடி, யோசிக்காத. வேற எப்படியும் உன் புருசனை சரிப்படுத்த முடியாது” என்ற பரமு மகளை கை பிடித்து அழைக்க, தாயின் இழுப்புக்கு ஒரு எட்டு தான் வைத்து இருப்பாள்.
தாங்க முடியவில்லை ஜெகனுக்கு.. “சரி மீனா உங்க அம்மா பேச்சை கேட்டுட்டு நீ போறல்ல. நீ போ.. நான் ஒன்னும் சொல்லலை. இந்த வீட்டை விட்டு நீ போறது இதுதான் கடைசி. இதுக்கு அப்புறம் நீ இங்க வரக்கூடாது. என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி போயிட்டா அப்படியே உங்க அம்மா வீட்ல இருந்துக்கோ… நானும், என் பிள்ளைகளும் எப்படியும் போறோம்.. எங்களுக்கு ஏதாவது நடந்து, நாங்க செத்தா கூட நீ வர கூடாது” என்று அழுத்தமாக, மறைமுக மிரட்டல் விட..
அதற்குப் பின் மீனா ஒரு எட்டு வீட்டை தாண்டி வைக்கவில்லை. பரம எவ்வளவு வற்புறுத்தியும் மீனா ஒரு அடி கூட நகரவில்லை. அவளை தன் கைப்பிடியில் வைத்திருந்தான் ஜெகன். பரமுக்கு தான் மகளின் ஏமாளித்தனத்தை நினைத்து கோபமாக வந்தது. இப்படி முற்றும் முழுதாக கணவனின் பிடியில் நின்றால், அவன் எவ்வளவு தூரத்துக்கும் செல்வான்.
மீனாவுக்கு வாழ்க்கை தெரியவே இல்லை. அதிலும் கணவனை கையாள சுத்தமாக தெரியவில்லை. காதல் திருமணம் இரண்டு பிள்ளைகள் என்று வந்த பின்பும் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்ல என்று தெரியவில்லை. பெரிய அழுத்தத்திலும், மனக்குழப்பத்திலும் இருந்தாள்..
கணவன், மனைவி இருவரும் பேசி கொள்ளவே இல்லை. கணவன், தன்னைக் குறித்து என்ன நினைக்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. மீனாவுக்கும் சராசரி பெண்ணாக கணவனுக்கு தன் மீது காதல் இருக்க வேண்டும். சாதாரண கணவன், மனைவி குழந்தைகள் என்று நன்றாக வாழ வேண்டும். தன்னை சுற்றி இருக்கும் குடும்ப அமைப்புகளைப் போலவே தன்னுடைய வாழ்க்கையையும் கற்பனை செய்து இருந்தாள்.
ஆனால், ஜெகன் முற்றிலும் வேற மாதிரி இருந்தான். மனைவியின் அன்பை மிக எளிதாக உதாசினம் செய்தான். அதுவும் அவளின் காதல் புரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. மனைவியின் காதலின் ஆழம் அறிந்து.. அந்தக் காதலைக் கண்டு பூரிக்கவோ, பெருமைப்படவோ செய்யாமல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். எந்த சொந்த பந்தமும் இல்லாமல் தனியாக நிற்கும் ஒருவனிடம் முழு அன்பை செலுத்த மனைவி தயாராக நிற்கும் பொழுது, அந்த அன்பை தனக்கு கேடயமாக பயன்படுத்தி தன் தப்புகளை பின் நிறுத்தினான். என்றாவது ஒருநாள் அந்தக் கேடயம் தன்னை பதம் பார்க்கும் என்பதை மறந்து விட்டான்.
மீனாவின் அழுத்தம் ஜெகனுக்கு புரியவில்லை. எப்பவும் போல சாதாரண கணவன் மனைவி சண்டைதானே ஒரு வாரம் முகத்தை தூக்கி வைத்து இருப்பாள். அடுத்து ஏதேனும் பேசி சரிகட்டி விடலாம் என்று இருந்தான்.
அன்று வேலை விஷயமாக ஜெகன் வெளியில் இருக்கும் போது ஒரு தெரியாத எண்ணில் இருந்து கால் வந்தது.
“ஹீலோ”
“பேசுறது ஜெகனா” என்று பெண் குரல்..
“ஆமா, நீங்க?”
“நாங்க மகளில் காவல் நிலையத்திலிருந்து கான்ஸ்டபிள் வானதி பேசுறேன்” என்ற கம்பீர குரலை கேட்டதும்,
முதலில் ஜெகனுக்கு ஒன்றும் புரியவில்லை. காவல் நிலையம்.. அதுவும் மகளிர் காவல் நிலையத்திலிருந்து தனக்கு என்ன போன்?
“சொல்லுங்க மேடம்” குரலில் மரியாதை தென்பட்டது.
“மீனாட்சி உன் மனைவியா?” என்றதும்,
ஐயோ! மீனா… என்று மனதில் அலறியவன்,
“ஆமாம் மேடம், மீனா என் வைஃப் தான். என்னாச்சுங்க மேடம் எதுவும் பிரச்சனையா?” என்றான் பதறி போய்..
காலையில் மனைவி வீட்டில் தானே தன் குழந்தைகளோடு இருந்தாள். ஒரு நொடியில் ஜெகன் மனதில் என்னென்னமோ பயம்.
“ஆமா, உன் பொண்டாட்டி தான்ப்பா. நீ சரி இல்லன்னு உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க”
“என்ன” என்று நெஞ்சில் கை வைத்தான் ஜெகன்.
“என்னமோ கைநீட்டி எல்லாம் அடிச்சியாம்? நீ என்ன பண்ற அப்படியே நேரா கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் வா.. விசாரணை இருக்கு” என்று அந்த அதிகாரி சொல்ல, அதிர்ச்சியில் நெஞ்சில் வைத்த கையை ஜெகன் எடுக்கவே இல்லை.
error: Content is protected !!