Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா?.. அத்தியாயம் 16

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

அத்தியாயம் 16

    மீனா, அவர்களோடு சண்டை போடுவதற்கு முன் அழுகைதான் அதிகமாக வந்தது. சொந்த அத்தை இத்தனை வருடங்களாக பழகிய முகம் ஆனாலும் ஒரு நொடியில் தப்பாக பேசி விட்டார். புருசனை விட்டு தள்ளி இருந்தால் யாரும் எப்படி வேணாலும் பேசிக் கொள்ளலாம். எளிதாக விமர்சனமும் செய்யலாம். 

முதல்முறையாக சுற்றி இருப்பவர்களின் மற்றொரு முகத்தை மீனா காண்கிறாள். எந்த தவறும் செய்யாமல் இப்படி ஒரு வார்த்தை தன் மேல் விழும்படி ஆகிவிட்டதே என்று நொறுங்கிப் போய் அமர, பரமுக்கு வந்ததே கோபம். குனிந்து அமர்ந்தவளின் முதுகில் நாலு அடி போட்டார். 



Advertisement

“அம்மா” அதிர்ந்து போய் மீனா பார்க்க,

“என்னடி அம்மா, கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளை பெத்தாச்சு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிய வேணாம். ஈசியா நாக்கு மேல பல்லு போட்டு பேசுற அளவுக்கு ஆகிப்போச்சு நம்ம நிலைமை. முகத்துக்கு நேரா நம்ம கிட்டயே இப்படி கேட்டவ, வெளியே போய் சொல்லாமல இருப்பா.. இதுக்குத்தானே பெத்தவங்க பேச்ச கேளுன்னு தல பாடம் அடிச்சுக்கிட்டேன். கொஞ்சமாச்சும் என் வார்த்தையை காது கொடுத்து கேட்டீங்களா அப்பனும், மகளும்”

“பெரிய காதலாம் காதல். அவன் வேணாம்னு எத்தனை தடவ சொன்னேன். அம்மா அப்பா இருந்து வளர்க்காதவன், அந்த புத்தியை காட்டிட்டான் பாத்தியா?.. அவனை நம்பி இரண்டு பிள்ளையை வைத்து வெட்டியா போனையே? அவனுக்கு எந்த சொந்த பந்தம் இருக்கு யாருக்கு பஞ்சாயத்து பண்ண? அவன் உன்னை விட்டுட்டா மீனா” அழுகை தாங்க வில்லை. 

Advertisement

எத்தனை அருமையாக வளர்த்த மகள். யார் யார்கிட்டையோ பேச்சு வாங்கும் நிலையாகி விட்டதே. “அவன் நல்லவனாக இருந்தால் இந்நேரம் மனைவி மக்களை தேடி வந்திருக்க வேண்டும் அல்லவா!.. பொழைக்கத் தெரியாதவன் ஊரை விட்டு ஓடிப் போனான்” சொல்லி சொல்லி அழுதார் பரமு…

Advertisement

அவருக்கு மகள் நடத்தையில் எல்லாம் சந்தேகம் கிடையாது. பரமுக்குத்தான் நன்றாக தெரியுமே மகள் ஒரு புருசன் பைத்தியம் என்று.. ஒரு ஆதங்கம் அதுதான் அடித்துவிட்டார். ஊர் வாயை மூட முடியாது. மற்றவர்கள் பேசத்தான் செய்வார்கள். அவர்கள் பேசும்படி நாம் ஏன் நடந்து கொள்ள வேண்டும். இன்னைக்கு சங்கடமும், கஷ்டமும் நமக்குத்தானே.. இதுதான் பரமுவின் ஆதங்கமாக இருந்தது.

அதற்குப் பின்பு மீனா மற்றவர்களோடு பேசுவதை குறைத்துக்கொண்டாள். தான், தன் பிள்ளைகள் என்று வீட்டுக்குள்ளே இருந்து கொண்டாள். சகஜமாக பேசும் ஆட்களிடம் கூட தள்ளியே நின்றாள். பெற்றவர்கள் கைக்குள் வீட்டு பெண்ணாக வளர்ந்தவளுக்கு பட்டென்று துணிந்து முடிவெடுக்க தெரியவில்லை. 

