Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 5

அத்தியாயம்– 5:

பூம்பாறை மலர்ந்தது.
வேறு எந்த வார்த்தையும் சரியாக வராது. ஆம் பூம்பாறை  மலர்ந்தது!


Advertisement

மலைச்சரிவுகளில் ஆழிஞ்சி மரங்கள் வரிசையாக நின்றன.
கொடைக்கானல் மலைத்தொடரில் ஆழிஞ்சி மரங்கள் குன்றுகளின் விளிம்பில், பாறைகளின் இடுக்கில், சரிவுகளின் நெற்றியில் என்று எங்கு நிலம் கொடுத்தாலும் வேர் பிடித்து நிற்கும். அதன் கிளைகள் காற்றில் நாலு திக்கும் விரிந்து… ஒரு குடையைப் போல … கீழே நிழல் தரும். இலைகள் இருண்ட பச்சை நிறம். ஆனால் அதன் பூக்கள்…ஆழிஞ்சி பூக்கும் போது பார்க்க வேண்டும்!
சிறிய, வெண்மையான பூக்கள்… ஒவ்வொரு கொத்தும் ஒரு மேகத் துண்டாக மரக்கிளைகளில் உட்கார்ந்திருக்கும்.

Advertisement

அந்த வெண்மையான பூக்களிலிருந்து வழியும் மணம்… அந்த  கூர்மையான இனிமை. ஒரு குளிர்ச்சியான ஆழம்.

Advertisement

மலையின் பனி மணத்தோடு சேரும் போது அது உடலில் படராது, உள்ளே இறங்கும். மூச்சு இழுத்தால் நுரையீரல் வரை போகும் போல ஒரு உணர்வு!
அதற்கு மேலே, சோலைக் காட்டின் விளிம்பில், மலைப்பூவரசு மரங்கள் நின்றன. கடும் சிவப்பு நிற பூக்கள்  கொத்துக் கொத்தாக, அந்தச் சிவப்பு கொத்துகள் மாலைவெயிலில் ஒளிர்ந்தபோது, பச்சை சோலையில் யாரோ சிவப்பு விளக்குகளை ஏற்றி வைத்தது போல தெரிந்தது. கொள்ளை அழகு !
குன்றின் மேல் வன ரோஜாக்கள். இளம் இளஞ்சிவப்பு. காட்டு ரோஜாவின் வாசம் வீட்டு ரோஜாவை போல அல்ல கொஞ்சம் கடுமையாக, கொஞ்சம் தனிமையாக இருந்தது.

Advertisement

இந்த எல்லா மணங்களும் சேர்ந்து பூம்பாறையின் காற்றை ஒரு கலவையாக்கியிருந்தன. ஆஹா என நெஞ்சு நிறைய நுகராலெனும் போல ஒரு காற்று.
அந்த செய்தி கிராமத்தை தொட்டது.  ….ஒரு தீப்பொறி உலர்ந்த புல்லை தொடும்போது எப்படி ஒரு நொடியில் பற்றிக்கொள்ளுமோ,  அப்படி!
செய்தி காற்றில் பரவியது …. காற்றில் மட்டுமல்ல, மரங்களின் இலைகளில், நீரோடைகளின் ஓசையில், பறவைகளின் சிறகடிப்பில் கூட அந்தச் செய்தி ஊடுருவியது போலிருந்தது.
“விவசாய நிலம் போகாது. நம்ம மண் நம்மோட.”
டன்… டன்… டன்… கோவில் மணியை அடித்தது. அந்த மணியோசை மலைப்பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.
கோவில் முன்னால் பெரிய திடல். ஆண்கள்,பெண்கள் குழந்தைகள், முதியவர்கள் வந்து  கூடினர்.
மக்களின் போராட்டத்திற்கு ஒரு விடிவு கிடைத்தது!
தங்களின் விவசாய நிலங்கள் தங்களுக்குத்தான் என்ற செய்தி,  நிலம் பறிபோகாது என்ற நிம்மதி, மக்களின் முகத்தில் ஒரு புது ஒளியைக் கொடுத்திருந்தது.
வேலாண்டி தாத்தா மெல்ல நடந்து வந்தார். அவரது கால்கள் தொய்ந்திருந்தன.மூன்று நாள் உண்ணாவிரதத்தின் களைப்பு இன்னும் விலகவில்லை. ஆனால் முதுகு நிமிர்ந்திருந்தது. முகம் பளிச்சிட்டிருந்தது.
“நம்ம குலதெய்வ அம்மனுக்குப் பொங்கல் வச்சு, நம்ம நன்றிக்கடனச் செலுத்தணும்!” என்று வேலாண்டி தாத்தா உணர்ச்சியுடன் கூற, மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது:
“என்னைக்குத் தலைவரே?”
“நாளைக்கே!” என்று உறுதியாகச் சொன்னார் தலைவர்.
“நமக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கிற நம்ம கலெக்டர் அம்மாவுக்கும், எஸ்பி ஐயாவுக்கும் நம்ம ஊர் சார்பா முதல் மரியாதை செலுத்தணும். நாளைக்கு நம்ம ஊர்ல நிஜமான ஒரு திருவிழாவைக் கொண்டாடப் போறோம்!”
அவர் சொல்லி முடித்ததும், அங்கிருந்த அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி!
“கலெக்டர் அம்மாவுக்கும் சாருக்கும் சொல்லி அனுப்பனும். அழைக்கனும்” என்றார்.
 அடுத்த நாள்.
போராட்டக் களமாக இருந்த பூம்பாறை, இப்போது ஒரு பெரும் கொண்டாட்டக் களமாக மாறியிருந்தது. மக்களின் கண்களில் தெரிந்த அந்த நிம்மதி, அங்கு பூத்திருந்த ஆயிரமாயிரம் மலர்களை விடவும் அழகாக இருந்தது.
வீடுகள் தோறும் மாவிலைத் தோரணங்களும், வாசலில் பெரிய பெரிய கோலங்களும் இடப்பட்டிருந்தன. ஊர்க் கோயில் வளாகத்தில் நாதஸ்வரமும், மேளதாளமும் முழங்க, அந்தச் சத்தத்தில் மலையகமே எதிரொலித்தது.
பூம்பாறை கிராமமே அந்தத் திருவிழாக் கோலத்தில் காத்துக்கொண்டிருக்க, ஊர் எல்லையில் அந்த இரண்டு அரசு வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாகவந்து நின்றன.
முதலில் கலெக்டர் மீராவின் கார் வந்து நின்றது. கதவு திறக்கப்பட, மீரா இறங்கினாள் கண்முன்னால் தெரிந்த காட்சியை ஒரு நொடி பார்த்தாள்.