தாய் சொல்வது போல ஒரேடியாக கணவன் தன்னை வெட்டி விட்டான் என்று நினைக்கவும் முடியவில்லை. திரும்பி வந்து விடுவான் என்று எதிர்பார்க்கவும் பயமாக இருந்தது. பெரிய அளவு படிப்பும் இல்லாமல் பால் குடிக்கும் குழந்தையை வைத்துக் கொண்டு வெளி வேலைக்கும் போக முடியவில்லை. தன்னுடைய தேவைக்கு பிள்ளைகளுக்காக கூட தாயிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. 

Advertisement

பிள்ளைகள் இருவரையும் வெளியில் அமர வைத்து விளையாட்டு காட்டியே சாதத்தை ஊட்ட, பக்கத்து வீட்டு துர்கா தன் மகனை இடுக்கிக் கொண்டு வேகமாக வெளியில் வந்தாள்.

“காலையில இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பற துர்க்கா?” 

“வேலைக்கு தான் மீனா” என்றவாறு ஒரு பக்கம் மகனும், மற்றொரு பக்கம் சாப்பாடு கூடையும் எடுக்க,

“என்ன வேலைக்கு?”

“வேட்டு கம்பெனிக்கு தான்”

“என்னடி சொல்ற, சின்ன பையனை வைத்து கொண்டு எப்படி வேலைக்கு போவ?”

“அப்புறம் உங்க குடிகார அண்ணனை வச்சு எப்படி பிழைக்க.. எப்படி ஏதாவது பண்ண தான் உண்டு” என்றாள் சோகமாக,

“பிள்ளையும் பார்த்துட்டு வேலைக்கும் போக முடியுமா துர்கா” மீனாவுக்குள் பலகட்ட யோசனை..

“நம்ம மட்டும் தான் பிள்ளையை தூக்கிட்டு வேலைக்கு வரமாக்கும். அடி போடி! ஊருல பாதி பேரு குடிகாரனுங்க தான். அவனுங்கள மட்டும் நம்பியா குடும்ப ஓடுது. நம்மள மாதிரியே பாதி பேரு பிள்ளைகளை தூக்கிட்டு தான் வேலைக்கு வருவாங்க. அந்தப் பிள்ளைங்க கிட்ட என் மகனை விட்டுட்டு அப்பப்ப பாத்துப்பேன். சரி நேரமாச்சு மீனா நான் கிளம்புறேன். வண்டி வந்துரும்”என்ற தோழிக்கு விடை கொடுத்தவள், தன் பிள்ளைகளை பார்த்தாள். 

இன்னும் கொஞ்ச நாள் போனால் மகளை பள்ளியில் விடலாம். மகனை மட்டும் கையில் வைத்துக் கொண்டு தானும் இந்த மாதிரி ஏதாவது வேலைக்கு ஓடிவிட வேண்டும். ஜெகன் வரும்போது வரட்டும். ஒழுங்காக படித்திருந்தால் நல்ல வேலைக்கு கூட போகலாம். இவர்களுக்கெல்லாம் படிக்கும் சூழ்நிலை அமையவில்லை. தன்னை படிக்க வைத்து படிக்காமல் போனது தன் கொழுப்பு தான். வருத்தமாக நினைத்து கொண்டாள். 

மீனாவின் இரண்டாவது அண்ணன் மகள் பெரிய பெண்ணாகி விட்டாள். அவளுக்கும் சந்தோசம்தான். அத்தை முறைக்கு சீர் எதுவும் செய்யாமல் சும்மாதான் பார்த்து வந்தாள். அவள் சூழ்நிலை தெரிந்து அண்ணன் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவள் அண்ணி தான் முகம் கொடுத்து பேசாமல் இருந்தார். 

அதனால் மீனாவும் தள்ளி நின்று கொண்டாள். அவர்கள் எதிர்பார்ப்பு சரி தான். ஆனால், தனக்கு வழி இல்லையே. எட்டாம் நாள் விசேஷ வீட்டிலும் அதே போல மீனா ஒதுங்கி கொள்ள, யாரும் கண்டு கொள்ள வில்லை. சொந்தங்கள் மத்தியிலும் மதிப்பாக வாழ்ந்தால் தான் மரியாதை கிடைக்கும். 

பரமுக்குத்தான் மகளை தள்ளி வைத்த மருமகள் மேல் கடுகடுப்பு. 

“என் மக ஒத்த பிள்ளையை வான்னு சொல்லல. அவங்க வீட்டு ஆட்களை மட்டும் ஓடி ஓடி கவனிக்கிறா” முணங்கி கொண்டே இருக்க,

“அம்மா வாய மூடு. விசேஷ வீட்டுல நம்மளால எந்த சங்கடமும் வேணாம். நானும் பிள்ளைக்கு எதுவும் செய்யல தானே”

“செஞ்சாலும் செய்யாட்டியும் நீ இந்த வீட்டு பிள்ளைடி. சொந்த அத்தை, உன்னை வான்னு கூப்பிட கூடவா அவளுக்கு கசக்குது. என்ன திமிரு..” பரமு வாயை மூடவே இல்லை. 

வீட்டில் நிறைய இனிப்பு, பழங்கள் இருக்க. பரமு பேரன், பேத்திக்கு எடுத்துக் கொடுத்தார். தமிழ் ஒவ்வொன்றையும் ஆசையாக எடுத்து உண்ண, மீனா சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தாள். 

அவள் அண்ணி தன் வீட்டு ஆட்களையே பார்த்துக் கொண்டிருக்க, பொறுத்துக் கொள்ள முடியவில்லை பரமக்கு.. அவர்கள் காதுபடவே முனுமுனுக்க, மீனாவுக்கு சங்கடமாக இருந்தது. விசேஷம் முடியும் வரை காத்திருந்த அண்ணி தீபா, எல்லாம் முடிந்ததும் நேராகவே கேட்டு விட்டாள்.

மீனா பார்க்க, பரமு விடவில்லை.

“உன் வீட்டு ஆட்களை மட்டுமே பார்க்கிற, எம் மக உனக்கு என்ன பண்ணா? வான்னு ஒரு வார்த்தை சொன்னையா? அவ மேல அப்படி என்ன உனக்கு? உங்க அம்மா, அக்கா, அண்ணன் பொண்டாட்டிகளை மட்டும் எப்படி தாங்குற நீ?” என்று காட்டமாக கேட்க .

“என் வீட்டு ஆளுகளை நான் தாங்குறேன் உங்களுக்கு என்ன அத்தை வந்துச்சு?”

“என் மக உனக்கு என்ன கெடுதல் பண்ணா?”

“நான் ஏன் பார்க்கணும். மீனா என்ன அவ புருஷன் வீட்டில் இருந்தா வந்தா? இங்க நம்ம கூட ஒண்ணா தானே இருக்கா? அவளுக்கு என்ன தனி அழைப்பு?” என்றதும்,

“உங்க வீட்டு ஆளுங்களுக்கு அவ்வளவு செய்ற? எவ்வளவு பேர் உங்க வீட்டுல இருந்து வந்தாங்க. எம் மகன் சம்பாத்தியம் தானே. எம் மகளுக்கு உரிமை இருக்கு இல்ல? ஒரு வார்த்தை என் மகளை சாப்பிட சொன்னியா?” என்றதும் தீபாவுக்கு கோபம் தாங்க வில்லை.

“எங்க வீட்ல இருந்து அவ்வளவு சீர் கொண்டு வந்தாங்க. நான் பாக்குறேன். இதுல மீனாவுக்கு என்ன அத்தை வந்துச்சு. இலை எடுக்க வந்தவங்க சாப்பிட வந்து இருக்கிற ஆளுகளை எண்ணக்கூடாது” பட்டென்று தீபா சொன்னதும் அதிர்ந்து போனாள் மீனா.

 “ஏய்! என்ன சொல்ற?” அவ்வளவு வாய் பேசும் பரமுக்கு கூட அடுத்து பேச முடியாமல் வாயடைத்து போனார். 

“நான் சும்மா எடுத்துக்காட்டுக்கு தான் அத்தை சொன்னேன்” என்று சமாளித்தாலும், அவள் சொன்னதன் உள் அர்த்தம் மீனாவுக்கு விளங்கியது. 

அவள் சொன்ன வார்த்தை ஒரு மாதிரி நெஞ்சை அடைத்தது போல இருந்தது மீனாவுக்கு.. தான் எவ்வளவு பெரிய முட்டாளாக வாழ்ந்திருக்கிறோம் என்று விளங்கியது. இப்படிப் பேசியும் ரோஷப்படும் நிலையில் தான் இல்லையே என்று வெட்கி போனாள். 