விளக்கு வரிசை. பூ மணம். தவில் சத்தம்.ஆடும் உடல்கள். சிரிக்கும் குழந்தைகள்!
அவள் கண்கள் நிரம்பின.
சரியாக அடுத்த நிமிடம், தூசு பறக்க வர்மனின் ஜீப் வந்து நின்றது. அதே கம்பீரத்தோடு வர்மன் கீழே இறங்கினான்.
வேலாண்டி தாத்தா ஓடி வந்தார்….ஒரு முதியவர் ஓடுவதுபோல, ஆனால் ஓடினார்.
“மேடம்!”…” சார்! ”
மீரா அவரது கைகளை இரண்டு கைகளாலும் பிடித்தாள்.
“தாத்தா…. உங்க நிலம் உங்களுக்கே.” வேலாண்டி ஒரு நொடி நின்றார். அவரது உதடுகள் நடுங்கின. அந்த எழுபது வயது கண்களிலிருந்து… எத்தனையோ போராட்டங்களை பார்த்த கண்களிலிருந்து … ஒரு துளி வழிந்தது. இரண்டாவது துளி விழுந்த போது அவர் மீராவின் கைகளை இறுக்கிப் பிடித்தார்.
தவில் இன்னும் ஒலித்தது.
கோவில் திடலில் மகிழ்ச்சி அலை அலையாக எழுந்துகொண்டிருந்தது அந்த வேளையில், தாத்தா கையசைத்தார். பெண்கள் ஒதுங்கினர். தவில் நின்றது.
“இவங்களுக்கு சந்தன கும்ப மரியாதை தரணும்.” கிராமத்தில் அது மிகப் பெரிய மரியாதை. தெய்வத்திற்கு வழங்குவதை போல, மனம் நிறைந்த ஒருவருக்கு வழங்குவது!
கோவில் உள்ளிருந்து ஒரு பெரிய வெண்கலகும்பம் கொண்டு வரப்பட்டது. அதன் மேல் …. புதிதாக அரைத்த சந்தனம். மஞ்சள் கலந்த வெண்மைநிறம். அந்தச் சந்தனக் குழம்பு கும்பத்தின் விளிம்பில் மெல்லிய நூலாக வழிந்தது. அதன்வாசம் … குளிர்ச்சியான, ஆழமான, கோவில் தூபத்தோடு கலந்த அந்த சந்தன மணம் … திடல் முழுக்க பரவியது.
ஒரு பெண் வாழை இலையில் மஞ்சள், குங்குமம், அக்ஷதை அடுக்கினாள். இன்னொருவர் மலர்மாலை கொண்டு வந்தாள்…ஆழிஞ்சி வெண்பூக்களும் மலைப்பூவரசின் சிவப்பு கொத்துகளும் சேர்ந்த மாலை. வெண்மையும் சிவப்பும் மாறி மாறி கோர்க்கப்பட்ட அந்தமாலை,  மலையே மாலையாக மாறி வந்தது போல இருந்தது.
பெரியவர் இருவருக்கும் நெற்றியில் குளிர்ந்த சந்தனத்தைப் பூச, பெண்கள் மலர் தூவ, மாலை போடப்பட்டது. ஆசீர்வாதங்களோடு அழைத்துச் சென்றனர்.
வேலாண்டி தாத்தா முன்னே நடந்தார்.
கரும்பச்சை நிற பட்டுப்புடவை, அதில் மஜந்தா வண்ணத்தில் கொடி போட்ட பார்டர்,  தங்கநிற நூல்களால் நெய்யப்பட்ட அந்த விளிம்பு, பின் அதற்கேற்றார் போல டிசைனர் ப்ளவுஸ்! விளக்கொளியில் காட்டு மரங்களுக்கிடையே ஒரு தேவதை வந்து நின்றது போல மீரா நின்றாள்!
ஆழிஞ்சி வெண்மையும் மலைப்பூவரசு சிவப்பும் கோர்க்கப்பட்ட அந்த மாலை மீராவின் கரும்பச்சை புடவையின் மேல் விழ  ஒரு நிறைவு. அத்தனை பாந்தம்.
வர்மனோ வழக்கமான காக்கிச் சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு, ஒரு இளம் நீல நிற ஷர்ட்ல், மிக இயல்பாக கேஷுவலாக வந்திருந்தான். முழங்கை வரை மிகத் துல்லியமாக மடிக்கப்பட்டிருந்த சட்டையின் கைகள், சட்டையின் முதல் இரண்டு பொத்தான்கள் திறந்திருக்க, அகன்ற மார்பும், நிமிர்ந்த தோரணையுமாக அவன் நின்ற விதம், அவனது ஆண்மைக்கு ஒரு புதிய மெருகைக் கொடுத்திருந்தது. ஆனாலும். படிய வாரிய தலைமுடியுடன், நெற்றியில் தீட்டப்பட்டிருந்த அந்தச் சிறு விபூதிக் கீற்று அவனது முரட்டுத்தனமான ‘எஸ்பி’ பிம்பத்தை அப்படியே மாற்றியிருந்தது.வர்மன் என்னவோ இன்னும் நெருங்கியவனாக … இனியவனாக ….தெரிந்தான்.