விதவிதமான உணவுகள் இருக்க ஆசையாக சாப்பிடும் மகளைப் பார்த்தாள். இதைத்தானே தீபாவும் சொல்லிக் காட்டுகிறாள். மனசு ஒரு மாதிரி நொந்து போனது. அதற்குப் பின் அண்ணன் சத்தம் போட்டதும் சமாதானம் படுத்தியதும் மீனாவின் மனதில் ஏறவில்லை. தற்போதைய தன் நிலை தெரிந்த பின், தாய்வீடு என்ற உரிமை கூட பின்னாடி சென்று விட்டது. 

கணவன் திரும்பி வரட்டும் என்று தைரியமாக காத்திருந்தவளுக்கு, சுற்றமும் சொந்தமும் கணவனோடு வாழ்வதுதான் மரியாதை என்று கற்றுக் கொடுத்தது. இவ்வளவுக்கும் அவள் விவாகரத்து எல்லாம் பெறவில்லை. ஒரு சண்டை சிறிது நாட்கள் பிரிந்து இருக்கிறார்கள். அதற்கே அவ்வளவு நேரடியாக, மறைமுகமாக ஜாடை பேச்சுகள்.

 இவர்கள் பேச்சு எல்லாம் மீனாவுக்கு அழுகையை கொடுத்ததை தவிர சுயத்தை தரவில்லை. தன் எழுச்சியாக எதையும் யோசிக்கவும் தெரியவில்லை. சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்து பெண்ணாக புருசன் சரியில்லை சண்டை போட்டால் அம்மா வீடு, சமாதானம் செய்தால் கணவன் வீடு. அதைத் தாண்டி ரோசப்படவோ சுயமாக எழுந்து நிற்கவோ தெரியவில்லை. அதைவிட இதை விட்டு வெளியேறவும் பயமாக இருந்தது. 

எல்லாவற்றையும் நினைத்து அழுது அழுது ஒரு மாதிரி அழுத்தத்துக்குள் போனாள் மீனா. கணவன் சரியில்லாமல் இருந்தால் கூட அவனைத் தவிர வேற பாதுகாப்பான இடம் எங்கும் கிடையாது போல, எப்படியாவது சரிகட்டி அவனோடே அனுசரித்து வாழ்ந்து விட வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டாள். இப்படி எல்லாம் ஒவ்வொருவருடைய விமர்சனத்திற்கும் ஆளாக விரும்பவில்லை. கஷ்டமோ ,நஷ்டமோ எல்லாவற்றையும் அவனோடு கடந்து விடுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டாள்.

ஆனால், அந்த கணவன் தான் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. கணவன் நன்றாக இருந்தால் நிச்சயம் மனைவியை தேடி வந்திருப்பான்.ஆக, அவள் நினைத்தபடி நல்ல வேலை சம்பாத்தியம் என்று எதுவும் அவனுக்கு அமையவில்லை போல…

கணவனை தள்ளி வைத்து திருத்துவதை விட, திரும்பவும் ஒரு வாய்ப்பு கொடுத்து சேர்ந்து வாழ்வோம். அவன் போக்கிலே போய் அவனை சரி செய்ய வேண்டும் என்று மீனா நினைத்து விட்டாள். திரும்பவும் ஒரு வாய்ப்பு தங்களுக்காக எடுத்துக் கொண்டாள். இதுவரை மீனா ஜெகனுக்கு போன் செய்யவில்லை. அவனாக வரவேண்டும் என்றே நினைத்தாள். இனி என்னவாக இருந்தாலும் கணவனோடு பேசி சேர்ந்து விட முடிவெடுத்த பின் தான் உறங்கினாள். 

மறுநாள் விடியல் அவளுக்கு வேற மாதிரி அமைந்தது. ஜெகனின் பாட்டி இறந்து விட்டார். மீனாவுக்கும் அதிர்ச்சி தான். மகன் பிறந்த போதே படுத்த படுக்கையாக இருந்தவர். இனி, சொந்த ஊரில் இந்த வீட்டில் தான் வைப்பார்கள். மீனா கணவனை எதிர்பார்க்க, அவள் நினைவுக்கு தக்க, தன் பாட்டியின் உடலோடு சொந்த ஊருக்கு வந்தான் ஜெகன். 

இளைத்து கருத்து தோற்றமும், முகம் முழுக்க தாடியுமாக இருந்தவனை பார்த்து மீனாவுக்கு அழுகை வந்தது. சொந்தங்களோடு அவள் நிற்க, ஜெகன் வந்ததும் மகனை மடியில் வைத்துக் கொண்டான். அவனும் மீனாவோடு பேச முயற்சி செய்யவில்லை. சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீனாவும் அமைதியாக நின்றாள்.

 காரியங்கள் அடுத்தடுத்து நடந்தேறியது. ஜெகனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லாததால், மீனாவின் அண்ணன்களே அவனோடு துணை நின்றார்கள். தற்போது அவனுக்கு அவர்கள் தானே சொந்தம். ஒற்றை பேரன் என்பதால் ஜெகன் தான் கொள்ளி வைத்தான். அந்த வீட்டின் மருமகளாக மீனாவும் அங்கேயே இருந்து கொண்டாள். இறப்பு வீடு என்பதால் ஆட்கள் நிறைய இருக்க.. கணவன், மனைவிக்கு தனிமை கிடைக்கவில்லை. அம்மத்தாவின் மேல் ஜெகனுக்கு இருக்கும் அன்பு தெரியும் என்பதால் மீனாவும் தள்ளியே நின்றாள்.

 ஜெகனும் பெரிய அளவில் மன காயத்தோடு பெரிய அழுத்தத்தை தாங்கி நின்றான். தன்னை தூக்கி வளர்த்தவர், தான் நல்ல முறையில் வாழ்வதை பார்க்காமலே போய் சேர்ந்து விட்டார். இவனாலும் நன்றாக வாழ வைக்க முடியவில்லை. தன்னை தூக்கி வளர்த்தவரை பாதுகாக்கவில்லை, கட்டிய மனைவிக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் உண்மையாக இருக்கவில்லை. அவனின் தோல்வி கண்முன் அப்பட்டமாக தெரிந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் கூனி குறுகிப் போய் அமர்ந்திருந்தான்.  

யாரும் எடுத்து சொல்லாமலே மீனா கணவனோடு அந்த வீட்டில் இருந்து கொண்டாள். இந்த வீட்டை கணவன் எப்படி திருப்பினான் என்று கூட தெரியவில்லை. அவ்வளவு கோபப்பட்டும் இன்று கணவன் பேச அவள் காத்திருக்க, ஜெகன் தான் என்னமோ இறுகிப்போய் அமர்ந்திருந்தான். பிள்ளைகளை மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டான். 

முகத்தில் தாடி முடி இருக்கிற வரைக்கும் தெரியாமல் இருந்தது, முடி இறக்கி மொட்டை எடுத்த பின், கணவனின் சோர்ந்து போன உடல் மீனா கண்களுக்கு தட்டுப்பட்டது. அதுவே அவனின் வறிய நிலையை எடுத்துச் சொல்ல, ஆறு மாதமாக என்ன செய்தாய் என்ற கேள்வியை மீனா கணவனை நோக்கி கேட்கவில்லை. திரும்ப தன்னிடம் வந்ததே போதுமானதாக அவளுக்கு இருந்தது. முன்பே முடிவு செய்ததைப் போல இனி எல்லாவற்றையும் சேர்ந்தே சமாளிக்க நினைத்துக் கொண்டாள். 

பதினாறாம் நாள் காரியம் முடிய, ஜெகனின் வீட்டில் சொந்தங்கள் கூடியிருந்தது. மகனை மடியில் வைத்து ஜெகன் அமர்ந்திருக்க, சற்று தள்ளி மகளோடு நின்று இருந்தாள் மீனா. இந்த இடைப்பட்ட நாளில் பிள்ளைகளோடு தான் உறங்கிக் கொள்கிறான். எதையும் உடைத்துப் பேசாமல் அமைதியாக இருக்கும் கணவனை பாவமாக பார்த்தாள் மனைவி.

“இனி என்ன பண்ணப் போற ஜெகன்” என்றான் தர்மன்.

 தோற்றுப் போய் நிற்பவன் என்ன பதில் கொடுப்பான். அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க, பொறுக்க வில்லை மனைவிக்கு…

 “இனி, இங்க தான் அண்ணா” என்ற மனைவியை முதன்முறையாக நிமிர்ந்து பார்த்தான் ஜெகன். 

இத்தனை நாட்களில் ஒரே வீட்டில் இருந்தாலும் அடுத்து என்ன என்று சாதாரண கணவன், மனைவியாக பேசிக்கொள்ளவில்லை. வாழ்க்கையை கொண்டு செல்ல தெரியாமல் தவித்து நிற்கும் போது மனைவிக்கு என்ன மறுமொழி கூற… அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றான் ஜெகன். 