இது அவனுக்கு பழக்கமில்லாத சூழல் ….மரியாதை வாங்குவது, பூமாலை போட்டுக்கொள்வது.
ஒரு பள்ளிக்குச் செல்லும் சுட்டிப் பையனைப்போல அந்தப் பவ்யமான தோற்றத்தைப் பார்த்த மீராவுக்குச்  சிரிப்பு.
கூட்டம் மீண்டும் கரவொலி எழுப்பியது.
தாத்தா மெல்லச் சொன்னார்.
“நம்ம மலை உங்களை மறக்காது.”
மூன்று கல் அடுப்புகள் அமைக்கப்பட்ட கோவில் திடலில் பெண்கள் கூடினர். வரிசையாக வைக்கப்பட்டிருந்த மண் பானைகளில் பால் பொங்கி வரும்போது,”பொங்கலோ பொங்கல்!” என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது. அந்தப் பாலின் மணமும்,வெல்லத்தின் இனிப்பு மணமும் ஊர் முழுவதும் கமழ்ந்தது. பெண்கள் கைகொட்டினர். குழந்தைகள் கூச்சலிட்டனர்.
அந்தப் பசுமையான மலைச்சரிவில், கரும்பச்சை தேவதையும் விபூதி அழகனுமாய் இருவரும் நின்ற அந்தத் தருணம், பூம்பாறை திருவிழாவின் மிக அழகான காட்சியாக மாறியது!
திருவிழாவின் சத்தமும் மேளதாளமும் மெல்லத்தேய, அந்த மலைப்பாதையின் அமைதி அவர்களை ஈர்த்தது. மக்கள் பொங்கல் வைப்பதில் மும்முரமாக இருக்க, மீராவும் வர்மனும் தங்களை அறியாமலேயே அந்தப் பசுமைப் பள்ளத்தாக்கை நோக்கி மெல்ல நடந்தனர்.
 காற்றில் மிதந்து வந்த ஈரப்பதம் மீராவின் பட்டுப்புடவையைத் தழுவிச் சென்றது.
“என்ன இவ்வளவு அழகா இருக்கா? மனுஷன  வெறியேத்துறாளே!”
“மனசுல நினைக்கிறதெல்லாம் எங்க சொல்ல முடியுது?” என்று வர்மன் தனக்குத்தானே நொந்துகொண்டபடி
“இன்னைக்கு விசேஷம் முடிஞ்சு கிளம்பணும்…”என்றான் வர்மன்,.
மீரா “ம்ம்ம்…” என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதிலளித்தாள்.
“குளிருதா…?”
“ம்ம்ம்…”
“அவ்வளவுதானா…?” என்று அவன் ஆதங்கத்துடன் கேட்க, இப்போதும் அந்த “ம்ம்ம்…” மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
வர்மனின் பொறுமை மெல்ல விடைபெற்றது.
அவன் அவளது தோள்களைப் பற்றி, தன்னை நோக்கித்திருப்பினான்.
“மீரா… உனக்கு நான் யாரு?” என்று அவன் அதிகாரமும் ஏக்கமும் கலந்த குரலில் கேட்டான்.
அவனது அந்தத் தீவிரமான பார்வை அவளது வைராக்கியத்தைச் சிதைத்தது. திடீரென மீரா பின்வாங்கினாள். “வர்மன்… ப்ளீஸ்… விளையாடாதீங்க!”
வர்மனின் முகம் சட்டென மாறியது. “விளையாட்டா? மீரா ஆறு வருஷத்துக்கு முன்னாடியும் சரி… இப்பவும் சரி… நான் உன்னை ஒரே மாதிரி தான் பார்க்கிறேன்,  விளையாட்டும் இல்ல, தப்பும் இல்ல. நீ தான் அதைப் புரிஞ்சுக்காம ஓடுற.”
இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன.அந்த மௌனம் ஒரு அழகான காதலைச் சொல்லத் தொடங்கிய தருணத்தில்…
“எனக்கு எதுவும் புரியவும் வேண்டாம்…நீங்க என்கிட்ட நெருங்கவும் வேண்டாம்!”
அவளது குரலில் இருந்த நடுக்கத்தைக் கண்டு வர்மன் ஏதோ சொல்ல வர, அதற்கு இடம் கொடுக்காமல் அவளே தொடர்ந்தாள்.
“அதான் ஏன்… ஏன்… ஏன்…?”
அந்தச் சிறிய பள்ளத்தாக்கின் விளிம்பில் உணர்ச்சிகளின் உச்சத்தில் நின்றிருந்தாள் மீரா. வர்மனின் அருகாமை தந்த அழுத்தத்தைத்தாங்க முடியாமல், “பை!” என்று சொல்லிவிட்டு அவள் சட்டென இரண்டு அடி பின்வாங்கினாள். வேகமாகத் திரும்பியபோது, அங்கிருந்த ஈரமான புல்லும் கரடுமுரடான பாறையும் அவளுக்குச் சதி செய்தன. கால் இடறி, சமநிலை இழந்து அவள் பள்ளத்தாக்கின் சரிவை நோக்கிச்சாய, மீராவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. “வர்மன்!” என்றுஅலறக் கூட அவளுக்குத் தோன்றவில்லை, மரணம் அவ்வளவு அருகில் தெரிந்தது.
“மீராஆஆ…!”
வர்மனின் குரல் அந்தப் பள்ளத்தாக்கையே உலுக்கியது. “அவ்வளவுதான் மீரா!” என்று அவன் அடிமனம் கதற, யோசிக்கக்கூட நேரமில்லாமல் அவன் அவளைக் காப்பாற்றப் பின்னோடே பாய்ந்தான்.
இருவருமாய் அந்தச் சரிவில் உருள, அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு தடிமனான ஆலமரத்தின் விழுதுகளும் கிளைகளும் அவர்களைத் தாங்கின.
ஒரு பெரிய மரக்கொப்பின் இடுக்கில் இருவரும் தஞ்சம் புக, வர்மன் தன் ஒரு கையால் மரத்தின் கிளையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, மறுகையால் மீராவின் கரத்தை இறுகப் பற்றினான்.
மீரா மரண பயத்தில் கண்கள் செருகிப் போக, வர்மன் அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“மீரா… என்னப்பார்… மீரா! பயப்படாதே,நான் இருக்கேன்… விடமாட்டேன்!” அவனது குரலில் இருந்த நடுக்கம், அவளது உயிரின் மீதான அவனது காதலைப் பறைசாற்றியது.
மெல்ல மெல்ல அவளைத் தூக்கி, ஒரு பாதுகாப்பான கிளைப்பகுதியில் அமர வைத்தான். மீரா இன்னும் அதிர்ச்சியில் விதிர்த்துப் போயிருந்தாள்.அவனது கரம் அவளது கரத்தை விடவே இல்லை.
அது ஒரு கைப்பிடி அல்ல, அன்னைக்கு மசூரியிலயும் சரி, இன்னைக்கு பூம்பாறையிலயும் சரி… உன்னை விழ விடமாட்டேன்னுற… அவளது உயிருக்கான அச்சாணி!
மீராவின் கண்கள் மெல்லத் திறந்தன. தன் முன்னே விபூதி கலைந்து, முகத்தில் சிறு காயங்களுடன், ஆனால் தன் உயிரைக் காக்கப் போராடிநின்ற வர்மனைப் பார்த்தாள்.
மரணத்தின் விளிம்பில் வர்மனின் மார்பில் சாய்ந்திருந்த அந்த நொடியில், மீராவின் கண்கள் மூடிக்கொள்ள… காலச்சக்கரம் பின்னோக்கிச்சுழன்றது.
அவர்கள் முதன்முதலில் சந்தித்த அந்த நாள்…..
பூம்பாறையின் பச்சை மலைகள் மறைந்து, மசூரியின் பனி படர்ந்த சிகரங்கள் அவள் கண் முன்னே விரிந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!