எல்லாம் இருக்கும்போது ஆம்பளை என்ற ஆட்டம். அனைத்தையும் இழந்த பின் குடும்பஸ்தனாக மனைவிக்கு கணவனாக நின்று கொள்ள தான் வேண்டும். வேறு என்ன ஆண்களுக்கு பாதுகாப்பு…

“என்ன சொல்ற மீனா”என்றான் சின்ன அண்ணன் இந்திரன். 

“ஆமா, அண்ணா நானும் எம்புட்டு நாளைக்கு அம்மா வீட்ல இருக்க முடியும். பிள்ளைகள் கூட இல்லைன்னா சேர்க்க சரியில்லாமல் போகும். இனி சேர்ந்தே நாங்க இங்க பொழப்ப பார்க்கிறோம்”என்றாள் மீனா.

அவள் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிந்தது. குடிப்பழக்கம் கொண்ட ஜெகன் மனைவி உடன் இல்லை என்றால் இன்னும் கெட்டுத்தான் போவான். 

“சரி, இங்க என்ன வேலைக்கு போகப் போறான்”

“இங்க இல்ல அண்ணா. நாங்க வெளியூர் எங்கேயாவது போறோம்”

“திரும்பவுமா?” என்று தான் அனைவரும் பார்த்தார்கள்.

அவர்கள் பார்வை புரிந்தும் மீனா அழுத்தமாக நின்று கொண்டாள். முன்பே இப்படித்தான் எல்லாவற்றையும் இழந்து சொந்த ஊரை விட்டு பிழைப்பு தேடி வெளியூர் போனார்கள். அங்கும் முன்னேற முடியாமல் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்ப வந்தாச்சு. இனி என்ன திரும்பவும் ஒரு கூத்து? …

கணவன் அமைதியாக இருக்க மீனா திடம் கண்டாள். பரமு தான் ஏதேதோ சொன்னார். மீனா மிக தைரியமாக முடிவெடுத்தாள். மற்றவர்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்க..

நேராக நிமிர்ந்து கணவனை பார்த்தவள், “மாமா, நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள்.

 எத்தனை நாட்களுக்கு பின்னான மனைவியின் அழைப்பு. வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொண்டான். பெரும் இழப்பு அவனின் குடும்பம் யார் என்று காட்டிக் கொடுத்தது. 

“நீ என்ன சொல்றியோ அதுபடி செய்வோம் மீனா” ஒப்புக் கொடுத்தான் ஜெகன்.

 இந்த முடிவை முன்பை எடுத்திருந்தால் இவ்வளவு இழந்திருக்க தேவையில்லை. எல்லாம் விட்டதுக்கு அப்புறம் எதுவுமே இல்லாமல் போனதுக்கப்புறம் மனைவியின் பேச்சு வேதவாக்கா?.. வேண்டாம் மீனா குதர்க்கமாக எதுவும் பேசாதே, திரும்பி வந்திருக்கிறான் சரிகட்டி பிழைத்துக் கொள். 

மீண்டும் ஒரு முறை கணவனை நம்பி தங்களுக்காக ஒரு வாய்ப்பு கொடுத்துக் கொண்டார்கள். அம்மா, அண்ணன்கள் யார் சொல்லியும் மீனா கேட்கவில்லை. பாட்டியின் இறப்புக்கு கொஞ்சம் நகையும் பணமும் வந்திருக்க அதை முதலீடாக வைத்துக் கொண்டாள் மீனா.

அவள் அண்ணிகள் கூட சொல்லி விட்டார்கள், “திரும்பவும் ஜெகன நம்பி போக போறியா மீனா. உன் புருசனை நம்பு, கையில் இருக்கிற ஒன்னு ரெண்டு நகையும் காசும் தொலைக்காத.. நீயும் ஒரு பொம்பள புள்ள வச்சிருக்க” என்ற போது கூட தைரியமாக கணவனை நம்பி முடிவெடுத்து, எல்லாவற்றையும் வித்து பணமாக்கி கொண்டாள்.

வீடு மட்டுமே கையில் இருக்க, அதை கிரயம் ஆக்கிவிட்டு, தன் கணவன் பிள்ளைகளோடு வேறொரு ஊருக்கு புது வாழ்க்கையைத் தேடி வெளியேறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!